Wednesday, May 31, 2017

அம்மா பகவான் ஆசிரமம் வரதையாபாளம் - மௌனச்சாட்சிகள்

அப்பப்ப கடவுள் இருக்கா?! இல்லியான்னு சஞ்சலம் மனசுல எழுந்தாலும் சாமியார், ஆசிரமம்ன்னாலே அறவே  பிடிக்காது  எனக்கு. எனக்குதான் சாமியார்களை பிடிக்காதே தவிர அதுக்காக மத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்கனுமேன்னு அவங்க விருப்பத்திற்கிணங்க காளகஸ்தி கோவிலுக்கு போய்வரும்போது அம்மா பகவான் ஆசிரமத்துக்கு போய் வந்தோம். எல்லா சாமியார்கள், அவர்களின்  ஆசிரமங்களைப்போலவே இந்த ஆசிரமமும் சர்ச்சைக்குள்ளானதுதான். ஆனாலும், ஆசிரமம் பார்க்க கொள்ளை அழகு. வெள்ளை வெளேர்ன்னு பரந்து விரிந்த அந்த கால அரண்மனைக்கு ஒப்பான இடம். பக்தியோடு போகலைன்னாலும் கட்டிட வேலைப்பாட்டையும்,  அவ்வளவு பெரிய இடத்தை  சுத்தமா பராமரிக்குறதை பார்க்குறதுக்காகவது போகலாம். வாய்ப்பு கிடைச்சா  போய் வாங்க.

முன்னயே ஒருமுறை இந்த ஆசிரமத்துக்கு போய் இருந்தேன். அப்பதான் இந்த இடம் சர்ச்சைல சிக்கி இருந்துச்சு.  இப்ப இருக்குற மாதிரியான பெரிய பெரிய மதில்சுவர் இல்ல. இப்ப அதெல்லாம் கட்டி எங்களை சுத்தல்ல விட்டுட்டாங்க. கால்முட்டி வலியெடுத்திடுச்சு. இது சுத்தி சுத்தி வந்ததாலயா இல்ல ராஜிக்கு வயசாகிட்டுதான்னு தெரில.அப்பாவால ரொம்ப தூரம் நடக்க முடியாது அதனால அப்பா நான் கார்லயே இருந்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. என் இம்சை தாங்க முடியாதுன்னு நினைச்சதாலோ என்னமோ அம்மாவும் கழண்டுக்கிட்டாங்க. இவங்க வந்தா போட்டோலாம் எடுக்க முடியாதுன்னு நானும் அமைதியா விட்டுட்டேன்.  

சாமியார் ஆசிரமம்ங்குறதை நிரூபிக்குற மாதிரி கேட்டுலயே நுழைவுக்கட்டணமா 50ரூபா புடிங்கிக்கிட்டாங்க.  சரி பதிவு தேத்த உதவும்ன்னு மனசை தேத்திக்கிட்டு உள்ள போனா, செல்போன், கேமராவுக்கு அனுமதி இல்லைன்னு பதிவு ஆசைல ஒரு லோடு மண் அள்ளி போட்டுட்டாங்க.  சரி, முன்ன வந்தபோது எடுத்த படத்தை வச்சு பதிவு தேத்திக்கலாம் இல்லன்னாலும் கூகுளாண்டவர்க்கிட்ட கேட்டு வாங்கிக்கலாம்ன்ற ஐடியாவோடு  ஆசிரம அமைப்பு, அங்கு நடக்குறதுலாம் பதிவுக்காக தெரிஞ்சுக்கலாம்ன்னு உள்ள போனேன்.


இராஜபாளையத்தில் செல்லப்பா என்று ஒரு ஆன்மீகவாதி உண்டு. நம்முடைய விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில்  இருக்கிற கிராம மக்கள் அவரை செவிட்டு சாமியார் என அழைப்பார்கள். அவருக்கென்று ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அவர் பெயரில் தாம்பரத்தில் கூட டிரஸ்ட் வைத்திருக்கிறார்கள். அவரை மிஸ்டிக் செல்வம் என்றும் அழைப்பார்கள். 1986 காலங்களில்  அவர் எழுதிய ஆன்மீக திறவுக்கோல் என்னும் நூலில் அவர் பார்த்தவரை கல்கி பகவான்கள் இருந்ததாக கூறியிருக்கிறார். அப்ப யார் ஒரிஜினல் கல்கி பகவான் என தெரியவில்லைன்னு சொல்லி இருக்கார்.
அதேப்போல, இப்பொழுதும் சென்னை உட்பட பல இடத்தில் கல்கின்ற பேர்ல குறி சொல்லுறதா டிவி, பிட் நோட்டீஸ்ல பார்க்குறேன். அட நாராயணா! ஆக மொத்தம் நீ எத்தனை அவதாரம் தான் எடுத்ததே??! விஷ்ணுதான் பல அவதாரங்கள் எடுத்தான்னா நீயும் அவரைப்போலவே பல அவதாரம் எடுத்தியா?! எது போலி எது அசல்ன்னு உனக்கே வெளிச்சம்ன்னு ஜிந்திச்சுக்கிட்டே இருந்ததுல அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னே தெரில. சுயநினைவுக்கு வந்தப்பின் பார்த்தால் நான் வெளிநாட்டில் இருக்கேன்.   என்னை சுத்தி வெள்ளைக்காரங்க போவதும் வருவதுமாய் இருக்காங்க. சனியனே! முழிச்சுக்கிட்டே தூங்குறியான்னு என்னவர் குரல் கேட்டதும்தான் இவருக்கு பாஸ்போர்ட்லாம் கிடையாதே! இவரு எப்படி வெளிநாட்டுக்கு வரமுடியும்ன்னு நிகழ் உலகத்துக்கு வந்தா.....  கல்கி பகவான் ஆசிரமத்திலிருக்கேன். 

சூதனமா இருக்கும் என்னையே!! வெளிநாட்டுல இருக்குறதா நம்புமளவுக்கு வெளிநாட்டவர் கூட்டம். நம்முடைய சனாதன தர்மம் வெளிநாடுகளிலும் பரவுது போல. இங்கே பலவாறாக மதம் மாற்றுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் உணர்ந்து வருகின்றனர் என்றால் இது கண்டிப்பா பாராட்டப்படவேண்டிய விஷயம்.இப்படியே உக்காந்திருந்தா வேலைக்காகாதுன்னு   வரிசையில் நடக்க தொடங்கினேன். வழியெங்கும் ஒலிபெருக்கியில் மந்திரங்களை ஒலிக்கவிட்டு இருந்தனர்.  வண்ண சீருடை அணிந்த சேவர்த்திகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இருந்தனர்..நடந்துக்கிட்டே இந்த அம்மா பகவான் யார்ன்னு அவர் கதையை தெரிஞ்சுக்கலாம் வாங்க...
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் மார்ச் 7,1949 ஆம் வருடம் பிறந்தவர்தான் விஜயகுமார் நாயுடு. ஆரம்பத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். பின்னர் தானே ஒருகுருகுலம் ஒன்றை ஆந்திராவில் இருக்கும் குப்பத்தின் அருகில் தொடங்கினார் என சொல்லப்படுகிறது. இவரை பற்றி தேடித்தேடி படித்தால் ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு தகவல் கிடைக்குது. எல்லாமே முரண்பட்ட தகவல்கள்.    சோ கும்முறவங்க கும்மலாம். ஏன்னா நாம போற இடம் அத்தைனையும் புகையும். ராசி அப்பிடி...


ஆசிரமத்துல இருக்கோமா இல்ல ஷாப்பிங்க் மால்ல இருக்கோமான்ற சந்தேகத்தை உண்டு பண்ணுது இங்கிருக்கும் கடைகள். துணிக்கடைங்க, பூஜை பொருட்கள், அம்மா பகவான் படம் போட்ட கீச்செயின், பேனா, படங்கள் விற்கும் கடைகள், கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகள்ன்னு ஷாப்பிங்க் மால் மாதிரி ஜொலிக்குது. இதுலாம் அம்மா பகவான் ஆசிர்வதித்து தந்த பொருட்கள்ன்னு சொல்லி செமையா கல்லா கட்டுறாங்க. நம்ம ஆட்களைவிட வெளிநாட்டுக்காரங்க இதையெல்லாம் அள்ளிக்கிட்டு போறாங்க. ஆண், பெண்ன்னு தனித்தனி வரிசையில அனுப்புறாங்க.

மெட்டல் டிடெக்ட்டர்லாம் வச்சு நம்மளை செக் பண்றாங்கன்னு பெருமிதப்படுறதா இல்ல அந்தளவுக்கு நான் வொர்த் இல்லன்னு வடிவேலு மாதிரி சொல்லலாமான்னு ஒரு சிந்தனை. இதையெல்லாம் கடந்து முதல் நிலைக்கு வந்துட்டோம். இது சில வருசங்களுக்கு எடுத்த படமிது. இப்ப நிறைய மாற்றங்கள் இங்கு வந்திடுச்சு.

இதுதான் முதல்தளம். இந்த வழியாகத்தான் பிரதான தியான மண்டபத்திற்குள் செல்லவேண்டும். மிகவும் பிரம்மாண்டமான இந்த மண்டபத்துல தூண்கள் இல்லையென்பது கட்டட சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்ப இங்க  அலங்கார சேர் ஒன்னு இருக்கு. இங்கிருந்துதான் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அதேசமயம், பெரிய திரையில் அவர்களது தரிசனமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நானும் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு அங்கே நடப்பவற்றை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு அரங்கமும் சினிமா செட்டிங்க் மாதிரி ரொம்ம்ம்ம்ம்ப பிரம்மாண்டம்.

அந்த அரங்கின் நுழைவாயிலின் மேலலாம் தங்களின் பிரத்யேக சின்னங்களை  வரைஞ்சிருக்காங்க.  இப்பலாம் நீங்கள்  இந்த இடத்தில நின்று பொறுமையாக பார்க்கமுடியாது. ஏன்னா இதுவழியாகத்தான் எல்லா இடத்துக்கும் போகனும். யாரோ ஒருத்தங்க போட்டோ எடுக்க முயற்சி செஞ்சார். அங்கிருந்த சேவார்த்தி ஓடிவந்து இங்குலாம் படமெடுக்கக்கூடாதுன்னு சொல்லி போனை வாங்கி வச்சுக்கிட்டார். அப்படின்னா ஏன் இந்த மண்டபம்ன்னு ஒரு பக்தர் முணுமுணுத்தார். மனிதர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்டப்பட்டது எனவும் இந்த இடத்தில பழங்காலத்தில் பல ரிஷிகள் தவம் செய்ததாகவும், அதுலாம் உங்களுக்கு சொன்னா புரியாது அப்படின்னு  பதில் சொல்லிக்கிட்டிருந்தார் இப்படிதான் சொன்னா புரியாது ,புரியாதுன்னு  சொல்லி சொல்லியே பல நல்ல விசயங்கள் வெளிய வராம போய்டுச்சுன்னு ஓங்கி சொல்லனும்போல இருந்ததை எப்பயும் போல வார்த்தைகளை முழுங்கிட்டேன்.
அப்படியே நடந்து முதல் தளத்தின் மைய பகுதிக்கு வந்துவிட்டேன் .இங்கிருந்து பார்க்க தூரத்தில் ஒரு நீர்நிலை அழகாக இயற்கை அழகுடன் அழகாக தெரிகின்றது .இந்த இடம் முழுக்க முழுக்க வெள்ளை மார்பிள் கொண்டு அழகாக வடிக்கப்பட்ட ஜன்னல்கள், தூண்கள்ன்னு எல்லாமே செம அழகு தூண்களே இல்லாத 22,500 ச.மீ பரப்பளவுள்ள தியான மண்டபம் ஆசியாவிலேயே இங்குதான் உள்ளது. இது நவீன கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு.  இங்கிருக்கும் தூண்கள் ஒவ்வொன்றும் 50மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த ஆசிரமம் மூன்று நிலைகளை கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் பெரிய தியான மண்டபங்களை கொண்டது. ஒரே சமயத்தில் ஒவ்வொரு மண்டபத்திலும்  8000 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து  தியானம் பண்ண முடியும்.

தரை மற்றும் முதல்தலை  தியான மண்டபம் 6700 மீ   ஆகும். அதற்கு மேல் இருக்கும் மண்டபம் 2500 மீ  பரப்பளவு கொண்டது . இதன் உயரம் 35.85 மீ. இந்த ஆஸ்ரமம்  130 மீ x 106 மீ உயர மேடையில் கட்டப்பட்டு 4  பக்கங்களும் நீரினால் சூழப்பட்டு இருக்கிற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.அதாவது ஒரு நீரோடை போல் அமைத்து உள்ளனர்  இந்த அமைப்பு வளிமண்டலத்தை நோக்கி இருப்பதாக அமைக்கப்பட்டு இருப்பது மனித உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளை பெருக்கி மனஒருநிலைப்பாட்டையும் தியான  எண்ணங்களை பெருக்கவும்  உதவுகின்றது என சொல்லப்படுது .

நடு தளத்தில் இருக்கும் மண்டபம்  அர்த்தகர்மா  ஹால் என அழைக்கப்படுது. இங்கு தியானிப்பதன் மூலம் ஒருவரது நியாயமான ஆசைகள் நிறைவேறும் வகையில் வடிவமைக்கப்பட்டதுன்னு சொல்லப்படுது. அதற்கு மேலே தூண்களே இல்லாத மண்டபம் தர்ம மோட்ஷம் என்று அழைக்கப்படுகிறது .இங்குதான் 36 இன்ச் விட்டமுள்ள தங்க உருண்டை வைக்கப்பட்டுள்ளது. இந்த உருண்டையின் முன்பு அவரவர் கடவுளையோ குலதெய்வத்தையோ பிராத்தனை செய்யனும்ன்னு  சொல்லப்படுது. நானும் அங்கே  எனது குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டேன்,.நாம என்னிக்கு அறிவு சொல்லுறதை கேட்டிருக்கோம்?!

இந்த தங்க உருண்டை  பாண்டிச்சேரி ஆரோவில் கோல்டன் க்ளோப் வடிவமைத்த பிரபாத் போடர் என்பவரால் வடிமைக்கப்பட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். நாமும் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த கட்டிடக்கலையின் அமைப்பை வியந்து பார்த்து வீட்டுக்கு திரும்பினோம். நம்பிக்கை என்பது அவரவரது சொந்த விருப்பம். நமக்கு அதில்  கருத்து  சொல்ல உரிமை இல்லை. எப்பொழுது அது நம்மை அல்லது நம் சமுதாயத்தை பாதிக்கிறதோ  அப்ப நிச்சயம் நம்முடைய கருத்துக்களை நாம் பதிவு செய்யவேண்டும் .

ஒரு வழியாக எல்லா இடத்தையும் சுத்திபார்த்துட்டு  அங்கிருந்து வெளியே வந்தோம்.  சூப்பரான கேன்டீன் இங்க இருக்கு. நமக்கு இதானே முக்கியம். இதுமட்டுமில்லாம  சுத்தமான கழிப்பறை, குளியல் வசதியுமிருக்கு. அதேப்போல் வாகன நிறுத்தும் வசதி, ஓய்வெடுக்க நல்ல புல்தரையும் இருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய இடம்.  ஆன்மீகம், சர்ச்சைக்குள்ளான இடம்ங்குறதை தாண்டி பார்த்து ரசிக்க வேண்டிய இடம்ங்குறதால போகலாம். கட்டிடங்களின் மேல் காதல் கொண்டவங்க அவசியம் பார்க்கனும்.

இந்த ஆஸ்ரமத்தின் வாசலில் இருந்தே சென்னைக்கு நேரடியாக பஸ் வசதிகள் இருக்கு. அதுக்கடுத்து அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து தடா வந்துவிட்டால் தடா  -சென்னை வழித்தடத்தில் நிறைய பஸ் வசதிகள் இருக்கு.பக்கத்தில் தடா ரயில் நிலையமும் இருக்கு இங்கிருந்து எலக்ட்ரிக் ட்ரைன் வசதியும் இருக்கு .அதைத்தவிர  தமிழ்நாடு அரசு போக்குவரத்து பஸ்களும் இருக்கு. திருப்பதி, காளகஸ்தி செல்லும் வழித்தடங்களில் இருக்கும் பஸ்கள் தடா மூலமும் சென்னைக்கு வரலாம். இதன் அருகில் ஒரு அருவி இருக்கிறது இங்கே தண்ணீர் எப்பொழுதும் வருவதில்லை. இதற்கு உப்பலமடுகு நீர்வீழ்ச்சின்னு பெயர். வாங்க,  அதையும் ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம் .
File:Tada forest map.jpeg

இந்த அருவிக்கு தடா, கம்பகம்,  உப்பலமடுகுன்னு பல பேரு. இந்த இடம் புச்சிநாயுடு கன்ரிகா மற்றும் வரதபாளையம் என்று சொல்லப்படுகிற வரதையாபாளம் மண்டலத்தின் கீழ்வரும் ஸ்ரீசிட்டிக்கு வடக்கே இருக்கு. இது சித்தூர் மாவட்டத்துல சேர்ந்தது. சென்னையிலிருந்து இது 80 கிமீ தொலைவில் இருக்கு. அதேச்சமயம் காளகஸ்தில இருந்து போறவங்க அங்கிருந்து 35 கிமீ தொலைவில் பயணம் செய்தா இந்த அருவிக்கு போய்டலாம். இந்த நீர்வீழ்ச்சி காம்பகம் காடுன்னு சொல்லப்படுகிற  சித்துலியா கோனா என்ற காட்டுப்பகுதியில் உள்ளது. இங்கே ஒரு சிறிய சிவன் கோவிலும் உள்ளது மகா சிவராத்திரி அன்று நிறையபேர் வருவாங்க.  இது ஒரு சின்ன அருவியே. மத்தபடி  இங்கே பசுமையான நீர்வீழ்ச்சி, சின்ன சின்ன பற்றைகள் அதில் நெளிந்தோடும் சின்ன நீரோடைகள் என இந்த இடம் மலையேற்றம் மற்றும் விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடமாகும். முக்கியமான விஷயம் கவனிக்க இங்கேயும் குடிமக்கள் தொல்லை இருக்கு அதுனால கூட்டமாக செல்வது நலம்.

இந்த அருவிக்கு செல்ல வரதையாபாளம் கிராமத்தின் வழியாக சுமார் 12 கிமீ தொலைவு போகனும். அதில் 7 கிமீ அளவுதான் ரோடு இருக்கு. மத்தபடி சாலை எல்லாம் சரியான வசதியில் இல்ல. மக்கள் கூட்டம் கூட சிவராத்திரி அன்று தான் அதிகமாக காணப்படும். மத்தபடி குடிமக்களும், லவ்வர்சும்தான் அதிகமாக போவாங்கன்னு சொல்றாங்க. அப்படி தனியா போகும் லவ்வர்சை மிரட்டி தங்களுக்கு ‘தேவையானதை’ பறிச்சுக்குவாங்க. அதனால, குடும்பத்தோடு தக்க துணையோடு போவது நல்லது.  பக்கத்தில எந்தக்கடைகளும் கிடையாது. ஏதாவது வாங்கணும்ன்னா காள்கஸ்தி, வரதபாளையம், தடாவிலிருந்து  தேவையானவற்றை வாங்கி செல்வது நலம். 3 மணி ஆகிவிட்டது என்றால் கட்டாயம் இந்த அருவி இல்லை காட்டுப்பகுதியில் இருந்து கிளம்பிவிடுங்கள். அதுக்கு மேல இருந்தா வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்ன்னு அங்கிருக்கும் போலீஸ்க்கார் எச்சரிக்குறார். 

இங்கே செல்வதற்கு மலையேறுன பயிற்சி இருந்தா ரொம்ப நல்லது. கற்களும், பாறைகளும் கால்களை பதம் பார்க்கலாம். மேலும் இங்கே பலமுறை சென்றவர்களுடன் செல்வது நலம்.  ஏன்னா இங்கே எந்த வழிகாட்டி குறியீடுகளும் இல்ல. வழிமாறி செல்லாமல் இருக்க இது அவசியம். உடல்நல குறைவு உள்ளவர்களை இந்த பாறைகளின் மேல் மூச்சுவாங்க ஏற்றி இறக்கி பயணம் செய்யவைப்பது நல்லதல்ல . போகும்போது க்ளுக்கோஸ்,பிஸ்கெட், பர்பி, எள்ளுருண்டை மாதிரியான உடலுக்கு சக்தி தரும் நொறுக்ஸை கொண்டு போகலாம். மறக்காம கொண்டு போற பிளாஸ்டிக் கவரை பைல போட்டு எடுத்து வந்து மலை அடியில் இருக்கும் குப்பை தொட்டில போடுங்க. 
File:Tada falls area.jpeg
நாங்கள் சென்றிருக்கும்போது சென்னையில் இருந்து சிலர் தங்கள் தோழிகளுடன் குரூப்பாக வந்திருந்தனர்.அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தடா ரயில் நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் வந்ததாக கூறினர் . இங்கே 4 கிமீ கடினமான கற்பாறைகள் ஒருக்கும். அதில் கவனமாக செல்லவேண்டும். வழியில் இருக்கும் நீரோடைகள் பச்சைபசேலென காடுகள் என பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது .
Image result for tada falls images

நாங்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றோம் .சுமார் 150 மீட்டர் மலையேற்றத்திற்கு பிறகு சிறு ஓடையொன்று வந்தது.  அதையும் கடந்து மீண்டும் ஒரு மலைப்பாதையில் சென்றோம். இதற்கே ஒன்றரை மணிநேரத்துக்கு மேலாக ஆகிவிட்டது . அங்கே  இரு சிவன் கோவில் இருந்தது. எங்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள் கூறினார்கள். அப்படி ஒன்றரை மணிநேரத்திற்குள் இந்த சிவன் கோவில் வரவில்லை என்றால் நாம் வேறு பாதை வழியாக வந்திருக்கிறோம் என்று அர்த்தம். அப்படி வழிமாறும் பட்சத்தில்  அருகிலுள்ள ஓடையை தேடி அதன் கரையோரமே மலையேறுவது நல்லது.  இந்த கோவிலுக்கு பிறகு  பாதை மிகவும் கடினமானதாக இருக்கும்.  சில நேரங்களில் 10 அடி பாறைகளையும் பிடித்து  ஏறவேண்டிவரும். மலையேற்றத்தின் முடிவில் இரண்டு நீர்வீழ்ச்சிகளை காணலாம். கோடைக்காலங்களில் ஒன்றில் மட்டுமே நீர் இருக்கும்.  ஆனால் இப்பொழுது அங்கு எந்த அருவியில் தண்ணீர் இல்லை .

ஆனால் சிறு சிறு நீரோடைகள் ஆங்காங்கே ஓடிக்கொண்டு இருக்கின்றன. சுற்றிலும் இயற்கை வளம்லாம் கண்டுகளித்து கரடு முரடான பாறையின் மேல் நடந்து சென்றோம். இங்கே வருபவர்களில் 90%தமிழர்களே ஏன்னா அவர்கள் போதையில் பேசிய வார்த்தைங்கள் கேட்கமுடியவில்லை மலையெங்கும் எதிரொலிக்கிறது.சொற்பமான ஆந்திராக்காரர்கள் மற்றும் வாகனங்களை பார்க்கமுடிந்தது. மீதி எல்லாம் தமிழ்நாட்டு வண்டிகளும் பைக்குகளும்தான்.  அங்கே வந்த சில தமிழ் இளைஞர்கள் அருவில் தண்ணி இல்லை மேலும் அங்கே இப்பொழுது செல்லவேண்டாம் என்று நல்லுள்ளதோடு சொன்னதால் எங்கள் பயணத்தை அருகில் இருந்த சிறிய நீரோடையில் கை கால்கழுவி இறைவனை தியானித்து முடித்துக்கொண்டோம்.
தமிழகத்து சிவனடியார்களுக்கு  எப்படி சதுரகிரி, வெள்ளியங்கிரி, பர்வதமலை  புண்ணியஸ்தலமோ அதுமாதிரி  ஆந்திர எல்லை மாநில எல்லை மக்களுக்கு இந்த இடம். இந்த இடத்துக்கு சின்ன வயசுல ஒருமுறை சென்றிருக்கிறேன். கனவு கண்டது மாதிரி இருக்கு. ஆண் பிள்ளை வரம் வேண்டி என் அப்பா அம்மா ஒருநாள் பௌர்ணமி இரவை இந்த காட்டுல இருக்கும் சிவனை நோக்கி விரதமிருந்து வேண்டிக்கிட்டாங்க. அந்த பௌர்ணமி இரவு முழுக்க இங்குதான் இருந்தோம். அங்கயே சமைச்சு சாப்பிட்டு தங்கினோம். அப்பா, அவங்க நண்பர்கள், அவங்க குடும்பம்ன்னு மகிழ்ச்சியா இருந்தது புகைமூட்டம் போல நினைவுக்கு வந்தது.  இதுக்கு பெரிய கோண மலைன்னு பேரு. இதே சித்தூர் மாவட்டத்துல இன்னொரு கோணை மலை இருக்கு. அதுக்கு சின்ன கோணை மலைன்னு சொல்வாங்க. அங்கயும் சின்னதா ஒரு சிவன் கோவில் உண்டு.  அங்கயும் குடிமக்கள் நடமாட்டம் உண்டு. அங்கு இப்படிலாம் கஷ்டப்பட்டு நடக்கவேண்டாம். அருவிக்கிட்டயே நம்ம வாகனத்துல போகலாம். பஜ்ஜி, போண்டா, கூல்ட்ரிங்க்ஸ்ன்னு விக்கும் சின்ன சின்ன கடைகள் சின்ன கோணைமலைல இருக்கு.

இந்த மாதிரியான இடங்களுக்கு போகும்போது நாம் கொண்டு போகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை அங்கங்க வீசி எறியாம வனப்பகுதிக்கு கீழ கொண்டுவந்து குப்பைத்தொட்டில போடுற பழக்கத்தை வச்சுக்கனும். ஏன்னா நம்மை போலவே மத்த இனங்களும் உயிர் பிழைக்கனுமே. நம்ம வீட்டுக்கு வந்து யாராவது விஷத்தை கண்ட இடத்துல போட்டு போனா நம்ம கதி?! குடிமக்களும் சரக்கடிச்ச பாட்டில்களை கண்ட இடத்துல உடைக்காம இருக்குறது நலம். இது மனுஷங்க காலை மட்டுமல்ல காட்டு விலங்கு காலையும் பதம் பார்க்கும். இந்த காயம் சிலநேரம் உயிருக்கே ஆபத்தை உண்டு பண்ணும்..  

அதனால, வாழ்வோம்.... அடுத்த உயிரையும் வாழவிடுவோம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461767
 நன்றியுடன்     
ராஜி . 

24 comments:

 1. கடவுளை நம்புகிறவர்கள்தான் இந்த மாதிரியான சோத்தை திங்கிற மனுஷனையும் கடவுளாக நினைத்து தேடிப்போறாங்க இது கடவுளுக்கு செய்யிற துரோகம்.

  சென்னையில் பல அனாதை ஆஸ்ரமங்களில் தாய்-தந்தை இல்லாத குழந்தைகள் இருக்காங்க அவர்களைப்போய் பார்த்து உதவினால் நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும்.

  நித்தியானந்தா போல இவங்கே என்றைக்கு நாறப்போறாங்களோ....

  த.ம

  ReplyDelete
  Replies
  1. இவங்க கதையும் நாறியாச்சு சகோ. சாமியார்ன்னாலே ஃப்ராடுங்கன்னு ஆகிப்போச்சு. அதுக்க்கு இவரும் விதிவிலக்கல்ல. ஆசிரமத்துக்குள் போதை மருந்து கொடுத்து தங்கள் வசப்படுத்திக்குறாங்கன்னு கொஞ்ச காலம் முன் பேப்பர்ல நியூஸ்லாம் வந்துச்சு.

   சாமியார்ங்குறதுக்காக போக வேணாம். இடம் செம அழகு. முழுக்க முழுக்க சலவைக்கல்லால் ஆன கட்டிடம். அதை ரசிக்க போகலாம்.

   Delete
 2. இந்த மாதிரியான இடங்களுக்கு போகும்போது நாம் கொண்டு போகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை அங்கங்க வீசி எறியாம வனப்பகுதிக்கு கீழ கொண்டுவந்து குப்பைத்தொட்டில போடுற பழக்கத்தை வச்சுக்கனும். ஏன்னா நம்மை போலவே மத்த இனங்களும் உயிர் பிழைக்கனுமே.//

  அருமை.
  வாழ்வோம்.... அடுத்த உயிரையும் வாழவிடுவோம்//
  நன்றாக சொன்னீர்கள்.


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. நான் சொன்னது சரிதானே?! பிளாஸ்டிக் கவர், உடைஞ்ச கண்ணாடி பாட்டிலால பல உயிர் பாதிக்குது சகோ

   Delete
 3. நல்ல ரசனையுள்ள பகிர்வு. சுற்றுலா தலமென இதனைப் பற்றிய பார்வையின் வெளிப்பாடு அருமை. ஆன்மீகத்தில் எதற்கு ஒளிவு மறைவு என்று , புகைப்படம் எடுக்க அனுமதிக்காத்தை நீங்கள் சாடியுள்ள விதமும் அருமை. நல்லதொரு பயணக் கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. மேலும் இதனை ஆன்மீகத்தலமாக நினைத்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் போல

   Delete
  2. சரியா சொன்னீங்க சகோ. இங்கு பல சர்ச்சைகள் எழுந்திருக்கு. நமக்கு குறைன்னா தெருவுக்கு நாலு கோவில் இருக்கு. அங்க போய் மனமுருகி வேண்டிக்குவோம். நூத்தி எட்டு சாமி இருக்கு இந்தியாவுல... அவைகள்லாம் தீர்க்காத பிரச்சனையை இந்த சாமியார்கள் தீர்த்துடுவாங்களா என்ன!?

   Delete
  3. யாரெல்லாம் மனசாட்சி இல்லாமல் ,மற்றவர்களை ஏமாற்றி காசு,பணம்,துட்டு சம்பாதிக்கிறார்களோ அவங்க தான் இந்த சாமியார்களிடம் ஏமாறுகிறார்கள்

   Delete
  4. எத்தனை பட்டும், எத்தனை சாமியார்கள் ஏமாத்தினாலும் விட்டில் பூச்சிக மாதிரி போய் விழுகுறவங்களை என்ன சொல்ல?!

   Delete
 4. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. அம்மா சாமியார் தெரியும் ஆனா இது அழகு பிரமாண்டம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. இந்த படங்கள் எடுத்து சில வருடங்களுக்கு முன். இப்ப இன்னும் பிரம்மாண்டமாகவும், பிரம்மிக்கத்தக்கதாகவும் இருக்கு சகோ. கிட்டத்தட்ட இஸ்கான் டெம்பிள் போல

   Delete
 6. நேமத்திலுள்ள ஆசிரமத்திலும் வியாபாரம் படுஜோர், லட்டு ரூபாய் அறுபது சாப்பாடு ரூபாய் நாற்பது இப்படி வரதபாளையம் போகவில்லை தங்கள் பதிவு மிக நன்கு

  ReplyDelete
  Replies
  1. பணம் புடுங்குறதுன்னு வந்துட்டா எல்லாமே டபுள் ரேட்தான்

   Delete
 7. வியாபாரத்தில் No.1 இவர்கள் தான்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா, பேசாம நான் கூட சாமியாரிணி ஆகி கல்லா கட்டலாம்ன்னு இருக்கேன்

   Delete
 8. இவர்களுக்கு இவ்வளவு கோடி சொத்து எப்படி வந்தது என்ற கதையைக் கேட்டால் நாறிப் போகும் :)

  ReplyDelete
  Replies
  1. நாறிப்போயி ரொம்ப நாளாச்சுண்ணே. போதை மருந்துகள் செலுத்தி தங்களுக்கு அடிமையாக்கி சொத்துக்களை வாங்கிக்கிட்டதா புகார் வந்துச்சே சில வருடங்களுக்கு முன். எல்லா சாமியார்களும் ஒன்னுதான் இந்த விசயத்துல..

   Delete
 9. //எத்தனை அவதாரமோ கல்கி?//

  வாராவாரம் சனிக்கிழமைகளில் கல்கி எங்கள் வீட்டுக்கே வருகிறது!!!

  இந்த அம்மையார் பற்றி ஒரு ஸ்பான்சர்ட் ப்ரோக்ராம் விஜய் டீவியில் வந்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. அவர் சொன்ன கல்கி வாரப்பத்திரிகை இல்ல. ஆமா சகோ விஜய் டிவில வந்துச்சு. இப்ப நித்தி, ஜக்கி மாதிரி இவங்களும் டிவியால வளர்ந்தவங்கதான்.

   Delete
 10. சாமியார் தான் உலகம்னு வாழுரவன் கிட்ட நாம என்ன சொன்னாலும் எடுபடாது. அதுவும் ஒருவகை போதை அவனை அந்த போதைக்கு அடிமையாக்கிவிடுகிறார்கள்

  ReplyDelete