Friday, October 26, 2018

முக்திதாம் மந்திர், நாசிக் - ஷீரடி பயணம்

ஷீரடிக்கு வர்றவங்கலாம் இந்த முக்திதாம் கோவிலுக்கு போகாம இருப்பதில்லை. மகாராஷ்டிராவில் உள்ள முக்கியமான மாவட்டம் இந்த நாசிக். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்தபோது இந்த இடத்தில்தான் தங்கி இருந்ததா சொல்லப்படுது. இங்கதான் லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததா சொல்லப்படும் இடமும் இதுதான். பண்டைய காலத்தில் இந்த இடம் நாசிகா என அழைக்கப்பட்டதாம். நாசிகா என்றால் மூக்கு என சமஸ்கிருதத்தில் பொருள்படுமாம். மேலும், இந்த ஊருக்கு சிறப்பு என்னன்னா,  12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கும் நான்கு ஊர்களில் நாசிக்கும் ஒன்று.  மற்ற மூன்று ஊர்கள் ஹரித்துவார், அலஹாபாத் மற்றும் உஜ்ஜைனி. ஆனா கும்பமேளா 3 வருடங்களுக்கு  ஒருமுறை இந்த 4 ஊர்களிலும் சுழற்சி முறையில்  நடக்கும். தினமும் 10 மணிக்குமேல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். அதை நமது அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். வேறு ஒரு சிறப்பு என்னவென்றால்  இந்திய அரசாங்கத்தின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகம் இங்குதான் இருக்கு. சரி, நாம் இனி நமது ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்...
ஷீரடியிலிருந்து பயணிப்பவர்கள் காலை சிற்றுண்டியை ஷீரடியில் முடித்துக்கொள்வது நல்லது. ஏன்னா ஷீரடியை விட்டு தாண்டினா வழியில் இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுவகைகள் கிடைப்பது கஷ்டம். சாமியாரா போனாலும் நமக்கு சோறுதான் முக்கியம்!! ஷீரடியை சுற்றிலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மக்கள் அதிகமா வர்றதால அங்க தென்னிந்திய உணவுவகைகள் தாராளமாக கிடைக்கும். அதேசமயம் நமக்குத்தான் இங்க எப்பவும் இந்த உணவுவகைகள் கிடைப்பதால் நாங்கள் வடஇந்திய உணவுவகைகளான  கடாய் சோயா, மேத்தி சன்னா பனீர், பீட்ரூட் குரூமா, ஜுச்சினி கடலைப்பருப்பு தால், ராஜஸ்தானி ஆலூ, வெஜ் கொல்ஹாபுரி, சில்லி குருமா போன்ற போஜ்புரி, பஞ்சாபி ராஜஸ்தானி உணவகைகளை ஒரு பிடிபிடித்தோம். காலைஉணவு முடிந்ததும் ஷீரடியில் இருந்து கிளம்பினோம் இங்கிருந்து சுமார் 90 கிமீ தொலைவில் இருக்கிறது நாசிக் . இந்த முக்திதாம் கோவில் நாசிக் மெயின் ரோட்லயே இருக்கு .
இங்கே பெரும்பான்மையான கோவில்களில் நம்ம ஊர் மாதிரி சிறப்பு கட்டண வரிசை கிடையாது என்பது ஆறுதலான விஷயம். கோவிலின்முன் சிறிய பஜார் இருக்கு. இது வழிபாடு மற்றும் சுற்றுலா தலம் என்பதால் இங்க பலதரப்பட்ட வியாபாரங்கள் நடக்குது. சமோசாவிலிருந்து சாணைபிடித்த கத்திவரை  இங்க விக்குறாங்க. நாங்க சென்ற சமயத்தில கூட்டம் அவ்வளவா இல்லை. 
இதுதான் நுழைவாயிலை கடந்து கோவிலுக்குள் வரும் மெயின் ஹால்.  இந்த கோவிலைப்பத்தி சொல்லணும்னா, இது மிக புராதானமான நாசிக் நகரில் கட்டப்பட்ட புதிய கோவில் என்று சொல்லலாம். 1971ம் ஆண்டு நாசிக்கிலுள்ள ஸ்ரீஜெய்ராம்பாய்  பயட்கோ (சவுகான்) என்னும் தொழில் அதிபரால் கட்டப்பட்டது. இதற்கு ஓவியம் வரைந்தவர் பிரபல ஓவியர்(மறைவு) ஸ்ரீ ரகுபிர் முல்கோன்கர் ஆவர்.  நாசிக் மெயின் சிட்டியிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கு இந்த கோவில். இந்த கோவில் இந்தியாவிலுள்ள அனைத்து ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில தரிசிக்கும் அமைப்பில் கட்டி இருக்காங்க. சுருக்கமா சொல்லப்போனா கடவுளர்களின் அணிவகுப்பே இங்க இருக்கு. எல்லா கடவுள்களின் உருவசிலைகளும் இங்க இருக்கு.
முழுவதும் வெள்ளை மார்பிளால் கட்டப்பட்டிருக்கு இக்கோவில்.  சூரிய ஒளியில் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்கு. இங்க முக்கியமான விஷயம் என்னன்னா சுத்தம். கோவிலின் சுற்றுப்புறமும், உள்ளேயும் மிக சுத்தமாகவும் அழகாகவும் வச்சிருக்காங்க. நம்மூர் மாதிரி நாம போனதும் தீபாராதனை இல்லை. பூசாரி இல்லை நாமளா மலர்களை வாங்கி அங்கிருக்கும் பாதங்களில் சமர்ப்பித்து வரவேண்டியதுதான்!! உள்ளயும் மார்பிளால அழகாக கட்டி இருக்காங்க. இந்த கோவிலில் கட்டப்பட்டுள்ள மார்பில் கற்கள் ராஜஸ்தானிலுள்ள மக்ரனா என்னும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கட்டியதாக சொல்லப்படுகிறது. அதுப்போல இதைக்கட்டிய சிற்பிகள்கூட ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்லப்படுது. இங்க முக்கியமான அம்சம் என்னன்னா நாம கோவிலினுள் நடத்துகிட்டே பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் படிச்சுக்கிட்டே செல்லலாம். இங்குள்ள சுவற்றில் கீதையை எழுதிவச்சிருக்காங்க. என்ன ஒண்ணு அதை படிக்க ஹிந்தி தெரியணும் அவ்வுளவுதான். நமக்குத்தான் ஹிந்தி நஹி மாலும் ஆச்சே!!
ராமாயண காட்சிகளை இங்க சிற்பவடிவமா வச்சியிருக்காங்க. ஏன்னா ராமர் வனவாசத்தில் இந்த இடத்தில்தான் அதிக நாட்கள் தங்கி இருந்ததா சொல்லப்படுது . அதுபோல கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. நாங்கள் சென்ற நேரம் அதிகாலை மற்றும் கூட்டம் இல்லாத சமயம் சுற்றிலும் கண்காணிப்பு கேமரா கூட வச்சிருக்கிறாங்க. இருந்தாலும் சுட்டுட்டேன். 
நம்மூரில் நவகிரக சந்நிதிகளை எண்ணெய் தேய்த்து விளக்கேற்றி அழுக்கைடைய வைத்திருப்போம். ஆனா இங்க நவகிரகங்கள் பளிச்சோ பளீச்ன்னு கலர்புல்லாக வீற்றிருக்கிறார்கள். அடுத்து நம்ம தமிழ் கடவுள் முருகன் சிலையும், அனுமன் சிலையும் தனித்தனியே இருக்கு. ஆனா முருகர் சிலை இருக்கிற சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதி இல்லை என போர்டு வச்சிருக்காங்க. காரணம் என்னன்னுன்னு எங்களை கூட்டி சென்ற வழிகாட்டி  அண்ணாவிடம் கேட்டபோது, மராத்தியில் நம்ம முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததுனால  கார்த்திக்ன்னு பெயராம். நோ ராஜி! இது நடிகர் கார்த்திக் இல்ல. கண்ட்ரோல் யுவர்செல்ப்) அவரை கார்த்திக் சுவாமின்னு சொல்றாங்க. அவரு இங்கே பேச்சுலர் கடவுளாம்ப்பா. அடப்பாவிகளா! எங்க ஊர்ல பிள்ளையார் பேச்சிலர். இங்க எங்களுக்கு தெரியாம அங்க ரெண்டு கட்டி ஆண்டு அனுபவிக்குறார். அங்க பேச்சுலர்ன்னு சொல்லிக்கிட்டு இங்க ரெண்டை கட்டி ஆண்டு முருகர் அனுபவிக்குறார். சாமிகளே! இப்படி போங்காட்டம் ஆடினா, மனுசப்பயலுகளும் அப்படிதான் வீட்டை ஏமாத்துவானுங்க!! கார்த்திக்சுவாமியை வழிபடுபவர்கள்லாம் நம்மூர்ல ஆஞ்சநேய பக்தர்கள் மாதிரி பேச்சுலராதான் இருப்பாங்களாம். அதனால பெண்களுக்கு அனுமதி இல்லையாம் .
ஆனா நம்மூர்ல தாயை போல் மனைவி அமையணும்னு   ஆலமரத்தடியில பேச்சுலரா இருக்கிற விநாயகரை சுத்தி எத்தனை பொண்ணுங்க?!நமக்கு தெரிந்து சிவபார்வதிக்கு விநாயகரும், முருகனும் மட்டுமே பிள்ளைகளா சொல்லப்பட்டு வருது.  ஆனா இங்க விநாயகருக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் அவருக்கு அசோகசுந்தரின்னும் சொல்றாங்க.
வட இந்தியாவில் இன்னும் சில இடங்களில் சிவனுக்கு, வினாயகர், முருகர் மற்றும் ஐயப்பன் என மூன்று மகன்களும், அசோகசுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி என்று அழைக்கப்படுற மானஸா என மூன்று மகள்களும் இருப்பதாக சொல்லப்படுது . ஸ்ஸ்ஸ் அபா, இப்பவே கண்ணை கட்டுதே!
இடத்துக்கு இடம் மாற்றங்கள் சகஜம். அதுமாதிரி உண்மையான கதையை அந்த இறைவன்தான் அறிவார். சரி அடுத்ததா இங்க இமயமலை பர்வத காட்சி சிவ பரிவாரங்களுடன் இருப்பதை தத்ரூபமா வடிச்சிருக்கிறாங்க.
எல்லா சிலைகளையும் காட்சிகளையும் மார்பிளில் தத்ரூபமா வடிமைத்துள்ளனர். அதுமாதிரி 12 ஜோதிர்லிங்கங்களும் ஒரே இடத்தில தரிசிக்கும் வண்ணம் இங்க அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கடவுள்கள் அனைவரின் சிலைகளும் இங்க செதுக்கப்பட்டிருக்கு. 
12  ஜோதிர்லிங்கங்களும் ஒரே வரிசையில்...

இராமர், லட்சுமணன், சீதாதேவி சிலைகளும் மார்பிள் கற்களில் அலங்காரங்களுடன் பார்பதற்கே நேரில் நிற்பதுபோல அவ்வளவு அழகு!!
இந்த முனிக்கூட்ட சிலைகளை பத்தி சரியா தெரியலை. ஆனா அவர் ஒரு சிவபக்தர் என்றும் அவருக்கென்று தனியா வரலாறு இருக்க்குன்னும், அவர்பெயர் மச்சேந்திரநாத் என்றும் அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னார் அவர்பக்கத்தில் கோரக்நாத் என்றும் ஒரு முனிவர் இருப்பதாக ஒருவர் சொன்னார். நம்மூரில்கூட கோரக்கரை வடநாட்டிலிருந்து வந்த சித்தர் என சொல்லுவாங்க. அவர்பெயர் கோரக்நாத் என்பதாகும். அதுபற்றி நம்முடைய குறண்டி கோவில் பதிவில் விரிவாக எழுதியுள்ளேன். இவர்கள் வடநாட்டு சித்தர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லலாம். தெரிஞ்சுக்குறேன்.
கும்பமேளா சமயத்தில் இங்க தங்கி இருந்து தரிசிக்க குறைந்த கட்டணத்தில் அறைவசதியும் உண்டு. அதேப்போல குறைந்த கட்டணத்தில் சாப்பாடும் இங்க உண்டு. காலையில் 6 மணிக்கே நடைதிறந்துவிடுவார்களாம் பின்னர் பகல்முழுவதும் திறந்தே இருக்கும்.  நம்மூர் மாதிரி 12 மணிக்கு நடையடைப்பதில்லை. இரவு 7 மணிக்கே சில சில இடங்களை சாத்தி விட்டு 8 மணிக்கு முழுவதுமா நடையடைத்துவிடுவார்கள் . விஷேச நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் சென்றால் 15 நிமிடங்களுக்குள் எல்ல தரிசனமும் முடித்துவிடலாம் .
எல்லா கோவில்களைப்போல இங்கேயும் கடைவிரித்திருக்கிறார்கள். அதே பேரம், அதேபொருட்கள்... ஆனா என்ன ஒரு வித்தியாசம் வீட்டுக்கு வந்ததும் அக்கம்பக்கத்தினரிடம் இது நாசிக்கிலுள்ள முக்திதாம் கோவிலில் வாங்கியது என பெருமை அடிச்சுக்கலாம்!!
கோவிலை விட்டு வெளியில் வந்தா  சாப்பிட எல்லாவகையான உணவுப்பண்டங்களும், பழம் நம்மூர் மாதிரி சமோசா என எல்லாமே கிடைக்குது கோவிலைவிட்டு கிளம்பும் நேரம் மதியம் ஆகிவிட்டதால் வழிநெடுக்க சாப்பிட நல்ல ஹோட்டல் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே சென்றோம் .
ஒரு இடத்தில பார்க்கிங் வசதியுடன் ஒரு ஹோட்டலில் சவுத் இந்தியன் புட்ன்னு போட்டிருந்ததும் அங்க போய் உணவை ஒரு பிடிபிடித்தோம். எல்லாவற்றிலும் இனிப்புச்சுவை ரசத்தில் உட்பட சாப்பாடு வித்தியாசமாக இருந்தாலும் விலை ஹை லெவல். வெளியூரிலிருந்து வருபவர்களுக்காகவே கட்டப்பட்ட ஹோட்டலாக  இருக்கவேண்டும் போல! எல்லா கலரிலும், எல்லாவித உடையமைப்பிலும் பலதரப்பட்ட மக்கள் கூட்டத்தினை அங்க பார்க்கமுடிந்தது வேறு என்ன செய்ய?! விலை அதிகம்ன்னாலும் சாப்பிட்டுவிட்டு அடுத்து நாம எங்கு போறோம்ன்னு கேட்டபோது   கபாலேஸ்வர் சிவன் கோவில் ன்னு சொன்னார். அங்க என்ன விசேசம்ன்னு கேட்டதுக்கு நந்தி இல்லாத ஒரே சிவன் கோவில் இதுதான் எனக்கூறினார். சரி, அவர் ஏன் நந்தி இல்லாம இருக்கிறார்?! என்ன கதையாக இருக்கும் என யோசித்துக்கிட்டிருக்கும்போதே வண்டி வேகமா கபாலேஸ்வரர் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

மீண்டும் அடுத்த வாரம் கபாலேஸ்வரர் கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன்  
நன்றியுடன்
ராஜி 

Thursday, October 25, 2018

எங்கே மனிதம்?! - சுட்ட படம்

விதவிதமான உணவுகளை போன் பண்ணா வீட்டுக்கே கொண்டு வரும் ஸ்விக்கி ஆட்கள் கையேந்தி பவனில்.. 
தன்னை அழித்துக்கொண்டு, மற்றவர்களை அழிக்கும் சிகரெட்டுக்கு தற்கொலைப்படைன்னு பேர் சொல்லலாமா?!
நார்வே நாட்டில் தங்கள் வீட்டில் விளைந்த பொருட்களை தமக்கு போக மீதமானதை இப்படி வச்சிடுவாங்களாம். தேவைப்படுறவங்க எடுத்துக்கலாமாம்!! நல்ல பழக்கம்ல்ல!!

எங்கே மனிதம்?! இதுக்குதான் நல்லதே செய்யக்கூடாது...

வாட் எ டெக்னாலஜி?! 

நீதான் தைரியமான ஆளாச்சே! இறங்கிதான் பாரேன்!!
நான் பை மாட்டுனதுலா A,D,F ஸ்டைல்லதான்.. நீங்க?!
எங்கேயும் காதல்....
ஆயுத பூஜை அட்ராசிட்டி...

எம்- மகன்
கடவுள் வாழ  கோவிலை கட்டியவரின் நிலை.. இதற்குதானே ஆசைப்பட்டாய்
அதானே எறும்பு எதுக்கு கடிக்குது?!

பக்கம் பக்கமா பதிவாக்கி, உங்களை படிக்க வச்சு டயர்டாக்குறேன்ல! அதான் ஒரு மாறுதலுக்கு... சுட்ட படங்கள்..

நன்றியுடன்,
ராஜி

Wednesday, October 24, 2018

அன்னம் பகிர்ந்திடு - ஐப்பசி அன்னாபிஷேகம்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்....  தானத்தில் சிறந்தது அன்னதானம், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.... அன்னமிட்ட வீட்டில் கண்ணம் வைக்காத... அன்னையை பழித்தாலும் அன்னத்தை பழிக்காத...ன்னு உணவின் பெருமையை சொல்லிச்செல்லும் பழமொழிகள் ஏராளம்.   "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” ன்ற சாமவேதத்திலிருக்கும்  வரியின் பொருள்   எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கு என்பதாகும். உணவே உலகில் வாழும் அத்தனை ஜீவராசிக்கும் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி உணவுன்னு சொல்லலாம்.  அன்னமானது பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். பராசக்தியின் அம்சமான பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாக காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.  
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

 னைத்து உயிர்களுக்கும் படியளக்கும் ஆண்டவனுக்கே  அமுது படைக்கும் விழாதான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் மாலை வேளையில்   சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகின்றது.


பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் இருக்குறதால  அமிர்த கலைன்னு சொல்வாங்க. அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்னிக்கு அறுவடையான புது நெல்லை அரிசியாக்கி சோறாக்கி  சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.  சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது இடப்பாகத்தில் கொண்ட அந்த சிவனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.


தில்லையில்  தினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் செய்து, சுவாமிமேல் சாற்றிய அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்ன்னு பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை. அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்.  எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். லிங்க ரூபம் நீள் வட்ட வடிவம். அரிசியும் நீள் வட்டவடிவம்.  அதனால், அரிசி சிவரூபம் என்பர். அன்னாபிஷேகத்தன்று இறைவன்மேல் சாற்றப்படும் அனைத்து பருக்கைகளும் சிவனின் அம்சம். அதனால், அன்னாபிஷேகராக காணப்படும் சிவனை தரிசித்தால் கோடானு கோடி சிவனை ஒருசேர தரிசித்தற்கு சமம். 

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்னுதான் சாதம், சோறுன்னு சொல்லப்படும் வெறும் அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையது. ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமா விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே நாம் அனைவரும். சிவனும், நாமும் வேறல்ல! ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிந்து, நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி, நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிசேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி சிவனுக்குள் தன்னை   அடைக்கலமாகின்றது.  ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பதை அன்னம் நமக்கு உணர்த்துகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

ஐப்பசி பௌர்ணமியன்ன்னிக்கு காலையில சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.  பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு  சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகனம் எனப்படுது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறும்.
பின் இரண்டாம் காலம்வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக சிவன் காட்சி தருவார்,   இரண்டாம் காலம் பூஜை முடிந்தபின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.  மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ, கோவில் கிணற்றிலோ கரைக்கப்படும்.  எம்பெருமானின் அருட்பிரசாதம் கரையேறி வரமுடியாத நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்கனும்ன்னு இந்த மாதிரி செய்வது வழக்கமாம்!

எல்லா சிவன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கும். அதிலும் குறிப்பா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் இருக்கும் லிங்கத்திருமேனி பெரியதாகியதால் காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிடும். சோழநாடு சோற்றுடைத்துன்னு சொல்றதுக்கு தகுந்தமாதிரி  அறுவடையான புத்தம்புது அரிசி,  மூட்டை மூட்டையாக வந்து குவியும். நெற்களஞ்சியமென பேரெடுத்த தஞ்சை, அதன் சுற்றுவட்டார உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக கொடுப்பாங்க. அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும்., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து சேர சேர ஐயனின் திருமேனிமேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படும். எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படும்.

இதேமாதிரி, குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் கோவிலிலும் அன்னாபிஷேகம் சிறப்பா நடக்கும்.  பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடத்தி, பிறகு, எப்போதும்போல  மற்ற பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.  மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாரதனை நடக்கும். இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின்மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக்கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் பூஜிப்பான். இத்தலத்தின் சிறப்பு இதுதான்.  

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவதுதான் அன்னாபிஷேகம் எனப்படும். இப்பலாம் பலக்கோவில்களில், தங்கள் பக்திக்கும் கற்பனை சக்திக்கும் தகுந்தவாறு, அன்னம் சாற்றி பழங்கள், பட்சணங்கள் கொண்டு இறைவனின்  முகத்தை கொண்டு வருகின்றனர், இன்னும் சிலகோவில்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும்  படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்று பெரும்பான்மையான சிவன் ஆலயங்களில் அன்னதானம் சிறப்புற நடக்கும். இந்நாளில் உபவாசம் இருந்து, மகாபிஷேகம் செய்து, பின் சிவனுக்கு அன்னாபிசேகம் செய்த பிரசாதத்தை உண்ணும்போது என்றென்றும் பிடி சோற்றுக்கு அல்லலுறும்  நிலை உண்டாகாது.   ஒருமுறை அனைத்து உயிருக்கும் அன்றைய தினத்துக்கான உணவை சேர்ப்பிக்க வேண்டி சிவபெருமான் தயாரானபோது,அவருடன் விளையாட எண்ணிய பார்வதிதேவி, அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு எறும்பினை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து முந்தானையில் முடிந்துக்கொண்டாள். அனைத்து உயிருக்கும் சேரவேண்டிய உணவினை ஏற்பாடு செய்துவிட்டு சிவபெருமான் திரும்பினார்.
எல்லா உயிருக்கும் உணவினை சேர்பித்தாகிவிட்டதா என ஐயனிடம் பார்வதிதேவி வினவ, ஓ படியளந்தாகிவிட்டதென சிவபெருமான் பதிலுரைக்க, இதோ இதிலிருக்கும் இந்த எறும்புக்கு?! என்றவாறு முந்தானையில் முடிந்திருந்த டப்பாவினை எடுத்து காட்டினாள். திறந்து பார் என சிவபெருமான் சொல்ல, அன்னை டப்பாவை திறந்து பார்க்க, அதிலிருந்த எறும்பு ஒரு பருக்கை சாதத்தை சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. எறும்பை டப்பாவினுள் அடைத்த குற்றத்திற்காக பார்வதிதேவி பூமியில் பிறப்பெடுத்ததெல்லாம் தனிக்கதை. அப்ப, இன்னிக்கு பலபேர் பட்டினியாய் இருக்காங்களே! சாமி ஏன் உணவு கொடுக்கலைன்னு விதண்டாவாதம் செய்யலாம். ஆனா, சிவம் வேறில்லை, நாம வேறில்லை. கடவுளே நாம். நாமே கடவுள். வசதி, வாய்ப்பு இருக்க நாமதான் மத்தவங்களுக்கு கொடுக்கனுமே தவிர, புலியாடை உடுத்தி, சாம்பல் பூசி, உடுக்கையுடன் கயிலையிலிருக்கும் சிவபெருமான்தான் வரனும்ன்னு இல்ல.  இதுக்குதான் தெய்வம் மனுஷ ரூபேன ன்னு சொல்லுறது.
இறைவனுக்கு இந்த அன்னாபிஷேகம்  செய்விக்கும் முறை ஏழாம் நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே இருக்குன்றதுக்கு சான்று இருக்கு. திருஞானசம்பந்தருக்கு கல்யாணம் கட்டி கொடுக்க தன்னுடைய பெண்ணான பூம்பாவை அருமை பெருமையாய் வளர்த்து வந்தார் மயிலாப்பூரில் வசிக்கும் சிவநேசன். தனது ஏழாவது வயதில் தோழிகளுடன் நந்தவனத்தில் பூப்பறிக்க சென்ற பூம்பாவையை நாகம் தீண்டி இறந்தாள். அவளுடைய திருஞானசம்பந்தரிடம் சேர்ப்பிக்க வேண்டி அஸ்தியை  பத்திரப்படுத்தி வச்சிருந்தார் சிவநேசன். சில வருடங்கழித்து அந்த ஊருக்கு திருஞானசம்பந்தர் வந்தார். விவரங்களை சொல்லி அஸ்தியை அவரிடம் ஒப்படைத்தார் சிவநேசன்.


மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
என பதிகம் பாடி பூம்பாவையை 12 வயது  குமரியாய் உயிர்பித்தார்.  தனது மகளை உங்களுக்காகத்தான் வளர்த்து வந்தேன். அவள் இறந்தபின் ஈமக்காரியங்களை செய்ய அஸ்தியை உங்களுக்காக பாதுகாத்து வந்தேன். நீயே! என் மகளுக்கு மணாளன். நீயே என் பெண்ணை மணக்க வேண்டுமென  சிவநேசன் திருஞானசம்பந்தரை வேண்டி நிற்க, கடவுளும், தந்தையும் மட்டுமே உயிர் கொடுக்க முடியும். நான் கடவுள் அல்ல. உயிர் கொடுத்ததால் பூம்பாவைக்கு தந்தை முறையாவேன் என திருமணம் செய்ய மறுத்து விலகினார். அதன்பின் பூம்பாவை இறைத்தொன்றாற்றி இறைவனடி சேர்ந்தார். பூம்பாவை பதிகத்தின் வழியே ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னமயே அன்னாபிஷேக செய்யும் வைபவம் நடந்துக்கிட்டிருந்ததை அறியலாம்.
இந்த நாளிலிருந்து தினத்துக்கு சமைக்கும்போது ஒரு பிடி அரிசியை எடுத்து தனியா சேமிச்சு வரனும். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும்போது இப்படி சேமிச்சு வச்சிருக்கும் அரிசியை கொண்டு வந்து சமர்பிக்கலாம். இதுக்கெனவே, பிடி அரிசி உண்டியல்ன்னு வச்சிருக்காங்க. இது அடியவர்களுக்கு பசியை போக்க உதவுது. இப்படி மைலாப்பூருக்கு வரமுடியாதவங்க, அருகிலிருக்கும் சிவன் ஆலயங்களுக்கு கொடுத்துடலாம். இல்லன்னா, எதாவது பள்ளி, ஆதரவற்ற இல்லத்துக்கோ கொடுப்பதை வழக்கமா வச்சுக்கலாம்.
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து 
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான சர்வ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் 

அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து,  அனைத்து உயிர்களும் பசி, பிணி, பஞ்சத்தில் அல்லலுறாமல் இருக்க எம்பெருமானை வேண்டிக்கொள்வோம்.
நன்றியுடன்,
ராஜி

Tuesday, October 23, 2018

உங்கள் சமையல் திறமையை சபையேற்ற ஒரு வாய்ப்பு - கிச்சன் கார்னர்

வெண்டைக்காய்ன்னா எல்லாருக்கும் தெரியும். இதுக்கு இங்க்லீஷ்ல லேடீஸ் பிங்கர்ன்னு பேரு. இது எத்தியோப்பியாவிலிருந்து வந்தது.  இந்த வெண்டைக்காயில் வைட்டமின் ஏ,பி,சி,ஈ,கே இருக்கு. அதில்லாம, கனிமங்கள், கால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் இருக்கு. வழவழப்பான நார்ச்சத்து இருக்கு. அதனால் வெண்டைக்காயை சூப், பொரியல், சாம்பார், புளிக்குழம்புன்னு செஞ்சு அடிக்கடி சாப்பிடலாம். பச்சையா சாப்பிட்டா இன்னும் நல்லது. 
வெண்டைக்காயிலிருக்கும் வழவழப்பான நார்சத்து, செரிமானத்துக்கு உதவி, பிரச்சனையில்லாம மலங்கழிக்க உதவும்.  அதனால், வயிற்று பொருமல், தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், மூலம் மாதிரியான ஏராளமான வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாகுது.  அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுது இந்த நார்ச்சத்து. வெண்டைக்காயிலிருக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், சான்தீன், லூட்டீன் மாதிரியான ஆண்டி ஆக்சிடெண்டுகள் இருக்கு. இவைலாம் கண்பார்வை தெளிவா வச்சுக்க உதவுது.  கண் புரை உட்பட பல கண் பிரச்சனைக்கு வெண்டைக்காய் தீர்வாகுது.
இதிலிருக்கும் அதிகப்படியான வைட்டமின் ஏவும், ஆண்டி ஆக்சிடண்டும் சரும பிரச்சனைகளை போக்குது. முகப்பரு, தழும்பு, வறட்சி மாதிரியான பிரச்சனைகளை போக்கி முகம் பளபளப்பா இருக்க உதவுது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குது. ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். நம்ம உடம்பிலிருக்கும் சோடியத்தை வெண்டைக்காயிலிருக்கும் பொட்டாசியம் சமப்படுத்துறதால, உடலிலிருக்கும் நீர்ச்சத்து சமநிலைப்படுத்தப்படுது. ரத்தக்குழாய்கள் சீராய் வேலை செய்ய வெண்டைக்காய் உதவுது. அதில்லாம, இதயக்குழாய்களின் மீதான இறுக்கத்தை குறைப்பதால் இதய சம்பந்தமான பிரச்சனை வராம தடுக்கப்படுது. முக்கியமா ரத்தம் உறைதலை சமப்படுத்தி, தமனிதடிப்பு ஏற்படாம தடுக்குது.
எல்லாத்துக்குமே இருவித குணங்கள் உண்டு. அது வெண்டைக்காய்க்கும் உண்டு. இம்புட்டு நல்லது செய்யுற வெண்டைக்காயின் அதிகப்படியான ஆண்டி ஆக்சலேட் பித்தக்கல் மற்றும் சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்தும். அதேப்போல வெண்டைக்காயை வதக்குவதால் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். அதனால், கொழுப்பு சத்தின் அளவை சீராய் வைக்க எண்ணெயில் வதக்குறதை ஒதுக்கிட்டு சாம்பார், சூப், மாதிரி சமைச்சு சாப்பிடலாம். தப்பில்ல. இன்னிக்கு வெண்டைக்காய் வச்சு ஒரு புளிக்குழம்பு செய்றது எப்படின்னு பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
காரப்பொடி
உப்பு
புளி
எண்ணெய்

அரைக்க..
சின்ன வெங்காயம்
தேங்காயம்
பூண்டு
சீரகம்

வெண்டைக்காயை கழுவி, துணியால் ஈரம்போக துடைச்சு ஒரு இஞ்ச் நீளத்துக்கு வெட்டிக்கனும். வெங்காயம், தக்காளியை பொடியா நறுக்கிக்கனும், புளியை ஊறவச்சுக்கனும்.
வெட்டி வச்சிருக்கும் வெண்டைக்காயை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கனும். கலர் மாறிடாம பார்த்துக்கோங்க.
பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிச்சதும் பூண்டை போட்டு வதக்கனும்.
அடுத்து வெங்காயத்தை போட்டு வதக்கனும். வெங்காயம் சிவந்ததும் அடுத்து தக்காளியை சேர்த்து நல்லா வதக்கனும்.

அடுத்து தேவையான அளவுக்கு காரப்பொடி சேர்த்துக்கனும், கூடவே உப்பு சேர்த்து மிளகாய்தூள் வாசனை போகும்வரை வதக்கனும். 
மஞ்சப்பொடி சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்.
குழம்பு கொதிக்குறதுக்குள் அரைக்க கொடுத்திருக்கும் தேங்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயத்தை அரைச்சுக்கனும்.


குழம்பு கொதிச்சதும் புளித்தண்ணியை சேர்த்து கொதிக்க விடனும். 
புளித்தண்ணி பச்சை வாசனை போனதும்,. அரைச்சு வச்சிருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி கொதிச்சதும், வதக்கி வச்சிருக்கும் வெண்டைக்காயை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினா ஹோட்டல் ஸ்டைல்  வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி.


தேங்காய் விழுதை அரைக்கும்போது, கூடவே வறுத்த வேர்க்கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சா, குழம்பு திக்கா, இன்னும் சுவையா, வாசனையா இருக்கும்.

விதம் விதமா சமைப்பவரா நீங்க?! எப்படி நல்லா சமைச்சாலும் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லாம கட்டுன சுவத்துக்கு கலவை அடிக்குற மாதிரியான புருசனை கட்டிக்கிட்டு பாராட்டுக்கு ஏங்குபவரா நீங்க!  உங்க திறமையை பலர் பாராட்டும்படி செய்யும் வாய்ப்பினை நம்ம வேலூர் ஹலோ எஃப்.எம்  ஏற்பாடு செஞ்சு கொடுக்குது. வரும் சனிக்கிழமை 27/10/2018 அன்னிக்கு லட்சுமி கார்டன்ல மகளிருக்கான நிகழ்ச்சி நடக்குது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வருவாங்க. அனுமதி இலவசம். வாங்க, வந்து கலக்குங்க தோழி’ஸ்

நன்றியுடன்
ராஜி