அழகர்
கோவிலில் சுந்தராஜ பெருமாளை தரிசனம் செய்தாகிட்டுது. பெருமாளை தரிசிக்காதவங்க போய் தரிசனம் செஞ்சுட்டு வந்துடுங்க. நாங்க காத்திருக்கோம். எல்லோரும் சேர்ந்து பழமுதிர்சோலைக்கு போகலாம்...., மாமன் மலைக்கு கீழிருந்து அருள் புரிகிறான். மருமகன் மலைக்கு மேலிருந்து அருள் புரிகிறான் என கிண்டலாக சொல்வதுண்டு.
குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதி கொண்டாடும் நாம் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாக
கருதப்படும் பழமுதிர்சோலைக்கு இனி பயனமாகலாம். அழகர்கோவிலில் இருந்து பழமுதிர்சோலைக்கு நடந்தும் செல்லலாம்
இல்ல கோவில் தரப்பில் வேன் சர்வீஸ்சும் இருக்கிறது.அதற்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாம
கால்நடையாவே சென்றால்தான் முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும் அத்தோடு இயற்கையை ரசிக்கலாம் என்பதால்
நடைப்பயணமாக செல்லலாம். நடைப்பயணமாய் போகனும்ன்னு முடிவெடுத்தப் பின் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. இங்கே வழிப்பறி
செய்ய இங்குள்ள குரங்குகள் தனி பயிற்சி எடுத்திருக்கோ!? என்னமோ! பின்னால் வந்து
நம்முடைய பைகளை வலுகட்டாயமாக பறித்துக் கொள்ளும். ஆகையால், கையில் நல்ல கம்பு வைத்துக் கொண்டும் கூட்டமாக கூட்டமாகச் செல்லுவது நலம். இனி நாம் பயணத்தை தொடரலாம்....,
நடந்து சென்றுக் கொண்டே
இந்த திருக்கோவிலின் ஸ்தல வரலாற்றை பார்க்கலாம்..., தனது, தமிழ் புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற
அகங்காரம் தலை தூக்க ஆரம்பித்தது. அந்த அகங்காரம் தமிழுக்கும், தமிழன்னைக்கும் நல்லதில்லைன்னு உணர்ந்த முருகன் சிறு விளையாட்டை நடத்த விரும்பினான்.
அவ்வைப்பாட்டி நடந்து செல்லும் இவ்வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக மாறி அங்கிருந்த ஒரு நாவல்
மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால்
அவ்வைக்கு களைப்பும், பசியும் வரவே, சிறிது ஓய்வெடுக்க நாவல் மரத்தின் நிழலில் வந்து ஓய்வு எடுத்தார் அவ்வை பாட்டி.
நாமும் நமது
மூதாதையர்களுடன் அமர்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்து செல்லலாம். இங்கிருப்பவர்கள் அனைவரும் நம்முடைய மூதாதையர் அல்லவா!? கொஞ்சம் கவனமாக இருப்பது நலம். சரி இனி கதையை தொடரலாம்...,
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும்
சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள்
இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல்
பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக
இருந்த முருகப்பெருமான், "சுட்டப்
பழம் வேண்டுமா? சுடாத பழம்
வேண்டுமா? " என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி
அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப் பழத்தையே கொடுப்பா..."
என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுக்க, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து
விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு
கேள்வியிலேயே அவ்வை பாட்டியின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச்
சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த
சிறுவன் முருகப்பெருமான், தனது
சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.
இந்தத் திருவிளையாடல்
நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் சோலைமலை முருகன்
கோவிலுக்கு சற்று முன்னதாக
இருக்கிறது.
அதோ தூரத்தில் கோவில்
தெரிகிறது. உண்மையில் சொல்லனும்ன்னா, நான் முன்பு பார்த்த கோவிலின் அழகு இப்பொழுது இல்லை. எல்லாம் மாறி கட்டிடங்களாக அதன் இயற்கை எழிலை இழந்து நிற்கிறது.
திருத்தணி, திருச்செந்தூர், பழனிப் போல இக்கோவில் ஆடம்பரமில்லாம மிக எளிமையாய் இருக்கு. முன்னலாம் இக்கோவிலில் முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேக ஆராதனை உண்டாம். சமீபக்காலங்களில்தான் முருகனின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்றாங்களாம். அந்த வழிபாடுகள் கூட வேடுவர்கள், குறிஞ்சி நில மக்களின் வழிபாட்டு முறைப்படிதான் இன்றும் நடக்குதாம்.
ரொம்ப நாட்களுக்கு முன், முருகனுக்கு இத்தலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசி சோற்றை வேடர் குலத்தவங்க படையல் போட்டதா சொல்றாங்க. அதுக்கு ஆதாரம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் ”கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து” என்ற அடியே சான்று.
பழமுதிர்சோலை முருகன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கு. வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி கோவில் இங்கு நூபுரக கங்கை தீர்த்தம் விழுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இத்தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது சிலம்பாறுன்னு பேர் பெறுகிறது.
யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இத்தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது சிலம்பாறுன்னு பேர் பெறுகிறது.
அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு தேனாறு என்றும் பெயர்
இங்கிருக்கும் “மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி சேதியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அனுமார் தீர்த்தம். இங்க ஓர் அநுமார் கோயில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோயில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும் கோயிலும் இருக்கு. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாபத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் இருக்கிறது. அழகர் கோயிலுக்குச் சிறிது வடக்கே போனால் இருக்கும் உத்தர நாராயண வாவி என்னும் தீர்த்ததினால் தான் கோயில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற் சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் போய்த் தங்கி இருக்கும் போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்து பற்றி மீனாட்சி சிவனிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தாள். “ உங்களோடு வந்திருப்பவர்களை உடனடியாய் சாப்பிடச் சொல்லுங்க. இங்கு பல்வேறு உணவுகள் கொட்டிக் கிடக்கின்றது. நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அனைத்தும் வீணாகி விடுமே!ன்னு கிண்டலடிக்க..., இப்போது எங்கள் யாருக்கும் பசியில்லை. எனது கணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு மட்டும் பசிக்கின்றதாம். அவனுக்கு மட்டும் விருந்து வைங்கள் என்று சுந்தரேஸ்வரர் சொல்லி இருக்கிறார்.
மலையளவு இருந்த விருந்து சாப்பாட்டை ஒரு நொடியில் விழுங்கி இன்னும் கொண்டா” வென வாய் பிளந்து நிற்கும் குண்டோதரனை கண்டு மீனாட்சி திக்கித்து நின்று, தன் தவறை உணர்ந்து சுந்தரேஸ்வரரிடம் தஞ்சம் புகுந்தாள். ஐயனும் அன்னப்பூரணியை அழைத்து அவன் பசியை தீர்க்கச் சொன்னார். அன்னை அளித்த உணவுகளை சாப்பிட்டு, ஏரி, குளம், வாய்க்காலில் இருந்த தண்ணீரை குடித்தும் அவன் தாகம் அடங்காமல் ஈசனிடம் முறையிட்டான்.
உடனே, தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறாது. நீ அங்கு செல் என கட்டளையிட்டார். குண்டோதரனிடம்..., "" நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே "வைகை' ஆனது.
இப்படித்தான் வைகை உருவானது. நதிநீர் இணைப்பை அன்றே சிவப்பெருமான் துவக்கி வைத்துவிட்டார். நாம்தான் அதை தொடரவில்லை. காற்றுக்கு போட்டிப்போடும் வகையில் பாய்ந்து வந்ததால் இதற்கு வேகவதின்னும் பேர் உண்டு.
வைகையை பாழ்படுத்தியதோடு அழகரையே செயற்கை ஊற்றில் இறக்கி விட்டு தீராத இன்னல்களுக்கு ஆளாகிவிட்டோம். மாமன், மச்சான், மருமகனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகையில் நீர் கொணறச் செய்வோம்.