Showing posts with label கொண்டாட்டம். Show all posts
Showing posts with label கொண்டாட்டம். Show all posts

Tuesday, January 01, 2019

கனவு நனவாகும்படி பிறக்கட்டும் புத்தாண்டு

இந்த புத்தாண்டுக்கு பிறகு என்ன பண்ணலாம்?! என்னலாம் பண்ணக்கூடாதுன்னு இந்நேரத்துக்கு  எல்லோரும் ஆயிரம் லிஸ்ட் போட்டு வச்சிருப்பீங்க. எப்படியும் அதுலாம் நாலு நாளைக்கு மெனக்கெட்டு கடைப்பிடிச்சு, அப்புறம் காத்துல விட்டுடப்போறீங்க. அதனால, அதிகாலையில் வாக்கிங்க், பகல்ல தூங்கக்கூடாது. உடம்பைக்குறைக்கனும்ன்னு அப்பிடி இப்படின்னு எதுக்கு வீணா புத்தாண்டு சபதம் எடுக்கனும்?! அப்புறமா அதை காப்பாத்த முடியாம தூக்கிப்போடனும்?! அதனால, என் வசதிக்காக இந்த வருசம் எந்த புத்தாண்டு சபதமும் எடுக்க போறதில்லை:-) 

”ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”ன்னு கருப்பு வெள்ளை காலத்துல இருந்து சொல்லியே திருந்தாத நாம, “என்னைத் தவிர வேறென்ன கிழித்தாய்”ன்னு காலண்டர் கேட்குற மாதிரி வாட்ஸ் அப் மெசேஜ் கேட்டா திருந்திட போறோம்?! ம்ஹூம் இப்படிலாம் சொல்லப்படாது எதாவது சபதம் எடுத்தே தீரனும்ன்னு சொல்லுறவங்களுக்காக...,

1. மாமாவை தூக்கிப்போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!(மாசத்துக்கு ரெண்டு ரிமோட்டு வாங்குறது கொஞ்சம் ஓவர்தான்)

2.  பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்(ஸ்ஸ்ஸ் அப்பாடான்னு பெருமூச்சு விடுறது யாரு?!)

3. டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி சொல்லியே பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.(அப்படியே பதிவுக்காக காலையில் எல்லா சேனல்லயும் ஆன்மீகம் நிகழ்ச்சி பார்த்து சாவடிக்காதம்மான்னு பிள்ளைங்க சோல்லுறது கேக்கலைதானே?!)

5.  மாமாவை, பசங்களை படுத்தாம ப்ளாக் பக்கம் ஒதுங்கிடனும்.(இப்பயே அங்கதானே இருக்க! சோறுகூட பொங்காம...)

6. அடுத்த புத்தாண்டுக்குள் சபதம் எடுத்துக்குற மாதிரி எதாவது கெட்ட பழக்கத்தை உண்டாக்கிக்கனும். (இப்படிலாம் சொன்னா மட்டும் நம்பளை நல்லவள்ன்னு நம்பிடுமா இந்த ஊரு?!)

7. அப்புறம் 2017க்கு இப்படிலாம் சபதம் போடக்கூடாதுன்னு புத்தாண்டுல சபதம் ஏத்துக்குறேன்(அய்யோடா! அடுத்த வருசம் புதுசா பதிவு போடனும்ல்ல)

போதும்.. போதும்.. மொக்கை போட்டது... ராஜி பிளாக்குக்கு வந்தால் எப்படியும் எதாவது தகவல் சொல்லும்ன்னு நம்பி வரும் நம் மக்களுக்காக சில தகவல்கள்:

இப்போ நாம யூஸ் பண்ணுற காலண்டர் முறை ஏசு பிறப்பதற்கு முன்னாடி இருந்தே இருக்கு. கிரேக்க, ரோம காலண்டர் முறையே நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் முறைன்னு என் ஆராய்ச்சில கண்டுப்பிடிச்சிருக்கேன். ப்ளீஸ் நம்புங்கப்பா! நம்ப மாட்டீங்களே!! சரி, சரி, படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஜனவரி மாதம், “ஜானஸ்”ன்ற ரோமக் கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமாரியர்களின் திருவிழாவான “பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான ”மார்ஸ்” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம்,  ”ஏப்ரலிஸ்” என்ற லத்தீன் மொழில இருந்து வந்தது.  “திறப்பது” என்பது இதன் அர்த்தம். முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட தொடக்கமா இருந்துச்சாம். 15 நூற்றாண்டுல வாழ்ந்த போப்பாண்டவர் ஒருத்தர்தான் ”ஜனவரி”யை  புத்தாண்டு தொடக்கமா மாத்தினதா சொல்றாங்க. இதை ஐரோப்பியர்கள் மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினமா கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க.

மே மாதம்,  ”மேயஸ்”ன்ற பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான ”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.  அதுமட்டுமில்லாம, அப்போலாம்  மாதங்களின் நாட்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு, அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார். அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.  இதனால, காலண்டர் மொத்தமும் மாற வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு போய்க்கிட்டிருந்துச்சு.  ”அகஸ்டிஸ் சீசரி”ன் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,  பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு பின்னாடிதான் நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் உருவாகிச்சு. இந்த காலண்டருக்கு பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் ன்னு படிச்சவங்க சொல்றாங்க!
இனி, கவிதை பிரியர்களுக்காக...,


பனிரெண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை..,
புத்தாண்டு ஆரம்பமாம்!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி.,
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப்படுகிறதாம்!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மதுவிலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவையெல்லாம்  இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னுமொரு 365
கையில் பீர் பொங்கினால்தான் பொங்குமாம்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினில்தான்
 நிறையுமாம் அங்கயர்க்கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகுமாம்
 அன்பின் தூதுவர்களுக்கு!!
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகளைக்
கண்டு தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்!!


போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிகள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,



இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு

பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும்போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!
ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்புதான் வருமென்று...,

ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..
அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,

அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???

காலண்டரை தவிர, வேற எதும் மாறிடப்போறதில்லை. அதே உருவம், அதே குணநலன், அதே வேலை, அதே அன்பு, அதே அவமானம்....ன்ன்னு எல்லாமே அதேதான் இருக்கப்போகுது. இதுல, காசை கொட்டி கொண்டாட்டம் ஏன்?!  ஆனாலும், எதிர்பார்ப்புங்குறது மனிதர்களின் குணங்களில் ஒன்று. இதுவரைக்கு பட்டதுலாம் போதும். இனியாவது நம்ம நிலைமை மாறிடுமான்னு கஷ்டப்படுறவங்களும், இதுவரை வாழ்ந்தமாதிரியே வரும்  புத்தாண்டிலயும் வாழ்ந்திடனும்ன்னு மகிழ்ச்சியா இருக்கவுங்களும் வேண்டிக்குறாங்க. அதேமாதிரியே எல்லாருடைய கனவுகளும், விருப்பங்களும் நிறைவேறி எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கனும்ன்னு கடவுளிடம் வேண்டிக்குறேன்.
புதிய வருடம்..
புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன்.. 
புதிய முயற்சிகள்
புதிய திருப்பங்களுக்காக,
விருப்பத்துடன்
புதுமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும்,
புத்தம் புதிதாக உதிக்கட்டும்
அனைவரும்
கனவுகளும், நம்பிக்கையும் நிறைவேறட்டும்!!


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுடனும், அப்படியே எனக்கும் நல்லபடியா புத்தாண்டு அமையுமென்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும்..
உங்க
ராஜி

Wednesday, October 18, 2017

தேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுடலாமா?!


என்னதான் சுற்றுச்சூழல் மாசு, வடநாட்டு பண்டிகை, அது இதுன்னு சொன்னாலும் ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம்ன்னு அயல்நாட்டு பண்டிகைகளை  கொண்டாடும்போது வடநாட்டு பண்டிகையை கொண்டாடுவதில் தப்பில்ல. தீபாவளின்னாலே மதம், மொழி, இனம் கடந்து மகிழ்ச்சி கொடுக்கும் பண்டிகை எதுமில்ல. தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர்  இல்ல. தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாம சமண, சீக்கிய மதத்தினரும் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுறாங்க. இப்பலாம் மத்த மதத்துக்காரங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்குறாங்க நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்கிறோம்.  தேசிய ஒருமைப்பாடு எதுல இருக்கோ இல்லியோ கிரிக்கெட், தீபாவளில மட்டும்தான் இருக்குன்னு நான் சொல்வேன்., இனி தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான புராண கதைகளை பார்க்கலாம்...



ஒரு பொருள் இருக்கும்வரை அதன் மதிப்பு தெரியாது. அது இல்லாதபோது தவிப்போம். கதறுவோம்.  அதேமாதிரிதான் வெளிச்சத்தோட அருமை இருட்டில்தான் தெரியும். இருட்டில் தவிக்கும்போது, எங்கிருந்தாவது சிறு வெளிச்சம் வராதான்னு ஏங்கி தவிப்போம். இதுமாதிரியான ஒரு சூழல் தீர்க்கதமஸ்ன்ற முனிவருக்கும் வந்துச்சாம்.   இருள் சூழ்ந்த காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்து வந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.  அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம்  கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத்தான் இருக்கு. இதுலாம் மேலும் அவனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.



இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடி, அடுத்தவர்களையும் மகிழ வைத்தும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்க, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.






மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்கனும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்யனும்.  எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், பூக்களில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புமருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப்பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். தீபாவளி உருவாக இதும் ஒரு காரணம்.... 


நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவதுபோல் கீழே விழுந்தார். மாயக்கண்ணனுக்கு நடிக்க சொல்லியா தரனும்?! இதை பார்த்த சத்தயபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். 
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம்அம்மாநான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,

இனி மற்ற காரணங்களை பார்க்கலாம்....

இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வரும்போது அந்நாட்டு மக்கள் இராமனை வரவேற்பதற்குதங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்ற நாள்ன்னு சொல்லப்படுது...

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும்அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக்கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்த நாள் தீபாவளியாக  கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் சொல்லுது..

சீக்கியர்களின் தீபாவளி...

1577- இல் இத்தினத்தில் தங்கக்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

சமணர்களின் தீமாவளி
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.

  
திபாவளி கொண்டாடும் முறை...

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து. இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன்ன்னா நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.

சகோதரிகளுக்கு பரிசு:

தமிழகத்தில்நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும்அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் . பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் . தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் கங்கா ஸ்நானம் என்று சொல்வதற்கு காரணம்  அன்றைய தினம்அதிகாலையில் எல்லா இடங்களிலும்தண்ணீரில் கங்கையும் எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும் சந்தனத்தில் பூமாதேவியும் புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக ஐதீகம்.

அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம் எல்லா  நீர்நிலைகளிலும் கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி  பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகை. காமத்துக்கு சாத்திரம் எழுதிய  வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் 'யட்ஷ ராத்திரி' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை 'சுகராத்திரி' என்றும் சொல்வதுண்டு. விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.



பட்டாசு வெடிக்குறவங்க கவனமா வெடிங்க. கொண்டாடி மகிழத்தான் பண்டிகை.. அதனால, அடுத்த உயிர்களை காயப்படுத்திடாம கொண்டாடுங்க. கழுதை, மாடு, நாய் வால்ல பட்டாசு கட்டுறதுலாம் வேணாம். அக்கம் பக்கம் சிறு குழந்தைங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்லாம் இருந்தா  பெரிய வெடி வெடிக்குறதா இருந்தா இன்ஃபார்ம் பண்ணுங்க. அதிர்ந்துட போறாங்க... 

பட்டாசாய் கவலைகள் வெடித்து சிதறட்டும், மத்தாப்பாய் வாழ்க்கை ஒளி வீசட்டும், ராக்கெட்டாய் சந்தோஷங்கள் உயரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

Saturday, April 01, 2017

ஏப்ரல் ஃபூல் ஏமாந்த ஃபூல் - முட்டாள் தினம்

மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றுக்கும் தினம் ஒதுக்கி கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாத்துவதையே பழக்கமாய் வைத்திருப்பவர்களுக்காக ‘முட்டாள்கள் தினம்’ கொண்டாடப்படுது. குழந்தைகளால் பெரிதும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் இந்நாள்.முன்பு  ஏப்ரல் 1 அன்று, காலை முதல் மாலை வரை இத்தினத்தை கொண்டாடினர். பின்னர் மதியம் வரை கொண்டாடினர். இந்த மாதம் முழுக்க பிள்ளைகள் கொண்டாடி வருகின்றனர்.
பிரான்சில் முட்டாள்கள் தினத்தன்று ஏமாறுபவர்களின் முதுகில் காகிதத்தில் செய்த  மீனை அவருக்கு தெரியாமல் ஒட்டி  ‘ஏப்ரல் பிஷ்’ என்றழைத்து கிண்டல் செய்வர்.  கனடா, ஆஸ்திரேலியா, சைப்ரஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் வெகுவாய் கொண்டாடப்பட்டு வருது. இந்தியாவில் இப்படி கொண்டாடும் பழக்கமில்லையென்றாலும் மேல்நாட்டு கலாச்சார தாக்கத்தால் இங்கும் கொண்டாடப்படுது. 
இதுமாதிரியான ஒரு தினத்தை கொண்டு வந்ததில் ’பாஸ்வெல்” என்பவருக்கு முக்கிய பங்குண்டு. சில பழங்குடி மக்கள் இத்தினத்தை வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாய் சூரியனை வழிப்பட்டு கொண்டாடப்பட்டனர். பண்டைய காலத்தில் ரோமானியர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தினை ஏப்ரல் 1 தேதிதான் கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய  நாடுகளும் ஏப்ரல் 1 தேதியில்தான் புத்தாண்டை கொண்டாடினர். 1562ஆம் ஆண்டு கிரகோரி என்ற போப்’ஜார்ஜியன்’ என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஏப்ரல் 1 க்கு பதில் ஜனவரி 1 தான் புத்தாண்டு தினமாய் குறிக்கப்பட்டு, இனி புத்தாண்டை ஜனவரி 1 தான் கொண்டாடப்படவேண்டுமென உத்தரவிட்டார். 

இங்கிலாந்தில் இந்த மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏப்ரல் 1யே புத்தாண்டு தினமாய் கொண்டாடினர். மேலும் போப் பின் உத்தரவு போய்ச் சேராத நாடுகள் ஏப்ரல் 1ஐ புத்தாண்டாய் கொண்டாடினர்.  பழைய காலண்டர் முறை மாறி புது காலண்டர் முறை வந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்களென  கிண்டல் செய்தனர்.  காலப்போக்கில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமானது. 
நம்மூர்ல சட்டையில் இங்க் அடிப்பது, காலுக்கு கீழ் பாம்பு இருக்கு, இன்னிக்கு ஸ்கூல் லீவ்ன்னு முட்டாள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். எது எப்படியோ எப்பயாவது முட்டாளாக ஏமாறுபவர்களுக்கு இத்தினம் ஒரு கொண்டாட்டதினம். அனுதினமும் ஏமாறுபவர்களுக்கு?! இந்நாளும் மற்றொரு நாளே!
ராஜி 

Wednesday, January 15, 2014

மாட்டுப் பொங்கல்

      மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மூதாதையர்களுக்கு துணி வச்சு படைக்குறது எங்க ஊர் வழக்கம்.  அதனால அன்னிக்குதான் நாங்க  புது துணிகளை   படைச்சு கட்டுவோம். வீடு வாசல்லாம் மொழுகி, செம்மண் கரை இட்டு பச்சரிசி ஊற வச்சு அரைச்சு, தண்ணி கலந்து, வீடு முழுக்க கோலம் போடுவோம்.
                         
(துணில அந்த மாவு தண்ணியை நனைச்சு அதை லேசா பிழிஞ்சுக்கிட்டே ரெண்டு விரலால கோலம் போடுறதே தனி கலை.)

                            
(வீட்டு வாசல்ல நான் போட்ட கோலம்.......)
                                                            
                                  
     மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு  விளக்கு வச்ச பின் தான் படைக்குறது வழக்கம். துணிகளை படைச்சு, வீட்டிலிருக்கும் பெரியவங்க, தம்பதி சமேதராய்  எடுத்து குடுப்பாங்க. பெரியவங்கலாம்  தன்னால் முடிந்த அளவு  பணம்  மத்தவங்களுக்கு குடுப்பாங்க.அதுக்காகவும் பசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க.

   சாம்பார், பொறியல், வடை, பாயாசம், இனிப்பு போண்டா, கொழுக்கட்டை இதெல்லாம் கண்டிப்பா செய்யனும், செய்து சாமிக்கு படையல் போட மணி எட்டாகிடும். பெரியவங்கள்லாம் டி.வி பார்த்துக்கிட்டும் கதை பேசிக்கிட்டும் சாப்பிட்டு முடிக்கும்வரை பிள்ளைகள்லாம் தவிப்பா பார்த்துக்கிட்டும் சீக்கிரம் சாப்பிடுங்க, எதிர்வீடு, பக்கத்துவீட்டுல எல்லாம் பசங்க டிரெஸ் போட்டுட்டாங்கன்னும் கூச்சல் போட்டுக்கிட்டும் இருப்பாங்க.

(7 மணிக்கு படைக்க போற துணிகள் மஞ்சள் தடவி மதியம் மூணு மணிக்கே தயார்...,)
                              

(ஸ் அப்பாடா..., ஒரு வழியா  எட்டு மணிக்கு படைச்சுட்டோம்...)
                               

   நாந்தான் சின்ன பையன் எனக்குதான் முதல்ல டிரெஸ் தரனும்ன்னு கடைக்குட்டி சொல்ல, நாந்தான் மூத்த பெண் எனக்குதான் முதல்ல டிரெஸ்ன்னு பெரிய பொண்ணு வாதிட, அவங்கவங்க பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணி,  செல்ல  சண்டைக்கு அம்மாக்கள் தயாராக.., யாருக்கு முதல்ல ட்ரெஸ் தரதுன்னு குழம்பிய பெரியவங்களை ஒரு தட்டுல எல்லார் ட்ரெஸ்ஸும் வச்சு எல்லா குட்டீசுக்கும் ஒரே நேரத்துல ட்ரெஸ் குடுக்க வச்சுட்டான் அப்பு

( பிள்ளைகளெல்லாம் தாத்தா, பாட்டி காலில் விழுந்து டிரெஸ்ஸையும்
,அவர்களின் ஆசியையும் வாங்குதுங்க..)

                                 

(பிள்ளைகளுக்கும் சந்தோஷம், பெரியவங்களுக்கும் சந்தோஷம்...,)
  
குழந்தைகளை தொடர்ந்து பெரியவங்க நாங்கலாம் ஜோடியாய் பெரியவங்க  காலில் விழுந்து டிரெஸ் வாங்கிக்குவோம். துணியோடு சேர்த்து அவங்களால் முடிந்த அளவு பணம் தருவாங்க. அதை பிரிச்சுக்குறதுல தகராறு பண்ணிக்கிட்டு இருக்கும்போது, குட்டீஸ்கள் அப்பா, அம்மாவுக்கு இடையில்  சமாதான படுத்துற மாதிரி வந்து பணத்தை அதுங்க அடிச்சுக்கிட்டு போய்டும்ங்க. 

    புது துணி உடுத்திக்கிட்டு  அவங்கவங்க நட்பு வட்டத்தோடு கோயிலுக்கு போவோம்.  வத்தலும், தொத்தலுமா  இருக்கும் ரெண்டே ரெண்டு மாட்டை என்னமோ அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்குற மாதிரி எங்க ஊரு “பிரசாந்த், சிம்பு, தனுஷ்”லாம் பயங்கரமா  சீன் போடுவாங்க. அந்த வீரத்துல  எங்க ஊர் ”தாப்ஸீ, ஹன்சிகா மோத்வானி, கார்த்திகா”லாம்  மயங்கி புது காதல்லாம் பிக்கப் ஆகும்.


                                     (பெரியவங்ககிட்ட ஆசி வாங்கும் ஜோடிகள்...,)


                                 (பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி பணம் குடுக்குறாங்க....,)

                    (மாடுகள் வந்து சேருமிடம்.. நைட்டுல எடுத்ததால் மாடுங்க தெரியல...,)

   காணும் பொங்கலன்று எல்லாரும் கோவிலுக்கு போவோம். கோவிலுக்கு போகும் முன் சின்ன மாமனர், மாமா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லாரும் எல்லாருக்கும் பைசா குடுப்பாங்க. எப்படியும் பெரியவங்களுக்கு ஆயிரம் ரூபாயும், சின்னவங்களுக்கு 250 ரூபாயும் சேர்ந்துடும் பொங்கல் அன்று. 

    முன்னலாம் 3 கி.மீ நடந்து போவோம். எல்லா உறவுகளும் பேசிக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டும் கரும்பு, பொரி சாப்பிட்டுக்கிட்டும் போவோம். இப்போலாம் டூவீலர்ல போய்ட்டு வந்துடறோம். நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு எல்லாரும் உணர்கிறோம்.

    அத்தோடு பொங்கல் கொண்டாட்டம் முடிஞ்சுது. அன்னிக்கு பொங்கல் முடிந்தாலும் அதன் நினைவு பல மாதங்கள் நெஞ்சில் நிற்கும். அடுத்த பொங்கல் எப்போ வரும்ன்னு காத்து கிடப்போம்.

   எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே!!??

படங்கள் போன வருசத்தியது...,


Monday, January 13, 2014

போக்கியா!? போகியா!?

பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரங்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது. 

அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இப்பண்டிகையின் தத்துவமாகும்.
 பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
பொட்டு பொடுசுங்கலாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்?! பாலாபிஷேகம் பண்ண அப்பா சட்டைல இருந்து காச ஆட்டையைப் போடுறது எப்படி!? என்ன பொய் சொல்லி செகண்ட் ஷோ சினிமாக்கு போறதுன்னு பிளான் பண்ணுவாங்க. 

போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணி அதுங்க சாபத்தை வாங்கிக் கட்டிக்குவேன்.
                 
 3 மாசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோக் காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஃபாத்திமா மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுல சொல்லக்கூடாதக் கதை.

ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு, வாசல் தெளிச்சு, கோலம் வந்துக்கிட்டே கோலம் போட்டு, கல்ர் கொடுத்து முடிச்சு, கைக்கு தொப்பி மருதாணி வச்சுக்கிட்டு தெரு முழுக்க ரவுண்ட்ஸ் வருவோம். யார் வீட்டு கோலம் நல்லா இருக்குன்னு பார்க்க.., எப்படியும் என்னைவிட மத்தவங்க நல்லாதான் கோலம் போட்டிருப்பாங்க. இருந்தாலும் நான் போட்ட கோலம்தான் நல்லா இருக்குன்னு என்னை நானே தேத்திக்கிட்டு படுக்க போவேன். அப்பதானே சீக்கிரம் எழுந்து பொங்கல் வேலைகளை பார்க்க முடியும்!! அதாவது அம்மா பொங்கல் வேலைகல்ளைப் பார்க்க..., நான் டிவி பார்க்க முடியும்!?

Thursday, November 21, 2013

எங்கள் வீட்டு கார்த்திகை தீபம் கொண்டாட்டம்

தீபாவளி, பொங்கல் போல எங்க ஊர்ல கார்த்திகைத் தீபத் திருவிழாவும் முக்கியமான பண்டிகை.  முதல் நாளே வீடுலாம் ஒட்டடை அடிச்சு, மொழுகி செம்மண் இட்டு வைப்போம். பொங்கல் பண்டிகைக்காக, வீட்டுக்கு வெள்ளையடிக்குற மாதிரி சில வீடுகள்ல வீட்டுக்கு வெள்ளையடிப்பாங்க. அதுக்கு காரணம், புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடிங்க தலை தீபாவளின்னு சொல்லி பொண்ணோட அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அந்தக் குறை மறைய தலைக்கார்த்திகைக்கு மாமியார் வீட்டுலதான் இருக்கனும்ன்னு ஒரு வழக்கம். 
மாமியார் தலையில கார்த்திகை மண்டை விளக்கு ஏத்து”ன்னு ஒரு சொலவடையே எங்க ஊர்ல இருக்கு, மாமியார் தலைமையில கார்த்திகைத் தீபத்துக்கு மடக்கு (அகல் விளக்கு போலவே மண்ணால் செஞ்ச கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். அதுக்கு பேர்தான் மடக்குன்னு சொல்லுவாங்க.)
கார்த்திகை மாச வரும் வளர்பிறை கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமி யும் சேர்ந்து வரும் அன்னிக்குதான் கார்த்திகை தீபம் கொண்டாடுவாங்க. அன்னிக்கு  மதியம் கிருத்திகைக்கு படைக்குற மாதிரி சாம்பார், ஒரு பொரியல், வடை, பாயாசத்தோடு முடிச்சுக்குவாங்க. 
அன்னிக்கு சாயந்தரம் சரியா 6 மணிக்கு தெருவிலிருந்து விளக்கு கொளுத்திட்டு வருவோம். கோலத்துல சில அகல்விளக்கு. வாசல்படிரெண்டு ஓரத்துல,  வீட்டுக்குள்ள இருக்கும் எல்லா வாசப்படிகள்ல விளக்கு ஏத்தி வைப்போம். மாடில, அரிசிப்பானைல, உப்பு டப்பா, அடுப்படின்னு எல்லா இடத்துலயும் விளக்கு ஏத்தி வைப்போம். 
முன்னலாம் ரேடியோவுலயும், இப்பலாம் டிவிலயும் திருவண்ணாமலை தீபம் ஏத்துற நேரடி ஒளி(லி)பரப்புல தீபம் ஏத்திட்டாங்கன்னு தெரிஞ்சு எங்க வீடுகளில் தீபம் ஏத்துவோம். ராத்திரி ஏழு மணிக்கு மேல மாவளி சுத்துவோம். மாவளி பத்தி விளக்கமா இங்க இருக்கு பார்க்காதவங்க பார்த்துட்டு வாங்க.

மறுநாள் நாட்டு கார்த்திகைன்னு சொல்லிக் கொண்டாடுவாங்க. அன்னிக்கும் வீடு வாசல்லாம் மொழுகி கழுவி வைப்போம். சாயந்தரம் விளக்கு வச்சபின் தான் படைப்போம். சிலர் வீட்டுல அசைவம் செஞ்சுப் படைப்பாங்க. எங்க வீட்டுல வெஜ்தான்.  தீபாவளிக்கு வெடிச்சது போக மிச்சம் மீதி இருக்குற பட்டாசை வெடிப்போம். 
சிலர் வீட்டுல அசைவம் சமைப்பாங்க. எங்க வீட்டுல இனிப்பு போண்டா, வடை, கொழுக்கட்டை மட்டும் செஞ்சு படைப்போம். அன்னிக்கும் வீடு முழுக்க விளக்கேத்தி வைப்போம்.  
நாட்டுக்கார்த்திகை அன்னிக்கும் மாவளி சுத்துவோம். மாவளி சுத்துறதுனால  நம்மை பிடித்திருக்கும் பீடைலாம் விலகும்ன்னு ஒரு ஐதீகம். அந்த கால பட்டாசுன்னு நினைக்குறேன். அழகா தீப்பொறி பறக்குது பாருங்க.


மொபைல்ல எடுத்ததால படங்கள் தெளிவா இல்ல. என் பையன் அப்பு மாவளி சுத்துறான்.  
நான் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளையும் அதன் பழமை மாறாம என் பிள்ளைகள் அனுபவிக்கனும்ன்னு கொஞ்சம் மெனக்கெட்டு கொண்டாடுறோம்.