Tuesday, September 15, 2015

பதினேழு வயதினிலே ...பர்த் டே ஸ்பெஷல்

பண்பான பதினேழில்
அடியெடுத்து வைக்கும்
என் அருமை மகளே!!  
பல்லாண்டு நீ வாழ்க!

பெரியோர்களின் ஆசியுடன் தரும்
அறிவுரையை மதித்து, நடந்து
இன்று முதல் தொடங்கு
உன் ஏற்றமிகு வாழ்வை......,

பாச வலையில் எங்களை 
சிறைப்படுத்திக் கொண்டவளே!
சாதனை பல குவித்து
நீ வாழும் வகைக் கண்டு
பூரிக்க அன்பான கூட்டம் உண்டு.

அழகில் மயிலாய்,
நடையில் அன்னமாய்,
பண்பில் பாட்டியையும்,
குணத்தில் பாட்டனையும் கொண்டு...

நல்லவை கொண்டு, தீயதை தள்ளி...
மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
வாழ்வின் எல்லா உயரங்களுக்கும்
 நீ செல்ல நீ ஏறும் படிக்கட்டாய்   நானிருப்பேன்...,
எந்நாளும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    வாழ்க நீ பல்லாண்டு...

Saturday, August 15, 2015

சுதந்திர தினம் அன்றும்... இன்றும்...

காலையில எழுந்ததும் காலண்டர்ல நேத்தைய தாளை கிழித்ததும், சுதந்திரதின வாழ்த்துக்களுடன் இன்றைக்கு பொது விடுமுறைன்னு போட்டிருந்ததைப் பார்த்ததும் மனம் எனது பள்ளிப் பருவத்தின் சுதந்திர தினகொண்டாட்டத்தினை நினைச்சுப் பார்த்தேன்..
இப்ப மாதிரி எல்லாமே ரெடிமேட்லகிடைக்காது.எல்லாத்துக்கும் கொஞ்சம் மெனக்கெடனும், ஜுலை மாசக் கடைசிலியே விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயிடும். ஒவ்வொரு கிளாசுக்கும் சர்க்குலர் அனுப்பி யார்லாம் கலந்துக்கப் போறாங்கன்னு லிஸ்ட் எடுப்பாங்க. ஆகஸ்டு மாசம் ஆரம்பிச்சதும்,பாட்டு,டான்ஸ், நாடகத்துக்கான ஒத்திகை ஒருபக்கம் நடக்கும். பேச்சுப்போட்டி,விளையாட்டுப் போட்டி,குறள் ஒப்புவித்தல்ன்னு போட்டிகள்னு ஒருபக்கம் விழாவுக்கு யாரைலாம் கூப்பிடலாம்னு மறுபக்கம்.
2 நாளுக்கு முன்னாடி,சணல் கயிறுல பசையைத் தடவி முக்கோண வடிவ கலர் பேப்பர்லாம் ஒட்டி காய வைப்போம்.விழாவுக்கு முதல் நாள் பெரிய வகுப்பு பையனுங்கலாம் கலர் பேப்பர் தோரணத்தை கட்டுவாங்க. பொண்ணுங்கலாம் கோலம் போட்டு, கலர் பவுடர் கொடுத்தும் பள்ளியை அலங்கரிப்பாங்க.இப்ப மாதிரிலாம் பள்ளிகள்ல விழாவுக்காக தனி மேடைலாம் கிடையாது.பள்ளிகள்லயும்,பெரிய வகுப்புகள்ல இருக்குற பெஞ்சுலாம் போட்டு மேடை தயார் பண்ணுவாங்க.
கோவை இலையும், கரியையும் சேர்த்து அரைச்சு சாறெடுத்து தேய்ச்சு பழைய  போர்டைலாம் புதுசாக்கிபடம் வரைஞ்சி அழகு பண்ணுவாங்க.  யூனிஃபார்ம்ல கிழிசல் இருந்தா தைச்சு, துவைச்சு அயர்ன் பண்ணி, நல்லா குளிச்சு படிய தலைசீவி வரனும்.மீறி அழுக்கா, கிழிசலோடு வந்தா உப்புல முட்டி போடனும்னு ஹெட்மாஸ்டர் கண்டிப்போடு சொல்லி அனுப்புவார்.
காலையில ரெடியாகி, சட்டைல தேசியக் கொடிக் (பெரும்பாலும் தலைக்கீழாய் கொடி யை குத்திக்கிட்டு போய் யார்கிட்டயாவது குட்டு வாங்கியிருக்கேன்) குத்திக்கிட்டு போய் கிரவுண்ட்ல வகுப்பு வாரியா வரிசைல போய் நிப்போம்.எப்படா ஆரம்பிச்சு மிட்டாய் குடுப்பாங்கன்னு காத்திருப்போம்.எல்லாரும் வந்த பின் ஹெட்மாஸ்டர் மைக் பிடிச்சு தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சிலாம் ஆரம்பிக்கும். சீஃப் கெஸ்ட் கொடி ஏத்துவார்.
நம்ம மானத்தை வாங்குறதுக்குன்னே நல்லா படிக்குற பசங்க யாராவது ஸ்கூல்ல இருப்பாங்க.அவங்கள்ல ஒருத்தர் மார்ச்பாஸ்ட் போட்டு சீப்கெஸ்ட்டை கூட்டிட்டு போய் கொடி ஏத்த வைப்பாங்க. சுதந்திரம்னா என்ன? எப்படி வந்தது? அதை வாங்க கொடுத்த விலை என்னன்னு தெரியலைன்னாலும் கொடி ஏத்தி பறக்கும்போதும்,கொடிக்குள் வெச்சிருந்த பூவுலாம் கொட்டும்போதும்,"தாயின் மணிக்கொடி பாரீர்"ன்னு பாடல் பாடும் போதும் இனம்புரியா உற்சாகம் பொங்கும்.
கொடி ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் ஆரஞ்ச் மிட்டாய் தருவாங்க (இதுக்குத்தானே காத்திருந்தோம்). அப்புறம் கலைநிகழ்ச்சிகளும், போட்டிகள்ல ஜெயிச்ச பசங்களுக்கும் கிஃப்ட் கொடுப்பாங்க.எப்படியும் நம்ப பேரு அந்த கிஃப்ட் லிஸ்ட்ல இருக்காது.அவங்க கொடுக்குற சோப்பு டப்பா, ஜாமின்டரி பாக்ஸ், டிஃபன் பாக்ஃசுக்குலாம் ஆசைப்படுற ஆளா நாம்?! ஜனகன மண பாடி ஃபங்ஷன் முடிஞ்சு, கலர் பேப்பர்ல கொஞ்சம் அத்துக்கிட்டு வீட்டுக்கு ஓடுவோம்.கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை,சுதந்திர தினத்துக்குண்டான மதிப்பு இதுலாம் தெரிஞ்சுக்கலைன்னாலும் நாக்கில் இருக்கும் மிட்டாயின் புளிப்பு சுவைக்காகவும்,மனசு முழுக்க இருக்கும் சந்தோசத்துக்காகவும், இந்தியன் என்ற உணர்வுக்காகவும் சட்டையில் குத்தியிருக்கும் கொடியை வீட்டு நிலைக்கதவுல ஒட்டி போகும் போதும் வரும் போதும் சல்யூட் அடிச்சிக்கிட்டு அடுத்த சுதந்திர தினத்துக்கு காத்திருப்போம்..

இப்படி கழிந்தது நம் சுதந்திர தினக் கொண்டாட்டம். ஆனால், இன்று ...
நம் பிள்ளைகளுக்கு?!  இந்த நாளும் மற்றொரு விடுமுறை நாளே!! தொலைக்காட்சி முன்னாடி நொறுக்குத்தீனியோடு, உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக போடும் திரைப்படத்தோடும், நடிகர்களின் பேட்டிகளிலும் சுதந்திர தினம் கழியுது.. சுதந்திரத்தின் சிறப்பு, மதிப்பு. மரியாதை, அதற்கு நம் முன்னோர்கள் தந்த விலை என்னன்னு அவர்களும் தெரிஞ்சுக்க விரும்புறதில்ல.
அவங்களுக்கு எடுத்துச் சொல்ல நமக்கும் நேரமில்ல. ஏன்னா நாமளும் தொலைக்காட்சி முன்னாடி உக்காந்துக்கிட்டு வூட்டுக்காரம்மாவைப் பத்தி (வூட்டுக்காரர்) கிண்டலடிக்குற பட்டிமன்றத்தை ரசிச்சுக்கிட்டும்,அசைவம் சாப்பிட்டும், தூங்கியும்..., நம்மோட இன்றைய சுதந்திர தினம் கழியுது.
இந்தா ராஜி! வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பிளாக்ல பதிவு போட்டும்,சட்டைல கொடி குத்திக்கிட்டு செல்பி, வெல்பி எடுத்தும் ஃபோன்லயும், நெட்லயும்ன்னும், யாரும் என்னைய கேட்கப்படாது. ஏன்னா நான் ஆத்துறது சமுதாயக் கடமை.ஆகவே, குறுக்க பேசாம என்னை என் கடமையை ஆத்த விடுங்க.
எல்லோருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்! 


Friday, August 14, 2015

ஆடி அமாவாசை - பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை

இன்று ஆடி அமாவாசை நமது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்ய மிகவும் உகந்த நாள்,அதேபோல நமது பதிவும் நீண்ட நாள்களுக்கு பிறகு வரும் ஒரு விசேஷமான நாள்.சரி,இந்த ஆடி அமாவாசையை பற்றிய உண்மைகளையும், வழிபாடுகளையும், சம்பிரதாயங்களையும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.புண்ணியம் தேடி கோவில்களுக்கு பயணம் செல்லும் போது ஒரு முறை கன்னியாகுமரி சென்றிருந்த நேரம் காலை நான்குமணி, சூரியன் கூட உதிக்காத அந்த காலை பொழுதில் கடல் அலைகளைவிட திரளான கூட்டம் கரையினில்,என்ன விஷேசம் என்று பார்க்கும் பொழுது,பொதுவாக தென் மாவட்டங்களில் மிகவும் விசேஷமாக செய்யப்படும்,குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் விசேஷமாக தலைமுறை தலைமுறையாக செய்துவரும் வழிபாடான ஆடி அமாவசை பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை,பொதுவாக இந்த மாவட்டத்தில் பூஜை முறைகள் பலவும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முறைகளிலேயே பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும்,இங்கே முன்னோர்களுக்கு செய்யப்பட்டுவரும் பலிகர்ம பூஜையானது,கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும்,திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லத்தில் உள்ள பரசுராமர் ஷேத்திரத்திலும் மிகவும் விசேஷமாக செய்யபடுகிறது
சரி அமாவாசை என்றால் என்ன?, இந்து கலாச்சாரத்தில் தாய் மற்றும் தாய் வழி மாதுர்காரனாகிய சந்திரனும் ,தந்தை மற்றும் தந்தை வழி பிதுர்காரனகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும் .இந்த தினத்தில் நமது தாய் மற்றும் தந்தைவழி மறைந்த நம் முன்னோர்கள், அவர்களது சந்ததிகள் முன்னேற இந்த அமாவாசை தினத்தில் வந்து  அருள்புரிவார்கள் எனபது ஐதீகம்.மேலும், நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை,இந்த பித்ருகர்ம பூஜையினை கன்னியாகுமரி,ராமேஸ்வரம் , பவானி ,பாபநாசம் ,திருச்செந்தூர் திருவையாறு இந்த இடங்களில் உள்ள நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்யபடுகிறது , இந்த இடங்களில் சென்று   பலிகர்ம பூஜை  செய்ய முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள், அன்றைய தினம் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவிட்டு வஸ்திரதானம் செய்து  ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மனம் குளிர செய்தாலும் நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்
இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்கள் ,கோவில்களின் தெப்பகுளம் இங்கெல்லாம் கூட அதிக அளவில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.நதிக்கரை,எரிகரைகளில் மட்டுமில்லாது,கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி,பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளிலும் பிதுர்க்களுக்கு பலிகர்மபூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.அதேபோல் தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் இருக்கும் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் இங்கேயும் ஆடி அமாவாசை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் ஆடி அமாவாசை நடக்கும் காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.என்ற நம்பிக்கையும் இந்துகள் மத்தியில் கடைபிடிக்கபட்டுவரும் ஒரு சடங்கு ஆகும்
ஆடி அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சகல  சௌபாக்கியங்களுடனும்,சுமங்கலிகளாகவும்,நீண்ட ஆயுளுடனும், மாங்கல்ய பாக்கியத்துடனும்  வாழ்வார்கள் என்பதும் ஒரு ஐதீகம் அதற்கு ஒரு கதையும் உண்டு.அழகேசன் என்னும் பராகிரமம் மிக்க அரசன் அழகாபுரி என்னும் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான்,நட்டுமக்களிடமும் கடவுளிடமும் மிகவும் அன்பும்,பற்றுதலும் கொண்ட அரசன் தனக்குப்பின் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என வருத்தம் கொண்டிருந்தான், அதனால் புத்திர பாக்கியம் வேண்டி தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை சென்றான் அதன் பலனாக அவனுக்கு அழகிய ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்,அபொழுது ஒரு அசரீரி,கூறியது ஹே..மன்னா,உன் மகன் வாலிப வயதை அடையும் போது இறந்துவிடுவான் என கூறியது,உடனே மன்னன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான் மன குழப்பத்தில் இருந்த அவன்,மன அமைதி வேண்டி பல கோவில்களுக்கு சென்றான்.ஒருநாள் மன்னன் ஒரு காளி கோவிலில் வழிபட்டு கொண்டு இருக்கும் போது,உன் மகன் இறப்பது என்பது விதிபயன் ,நீ அவன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை ,அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.  
இளமைப் பருவம் வந்த இளவரசன் அசரீரி சொன்னது போல ஒருநாள் இறந்துபோனான். மன்னனும் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி,இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் கதறி அழுதாள்.அரற்றினாள். தவித்தாள்.தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள்.உடனே அந்த பெண்,தேவியிடம் தாயே .இதேநாளில் உன்னைவழிபடும் பெண்கள் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டினாளாம்  இதைகேட்டு மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் வழிபட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.இந்த அம்மாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற ,தடைகள் அகல, பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..
இங்கே  கன்னியாகுமரியில்,கரையில் அமர்ந்து இருக்கும் பிராமணர்கள் அதற்கான பூஜைமுறைகளை செய்கின்றனர்.முன்னோர்களை நினைத்து எள்ளும்,சோறும் கலந்து தங்கள் முன்னோர்களின் 5 தலைமுறைகளின் பெயர்களுக்கு சொல்லி அவர்களுக்கு சாந்தி செய்யபடுகிறது,பின்னர் அதை தலைமேல் சுமந்து முக்கூடல் சங்கமத்தில் சூரியனை பார்த்து கடலில் மூழ்கி அந்த பிண்டத்தை பின்பக்கமாக தூக்கி போட்டு கடலில் நீராடி ஐயருக்கு தட்ஷணை கொடுத்து  திருநீறு வைத்து,கொள்வார்கள்,இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்,பெண்கள் தங்கள் கணவன் உயிருடன் இருக்கும் போதுதன்னுடைய தந்தைக்கு இந்த பலிகர்ம பூஜை செய்ய கூடாது அதே சமயம் தன்னைவிட வயது குறைந்த ஆன்மாக்களுக்கு தனியாக இந்த பூஜை செய்யகூடாது,தங்களுடைய முன்னோர்களுடன் சேர்ந்தே செய்யவேண்டும்
பலிகர்ம பூஜை முடிந்த பின்னர் சூரிய உதயத்தை கும்பிட்டு நம்முடைய முன்னோர்களுக்கு தெய்வங்களின் ஆசிகள் கிடைத்திட பிரார்த்தனை செய்கிறார்கள் .பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்துவிட்டு,தங்கள் வீட்டிற்கு சென்று முன்னோர்களுக்கு படையல் இட்டு காகங்களுக்கு படைத்தது,பின்னர் யாருக்காவது  வஸ்திரதானம்,செய்து அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து தாங்களும் உண்பார்கள்.இதில் சிலர் தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து பின்னர் எள்ளும் நீரும் கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.ஆனால் சிலர் காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவற்றை முன்னோர்களுக்கு படைத்தது வழிபடுவார்கள்
பிதுர் சிரார்த்தம் எனபது,ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். ஆனால் சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.அப்படி சென்ற உயிர்,பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில் அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதுர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும்.அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர்.இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீத்தி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.
ஆனால் ,இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும்,முத்தியடைவனவுமன்றி சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும்.இவைகள் அல்லாது ஒரு உயிர் இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.இதற்கும் ஒரு ஜோதிடம் உண்டு ,சாதரணமாக நாம் பார்க்கும் ஜோதிடம் ஜாதகம் எல்லாம்  ஜோதிடம் படித்த எவரும் சொல்லிவிட முடியும் ,ஆனால் இறப்புக்கு பின் வரும் சூக்கும தேகத்தின் ஆயுள் கணக்கிடுவதர்க்கு ஒரு ஜோதிடம் உண்டு ,அது அவர்கள் இறந்த காலத்தை வைத்து கணக்கிட படுகிறது .இந்த ஜோதிடம் சித்திரகுப்தன் ,மற்றும் யமதர்மராஜாவுக்கு மட்டும் தான் தெரியுமாம்
சென்னையில் கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர கோவிலில் பித்ரு கர்ம பூஜை செய்வது சிறப்பு,ஏனெனில்,லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். என்றும் அதில் இருந்து நீர் எடுத்து இங்கிருக்கும் சிவனை  அபிஷேகம் செய்து வழிபட்டனர். எனவும் , இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். ஈசனின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது. திருக்கோவில் ஸ்தலபுராணம்.ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச்சஞ்சலம் நீங்கும்,பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்..பூஜை பொருட்களை,எள்ளும்,நீரும் சோறும் ,நீர்நிலைகளில் தான் சமர்பிக்கவேண்டும் ,எனபது விதி ஆனால் இபொழுது அங்கே பிதுர் கர்ம பூஜை பொருட்களை பூஜை முடிந்தவுடன் குப்பை தொட்டியில் போடுகிறார்கள் ,அது நமக்கும் நம் முன்னோர் களுக்கும் பாவத்தை கொண்டு செல்லும்
பொதுவாகவே வடமாவட்டங்களில் மற்றும் சென்னையை சார்ந்த இடங்களைல்லும் இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அந்த வழிபாடுகளை செய்யமுடியவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது மிகவும் நல்லது.அதே போல பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் திருவல்லம் பரசுராமர் ஷேத்ரத்திலும் மிகவும் விஷேசமாக பலிகர்ம பூஜைகளும் செய்யப்படும்.அதிலும்  நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள்.இதே மாதிரி, இராமேஸ்வரம் ஸ்லத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்யபடுவதும் சிறப்பு.
அதே போல இறந்தவர்கள் ஆன்மா மோட்சத்திற்கு செல்ல ,கோபுரங்களின் உச்சியில் மோட்ச தீபம் கூட ஏற்றலாம் ,ஆனால் அந்த மோட்ச தீபம் ராஜகோபுரத்தின் அளவைவிட கொஞ்சம் உயரம் குறைந்ததாகவே இருக்கவேண்டும் சுத்தமான பசுநெய் கொண்டுதான் மோட்சதீபம் ஏற்ற வேண்டும். இல்லைஎனில் நம் வீட்டில் செய்த நெய் உத்தமம்.மூலவருக்கு நேரே கிழக்கு நோக்கி இருக்கும் கோபுரத்தில் ஏற்றுவது நலம்
வாயகன்ற ஒரு மண் சட்டி,இல்லை ,பெரிய மண் விளக்கு எடுத்து ,அதில் நவதானியங்களை,வெள்ளை துணியில் முடியவேண்டும் ,நவதானியங்கள் கிடைக்காதவர்கள் எள்ளு கூட எடுத்துக்கொள்ள்ளலாம்.அதை வெள்ளை துணியில் முடிந்து அந்த முடிப்பை சுத்தமான் நெய் சட்டியில் வைத்து ,கோபுரத்தின் மேல் நம்முடைய முனோர்கள் மற்றும் நம்மைவிட்டு நீங்கியவர்களை நினைத்து தீபம் ஏற்றி அவர்கள் ஆன்ம சாந்தியடைய பிரார்த்தனை செய்து ,சுவாமிக்கு அர்ச்சனை செய்தல் நலம்.
ஆடி அமாவாசை எனபது நம்மை விட்டு நீங்கியவர்கல்ளுக்காக பலிகர்மம் செய்யும் ஒரு நல்லநாள் அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் தொல்லைகொடுந்து இருந்தாலோ இல்லை , அவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்களை நாம் கோபத்தில் பேசி இருந்தாலும் தவறு என தெரிந்தும் நாம் ,அவர்களுக்கு செய்த தவறுகளுக்கு, மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு நல்ல வாய்பான  இந்த ஆடி அம்மாவசை தினத்தில்  நாம் முன்னோருக்கு வழிபாடு செய்து அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்தது அவர்களின் ஆசிகளை பெறுவோம் ..

நன்றி.

Wednesday, May 20, 2015

மரி கனிவே என்னும் வாணி விலாஸ்ச சாகரா அணைக்கட்டு

மௌன சாட்சிகளில் மிகவும் பழமை வாய்ந்த இடங்கள் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து வருகிறோம். இந்த வாரம் நாம் பார்க்கபோவது, மாநிலம் தாண்டி வரலாற்று சிறப்புமிக்க ஒரு பொறியியல் நுணுக்கம் நிறைத்த ஒரு டேம்.
சித்திரதுர்க்கா மாவட்டம்,இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 மாவட்டங்கள்ல ஒண்ணு.இந்த மாவட்டத்தின் தலைநகரம் சித்திரதுர்க்கா டவுன்ல இருக்கு,இந்த மாவட்டத்தின் அமைவிடம் பார்த்தோம்னா தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும்,தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும்,மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும்,கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாக இருக்கு.இந்த தாவண்கரே மாவட்டமும் முன்னர் சித்திரதுர்க்கா மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருகிறது.இந்த மாவட்டத்தில் தான் புகழ் பெற்ற வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் ஓடுகின்றன.இவ்வுளவு சிறப்பு மிக்க இந்த மாவட்டதில இருக்கிற ஹிரியூர் தாலுக்காவில வேதவதி நதியில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமை வாய்ந்த வாணி விலாச சாகரா என்னும்  அணைகட்டைதான் நாம இன்னிக்கு மௌன சாட்சிகளில் பரர்க்கபோறோம்.
இதுதான் அணைக்கட்டின் முகப்பு வாயில், இந்த இடத்திற்கு செல்லும் வழியினை பற்றி பார்க்கலாம். இது ஒருமுக்கியமான சாலை என்பதாலும் அதிகாலை பொழுதில் பனிமூட்டம் இருப்பதாலும் மிக கவனமாக வண்டி ஒட்டி செல்லவேண்டும். நமது பயணம் பெங்களூரில் இருந்து தொடங்கிய போது அதிகாலை நான்குமணி பற்களெல்லாம் நர்த்தனம் ஆடும் அளவு குளிர். ஊரெல்லாம் ஏசி போட்டதுபோல் இருந்துச்சு வண்டி வேகமாக பெங்களூர் மும்பை NH4 நாற்கர சாலையில் அமைதியா சென்றது ரோடு எல்லாம் அகலமா, இருபக்கமும் பச்சை பசேலென செடி கொடிகளும் நல்ல உயரமான  தென்னைமரங்களும் மலைகளும் என பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு சந்தோசமாகவும் இருந்தது .காலை 7 மணியளவில் ஹிரியூரை நெருங்கி கொண்டு இருந்த சமயம் சாலையோர ஹோட்டல் ஒன்று தென்பட்டது உள்ளே சென்ற போது காமதேனு எஅழகான பெயர்பலகை இருந்தது.சாப்பிட இட்லி கேட்டபோது ஒரு பெரிய தட்டுநிறைய சாம்பாரும் இரண்டு டீஸ்பூனும் கொடுத்தார்கள். இட்லி எங்கே என்று சர்வரிடம் கேட்டபோது, கூட வந்தவர்கள் சத்தம்போடதே சாம்பாரில் இரண்டு இட்லிகள் மிதக்கிறது பார், என சொன்னபோதுதான் சம்பரையே கவனித்தேன் அதை அங்கே உள்ளவர்கள் லாவகமாக இரண்டு டீஸ்பூன்கொண்டு வெட்டி வெட்டி சாப்பிடும் முறையை பார்த்து அதேபோல் 2 இட்லியையும், சூடா ஒருகப் காப்பியையும், குடித்து விட்டு பயணம் தொடர்ந்தது.ஒருவழியாக அணைக்கட்டினை அடைந்தோம்
இதுதான் அணையின் முகப்பு வாயிலை தாண்டி உள்பக்கமாக செல்லும் வழி. நேர்த்தியான படிக்கட்டுகள் மூலம் மண்டபம், போன்று அமைக்கப்பட்டு இருக்கு. இதில் அணையினுடைய கொள்ளளவு அதன் பரபளவு பற்றி எழுதபட்டு  இருக்கு, சரி இந்த இடத்திற்கு எப்படி போகணும்னா பெங்களூர்ல இருந்து நேரடியாக ஹிரியூர் வந்து அங்கிருந்து இடப்பக்கமாக செல்லும் வழியாக செல்லலாம் இல்ல பெங்களூர் ல இருந்து தும்கூர் வழியாக சிரா வந்து அங்கிருந்து ஹிரியூர் செல்லலாம்
இது அணையினை பற்றிய ஒரு சிறு குறிப்பு அடங்கிய கல்மண்டபம்.இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டது இந்த அணை, இது 1898 ல் ஆரம்பிக்கபட்டு 1907 ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். மைசூர் மகாராஜா ஸ்ரீ நான்காம் கிருஷ்ணராஜா உடையார் ஆணைப்படி சர் விஸ்வஸ்வரையா மற்றும் தரசந்ததலால் என்பவர்களால் கட்டிமுடிக்கப்பட்டது  என்று சொல்லபட்டாலும் சம்மராஜா உடையார் என்ற மன்னர் மறைந்த பிறகு ஆட்சி பொறுப்பு ஏற்ற அவரது மனைவியால் தான்  முதன்முதலாக தொடங்கப்பட்டது.மக்கள் மற்றும், சமூகப்பணிகளில் ராணி மிகவும் அக்கறை கொண்டவர் என அங்கே உள்ள மக்களால் சொல்லபடுகிறது. அணைகட்டுவதற்கு நிதிபற்றாக்குறை வந்த சமயம் தங்களுடைய அரசு கருவுலங்களில் இருந்து பாரம்பரிய நகைகளை கொடுத்து உதவினாராம் மகராணி,இதன் காரணமாகவே இந்த அணைக்கு வாணி விலாஸ்ச  சகாரா என பெயரிடப்பட்டது என்று சொல்கிறார்கள். மேலும் மைசூர் மன்னரின் கடைசி மகளான வாணி விலாஸ்ச  என்பவரது பெயரில் இது அழைக்கப்பட்டது எனவும் சொல்லபடுவது உண்டு.இந்த மரிகநிவே அணை மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய அணைக்கட்டு என்ற சிறப்புகளை உடையது அதேசமயம் மைசூர் KRS அணையைவிட அதிக நீர் தேக்க சக்தி கொண்டதாகும்.
இதுதான் அந்த கல்மண்டபத்தின் தூரத்து காட்சி சரசெனிக் (ஹரப்பா )முறை கட்டிடகலையில் கட்டப்பட்டுள்ள இந்த அணை 62 ft. X 1300 ft. அளவு கொண்டது.இந்த அணை உள்ளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டத்தின் உள்நாட்டு நீர் ஆதாரமாக உள்ளது. இது வலது மற்றும் இடது வங்கி கால்வாய்கள் மூலம் உள்ளூர் மற்றும் சள்லகேரே தாலுகாக்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சதுர கிமீ நிலங்களுக்கு பாசன வசதி கொடுக்கிறது. இந்த இடம் பெங்களூரில் இருந்து 160 கிமி தொலைவிலும் சித்திரதுர்கா விலிருந்து 40 கிமி தொலைவிலும் ஹிரியூரிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் இருக்கிறது.
இவைகள் என்ன வென்று தெரியவில்லை மதகுகளாக இருக்கலாம் அவை ஓரமாக இருப்பதாய் பார்க்கும் போது அதிகபடியான தண்ணீரை வெளியேற்றும் அமைப்புகளா, என்னவென்று தெரியவில்லை.ஏதோ நுணுக்கமான பொறியியல் அமைப்பு என்பதால் இதையும் இங்கே பதிவிடுகிறேன்.
இந்த அணை இபொழுது இருக்கிற மார்டன் உபகரங்கள் இல்லாத காலங்களில் கட்டப்பட்டதாகும். அவ்வுளவு நுணுக்கமாக கட்டப்பட்டுள்ள ஒரு பொறியியல், அற்புதம்ன்னே சொல்லலாம்.மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு இருக்கு, உலகின் தலைசிறந்த கட்டிட கலைகளுள் ஒன்றாகவும் இந்த அணை கருதபடுகிறது.இந்த வாணி விலாஸ்ச சாகரா அணை மைசூர்  மன்னர்களால் செயற்கையாக அமைக்கபட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கம் அல்லது ஏரின்னே சொல்லலாம்.
மத்திய கர்நாடக டெக்கான் பகுதியில் இருக்கும்  நகரங்கள் கிராமங்கள் தண்ணீர் வசதி இல்லாத இடங்கள், மற்றும் விளைநிலகளுக்கு இந்த அணைக்கட்டு ஒரு வரபிரசாதமாக இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வேதவதி நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையை கட்டியவர்களின் பொறியியல் திறனை கண்டு மிகவும் வியந்து போனோம். இந்த அணையின் சுவர் இரு மலைகளை இடையில் கட்டப்பட்டு அவைகளை இணைப்பதாக உள்ளது அதன் உறுதியை ஒப்பிடும் போ து மலைகளிபோல் உறுதியாக இருக்கிறது.
இந்த அணையின் நடுபக்கத்தில் நின்று பார்க்கும் போது  நீல வானமும் நீல நிற நீர்தேக்கமும் வானத்தின் அடிவாரம் வரை இருப்பது போல்  இருக்கிறது, இதை பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி கண்களுக்கு ஒரு குளிர்ச்சி, இயற்கையின் எழிலை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.
போட்டோ எடுப்பதில் நாட்டம் உள்ளவர்களுக்கு, இது ஒரு சிறந்த தலமாகும் .மேலும், இங்குள்ள நீர்நிலைகள் மிகவும் ஆழமானவை அபாயகரமானவை முதலைகள் கூட இருப்பதாக சொல்கிறார்கள், அதனால் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறது.புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த இடத்திற்கு செல்லலாம் அவ்வுளவு அருமையாக உள்ளது .
இந்த அணை முக்கியமான சுற்றுலாதலமாக  இருந்தாலும், பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வருகின்றனர்.ஆனால் எந்த ஊருக்கு போனாலும் எந்த மாநிலம் ஆனாலும் காதல் ஜோடிகளுக்கு மட்டும் சுற்றுலா தலங்கள் ஈடன் கார்டனாகவே இருக்கிறது.ஆனால் இபொழுது சுற்றுலாதுறையும், காட்டுஇலாகா துறையும் இந்த இடத்தை ஒரு நல்ல சுற்றுலா தலமாக மேம்படுத்தி உள்ளனர். மலையின் மீது ஒரு அரசினர் விருந்தினர்  மாளிகையும் இருக்கு.
இந்த வாணி விலாச சகரா அணை  மரிகநிவே என்றும் அழைக்க படுகிறது. காரணம், இந்த அணையின் அடிவாரத்தில் வரலாற்று முக்கியம் வாய்ந்த கனிவே மாராம்மா என்னும் கோவிலும், அதை ஒட்டி அழகான பூங்காவும் அமைந்துள்ளது இதனாலேயே இந்த இடத்திற்கு மரி கனிவே ன்னும் பெயர் வந்தது.
அக்டோபரில் இருந்து ஜனவரி வரை உள்ள காலம் இந்த அணைக்கட்டினை பரர்க்க சிறந்த காலங்கள் என சொல்லபடுகிறது .ஏன்னா, கனிவே மாரம்மா கோவிலில் ஆண்டின் ஒவ்வொரு, நவம்பர் மாதமும் திருவிழா கொண்டாடப்படும். அந்த சமயத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவிழா கொண்டாத்திற்காக இந்த இடத்திற்கு வருவாங்க, அபொழுது மக்கள் இந்த அணைகட்டை பார்வையிட  திரளாக வருவாங்களாம் .   
இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இடத்தை சுற்றிலும் நிறைய தமிழ் ஆட்கள் பெரிய  விவாசாய விளை நிலங்களோட வசிக்கிறாங்க. கர்நாடகாவின் மத்திய பகுதியில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று யோசிக்கும் போது, கூட்டத்தில் இருக்கும் பெரியவர் ஒருவர் சொன்னார் இந்த அணையை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து நிறைய ஆட்களை கொண்டுவந்து கட்டிமுடித்தார்களாம், ஆண்டு கணக்கில் கட்டிட பணிகள் நடந்ததினால் அவர்கள் இங்கே குடும்ப சகிதம் தங்கிவிட்டனராம், அணைக்கட்டு பணிகள் முடிந்த பிறகு, அவர்களது பரம்பரையினர் இங்கே விவசாயம் செய்து இங்கேயே தங்கி கர்நாட்டக குடிமக்கள் ஆகிவிட்டார்கள் என்று சொன்னார் .
ஒரு அருமையான பழமை வாய்ந்த பொறியியல் நுட்பம் நிறைந்த ஒரு அணைக்கட்டை பார்த்த நினைவுகளுடன் பயணம் இனியதாக அமைந்தது, இங்கே செல்பவர்கள் தண்ணீரின் ஆழம் தெரியாமல் தயவு செய்து இறங்கவேண்டாம் ,அதுபோல உண்வு பொட்டலங்களை முடிந்தால் கொண்டு செல்லுங்கள், ஏனெனில் இங்கே எந்த ஹோட்டலும் கிடையாது. முக்கியமாக, தூய்மையான இந்த இடத்தை நாம் கொண்டு செல்லும் உணவு பண்டங்களால் அசுத்தம் செய்யாமல் இருக்கவேண்டும்..நன்றி, மீண்டும் அடுத்தவாரம் மௌன சாட்சிகளில் பழம் பெருமை வாய்ந்த வேறு ஒரு இடத்திலிருந்து சந்திக்கலாம் .

Monday, May 18, 2015

இராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! - தெரிந்த கதை தெரியாத உண்மை

இன்று நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில்,இராமர் பாலம் பற்றிய சில உண்மைகளையும், ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் ,பார்க்கபோகிறோம் இராமர் பாலம் என்று ஒரு பாலம் இருந்ததா?இல்லையா? என பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன,அது உண்மையா? பொய்யா?என நாம் இங்கே விவாதங்கள் செய்ய இந்தபதிவினை தொடரவில்லை,சில மரபுவழி   கதைகளையும், சில வரலாற்று ரீதியான உண்மைகளையும் அதற்கான ஆதாரங்களையும் மட்டும் தான் இங்கே பார்க்க போகிறோம்.
இராமர் பாலம் தோன்ற காரணமாயிருந்தது ராவணன் சீதையை தூக்கி சென்றதினால் தான், அதனால் தான் சீதையை மீட்க ராம, ராவண யுத்தம் தொடங்கியது.சீதாபிராட்டியை  ராவணன் தூக்கி செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணை வழிமறித்தது.ஜடாயுவுக்கு மட்டும் ஏன்? ராமன் மீது அவ்வுளவு பாசம்.அங்கேயும் ஓரு சிறிய கதை உண்டு கருடனை நம் எல்லோருக்கும் தெரியும்.அந்த கருடனின் அண்ணன் அருணன்.இந்த அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு, ஒருமுறை சம்பாதிக்கும் ஜடாயுவுக்கும் இடையில் ஒரு போட்டி,இருவரில் யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல,அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான்.அப்போது, சூரிய வெப்பத்தால் சம்பாதியின்  சிறகுகள் கருகின .முடிவில் இராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன.ஆகையால்,இருவருக்கும் ராமனின் மீது தீராத பக்தி உண்டு
இராவணன் சீதையை தூக்கி செல்லும் போது பராக்கிரமம் மிக்க ஜடாயு இராவணன் மேல் பாய்ந்து தாக்கினான் ராவணன், தன்னுடைய கொடிய வேலை ஜடாயுவின் மீது எறிந்தான் அந்த வேலினால் ஜடாயுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.மேலும் ஜடாயு இராவணனின் மார்பிலும் தோள்களிலும் தன் சிறகுகளால் ஓங்கி அடித்தான்.அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். ஜாடயுவை எந்த ஆயுத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகையால், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளினை கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.இந்த சந்திரகாசம் என்னும் வாளுக்கு தனிகதை உண்டு இராவணன் பலமுறை பலரிடம் தோற்று போனான் வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.
ஜடாயு கூறியதை வைத்து சீதா பிராட்டியை தூக்கி சென்ற இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமர் தலைமையில், ஹனுமன் அமைத்த பாலமே, இது என்று சொல்லும் இலங்கை வாழ் மக்கள், இதை ஹனுமன், பாலம் என்றும் சொல்வதுண்டு,இந்த இராமர் பாலத்தின் கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் நாசா அண்மையில் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படபடங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக தெளிவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இராமர் பாலம் உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உள்ள உயர்தரமான பொறியியல் தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு பாலத்தை கட்டமுடியாது,என கூறியது. மேலும் இராமர் பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல,மற்றும் இது வெறும் கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மேலும்,இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை இதன் முனைகள் உறுதியாக  மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் என தெளிவாக தெரிகிறது என ஒரு அறிக்கயை வெளியிட்டது.
இராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து  இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.ராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ராமர் திட்டைஎன்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு நீராட்டல்எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம், இந்த ராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது. 
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால்  இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ராமர் பாலம் கட்டப்பட்டது. கி மு 1450 வாக்கில்  இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.
இந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இந்த இராம சேது என கூறப்படுகிறது. இதை வெரும் ஐந்து நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி  கட்டிமுடிக்கப்பட்டது, என சொல்லபடுவதுண்டு.இராம சேது இதை பற்றிய குறிப்புகள் கதைகள் நம்முடைய இதிகாசங்களில் இருக்கின்றன. இராவணனின் ஒற்றன் ஷார்துலா என்பவன் அக்கரையில் முகாம் கொண்டிருக்கும் வானர சேனைகளை பார்த்து பயந்து, இராவணனுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினான். உடனே இராவணன் வானரர்களால் தானே இராமனுக்கு பலம் என அறிந்து தன்னுடைய ராஜ தந்திரங்களை பிரயோகித்தான். சுகா என்ற தன்னுடைய பிரதிநிதியை, சுக்ரீவனிடம் அனுப்பி வாலிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும்,  தான் சுக்ரீவனை உடன் பிறவா சகோதரனாக மதிப்பதாகவும் சொல்லி, தூது அனுப்பினான். மேலும், சுக்ரீவன் இராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்த ஓலையை வானரர்களின் முகாமிற்கு எடுத்து சென்ற போது காவலர்களால் பிடிக்கப்பட்டு அவையின் முன்னே நிறுத்தபட்டான் சுகா. வானரர்கள் அவனை கொல்ல பாய்ந்தனர் .சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே அதைகேட்டு வந்த இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவரை துன்புறுத்துவது தவறு எனகூறி அவனை விடுவிக்க சொன்னார்.
சுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்?"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.
மாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான்  தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.
இந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள்  மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.
இந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல்  நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற   தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan  Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X  6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.
இது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். அதிலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.
இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago)  ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
அதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.
புராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.
நமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.
அதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் என்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.
நம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .

இதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர்.  டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம்  சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks  பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும்  அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை  தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பாலம் திட்டமிடப்பட்டு  செய்யபட்டது  ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமைப்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும்,  பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி,  ஸ்ரீ லங்கா  பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .

மார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த  படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு  தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது  இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.மீண்டும் இராமாயண தொடர்புள்ள ஒரு கதையான இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம் நன்றி.