Showing posts with label மௌனசாட்சிகள். Show all posts
Showing posts with label மௌனசாட்சிகள். Show all posts

Wednesday, November 04, 2020

மதுரையின் அழகிய கோலத்தை அலங்கோலமாக மாற்றிய ஆங்கிலேயர் -மௌனசாட்சிகள்.

எத்தனைமுறை சென்றாலும் அலுப்பு தட்டாத நகரம் மதுரை மாநகரம். மீனாட்சி அம்மன் கோவிலாகட்டும், நாயக்கர் மகாலாகட்டும், அழகர் கோவிலாகட்டும், ராணி மங்கம்மாள் மாளிகையாகட்டும்.. பார்க்க பார்க்க அலுப்பு தட்டாது. இந்நாளில் நாம் காணும்  பழமையும், புதுமையும் கலந்து காணப்படும் மதுரை, 300 வருஷங்களுக்கு முன்னர்  மதுரையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கியது.  இப்பொழுது இருந்ததைவிட நேர்த்தியாகவும்,  அழகாகவும் இருந்ததுன்னு சொன்னா  ஆச்சர்யமாதான் இருக்கும். மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்ட 13-ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பெரிய கோட்டை இருந்ததுன்னு வரலாற்று ஆய்வுகள் சொல்வதா படிச்சேன். அது நிஜமா?! பொய்யான்னு இன்றைய மௌனசாட்சிகள் பதிவில் பார்க்கலாம்.

Wednesday, September 06, 2017

சீனாவில் ஒரு பர்வதமலை ...மௌனச்சாட்சிகள்

  நேரிலோ அல்லது சினிமா, ஆங்கில சேனல்களிலோ  நீங்கள் பார்த்த பாலங்களிலோ அல்லது   மலைப்பாதைகளிலோ இன்னிக்கு நாம பார்க்கப்போற பாதைதான் மிகவும் அபாயகரமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன்.  பார்க்கும்போதே நமக்கு கைகால் உதறுது. ஹுன் - ஷான் மலைகளுக்கிடையில் ஆகாயத்தில், அதும் மரத்தாலான பாதையில் ஒருத்தர் பயணம் செஞ்சிருக்கார்ன்னா எத்தனை தில் வேணும்?!  இந்த ஆபத்தான மரப்பாதை பழைய  சீனாவின் தலைநகராக இருந்த ஷீ - .ஆன் நகரத்தின் அருகிலுள்ள ஹுன்- ஷான் மலையில் இருக்கு இந்த பாதை. சரியா சொல்லப்போனா,  அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இதைப்பற்றி குறிப்பிடும்போது ஆகாயத்தில் ஒரு பாதைன்னே  சொல்றாங்க.
இந்த பாதையை பத்தி படிக்கும்போது   மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைக்க தோணும்.  இந்த பாதையைவிட வேற  அபாயகரமான இடம் வேறெதுமில்லையா?!ன்னு நினைக்க தோணும். எனக்கும் அப்பிடிதான் தோணுச்சு. ஆனா,  இந்த பாதையை பத்தி    ஒரு ஆங்கில இணைய கட்டுரையை படித்தேன். பேட்ரிக் வாட்கின்ஸ் என்பவர் தன்னுடைய திகில் அனுபவத்தை அதில் எழுதியுள்ளார். என்னைப்போலவே  அவரும் இதெல்லாம் கட்டுக்கதைன்னுத்தான்  நினைச்சுக்கிட்டு போனாராம். பார்த்ததும் அப்படியே பயத்துல கைகால் எல்லாம் நடுநடுங்கி போனாராம்.  ஆகாயத்துல, ரெண்டு பலகையில, ஒத்தை சங்கிலிய பிடிச்சு நடந்தா எப்படி இருக்கும்?! மீண்டும் அதை கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியலன்னு பீதியில சொல்லுறாரு. அப்படி என்னதான் இருக்கும் இந்த மரப்பாதையில்?! தெரிஞ்சுக்கலாம். வாங்க! போய் பர்ர்க்கலாம்.....

நம்ம ஊர்  கொல்லிமலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி, சதுரகிரி மாதிரி சீனாவில் புண்ணிய யாத்திரைக்கென்றே புகழ்பெற்ற ஐந்து மலைகள் இருக்கு. அவை முறையே, கிழக்கு, மேற்குவடக்கு, தெற்குஇவை நான்கிற்கும் இடையில் அமைந்த நடுப்புறப்பகுதி என புவியியல் அமைப்புப்படி  அமைந்துள்ளது. அதில் மேற்கு பக்கமாக அமைந்துள்ள இந்த ஹுன் - ஷான் மலை மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த மலை அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாக வணங்கிவந்த புனித மலையாகும். சீன வரலாற்றில் பல்வேறு மன்னர்களின் வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும்தியாகங்களுக்கும்  இந்த மலை பேர்போனது. 
பேட்ரிக் வாட்கின்ஸ் என்ன சொல்றாருன்னா, அவர் ஒருதடவை சீனா போயிருக்கும்போது    இந்த மலையை பற்றி கேள்விப்பட்டாராம். மூணு பலகையை சேர்த்து உருவாக்கிய பாதையில் மூவாயிரம் அடிக்கு மேலே நடந்து செல்லணும்ன்னு படிச்சபோது,  அதுபத்திதெரிஞ்சுக்க கூகுள்ல தேடி இருக்கார். ஆனா அவருக்கு போதுமான அளவு படம் கிடைக்கல. அதனால தானே அங்க போய் சாகசம் செய்து நிறைய படம்  எடுத்து ஊரு உலகத்துக்கு தெரியப்படுத்தலாம்ன்னு போயிருக்கார். இனி, அவர் வாமொழியா கேட்டாதான் இந்த பாலத்தின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.    அப்படி என்னதான் இருக்குன்னு அவரோட இணைய பக்கத்துல போய் அங்கிருக்கும் படங்களை பார்த்தா எனக்கே மூச்சு நின்னுட்டுது. ஸ்டூல் மேல ஏறவே பயப்படும் ஆளு நானு :-( என்னையெல்லாம் இங்க கொண்டு போய் விட்டா பார்த்ததுமே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். ..
இதுல பயணிக்குறது உயிருக்கு ஆபத்தா இருந்தாலும்இந்த இடத்தை பற்றிய செய்திகள், போட்டோக்கள் பொதுமக்களுக்கு போய் சேரணும்கிற ஒரு வெறி இருந்ததால, அதுக்கு முன்னாடி என்பயமும், எனக்கிருக்கும் ஆபத்துகளும் எனக்கு சிறுசா தோணிச்சு.  சரிஉரலுக்குள்ளே தலையை விட்டாச்சு ,இனி உலக்கை தலையில விழுமேன்னு பயப்படமுடியுமா?! அந்த ஆண்டவன் மேலே பாரத்தை போட்டு அந்த மலைப்பாதை பயணம் தொடங்கும் தொடக்க பாதையில் நின்றுகொண்டிருந்தேன். தொடக்கமே ஒரு குகைப்போல இருக்கு. அங்கதான் நம்ம பைகள், மற்ற பொருட்களைலாம்  டோக்கன் போட்டு கொடுத்திட்டு போகணும். நான்  திகிலோடு  நின்னுகிட்டு இருக்கும்போதுஒரு பெண் தைரியமா என்னை தாண்டி போனாங்க. சரி,  இவங்க உள்ளூர்காரங்க போல! இவங்க பின்னாடியே போனா ஈஸியா போய்டலாம்ன்னு அவங்க பின்னாடி நின்னேன்.  ஆனா, அந்த புள்ளையோ  நீங்க முதலில போங்கன்னு வழி விட்டுட்டாங்க, பொம்பளை புள்ளை முன்னாடி பயப்படக்கூடாதுன்னு கண்ணுல  பயத்தை காட்டாம கெத்தா,   இனி எங்கே எல்லாம் விழபோறமோன்னு மனசுக்குள்ளே திகிலோடு பயணத்தை தொடங்கினேன். 
 நானே தத்தக்க பித்தக்கான்னு நடந்து போய்க்கிட்டிருக்கும்போது எவனோ சாப்பிட்டுப்போட்ட ஒரு பர்கர்ல தெரியாம காலைவச்சி ஒரு புள்ள வழுக்கி விழுந்திட்டா.  சூப்பர்மேன் கணக்கா பாய்ஞ்சு விழப்போன அவ  கையை நான் பிடிக்க, அவ என்னையும் சேர்த்து இழுத்துக்கிட்டு  விழுந்தா. தமிழ் சினிமாவுல ஹீரோ ஹீரோயின் இப்படி விழும்போது பின்னாடி லலலலலன்னு பாடுவாங்க, வயலின் கதறும். அப்படி எதாவது என்னை சுத்தி கேக்குதான்னு காதை தீட்டிக்கிட்டு கேட்டேன். ம்க்கூம், நமக்கு அப்படிலாம் நல்லது நடந்துட்டா எப்படின்னு மனசை தேத்திக்கிட்டு   சுதாரிச்சு எழும்போது, வடிவேலு கணக்கா கெத்தை விடாம முறைச்சுக்கிட்டே எழுந்தா அந்த பொண்ணு கண்ணுல தெரிஞ்ச பீதிய பார்த்து நான் அப்படியே ஷாக்காகிட்டேன்.  சரி முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு சொல்லுவாங்களே!  பாதையின் ஆரம்பத்தில விழுந்தால தப்பிச்சிட்டோம். பாதியில விழுந்தா நேரா பரலோகம்தான்னு நினைச்சு,  முதல் வேலையா உடல் எடையை தாங்கக்கூடிய அளவு உள்ள ஒரு கனமான பெல்ட் எடுத்துஅதன் நுனியில் உள்ள கொக்கி மூலம்,  பாதையில் இருக்கும் சங்கிலியில் பிணைத்து,  அதை எடுத்து உடலோடு கட்டிகிட்டேன்..
இந்த மாதிரி ஆகாயத்து பாதைல இருக்குற போட்டோக்கள் ஏன் நம் பார்வைக்கு வரலைன்ற நம் கேள்விக்கு அவனவன் உயிரை பிடிச்சுக்கிட்டு நடக்கவே கஷ்டப்படும்போது யார் போட்டோ எடுப்பாங்க??!! .அந்த பழையகாலத்து மரக்கட்டைகள் எந்தளவு உறுதியா இருக்கும்ன்னு  நினைப்பே  அதுல நடக்கும்போது ஹார்ட் பீட் எகிறவைக்குது. ஒரு செங்குத்து மலையின் குறுக்கே ஆகாயத்தில் துருப்பிடித்த சங்கிலியின் மீது நடக்குறதை யோசிச்சு பாருங்க... நான் கையில் இருக்கும் பெல்ட்டை பிடிச்சுக்கிட்டு மெதுவாக  நடப்பது மரணத்தின் விளிம்பில் இருந்தாலும், அந்த வெயிலிலும்மழையிலும் தாக்குப்பிடிக்கும் பழைய காலத்து கட்டைகளும்துருப்பிடித்த சங்கிலியும் நம்மளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மை மேலும் ,மேலும் முன்னேறி செல்ல தூண்டும். 
இங்கிருந்து பார்க்கும் பொழுது ,சூரியன் மலை உச்சியில் இருக்கிறதோ என்று எண்ணுமளவு இந்த மலை ஆகாயத்தை தொட்டு நிற்குது.  நான் இந்த மலைக்கு வருவதற்கு வழியில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. அந்த ஆகாய பாதையில் கவனமாகவும், அதேநேரம் வேகமாகவும் போகனும். ஏன்னா சூரியன் மறைந்தபிறகு 2,160மீ உயரமுள்ள அந்த மலையில் நடப்பது தற்கொலைக்கு சமமாகும். 
சில இடங்களில் மரபாலங்கள் இல்லாமல் வெறும் சங்கியிலியின் மேல் கம்பிகளின் துணைக்கொண்டு நடந்து கடக்கவேண்டும். அந்த அனுபவம் பயங்கர திகிலானது .
சில இடங்களில் அந்த சங்கிலிகள் கூட இல்லாமல் பாறைகளில் செலுத்தப்பட்ட ஓட்டைகளில் கவனமாக கால்களை வைத்து அடிமேல் அடி எடுத்து கடக்கவேண்டும். நான் அதில் நடந்துக்கிட்டே லேசா  திரும்பி பார்க்கும்போது ஒரு இளம்பெண் திகிலோடு முன்னேறிக்கொண்டு இருந்தார்.
ஒருவழியா ஆமைபோல நகர்ந்து மலை உச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். என் பின்னால்   ஒரு அழகான இளம் பெண் மலையேறி  வந்துகொண்டிருந்தார். பார்க்க கண்ண்க்கு குளிர்ச்சியா இருந்ததால சிரமம் தெரியல. 
அந்த வழியாக வருவோரின் சிலரது முகத்தில் இனி இந்தமலைப்பக்கமே தல வச்சுக்கூட படுக்கக்கூடாதுன்ற எண்ணம் கண்டிப்பா இருந்திருக்கும். ஏன்னா, எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. 
அதே பாதையில் சிலர் சந்தோஷமாகவும், தங்களது பெண்தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டு கம்பிகளின்மேல் கவனமாக கால்வைத்து நடந்தனர்.  அதையெல்லாம் பார்த்துகொண்டுவந்த என் கண்கள், திடீரென ஓரிடத்தில் அகல   திறந்து விரிந்தது. அங்க ஒரு பெண் இந்திய யோகிகள் செய்வதுபோல் ஆகாயத்தில் ஒற்றை காலுடன் நிற்பது போன்று கும்பிட்டு நின்றார். இது ஒரு புனிதமான மலையென்பதால் அவரும் பக்தி நிலையோடு வந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன் .
ஒருவழியாக ஆமைபோல் நகர்ந்து மலைஉச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது ,சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். 
என்னதான் இடுப்பில் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தாலும்,  அந்த பள்ளத்தை பார்க்கும்பொழுது கால்கள் கிடுகிடுவென நடுங்கின .ஒருவழியாக மலையின் சமதள பாதைக்கு வந்துவிட்டேன்ன்ற நினைப்பே போன உயிரை திரும்ப கொண்டு வந்தது. 
சூரியனும் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். பாதையும் ஓரளவு சமதள பாதையாக இருந்தது. உடலை இணைக்கும் பெல்ட் தேவைப்படல. அங்கே தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது .. 
சிவப்பு ரிப்பன்களால் கட்டப்பட்ட திண்டுக்கல் பூட்டுகள் போல இந்த மலையின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. என்னுடைய இந்தியப்பயணத்தின் போது ஒருமுறை தமிழ்நாட்டுக்கு சென்றிந்தபோதுகோயம்பேட்டுக்கு அருகிலிருக்கும் திருவேற்காடு அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்க,  கோவில் கம்பிகளில் நிறைய பூட்டுகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. அங்கிருப்பவர்களிடம் கேட்டபோது மாமியார் ஓவரா பேசினாலோ  அல்லது பக்கத்துவீட்டுக்காரங்க அடிக்கடி நம்மகிட்ட சண்டை போட்டாலோ அவங்க வாயை அடைப்பதற்கு இங்கு வந்து பூட்டு காணிக்கை செய்து,ம் கம்பிகளில்  பூட்டிட்டு போவாங்களாம். வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கும்போது ,ஒரு வயசான அம்மா அங்கே ,பூட்டு போட்டுகொண்டு இருந்தார்.  இந்தவயதிலும் அவருக்கு மாமியார் தொல்லை இருக்குமான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே என்கூட வந்த  கைடுக்கிட்ட அவர் ஏன் பூட்டை கோவில்ல மாட்டுறார்ன்னு கேட்க சொன்னேன். அவருடைய மருமகள் ரொம்ப வாய் பேசுறாங்களாம்.  அதுக்காக பூட்டுப்போட வந்தங்களாம்னு சொன்னார். எனக்கு ஆச்சர்யமாகவும்அதேசமயம் அந்த அம்மாவின் செயல் சிரிப்பை வரவைப்பதாக இருந்தாலும் இதையும் தாண்டி நம்பிக்கை என்ற பூட்டு வலுவானது என்பதை அந்த இந்திய பயணத்தில் நான் கண்டுகொண்டேன். 
அந்த பூட்டு சின்னம் அன்பை வெளிக்காட்டும் சின்னமாகவே அவர்களது வழக்கில் இருந்துள்ளது. தனது காதலன், காதலி, குழந்தைகள், அம்மா,அப்பா இவர்களுக்கு இடையே அன்பு மலரவும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவும் செய்யப்படுகிற  வேண்டுகோளின் அடையாளம்தான் இந்த சிவப்பு பிரார்த்தனை ரிப்பன். இது பூட்டுகளோடு சேர்த்து கட்டப்படும்போது  அவர்களுடைய பிரார்த்தனை இறைவனிடத்தில் வைக்கப்படுறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.  மலை உச்சியை அடைந்தபோது இருட்டிவிட்டதால் நான் அங்கேயே தூங்கிவிட்டேன். வானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அந்த இறைவனின் கைவண்ணத்தில் எல்லாமே அழகுதான் என எண்ணிக்கொண்டு தங்குவதற்கு இடம் இருக்கிறதா என தேடினேன். அங்கே  2 அறைகள் கொண்ட ஒரு ஹோட்டல் இருந்தது. விலையும் மிக அதிகம். நான் மலையேறி வந்ததால் பசியோடு இருந்தேன். அங்கு சுவையான நூடுல்ஸ் கிடைத்தது. அங்கிருக்கும் படுக்கைகள் எல்லாம் அழுக்காக இருந்தன.  கடுங்குளிரில் அதையெல்லாம் பார்க்கமுடியாது என எண்ணி உறங்க சென்றேன்.
இவ்வளவு கஷ்டத்திலும் இரவில் அந்த மலையின்மேல் தங்குவது நல்லது என எல்லோரிடமும் நான் சொல்வேன். காரணம், காலையில் சூரிய உதயம் மலைகளுக்கு மேலே இருந்து காண்பது அவ்வளவு அழகு. அதைஅப்படியே என் காமிராவுக்குள் பிடித்துவிட்டேன் உங்களுக்காக ...
சூரியனும் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தில் தன்னுடைய இளங்கதிர்களை பரவச்செய்து பனிமலைகளுக்கிடையில் மஞ்சள் பழமாய் மேலெழுந்தான். அங்கு மலையின்மேலே ஒரு அழகான கோவில் இருக்கிறது .
கற்களாலும், மரங்களினாலும் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிற ஒரு வழிபட்டுதலம். இயற்கைச்சூழலோடு அழகாக காட்சிதருகிறது. காலையில் சூரிய  உதயத்திற்கு பிறகு வந்த முதல் பயணி நானாகத்தான் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.  கோவில் மிக அழகாக இருந்தது .
புத்த மதத்தை பின்பற்றும் சீன மக்கள்,  இங்கு தியான நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு பௌத்த தெய்வத்தை வந்து வணங்கி செல்கின்றனர். 
 .
குகையினுள் இருக்கும் இந்த தெய்வத்தை இங்குள்ள மக்கள் வந்து வணங்கி செல்கின்றனர்.  காலையில் மீண்டும் பக்தர்கள் வழிப்பட வருவதால் திரும்பி செல்லுவதற்கு கஷ்டமாக இருக்கலாம். நானும் மலையில் இருந்து மெல்ல  மெல்ல கீழே இறங்கத்தொடங்கினேன் . 
திரும்பி வரும் வழியில் சிலர் மும்மரமாக போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வைத்துக்கொள்வது நலம்.  ஏனெனில் அங்கே எதுவும் கிடைக்காது. அபாயகரமான மலையாக இருந்ததாலும் எனது பயணம் திரில்லாகவும் இனிமையாகவும் இருந்தது என  பேட்ரிக் வாட்கின்ஸ் தனது கட்டுரையில் சொல்லி முடிக்கிறார்.   நம்ம ஊர்ல இருக்கும் கொல்லிமலை, சதுரகிரி, பர்வதமலைக்கே நம்மாளுங்களுக்கு நாக்கு தள்ளுதே! இதுமாதிரியான இடங்களுக்கு போனால்?!

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471116

நன்றியுடன்,
ராஜி

Wednesday, June 28, 2017

இருமுறை காப்பாற்றப்பட்டு மூன்றாவது முறை அழிந்த பல்கலைகழகம் - மௌனச்சாட்சிகள்

அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் போய்ப் படிப்பது இன்று பலருக்கும் ஒரு லட்சியக் கனவு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, நம் பாரத தேசத்தில் இருந்த ஒரு பல்கலை கழகத்தில்  சேர வெளிநாட்டு மாணவர்கள் காத்துக் கிடந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?! மூன்று முறை படையெடுப்புக்குள்ளாகி இரண்டு முறை  மறுசீரமைக்கப்பட்டு மூன்றாவது முறையாய் முற்றிலும் அழிக்கப்பட்டு, மீண்டும் சமீபத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டாலும்,  ஒருகாலத்தில் ஆலமரமாய் கிளைத்தது தழைத்து விழுதூன்றி தன் நிழலில் இளைப்பாறிய மாணாக்கர்களை எண்ணிபடி   தன் பழம்பெருமையை பறைசாற்றியபடி மௌனமாய்  நிற்கும்  ஒரு பல்கலைகழகத்தை பற்றிதான் இன்று மௌனச்சாட்சிகளில் பார்க்க போறோம் . 



உலக மனிதன் கற்களை கொண்டு வேட்டையாடி திரிந்த காலத்திலேயே நாம் நாட்டையே உருவாக்கி அரசாண்டோம்.  அப்பேற்பட்ட பழம்பெரும் பாரம்பரியம் கொண்டது நம் பாரத நாடு.  பாரத நாடு கலாச்சாரம், கலை, பண்பாடு, வீரம், பக்திக்கு மட்டும் பேர்போனதல்ல. கல்வியிலும் பாரத மக்கள் கோலோச்சினர். இயல், இசை நாடகம், சிற்பம், சித்திரம், தையல், வானவியல் முதற்கொண்டு பாலியல் கல்வி வரை பல்கலை ஞானத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்த பாரத பூமியிலிருந்துதான் பலதுறை சார்ந்த அறிவியல் உண்மைகள் உலகெங்கும் பரவியது. பலதுறை சார்ந்த படிப்புகளை கற்றுத்தர நாளந்தா, தக்சசீலா மாதிரியான பல பல்கலைகழகங்கள் முதன்முதலில் நம் பூமியில்தான் தோன்றியது.


உலகத்தின் பல மூலைகளிலிருந்து இங்கு வந்து இந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பல்லாண்டுகள் தங்கி படித்தனர். தாங்கள் படித்து சேர்த்த அறிவினை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று வளம் சேர்த்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.


உலக வரலாற்றிலே அமைப்புரீதியாக முதன்முதலாய் தோன்றியது நாளந்தா பல்கலைகழகமாகும்.  இது இப்போதைய பீகார் மாநிலத்தின் பாட்னாவிலிருந்து 90 கிமீ தொலைவிலுள்ளது.  பாட்னாவின் அன்றைய பெயர் பாடலிபுத்திரமாகும். முழுக்க முழுக்க சிவப்பு நிற செங்கற்களால் கட்டப்பட்டு அறிவுச்சுடர் போல ஜொலித்திருக்கிறது.  பொதுவாக பெரிய பெரிய மகான்கள் தோன்றிய , வாழ்ந்த, படித்த, உபதேசித்த இடங்கள்தான் பிற்காலத்தில் கல்லூரிகளாகவும், அறிவாலயங்களாகவும் மாறும் என்பதற்கேற்ப  புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்த மாந்தோப்பை மையாமாகக்கொண்ட நாளந்தாவில் இப்பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்டது.  பகவான் மகாவீரரும் இப்பூமியில் உபதேசித்தார் என்றும் சொல்லப்படுது. இந்த மாந்தோப்பை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து 500 வணிகர்கள் வாங்கி புத்தருக்கு அன்பளித்துள்ளனர்.


நாளந்தா பல்கலைகழகம் சுமார் 14 ஹெக்டேர்களுக்கு மேலான பரப்பளவில் இப்பல்கலைகழகம்  பறந்து விரிந்திருந்ததாம். கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர்தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள்.  புத்தமத துறவிகளாலும், புத்த சமயத்தைச் சேர்ந்த அசோகர், ஹர்சர் போன்ற மாமன்னர்களின் ஆதரவோடும் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தது வளர்ந்தது.  இந்தப் பல்கலைகழகம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இங்கு அந்த காலத்திலேயே   உள்நாடு மற்றும் கொரியா,  சீனர்கள், திபெத்தியர்கள், பெர்ஷியர்கள், ஜப்பானியர்கள், மங்கோலியர்கள்,  கிரேக்கர்கள் போன்ற  வெளிநாடுகளிலிருந்தும் 10,000 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்துறை வித்தகர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். புவியியல், வானவியல், மருத்துவம், வேதியியல், இயற்பியல் போன்ற உயர்மட்ட விஞ்ஞான பாடங்களும் தத்துவம், தர்க்க சாஸ்திரம், வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற பாடங்களிலுள்ள பல்வேறு துறைகளும் இங்கே போதிக்கப்பட்டன. நாளந்தா பல்கலைகழகம் உலகின் முதல் பல்கலைகழகம் என்ற பெருமை மட்டுமல்லாது மாணவர்கள் தங்கி படித்த முதல் பல்கலைகழகமும் இதுவே ஆகும்.  கி.பி. 413 ம் ஆண்டிலிருந்து இப்பல்கலைகழகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. 



கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், ஆராய்ச்சிக்கான விதையாக மாற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடமும் விவாதங்கள் மூலமாகவே, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக, மகாயான கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டன. எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்திருக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு, படிப்பதற்கேற்ற இனிய  சூழலும் இருந்திருக்கிறது.  இங்கு பயிற்றுவிக்க  பகல் பொழுது மட்டும் போதாமல் இரவுப்பொழுதும் வகுப்பெடுக்கப்பட்டதாம்.   



பல்கலைகழகத்தின் முழு நிர்வாகமும் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும், மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து, பல்கலைக் கழகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைகழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான்சுவாங், யி ஜிங் உள்ளிட்ட பலர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்தான். 



மாணவர் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகத்தினை தீர்த்துக்கொள்ளவும், அறிவுப்பசியை போக்கிக்கொள்ளவும் மிகப்பெரிய  மகாமேரு என்று பெயர் சூட்டப்பட்ட மிக்கப்பெரிய நூல் நிலையமொன்று   இங்கு இருந்திருக்கிறது.   9 மாடிகளைக் கொண்ட மாபெரும் கட்டிடமாக இந்நூல் நிலையம் இருந்துள்ளது. இந்த நூல்நிலையத்தில் மட்டும் பராமரிப்பதற்கு பல்வேறு மொழிகளை கற்றறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இருந்துள்ளனர். இந்த நூல்நிலையத்திற்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்தமர்ந்து, தாங்கள் அறிவு தாகத்தை அபிவிருத்தி செய்துக்கொண்டனர். இங்கிருந்த ஏடுகளை மாணவர்கள் அலசி ஆராயும்போது ஏற்படும் சந்தேகங்களை நீக்க புத்தப்பண்டிதர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பசிக்கொண்ட பறவையினம் பழ மரங்களைத் தேடி பறந்தோடி செல்வதுப்போல், அறிவுத்தாகம் கொண்ட மாணவர்களும் உலகம் முழுவதிலிருந்தும், நாளந்தா பல்கலைக்கழகத்தில் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த இந்த நூல்நிலையத்திற்கு வந்து தமது அறிவுப்பசியைத் தீர்த்துக் கொண்டனர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் சீனயாத்ரீகர் யுவான்சுவாங் மற்றும் ஏனைய வரலாற்று அறிஞர்களும் பல அபூர்வமான உண்மைகளைப் பதிவு செய்துள்ளனர்.



புத்தர் தமது கடைசிப் பயணத்தின் போது நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையைச் செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர்தான்.இப்போது தேசிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு எப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே போன்றதொரு நுழைவுத் தேர்வு, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் நடத்தப்பட்டதாக சீன யாத்திரிகர் யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் எனச்சொல்லப்படும் உதவித்தொகை  அந்த காலத்திலேயே   வழங்கப்பட்டிருக்கிறது. அதேப்போல, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பதையும், அவர்களும் பல்வேறு தகுதித்தேர்வுக்குட்படுத்தியே  தேர்தெடுக்கப்பட்ட்னர். கல்விக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.  அவர் தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டதென யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். 



தோன்றிய யாவற்றிற்கும் அழிவு உண்டென்ற உலக நியதிக்கேற்ப உலகப்புகழ்வாந்த இப்பல்கலைகழகமும் ஒருநாள் அழிந்துப்பட்டது. நாளந்தா பல்கலைகழகம் எப்படி அழிந்தது என இனி பார்ப்போம்...

புயல் காற்றில் சிக்கி திசை மாறி, கரையை அடைய முடியா தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்போல் அறிவுத்தாகம் கொண்டு அலைபவர்களுக்கு தாகம் தணிக்கும் நீருற்றாய் திகழந்த நாளந்தாவின் மீது  இதுவரை மூன்று முறை படையெடுப்பால் அழிந்து இரண்டு முறை அரும்பாடுப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.  முதல் முறை கி.பி. 455 ல் ஸ்கந்தகுப்தா ஆட்சிக்காலத்தில் மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்புக்குள்ளானது. பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு மீண்டு(ம்) கல்வி சேவை ஆற்றியது.மீண்டும் 7ம் நூற்றாண்டில் ஹர்வர்த்தனர் ஆட்சியின்போது மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புனரமைக்கப்பட்டது. 

மூன்றாவது முறையாக 1193 – ம் ஆண்டு  கில்ஜி என்ற துருக்கி மன்னனின் படையெடுப்பால் நாளந்தா பல்கலைகழகம் முற்றிலுமாய் அழிந்துப்போனது. இப்படையெடுப்பில் இங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும், ஆசிரியர்களையும், புத்தத் துறவிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான். அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட புத்த மடாலயங்களையும், பல்கலைகழகத்தின் அற்புதமான கலையம்சம் கொண்ட வகுப்பறைகளையும் தரைமட்டமாக்கினான். 

அப்போதும் வெறி அடங்காத கில்ஜி  மகாமேருஎன்று போற்றப்பட்ட நூல்நிலையத்திற்கும் தீ வைத்து அறிவுக் கருவூலங்களை அழித்தான். நூல்நிலையத்தில் வைத்த தீக்கு இரையாகிய பல்லாயிரக்கணக்கான ஏடுகள் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தனவாம். இதை யாரும் அணைத்து விடக்கூடாது என்று அவை எரிந்து சாம்பலாகும் வரை  அங்கேயே காவலுக்கு ஆட்களை நியமித்திருந்தனாம்.



2006 ம் ஆண்டு பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் நாளந்தா பல்கலைகழகம் புதுப்பிப்பதற்கான மசோதா முன்மொழியப்பட்டது.  2010 ல் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் தேதி முதல் புதுப்பொலிவுடன்   மீண்டும்  கல்விப்பணி ஆற்ற தொடங்கியுள்ளது. 


நாளந்தா பல்கலைகழகத்தின் நினைவு மண்டபம் 

ஆங்கிலேயர் படையெடுப்பிற்குமுன் நமது பாரதத்தில் அனைவரும் படிப்பறிவு கொண்டிருந்தனர். அந்நிய படையெடுப்புக்கு ஆளாகி படிப்படியாய் நம் கல்வியறிவு குறைந்து அடிமையாய் மாறி படாத பாடுகள் பட்டோம் என்பது உலகறிந்த உண்மை.  எத்தனையோ போராட்டங்களுக்குபின் சுதந்தரம் பெற்று மீண்டும் நம் நாட்டில் கல்வியறிவு புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது.  அறிவுக்காகவும், பொருள் ஈட்டவும் திரைக்கடல் தாண்டி ஓடினாலும் முடிவில் நம் நாட்டுக்கே திரும்ப வந்து கல்வியறிவையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவோம்.

படங்கள் கூகுள்ல சுட்டது ...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464804

நன்றியுடன்,
ராஜி


Wednesday, January 06, 2016

”கலாக்ஷேத்ரா” திருமதி. ருக்மணிதேவி அருண்டேல் - மௌனசாட்சிகள்

எப்பப்பாரு மௌனசாட்சிகளில் பாழடைஞ்ச கோட்டை, கொத்தளம், சமாதின்னே பார்த்துக்கிட்டே இருக்கோம்ல. ஒரு மாறுதலுக்காக, கலை அம்சமும், கலர் அம்சமும் சேர்ந்த இடமான “கலாஷேத்ரா” பத்திதான் இன்னிக்கு பார்க்கப் போறோம். சென்னை திருவான்மியூரில் இருக்கும் ”கலாஷேத்ரா” பத்தி,  கலை துறையினருக்கும், கலைகளில் ஈடுபாட்டோடு இருப்பவர்களுக்கும், இணையவாசிகளுக்கும்   தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல.  ஆனா, நம்மை போல ஆசாமிகள் நிறைய பேருக்கு இது பத்தி தெரியுமா?!ன்னு கேட்டால் இல்லேன்னுதான் பதில் வரும். தெரியாத மக்களுக்கு எடுத்து சொல்றதுதானே நம்ம வேலை!! அதான் இன்றைய மௌனசாட்சிகளில் ”கலாஷேத்ரா” பத்தி பார்க்க போறோம்...


இந்திய கலைகளான பரதநாட்டியம் மற்றும் இசைக்கலையை மக்களிடையே எளிதாக கொண்டு செல்லவும், பயிற்றுவிக்கவும் 1936 - ல் தொடங்கப்பட்டதே இந்த ”கலாஷேத்ரா”.  இதை,  ”திருமதி ருக்மிணிதேவி அருண்டேல்”ன்றவர்  ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிச்சார். இக்கலைக்கல்லூரியில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உலகம் முழுவதுமிலிருந்து வந்து, தங்கி கலைகளை பயில்கின்றார்கள். ருக்மணிதேவி அருண்டேலின் வழிகாட்டலே ”கலாக்ஷேத்ரா”வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியது.  சரி யார் இந்த ”ருக்மணி தேவி அருண்டேல்” ன்னு தெரிந்து கொள்ளலாம் வாங்க.


நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள்  தம்பதியினருக்கு 29.02.1904 ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்தான் ”ருக்மணிதேவி அருண்டேல்”.  பெண் சுதந்திரம்ன்னு அதிகம் பேசப்படாத அந்த காலத்துலயே, தனிப்பட்ட வாழ்க்கையிலும், புரட்சிகரமான பாதையிலும் நடந்தவர்   இந்த ”ருக்மணி தேவி”. அன்னி பெஸண்ட் அம்மையார் துவக்கிய  தியசோஃபிக்கல்  சொஸைட்டியில்  ஈடுபாடு  கொண்டார். தந்தை நீலகண்ட சாஸ்திரி  மிகப்பெரிய வேத பண்டிதர். தாய் சேஷம்மாள் சங்கீதக் கலைக்கு   மையமான திருவையாரை சேர்ந்தவர். ருக்மணிதேவியின் தந்தை தியோசாபிகல் சொசைட்டியுடன் தொடர்புள்ளவர். ருக்மிணி தேவியின் தாயார் இசைக் குடும்பத்திலிருந்து வந்தவர். தியாகராஜ சுவாமிகள் இவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவார். 

பல பிரபல இசைக்கலைஞர்கள் இவர் தாயாரின் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அருணாச்சலக் கவிராயர், மகா வைத்தியநாத ஐயர், மற்றும் பலரும் ருக்மணிதேவியின் தாயார் இல்லத்திற்கு வருவார்கள். ருக்மிணிதேவி தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்தே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடக்கும் நவராத்திரி விழா தொடங்கி, முடியும் வரை  இசை நிகழ்ச்சி முடியும்வரை மணிகணக்காக அமர்ந்து முழுவதுமாக கேட்டு கொண்டு இருப்பார்.  ஆகையால் ருக்மணிதேவிக்கு சிறு வயதிலிருந்தே கலையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.


ருக்மணி தேவியின் தந்தை, கர்னல் ஆல்காட் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 1906 இல், பிரம்மஞான சபையில் சேர்ந்தார். அடையாரில் இவர்கள் குடும்பம் குடியேறியதுடன், ருக்மணிதேவி, திருவல்லிக்கேணி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிரம்மஞான சபையின் அருகில் புதிய இல்லம் கட்டி, அதற்கு ‘ புத்த விலாஸ்’ என்று பெயரும் சூட்டினார். பிரம்மஞான சபையைச் சார்ந்த எலியனார் எல்டர் என்பவரும், அவரது சகோதரி கேதலின் என்பவரும் கிரேக்க நடனம் ஆடுவதை இரசித்த ருக்மணிதேவி தானும் அதில் பங்கு கொண்டார். தியசோஃபிக்கல்  சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில்   பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  1918 இல் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் மேடையேறிய போது, ருக்மணிதேவி அதில் நடித்து கேதாரகௌளா ராகத்தில் ஒரு பாடலும்  பாடினார்.   இதைப் பார்த்த அவர் தந்தை,  ருக்மணிதேவியை இசை பயில  ஊக்கப்படுத்தினார். ருக்மணி தேவி கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். 


1920ஆம் ஆண்டில் அன்னி பெஸண்ட் அம்மையார், ஜார்ஜ்  சிட்னி  அருண்டேல் என்பவரை  இங்கிலாந்தில் இருந்து  கல்வி  மற்றும்  இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக நியமித்தார். அப்பொழுது அன்னி பெஸண்ட் அம்மையார் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு, அன்னிபெசண்ட் அம்மையாரின் அனுமதியோடு, ருக்மணிதேவியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.



அக்காலத்தில் ஆச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்,  வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இத்திருமணம் அந்த காலக்கட்டத்தில் ருக்மணிதேவியின் உறவினர்களிடையே  பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. ருக்மணிதேவி தன் திருமணத்திற்கு பிறகு ஜார்ஜுடன் ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு பயணம் சென்றார். அங்கு இசை.  1924 ஆம் ஆண்டு கணவர் அருண்டேலுடன் லண்டனில் தங்கியிருந்தபோது, ரஷ்ய நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவாவை(1882_1931) கொலெண்ட் கார்டன்ஸில் சந்தித்தார். இவருடைய பாலே நடனக்கலைத் திறமை ருக்மணிதேவியை பெரிதும் கவர்ந்தது. பாவ்லோ, பாலே நடன அரங்கை விட்டு வெளியே வந்தபோது ருக்மணிதேவி, அவருடைய நடனத்தில் மெய்மறந்து, அவரிடம் தன்னால் பாவ்லோவைப் போல ஒருக்காலும் நடனமாட முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட பாவ்லோ, ருக்மணிதேவியிடம், நீங்கள் நடனமே ஆட வேண்டாம், மேடையில் நடந்து வலம் வந்தாலே போதும், மக்கள் உருகிவிடுவார்கள்’, என்று கூறினார். பாவ்லோ ருக்மணிதேவிக்கு நாட்டியத்தின் மீதான ஆவலை தூண்டிவிட்டார். பாலே நடனமும் கற்று கொடுத்தார்.

இது 1936 ல் பின்லாந்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் 

அன்னா பாவ்லோவாதான் ருக்மணிதேவி பரதக்கலையைக் கற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருந்தார் ருக்மணி அருண்டேல் அவரிடம் பாலே நாட்டியத்தைக் கற்றுக் கொண்டிருக்கும்போது, உன் தோற்றம் பரதக் கலைக்கு மிக எடுப்பாக இருக்குமென்று ஊக்குவித்தார். அவருடைய யோசனை ருக்மணிதேவி அருண்டேலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1933ஆம் ஆண்டில், கிருஷ்ண ஐயர், சென்னையில் உள்ள ஒரு மியூசிக் அகாடமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு  செய்திருந்தார். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது. அதைக் காண ருக்மணிதேவியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார் ருக்மணிதேவி. அந்த பரத நாட்டிய நிகழ்ச்சி ருக்மணிதேவிக்கு மிகவும் பிடித்திருந்தது. ருக்மணிதேவி அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தன. இருந்தாலும் சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்..



அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு ருக்மணிதேவியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். பிறகு பாண்டநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். ஆனால், முதலில் மீனாட்சிசுந்தரம் அவருக்குக் கற்றுத்தர சம்மதிக்கவில்லை. பிறகு எவ்வளவோ வற்புறுத்தல்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார். ருக்மிணிதேவி தன்னுடைய 30-வது வயதில் நாட்டியம் கற்றுக் கொண்டாரென்றால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்.  கலைக்கு வயது ஒரு வரம்பில்லை என்பது ருக்மணிதேவி அருண்டேலின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். நாட்டியம் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவருடைய கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் மிகவும் உதவினார்.  


நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ஆம்ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, தன்னுடைய நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார். அந்த நிகழ்சி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. பிரம்மஞான சபையின், வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நடனம் பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நாட்டியத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த அந்த கால கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமியும் நடனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.


மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியாரின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ என்ற நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார். அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். ருக்மணிதேவியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது. உலகின் சிறந்த அனைத்துக் கலைக்களுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்த நாட்டியத்திற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார் ருக்மணிதேவி. இதற்காக, கலாக்ஷேத்ரா” என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்கள் பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். 

கலாக்ஷேத்ரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி6 இல் முதன் முதலாக சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாஷேத்ராவின் முன்னேற்றத்துக்கு அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர்.ஜார்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர்.சி.பி.இராமசுவாமி ஐயர்,  ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர்கள் உறுதுணையாக இருந்தனர். தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன் தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை நடத்திக் காண்பித்தார். பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காளிதாஸ் நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர்.  இவர் சமஸ்கிருத நாடகங்களையும், சமஸ்கிருத பண்டிதர்களின் துணைக்கொண்டு நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். ‘குமார சம்பவம்’ நாடகம் மிகப்பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள், போகப்போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் வந்து சேர ஆரம்பித்தனர். பெரும்பாலான நடன வகுப்புகள், அடையாறு பிரம்மஞான சபையின் பெரிய ஆலமரத்தினடியிலேயே நடந்தது. ருக்மணிதேவி தன் கணவர் அருண்டேல் தலைமைப் பதவி ஏற்றிருந்த காலத்தில், பிரம்மஞான சபையின் மரத்தின் அடியில், கலைக்கான பன்னாட்டு மையம் ஒன்றை நிறுவினார். தன் சகோதரரின் மகளான ராதா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் முதலில் இருந்தார். அன்று ராதா அவரை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அவர் அத்தையாகவே ஆனார். 



அந்த காலங்களிலேயே விளம்பரங்களில் பிரபலமானார் ருக்மணிதேவி. ,  அழகான பெண்மணியான ருக்மணிதேவியை விளம்பரம் செய்தனர்.  என் அழகுபடுத்தும் முறை வெகு சுலபம்” என்கிறார் சௌந்தர்யவதி ருக்மணிதேவி. “நான் தவறாமல் லக்ஸ் டாய்லட்  சோப் உபயோகப்படுத்துகிறேன்.  அவ்வளவுதான். அதன் சுறுசுறுப்பான நுரை எனது மேனியைப் பட்டைப்போல் வழவழப்பாகவும் மிருதுவாகவும் செய்கின்றது. உங்களுடைய மேனியை மலர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள நீங்கள் லக்ஸ் டாய்லட் சோப் உபயோகியுங்கள்” என்றார் ருக்மணிதேவி!


ருக்மணிதேவி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தபோது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977ஆம்ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி  தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர்  பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். இவ்வளவு சிறப்புகளை கொண்ட ருக்மணி ஜார்ஜ் அருண்டேல் இந்திய அரசின்  பத்ம பூஷண் விருது, காளிதாஸ் சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமி விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்..என்பது குறிப்பிட தக்கது.


மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவைகள் ருக்மணிதேவிக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன. ருக்மணிதேவி தயாரித்த 25 நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான காவியங்களாகும். இவற்றின் தனிச்சிறப்பிற்கு முக்கிய காரணம், மரபு வழுவாத நாட்டியம் மட்டுமல்லாது சிருங்காரம், பக்தி, கலையம்சம், ஆன்மீகம், அழகுமொழியில் பாபநாசம் சிவன் போன்ற பிரபலமானவர்கள் அமைத்துக் கொடுத்த இசை போன்றவைகளாலும் ஆகும். குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையை தகர்த்தெரிந்து, பரதக் கலைக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மணிதேவி அருண்டேல் அவர்கள். நாட்டியம், நாடகம் என்ற நவரச காவியத்தை முழுவடிவில் உருவாக்கி நடனக் கலையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தார்.

இவருடைய தன்னலமற்ற கலைச்சேவை இந்தியாவின் தலைசிறந்த ஒரு கலாச்சாரத் தூதுவராக உயர்த்தியது. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக் கலையை பரப்பினார்.

”அத்தை” என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணிதேவி, எல்லாவற்றிலும் அழகான பகுதியை மட்டும் காணக்கூடிய சக்தி வாய்ந்த பார்வையைப் பெற்றிருந்தார். கவித்துவமும், அழகை ஆராதிக்கக்கூடிய தெய்வீகப் பண்பும்தான் இவரை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனலாம். அவர் தன்னுடைய 82-வது வயதில் 1986 பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவர் இறப்பதற்கு முன் ஒரு நிருபரிடம் வேதனையுடன் கூறியதாவது, நாட்டில் மக்களுடைய யோசனை மாறி வருகிறது. எல்லோருக்கும் பணம்தான் முக்கியம் ஆகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். கலைஞர்கள் தங்களுடைய மனதையும், ஆன்மாவையும் கலைக்குத்தான் அர்ப்பணம் செய்யவேண்டும்” என்றார். கடைசி நிமிடங்களிலும் கலையைப் பற்றி நினைத்த அவரின் கலை உணர்வுகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.