Friday, January 31, 2020

சாக்லேட் மாலை அணியும் முருகன் - புண்ணியம் தேடி.....

ஒவ்வொரு கோவிலுக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும்.  அந்த கதையினை ஒட்டி ஒவ்வொரு நேர்த்திக்கடன் உண்டு. நெல்லினை துலாபாரமிட்டு கொடுக்கும் கோவில்கள் உண்டு, உருவத்தினை சிலைவடித்து நேர்த்திக்கடன் செலுத்தும்ம் கோவில், புகைப்படத்தினை நேர்த்திக்கடனாய் செலுத்தும் கோவில், தலையில் தேங்காய் உடைப்பது முதற்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் வேகும் வடையினை வெறும் கையினால் எடுக்கும் சம்பவமும் சில கோவில்களில் உண்டு. அந்த வரிசையில், குழந்தைகளுக்கு பிடித்தமான மஞ்ச் சாக்லேட்டினை நேர்த்திக்கடனாய் செலுத்துவதும், அதையே பிரசாதமாய் பெறுவதுமாய் ஒரு கோவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் இருக்கு. அந்த கோவில் பத்திதான் இன்று பார்க்கப்போறோம்.


யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை’ என்றார் திருமூலர். மரம், செடி, கொடிகள், மூலிகைகள் அரிதாகிப்போன காலக்கட்டமிது. அதனால், கடவுளும் அப்டேட்டாகி நாம் அன்போடு நைவேத்தியம் செய்வதை பெரிய மனதோடு ஏற்கிறார். எச்சில் பட்ட நாவல்பழத்தை ராமனும், வேடுவன் ருசிபார்த்த இறைச்சியை ஏற்றுக்கொண்ட சிவனையும்போல, இன்றைய நவநாகரீக உலகத்தில் மன்ச் சாக்லேட்டையும் பிரசாதமாய் ஏற்றுக்கொள்கிறார் முருகப்பெருமான். என்னாது?! மன்ச் சாக்லேட்டையா?! ரீல் விடாதம்மான்னு உங்க மைண்ட் வாய்சை ஐ கேட்ச்.

நான் சொன்னா, நம்ப மாட்டீங்க. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருக்கும் செம்மோத் ஸ்ரீசுப்ரம்ணய ஸ்வாமி திருக்கோவிலுக்கு  ஒரு எட்டு போய் பார்த்தீங்கன்னா நான் சொல்றது உண்மைன்னு தெரியும்.  முருகன் பாலகனாய் இங்கு காட்சி தருகிறார். இந்தக்கால பாலகர்களுக்கு மன்ச் சாக்லேட்ன்னா ரொம்ப இஷ்டம்ன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! நம்ப பிள்ளைகளைப்போல முருகனுக்கும் மன்ச் சாக்லேட்டை பிடிச்சு போக ரெண்டு மூணு கதை சொல்றாங்க.


எட்டாண்டுகளுக்கு முன்னாடி இந்த பாலமுருகன் கோவில் பகுதியில்  விளையாடிக்கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்து ஆண் குழந்தை  முருகன் கோவிலுக்குள் போய், கோவில் மணியின் கயிற்றை பிடித்து அடிச்சிருக்கு. இதைப்பார்த்து பதறிப்போன அக்குழந்தையோட பெத்தவங்க   பதறிப்போய் அக்குழந்தையை கண்டிச்சு தங்கள் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போய்ட்டாங்க.  அன்னிக்கு ராத்திரி அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல். காய்ச்சல் வேகத்தில் குழந்தை முருகா! முருகா!ன்னு முணகி இருக்கு. ரெண்டு, மூணு நாளாகியும் காய்ச்சல் அடங்கல. முணகலும் நிக்கலை.  என்ன செய்றதுன்னு தெரியாம திகைக்கும்போது, விசயம் கேள்விப்பட்டு பாலமுருகன் கோவில் பூசாரி அந்த முஸ்லீம் தம்பதி வீட்டுக்கு போய், எண்ணெயும், பூக்களும் பரிகாரமாய்  பாலமுருகனுக்கு  கொடுத்தால், குழந்தை குணமாகும்ன்னு பரிகாரம் சொன்னார்.

ஒரு முஸ்லீம் , எப்படி இந்து கோவிலுக்கு போறதுன்னு அவங்க தயங்கி நிற்க, பூசாரி அவங்களை ஒருவாறு தேத்தி கோவிலுக்கு கூட்டிப்போய் பரிகாரம் செய்தனர். பெத்தவங்க பரிகாரம் செய்த வேளையில் , கோவில் கருவறைக்கு சென்ற குழந்தை தனது கையில் இருந்த ‘மன்ச்’ சாக்லேட்டை பாலமுருகன் சிலாரூபத்துமுன்  நீட்டியது. குழந்தையின் கையிலிருந்த சாக்லேட் காணாமல் போனது. கூடவே குழந்தையின் காய்ச்சலும் காணாமல் போனது. இந்த விசயம் ஊடகங்களின் வாயிலாக பரவத் தொடங்கிய பின்னர் ஆலப்புழா மாவட்டம் தவிர, கேரள மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து பாலமுருகனின் அருளை பெற்று செல்கின்றனர். இங்குவரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் மன்ச் சாக்லேட்களையே பிரசாதமாக வாங்கியும் போறாங்க.  சாக்லேட் கொடுக்கும் கோவில்ன்றதால் குழந்தைகள் இந்த கோவிலுக்கு ஆர்வமா வருதுங்க.

ஒரு கோவில்ன்னு இருந்தால் அக்கோவில் பத்தி பல கதைகள் இருக்கும். இக்கோவிலும் அதுக்கு விதிவிலக்கல்ல.  இக்கோவில் பத்திய இரண்டாவது கதை.. சில வருசங்களுக்கு முன்னாடி இந்தக் கோவிலுக்கு தன் அம்மாவோட வந்த ஏதோவொரு சின்னக்கொழந்த, முருகனோட சிலைக்கு முன்னால இருந்த படியில மஞ்ச் சாக்லேட்ட வெச்சிட்டு பிரகாரத்த சுத்திட்டு வந்து பாத்தப்போ வெச்சிட்டுப் போன சாக்லேட்டு காணாமபோயிருந்துச்சாம்! உடனே முருன்தான் குழந்தைகிட்டருந்து சாக்லேட்ட எடுத்திருப்பாப்லனு சொல்லி, அன்னைல இருந்து அதே மஞ்ச் சாக்லேட்டையே காணிக்கையாட்டம் கொண்டாந்து கொட்ட ஆரம்பிச்சிருக்காக பக்தர்கள்! (ஒருவேளை உள்ள உட்கார்ந்திருந்த பூசாரியோ அல்லது கோவிலுக்கு வந்தயாரோ ஒருத்தங்கக்கூட அந்த சாக்லேட்டை எடுத்திருக்கலாம்!! ) எது எப்டியோ முருகனையும் இந்த காலத்துக்கு தகுந்தமாதிரி ட்ரெண்டியாகிட்டார். 


அடுத்த கதை... பரிட்சைக்கு படிக்காத என்னையமாதிரி ஒரு குழந்தை!! பரிட்சையில் பாசாகிட்டால் கையிலிருக்கும் சாக்லேட்டையே நேர்த்திக்கடனாய் செலுத்துறதா வேண்டிக்க, அதேமாதிரி பரிட்சையிலும் பாசாகிட, உடனே மன்ச் சாக்லேட்டை கொண்டு வந்து முருகனுக்கு செலுத்த, முருகனும் அதை அன்புடன் ஏற்றுக்கொள்ளவே அன்றிலிருந்து பாலமுருகன் மன்ச் முருகனாய் மாறிப்போனார்.  அன்றிலிருந்து பரிட்சை வேளைகளில் கைகளில் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து வேண்டுதல் செய்யும் மாணவ-மாணவியர்களை இங்க பார்க்கலாம். குழந்தை வரம் வேண்டி, உடல் நலம், மன நலம் சீர்ப்பட இப்படி குழந்தை சம்பந்தமான அனைத்து வேண்டுதலுக்கும் இங்கு மன்ச் சாக்லேட்தான். நம்ம ஊரு எலுமிச்சை மாலை மாதிரி 9, 11, 21,51, 101 எண்ணிக்கையிலான மன்ச் சாக்லேட் மாலைகள் கடைகளில் தொங்குறதை இங்க பார்க்கலாம். துலாபாரம் செலுத்துதல்கூட மன்ச் சாக்லேட்டினை கொண்டுதான். அதனால்தான் இங்க மலைப்போல மன்ச் சாக்லேட் குவிஞ்சிருக்கு.
நம்ம ஊரு கோவில்களில் நேர்த்திக்கடனை செலுத்த வேப்பிலை ஆடை, தீச்சட்டி, காவடிலாம் கோவில் அருகே கிடைப்பதுப்போல் மன்ச் சாக்லேட் மாலை கோவில் பக்கத்துலயே கிடைக்குது. இந்தக்கோவில் 300 ஆண்டுக்கால பழமையானது. ஆனா, 8 வருசமாதான் பிரசித்தமடைஞ்சிருக்கு.  
ட்ரெண்டியாகிப்போன முருகனை பார்க்க இப்ப ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி கூகுள் மேப் உதவியோடு போகலாம்.. ஆலப்புழா புறநகர் பகுதியில் இக்கோவில் இருக்கு. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தென்பகுதியில் இருப்பதால், இக்கோவிலுக்கு தெக்கன்பழனின்னு செல்லப்பெயரும் உண்டு. 


இக்கோவிலை அனூப் செம்மோத் அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலுக்கு சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் வர்றாங்க.  ஒரு "மன்ச்" சாக்லேட் மனிதனின் ஜாதி, மத உணர்வுகளை துடைத்தெறிந்து... ஒன்றாக ஆக்கி இருக்கிறதே... அதுவே நல்ல விஷயம் தான்...!! இதற்காக அந்த முருகனுக்கு எத்தனை மன்ச் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கடவுளர்களின் உணவைக்கூட காலமும், மனிதனும்தான் நிர்ணயிப்பான் போல!!

படங்கள் கூகுள்ல சுட்டது...

நன்றியுடன்,
ராஜி.

14 comments:

 1. இப்படியான அபூர்வச் செய்திகளை எல்லாம் அழகாக விரிவாக படங்களுடன் வேறு யார்தான் சொல்ல முடியும்...வரவுக்கும் தொடர்ந்து தொடரவும் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. பின் பாதி ஓகே!! முன்பாதில ஏதாவது உள்குத்து இருக்கோ?!

   Delete
 2. அடடே என்ன சகோ மஞ்ச் முருகனுக்கு காணிக்கை செலுத்தப் போயி சரியாக நான்கு மாதம் கடந்து விட்டதே...

  இதற்கு பின்னால் மஞ்ச் கம்பெனிக்காரனின் சூழ்ச்சி இருக்குமோ...

  தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. மகளின் கல்யாண பிசி முடிஞ்சு வரலாம்ன்னு இருந்தால், சின்ன ஆக்சிடெண்ட்ல சிக்கி கால்ல அடிப்பட்டு ஹாஸ்பிட்டல் வாசம், அதுக்கடுத்து அம்மா வீடுன்னு புலியை இப்பதான் கூண்டை திறந்து விட்டாங்க.

   தொடர்ந்து வரனும்ன்னுதான் பார்க்கிறேன். பார்ப்போம்ண்ணா!!

   Delete
 3. முருகன் சாக்லேட் எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிட்டாரோ
  பலே

  ReplyDelete
  Replies
  1. முருகனும் அப்டேட் ஆகிட்டாருப்போல!

   Delete
 4. சுவாரஸ்யமான தகவல்கள்.  உடல்நலம் தேவலாம்தானே?

  ReplyDelete
  Replies
  1. டிவியில் பார்த்தேன். கோவிலுக்கு நான் போனதில்லை சகோ

   உடல்நலம் 70% குணமாகிட்டு.. மெல்ல நடக்க ஆரம்பிச்சு, சமையல் வேலையும் நானே செய்றேன்.

   Delete
 5. வாங்க சகோதரி... உடல்நலத்தை கவனியுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வந்துட்ட்ட்ட்ட்டேன்ண்ணே! இப்ப பரவாயில்லைண்ணே. அதான் இந்த பக்கம். அதுமில்லாம போரடிக்கு..

   Delete
 6. வருக... உடல் நலம் முக்கியம்! கவனத்தில் கொள்க...

  மஞ்ச் முருகன்! ஆஹா... இப்படியுமா... நடக்கட்டும்!

  ReplyDelete
 7. மன்ச் சாக்லேட் முருகன்.....ஆஹா அருமையா இருக்கார் ராஜி அக்கா

  ReplyDelete
 8. மகளின் கல்யாண பிசி முடிஞ்சு வரலாம்ன்னு இருந்தால், சின்ன ஆக்சிடெண்ட்ல சிக்கி கால்ல அடிப்பட்டு ஹாஸ்பிட்டல் வாசம், அதுக்கடுத்து அம்மா வீடுன்னு புலியை இப்பதான் கூண்டை திறந்து விட்டாங்க....  அடடா உடம்பை பார்த்துக்கங்க அக்கா

  ReplyDelete
 9. இக்காலத்தைக்கு ஏற்ற பிரசாதம்தான்.

  ReplyDelete