Showing posts with label காந்திமதியம்மன். Show all posts
Showing posts with label காந்திமதியம்மன். Show all posts

Monday, August 13, 2018

பெண்ணின் அத்தனை பருவத்தையும் போற்றும் ஆடிப்பூரம் - அறிவோம் திருவிழா

ஒரு பொண்ணு பொறந்து, வளர்ந்து, பூத்து, காதலாகி கசிந்துருகி, கல்யாணம் கட்டி, தாயாகின்னு அத்தனை நிகழ்வும் விசேசமானது. கொண்டாடத்தக்கதும்கூட. சாதாரண மானுட பொண்ணுக்கே இப்படின்னா அகில உலகையும் உருவாக்கி, காக்க துணையாக நிற்கும் இறைவியின் அவதார நிகழ்வுகள் எத்தனை சிறப்பு வாய்ந்ததாய் இருக்கும்?! அத்தகைய சிறப்பு வாய்ந்த நாள்தான் இன்றைய ஆடிப்பூரம். 

நள வருடம்... ஆடி மாதம்... சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும்...., சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த  சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று அவதரித்து துளசி மாடத்தின்கீழ் பொறுமைக்கு பேர்போன பூமாதேவி ஆண்டாளாய் அவதரித்தாள். பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு சீரும் சிறப்புமாய் வளர்க்கப்பாட்டாள். ஆண்டாளின் ஆதிப்பெயர் கோதை. வடமாநிலங்களில் இவள் பெயர் கோதாதேவி.  விஷ்ணு கையிலிருக்கும்   சங்கும், சக்கரமும், அரங்கனின் படுக்கையான ஆதிஷேசன்கூட ஆழ்வர்களாக அவதாரமெடுத்து அரங்கனை அடைந்ததைக்கண்டு பூமாதேவிக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. அவள் கலக்கம் போக்க ஆண்டாளாய் அவதரிக்க அருள்புரிந்தார் எம்பெருமான். அவ்வாறே எழுந்தருளி அரங்கனை சேர்ந்தாள். ஆண்டாள் கதையை விரிவா வேற ஒரு பதிவில் பார்ப்போம்.. 
இந்த ஆடிப்பூர நாளில்  திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைப்பெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் சகல அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். 

.பெண் பூப்பெய்தினால் மட்டுமே தாய்மை அடைய முடியும்.. பெண் தாய்மை அடைந்தல்தான் புது உயிர் படைக்கப்படும்.  இதுக்கு அம்பாளும் விதிவிலக்கல்ல. எத்தனை எத்தனையோ உயிர்களை படைக்க வேண்டிய அம்பாள் ருதுவானது இந்த ஆடிப்பூரத்தில்தான். ஆடி மாதத்தில்தான் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும். இந்நன்னாளில்தான் அன்னை பூப்பெய்தியாக புராணங்கள் கூறுகின்றது.  ருது சாந்தி செய்தாலும் அம்பாள் இன்று மட்டும் அழிக்கும் சக்தியாய் அவதாரமெடுக்கிறாள். அதனால், அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வந்தால் நலம் பயக்கும். அவ்வாறு கோவிலுக்கு செல்ல முடியாதவங்க  வேப்பிலையையே அம்மனாக பாவித்து, செம்பாலான குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி, குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி, வாழை இலை விரித்து, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் இக்குடத்தை வைத்து, பூமாலைகள் சூட்டி, வண்ண வளையல்கள்  கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து, நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து, நைவேத்தியம் படைத்து தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி 12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம். பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்..

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம்.  மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு விநாயகன் மற்றும் முருகன் மகனாக இருந்தும்  தனக்கு வளைகாப்பு நடக்கவில்லையே என கவலை உண்டாயிற்று. 

ஈரேழு லோகமும்,  மூவுலகையும் காக்கும் அம்பிகைக்கு இப்படி உண்டான கவலையை கண்ட தேவாதி தேவர்கள், ரிஷிகள், ரிஷிபத்தினிகள், முனிவர்கள், மும்மூர்த்திகள், லட்சுமி, சரஸ்வதி அனைவரும் சேர்ந்து வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். வளைக்காப்பு செய்ய கரு  உருவாக வேண்டுமே என்ன செய்ய?! தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி விதைகளை முளைப்பாறியாக்கி, அம்பிகையின் வயிற்றில் வைத்து கட்டி கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி வளைகாப்பு நடத்தினர்.  விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஒரு ஏற்பாடோ?!

சரி சரி விசயத்தை விட்டு எங்கயோ போய்ட்டோம்...  அம்மனுக்கு வளைகாப்பு செய்து வாய்க்கு ருசியாய் சமைத்து உணவு கொடுத்து அவளை சமாதானப்படுத்தினர்.  அந்நாளை நினைவுக்கூறும் விதமாய் இன்றும் பல அனேக அம்மன் கோவில்களில் அம்மனுக்க்கு வளைகாப்பு நடத்தப்படும். இதற்காகவே அவரவர் இல்லங்களை சுத்தப்படுத்தி நவதானியங்களை பதப்படுத்தப்பட்ட மண்ணில் விதைத்து  கோமியம், சாணம், பால், தயிர், நெய் கலந்து உருவாக்கப்பட்ட பஞ்சக்கவ்வியம் தெளித்து பாதுகாத்து வளர்த்து வருவர். அந்த ‘மூணு’ நாட்களில் உள்ள பெண்கள் இந்த வேலையிலிருந்து ஒதுங்கியிருந்து முளைப்பாரி தயார் செய்து ஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னிதியில் சேர்ப்பர். முளைப்பாரியின் வளர்ச்சியினை கண்டு வீடும் நாடும் எந்தளவுக்கு செழிப்பா இருக்கும்ன்னு கணிப்பர்.  முளைப்பாரி பழக்கம் உண்டாக இன்னொரு காரணமும் உண்டு.
ஒவ்வொரு அறுவடையின்போதும், நல்லா தேறின விதைகளா தேர்ந்தெடுத்து, அடுத்த முறை, விதைக்க வேண்டி, தானியங்களை  குதிர், சால், கோணிப்பைகளில்  சேர்த்து வைக்கும் பழக்கமிருந்துச்சு.  வசம்பு, வேப்பிலை, நொச்சி, மஞ்சளை விதைகளோடு சேர்த்து பூச்சி தொல்லைல இருந்து காப்பாத்துவாங்க.  அப்படி பலகாலமாய் சேர்த்து வச்ச விதைகள் சரியாய் முளைக்குதான்னு பார்க்க, திருவிழா, திருமணம் மாதிரியான நாட்களில் முளைப்பாரி நிகழ்வு உண்டானது.

பெரும்பாலும் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில்தான் கோடை கோடை சாகுபடி நடக்கும். அதுமட்டுமில்லாம  விதைக்கும் நாட்களுக்கு முன் விதைகளை டெஸ்ட் செய்யும் வழக்கம் உண்டானது. வளர்பிறை நாட்களில் விதைகளை விதைத்து, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று ஒவ்வொருவர் வீட்டு முளைப்பாரியும் காட்சிப்படுத்துவாங்க. , அந்த முளைப்பாரியில் எதாவது கோளாறு இருந்தால் ஊர் பெரியவங்க ஆலோசனை சொல்வாங்க. அதுக்கப்புறம்,   10 ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பாங்க. இந்த தொழில்நுட்பத்தை  மக்கள் மறக்கக்கூடாதுன்னுதான் முளைப்பாரி உண்டானது.  மண்பானை,பனை,மூங்கில் கூடைகளில் சுத்தமான இடத்திலிருந்து  வண்டல் மண் எடுத்து வந்து, அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்து,   பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்து,   அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய  விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள். அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள்.
அன்னை, அழகு ரூபம் கொண்டு பல்லாயிரக்கணக்கான கண்கள் கொண்டவளாகத் தோன்றியதால், சதாக்ஷீ (சத + அக்ஷம் – கண்) ஆனாள். ஆயிரமாயிரம் கண்களால் அருள்பார்வை நோக்கிய அம்பிகையின் திருவடிவில்,  அற்புதம் – தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், கனிகள், கீரைகள், மூலிகைகள் என்று பற்பல உணவுகளை, தமது திருமேனியெங்கும் நிறைத்தும் தாங்கியும் அன்னை காட்சி தந்தாள்.

சாகம்பரி (சாக – காய்கனி தொடர்பாக; அம்பரம் – ஆடை; காய் கனிகளையே ஆடையாகத் தரித்தவள்) ஆனாள். உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி! பரதேவதை, சாகம்பரியாக ஆவிர்பவித்து,கோடி சூரியப் பிரகாசம் தன்னுள் ஐக்கியப்பட்ட அம்பிகை தன் கரத்தில் தாமரை ஏந்தியிருக்க அந்தத் தாமரையை வண்டுகள் சுற்றிச் சூழ்ந்திருப்பது போல் காய்கள், கனிகள், வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை அவளுடைய பற்பல கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும்அன்னை சாகம்பரி தேவி

திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை. 

கல்மாஷபாதன்ன்ற சோழ மன்னனுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.  இவன் சிறந்த சிவபக்தன். தனக்கு வாரிசு வேண்டுமென அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டான். மன்னனின் குறை தீர திருவரங்குளத்தில் மறைந்திருக்கும் சிவலிங்கத்தை த்தேடி வணங்க சொன்னார். மன்னனும் அத்தலம் சென்று தேடி சிவலிங்கத்தை கண்டுப்பிடித்து  கோவில் கட்ட சென்று இறைவனை தேடினான். 

இடையர்கள் கொண்டுச்செல்லும் பூஜைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுவதை கண்ட மன்னன் அந்த இடத்தில் தன் வாளால் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலைமீது வாள்பட்டு ரத்தம் பீய்ச்சி அடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன்... மாபெரும் தவறு செய்துவிட்டேனென உயிரை மாய்த்துக்கொள்ள சென்றான். மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதிதேவியுடன் திருமணக்கோலத்தில் காட்சிதந்ததோடு பிள்ளைச்செல்வமும் அருளினார். இந்த நிகழ்வு ஆடிப்பூரத்தன்று நிகழ்ந்தது. இறைவன் அருளால் மன்னன் குலம் விளங்க ஆண்குழந்தை பிறந்தது. 

இதுமட்டுமில்லாம பெரும்பாலும் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த மாதிரி பத்துநாள் பிரம்மோற்சவம்  திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல்வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை எனுமளவுக்கு அத்தனை கோலாகலம். 

எல்லா கோவில்களிலும் அம்மன் வளைக்காப்புக்கென பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு, அதையே பிரசாதமாக பக்தர்களுக்கு தருவர். இதை வாங்கி அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை...  இன்னாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும். இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற அவள் பாதம் பணிவோம்!!

நன்றியுடன்,
ராஜி.

Friday, April 27, 2018

அல்வா நகரத்து நாயகன் நெல்லையப்பர் ஆலய கும்பாபிஷேகம்

தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்”
எனப்பாடல்பெற்ற தலம்,  சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் தாமிரசமை எனப்போற்றப்படும் தலம், திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல்பெற்ற தலம்,   அருணாசலகவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடல்பெற்ற தலம். 1500 ஆண்டுகால பழமையான தலம், நால்வகை வேதங்களும் தவமிருந்து  சிவப்பெருமானுக்கு நிழல்தரும் மூங்கில் மரங்களாக பிறப்பெடுத்த தலம், ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட மணிமண்டபம், ஆசியாவின் மிகப்பெரிய கோவில்..ன்னு பல சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லயப்பர் ஆலயம். 
ராமக்கோன் என்பவர் தினமும் இப்போது நெல்லையப்பர் கோவிலிருக்கும் இடம் முன்பு மூங்கில் தோட்டமாய் இருந்தது. அந்த வழியாய் தினமும் மன்னருக்கு பால் கொண்டு வருவது வழக்கம். ஒருமுறை ராமர்கோன் காலில் அங்கிருந்த மூங்கில் செடி இடறி பால்குடம் கீழே விழுந்து பால் கசிய ஆரம்பித்தது. பால் முழுவதுமாய் சிந்துவதற்குள் அரண்மனைக்கு பாலை கொண்டு போய் சேர்பித்தார்.  தினமும் அவ்விடத்தில் பால் சிந்துவது வாடிக்கையானது. தினமும் வழக்கத்துக்கு மாறாக பால் குறைவது மன்னரின் காதுக்கு சென்றது. ராமர்கோனை கூப்பிட்டு மன்னர் விசாரித்தார். நடந்ததை ராமர்கோன் சொல்ல, மன்னர் அவருடன் புறப்பட்டு மூங்கில்வனத்துக்கு வந்தார். அங்கிருக்கும் மூங்கில்களை வெட்டச் சொன்னார். அப்படி வெட்டும்போது சுயம்புவாய் லிங்கமூர்த்தி வேனுவனநாதராக காட்சி தந்தார். இந்த மூர்த்தம் சிறிது சிறிதாய் பலமுறை வளர்ந்து மன்னருக்கு காட்சியளித்தார். அவருக்கு கோவில் எழுப்புவதாய் மன்னன் வேண்டிக்கொண்டு கட்டிய கோவிலே இன்றைய நெல்லையப்பர் கோவில். சன்னிதிக்கு பின்புறம் இன்றும் இத்தல விருட்சமாய் மூங்கில் நிற்பதை பார்க்கலாம். வேணுநாதர் காட்சியளிச்சார். அப்புறம் எப்படி நெல்லைநாதர்.....ன்னு நீங்க யோசிக்குறது புரியுது. அதுக்கொரு காரணம் இருக்கு. பார்க்கலாம். 

வேதபட்டர்ன்ற  சிவபக்தர், சிவன்மேல் அதிக பக்தி கொண்டவராக இருந்தார்.  தினமும் புதுநெல்லினை அரிசியாக்கி சிவனுக்கு நைவேத்தியம் செய்வது அவரின் வழக்கம்.  தன்மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். அப்படியும் தன் கைங்கரியத்தை விடாமல், தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து தனது கைங்கரியத்தை நிறைவேற்றி வந்தார்.  அப்படி ஒருநாள் சேகரித்த நெல்லை கோவிலுக்கு எதிரில் காயப்போட்டு குளிக்கச் சென்றபோது, திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில்,  நெல் நனைந்து விடப்போகிறதென எண்ணி, சிவனை வேண்டிக்கொண்டே, நெல்லை நோக்கி ஓடினார். மழை வெள்ளத்தில் நெல் அடித்துச்செல்லாமல் இருக்க வேலிபோல் தண்ணீர் தேங்கி நின்றதுடன், நெல் காயவைத்த இடத்தில் மட்டும் வெயில் அடிப்பதைக்கண்டு திகைத்து நின்றார். இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராமபாண்டியனும் இந்த அதிசயத்தை காண வந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்க ஆரம்பித்தனர். 

கோவிலுக்குள் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி நம்மை வரவேற்கும். அடுத்து, கொடிமரத்தை வலம்வந்து கோவிலின் உள்ளே இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேராய் சென்றால் நெல்வேலிநாதரை வழிப்படலாம். பின்னர், வேணுவனநாதருக்கு வடப்புறமாக கிடந்தக்கோலத்தில் பெரிய உருவத்துடன் ரங்கநாதரின் தரிசனம் கிடைக்கும்.  மூலவரைக் காண்பதற்குமுன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லா சிவன் கோயில்களையும்போல  தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே இருக்கும். நெல்லையப்பர்,  சப்த கன்னியர்கள், சப்த முனிவர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.  மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.
காந்திமதி அம்மன் ஆலயம்..

அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம். அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப்பட்டவை. கி.பி. 1647ம் ஆண்டின்பொழுதும், வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து,  பின் பொதிகை மலையை அடைந்து பூமியை சமன் படுத்தினார்.  திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக்கோலத்தில் காட்சி அளித்தனர். 
இராமபிரான், சீதையைத்தேடி இலங்கைக்குச் செல்லும்முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

சுவேதகேது என்ற அரசன் இப்பகுதியை ஆண்டுவந்தான். நெல்லையப்பரின் தீவிர பக்தன்.,  வாரிசு இல்லாத நிலையில், அவனுக்கு இறுதிக்காலம் நெருங்கியது. எமன் வரும் நேரத்தில், அவன் நெல்லையப்பர் ஆலயத்தில் அமர்ந்து பூஜை செய்துக்கொண்டிருந்தான்.  அப்போது எமன் வந்து பாசக்கயிற்றை வீச,  அது அரசனோடு சேர்த்து சிவலிங்கத்தின்மீது விழுந்தது. இதனால் கோவம் கொண்ட சிவன் எமனை காலால் எட்டி உதைத்தார். பின்னர், மன்னர் விரும்பும்போது முக்தி அளிப்பதாய் வாக்களித்தார்.  இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென்கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலிநாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்றசீர்நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல் என பல்வேறு திருவிளையாடல்களை ஆடியுள்ளார் இத்தலத்தில் உறையும் ஈசன்.
நம் தமிழ்திருநாட்டை பொறுத்தவரை கோவில்கள் வெறும் இறைவனின் பெருமையை எடுத்து சொல்லும் விதமா மட்டும் இருக்காது. சித்திர, சிற்பக்கலை, கலாச்சாரத்தினை எடுத்துச்சொல்லும் விதமாதான் இருக்கும் அந்தவகையில் இக்கோவில் தலைச்சிறந்த கலைப்பொக்கிஷங்களில் ஒன்று.   திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற்கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கண்கொள்ளாக் காட்சி. தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், ஷாப்பிங்க் செல்லும் அக்கால கணவன் -மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனின் தாய்ப்பாசம்.  குழந்தை கண்ணனைக் கொல்லவந்த அரக்கி கையில் குழந்தையுடன்,  வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றின் நுண்ணிய வேலைப்பாடுகள் என காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்கிருக்கும், சிற்பங்களின் ரத்த ஓட்டம் நம் கண்ணுக்கு தெரியும். சதை மடிப்புகள், கண்களின் ஜீவன்கள் என ஒவ்வொரு சிற்பமும் உயிரோட்டத்தோடு இருக்கும். 

ஊஞ்சல் மண்டபம்...
96 வாழ்வியல் தத்துவங்களை எடுத்து சொல்வதுபோல 96 தூண்களைக்கொண்டது இம்மண்டபம்.  அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். ஆடிமாதம் அம்பாளுக்கு இம்மண்டபத்தில் வளைகாப்பு நடைப்பெறும். இந்த மண்டபத்தை 1635ம் வருடம் சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டியதாக சொல்லப்படுது.  இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் இருக்கு. இந்தக் குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை.  இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம்ன்னு பேர் உண்டானது.  
ஆயிரங்கால் மண்டபம்...
இக்கோவிலில் சிற்பங்கள் மட்டும் உயிர்ப்புடன் இல்லை. ஒரேமாதிரியான தோற்றத்தில் மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம். 520 அடி நீளமும், 63 அடி அகலமும் கொண்டது இம்மண்டபம். இந்த மண்டபத்தில்தான் ஐப்பசி மாசத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறும்.  பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெறும்.  ஆமை ஒன்று தன் முதுகில் இம்மண்டபத்தை தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே இங்கு வந்து இறைவனை வழிப்படுவதாய் நம்பிக்கை. 
 சோமவார மண்டபம்.. 
சுவாமி சன்னிதியின்  வடக்கு பக்கம் சோமவார மண்டபம் இருக்கும்.  கார்த்திகை மாசத்தின் சோமவாரநாட்களில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைப்பெறும் பூஜைகளும் இம்மண்டபத்தில்தான் நடைப்பெறும். 78 தூண்களை கொண்டது இம்மண்டபம். 

சங்கிலி மண்டபம்...
சுவாமி கோவிலையும், அம்மன் சன்னிதியையும் இணைப்பது போல இருப்பதால் இந்த மண்டபத்துக்கு சங்கிலி மண்டபம் என பேர் உண்டானது. 1647ம் ஆண்டு கட்டப்பட்டது இம்மண்டபம்.  காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன்,  புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன், ஆகிய சிற்பங்கள் இம்மண்டபத்தில் உள்ளது. 

மணி மண்டபம்...
இந்த மண்டபத்தின் மையத்தில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் இம்மண்டபத்துக்கு இந்த பேர் உண்டானது. நின்றசீர்நெடுமாறனால் கட்டப்பட்டது இம்மண்டபம். சுற்றி சுற்றி பல தூண்கள் இருப்பதுபோல்  ஒரேக் கல்லினால் செதுக்கப்பட்ட  இசைத்தூண் இம்மண்டபத்தில் உள்ளது. எந்த ஒரு தூணை தொட்டாலும் எதாவது ஒரு ஸ்வரம் ஏற்படும். மரக்கட்டையில் மான்கொம்பினால் தட்டினால்  அற்புதமான ஒலி கிடைக்கும்.  மொத்தம் 48 சிறிய தூண்களை கொண்டது இம்மண்டபம். 

வசந்த மண்டபம்...
கோடைக்காலத்தில் வசந்தவிழா கொண்டாடப்படுவதற்காக கட்டப்பட்ட மண்டபம் இது.  இம்மண்டபத்தை சுற்றிலும் மரங்கள் அடர்ந்த சோலை உள்ளது.  1756ம் ஆண்டு திருவேங்கட கிருஷண முதலியாரால் இந்த வனம் உண்டாக்கப்பட்டது. 

பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டத்தில் இக்கோவில் விரிவாக்கப்பட்டு இன்று 14 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு இக்கோவில். நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் திருமணம் செய்விக்கும்பொருட்டு, திருமால் திருநெல்வேலிக்கு வந்து தங்கியதால் இக்கோவிலில் தனிச்சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.  கோவிலில் இரண்டு ராஜக்கோபுரத்துடன் கூடிய, இரண்டு கருவறை உண்டு. ஒன்று நெல்லையப்பர் சன்னிதி. இன்னொன்று, நெல்லை கோவிந்தனுடையது. கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் இருப்பது இக்கோவிலின் சிறப்பு.   திருநெல்வேலியை சுற்றி, நவத்திருப்பதி தலங்கள் அமைந்துள்ளது.  

இக்கோவில்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜை இல்லை. அதுக்கு பதிலா கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் எல்லா சுவாமிகளுக்கும் பூஜை நடைப்பெறும். கார்த்திகை மாதத்து 30 நாளிலும் சுவாமி தங்கப்பல்லக்கில் வீதிஉலா வருவார். இக்கோவிலில் கந்தர்சஷ்டி விழா 15 நாட்கள் கொண்டாடப்படுது. கந்தர்சஷ்டி அன்று ஆறுமுகநாயினாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படும்.  இங்குள்ள துர்க்கை சிங்கம் மற்றும்மான் வாகனத்தில் தெற்கு நோக்கி இருப்பதால் எதிரிகளை அன்பால் அடக்குபவளாகிறாள். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான புதன், பொதுவாய் கிழக்கு பக்கம் பார்த்து இருப்பார். ஆனால்,  இங்கு வடக்கு பக்கம் பார்த்திருக்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலின் முக்குறுணி வினாயகரும்  வலது கையில் மோதகமும், இடது கையில் தந்தமுமாக இங்க இருக்கார். 


நெல்லையப்பருக்கு வேண்ட வளர்ந்தநாதர்,  மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர்ன்னு வேறு பேர்களும் உண்டு. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் இருப்பதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கமென்பதை இது உணர்த்தும். அதனால், இவருக்கு சக்திலிங்கம்ன்னு ஒரு பேர் உண்டு.  இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.  இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்திகளையும் தரிசிக்கலாம்.

திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் நீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது  என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலக்காரணம் என சொல்கிறார்கள். பொதுவா எல்லா கோவில்களிலும்  அபிஷேக தீர்த்தம் வடப்பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் கோமுகி இருக்கு. இந்த புனிதநீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
என்ன திடீர்ன்னு திருநெல்வேலி பக்கம் காத்து வீசுதுன்னு அதும் ரெண்டாவது பதிவான்னு நினைக்குறவங்களுக்கு இரு பதில்கள்...
1. இன்னிக்கு நெல்லையப்பர் ஆலய குடமுழுக்கு விழா..
2. இந்த கோவிலுக்கு டூர் போய் வந்த நேரத்தில், நான் பிறந்திருக்கும் விசயம் கேள்விப்பட்டு என்னை பார்க்க வந்த என் அப்பாவின் நண்பர்  அம்பாளின் நினைவா எனக்கு காந்திமதின்னு  பேர் வச்சாராம்.  போனில் எப்ப பேசினாலும் இந்த விசயத்தை சொல்லுவார். அந்த விட்டக்குறை, தொட்டக்குறைக்குதான் இந்த பதிவு. ராஜிங்குறது பெட் நேம் மட்டுமில்ல. ஒரு பெட்டோட நேமும்.கூட இனி, வலைப்பூவிலும் அதேப்பெயரில் தொடரலாம்ன்னு ஐடியாவில் இருக்கேன். ஆலோசனை சொல்லுங்க சகோஸ். 
நன்றியுடன்,
ராஜி.