ஒருமுறை கைலாயத்தில் நம்ம சிவனும், பார்வதியும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்ப, பார்வதி சிவனை நோக்கி, மாம்ஸ்! புண்ணிய நதிகளில் நீராடினா பாவம் கரையும்ன்ற நம்பிக்கைல எல்லா நதிகளிலும் இத்தனை பேர் நீராடுறாங்களே! அப்ப அவங்க பாவம்லாம் நீங்கி அவங்க புண்ணிய ஆத்மாக்களா ஆகிடுவாங்கதானே?! அப்ப, பூலோகத்தில் யாரும் பாவிகளே இருக்கக்கூடாதுல்ல, ஆனா, அப்படி நீராடியும் பூலோகத்தில் பாவிகள் இருக்க காரணம் என்னன்னு கேட்டிருக்காங்க. இந்த காலத்து ஆம்பிளைங்கக்கிட்ட கேட்டா, கோவிச்சுக்கிட்டு உனக்கு எது சொன்னாலும் புரியாதுன்னுட்டு போய்டுவாங்க. ஆனா, சிவன் தன் இடப்பக்கத்தையே தன்னோட டார்லிங்க் பார்வதிக்கு கொடுத்ததால, டியர்! உனக்கு சொன்னா புரியாது. வா நேரில் புரிய வைக்குறேன்னு சொல்லி, வயசான கிழவன், கிழவியா மேக்கப் போட்டுக்கிட்டு ஹாயா கிளம்பி பூலோகத்துக்கு வந்தார்.
காசிக்கு வந்து, அங்க பார்வதிக்கிட்ட, நாம நீராட கங்கையில் இறங்குவோம். நான் கங்கை வெள்ளத்துல அடிச்சுட்டு போற மாதிரி போறேன். நீ காப்பாத்துங்கன்னு கத்து. காப்பாத்த வர்றவங்கக்கிட்ட நான் சொல்லுற மாதிரி சொல்லுன்னு சொல்லி வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற மாதிரி சிவன் ஆக்ட் கொடுக்க, கூடவே பார்வதியும் சூப்பரா பர்பாமென்ஸ் பண்ண, கரையில் இருந்த பண்டிதர் உட்பட அனைவரும் வெள்ளத்தில் குதிச்சு காப்பாத்த தயாரானாங்க. உடனே, பார்வதி, மக்களே! எவனொருவன் பாவம் பண்ணாம புண்ணிய ஆத்மாவா இருக்கானோ அவங்கதான் என் புருசனை காப்பத்த முடியும்ன்னு சொல்லுது. ஒருத்தர் ஆண்டவனுக்கு தெரியாம கூட தப்பு பண்ணிடமுடியும், மனசுக்கு தெரியாம தப்பு செய்ய முடியாது. அதுப்போல தன் பாவங்களை உணர்ந்தவங்களாம் டூ ஸ்டெப் பேக் அடிக்க, எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன் கங்கையில் பாய்ந்து முதியவர் வேடத்திலிருந்த சிவனை காப்பாத்தி இருக்கார்.
அட, பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா யாருன்னு எல்லாரும் காங்கையில் குதித்தவனை பார்த்து எல்லாரும் வாய் அடைச்சு போய் இருக்காங்க. ஏன்னா, அவன் கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு எல்லா பாவத்தையும் செய்ய அஞ்சாதவன். உடனே, கிழவியா வந்த பார்வதிக்கிட்ட எல்லாரும் சண்டை பிடிக்குறாங்க, என்னம்மா! நீ பாவமே செய்யாதவங்கதான் காப்பாத்த முடியும்ன்னு சொன்னே. இப்ப ஒரு படுபாவி உன்ற வூட்டுக்காரரை காப்பாத்தி இருக்கானேன்னு.. உடனே பார்வதியும் என்னப்பான்னு அவனை கேட்க, அதுக்கு அவன் சொன்னான், ஆமா, நான் பாவம் பண்ணவந்தான்,. ஆனா, கங்கையில் குளிச்சா பாவம் போகும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்படி பார்த்தா, நான் கங்கையில் குதிச்ச உடனே என் பாவம் போய் இருக்கும். இப்ப நான் புண்ணிய ஆத்மா, அதான் அவரை காப்பாத்த முடிஞ்சுதுன்னு சொல்லிட்டு போய்ட்டானாம். அப்ப, பாவத்தை செஞ்சுட்டு, செஞ்சுட்டு கங்கையில் போய் குளிச்சா பாவம் போய்டும்ன்னு குதர்க்கமா யோசிக்கக்கூடாது. நம்பிக்கையோடு, இறைவன் மேல் பாரத்தை போட்டுட்டு செய்யனும். அதை அந்த பாவி செஞ்சான். ஆனா, மத்தவங்கலாம் சும்மா சாஸ்திரத்துக்காக குளிச்சவங்க. இப்ப தெரியுதா தேவி?! பூமியில் இன்னும் பாவிகள் இருக்க காரணம்ன்னு தன்னோட மனைவிக்கு புரிய வச்சு கைலாயத்துக்கு போய்ட்டாங்க.
பொதுவா கங்கை, யமுனை, சரஸ்வதி நதியில் குளித்தால் பாவம் கரையும் என்பது நம்பிக்கை. அதினினும் புனிதமானது துலா ஸ்நானம். இது பாபத் துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஏனெனில் கங்கை, யமுனை ஆகிய புண்ணிய நதிகள் இங்கு வந்து காவிரியில் குளித்து புனிதம் ஏற்றுச் செல்லும் மாதம் ஐப்பசி. அதனால் அப்புனித நதிகளின் பங்கும், இக்காவிரியில் கலந்துவிடுவதால், இந்த காவிரி நீராட்டம் பல மடங்கு நன்மையை ஐப்பசி மாதத்தில் அளிக்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்நதியில் நீராடுபவரும் உண்டு. இத்தமிழ் மாதக் கடைசியில் ஒரு நாளேனும் நீராடலாம் என வருபவர்களும் உண்டு. கடைசி நாளானதால் இதற்கு கடை முழுக்கு என்று பெயர்.
முடவன் முழுக்கு ...
பாவத்தின் பலனா முடவனா பிறந்த ஒருவன், வருந்தி, இனி எப்பிறவியிலும் இந்த நிலை ஏற்படக்கூடாது ன்ற பிரார்த்தனையை முன் வைத்து, தொலைதூரத்தில் இருந்து காவிரியில் நீராடக் கிளம்பினான். அவன் தவழ்ந்து வந்ததால, ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதமும் வந்திடுச்சு. தன் நிலை நினைச்சு அவன் மனம் அழுது புலம்பியது. தன் நிலை மாறாதா/! அடுத்த பிறவியிலும் தான் அல்லல் படனுமான்னு நினைச்சு மனம் புழுங்கினான்.
அவன் புனித நதியான காவிரியையே எண்ணி வந்த இறை நம்பிக்கையின் காரணமா, ஓர் அசரீரி ஒலித்தது. இன்றைய "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என ஒலிக்கிறது. அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள் செய்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" ன்னு பேர் வந்திச்சு.
பொதுவா புண்ணிய நதிகளில் புனித நீராடுவதற்குன்னு சாஸ்திரங்கள் சில வழிமுறைகளை சொல்லி இருக்கு. நீரில் கால் வைக்கும் முன், குனிந்து இரு கைகளாலும் நீரை ஒதுக்கி தூய்மை செய்ய வேண்டும். பின்னர் ஒரு கை நீர் கொண்டு தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். கண்கள் இரண்டையும் துடைத்துக் கொள்ள வேண்டும். இரு கைகளிலும் கிண்ணம் போல் ஏந்தி நீர் மொண்டு, இறைவனை பிரார்த்தித்தபடி உட்கொள்ள வேண்டும்.
அதன்பின் முழுமையா நீரில் இறங்கலாம். சோப்பு, ஷாம்பு மாதிரியான காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. வாசனை பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை இல்லை. ஆற்றில் குடைந்து நீராடி, மூன்று முழுக்குப் போட வேண்டும். ஈரத்தோடு இடுப்பளவு நீரில் நின்று, இரு உள்ளங்கைகளையும் இணைத்து கிண்ணம் போலாக்கி நீர் மொள்ள வேண்டும். சூரியன் இருக்கும் திசை நோக்கி திரும்பி, இரு கண் மூடி, இறைவனை பிரார்த்தித்து, இரு கைகளில் உள்ள நீரை, அவற்றில் இடைவெளி வழியாக, இறைவனுக்கு அர்க்கியமாய் எண்ணி ஆற்றிலேயே விட்டுவிட வேண்டும். இது போல மூன்று முறை செய்ய வேண்டும். அங்கப்பிரதட்சணம் செய்வதென்றால் ஈர உடையோடு செய்யலாம். மற்றபடி, ஈரம் போக உடலைத் துடைத்து, உலர்ந்த ஆடை உடுத்தி, நெற்றிக்கு இட்டுக் கொண்ட பின்னரே கோயிலில் உள்ள இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இதனால் குறைவில்லா புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடையின்றி ஆற்றில் நீராடக்கூடாது. அதேப்போல் நீர் நிலைகளில் எச்சில் துப்புவது, சிறு நீர் கழித்தலும் கூடாது. புண்ணிய நதிகளில் நீராடும்போது இறை சிந்தனையும், இறை தியானமும் முக்கியம் என்பது நம் முன்னோர்கள் வகுத்த நியதி. அப்படி காவேரியில் நீராட முடியாதவர்கள், தான் குளிக்கும் இடத்திலிருக்கும் தண்ணீரில் காவிரியை ஆவாகணப்படுத்தி, தாயே! நின்னை சரணடைகிறேன், என் பாவங்களை போக்கி என்னை புண்ணிய ஆத்மாவாக மாற்று என வேண்டிக்கொண்டாலே போதும். புண்ணிய நதிகளில் நீராடுவதன் முழு பலன் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும். அப்படி முடியவில்லையென்றாலும், உச்சி வேளைக்குள் நீராடல் நலம். அதன்பின் நீராடுவதால் எந்த பயனும் இல்ல. அதேப்போல, இரவில் புண்ணிய நதிகளில் நீராடவே கூடாதாம்.
புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் எல்லாருக்கும் கிட்டாது. அதனால, நம்ம வீட்டுலயே குளிக்கும்போது காவிரி, கங்கை அம்மனை மனசுல நினைச்சுக்கிட்டு குளிச்சு புண்ணியம் பெறுவோம்.
தமிழ்மணம் ஓட்டு அளிக்க..
நன்றியுடன்,
ராஜி.