Showing posts with label புண்ணியம் தேடி.. Show all posts
Showing posts with label புண்ணியம் தேடி.. Show all posts

Friday, February 09, 2018

ஆலயங்களின் அதிசயங்கள் பாகம் 1 - புண்ணியம் தேடி

ஒவ்வொரு ஆலயத்தாலும் பல அதிசயங்கள் நடந்திருக்கு.  மனக்குழப்பத்துக்கு இதமளிக்க, கேட்ட வரம் கிடைக்க, பிள்ளை வரம், நோய் நொடி குணமாக, பணம், பதவி,  பிள்ளைக்கு கல்வி, நல்ல வாழ்க்கைத்துணைன்னு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் அதிசயக்கோவில் எத்தனை எத்தனையோ இருக்கு. எது எப்படியாயினும் கேட்டதை கேட்டபடி கொடுப்பதில் எல்லா கோவிலுக்கும் ஒற்றுமை உண்டு. ஆனா, சில கோவில்களில் மட்டுமே நடக்கும் அதிசயம்ன்னு சிலது இருக்கு. அவைகளில் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்...


திருவண்ணாமலை வாழ் அருணாச்சலேஸ்வரர்   எப்போதுமே ராஜக்கோபுரம் வழியா வெளிய  வர மாட்டார்.  பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். கும்பகோணத்துக்கு பக்கத்திலிருக்கும்  திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இதுமாதிரி தீர்த்தம் கொடுப்பதில்லை. 



பொதுவா, அபிஷேக ஆராதனைக்கு கருவறையிலிருக்கும் மூலவருக்கும், வீதி உலா, தேரோட்டம், தீர்த்தவாரி மாதிரியான கோவிலுக்கு வெளியே நடக்கும் வைபவங்களுக்கு உற்சவர்ன்னு தனித்தனியே இருப்பாங்க. ஆனா,  மூலவரே வீதிவலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடக்கும்.  சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் கண்டு தரிசிக்கலாம்.  சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டுமே!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் இருக்கும். வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.  மதுரை அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அம்மனுக்கென தனி சன்னிதி இல்லை. பொதுவா, பெருமாளின் இடக்கையில்தான் சங்கு இருக்கும். அதுமாதிரிதான் எல்லா கோவில்கலிலும் அப்படிதான் அருள்புரிவார். ஆனா, திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துக்கொண்டு காட்சி தருகின்றார் உலகளந்த பெருமாள். 


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருக்கும் கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். இப்படி நிறம் மாற காரணம் அபூர்வமான சந்திரகாந்த கல்லினால் உருவானது. இது சுயம்பு மூர்த்தமாகும். அதுமட்டுமில்லாம, நாளுக்கு நாள் இந்த சிலை வளர்ந்து வருதுன்னும் சொல்றாங்க.

காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை கத்துவதில்லை.  காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை. இங்கு பிணங்களை எரித்தால் கெட்ட வாசனை வராது.   குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறப்பதில்லை. அதேமாதிரி , ரத்னகிரி மலையில் இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயமும் நடக்குது. ஈரோட்டுக்கு அருகில் இருக்கும் சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.


இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதத்தின் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும்போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும். ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. ஆனா, அச்சிலையை தட்டினால் வெண்கல ஓசை வரும்.  மதுரைக்கருகே இருக்கும் பழமுதிர்சோலைக்கருகே இருக்கும் ராக்காயி கோவிலிலிருக்கும் ஒரு துவாரத்தில் மெல்லியதாக தண்ணி வந்து கொண்டே இருக்கும். ஆனா அது எங்கிருந்து வருதுன்னு எத்தனை ஆராய்ச்சி செஞ்சும் கண்டுப்பிடிக்க முடில.  

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப்பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பக்கிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

இதுமாதிரி, நிறைய கோவில்களில் நமக்கு புரியாத, தெரியாத அதிசயங்கள் இருக்கு. என்னதான் இனிப்புன்னாலும் அதிகமாச்சுன்னா திகட்டும்.  பதிவின் நீளம் கருதி அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்...


ஆன்மீக பதிவர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாவது நினைவு நாள் இன்று. அவர் வழியில் என் பதிவுகள்....  எத்தனை எத்தனை பக்தி பதிவுகள்?!  அதனால், தெய்வீக பதிவர்ன்னு அழைக்கப்பட்டவர்... இன்று தெய்வமாகவே ஆகிவிட்டார். அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... 

ஆலய அதிசயங்கள் இன்னமும் வரும்...

நன்றியுடன்,
ராஜி.