முதல்படமே மிகப்பெரிய ஹிட் படத்தில் நடிச்ச நடிகர்களுக்கு இரு அனுபவம் இருக்கும். ஒண்ணு, எதை தேர்ந்தெடுப்பதுன்னு திக்குமுக்காடும் அளவுக்கு படவாய்ப்புகள் குவியும். இல்லன்னா, காக்கா குருவிகூட என்னன்னு கேட்காது. அப்படியான ஒரு காலக்கட்டம்தான் 1982 ல் நடிகர் கார்த்திக்கானது. மிகப்பெரிய ஹிட் படமான அலைகள் ஓய்வதில்லைக்கு பிறகு சீந்துவாரில்லை. அலைகள் ஓய்வதில்லையின் தெலுங்கு ரீமேக்கில் அருணாவுக்கு ஜோடியாய் நடித்ததோடு வீட்டில் முடங்கியாச்சு. இந்த காலக்கட்டத்தில் சமூகம் சார்ந்த படங்கள்தான் அதிகம் வந்திட்டு இருந்துச்சு. அதுக்கு கார்த்திக் முகம் செட்டாகாது.
அந்த காலக்கட்டத்தில்தான் ஸ்ரீதர் தன்னோட நினைவெல்லாம் நித்யா படத்துக்காக புதுமுக நடிகர் நடிகைகளை தேடிக்கிட்டிருந்தார். நாயகியாய் ஜெமினிகணேசன் மகளான ஜிஜியை செலக்ட் பண்ணியாச்சு. நாயகனுக்காக அலைந்து திரிகையில் அலைகள் ஓய்வதில்லை படத்தை பார்க்க நேர்ந்தது. படத்துல இளமையான அதேநேரம் குறும்பு கொப்பளிக்கும் முகமுடைய கார்த்திக்கை பார்த்ததும் இவர்தான் நாயகன்னு முடிவு பண்ணி நடிக்கவும் வச்சார்.
ஸ்ரீதர் படமான்னு கேட்குமளவுக்கு படம் மொக்கை. நகரத்திலிருந்து, மலைக்கிராமத்துக்கு பிக்னிக் வரும் கதாநாயகன் அங்கிருக்கும் மலைவாழ் பெண்ணை காதலிச்சு நகரத்துக்கு கூட்டி வந்து, குடும்பம் நடத்துகையில் எப்பவுமே ஹீரோயினுக்காக வெடிக்கும் ஸ்டவ், இந்த படத்தில் ஹீரோவுக்காக வெடிக்க, அவனை காப்பாத்த ஹீரோவோட அப்பாக்கிட்ட பேரம் பேசி காதலை விட்டுக்கொடுத்து, நாயகி ஊர் திரும்ப.. நாயகன் குணமானதும் நாயகியை தேடி ஊருக்கு போக, அங்கிருக்கும் மாமன்காரன் ரெண்டு பேரையும் சுட, திரையில் மட்டுமில்ல, நம்ம கண்ணுல,காதுலயும் ரத்தம் வரும் அளவுக்கு படம் படுமொக்கை. அதனால படம் ஹிட் அடிக்கலை. ஆனா பாடல்கள் செம ஹிட், இன்னிக்கும் வயசு வித்தியாசமில்லாம ரசிக்கப்படும் மெல்லிசை பாடல்களில் இந்த படத்து பாடல்கள் உண்டு.
பாடல் ஹிட்டுக்காகவே கார்த்திக்கு படவாய்ப்புகள் குவிந்தது. படத்துக்காக மெனக்கெடாத ஸ்ரீதர், பாடலுக்கு ரொம்பவே மெனக்கெட்டு ரொம்ப அழகா எடுத்திருப்பார். அதிலும், பனிவிழும் மலரவனம்.. உன் பார்வை ஒரு வரம்... பாடல் செம ஹிட், இன்னிக்கு இரவு பயணங்களில், ரசிக்கப்படும் பாடல்களில் இந்த பாட்டுக்கும் இடமுண்டு. தினத்துக்கு ஒருமுறையாவது இந்த பாடலை ஒளிப்பரப்பாத எஃப்.எமோ, இல்ல தொலைக்காட்சி சேனலோ இருக்காது எனுமளவுக்கு இந்த பாடல் எவர்க்ரீன் சாங்க்
எஸ்.பி.பிக்காகவா இல்ல பாடலின் வரிக்காகவா இல்ல பாடலின் இசைக்காகவா இந்த பாட்டு ஹிட்டடிச்சதுன்னு இன்னிய வரைக்கும் புரியாத புதிர். பாடலை கண்மூடி கேக்கும்போது, மனசுக்குள் காதல் உணர்வு கொப்பளிக்கும். தப்பித்தவறி வீடியோவை பார்த்தால் கார்த்திக்கை ரசிக்கலாம். ஆனா, உணர்ச்சியில்லாம இருக்கும் நாயகியின் முகம் பாடலை ரசிக்கவே விடாது. பயணங்கள் முடிவதில்லை பாடலை போல, இந்த பாடலிலும் கிடார் இசை கொஞ்சம் தூக்கலா இருக்கும். இந்த பாட்டில் எஸ்.பி.பியின் குரல் பல இடங்களில் வளைந்து நெளிந்து மாயாஜால வித்தையை காட்டும்.
"கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்"
இந்த வரிகள்லாம் எஸ்.பி.பியின் குறும்பு கொப்பளிக்கும் குரலுக்கு கார்த்திக்கை விட்டா வேறு எந்த நடிகரும் செட்டாகி இருக்க மாட்டாய்ங்க...
பாட்டு எப்படி இருக்குன்னு கேட்டு பார்த்துட்டு சொல்லுங்க.
நன்றியுடன்,
ராஜி