Showing posts with label புண்ணியம் தேடி. Show all posts
Showing posts with label புண்ணியம் தேடி. Show all posts

Saturday, May 14, 2022

1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி


திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தவிர  அருவி, கோட்டை, கொத்தளம், கோவில்ன்னு சொல்லிக்குற மாதிரியும், சுத்தி பார்க்குற மாதிரியும் புகழ்பெற்ற எந்த இடங்களும் கிடையாதுன்ற மனக்குறை எனக்குண்டு.   ஆனாலும், பெத்த தாயையும், குடிக்குற தண்ணியையும், வாழும் பூமியையும் பழிக்கக்கூடாதாம்.  அதனால், வேற ஊருக்கு போயிடலாம்ன்னு மாமாவை இதுவரை கூப்பிட்டதில்லை...

Friday, January 22, 2021

நாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி


சில வாரங்களுக்குமுன் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள உலகத்தில் முதன்முதலாய் தோன்றிய அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தினை பத்தி பார்த்தோம்.. அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வந்தபின், அறுபது அடி நீளமுள்ள நாகர் சிலை ஒன்றை பார்த்தோம்..

Friday, December 18, 2020

உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி

போன வருசம் மகளை கல்லூரியில் சேர்த்து, அவளை ஹாஸ்டலிலும் விட்டுட்டு மகளை பிரிஞ்ச துக்கத்தில்!!  அருகிலிருந்த  திருச்செங்கோடு கோவிலுக்கு போனோம்.  திருச்செங்கோடுன்ற வார்த்தைக்கு ”அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை”ன்னும், ”செங்குத்தான மலை”ன்னும் இரண்டு அர்த்தம் சொல்றாங்க. இந்த மலை ஏன் சிவப்பாச்சுன்னா விஷ்ணு பகவான் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பு மேருமலையை பிடித்தபோது ஏற்பட்ட கலகலப்பில் காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் இந்த மலை சிவப்பு நிறமாச்சுன்னு தலவரலாறு சொல்லுதுங்க. 

Thursday, November 05, 2020

அருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி

மன அமைதிக்குதான் கோவிலுக்கு போறதே! புகழ்பெற்ற கோவிலுக்கு போகும்போது நேரம், பயணக்களைப்பு,  கோவில் நடைமுறை, கூட்டம் என பல காரணங்களால் கசப்பான அனுபவத்தை பலர் அனுபவித்திருப்போம்..  ஆனா,  அதிக பிரபலமாகாத கோவில்களுக்கு போனால், கசப்பான அனுபவம் நேராது. அதேநேரத்தில் மன அமைதியும் கிட்டும்.  உள்ளூர் கோவில் என்றால் நேரம், பணம், உடல் உழைப்பு மிச்சமாகி புண்ணியத்தோடு நல்லதொரு அனுபவமும், நம்ம வட்டாரத்துல இவ்வளவு பிரபலமான கோவில் இருக்கான்னு ஆச்சர்யமும் ஏற்படும். 

Friday, September 04, 2020

ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள் அவதாரங்களை தரிசிக்கனுமா?! - புண்ணியம் தேடி..

 

பக்தன் பிரகலாதனின் அபயக்குரலுக்கு நொடிப்பொழுதில் அவதரித்த இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்ய அவதரித்தார் நரசிம்மர். தன் இரண்யகசிபுவை வதம் செய்தபின்னும் உக்கிரம் தணியாத நரசிம்மரை கண்டு அஞ்சிய பிரகலாதன், நரசிம்மரை நோக்கி பாடல் பாடி, லட்சுமி தேவியுடன் சாந்த சொரூபத்தில் காட்சியருள வேண்டி,  தரிசனம் பெற்றார். பிரகலாதனுக்கு கிட்டிய லட்சுமி நரசிம்மர் தரிசனத்தை தங்களுக்கும் கிட்டவேண்டுமென  திருமாலிடம் தேவாதிதேவர்கள்  வேண்டி நின்றனர்.  திருமால், 'அவணி நாராயணபுரம்' என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு  சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.  
பிருகு  மகரிஷியோடு தேவாதிதேவர்களின் தவத்துக்கு மனமிரங்கி, சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’   என வேண்டி நின்றார். அதன்பின்னர், அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி அளித்ததன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது. மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன்பெயர் ‘பாகூ நதி’. இது சேயாற்றோடு கலக்குது. இத்திருக்கோவில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் எனவும் அழைக்கப்படுது.


ஆரணில இருந்து 12கிமீ தூரத்தில் இருக்கு இக்கோவில். வந்தவாசில இருந்து 26 கிமீ, செய்யாறுல இருந்து 25கிமீ, சேத்பட்டுலிருந்து 30கிமீ தூரத்திலும் இக்கோவில் இருக்கு.  சென்னைல இருந்து 148 எண் கொண்ட  போளூருக்கு  நேரடி பேருந்து இருக்கு. அதுல வந்தால்  ஆவணியாபுரம்ல இறங்கி, இடதுபுறம் இருக்கும் ஊர் நுழைவு வாயில் வழியா ஊருக்குள் வந்தால், ஊரின் மேற்குப்புறமாக நம் கண்ணுக்கு தெரியும் இந்த  சிம்மாசல பர்வதம்.  பிரதான சாலையிலிருந்து வயல்வெளிகளை ரசித்தவாறே ஒரு கிமீ தூரத்திலிருக்கும் கோவிலுக்கு  நடந்தே செல்லலாம்.  இல்லன்னா, ஷேர் ஆட்டோக்களும் சனிக்கிழமைகளில் கிடைக்கும்.

இம்மலை  வடக்கு தெற்காக சிங்கம் ஒன்று படுத்திருப்பது மாதிரி காட்சியளிக்கும்.  கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயம் சுமார் 110 படிகளை கொண்டது.  இது பல்லவர்காலத்தைய கோவிலாகும். 
மலையின் பாதி தூரத்தை கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை தரிசிக்கலாம்.  சுத்தமான சிறிய கருவறை.  அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர். கருவறையின் எதிரினில் இரண்டு க கருடாழ்வார்கள் உள்ளனர். இருவரில் ஒருவர் சிம்ம முகத்துடன் இருக்கின்றார். இடப்புறம் லட்சுமி தேவியும் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறாள்.   அழகான பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்வாங்க. ஆனா, அந்த மகாலட்சுமியே இங்க சிங்க முகங்கொண்டு இருக்க என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?!

கண்ணாடி அறையில் நின்றக்கோலத்தில் உற்சவர்..
பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத்தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்கமுகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்கமுகம் பெற்றதாகச் சொல்றாங்க. அதன்படி அறுபது வருடங்களுக்கு ஒரு முறை சர்வதாரி வருடத்தைய  ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

தெற்கு நோக்கிய பஞ்ச நரசிம்மர்..
இக்கோவிலில் மொத்தம் 9 நரசிம்மரை தரிசிக்கலாம், மூலவரான லட்சுமி நரசிம்மர், உற்சவர், மற்றொரு சிறிய உற்சவர், பஞ்ச நரசிம்மர், மலைமீதிருக்கும் யோக நரசிம்மர் என மொத்தம் 9 நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம். இது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படுகின்றனர்.  இங்கு வழிபடுவதன்மூலம் இரண்யவதம் நடந்த அகோபில மடத்தை வழிப்பட்டதன் பலன் கிடைக்கும்.
திருப்பதி அமைப்புப்படியே மலைமேல்  சீனிவாசப்பெருமாள் இருக்க, கீழ்ப்புற கோவிலில்  அமர்ந்த கோலத்தில் அலர்மேலு தாயார் வீற்றிருக்கிறார். 

திருமணத்தடை நீங்க, குழந்தைவரம் வேண்டி இக்கோவிலுக்கு வருவோர் ஏராளம். குழந்தைப்பேறு வேண்டுவோர், சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்தும், இத்தலத்தில்  சனிக்கிழமை இரவு இத்தலத்தில் தங்கியிருந்தும் வரம் பெறுகின்றனர்.  குழந்தை வரம் பெற்றோர் நேர்த்திக்கடனாய் துலாபாரம் செலுத்துகின்றனர்.  திருப்பதி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாதவர்களும் இவ்விடத்தில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தங்கள் நிலத்தில் விளையும்  விளைப்பொருட்களில் ஒரு பாகத்தை இக்கோவிலுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.  மேலும் துலாபாரமாய் கொடுக்கும் நெல், வெல்லம், சர்க்கரை முதலான பொருட்களும் இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. கரும்பு, வேர்க்கடலை, கம்பு, சோளம்ன்னு அனைத்து விளைப்பொருட்களும் இங்குண்டு.

லட்சுமி நரசிம்மரை வணங்கி மேலும் மலை ஏறினால் வலப்பக்கமிருக்கும் ஆஞ்சநேயரை காணலாம்.
பிருகு முனிவரின் தவக்கோலமே இந்த பாறைவடிவம்ன்னு சொல்றாங்க. 

அங்கிருந்து மலை ஏறினால், ஒரு பெரிய பாறையின்மேல்  பலிபீடம், கொடிமரத்தோடு கூடிய ஆலயத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் சீனிவாசப்பெருமாளை காணலாம்.

திருப்பதி சீனிவாசப்பெருமாளை ஒத்த உருவ அமைப்பு.. ஜருகண்டி, ஜருகண்டின்னு கழுத்தில் கைவைத்து தள்ள ஆள் இல்ல. எவ்வளவு நேரமானாலும் நம்ம வெங்கிக்கூட பேசிக்கிட்டிருக்கலாம். சனிக்கிழமைலதான் சார் ரொம்ப பிசியா இருப்பார். மத்த நாட்களில் தனியாதான் இருப்பார். போய் பேசிக்கிட்டிருக்கலாம்.
ஸ்ரீரங்கத்து ரங்கப்பெருமாள்
சீனிவாசப்பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு பிரகாரத்தை வலம் வருகையில் பாறையை குடைந்து குடவறை கோவில் இருக்கு. அதுக்குள் போனால், ஸ்ரீரங்கத்து ரங்கனையும், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளையும்,  சோளிங்கப்புரத்து யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். 
சோளிங்கப்புரத்து யோக நரசிம்மர் 
காஞ்சிபுரத்து வரதராஜப்பெருமாள்
அமிர்தவல்லி தாயார்
எல்லா கோவில்களிலும் தல தீர்த்தம் கோவில் அருகிலேயே இருக்கும்.ஆனா இத்தலத்து புண்ணிய தீர்த்தமான பாகூ நதி இக்கோவிலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கு.  வயல்வெளிகள் சூழ்ந்த இடமென்பதால் இயற்கை பேரழகு கொட்டிக்கிடக்கும்.    வைகானச ஆகம விதிப்படி அமைந்த வடகலை கோவில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றத்தோடு  தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைப்பெறும்.  சித்திரை சுவாதியில் நரசிம்மர் ஜெயந்தி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மூன்றாம் சனியன்று பெருமாள் கருடசேவை, ஐப்பசியில் தீபாவளி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தையில் காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என விழாக்களுக்குக் குறையில்லை. மாத சுவாதி நரசிம்மருக்கும், திருவோணம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் உகந்த நாள் என்பதால் அன்றைய தினமும் விசேச அபிசேக ஆராதனை உண்டு. 
கடன் தொல்லைக்கு மலையுச்சியில் உள்ள வெங்கடேசப் பெருமாளையும்,  பகை, பில்லி, சூன்யம் போன்றவை நீங்க லட்சுமிநரசிம்மரையும் சரணடைகிறார்கள். பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம்போல இங்கயும் கிரிவலம் வருவது வழக்கம். அதுக்காக, மலையை சுத்தி தார்ப்பாதை போட்டிருக்காங்க. இது மலைன்னு சொல்லுறதைவிட குன்றுன்னு சொல்லலாம். 

இந்த குன்றின்மீது, சரியாக சொல்வதென்றால் சீனிவாசப்பெருமாள் கோவில் இருக்கும் பாறையை குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் சிங்கமுகம்போல காட்சியளிப்பதால் இந்த மலைக்கு சிம்மாசலம்ன்னு பேரு.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  இந்த ஆலயம் இருக்கு. தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  இக்கோவில் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில்  காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆவணியாபுரம் கூட்டு ரோட்டில் சுமாரான ஹோட்டல் இருக்கும்.  அதனால, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசியிலேயே சாப்பிட்டு வந்திடுங்க. இல்லன்னா கட்டுச்சோறு மூட்டை கட்டிக்கிட்டு வாங்க. இந்து அறநிலை துறைக்கட்டுப்பாட்டில் இருப்பதால் தினமும் மதியம் 50பேருக்கு அன்னதானம் நடக்குதுன்னு கேள்வி. கோவில் அருகில் சாதாரண நாட்களில் சோடாகூட கிடைக்காது. சுவாமிக்கு சார்த்த துளசிமாலை, அர்ச்சனை தட்டு மட்டுமே கிடைக்கும். 

பெருமாள் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்...

நன்றியுடன்,
ராஜி


Friday, June 26, 2020

அருள்மிகு சோழராஜா திருக்கோவில், ஒழுகினசேரி-புண்ணியம் தேடி ஒருபயணம்.

லாங்க்.. லாங்க்.. அகோ.. ஒன்ஸ் அப்பான் எ டைம்..  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களை பற்றிய தொடர் ஒன்றை பதிஞ்சது உங்களுக்கு நினைவிருக்கலாம்.   இப்ப லாக் டவுன் காரணமா எங்கும் போகமுடியாத சூழல். ஆடின காலும், பாடின வாயும் மட்டுமல்ல ஊர்சுற்றி எஞ்சாய் பண்ணினதை பதிவாக்கின மனசும்   சும்மா இருக்காது. பதிவாக்காக  எங்காவது போகலாம்ன்னா முடியல. எதையாவது மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சுது.  சரி, எருமைமாடு அசை போடுற மாதிரி டூர் போய் வந்த போட்டோக்களை பார்த்துக்கிட்டே வரும்போது சில கோவில்களை பதிவாக்காம இருந்தது தெரியவர லாஸ்ட் பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி ஒரு பீல் வந்துச்சு.. உடனே இன்னிக்கு அதை பதிவாகவும் போட்டாச்சுது.  

Friday, June 12, 2020

ராகு-கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்- புண்ணியம் தேடி

முன்னலாம் குழந்தை பிறந்ததும் ஜாதகம் எழுத,  திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கவும், திருமணத்திற்கு நாள் குறிக்கவும்தான் ஜோதிடர்களிடம் போவாங்க.  வீட்டில் யாராவது காணாமல் போனால், தீக்கமுடியாத பிரச்சனைகளுக்காகவும் ரொம்ப அரிதா ஜோதிடம் பார்க்க போவாங்க. காது குத்து, சீமந்தம், வீடு கிரகப்பிரவேசம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்களே பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிப்பாங்க. இப்ப யாருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரிவதில்லை. அதனால் எல்லாத்துக்கும் ஜோதிடர்கிட்ட போறாங்க. அதுமட்டுமில்லாம,   ஜாதகம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுதேன்னுலாம் போறவங்களும் இருக்காங்க. 

Friday, January 31, 2020

சாக்லேட் மாலை அணியும் முருகன் - புண்ணியம் தேடி.....

ஒவ்வொரு கோவிலுக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும்.  அந்த கதையினை ஒட்டி ஒவ்வொரு நேர்த்திக்கடன் உண்டு. நெல்லினை துலாபாரமிட்டு கொடுக்கும் கோவில்கள் உண்டு, உருவத்தினை சிலைவடித்து நேர்த்திக்கடன் செலுத்தும்ம் கோவில், புகைப்படத்தினை நேர்த்திக்கடனாய் செலுத்தும் கோவில், தலையில் தேங்காய் உடைப்பது முதற்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் வேகும் வடையினை வெறும் கையினால் எடுக்கும் சம்பவமும் சில கோவில்களில் உண்டு. அந்த வரிசையில், குழந்தைகளுக்கு பிடித்தமான மஞ்ச் சாக்லேட்டினை நேர்த்திக்கடனாய் செலுத்துவதும், அதையே பிரசாதமாய் பெறுவதுமாய் ஒரு கோவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் இருக்கு. அந்த கோவில் பத்திதான் இன்று பார்க்கப்போறோம்.


யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை’ என்றார் திருமூலர். மரம், செடி, கொடிகள், மூலிகைகள் அரிதாகிப்போன காலக்கட்டமிது. அதனால், கடவுளும் அப்டேட்டாகி நாம் அன்போடு நைவேத்தியம் செய்வதை பெரிய மனதோடு ஏற்கிறார். எச்சில் பட்ட நாவல்பழத்தை ராமனும், வேடுவன் ருசிபார்த்த இறைச்சியை ஏற்றுக்கொண்ட சிவனையும்போல, இன்றைய நவநாகரீக உலகத்தில் மன்ச் சாக்லேட்டையும் பிரசாதமாய் ஏற்றுக்கொள்கிறார் முருகப்பெருமான். என்னாது?! மன்ச் சாக்லேட்டையா?! ரீல் விடாதம்மான்னு உங்க மைண்ட் வாய்சை ஐ கேட்ச்.

நான் சொன்னா, நம்ப மாட்டீங்க. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருக்கும் செம்மோத் ஸ்ரீசுப்ரம்ணய ஸ்வாமி திருக்கோவிலுக்கு  ஒரு எட்டு போய் பார்த்தீங்கன்னா நான் சொல்றது உண்மைன்னு தெரியும்.  முருகன் பாலகனாய் இங்கு காட்சி தருகிறார். இந்தக்கால பாலகர்களுக்கு மன்ச் சாக்லேட்ன்னா ரொம்ப இஷ்டம்ன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! நம்ப பிள்ளைகளைப்போல முருகனுக்கும் மன்ச் சாக்லேட்டை பிடிச்சு போக ரெண்டு மூணு கதை சொல்றாங்க.


எட்டாண்டுகளுக்கு முன்னாடி இந்த பாலமுருகன் கோவில் பகுதியில்  விளையாடிக்கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்து ஆண் குழந்தை  முருகன் கோவிலுக்குள் போய், கோவில் மணியின் கயிற்றை பிடித்து அடிச்சிருக்கு. இதைப்பார்த்து பதறிப்போன அக்குழந்தையோட பெத்தவங்க   பதறிப்போய் அக்குழந்தையை கண்டிச்சு தங்கள் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போய்ட்டாங்க.  அன்னிக்கு ராத்திரி அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல். காய்ச்சல் வேகத்தில் குழந்தை முருகா! முருகா!ன்னு முணகி இருக்கு. ரெண்டு, மூணு நாளாகியும் காய்ச்சல் அடங்கல. முணகலும் நிக்கலை.  என்ன செய்றதுன்னு தெரியாம திகைக்கும்போது, விசயம் கேள்விப்பட்டு பாலமுருகன் கோவில் பூசாரி அந்த முஸ்லீம் தம்பதி வீட்டுக்கு போய், எண்ணெயும், பூக்களும் பரிகாரமாய்  பாலமுருகனுக்கு  கொடுத்தால், குழந்தை குணமாகும்ன்னு பரிகாரம் சொன்னார்.

ஒரு முஸ்லீம் , எப்படி இந்து கோவிலுக்கு போறதுன்னு அவங்க தயங்கி நிற்க, பூசாரி அவங்களை ஒருவாறு தேத்தி கோவிலுக்கு கூட்டிப்போய் பரிகாரம் செய்தனர். பெத்தவங்க பரிகாரம் செய்த வேளையில் , கோவில் கருவறைக்கு சென்ற குழந்தை தனது கையில் இருந்த ‘மன்ச்’ சாக்லேட்டை பாலமுருகன் சிலாரூபத்துமுன்  நீட்டியது. குழந்தையின் கையிலிருந்த சாக்லேட் காணாமல் போனது. கூடவே குழந்தையின் காய்ச்சலும் காணாமல் போனது. இந்த விசயம் ஊடகங்களின் வாயிலாக பரவத் தொடங்கிய பின்னர் ஆலப்புழா மாவட்டம் தவிர, கேரள மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து பாலமுருகனின் அருளை பெற்று செல்கின்றனர். இங்குவரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் மன்ச் சாக்லேட்களையே பிரசாதமாக வாங்கியும் போறாங்க.  சாக்லேட் கொடுக்கும் கோவில்ன்றதால் குழந்தைகள் இந்த கோவிலுக்கு ஆர்வமா வருதுங்க.

ஒரு கோவில்ன்னு இருந்தால் அக்கோவில் பத்தி பல கதைகள் இருக்கும். இக்கோவிலும் அதுக்கு விதிவிலக்கல்ல.  இக்கோவில் பத்திய இரண்டாவது கதை.. சில வருசங்களுக்கு முன்னாடி இந்தக் கோவிலுக்கு தன் அம்மாவோட வந்த ஏதோவொரு சின்னக்கொழந்த, முருகனோட சிலைக்கு முன்னால இருந்த படியில மஞ்ச் சாக்லேட்ட வெச்சிட்டு பிரகாரத்த சுத்திட்டு வந்து பாத்தப்போ வெச்சிட்டுப் போன சாக்லேட்டு காணாமபோயிருந்துச்சாம்! உடனே முருன்தான் குழந்தைகிட்டருந்து சாக்லேட்ட எடுத்திருப்பாப்லனு சொல்லி, அன்னைல இருந்து அதே மஞ்ச் சாக்லேட்டையே காணிக்கையாட்டம் கொண்டாந்து கொட்ட ஆரம்பிச்சிருக்காக பக்தர்கள்! (ஒருவேளை உள்ள உட்கார்ந்திருந்த பூசாரியோ அல்லது கோவிலுக்கு வந்தயாரோ ஒருத்தங்கக்கூட அந்த சாக்லேட்டை எடுத்திருக்கலாம்!! ) எது எப்டியோ முருகனையும் இந்த காலத்துக்கு தகுந்தமாதிரி ட்ரெண்டியாகிட்டார். 


அடுத்த கதை... பரிட்சைக்கு படிக்காத என்னையமாதிரி ஒரு குழந்தை!! பரிட்சையில் பாசாகிட்டால் கையிலிருக்கும் சாக்லேட்டையே நேர்த்திக்கடனாய் செலுத்துறதா வேண்டிக்க, அதேமாதிரி பரிட்சையிலும் பாசாகிட, உடனே மன்ச் சாக்லேட்டை கொண்டு வந்து முருகனுக்கு செலுத்த, முருகனும் அதை அன்புடன் ஏற்றுக்கொள்ளவே அன்றிலிருந்து பாலமுருகன் மன்ச் முருகனாய் மாறிப்போனார்.  அன்றிலிருந்து பரிட்சை வேளைகளில் கைகளில் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து வேண்டுதல் செய்யும் மாணவ-மாணவியர்களை இங்க பார்க்கலாம். குழந்தை வரம் வேண்டி, உடல் நலம், மன நலம் சீர்ப்பட இப்படி குழந்தை சம்பந்தமான அனைத்து வேண்டுதலுக்கும் இங்கு மன்ச் சாக்லேட்தான். நம்ம ஊரு எலுமிச்சை மாலை மாதிரி 9, 11, 21,51, 101 எண்ணிக்கையிலான மன்ச் சாக்லேட் மாலைகள் கடைகளில் தொங்குறதை இங்க பார்க்கலாம். துலாபாரம் செலுத்துதல்கூட மன்ச் சாக்லேட்டினை கொண்டுதான். அதனால்தான் இங்க மலைப்போல மன்ச் சாக்லேட் குவிஞ்சிருக்கு.
நம்ம ஊரு கோவில்களில் நேர்த்திக்கடனை செலுத்த வேப்பிலை ஆடை, தீச்சட்டி, காவடிலாம் கோவில் அருகே கிடைப்பதுப்போல் மன்ச் சாக்லேட் மாலை கோவில் பக்கத்துலயே கிடைக்குது. இந்தக்கோவில் 300 ஆண்டுக்கால பழமையானது. ஆனா, 8 வருசமாதான் பிரசித்தமடைஞ்சிருக்கு.  
ட்ரெண்டியாகிப்போன முருகனை பார்க்க இப்ப ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி கூகுள் மேப் உதவியோடு போகலாம்.. ஆலப்புழா புறநகர் பகுதியில் இக்கோவில் இருக்கு. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தென்பகுதியில் இருப்பதால், இக்கோவிலுக்கு தெக்கன்பழனின்னு செல்லப்பெயரும் உண்டு. 


இக்கோவிலை அனூப் செம்மோத் அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலுக்கு சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் வர்றாங்க.  ஒரு "மன்ச்" சாக்லேட் மனிதனின் ஜாதி, மத உணர்வுகளை துடைத்தெறிந்து... ஒன்றாக ஆக்கி இருக்கிறதே... அதுவே நல்ல விஷயம் தான்...!! இதற்காக அந்த முருகனுக்கு எத்தனை மன்ச் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கடவுளர்களின் உணவைக்கூட காலமும், மனிதனும்தான் நிர்ணயிப்பான் போல!!

படங்கள் கூகுள்ல சுட்டது...

நன்றியுடன்,
ராஜி.

Friday, August 02, 2019

கந்தர் சஷ்டி அரங்கேறிய தலம்- புண்ணியம் தேடி....

சின்ன மகளின் கல்லூரி வேட்டைக்காக கோவை பி.எஸ்.ஜி காலேஜுக்கு அப்பா, நான், மகனார், சின்னவளும் ஆளுக்கொரு கனவுமாய் பயணமானோம். இந்த காலேஜ் 45 வருட கனவு என அப்பாவும், பிரண்ட் இருப்பதால் சேஃப்ன்னு அம்மாவும், பிராண்டட் காலேஜ்ன்னு நானும், க்ளைமேட், சிறுவாணி தண்ணி, ஹாஸ்டல் வாசம்,ன்னு பிள்ளைகளும் பல எதிர்பார்ப்புகளோடு, முதன்முதலாய் லாங்க்க்க்க் ட்ரைவ்ன்னு மகனார் கார் ஓட்ட மிக்க மகிழ்ச்சியாய் பயணம் தொடங்கியது.  கோவைக்கு போறோம்.  ரூமில் ப்ரெஷ்சாகிறோம். காலேஜ் போறோம் பணம் கட்டுறோம். பிறகு கோவை குற்றாலம் போகலாம்ன்னு அப்பா பிளான். ரூமில் ப்ரெஷ் ஆனதும்  கோவை குற்றாலம் வேண்டாம் நீங்க நடக்கமுடியாதுன்னு பேமிலி ப்ரண்ட் சொல்ல, மகனார் கேட்டதுக்கு இணங்கி ஈஷா போகலாம்ன்னு முடிவாகி, நேராய் காலேஜ் போய்ட்டோம். அங்கு காத்திருந்தோம்.. காத்திருந்தோம்.. காத்திருந்தோம்... 
Image may contain: one or more people, people standing, sky, cloud, mountain, tree, outdoor and nature

மதியத்துக்கு மேல் உங்க பேரு வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு.. மீண்டும் கூப்பிடுறோம்ன்னு அங்கிருந்தோர் சொல்ல,  மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கும் ஓகே சொல்லி, தூரம் அதிகம் கிட்டத்தட்ட 400கிமீன்னு சொல்லியும் மகளின் திருமண வேலைன்னு எத்தனை கெஞ்சியும் இன்னொரு நாள் வாங்கன்னு சொல்லிட்டாங்க.சீட் கிடைக்காததால் பாப்பா படு அப்செட், சாப்பிடலை, ஒரே அழுகாச்சி.. மூஞ்சியை தூக்கிட்டு உக்காந்ததுல எங்கயும் போகவேண்டாம்ன்னு முடிவு செய்து பேமிலி பிரண்ட் வீட்டுக்கு மட்டும் போய்ட்டு சாப்பிட்டு ரூமில் படுத்துட்டோம். இம்புட்டு தூரம் வந்துட்டு சும்மா போனால் ஆகாது. அதனால், அம்மாவை எங்காவது கூட்டிப்போகலாம்ன்னு மகனாரும், என் அப்பாவும் அவளை சமாதானப்படுத்தி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு போனோம்.  நடராஜரின் அபிஷேக  தரிசனம் கண்குளிர பார்த்தாச்சு. அங்கிருந்து  சிவன்மலை, கொடுமுடி போய்ட்டு, பிறகு சென்னிமலை கோவிலுக்கு போவோம்.அங்கிருந்து பெருந்துறை போகனும்ன்னு ப்ளான். பெருந்துறையில் ஏதோ ஒரு ஹோட்டலை யூட்யூபில் பார்க்க, மதியம் அங்கதான் சாப்பிடனும்ன்னு அப்பா முடிவெடுக்க சிவன்மலையில் தரிசனம் முடிச்சு போய்க்கிட்டிருக்கும்போது அப்பா பிரண்ட் போன் செய்ய.. பயணத்தில் இருப்பதாய் அப்பா சொல்ல, கொடுமுடி தனி ரூட், அங்க போய்ட்டு சென்னிமலைக்கு போனால் மதியம் சாப்பாட்டுக்கு பெருந்துறை வரமுடியாதுன்னு அப்பாவின் நண்பர் சொல்ல, உடனே கொடுமுடி கேன்சல். சென்னிமலை மட்டும் போகலாம்ன்னு முடிவு செய்து வண்டி அந்த பக்கம் திரும்பியது.  அப்பாக்கும் தன் பிரண்ட் ஒருத்தரை சென்னிமலையில் பார்க்கனும்ன்னு இருந்ததால் கொடுமுடி கேன்சல் ஆகிட்டு. கூகுள் மேப் உதவியோடு சிவன்மலையிலிருந்து சென்னிமலைக்கு பயணமானோம்.  என்னம் கூகுள் மேப் பொண்ணு கொஞ்சம் சுத்தல்ல விட்டுடுச்சு. அதும் நல்லதுக்குதான். பல ஊரை , அங்கிருக்கும் மனுஷங்களை பார்க்குறதும் ஒரு அனுபவம்தானே?!

24 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த கொங்குமண்டலத்தின் ஒரு பகுதிதான் பூந்துறை நாடு. பூந்துறையே இன்று பெருந்துறையாய் இருக்கு. அந்த பெருந்துறை வட்டத்தில்  இருக்கு இந்த சென்னிமலை.  நொய்யல் ஆற்றங்கரைல் இருக்கும் இக்கோவிலுக்கு முன்பு சிரகிரி என பெயராம். சிரம்ன்னா தலை, சிறப்பு, உச்சி, மேன்மை.. சென்னி’ன்ற சொல்லுக்கும் அதேப்பொருள். அதனால் பின்னாளில் சென்னிமலை என மாறிடுச்சுன்னு சொல்றாங்க.  அருணகிரி நாதரும், கந்தர் சஷ்டி இயற்றிய பாலன் தேவராயனும் தங்கள் பாடலில் சிரகிரின்னுதான் பாடி இருக்காங்க.  
Image may contain: one or more people, sky, cloud and outdoor


புராண காலத்தில் அனந்தன் என்ற நாகராஜனுக்கும், வாயுதேவனுக்கும் இடையில்  யார் பெரியவர்ன்ற பலப்பரிட்சை வந்ததாம்.  நேருக்கு நேராய் மோதும்போது, அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாக வளைச்சு பிடிச்சுக்கிட்டானாம். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை பிரிக்க,  வாயுதேவன் போராடினார். அந்த போட்டியில் மேருமலையின் உச்சிப்பகுதி உடைஞ்சு, பறந்து வந்து பூந்துறை நாட்டில் விழுந்ததாம். அந்தச் உச்சிப்பகுதிதான் சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரின்னு அழைக்கப்பட்டு, இப்ப சென்னிமலைன்னு  அழைக்கப்படுவதாகவும் சொல்றாங்க. 

Image may contain: people standing and outdoor
300 வருசத்துக்கு முன், சிறுவன் சென்னிமலைக்கு பஞ்சம் பிழைக்க வந்தான். அவனோட ஊர் பேரைக்கொண்டு அவனை செங்கத்துறையான்னு கூப்பிட்டாங்க. ஒரு பண்ணையில் வேலைக்கு சேர்ந்து மாடு மேய்ச்சுக்கிட்டிருந்தான். அவன் கையில் எப்பவும் வேல் இருக்கும் அதனால் அந்த வழியா போன ஒருவர், அந்த பையன்  பார்க்க சென்னியாண்டவர் போலவே இருக்கவே அவனை நிலத்தம்பிரான்னு கூப்பிட்டு அருகில் அழைத்து, ‘இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’ன்னு சொல்லி மறைஞ்சு போயிட்டாராம். 


நிலத்தம்பிரான் வளர்ந்ததும்  சென்னிமலை முருகனுக்கு கோவில் கட்ட தீர்மானித்தார் . கட்டும்போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கும் மதில்சுவர் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் வசம் இருந்தது. மதில் சுவற்றை இணைக்கும் கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்கு தனது சீடர்களுடன் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்து,  அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர். அப்ப அங்க வந்த ஆங்கிலேய அதிகாரி,  யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள் என இங்கிலீஷில் கேட்க, பதிலுக்கு, ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என இங்கிலீஷில் நிலத்தம்பிரான் பதில் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 

ஒரு இந்தியன் தனக்கு ஈடாக இங்கிலீஷில் பேசுவதை பொறுக்காத அதிகாரி, கோபத்துடன்   “மரத்தை வெட்டறதுமில்லாம, திமிரா பேசும் இவனை மரத்தில் கட்டி வைங்க என உத்திரவிட்டான். அவரது உத்தரவை செயல்படுத்த தயங்கிய ஊழியர்கள், சார்! இவர் பெரிய மகான், இவரை தண்டிச்சா நமக்குதான் ஆபத்து, என தாங்கள் பயப்படும் காரணத்தை சொன்னாங்களாம்.
நிலத்தம்பிரானின் சின்ன வயசில், பாம்பு கடிப்பட்ட ஒருவனை காப்பாற்றினார்.  மாடு மேய்க்கும் சிறுவன் எப்படி வைத்தியம் செய்தான் என ஊரார் அவரை விசாரிக்க, எல்லாம் சென்னியாண்டவர் அருள் என நிலத்தம்பிரான் சொன்னார், அன்றிலிருந்து இதுமாதிரியான சின்னசின்ன அபூர்வங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.  மெல்ல மெல்ல அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பணமும் சேர ஆரம்பித்தது. சென்னியாண்டவருக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார்.
Image may contain: outdoor

கோயில் கட்டுபவருக்கு கூலி கொடுப்பதே ஒரு வித்தியாசமான நிகழ்வு. கூலிப்பணம் கொடுக்கும் நாளன்று, பொரிமூட்டையை கொண்டு வந்து  கொட்டி, அதில் கடலையோடு பணத்தையும் கொட்டி நன்றாக கலக்குவார். ஒவ்வொரு கூலியாட்களாக வர, அவருக்கு ரெண்டு கைகளாலும் அள்ளி பொரியை கொடுப்பாராம். அவரவர் செய்த வேலைக்கான கூலி மிக துல்லியமா இருக்குமாம். இப்படி தம்பிரானின் அருமைகளை சொல்லிக்கொண்டு வந்தார் பணியாள்.
Image may contain: outdoor

நிலத்தம்பிரான், அதிகாரியை நோக்கி,  உமது மனைவி, உம்மை கொல்ல கொள்ளிக்கட்டையோடு திமிர்க்கொண்டிருக்கிறாள். சீக்கிரம் வீட்டுக்கு போங்கள் என சொல்ல, விழுந்தடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்த அதிகாரி, அங்கு மனைவி சித்தம் கலங்கி இருந்ததை கண்டு, தனது தவறினை உணர்ந்து, நிலத்தம்பிரானிடம் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வந்து மன்னிப்பு கேட்டார்.தன்னிடமிருந்த விபூதியை பூசி அதிகாரியின் மனைவியை குணப்படுத்தினாராம் நிலத்தம்பிரான். 
Image may contain: tree and outdoor
தல விருட்சமான பன்னீர் மரம்..

பின்னர், தம்பிரான் தேர்ந்தெடுத்த மரத்தினை அதிகாரியே வெட்டி கொண்டுவந்து சென்னிமலையில் சேர்ப்பித்தார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இன்றும் இருக்கும் அந்த முன்கதவுதான் அது. அந்த கதவு ஒற்றை மரத்தால் ஆனது. கோயில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த  சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார்.
Image may contain: cloud, sky and outdoor

லைப்படியருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேல முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள். மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை இருக்கு. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருத்தர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த  தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம்.அதனால் இப்போதும் அந்த சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்!


Image may contain: tree and outdoor

1,320 படிக்கட்டுகள் கொண்ட பாதை வழியாகவும், முடியாதவங்க வாகனத்துல போகும்படி மலைப்பாதை வசதியும் இருக்கு.  நடைப்பாதை வழியா  போனால் கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை  தரிசிக்கலாம்.  வள்ளியம்மன் பாதம் `முத்துக்குமார சாவான்' என்னும் மலைக்காவலர் சந்நிதி,  வரும் ஆற்றுமலை விநாயகர் சந்நிதியையும் தரிசித்து, படி ஏறினால்  திருக்கோயிலை வந்து சேரலாம்.

Image may contain: one or more people, tree, shoes, plant, sky and outdoor

உள்ளே நுழைந்ததும் எப்பவும்போல் வினாயகர் புளியடி வினாயகர்ன்ற பேரில் நம்மை வரவேற்றார். கருவறையில் சுப்ரமணியசுவாமி என்ற பெயரில்  மூலவர் அருள்பாலிக்கிறார். ஆண்டவருக்கு வலப்புறம் உமையவல்லி சமேத மார்கண்டேஸ்வரரும் இடப்புறம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரும் நமக்கு அருள்பாலிக்கின்றனர். 
Image

சென்னிமலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவன், தன் பசுமாடு ஒன்று, ஓரிடத்தில் பால் தானாய் சுரப்பதை கண்டார். தினமும் அதே இடத்தில் அந்த பசுமாடு பால் சொரிவதை கண்டு, என்னவாய் இருக்குமென அந்த இடத்தை தோண்டி பார்க்க, அழகிய முருகன் சிலை ஒன்று இருப்பதை கண்டார். மேலும் தோண்டி அதை வெளியில் எடுக்க தோண்டும்பொழுது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். பயந்து, மலையிலிருந்த சரவணமாமுனிவரை கேட்க, இப்படியே காட்சி தர முருகன் விரும்புகிறான் போல! அதனால், மேலும் தோண்டவேண்டாம் என சொல்ல,  மேலும் தோண்டாமல் நிறுத்திவிட, அன்றிலிருந்து இன்றுவரை அச்சிலை அப்படியே பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது. 
Image may contain: outdoor


இத்தலத்தில் மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக செவ்வாய் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  மூலவரை சுற்றி மீதமிருக்கும் எட்டு நவகிரகங்களும்  வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வணங்கியதற்கு ஈடாகுமாம்.  செவ்வாய் தோசமுள்ளவர்கள், இங்கு வந்து தீபமேற்றி சென்னியாண்டவரை வழிபட்டால் தோஷம் நீங்கிவிடுமாம்.  மேலும் இங்குள்ள முருகனுக்கு இரண்டு தலைகள் இருக்கும். இது அக்னிஜாத தலம் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். 

நல்ல புத்தியை கொடுப்பான்னு சாமியை நல்லா கும்பிட்டுக்கிட்டு பிரசாதம் வாங்கிக்கிட்டு எப்பவும்போல பிரகாரத்தை சுற்றிவர தொடங்கினோம். கருவறைக்கு நேர் பின்னால்,    சில படிக்கட்டுகள் மலைக்கு மேல் போச்சு. அப்பாவால் மலை ஏறமுடியாதுன்னு நாங்களும் போகலை. மகளாக கோவிலுக்கு போகல. ஆனா, பதிவரா படங்களை கூகுள்ல சுட்டாச்சுது. அந்த படிக்கட்டுகளை ஏறிப்போனால்,  வள்ளி, தெய்வானை கோவிலுக்கு போகலாமாம். 
Valli Deivanai shrine (2)

கூகுள்ல சுட்டது...
முருகனுக்கு பக்கத்தில் வள்ளி, தெய்வானையை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இப்படி தனித்தனி சன்னிதியில் இருவரும் வீற்றிருப்பது புதுசு கண்ணா புதுசு. வள்ளியும், தெய்வானையும்  முன் ஜென்மத்துல அமிர்தவல்லி, சுந்தரவல்லின்ற பேரில் முருகனையே திருமணம் செய்துக்கனும்ன்னு இங்கதான் தவம் இருந்ததாய் சொல்றாங்க. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி தெய்வானையின் கற்சிலைக்கு நடுவில் கீழ் ஒரு அற்புத லிங்கமும் இந்த சிலையிலே இருக்குதாம்..
Image result for pinnakku siddhar chennimalai
கூகுள்ல சுட்டது..

வள்ளி, தெய்வானை அம்மன் சன்னதியிலிருந்து மேலும் படியேறி மலைக்கு போனா,  மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின்நாக்கு (புண்ணாக்கு) சித்தர் வாழ்ந்த குகை இருக்கு. அங்கு, வேல்கள் நட்டு வேல்கோட்டமா இருக்காம்.  இதுக்கு பக்கத்தில்தான், சரவணமா முனிவரின் சமாதியும் இருக்காம். மேலும், பல முனிவர்கள் வசித்த குகைகளும் இங்கதான் இருக்கு. 
No photo description available.
 ஸ்ரீபின்நாக்குச் சித்தர்  நவகிரகங்களில் சுக்கிரனைப் பிரதிபலிக்கும். இவரை, வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டால், சுக்கிர தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.  இங்கு மாதம்தோறும் உத்திரம் நட்சித்திரத்தன்று `ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவியின் சென்னிமலை ஸ்ரீபின்நாக்கு சித்தர் அன்னதான அறக்கட்டளை' சார்பா விசேஷ அபிஷேக ஆராதனையும்  அன்னதானமும் நடக்குமாம்.
Pinnakku Siddhar shrine (4)

சுப்ரபாதத்திற்கு அடுத்தபடியா பெரும்பான்மையான வீட்டில் ஒலிப்பது கந்தர் சஷ்டி கவசம்தான். அந்த கந்தர் சஷ்டி கவசம் இந்த கோவிலில்தான் பாடியதாக சொல்றங்க.  சென்னிமலைக்கு சொந்தமான மடவிளாகம்ன்ற ஊரில்  பாலன் தேவராயன் என்பவர் வசித்து வந்தாராம்.  கந்தர் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை திருக்கோயிலே தகுந்த இடம்ன்னு முருகப்பெருமான் பாலன் தேவராயனுக்கு உணர்த்த, இந்தத் திருக்கோயிலுக்கு வந்து  கந்தர் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ததாக சொல்றாங்க. ஆனா, இதுக்கு ஆதாரம் ஏதுமில்லை. 
சித்தர் பாதம்... (கூகுள்ல சுட்டது..)

இத்தலத்து முருகனை குலதெய்வமாய் கொண்டவர்கள்,  தங்களின் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், கோயிலுக்கு வந்து மூலவருக்கு அர்ச்சனை செய்து, முருகப் பெருமானின் சிரசுப்பூ உத்தரவு கிடைத்த பிறகே முடிவு செய்வாங்க. புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவங்க, குழந்தை வரம் இல்லாதவங்க, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுறாங்க, தீர்க்கசுமங்கலியாக இருக்க,  சந்நிதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் இங்க வழக்கமா இருக்கு. அதேமாதிரி, இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணி’ என்னும் சித்திப் பொருள் இருப்பதாகவும், அந்த மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


12.2.1984 அன்னிக்கு, இரட்டை காளைகள் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று, 1000க்கும் மேற்பட்ட படிகளில்  மலைக்கோவிலுக்கு சென்ற அதிசயம் நடந்த இடமாகும். அன்றிலிருந்து  மூலவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியம் செய்யவும் மலையடிவாரத்தில் இருந்து மாமாங்க குளத்திலிருந்து தண்ணீரை கொண்டு வர,  இரண்டு காளைகளை கோவில் நிர்வாகம் வளர்த்து வருகிறது. மாடுகள் படி ஏற சிரமப்படும். அதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகளை ஏறுவதென்றால்?! ஆனா, காளைகள் சிரமப்படாம ஏறுது. இந்த அதிசயத்தை காணவே அதிகாலை வேளையில், கோவிலில் பக்தர்கள் கூடுவார்களாம். 12 வருசத்துக்கொருமுறை எப்பேற்பட்ட கடுங்கோடையிலும்  இந்த மாமாங்க தீர்த்தளம் பொங்கி வழிந்தோடுமாம். 

இக்கோவிலுக்கு ஈரோட்டிலிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் போனால் 33 கிமீ.  பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை இருக்கு. தினமும் காலை 6 மணி டூ 11 மணி வரையிலும், மாலை 4 மணி டூ இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், உள்ளிட்ட முருகனுக்கு உண்டான அத்தனை பண்டிகைகளும் இங்கு விசேசமாய் கொண்டாடப்படுது. 

நன்றியுடன்,
ராஜி