Thursday, September 03, 2020

காலத்தால் அழிந்துவிட்ட பாண்டியன் அணைக்கட்டு - மௌன சாட்சிகள்

என்ற பதிவுக்கு ராஜி வரல, நாம ஏன் ராஜி பதிவுக்கு போகனும்ன்னு இதுவரை நீங்க  யாரும் நினைச்சதே இல்ல. கொஞ்சம் கேப் விட்டு வரும்போது உங்க வீட்டு பொண்ணா நினைச்சு என் பதிவுக்கு எல்லாரும் வந்திருக்கீங்க. அதுப்போல இனியும் வரனும். மகளுக்கு பேறுகாலம் நெருங்குது.. எறும்பு சேகரிப்பதுப்போல அவளுக்கும், வரப்போகும் சின்னஞ்சிறு உயிருக்கும் தேவையானதை சேகரிக்கும்  பிசியில் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது வந்து போடும் பதிவுகளுக்கு  ஆதரவு கொடுக்கனும்ன்ற நிபந்தனையோடு இன்றைய பதிவுக்குள் போகலாம்..

தழுவியமகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பழையாற்றின் கரையோரமாக அடுத்த கோவிலுக்கு போகும்போது பழையாற்றுக்குப்பின் இருக்கும் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டே சென்றோம்.

பொதுவா ஆறுகள் என்றாலே அணைக்கட்டுகள், குளிக்க வசதியான படிக்கட்டுகள்மாடுகள் கழுவ சப்பாத்துகள்மனிதரை தகனம் செய்ய இடுகாடுகள்இறந்தவரை எரிக்க சுடுகாடுகள்அதையும் தாண்டி வயக்காடுதென்னந்தோப்பு என பார்பதற்கே இயற்கை எழில் கொஞ்சும் வண்ணம் இருக்கும். இப்ப எல்லா ஆறுகளும்  நீரையும், தன் பொலிவையும் அழகையும் இழந்து காணப்படுகிறது அதற்கு இந்த பழையாறும் தப்பிக்கலை.    இந்த பழையாற்றின் ஆற்றின் கரையோரம் பலதரப்பட்ட இடங்கள் இருந்ததாம். என்னலாம் அங்க இருந்தது?! ஆற்றோட சிறப்புகள் என்னன்னு தெரிஞ்சுக்கும் ஆவலில் தேடியபோது  என்சைக்கிளோபீடியா புத்தகம் சைஸ் எழுதும் அளவுக்கு தகவல்கள் கிடைச்சது...
 .

சரி, பில்ட் அப் போதும். எனக்கும் வேலை கிடக்கு. அதனால் பதிவுக்கு போகலாமா?!  பழையாறுன்னா எனக்கு பொன்னியின் செல்வந்தான் நினைவுக்கு வரும்.  வரலாற்று குறிப்பு எங்கேயாவது இருக்கான்னு தேடிப்பார்க்க, தேடுதல் வேட்டையின் முடிவு சங்ககாலத்தில் போய் நின்னுச்சு.  புறநானுற்றுலயும், சிலப்பதிகாரத்திலயும்இதுப்பற்றி தேடியபோது சங்க இலக்கியங்களில் பஃறுளி ஆறு என்ற குறிப்புகள் உள்ளது. அதிலும் முக்கியமாக இரண்டு இடங்களை சொல்லலாம்...

செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர் பஃறுளி மணலினும் பலவே

(புறநூனூறு 9 : 9 – 11) என்னும் பாடலிலும் ...

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

(சிலப்பதிகாரம் 11 : 19 – 20) என்ற வரிகளிலும் பஃறுளியாற்றை பற்றி அறியலாம். சரி இதற்கும் பழையாற்றிற்கும் என்ன சம்பந்தம் என கேட்கக்கூடாது .நான்தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறேன்ல்ல!! ஆராய்ச்சியின் முடிவில் உங்க சந்தேகங்கள் தீரும். கடற்சீற்றத்தால் அழிந்துவிட்டதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய பஃறுளி ஆறு இன்றும்  தமிழகத்தில் இருக்கிறாதா?! பஃறுளி ஆறும் குமரிக்கண்டமும் கடல்கோளால் அழிந்தது என்ற செய்தி இளங்கோவடிகளின் செய்திக்குறிப்பு மூலம்தான் நமக்கு தெரிகிறது.. சில ஆராய்ச்சியாளர் பஃறுளியாற்றின் தற்போதைய பெயர் பழையாறு. பஃறுளி என்பது திரிந்து பறளி என்றாகி  பின்பு பழையாறு என்றாகியிருக்கலாமோ? என்று டவுட்டுகின்றனர்.

சரி எதைவச்சு அப்படி சொல்லுறாங்கன்னு பார்த்தா, இளங்கோவடிகள் கூறுவதைப் போன்ற பஃறுளி ஆறு தமிழகத்தில் இல்லாமல் போய்விடவில்லை. கி.பி.1745-ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம் ஒன்று பழையாற்றை பறளியாறு என்றே கூறுவதாகவும் பழைய திருவிதாங்கூர் கல்வெட்டொன்று பூதப்பாண்டியின் வடக்கே பறளியாற்றில் அணைகட்டி அவிட நின்றும் புத்தனாக ஆறு வெட்டி கன்னியாகுமரி வரைக்கும் ஆற்று வெள்ளம் கொண்டு விட்டுஎன்று இருக்கிறது என்பதை மேற்கோள் காட்டுகின்றனர். மேலும், கடல்சீற்றம் வந்ததில் மூழ்கியது போக மீதி நதியே இந்த பழையாறுன்னு சொல்றாங்க ...நாம டைம் மெஷின்ல அந்த காலத்துக்கு போய் பார்த்தாதான் உண்மை தெரியும். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் விடவில்லை.  பஃறுளி ஆறு   பழையாறு என நிரூபிக்க மற்றொரு ஆதாரத்தை கொடுக்கின்றனர் . பழையாறு உற்பத்தியிடத்திலிருந்து சில மைல்களுக்கப்பால் ஓர் அணை கட்டப்பட்டிருக்கிறது. அவ்வணை தலையணைஎன்றும், ′பாண்டியன் அணைஎன்றும் அழைக்கப்படுகிறது. அந்த ஊர்களில் இந்த ஆற்றை பறளியாறு என்று அழைக்கும் வழக்கம் இப்பவும் இருக்கிறதாம். இப்பெயர் பஃறுளி என்பதன் திரிபாகவே இருக்க வேணும்ன்னு சொல்றாங்க.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களோஇதுக்கும் ஒரு படிமேல போய் இந்த அணையில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு பாடலை ஆதாரமாக கொடுக்கின்றனர் .

எத்திசையும் புகழ்படைத்த கொல்லம் தோன்றி

இருநூற்றுத் தொண்ணூற்று இரண்டா மாண்டு

வெற்றிசெயும் கும்பத்தில் வியாழன் நிற்க

விளங்குபுகழ் ஆவணிபன் னிரண்டாந் தேதி

தத்திவிழும் பறளியாற் றணையும் தள்ளி

தமிழ்ப் பாண்டி ராஜசிங்கம் தனையும் வென்று

கொத்தலரும் பூஞ்சோலை நாஞ்சி நாடும்

கோட்டாறும் கூபகர்கோன் கொண்ட நாளே

என்ற பாடலே அது.″ 

மேலும் பழையாறுதான் பறளியாறு என்று அழைக்கப்பட்டு வந்ததென்பதற்கு கி.பி.1745 (கொல்லம் ஆண்டு 920) இல் எழுந்த ஆவணம்(கி.பி. 1745 – ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம். (Land Revenue Manual vol. IV, P. 98-99, T.S. Manual Appendix P.127) ) ஒன்றை சான்றுகாட்டுகின்றனர். அந்த ஆவணத்தில் காணப்படும் செய்தி:″920-ம் அaண்டு சுசீந்திரத்து ஆற்றின் கிழக்குள்ள நிலங்களும் கரக்காடும் சுசீந்திரத்துல் போற்றி மாரோடும் சோரா ஒற்றி எழுதி வேண்டிச்சு அகஸ்தீஸ்வரத்து பட்டரப்பற்று நிலவும் கரக்காடும் குலசேகரபுரத்து கிராமத்தாரோடு சோரா ஒற்றி எழுதி வேண்டிச்சு புத்தனாயிட்டு குளவும் வெட்டிச்சு நிலம் திருத்துன்னதின் பூதப்பாண்டி வடக்கே பறளியாற்றில் சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி அண கெட்டி அவிடே நின்னும் புத்தனாயிட்டு ஆறு வெட்டி கன்னிமாகுமரி வரேக்கும் ஆற்றும் வெள்ளம் கொண்டுவிட்டு…″ இதற்கு ஆதாரமாக சேரநாடும் செந்தமிழும் நூலில் (ப.92) மலையாள எழுத்தில் உள்ள வரிகள் தமிழ் எழுத்தில் தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி என்று இன்று வழக்கில் உள்ளதற்கு மாறாக இந்த ஆவணத்தில் கன்னிமாகுமரி என இருக்கு. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேறு ஆவணங்களிலும் கன்னிமாகுமரி என்றே குறிக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் சொல்றாங்க.

ஆனால் வேறு சிலரோ இதனை வடிகால் ஆறுஎன பொதுப்பணித் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றதாகவும் சொல்றாங்க. பழந்தமிழ் இலக்கியங்கள் இந்த ஆற்றை கோட்டாறுஎன்றே குறிப்பிடுகின்றது எனவும் அகஸ்தீசுவரம் பாறைக் கல்வெட்டு ஒன்றில் நாஞ்சில் நாட்டு தேரான் அழகிய சோழநல்லூர் தேரான் குளத்தில் கீழ் முட்டைக் குமிழிமடை கீழ் கால் போக்கில் நிலத்துக்கு எல்கை; கீழெல்லை கன்னடியான் குலகாலன் மடை மேல்ப் பெருங்காலுக்கு மேற்கு, தென் எல்லை உதிரப்பட்டியைச் சுற்றியோடும் கோட்டாற்றுக்கு வடக்கு…′  என பொறிக்கப்பட்ட வரிகளை உதாரணம் காட்டி இது கோட்டாறுதான் என்றும் சொல்கிறார்கள் .

ஆன்மீகவாதிகளோ கெளதமரால் சபிக்கப்பட்ட இந்திரன் சாபம் போக்க சுசீந்திரம் மகாதேவரை வணங்க எண்ணியபோது, பூசைக்கான புனித நீருக்காக ஐராவதம் யானையால் தோண்டப்பட்ட ஆறு இது. யானை தன் தந்தத்தினால் தோண்டிய ஆறு கோட்டாறுஎன்றாயிற்று. இது புராண விளக்கம்.கோடு என்பதற்கு யானை எனப்பொருள் கொண்டு, யானையால் கோடு உருவாக்கியது கோட்டாறு என்றும் குறிப்பிடுகின்றனர்.

வேறு சிலரோ குமரி மாவட்டத்தின் முக்கியமானதும் மிகப்பெரியதுமான ஆறு தாமிரபரணி என்று அழைக்கப்படும் குழித்துறை ஆறு ஆகும். இது இரு ஆறுகளின் இணைவால் உருவான பெரிய ஆறாகும். மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் உருவாகும் கோதையாறு, பறளியாறு(பறளையாறு) ஆகியன இணைவதால் தாமிரபரணி உருவாகிறது. இந்த ஆறு தேங்காய்ப்பட்டினம் என்னுமிடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணையும் பறளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணையும் கட்டப்பட்டுள்ளன.ஆகையால் பழையாறு வேறு பஃறுளிஆறுவேறு என குறிப்பிடுகின்றனர் .ஐயோ இப்பவே கண்ணைக்கட்டுதே! ஊருக்கு போனோமா?! நாலு இடத்தை பார்த்தோமா?! நல்லதா நாலு புது உணவை சாப்பிட்டோமா?! செல்பொ எடுத்தோமான்னு இல்லாம பிளாக் எழுதுறேன்ற பேர்ல தேவையா இந்த ஆராய்ச்சி?! இப்ப பாருங்க ஸ்கூல்ல படிக்காம பங்க் அடிச்ச கன்னியாகுமரிக்கு  தெற்கே இருந்த கடல்சீற்றத்தால் அழிந்த லெமுரியா கண்டத்திலிருந்து மகேந்திரகிரி மலைவரை அலசவேண்டியதா போச்சு.

கூகுளாருக்கு தெரியாத தகவல் உள்ளூர்காரவுங்களுக்கு தெரியாம இருக்காதேன்னு  இவங்க சொல்லுற பாண்டியன் அணைக்கட்டு எங்கே இருக்குன்னு தேடிப்பார்த்து அங்க இருக்கும் ஆட்கள்கிட்ட கேட்டு பார்ப்போம்ன்னு பாண்டியன் அணைக்கட்டுக்கே பயணப்பட்டாச்சு.

 .

பாண்டியன் அணைக்கட்டு இருக்குமிடம் தலையணைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமம். அங்க இருக்கும் ஒரு பெரியவரிடம்இந்த பழையாறு பற்றிய வரலாறை கேட்டோம். அவர் சொன்ன தகவல்கள்தான் எல்லா தகவல்களிலும் மிக சிறப்பானதாகும். பழையாருக்கும் பஃறுளியாற்றுக்கும் எந்தவித தொடர்பு இருக்கிறதா என்று தெரியலை. பஃறுளியாறு கடல்சீற்றத்தினால் முற்றிலுமாக அழிஞ்சிட்டுதாம். ஆனா தமிழ்நாட்டில் ஓடும் வைகை, தாமிரபரணி போன்ற நதிகள் கடல்சீற்றம் வருவதற்கு முன்னர் லெமூரியாவின் நிலப்பரப்பில் பல கிலோமீட்டர் தூரங்களில் ஓடிக்கொண்டிருந்ததாம். கடல்சீற்றத்தால் இந்த நதிகளின் கடைப்பகுதிகள் மூழ்கிவிட்டதா அந்த பெரியவரின்  தாத்தா சொல்லுவாராம். அது உண்மையா பொய்யா என எதாவது ஆதாரம் கிடைக்குமா  தேடினால் ,திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்தரிமோட் சென்சிங் துறையில் உள்ள இரு பேராசியர்கள்,Current Science 25 June 2019 அன்று ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையை சமர்பித்திருக்கின்றனர்.GEBCO என்ற இணையதளத்தில் கடல்கீழ் தரைமட்ட செயற்கைகோள் படங்கள் மற்றும் Geographical software ஐ பயன்படுத்தி கடலுக்கடியில் நதிகள் ஓடிய தடங்களை பற்றி ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

 .

அந்த ஆய்வு அறிக்கையின்படி வைகை நதிபற்றிய குறிப்பு கிடைத்தது. தற்போதுள்ள முகத்துவரங்களிலிருந்து கிழக்கு பக்கமாக பாய்ந்த வைகைநதிராமேஸ்வரத்திற்கு வடக்காக சென்று பிறகு தெற்குநோக்கி திரும்பியுள்ளது. அதன்பின் அங்கிருந்து 400 கிமீ தூரம் தெற்கு திரையைநோக்கி ஓடி இருக்கிறது. அதாவது இலங்கையின் தென்பக்கம் இருக்கும் காலி வரை இந்ததியின் நீட்சி காணப்படுவதை, செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றது. அந்த இடம்தான் இப்ப மன்னார்வளைகுடாவாக இருக்குது . கடலுக்கடியில் தரைமட்டத்தை காட்டும் செயற்கைகோள் படங்களில் தாமிரபரணி நதி ஓடிய பள்ளங்களும்  தெளிவா இருக்கு. இந்த இடம் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாக கடல்சீற்றத்தில் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் லெமுரியா கண்டம் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும்  என்றும் இதன்மூலம் தெரிகிறது . கடலின் அடிப்பகுதி தரையை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்தபோது ,=அதில் ராமேஸ்வரத்திற்கு கிழக்கே இருந்து இலங்கையின் காலிவரை ஒரு பெரிய பள்ளத்தாக்கு தெளிவாக தெரிகிறது தற்போதைய மன்னார் வளைகுடாவில் இருக்கும் கடல்பகுதிதான்தான் இந்தப்பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கில் வைகைநதி ஓடிய தடம் தெளிவாக காணப்படுகிறது. அதுப்போல தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்திலிருந்தும் ஒரு நீட்சி காணப்படுகிறது . அந்த பள்ளத்தாக்கு ஒரு இடத்தில்  கடலுக்கு அடியில் வைகை நதியோடு இணைகிற காட்சி தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது. இந்த நதிகளின் பாதைக்கு மேற்கே மற்றுமொரு நதிப்பள்ளத்தாக்கு தெரிகிறது இதுவே இலக்கியங்களில் கூறப்படும் பஃறுளி ஆறாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலப்பரப்பு மேற்கில் மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியாவரை பறந்து விரிந்து இருந்திருக்கிறதென சொல்லப்பட்டாலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுமார் 3 லட்சம் சதுரகிலோமீட்டர் அளவுக்குத்தான் தெளிவாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்படுகிறது.

 .

அதைவிட கூடுதலாக அவர் சொன்ன இன்னொரு தகவல்தான் ஆச்சர்யம் இந்திய நாட்டில் முதல்முதலில் நதிநீரிணைப்பு நடந்தது இந்த பறலையாறு - பழையாறு நிகழ்வாகத்தான் இருக்கவேண்டும்.  எந்தவித  நவீன தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத 9-ம் நூற்றாண்டில் இந்த நதிநீர் இணைப்பை செய்துகாட்டினார்கள் பாண்டியர்கள். அவர்கள் கட்டியதுதான் பாண்டியன் அணை  

மேற்குத் தொடர்ச்சி மலையின் மகேந்திரகிரி தென்பகுதியில்தான் பறலையாறு உற்பத்தியாகிறது. இது கோதை ஆற்றுடன் இணைந்து அரபிக்கடலில் கலக்கிறது. அதே மலையின் இன்னொரு பக்கத்தில் உற்பத்தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடி தேங்காய்பட்டணத்தில் கடலில் கலக்கிறது பழையாறு. பறலை ஆற்றுடன் ஒப்பிட்டால் பழையாறு மிகவும் சிறியது. நீர் வளம் குறைந்தது. கோடைக்காலங்களில் வறண்டுபோய்விடும். இதனால் நெல்விளையும் பகுதிகளான தோவாளை, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட நாஞ்சில் நாட்டில் விவசாயத்திற்கு தண்ணீரில்லாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவில்லாமல் தவித்தனர். ஆனால் கொஞ்சம் தொலைவிலிருந்த பறலை ஆற்றின் நிலைமை அப்படியில்லை  ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிகொண்டே இருந்தது.  ஏராளமான நீர் கடலில் வீணாக கலந்தது. இதனால், நாஞ்சில் நாட்டு மக்கள் பறலை ஆற்று தண்ணீரை பழையாற்றுக்கு திருப்பி பாசனத்துக்கு உதவும்படி பாண்டிய மன்னன் இரண்டாம் ராஜசிம்ஹனிடம் கோரிக்கை விடுத்தனர். இது நடந்தது கி.பி.900-ல். பாண்டியமன்னனும் பழையாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் நீண்ட மலைப்பாறைகளைக் கொண்டு அணையை கட்டினான். அதன் தொடர்ச்சியாக உயரமான பாறைக் குன்றுகளைக் குடைந்து சுமார் 2 மைல் நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டது.

இந்த தடுப்பணைகள் பெரும்பாறைகள் கொண்டு இணைக்கப்பட்டுஇணைப்பு பகுதியில் ஈயத்தை ஊற்றி வலிமைப்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு நதிநீர் இணைப்பு அசாத்தியமானதாகும். பின்வந்த பாண்டிய மன்னர்கள் பழையாற்றில் 13 தடுப்பணைகள் கட்டினர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கால்வாய்மூலம் பறலை ஆற்றிலிருந்து பழையாற்றுக்குத் தண்ணீர் வந்து சேர்ந்தது. இன்றும் வந்துகொண்டிருக்கிறது. ஒரு ஆற்று வழி நீர் நிலப்பரப்பில் இருந்து மற்றொரு ஆற்று வழி நீர் நிலப்பரப்புக்கு நீர் பரிமாற்றம் (Inter basin transfer of water) செய்யப்பட்ட முதல் திட்டம் இது என்று சொல்லப்படுகிறது. திருவிதாங்கூர் ஆவண அறிக்கையில் இதுகுறித்த குறிப்புகள் இருக்கின்றன. இந்த நதிகளை இணைத்தப் பின்புதான் நாஞ்சில்நாட்டில் விவசாயம் செழித்தது என்றும் சொல்லப்படுகிறது. நாஞ்சில் நாடு செழித்ததைக் கண்ட விளவங்கோடு, கல்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கும் இப்படி ஒரு புதிய அணை வேண்டும் என்று திருவிதாங்கூர் மன்னர் முதலாம் மார்த்தாண்ட வர்மனிடம் கேட்டனர். அதன்படி கி.பி.1750-ம் ஆண்டு பாண்டியன் அணைக்குக் கீழே 460 மீட்டர் தள்ளி சரிவான பகுதியில் ஆற்றில் குறுக்கே 6 அடி முதல் 30 அடி வரை கற்சுவர்கள் எழுப்பப்பட்டு புதிய அணை கட்டப்பட்டது. அதுதான் புத்தன் (புதிய) அணை. இன்னும் சிலர் அங்கிருந்த பாண்டியன் அணையின் தடுப்பணை ஒன்றை மேம்படுத்திக் கட்டப்பட்டதுதான் புத்தன் அணை என்றும் கூறுகின்றனர். இந்த நதிநீர் இணைப்பு திட்டத்தை எல்லாம் பார்த்த ஆங்கிலேயர்களே வியந்து போனார்களாம் .

புத்தன் அணையில் இருந்து பத்மநாபபுரம் - புத்தனாறு கால்வாய் 19 மைல் தூரம் வெட்டப்பட்டது. சில இடங்களில் இந்தக் கால்வாயின் தரைமட்டம் அங்குள்ள பூமியின் மட்டத்தை விட 10 அடி உயரமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவைப்படும் உயரத்துக்கு மண் கரை எழுப்பி அதில் கால்வாய் எடுத்துச் செல்லப்படுகிறதுஇதெல்லாம் இயந்திரங்கள் இருந்தாலே சாத்தியம் குறைவு கடினமான இந்த இணைப்பு திட்டம்  மனித முயற்சியின் ஆச்சர்யம் தரும் செயல் என்று நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திட்டங்களை குறித்து தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பாசனப் பொறியாளராக பணியாற்றிவர் ஹார்ஸ்லி. ஆங்கிலேயரான இவர் எல்லா அணைகளின் பாசனக் கட்டமைப்புகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கட்டமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, “மற்ற நாடுகளிலும் இந்தியாவிலும் பெரும் பாசனத் திட்டங்களை உருவாக்கும் பொறியாளர்கள், தாங்கள் அமைத்த கட்டுமாணங்கள் வெற்றி பெற்றதற்கு தங்களது திறமையும் விடாமுயற்சியும்தான் காரணம் என்று பெருமைப்படுவார்கள். ஆனால், நான் தயக்கமின்றிச் சொல்வேன், பாண்டியன் வாய்க்கால், பத்மநாபபுரம், புத்தனார் வாய்க் கால்களை உருவாக்கியவர்களின் தொழில்நுட்பம் பிரமிக்க வைக்கிறது. தொழில்நுட்பத்தில் அவர்கள் வழியை பின்பற்றுவது கலப்பில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. இவர்களே எனது பாசனத் தொழில்நுட்ப ஆசான்கள். இவர்களின் பாசனக் கட்டமைப்புகளில் நான் வேலை செய்வதில் மனநிறைவு கொள்கிறேன்என்று பதிவு செய்கிறார்

கி.பி.1352 முதல் கி.பி.1748 வரை தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு பிற்காலப் பாண்டியர்கள் 14 பேர் ஆட்சி புரிந்தார்கள். தாமிரபரணி ஆற்றில் அரியநாயகபுரம் அணை மட்டுமே பாண்டியர்களால் கட்டப்படவில்லை. மற்ற அணைகள் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பராக்கிரம குலசேகரப் பாண்டியன், ஆகவராமப் பாண்டியன், சடையவர்மன் சிவல்லப் பாண்டியன் அல்லது சடையவர்மன் பராக்கிரம குலசேகரப் பாண்டியன் ஆகியோரால் கட்டப்பட்டிருக்க வேண்டும்என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த அணைகளைத் தொடர்ந்து பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் வேணாடு மன்னர்கள் காலத்திலும் பழையாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. விளாவடிக்கால் அணைக்கட்டுக்கு கீழே வீரப்புலி அணைக்கட்டு, குட்டி அணைக் கட்டு, பள்ளிகொண்டான் அணைக் கட்டு, சாட்டுப்புதூர் அணைக் கட்டு, செட்டித்தோப்பு அணைக்கட்டு, வீர நாராயணமங்கலம் அணைக்கட்டு, சபரிஅணைக்கட்டு, குமரிஅணைக்கட்டு, சோழந்திட்டை அணைக்கட்டுபிள்ளை பெத்தான் அணைக்கட்டு, மிஷன் அணைக்கட்டு, மணக்குடி காயல் அணைக்கட்டு உட்பட 13 தடுப்பணைகள் பழையாற்றில் கட்டப்பட்டன. இந்த அணைகள் அத்தனையுமே பெரும் கற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அமைக்கப்பட்டன. பாறைகளை இணைப்புப் பகுதியில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்டது. மன்னர்கள் காலங்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த அணைகளில் கொல்லர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்கள் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

.

சரி இவ்வுளவு சிறப்புமிக்க பாண்டியன் அணைக்கட்டை பார்க்கனும்.. எப்படி போகனும், எங்கிருந்து வாகனம் பிடிக்கனும்ன்னு கேட்பவர்களுக்கும், எனக்குலாம் போறதுக்கு வாய்ப்பில்லை, ஒரேயொரு புகைப்படமாவது காட்டுன்னு சொல்றவங்களுக்கும் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன்..உங்களை மாதிரிதான் நானும் அந்த அணைக்கட்டை  பார்க்க ஆசைப்பட்டு தேடி அலைந்தேன். ஒருசிலர் அதுமுற்றிலும் சிதிலமடைந்துவிட்டது மக்கள் பயன்பாட்டில் இல்லை அங்க போக தடைவிதிக்கப்பட்டுள்ளதுன்னு சொன்னாங்க. சிலரோ பாண்டியன் அணைக்கட்டு இருந்த சுவடே இப்ப இல்லை. திருவிதாங்கூர் குறிப்புகளில் மட்டுமே உள்ள இந்த அணைக்கட்டு இருக்கு. இந்த அணைக்கட்டு உடைந்து, பயன்பாட்டுக்கு உதாவாதபோது, அதற்கு மாற்றாக புத்தன்அணை கட்டப்பட்டதுன்னும் சொல்றாங்க. இன்னும் ஒருசிலர் தலையணைக்கு மேலே பாண்டியன் அணை இருக்கலாம் அல்லது பாண்டியன் அணைக்கட்டிற்கு மேல தலையணை கட்டி இருக்கலாம் என்றும் சொல்றாங்க.  இன்னும் வேறு சிலரோ பெருஞ்சாணி அணைக்கும் புத்தன் அணைக்கும் இடையில் இருக்கலாம் அல்லது தண்ணீரில் அழிந்து போயிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் . ஆகமொத்தம் பாண்டியன் அணைக்கட்டையும் நான் பார்க்கலை. அணைக்கட்டை பார்த்தவங்களையும் நான் பார்க்கலை. அணைக்கட்டு பற்றிய குறிப்புகளை தேடிக்கிட்டிருக்கேன். ஊர்க்காரவுக,  மனோ அண்ணா, கீதாக்கா, துளசி சார் சொன்னால் விவரங்களை சொன்னால், அணைக்கட்டு பத்திய மண்டைக்குடைச்சல் தீரும்.   

பதிவை படிச்சுட்டு முதல்ல சொன்ன நிபந்தனையை மறந்துடாதீக! அப்புறம் வருத்தப்படுவேன்..

நன்றியுடன்

ராஜி

6 comments:

  1. தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    எனக்கும் ஊர்க்காரர்கள் விவரங்களைச் சொன்னால்தான், அணைக்கட்டு பத்திய மண்டைக் குடைச்சல் தீரும்.

    ReplyDelete
  2. மகளுக்கு எங்கள் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  3. excellent efforts in tracing

    ReplyDelete
  4. அனைத்தையும் தொகுத்து, அருமையான பதிவை பகிர்ந்து கொள்வது - அதுவும் முக்கியமான சொந்த வேலைகள் இருக்கும் போது - வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு. மகளுக்கும் புது வரவுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    வலை ஓலை வலை திரட்டியில் பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

    பதிவு அருமை. தகவல்கள் எல்லாம் புதுமை.

    தேடல் தொடரட்டும்.

    ReplyDelete