புண்ணியம் தேடி பயணத்தில இந்த வாரம் ,நாம பார்க்கபோறது ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம். தொண்டைமண்டல கோவில்களில் ”வடதிருநள்ளாறு” என அழைக்கப்படும் ”பொழிச்சலூர் சனீஷ்வர சேஷத்ரம்”.
கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக தலங்கள் இருப்பதைப்போல, சென்னையிலும் நவக்கிரக ஸ்தலங்கள் உள்ளன. இது தமிழ்நாடு சுற்றுலா துறையினால் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதில் நவக்கிரக நாயகரான சூரியனின் திருக்கோவில், சென்னை கொளப்பாக்கம், அகத்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவல்லி தாயார் சன்னதி, சூரியபகவான் கோவிலாகவும், சோமங்கலம், சோமனாதீஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மனுடன் சந்திர ஸ்தலமாகவும், பூந்தமல்லி வைத்தீஸ்வரர், உடனுறை தையல்நாயகி அம்மையுடன் அங்காரகன் சன்னதியாகவும், கோவூர் சுந்தரேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மையாருடன் புதன் சன்னதியாகவும், போரூர் இராமனாதீஸ்வரர் சன்னதி, குருவுக்கும், மாங்காடு வெள்ளீஸ்வரர் சன்னதி சுக்கிரன் ஸ்தலமாகவும், பொழிச்சலூர், அகத்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவல்லி தாயர்சன்னதி, சனீஸ்வரன் (சனிஸ்சரன்) கோவிலாகவும், குன்றத்தூர், நாகேஸ்வரர் உடனுறை காமாட்சி சன்னதி ராகுவுக்கும், கெருகம்பாக்கம், நீலகண்டேஸ்வரர் உடனுறை ஆதிகாமாட்சி தாயார் சன்னதி, கேதுவுக்கும் பரிகார ஸ்தலங்களாக உள்ளன. அந்த வரிசையில் நாம இப்ப பார்க்கப்போறது, சென்னை பம்மலை அடுத்துள்ள பொழிச்சலூரில் அமைந்து இருக்கும் சனீஸ்வர பரிகார ஸ்தலமான ”வடதிருநள்ளாறு” என அழைக்கபடும் ”அகத்தீஸ்வரர்” ஆலயம்.
நாம் வடக்கு வாசல் வழியே உள்ளே நுழையும்போது நமது இடப்பக்கத்தில் அருள்பாலிப்பது, “ஸ்ரீ சம்ஹார மகா காலபைரவர் சன்னதி”, இவர் அறிந்து தவறு செய்வோரை தண்டிக்கும் அமர்தகராகவும், அறியாமல் செய்த தவறினால் வரும் பாவங்களை போக்கும் பாவ விமோசனராகவும் திகழ்கிறார். சிவப்பெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான இந்த பைரவ திருமூர்த்தி, இந்த சன்னதியில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் ஆக்ரோஷம் பெற்று சம்ஹார காலபைரவராக உருபெற்றுள்ளார்.
நேர் எதிரே சிவபெருமான் வீற்று இருக்கிறார் சிவப்பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும் என்பது ஒரு வித்து உண்டு. அதுப்போல நாம சிவப்பெருமானை வலம் வரலாம். இனி வெளிப்பிரகாரம் சுற்றலாம்...,
மேலிருக்கும் படம் திருக்கோவிலின் கிழக்கு பக்க வாயில். இந்த திருக்கோவிலை பற்றி சொல்வதென்றால், விதி எல்லோருக்கும் பொதுவானது. அது மனிதர்களானாலும் சரி, தேவர்களானாலும் சரி. சனி பகவான் எப்பொழுதும் பிறருக்கு தொல்லைகளை கொடுத்து வருவதால் அவருக்கு கடுமையான பாவங்கள் வந்து சேர்ந்தன. அதை நிவர்த்தி செய்ய இங்கே ஒரு நள்ளார் தீர்த்தத்தை உண்டு பண்ணி அதில் நீராடி இங்குள்ள சிவப்பெருமானை வழிபாட்டு பாவ நிவர்த்தி பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஆகவேதான் ”திருநள்ளாருக்கு” அடுத்து ”சனீஸ்வர பகவான்” தனியே எழுதுந்தருளியுள்ள தலம் என்பதால் இதை ”வடதிருநள்ளாறு” என அழைக்கப்படுகிறது.
இறைப்பணி செய்பவர்கள் முன்னே செல்ல, நாம் அவர்களை பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்கிணங்க நாங்கள் சென்ற தினம் பிரதோஷம் தினம். அங்கே, சேவார்த்திகள் சேவை செய்துக்கொண்டு முன்னே செல்ல நாங்கள் அந்த பிரதோஷ குழுக்கள் பின்னே சென்று கொண்டிருந்தோம்.அரசமரத்தை ஏழுமுறை வலம் வரனும்ன்னு சொல்லுவாங்க. அதேப்போல அரசமரத்து விநாயகரை ஒருமுறை வலம் வரவேண்டும் என்றும் சொல்வதால் அரசமரத்து விநாயகரை வணங்கி நின்றோம்.
இங்கே இருக்கும் அரச மரத்திற்கு உள்ள தனி சிறப்பு என்னனா, வேம்புவும் அரசுவும் ஒன்றுடன் ஒன்று பின்னி, பிணைந்து இருப்பது சிறப்பு. காரணம் சிலருக்கு சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம் என சில ஜோதிட விதிகள் சொல்லப்படுவதுண்டு. அந்த தோஷம் விலகி குழந்தை பாக்கியம் கிடைக்க, அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ....,
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||
இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். மேலும், நிறைவான பலன்களும் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.
ஒரு கோவிலின் கருவறை அமைவிடத்தை தீர்மானிப்பது, சுயம்புலிங்கம் பஞ்சபூதங்களின் சக்தி, தெய்வசக்தி, வானியல் கதிர்வீச்சு போன்றவை மிகும் இடங்கள் தான் தீர்மானிக்கும். அந்தவகையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னர்களால் கஜ பிருஷ்ட விமான வடிவில் அமைக்க பட்டதாகும் இந்த கோவிலின் கருவறை. அனேகதம்(அனேகதம் என்றால் யானை) என்ற .கருவறை அமைப்பு கொண்டு வட்டவடிவமுடையதாக அமையபட்டுள்ளது. அதில் விநாயக பெருமானும், தென்முக கடவுளும் அலங்கரிக்கின்றனர். அவர்களையும் தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றோம். மேலும், இந்த கோவிலில் ஈசன் கிழக்கு பார்த்த வடிவிலும், தாயார் தெற்கு பார்த்த வடிவிலும், ராஜகோபுரம் வடக்கு பார்த்த அமைப்பிலும் கட்டபட்டுள்ளது . இங்கே ஒரு கோ மடமும் பரமரிக்கப்படுகிறது. பொதுவாகவே ஒருமனிதனின் வாழ்க்கையில் நல்லது கெட்டது என்ற நிலைகளை இயக்கிவருவது கோள்கள் தான் என்று இந்துக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அந்தவகையில் சனி ராசியினுடைய கோரப்பார்வை தாங்கமுடியாமல் அவதியுறும் அனேகர்களின் குடும்பத்தில் துன்பமான நிலை ஏற்படும். அப்படிப்பட்ட துன்பநிலைகள தாங்கிக்கொள்ளும் அளவு நன்மையை தருவது இந்த சனீஷ்வர விரத வழிபாடு. இந்த திருக்கோவிலில் சிறப்பாக செய்யபப்டுகிறது .
சில ராசிகாரர்களுக்கு 7 1/2 நாட்டு சனியான விரயசனி, 51/2 வருஷ ஜென்மசனி , 2 1/2 வருஷ பாதசனி , 2 1/2 வருஷ அர்தாஷ்டமசனி , 2 1/2 வருஷ கண்டசனி , 2 1/2 வருஷ அஷ்டமசனி முதலிய தோஷங்கள் உள்ள ராசிக்கார்கள், அவர்களை பிடித்துள்ள சனித்தோஷம் நிவர்த்தியாக அவர்கள் ராசியிலிருந்து அடுத்த சனி பெயர்ச்சிவரை இங்குள்ள சம்கார மகா கால பைரவரையும் , சனீஸ்வர பகவானையும் ,சனிக்கிழமைகளில் எள்ளு தீபம் ஏற்றி அர்ச்சனைகள் செய்து அன்னதானமிட அந்த தோஷங்களின் கோர பார்வைகளில் இருந்து விடுபடலாம் என்பதும் இங்கு வந்து வழிபட்டு பலன் பெற்ற மக்களின் நம்பிக்கையாகும் .
இது கோவிலின் கிழக்குபக்க வாயிலில் அமைத்துள்ள கொடிமரமும், அதனை அடுத்துள்ள நந்தியையும் வழிப்பட்டு கோவிலின் உள்ளே செல்லலாம் வாங்க. நம்முடைய புண்ணியம் தேடி பயணத்தில் எந்த திருக்கோவலினுள்ளும் புகைப்படம் எடுப்பதில்லை அதே நெறிமுறையை இங்கே கடைப்பிடித்து நம்முடைய கேமராவை மடக்கிவைத்துக் கொண்டு மூலவரை தரிசிக்க திருகோவிலினுள் நுழைந்துவிட்டோம். கிழக்கு பார்த்த லிங்க திருமேனி. நம்முடைய துன்பங்கள் யாவும் நிவர்த்தி செய்து அருள்புரிந்து கொண்டு இருக்கிறார். இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா மூலவரை தரிசிக்கும் மண்டபத்தின் நாம் நிற்கும் இடத்தின் நேர் மேலே உத்திரத்தில் கல்லினால் செதுக்கப்பட்ட பாம்பின் உருவ படம் செதுக்கப்பட்டு இருக்கிறது. இது இங்குள்ள மூலவரை வணங்கி வந்தால் ராகு -கேது கிரக தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
தாயார் ஆனந்த வள்ளி அம்மையாக தெற்கு பார்த்த கோலத்திலும் அதற்கு பக்கத்தில் காலப்பைரவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் வீற்று இருக்கிறார். அதனை அடுத்து சனீஸ்வர பகவான் தனியாக எழுந்தருளியுள்ளார். நாங்கள் சென்ற காலத்தில் அங்கே பிரதோஷ வழிபாடு தொடங்கி இருந்தது .
பொதுவாக இது ”சனீஸ்வர பகவானு”க்குரிய தனி சன்னதி என்பதால் அர்த்தாஷ்டம சனியின் பிடியில் இருக்கும் ராசிக்காரர்கள் வெள்ளிகிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் சாத்தி, புனுகு பூசி, வெண்பூசணி சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்துவந்தால் அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். கண்டசனியின் பாதிப்பிலிருந்து மீள திங்கள்கிழமை காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் பைரவருக்கு அல்லிமலர் மாலை சாற்றி, புனுகு பூசி, வெண்பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையல் இட்டு அர்ச்சனை செய்துவர கண்டசனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
அதுப்போல அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சனிக்கிழமை நாளில் இரவு 7:30 மணி முதல் 9மணிக்குள் பைரவருக்கு கருப்பு பட்டு அணுவித்து வடைமாலை சாற்றி, கருங்குவளை மலர்மாலை, நீலோர்ப்பவ மலர்மாலை சாற்றி புனுகுபூசி , கறிவேப்பிலை சாதம் படையல் இட்டு, இரும்பு அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு முடிச்சு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவந்தால் அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சனிக்கிழமை நாளில் ராகுகாலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலைமலை சாற்றி புனுகுபூசி, கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயசம் படையல் இட்டு, இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணையால் தீபமிட்டு அர்ச்சனை செய்துவர ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம். அதேப்போல ராசிக்கு 12ல் சனி இருக்கும் போது தேங்காயில் நெய்தீபமும், ராசிக்கு 1ல் சனி இருக்கும் போது எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் தீபம்மும், ராசிக்கு 2ல் சனி இருக்கும்போது வெண்பூசணியில் தேங்காய் எண்ணை தீபம் ஏற்றவேண்டும் என்பது அனுபவப்பட்டவர்களின் நம்பிக்கை.
இது குறிப்பிட்ட ஒரு இனத்தை சேர்ந்தவங்களால் பரம்பரை பரம்பரையாக பராமரிக்கபட்டுவரும் கோவிலாகும். இந்த திருக்கோவிலுக்கு செல்லும் வழி ”பிராட்வே”லிருந்து 60 G, பல்லாவரத்தில் இருந்து 52M , கூடுவாஞ்சேரியில்இருந்துM52,, மணிமங்கலத்தில் இருந்துM52H,, வேளச்சேரியில் இருந்துM52P அகஸ்த்தீஸ்வரர் பஸ் ஸ்டாப் அல்லது சிவன் கோவில் பஸ் ஸ்டாப் பொழிச்சலூர் என செல்லும் பேருந்தில் செல்லலாம்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5:30 முதல் பகல் 12 வரை. பிறகு மாலை 4 முதல் 8வரை. ஒருவழியாக திருக்கோவிலின் தரிசனத்தை முடித்துக்கொண்டு இந்த வடக்கு புற வாயிலின் வழியாக வெளியேறினோம். இனி, அடுத்தவாரம் வேறொரு கோவிலில் நிறைய விஷயங்களுடன் மீண்டும் நமது புண்ணியம் தேடி பயணத்தில் சந்திப்போம்.
படங்களும் பகிர்வும் அருமை அக்கா...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஎன்ன ஒரு அழகிய இடம். அருமையான புகைப்படங்கள்.
ReplyDeleteதம +1
கோவில் அமைவிடம் மனசுக்கு அமைதியை கொடுக்குது சகோ. வாய்ப்பு கிட்டும்போது போய் பார்த்துட்டு வாங்க.
Deleteபடங்கள், தகவல்கள், விளக்கங்கள் - அனைத்திற்கும் நன்றி சகோதரி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணா!
Deleteஅருமையானதோர் கோவில் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணா!
Deleteதரிசித்தோம் நன்றி.
ReplyDeleteஅருமையாக விபரம் தெரிவித்து உள்ளீர்கள். நன்றி
ReplyDelete