ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை இருக்கும். அந்த கதையை ஒட்டியே அந்த ஊரின் பேரும் இருக்கும். பல ஊர் பெயரின் பின்னால் உள்ள கதையினை சில பதிவுகளை முன்பு பார்த்திருக்கிறோம்.. ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும் அக்காள் மடம், தங்கச்சி மடத்தின் பெயர்காரணத்தை இன்று மௌன சாட்சிகள் பகுதியில் பார்க்கலாம்.
ராமேஸ்வரம் புண்ணிய பூமி என்பதும் நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்பதும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஊர் என்பது வரை நமக்கு தெரியும். . அக்கா, தங்கச்சி நினைவாக இந்த ஊருக்கு பேர் வந்துச்சுன்னு சிலருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனால் பலருக்கு ஏன் இந்த பேரு வந்திச்சுன்னு தெரியாது,. தெரியாதவங்க தெரிஞ்சுக்கலாம். தெரிஞ்சவங்க நான் சொல்வது சரியான்னு சொல்லுங்க!! அக்காள் மடம், தங்கச்சி மடம் என பேர் வர இரண்டு கதைகளை சொல்றாங்க.
முதல் கதை...இப்போது ராமேஸ்வரம் அழைக்கப்படும் அப்போதைய சேது நாட்டை ஆட்சி செய்து வந்தவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி. இவர், காலம்சென்ற கிழவன் சேதுபதியின் தங்கை மகனான திருஉத்தரகோச மங்கை கடம்பத்தேவரின் இளைய மகனாம். ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டுக் காலம் நடைபெற்ற இம்மன்னரின் ஆட்சிக் காலத்தில், ஏராளமான ஆலயத் திருப்பணிகள் செய்துள்ளாராம். முத்து விஜயரகுநாத சேதுபதிக்கு, சீனி நாச்சியார், இலட்சுமி நாச்சியார் என ரெண்டு பொண்ணுங்க. சகோதரிக’ல் ஒருவரை ஒருவர் விட்டு பிரியக்கூடாதுன்னும், வேறு யாரும் தன் மகளுக்கு சக்காளத்தியாக வந்து அல்லல்படக்கூடாதுன்னும் ரெண்டு பேரையும் தண்டத்தேவர் என்பவருக்கே கல்யாணமும் பண்ணி வச்சதோடு இராமேஸ்வரம் புனிதத் தீவை ஆட்சி செய்யற ஆளுநா் பொறுப்பையும் மருமகன்கிட்ட சேதுபதி ஒப்படைச்சாராம்.
மருமகனுக்கு என்ன வேலைன்னா இராமநாதர் ஆலய நிர்வாகத்தைக் கவனிச்சிக்குறதும், ஆலய அறப்பணிகளில் சிறு குறையும் வராம பார்த்துக்குறதுதாம். ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு சின்னதொரு குறைகூட இருக்கக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கவேண்டுமென சேதுபதி மருமகன் தண்டத்தேவருக்கு கட்டளை இட்டார். மாமனாரின் சொல்படி தண்டத்தேவரும் அனைத்து அறப்பணிகளையும் சிறப்பாகவே நிர்வாகம் பண்ணிட்டு வந்தாராம்.
தன்னோட கட்டளைக்கு கீழ்படிந்து ராமேஸ்வரம் ஆலயப்பணிகளை சிறப்புற தன் மாப்பிள்ளை கவனித்து வந்ததில் மனமகிழ்ந்த சேதுபதி, மாப்பிள்ளையின்பால் நம்பிக்கை கொண்டு, ராமநாதபுரம் சீமையின் வறட்சியை போக்கி, அந்நாட்டினை வளப்படுத்தும் முயற்சியில் ராமநாதபுரத்தில் தங்கி மும்முரமாக ஈடுபட்டார். ராமநாதபுரத்தில் அறநிலையங்கள், அன்ன சத்திரங்கள், நீர்ப்பாசன வசதி ஏற்பாடு என சேதுபதியின் முழுகவனமும் ராமநாதபுரத்தில் இருந்த நேரத்தில்போது மாப்பிள்ளை தண்டத்தேவர் ஒரு சின்ன தப்பு ஒண்ணு பண்ணிட்டார். அந்த தப்பு என்ன்னா....
காசிக்கு போறதை புண்ணியமா நாம நினைக்கிறமாதிரி, ராமேஸ்வரத்துக்கு வருவதை புண்ணியமா நினைப்பாங்க. ராமேஸ்வரத்துக்கு போனவங்க இதை கண்கூடா பார்க்கலாம். ஏன்னா, அம்புட்டு வடமாநிலத்தவர் ராமேஸ்வரத்தில் இருப்பாங்க. இப்ப இருக்கற மாதிரி அந்த காலத்துல போக்குவரத்து வசதிகள்லாம் கிடையாதில்லையா?! ரொம்ப வசதியானவுங்க வண்டி கட்டிக்கிட்டு வருவாங்க. ராஜாக்கள், ஜமீந்தார்கள் பல்லக்கில் வருவாங்க. சாமனியர்கள் கால் நடையாதான் வருவாங்க. வந்தாகனும். இப்படி ராமேஸ்வரத்துக்கு வரும் சத்திரங்களில் தங்க வைக்குறது, அவங்களுக்கு சாப்பாடு, அவங்க போக வர படகு சவாரி என அனைத்தையும் இலவசமா பக்தர்களுக்கு கிடைக்கும்பொருட்டு சேதுபதி நிறைய நிதி ஒதுக்கி வச்சிருந்தார். பக்தர்களிடம் நயா பைசாக்கூட வாங்கக்கூடாதுன்னு அதிகாரிகள்கிட்ட கறாரா சொல்லி வைத்திருந்தார்.
நிலைமை இப்படி இருக்க, சேதுபதியின் மாப்பிள்ளை தண்டத்தேவர், நூறு வருசமாதான் பாம்பன் பாலம் இருக்கு அதுக்கு முன் கடல்வழியாதான் ராமேஸ்வரத்துக்கு போகனும். அதுக்கு படகுதான் ஒரே போக்குவரத்தா இருந்தது. கலம்ன்னு கொஞ்சம் சின்ன சைஸ் கப்பலை வாங்கினால் பக்தர்கள் நிறைய பேர் ஒரே நேரத்தில் போகலாம்ன்னு நினைச்சு கப்பல் வாங்கலாம்ன்னு நினைச்சார் தண்டத்தேவர், கூடவே, ராமேஸ்வரத்துக்கு வரும் பாதையையும், கோவிலுக்கு செல்லும் பாதையையும் சீர்படுத்த நினைச்சார் தண்டத்தேவர்.
அவர் குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு காசு பார்க்கலாம்ன்ற எண்ணத்தில் ஒரு அதிகாரி , ராமேஸ்வரத்திற்கு வரும் பயணிகளை இலவசமாக படகில் அழைத்து வருவதற்கு பதிலாக கட்டணம் வசூலிச்சா நிறைய பணம் கிடைக்குமென தண்டத்தேவருக்கு யோசனை செய்ய, பக்தர்களின் நலனுக்குத்தானே என நினைத்த தண்டத்தேவரும் கட்டணம் வசூலிக்க சம்மதித்தார். இராமநாத சுவாமியைத் தரிசிக்கச் செல்லும்போதும், திரும்பும் போதும், இரண்டு முறை கட்டணம் வாங்க ஆரம்பிச்சாங்க. பக்தர்களின் வசதிக்காகத்தானே வசூல் செய்றோம். பிறகு மாமனார்கிட்ட சொல்லிக்கலாம்ன்னு தண்டத்தேவரும் மாமனார்கிட்ட பர்மிஷன் வாங்காமலே விட்டுட்டார்.
வடநாட்டிலிருந்து வந்த முனிவர் ஒருவர்கிட்ட படகுக்கான கட்டணம் கேட்க, தன்னிடம் காசு இல்லையென சொல்லி இருக்கார் முனிவர். காசு கொடுத்தால்தான் படகில் ஏத்துவோம்ன்னு சொல்லி அவரை ராமேஸ்வரத்துக்குள் செல்ல அனுமதிக்கலை. சேதுபதிக்கிட்ட .
ஒருநாள் வடநாட்டில் இருந்து வந்த ஒரு ஏழை அந்தணர் படகில் ஏறப்போக, ஏறவிடாம, காசு இருந்தாதான் ஏத்திட்டு போவேன்னு படக ஓட்டுறவன் சொல்ல, காசு இல்லாத அந்த அந்தணன் நேரா அரண்மனைக்கு வந்து சேதுபதிகிட்ட சொல்லிட்டார். படகோட்டியை கூப்பிட்டு விசாரிக்க தண்டத்தேவர்தான் கட்டணம் வசூலிக்க சொன்னதாய் சேதுபதியிடம் சொல்ல, தன் மருமகனே கட்டணம் வசூலிப்பதை எண்ணி மனம் வருந்தினார் சேதுபதி.
பல ஆயிரம் மைல்கள் கடந்து, பல இன்னல்களை தாங்கி, பக்தியுடனும், நீத்தார் கடன் கழிக்கவும், பரிகாரத்திற்காகவும் சேதுக்கடலில் நீராட வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதா? அதுவும் என் மருமகன் தலைமையிலா?! என மனம் குமுறிய சேதுபதி, இதில் தனது மகள்களின் வாழ்வும் அடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு தனது இரு மகள்களையும் அழைத்து, புண்ணிய யாத்திரையாய் வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் கொடுமையை சொல்லி வருத்தப்பட்டு, கட்டணம் வசூலிப்பவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாமென மகள்களிடம் பூடகமாய் கேட்க, மரண தண்டனை மட்டுமே இனிவரும் காலங்களில் இத்தவறு நேராதவாறு பாடமாய் அமையும். என சேதுபதியின் இரு மகள்களும் சொல்ல, யாரா இருந்தாலும் இந்த தண்டனை பொருந்துமா?! என சேதுபதி கேட்க, கட்டணம் வசூலிப்பது தாங்களாகவே இருந்தாலும் இத்தண்டனை பொருந்தும் என சேதுபதியின் மகள்கள் பதில் சொன்னார்கள். தவறிழைத்தது உங்களது கணவன் தண்டத்தேவர், இப்பொழுது சொல்லுங்கள், அவனுக்கு நான் என்ன தண்டனை கொடுக்கட்டுமென சேதுபதி மகள்களிடம் கேட்டார்.
சகோதரிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருவரும் ஒருசேர, எங்கள் கணவருக்கும் இத்தண்டனை பொருந்தும் என்ற மகள்களின் மன உறுதியை நினைத்து வருந்துவதா?! பெருமிதம் கொள்வதா என திகைத்து நின்றார் சேதுபதி. அப்பா! மன்னரான உங்களிடம் இரண்டு வேண்டுகோளை முன்வைக்கிறோம். எங்கள் கணவரை தூக்கிலிட்ட பிறகு அவரது உடலை எரிக்கும்போது நாங்களும் உடன்கட்டை ஏற சம்மதிக்க வேண்டும். எங்கள் கணவர் செய்த பாவத்திற்கு பிராயசித்தமாக ராமேஸ்வரம் செல்லும் பாதையில் பக்தர்கள் தங்கி இளைப்பாறவும், அன்ன ஆகாரம் இலவசமாய் கொடுக்கவும் இரண்டு மடங்களை கட்டவேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
மருமகனென்றும் பாராமல் தண்டத்தேவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டத்தேவரின் உடலுக்கு தீமூட்டி, சகோதரிகள் இருவரும் உடன்கட்டை ஏறினர். தன் இரு மகள்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அக்காள்மடமென்றும், தங்கச்சிமடமென்றும் இரு மடங்களைக் கட்டியதாக இன்றும் ராமேஸ்வரம் பகுதியில் சொல்வாங்க. கொஞ்ச நாள்வரை சேதுபதி மன்னர் கட்டிய மடம், அக்காள் மடத்திலிருந்ததாகவும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் அம்மடம் இடிக்கப்பட்டதாகவும், தங்கச்சி மடத்தில் கட்டப்பட்ட மடம் இப்ப முஸ்லீம்கள் தொழும் பள்ளிவாசலாக மாறியதுன்னும் சொல்றாங்க.
ரெண்டாவது கதையில் மன்னர் சேதுபதிக்கு முன், ராமேஸ்வரத்தை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. அதனால், பிள்ளை வரம் வேண்டி, எங்கெல்லாம் தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைகிறதோ, அங்கெல்லாம் சத்திரம் கட்டுவதாக வேண்டிக்கொண்டு கடற்கரையோரமாக இராமேஸ்வரம் நோக்கி மதுரையிலிருந்து பயணப்பட, தேங்காய் சரிபாதியாக உடைந்த பதினேழு இடங்களில் (புதுமடம், தொண்டி நம்புதளை, அக்காள் மடம், தங்கச்சிமடம், இராமேஸ்வர கடற்கரை நேர் எதிரே போன்ற இடங்களில்) சத்திரங்களைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் கொஞ்சம் நம்புறமாதிரி இருந்தாலும், அக்காள் மடம், தங்கச்சி மடத்தின் பெயர்காரணம் என்னன்னு தெரில.
பெயர்க்காரணம்தான் தெரியலைன்னாலும் அந்த காலத்து மனிதர்களின் நேர்மை, இறை பக்தி, சக மனிதருக்கு உதவும் கொடை உள்ளம், நீதி தவறாமை, பதி பக்தி போன்றவற்றை மக்களுக்கு இன்றளவும் மக்களுக்கு எடுத்து சொல்லும் காரணியாக அக்காள் மடம், தங்கச்சி மடம் இருக்கின்றது...
மௌனச்சாட்சிகள் தொடரும்...
நன்றியுடன்,
ராஜி
மௌன சாட்சிகள்... பதிவு நன்று.
ReplyDeleteபெயர்க் காரணம் - கதை சிறப்பு. உண்மை எப்படியாக இருந்தாலும் கதை நன்றாகவே இருக்கிறது.
காரணம் எதுவா இருந்தாலும் வழிபோக்கர்களின் பசியையும், உடல் களைப்பையும் போக்க மடம் கட்டியவரின் கொடை உள்ளம் எத்தனை உயர்ந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்.
Deleteநன்றி சகோதரி !தெரியாத உண்மைகளை தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது உங்கள் தளம் அக்காள் மடம் தங்கச்சி மடம் பெயர் காரணங்கள் இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது
ReplyDeleteஆமாம்ண்ணே. அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எத்தனை பொதுநலமாய் சிந்தித்து செயல்படுத்தி இருக்கிறார்கள் என இதன்மூலம் தெரிஞ்சுக்க்கிட்டு நாமும் அதுப்போல வாழ ஆரம்பித்தால் எதிர்கால சந்ததியினர் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.
Deleteசகோதரி ,வடநாட்டில் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் இதற்கு ஓர் உதாரணம் -- அங்கு நமது தமிழக உணவுகள் 3 வேளையும் மிக குறைவான விலையில் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கப்படுகின்றன . தீபாவளி சிவன்ராத்திரி சமயங்களை தவிர மற்ற நாட்கள் எல்லோருக்கும் அறைகளும் குறைந்த வாடகைக்கு விடப்படுகின்றன . இட்லி ,சாம்பார் , தோசை பொங்கல் எல்லாம் உண்டு. நல்லோர் அங்கங்கே உள்ளனர் ,நல்ல காரியங்கள் அதனால் நடக்கின்றன .நம் வாழ்வின் ஒரு பகுதி பிறருக்காகவும் வாழ வேண்டும் .
Delete"நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை ,எல்லாமே பிறர்க்கு உழைக்க காணுகின்றேன் என் வாழ்வும் பிறர்க்கு உழைக்க வேண்டும் வேண்டும் "என்ற முன்னாள் துணைவேந்தர் வ.சுப மாணிக்கனார் கவிதை வரிகள் போல ....நன்றி சகோதரி தொடர்க உங்கள் பணி
300 ஆண்டுகள் முன்பு தொடங்கபட்டது காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
Deleteவேறு இரு சான்றுகளும் உண்டு சகோதரி...
ReplyDeleteசொல்லி இருந்தால் தெரிஞ்சுக்கிட்டிருந்திருப்பேனே!
Deleteதெரியாத தகவல்கள். பெயர்க்காரணம் கதைகள் ஸ்வாரஸ்யம்...நம்மூர்ல எவ்வளவு கதைகள்! 23 ஆம் புலிகேசி ஃபேமஸ் டயலாக் தான் நினைவுக்கு வருது வரலாறு முக்கியம் அமைச்சரே...ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
வரலாறு முக்கியம்தான் கீதாக்கா. அப்பதான் எதிர்கால சந்ததியினருக்கு முன் தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கை முறை, தியாகம், பண்பாடு, கலாச்சாரம், கலை சென்றடையும். பதிவு செய்யாமல் விட்டதால்தான் பல அறிய பொக்கிசங்களின் பின்னால் இருக்கும் விவரங்களை நம்மால் தெரிஞ்சுக்க முடியலை.
Deleteசுவாரஸ்யமான தகவல் செல்லம்...நன்றி...
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஇரண்டு கதைகளுமே நன்றாய்தான் இருக்கு. முதல் கதை கேள்விப் பட்டிருக்கிறேன்.
ReplyDeleteஇன்னும் இரு கதைகள் இருக்குண்ணு டிடி சொல்றாரே! அது என்னன்னு தெரிஞ்சுக்கனும்.
Deleteஅறிந்ததுதான். இருந்தாலும் கூடுதலாக செய்திகளை அறிந்தேன்.
ReplyDelete