Saturday, May 14, 2022

1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி


திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தவிர  அருவி, கோட்டை, கொத்தளம், கோவில்ன்னு சொல்லிக்குற மாதிரியும், சுத்தி பார்க்குற மாதிரியும் புகழ்பெற்ற எந்த இடங்களும் கிடையாதுன்ற மனக்குறை எனக்குண்டு.   ஆனாலும், பெத்த தாயையும், குடிக்குற தண்ணியையும், வாழும் பூமியையும் பழிக்கக்கூடாதாம்.  அதனால், வேற ஊருக்கு போயிடலாம்ன்னு மாமாவை இதுவரை கூப்பிட்டதில்லை...


புகழ்பெற்ற கோவில்கள் இல்லன்னாலும், சின்னதும் பெருசுமா பழமையான கோவில்கள் இம்மாவட்டத்தில் நிறைய இருக்கு. அதுவும் ஆரணியை சுற்றிலும் இருக்கு.. மீன்தொட்டியில் வாழும் மீனுக்கு அந்த தொட்டியே உலகம்ன்ற மாதிரி வீடே உலகம்ன்னு வெள்ளேந்தியா இத்தனை நாள் வாழ்ந்திருக்கேன்போல!! இப்பதான் ஒன்னொன்னா தெரிய வருது... இனி ஒவ்வொன்னா போக வேண்டியதுதான்...

மாமனார் இறப்புக்குப்பின் குலதெய்வ கோவிலுக்கு போய்வரலாம்ன்னு குடும்பத்தோடு போனோம். இம்புட்டு தூரம் வந்துட்டோம். அப்படியே பக்கத்திலிருக்கும் தம்டகோடி முருகர் கோவிலுக்கும், சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவிலுக்கும் போகலாம்ன்னு பெரியவங்க முடிவெடுக்க எல்லோரும் கிளம்பிட்டோம்...

சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில்..... இக்கோவில் வேலூர் மாவட்டம்,  கணியம்பாடியை அடுத்த கத்தாழம்பட்டு ஊராட்சியில் சிங்கிரி கோவில் அமைந்துள்ள கிராமம் உள்ளது. கோவில் மற்றும் ஊர் இரண்டின் பேரும் ஒன்றே!    வாழைமரம், தென்னை மரம், நெல், கரும்பு, கத்தரி, மக்காச்சோளம்ன்னு வயல்வெளிகள் சூழ்ந்த அமைதியான இயற்கை சூழலில் நாகநதிக்கரையில் இக்கோவில் அமைந்திருக்கு. இந்த கோவிலுக்கு 20 வருடத்துக்கு முந்தி ஒருமுறை போனது. பிறகு இப்பதான் போறோம். 20 வருடத்தில் ஆற்றை கடந்து கோவிலுக்கு போக சின்னதா ஒரு தடுப்பணை கட்டி இருப்பதோடு சரி. மற்றபடி எந்த மாற்றமுமில்லாம  கோவில் இருக்கு.. மழை நாட்களில் மட்டுமே இந்த நாகநதியில் நீரோட்டம் இருக்கும். மத்தபடி காய்ஞ்சுதான் இருக்கும்.

இக்கோவில் 1400 வருட பழமையானதுன்னு மத்திய, மாநில அரசுகள் ஆராய்ச்சிக்குபின் சொல்றாங்க. மலைகள் சூழ ஒரு மிகச்சிறிய குன்றின்மீது இக்கோவில் இருக்கு... ஸ்ரீ முதலாம் ராஜ நாராயண சம்புவராய மன்னர் இக்கோவிலை கட்டியதா கல்வெட்டு ஆதாரங்கள் சொல்லுது.

இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்களை கடந்து, இலங்காமலையின்கீழ், சிறிய தடுப்பணையை கடந்து, துளசி மாலை வாங்குங்க, கற்பூரம் வாங்குங்க, சுரைக்காய், கத்தரிக்காய், கீரை, வாழைக்காய் வாங்குங்கன்ற அன்பு தொல்லையை கடந்து,  சிறிதும் பெரிதுமான கற்கள் நிறைந்த சிறிய பாதையில் நடந்தால் ஒரு மிகச்சிறிய  குன்று வரும். குறுகலான நெட்டையாக இருக்கும் படிகளில் ஏற துவங்குவோம்.. 

படிகள் நெட்டாக இருப்பதால் மூச்சு வாங்கும்...  அதனால் கோவிலை பத்தி பேசிக்கிட்டோ நடப்ப்போம். அலுப்பு தெரியாது..
முதல் 50 படிகள் ஏறியது புதுசா எழுந்தருளியிருக்கும் பால ஆஞ்சிநேயர் நமக்கு அருள்பாலிக்க காத்திருக்கார். இவர் அமர்ந்தவாக்கில், யோக நித்திரையிலும் காட்சி தருகிறார். அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு போகலாம்.. இந்த கோவில் பற்றி 8ம் நூற்றாண்டை சேர்ந்த திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கார்.  1337-1363 காலத்தில் ஆட்சிப்புரிந்த முதலாம் ராச நாராயணன் சம்புவராயர் என்னும் மன்னன் கட்டிட கோவிலாக எழுப்பினார். அப்பலாம் கோவில் அமைந்திருக்கும் இவ்வூர் ஓபிளம்ன்னும்,  இங்கிருக்கும் இறைவனை சிங்கப்பெருமாள்ன்னே கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கு. சிங்கப்பெருமாள் கோவில் என்பது மருவி சிங்கிரி கோவில்ன்னும், சிங்கிரி கோவில் அமைஞ்சிருப்பதால் இந்த ஊருக்கும் சிங்கிரின்னும் மக்கள் சொல்லப்போக இப்ப சிங்கிரின்ற பேரே வழக்கத்தில் இருக்கு.
முருங்கைப்பற்றை இடத்தில் வாழ்ந்த மீனவராயன் செங்கராயன் என்பவன் இக்கோவிலில் நித்தமும் விளக்கு எரிய வேண்டி நிலம் தானம் செய்ததாய் இக்கோவிலில் விஜய மகாராயர் குமாரர் சச்சிதானந்த உடையார் காலத்தைய கல்வெட்டு சொல்லுது...
இக்கோவிலை ராஜ நாராயணன்  சம்புவராயர் கட்டிட கோவிலாய் கட்டுவதற்கு முன்பிருந்தே, சரியா சொல்லனும்ன்னா 8ம் நூற்றாண்டிலேயே சிறிய சன்னதியில் எழுந்தருளி இறைவன் நம் அனைவருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.
கோவில் பத்தி பேசிக்கிட்டே வந்ததால் களைப்பே தெரில. இதோ கருவறையை நெருங்கிட்டோம்.   சிறிய சன்னதியில் இருந்தாலும் விசாலமான கருவறையில் பெருமானின் வலது தொடையில் தாயார் அமர்ந்தவாறு வித்தியாசமான கோலத்தில் பெருமானும், தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இதிலென்ன வித்தியாசம்ன்னு கேட்கலாம். எல்லா கோவில்களிலும் பெருமானின் இடது தொடையில் தாயார் அமர்ந்திருந்து அருள்பாலிப்பர். இங்கு வலது தொடையில் அமர்ந்திருப்பது வித்தியாசம்...
கருவறையில் ஆறடி உயரத்தில் லஷ்மி நரசிம்மர் நான்கு கைகள், மேலிரண்டு கைகளில் சங்கு சக்கரம், இடது கையை தன் மடியிலும், வலது தொடைமீது அமர்ந்திருக்கும் லஷ்மி தேவியை வலது கையால் அணைத்தபடி சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறார். 
கருவறைக்கு பின்புறமுள்ள பெரிய பாறையின்மீது எந்தவித அஸ்திவாரமுமின்றி ராஜகோபுரம் எழுப்பப்பட்டு இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. பரந்த அர்த்த மண்டபம், அதன் எதிரே பலிபீடம், கருடத்தாழ்வார் சன்னதி என அனைத்தும் பாறையின்மீதே அமைந்திருக்கு. 
பல்வேறு ஊர்களிலிருந்தும் சனிக்கிழமைகள் கூட்டம் அதிகளவில் வரும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தின்போது சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். நரசிம்ம ஜெயந்தியன்று திருக்கல்யாண வைபவம் நடக்கும். ரத சப்தமி, தமிழ் ஆங்கில புத்தாண்டு, அனுமன் ஜெயந்தி என கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாத கோவில் இது.. விசேச நாட்கள் இல்லாதபோது காலை 9 மணியிலிருந்து 12 மணி வரைக்கும், மாலை 5 மணியிலிருந்து  6 மணி வரைக்கும் திறந்திருக்கும்.
எனக்கு கடவுள் பக்தி இல்லன்னு சொல்லும் ஆட்கள் இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடத்தை பார்க்கவாவது வரலாம். கேரளாவுக்கு வந்துட்டமோன்னு நினைக்க தோணும் இங்கிருக்கும் சூழல்.. சரி, வர்றோம்.. ஆனா, எப்படி வர்றதுன்னு கேக்குறவங்களுக்கு எப்பயும் நான் சொல்றதுதான்.. ஆரணிக்கு எங்க வீட்டுக்கு வாங்க. விருந்து சாப்பிட்டு எல்லோரும் போகலாம்..
உங்க வீட்டுக்கு வந்தால் கட்டப்பை நிறைய பலகாரம் வாங்கி வரனுமேன்னு கணக்கு பார்க்குறவங்க.. வேலூரிலிருந்து கனியம்பாடி வழியாகவும், ஆற்காடு, ஆரணிலிருந்து கண்ணமங்கலம், திருவண்ணாமலைலிருந்து கீழ் அரசம்பட்டு வழியாகவும் இக்கோவிலுக்கு வரலாம். கண்ணமங்கலத்திலிருந்து ஷேர் ஆட்டோக்கள் நிறைய இக்கோவிலுக்கு இயக்கப்படுது. 
பணக்கஷ்டம், மனக்கஷ்டம்ன்னு நம் எல்லா கஷ்டத்தையும் போக்கும் பெருமானுக்கு காணிக்கை செலுத்தலாம்ன்னா இக்கோவிலில் உண்டியல் கிடையாது. ஆனாலும், பக்தர்கள் கோவிலுக்கு கொடுத்த நன்கொடைகள்மூலம் கிடைத்த பணத்தில் சமீபத்துல பால ஆஞ்சிநேயர் ஆலயம் அமைத்து குடமுழுக்கும் செய்விக்கப்பட்டது. 
இக்கோவிலுக்கு வரனும்ன்னு நினைச்சால் வரும்போதே தின்பண்டங்களை வாங்கிட்டு வரனும். பஜ்ஜி, போண்டா, முறுக்கு விக்கும் ஓரிரு கடைகளும், சிறிய பெட்டிக்கடை மட்டுமே இங்கிருக்கு.  சரியான பேருந்து வசதி, கழிப்பிட வசதி, ஹோட்டல் வசதி செய்து கொடுத்தால் இக்கோவில் இன்னமும் பிரசித்தி பெறும்.
இன்று நரசிம்ம ஜெயந்தி...  பதிவை போட்டுட்டு ஒரு எட்டு போய் லஷ்மி நரசிம்மரை போய் தரிசனம் செஞ்சுட்டு வரேன். நரசிம்ம ஜெயந்தியான இன்று மாலை 4.30 டூ 7.30  நேரத்துல பானகம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், நீர்மோர் வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தானமளித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்குவதோடு,  லஷ்மி நரசிம்மர் அருளையும் பெறலாம்..

நரசிம்ம மூல மந்திரம்..
செவ்வரளி, சிவப்பு நிற மலர்கள், துளசி கொண்டு கீழ்க்காணும் நரசிம்மரின் மூல மந்திரத்தினை சொல்லி அர்ச்சனை செய்து பெருமானை வணங்கினால் சிறப்பான பலனை தரும்.

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்


எதிரி பயம் நீங்க, இனம்புரியா அச்சம், குழப்பம் விலக, ராஜ வாழ்க்கை கிட்ட, தொழிலில் தடை விலக நரசிம்மரை வழிபடுவோம்!
நரசிம்ம ஜெயந்திக்காக முன்பொரு காலத்தில் போட்ட பதிவு.. ஒரு விளம்பரத்திற்காக... இதோ...


முக்கிய குறிப்பு: இக்கோவிலில் உக்கிர தெய்வம் எழுந்தருளி இருப்பதால், கர்ப்பிணியான என் மகளை   நீ கோவிலுக்குள் போகாதே , என படி ஏற ஆரம்பித்த அவளை  தற்செயலாய் அவ்வழியே வந்த அர்ச்சகர் எச்சரிக்கை செய்தார். அதனால், கர்ப்பிணி பெண்கள் நரசிம்மர் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பது நலம். 
படங்கள்: முகநூலில் சுட்டது
நன்றியுடன்,
ராஜி

6 comments:

 1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.

  இங்கே சாமி கும்பிட வரும் முன்பு உங்கள் வீட்டுக்கு வந்து ஆடு, கோழி, மீன் எல்லாம் சாப்பிட்டு கோயிலுக்கு எப்படி போறது ?

  அதான் ஒரே ஓசனையா.... இருக்கு....

  ReplyDelete
 2. நான் சென்றிருக்கிறேன். அப்போது தண்ணீர் முழங்கால் அளவு இருந்தது. அதில் நடந்து சென்று படியேறினோம். அப்படியே அங்கிருந்து அம்ருதி பார்க், அம்ருதி அருவி அப்படியே ஜவ்வாது மலை ஏறி ஆலங்காயத்துல இறங்கி என்று ஒரு சின்ன உலா போனதுண்டு.

  படங்கள் எல்லாம் அழகு குறிப்பாக அந்தக் கோபுரப் படங்கள் தெளிவாக ரொம்ப அழகாக வந்திருக்கு,. ராஜி.

  கீதா

  ReplyDelete
 3. அட, எங்க வேலூருக்குப் பக்கத்துலெ தான் இருக்கா இந்தக் கோவில்? ஆனால் இத்தனை படிகள் ஏறுவது கொஞ்சம் சிரமம் ஆயிற்றே! உங்கள் பதிவைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிடுவதுதான் இப்போதைக்கு ஒரே வழி! மிகவும் நன்றி.

  ReplyDelete
 4. உலா ஆரம்பம்... நல்லது...

  ReplyDelete
 5. சிறப்பான உலா. கோயில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் சிறப்பு.

  ReplyDelete
 6. திருவண்ணாமலையைச் சுற்றி நிறைய கோவில்கள் இருப்பதாய் அந்த ஊர் நண்பர் சொல்லி, அழைத்துக் கொண்டே இருக்கிறார்.  நீங்கள் பகிர்ந்துள்ள படங்களை பார்க்கும்போது பார்க்கும் ஆவல் பெருகுகிறது.

  ReplyDelete