புதன், ஜனவரி 06, 2016

”கலாக்ஷேத்ரா” திருமதி. ருக்மணிதேவி அருண்டேல் - மௌனசாட்சிகள்

எப்பப்பாரு மௌனசாட்சிகளில் பாழடைஞ்ச கோட்டை, கொத்தளம், சமாதின்னே பார்த்துக்கிட்டே இருக்கோம்ல. ஒரு மாறுதலுக்காக, கலை அம்சமும், கலர் அம்சமும் சேர்ந்த இடமான “கலாஷேத்ரா” பத்திதான் இன்னிக்கு பார்க்கப் போறோம். சென்னை திருவான்மியூரில் இருக்கும் ”கலாஷேத்ரா” பத்தி,  கலை துறையினருக்கும், கலைகளில் ஈடுபாட்டோடு இருப்பவர்களுக்கும், இணையவாசிகளுக்கும்   தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல.  ஆனா, நம்மை போல ஆசாமிகள் நிறைய பேருக்கு இது பத்தி தெரியுமா?!ன்னு கேட்டால் இல்லேன்னுதான் பதில் வரும். தெரியாத மக்களுக்கு எடுத்து சொல்றதுதானே நம்ம வேலை!! அதான் இன்றைய மௌனசாட்சிகளில் ”கலாஷேத்ரா” பத்தி பார்க்க போறோம்...


இந்திய கலைகளான பரதநாட்டியம் மற்றும் இசைக்கலையை மக்களிடையே எளிதாக கொண்டு செல்லவும், பயிற்றுவிக்கவும் 1936 - ல் தொடங்கப்பட்டதே இந்த ”கலாஷேத்ரா”.  இதை,  ”திருமதி ருக்மிணிதேவி அருண்டேல்”ன்றவர்  ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிச்சார். இக்கலைக்கல்லூரியில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உலகம் முழுவதுமிலிருந்து வந்து, தங்கி கலைகளை பயில்கின்றார்கள். ருக்மணிதேவி அருண்டேலின் வழிகாட்டலே ”கலாக்ஷேத்ரா”வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியது.  சரி யார் இந்த ”ருக்மணி தேவி அருண்டேல்” ன்னு தெரிந்து கொள்ளலாம் வாங்க.


நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள்  தம்பதியினருக்கு 29.02.1904 ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்தான் ”ருக்மணிதேவி அருண்டேல்”.  பெண் சுதந்திரம்ன்னு அதிகம் பேசப்படாத அந்த காலத்துலயே, தனிப்பட்ட வாழ்க்கையிலும், புரட்சிகரமான பாதையிலும் நடந்தவர்   இந்த ”ருக்மணி தேவி”. அன்னி பெஸண்ட் அம்மையார் துவக்கிய  தியசோஃபிக்கல்  சொஸைட்டியில்  ஈடுபாடு  கொண்டார். தந்தை நீலகண்ட சாஸ்திரி  மிகப்பெரிய வேத பண்டிதர். தாய் சேஷம்மாள் சங்கீதக் கலைக்கு   மையமான திருவையாரை சேர்ந்தவர். ருக்மணிதேவியின் தந்தை தியோசாபிகல் சொசைட்டியுடன் தொடர்புள்ளவர். ருக்மிணி தேவியின் தாயார் இசைக் குடும்பத்திலிருந்து வந்தவர். தியாகராஜ சுவாமிகள் இவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவார். 

பல பிரபல இசைக்கலைஞர்கள் இவர் தாயாரின் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அருணாச்சலக் கவிராயர், மகா வைத்தியநாத ஐயர், மற்றும் பலரும் ருக்மணிதேவியின் தாயார் இல்லத்திற்கு வருவார்கள். ருக்மிணிதேவி தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்தே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடக்கும் நவராத்திரி விழா தொடங்கி, முடியும் வரை  இசை நிகழ்ச்சி முடியும்வரை மணிகணக்காக அமர்ந்து முழுவதுமாக கேட்டு கொண்டு இருப்பார்.  ஆகையால் ருக்மணிதேவிக்கு சிறு வயதிலிருந்தே கலையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.


ருக்மணி தேவியின் தந்தை, கர்னல் ஆல்காட் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 1906 இல், பிரம்மஞான சபையில் சேர்ந்தார். அடையாரில் இவர்கள் குடும்பம் குடியேறியதுடன், ருக்மணிதேவி, திருவல்லிக்கேணி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிரம்மஞான சபையின் அருகில் புதிய இல்லம் கட்டி, அதற்கு ‘ புத்த விலாஸ்’ என்று பெயரும் சூட்டினார். பிரம்மஞான சபையைச் சார்ந்த எலியனார் எல்டர் என்பவரும், அவரது சகோதரி கேதலின் என்பவரும் கிரேக்க நடனம் ஆடுவதை இரசித்த ருக்மணிதேவி தானும் அதில் பங்கு கொண்டார். தியசோஃபிக்கல்  சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில்   பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  1918 இல் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் மேடையேறிய போது, ருக்மணிதேவி அதில் நடித்து கேதாரகௌளா ராகத்தில் ஒரு பாடலும்  பாடினார்.   இதைப் பார்த்த அவர் தந்தை,  ருக்மணிதேவியை இசை பயில  ஊக்கப்படுத்தினார். ருக்மணி தேவி கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். 


1920ஆம் ஆண்டில் அன்னி பெஸண்ட் அம்மையார், ஜார்ஜ்  சிட்னி  அருண்டேல் என்பவரை  இங்கிலாந்தில் இருந்து  கல்வி  மற்றும்  இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக நியமித்தார். அப்பொழுது அன்னி பெஸண்ட் அம்மையார் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு, அன்னிபெசண்ட் அம்மையாரின் அனுமதியோடு, ருக்மணிதேவியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.அக்காலத்தில் ஆச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்,  வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இத்திருமணம் அந்த காலக்கட்டத்தில் ருக்மணிதேவியின் உறவினர்களிடையே  பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. ருக்மணிதேவி தன் திருமணத்திற்கு பிறகு ஜார்ஜுடன் ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு பயணம் சென்றார். அங்கு இசை.  1924 ஆம் ஆண்டு கணவர் அருண்டேலுடன் லண்டனில் தங்கியிருந்தபோது, ரஷ்ய நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவாவை(1882_1931) கொலெண்ட் கார்டன்ஸில் சந்தித்தார். இவருடைய பாலே நடனக்கலைத் திறமை ருக்மணிதேவியை பெரிதும் கவர்ந்தது. பாவ்லோ, பாலே நடன அரங்கை விட்டு வெளியே வந்தபோது ருக்மணிதேவி, அவருடைய நடனத்தில் மெய்மறந்து, அவரிடம் தன்னால் பாவ்லோவைப் போல ஒருக்காலும் நடனமாட முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட பாவ்லோ, ருக்மணிதேவியிடம், நீங்கள் நடனமே ஆட வேண்டாம், மேடையில் நடந்து வலம் வந்தாலே போதும், மக்கள் உருகிவிடுவார்கள்’, என்று கூறினார். பாவ்லோ ருக்மணிதேவிக்கு நாட்டியத்தின் மீதான ஆவலை தூண்டிவிட்டார். பாலே நடனமும் கற்று கொடுத்தார்.

இது 1936 ல் பின்லாந்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் 

அன்னா பாவ்லோவாதான் ருக்மணிதேவி பரதக்கலையைக் கற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருந்தார் ருக்மணி அருண்டேல் அவரிடம் பாலே நாட்டியத்தைக் கற்றுக் கொண்டிருக்கும்போது, உன் தோற்றம் பரதக் கலைக்கு மிக எடுப்பாக இருக்குமென்று ஊக்குவித்தார். அவருடைய யோசனை ருக்மணிதேவி அருண்டேலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1933ஆம் ஆண்டில், கிருஷ்ண ஐயர், சென்னையில் உள்ள ஒரு மியூசிக் அகாடமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு  செய்திருந்தார். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது. அதைக் காண ருக்மணிதேவியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார் ருக்மணிதேவி. அந்த பரத நாட்டிய நிகழ்ச்சி ருக்மணிதேவிக்கு மிகவும் பிடித்திருந்தது. ருக்மணிதேவி அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தன. இருந்தாலும் சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்..அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு ருக்மணிதேவியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். பிறகு பாண்டநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். ஆனால், முதலில் மீனாட்சிசுந்தரம் அவருக்குக் கற்றுத்தர சம்மதிக்கவில்லை. பிறகு எவ்வளவோ வற்புறுத்தல்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார். ருக்மிணிதேவி தன்னுடைய 30-வது வயதில் நாட்டியம் கற்றுக் கொண்டாரென்றால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்.  கலைக்கு வயது ஒரு வரம்பில்லை என்பது ருக்மணிதேவி அருண்டேலின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். நாட்டியம் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவருடைய கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் மிகவும் உதவினார்.  


நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ஆம்ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, தன்னுடைய நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார். அந்த நிகழ்சி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. பிரம்மஞான சபையின், வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நடனம் பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நாட்டியத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த அந்த கால கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமியும் நடனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.


மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியாரின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ என்ற நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார். அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். ருக்மணிதேவியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது. உலகின் சிறந்த அனைத்துக் கலைக்களுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்த நாட்டியத்திற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார் ருக்மணிதேவி. இதற்காக, கலாக்ஷேத்ரா” என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்கள் பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். 

கலாக்ஷேத்ரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி6 இல் முதன் முதலாக சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாஷேத்ராவின் முன்னேற்றத்துக்கு அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர்.ஜார்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர்.சி.பி.இராமசுவாமி ஐயர்,  ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர்கள் உறுதுணையாக இருந்தனர். தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன் தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை நடத்திக் காண்பித்தார். பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காளிதாஸ் நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர்.  இவர் சமஸ்கிருத நாடகங்களையும், சமஸ்கிருத பண்டிதர்களின் துணைக்கொண்டு நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். ‘குமார சம்பவம்’ நாடகம் மிகப்பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள், போகப்போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் வந்து சேர ஆரம்பித்தனர். பெரும்பாலான நடன வகுப்புகள், அடையாறு பிரம்மஞான சபையின் பெரிய ஆலமரத்தினடியிலேயே நடந்தது. ருக்மணிதேவி தன் கணவர் அருண்டேல் தலைமைப் பதவி ஏற்றிருந்த காலத்தில், பிரம்மஞான சபையின் மரத்தின் அடியில், கலைக்கான பன்னாட்டு மையம் ஒன்றை நிறுவினார். தன் சகோதரரின் மகளான ராதா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் முதலில் இருந்தார். அன்று ராதா அவரை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அவர் அத்தையாகவே ஆனார். அந்த காலங்களிலேயே விளம்பரங்களில் பிரபலமானார் ருக்மணிதேவி. ,  அழகான பெண்மணியான ருக்மணிதேவியை விளம்பரம் செய்தனர்.  என் அழகுபடுத்தும் முறை வெகு சுலபம்” என்கிறார் சௌந்தர்யவதி ருக்மணிதேவி. “நான் தவறாமல் லக்ஸ் டாய்லட்  சோப் உபயோகப்படுத்துகிறேன்.  அவ்வளவுதான். அதன் சுறுசுறுப்பான நுரை எனது மேனியைப் பட்டைப்போல் வழவழப்பாகவும் மிருதுவாகவும் செய்கின்றது. உங்களுடைய மேனியை மலர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள நீங்கள் லக்ஸ் டாய்லட் சோப் உபயோகியுங்கள்” என்றார் ருக்மணிதேவி!


ருக்மணிதேவி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தபோது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977ஆம்ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி  தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர்  பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். இவ்வளவு சிறப்புகளை கொண்ட ருக்மணி ஜார்ஜ் அருண்டேல் இந்திய அரசின்  பத்ம பூஷண் விருது, காளிதாஸ் சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமி விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்..என்பது குறிப்பிட தக்கது.


மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவைகள் ருக்மணிதேவிக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன. ருக்மணிதேவி தயாரித்த 25 நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான காவியங்களாகும். இவற்றின் தனிச்சிறப்பிற்கு முக்கிய காரணம், மரபு வழுவாத நாட்டியம் மட்டுமல்லாது சிருங்காரம், பக்தி, கலையம்சம், ஆன்மீகம், அழகுமொழியில் பாபநாசம் சிவன் போன்ற பிரபலமானவர்கள் அமைத்துக் கொடுத்த இசை போன்றவைகளாலும் ஆகும். குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையை தகர்த்தெரிந்து, பரதக் கலைக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மணிதேவி அருண்டேல் அவர்கள். நாட்டியம், நாடகம் என்ற நவரச காவியத்தை முழுவடிவில் உருவாக்கி நடனக் கலையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தார்.

இவருடைய தன்னலமற்ற கலைச்சேவை இந்தியாவின் தலைசிறந்த ஒரு கலாச்சாரத் தூதுவராக உயர்த்தியது. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக் கலையை பரப்பினார்.

”அத்தை” என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணிதேவி, எல்லாவற்றிலும் அழகான பகுதியை மட்டும் காணக்கூடிய சக்தி வாய்ந்த பார்வையைப் பெற்றிருந்தார். கவித்துவமும், அழகை ஆராதிக்கக்கூடிய தெய்வீகப் பண்பும்தான் இவரை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனலாம். அவர் தன்னுடைய 82-வது வயதில் 1986 பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவர் இறப்பதற்கு முன் ஒரு நிருபரிடம் வேதனையுடன் கூறியதாவது, நாட்டில் மக்களுடைய யோசனை மாறி வருகிறது. எல்லோருக்கும் பணம்தான் முக்கியம் ஆகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். கலைஞர்கள் தங்களுடைய மனதையும், ஆன்மாவையும் கலைக்குத்தான் அர்ப்பணம் செய்யவேண்டும்” என்றார். கடைசி நிமிடங்களிலும் கலையைப் பற்றி நினைத்த அவரின் கலை உணர்வுகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

24 கருத்துகள்:

 1. அந்த லக்ஸ் விளம்பரத்தில் இருப்பவர் நீங்கள் குறிப்பிடும் நபர் அல்ல. இவர் அக்காலத்தில் புகழ் பெற்ற சிங்கள திரைப்பட நடிகை ருக்மணிதேவி, இலங்கைத் தமிழ் பெண். சினிமா நட்சத்திரம் என்று விளம்பரத்திலேயே உள்ளது பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்துல இருக்கும் வசனத்தை பாருங்க. “கட்டழகி, ருமணிதேவி”ன்னு தெளிவா போட்டிருக்கு.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. அந்த விளம்பரத்தில் இருக்கும் படம் பழம்பெரும் சிங்களத் திரைப்பட நடிகை ருக்மணிதேவி உடையது

   நீக்கு
  4. அப்படியா!? தவறை சுட்டிக்காடியமைக்கு நன்றி. படத்தை நீக்கிடுறேன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 3. சிறந்த பெண்மணி.நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 4. சிறந்த பெண்மணி.நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 5. கலாஷேத்ராவின் வரலாறு அறிந்தோம் நன்றிப்பா@

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டியூஷன் ஃபீஸ் அக்கவுண்ட்ல வந்தாகனும்க்கா!

   நீக்கு
 6. ருக்மணி தேவி பற்றிய அரிய தகவல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி! சிறப்பான படங்கள் பதிவுக்கு அழகு சேர்த்தன! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ! படங்களை ரசித்தமைக்கும் நன்றி

   நீக்கு
 7. அருமையான பகிர்வு
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணா!

   நீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிண்ணா!

   நீக்கு
 8. அருமை. பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்ன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணா!

   நீக்கு
 9. இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இவ்வளவு விவரங்களை நுணுக்கமாக இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவரங்களை தெரிந்துக்கொண்டமைக்கு நன்றி சகோ!

   நீக்கு
 10. பக்கத்திலதான் இருக்கேன்;ஆனா உங்க பதிவைப் படித்துதான் பல செய்திகள் அறிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! கலாஷேத்ராவுக்கு பக்கத்துலதான் உங்க வீடா ஐயா?! பொங்கல் கழியட்டும்.. ஒரு விசிட் அடிச்சுடலாம் ரெண்டு இடத்துக்கும்....,

   நீக்கு
 11. நல்ல பதிவு அக்காலத்தில் தலைசிறந்த ஒரு பெண்மணி இவர். அவரை பற்றிய செய்தியை படிக்கும்போதஹ மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை அது ஒரு கோவில். இவைப் பற்றி நிறைய சொல்லலாம். அந்த பெருமை வாய்ந்த இடத்தில் நான் பணி செய்வது உண்மையில் எனக்கு பெருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு