Monday, November 02, 2020

விட்டுட்டு போறதா காதல்!? எதற்கும் விட்டுட்டு போகாமல் இருப்பதே காதல்?! - ஐஞ்சுவை அவியல்

சிக்கனை வாங்கி கொடுத்தது  பத்து மணிக்கு ...  இப்ப மணி 1ஆகுது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே! சிக்கன் கறிதானே சமைக்குறே?! என்னமோ பெரம்பலூர்ல வாழ்ந்த டைனோசர் கறி சமைக்குற மாதிரி இம்புட்டு நேரமா!?

சமைக்குறது அம்புட்டு ஈசியா?! ஒருநாளுக்கு சமைச்சு பாருங்க அப்ப தெரியும்  எங்க கஷ்டம்..


அடியேய்! ஹோட்டலிலும், கல்யாண மண்டபத்திலும் 500, 1000பேர்ன்னு விதம் விதமா சமைக்குற சமையல் மாஸ்டர்கூட இம்புட்டு சலிச்சுக்க மாட்டாங்கடி.. ஒரு டம்ப்ளர் அரிசி போட்டு சோறு பொங்க இப்படி சலிச்சுக்கிட்டு அதையே சொல்லி சொல்லி காட்டுறீங்கடி இந்த பொம்பளைங்க...

யோவ் மாமா! இங்க வா!  ஹோட்டலில், கல்யாண மண்டபத்துல சமைக்குற மாஸ்டர்களில் ஒரே ஆளா எல்லாத்தையும் சமைக்குறாரு?! தோசைக்கு, இட்லிக்கு, பூரிக்கு, பரோட்டாவுக்கு, சாப்பாட்டுக்கு, ஸ்வீட்டுக்கு, காபி..ன்னு தனித்தனி ஆட்கள் இருக்காங்க. அதுமட்டுமில்லாம காய்கறி கட் பண்ணித்தர ஆட்கள், மாவு பிசைய மெஷின்னு இருக்கு.. குறைஞ்சது ஒரு சமையல் குழுவில் 20பேர் இருப்பாங்க. அதில்லாம பாத்திரம் கழுவ பரிமாற தனி ஆட்கள்..

ஆனா, வீட்டில் அப்படியா?! நாங்களே காய்கறி வாங்கி வரனும், அதை பிரிச்சு எடுத்து வைக்கனும், நாங்களே காய்கறி வெட்டிக்கனும், நாங்களே சமைக்கனும், நாங்களே பரிமாறனும், நாங்களே எடுத்து வச்சு க்ளீன் பண்ணி பாத்திரமும் கழுவி வைக்கனும்.. இதுக்கிடையில் பேனா காணோம், துண்டை காணோம், ஈபி கார்டு எங்கன்னு அடிக்கடி கூப்பிட வேண்டியது.. அடுப்படியிலேயே இருந்தா ஹோட்டல்ல கல்யாணத்துல சமைக்குறவன் அடுப்புல பாத்திரத்தை வச்சிட்டு தம்மடிக்க வெளியில் போய்வரான். நீ என்னமோ அடுப்படியிலேயே நின்னுக்கிட்டு நகர மாட்டேங்குறியேன்னு லொள்ளு பேசவேண்டியது...

மாமா உன்னைய நான் ஒன்னு கேக்கவா?! அம்மாம்பெரிய பாத்திரத்தில் பால் அல்லது சோறு அல்லது குழம்போ கொதிக்க குறைஞ்சது அஞ்சு நிமிசமாவது ஆகும். ஆனா, ஒரு டம்ப்ளர் அரிசி, அரை லிட்டர் பால் கொதிக்க ரெண்டு நிமிசம் போதுமே! பொங்கி வழிஞ்சுடாது. அப்படி பொங்கி வழிஞ்சா கவனம் எங்க இருக்குன்னு கேட்டு இம்சிப்பீங்க.. அப்புறம் அடுப்படிய க்ளீன் பண்ணுற வேலையும் சேர்ந்துக்கும்...

சமைக்குறதுலாம் ஒரு விசயமான்னு கேட்டது என் தப்புதான் புள்ள. இனி கேட்கமாட்டேன். போதுமா?!

மாமா! சமைக்குறது பெரிய விசயமே இல்லதான். ஆனா, தினமும் சமைக்கனும்,, தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கனும்.. வருசம் புல்லா சமைக்கனும்...  

சமைக்கனும்,...   நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது... இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது, புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கனும்... உப்பு, உரைப்பு கூடிடக்கூடாது... பெரியவங்களுக்கும் குழந்தைகளுக்கும் சோறு குழைவா இருக்கனும், மத்தவங்களுக்கு சோறு ஒன்னோடு ஒன்னு ஒட்டக்கூடாது.. சமைக்கும் காய்கறிகள்/தானியங்கள் யாரோட  உடலுக்கும் ஒத்துக்காததாகவோ இல்ல பிடிக்காததாவோ இருந்தால் வேற சமைக்கனும். இருக்குறதை வச்சு சமைக்கனும், வேஸ்ட் பண்ணாம சமைக்கனும்... பண்டிகை, பிறந்த நாள் , கல்யாண நாள்ன்னா ஸ்பெஷலா சமைக்கனும்... அக்கம் பக்கத்துல கொடுக்கும் பண்டம் நல்லா இருந்தால் அதை கத்துக்கிட்டு சமைக்கனும்... சமைக்கும்போது சமையல்கட்டில் மட்டும் கவனம் இல்லாம குழந்தைங்க கூப்பிட்டாங்களா?! காய்கறிக்காரங்க குரல் கொடுத்தாங்களா?! டிவியில் சீரியல்ன்னு வீட்டின் எல்லா பாகத்துலயும் கவனம் வைக்கனும்.. இப்ப சமைக்குறது மட்டுமில்லாம நாளைக்கு தேவையான தயிர் உரைக்கு ஊத்துறது, மாவு ஆட்டுதல்ன்னு செய்யனும், ஒரு மாசத்துக்கு தேவையான சாம்பார் பொடி, இட்லிப்பொடி, ரசப்பொடி அரைச்சு வச்சுக்கனும்...  பட்டாணி, பச்சைப்பயறு, கொண்டைக்கடலைலாம் பூச்சி அரிக்காம இருக்க வெயிலில் கொட்டி வாரனும்.. ஒரு வருசத்துக்கு தேவையான  வத்தல், வடாம் ஊறுகாய் வத்தல் செய்யனும்..

எது இருக்கு, எது இல்லைன்னு கவனம் வச்சுக்கனும், தூசு, எண்ணெய் பிசுக்குலாம் இல்லாம அடிக்கடி துடைக்கனும்,,  எறும்பு, கரப்பான் பூச்சி அண்டாம மருந்தடிக்கனும்... உப்பை திறந்து வச்சா தண்ணி விட்டுப்போகும், ஊறுகாயை மூடிவச்சா பூசனம் பூத்துடும், சர்க்கரையில் எறும்பு வராம இருக்க கிராம்பு போட்டு வைக்கனும். இப்படி ஒவ்வொன்னுத்தையும் பாதுகாக்கனும். குழம்பு கரண்டியால் பால் எடுத்தா பால் கெட்டுப்போகும்.. அதனால் தனித்தனி கரண்டி பராமரிக்கனும்.. சில அடாவடிக வீட்டில் இருந்தால் தனகுன்னு தனி தட்டு, டம்ப்ளர் கேட்கும்..

சமைக்கனும், சாப்பிடனும், சாப்பிட்டதை கழுவனும், கழுவும்போதே அடுத்த வேளைக்கு யோசிச்சு ரெடியாகனும், இரவு படுக்கும்போது நாளைக்கு இதையே மீண்டும் தொடங்கனுமேன்னு மலைப்பு வரும்..   ஆனா, நாளைக்கு விடியும், நாளைக்கும் பசிக்கும்.  நாளைக்கும் சமைக்கனும்.. வீட்டில் எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேருக்கும் சமைக்கனும்.. அவங்களுக்கு சமைக்குறதுக்காகவே இருக்கோம்ன்னு நினைப்பு வரும். வக்கனையா தின்னுக்கிட்டே உப்பில்லை, உரைப்பில்லன்னு குறை சொன்னா கோவம் வரும். சாப்பிட்ட தட்டைக்கூட சிங்கில் கொண்டு போய் போடாத ஆட்கள் வீட்டில் இருந்தால் வெறுப்படிக்கும். ஹோட்டலில்/கல்யாணத்துல சமைக்கும் ஆட்களை கூப்பிட்டு பாராட்டும் ஆட்கள் எத்தனைபேர் வீட்டில் தனக்காக சமைக்கும் பெண்களை கூப்பிட்டு பாராட்டி இருக்கீங்க?! காய்ச்சலில் படுத்து கிடந்தால்கூட சாம்பார் வச்சு அப்பளம் மட்டும் பொறிச்சுடு போதும்ன்னு சொல்வாங்களே தவிர,  நான் சமைக்குறேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.  இதையே தன் வாழ்நாள் முழுதும் சமைக்குறதுக்காகவே அவ பிறந்திருக்கான்னு அவள் சுமையையே சுகமாக்கி திணிச்சு வச்சிட்டு சமைக்குறது கஷ்டமான்னு அடிக்கடி கேள்வி வேற!

இத்தனை நாள் இதுலாம் தெரியாம சமையல் ஈசின்னு நினைச்சுட்டு இருந்தேன். மன்னிச்சுடு தாயி..

இதோ இந்த நாய்க்குட்டியை ஏமாத்துற மாதிரிதான் பொம்பளைங்களை அன்பு, பாசம், கடமைன்னு ஏமாத்தி வச்சிருக்கு உலகம். 

ஆமாமா! அப்படியே ஒன்னுந்தெரியாத பச்சைப்புள்ளைங்க நீங்க! உங்களை ஏமாத்தி வச்சிருக்காங்க. இம்புட்டு பேசுறியே! அப்புறம் பேரனை அனுப்பிட்டு ஏன் அவன் படத்தை  பார்த்திக்கிட்டிருக்கே!

அது வந்து.... அது வந்து.. இப்படிலாம் கேட்டா எப்படி மாமா?! சரி, மகன்/ளுக்கு பிறக்கும் குழந்தைக்கு பேரன்/பேத்தினு ஏன் பேர் வந்துச்சு?!

பெண்கள் இயல்பே பொறுப்பு, கடமை உணர்ச்சி, அன்பு, பாசம்தான்.. உங்களை மாதிரி எங்களால் பன்முகத்தன்மையோடு இருக்க முடியாது.. அதான் உண்மை. அதனால் பெண்களை வீட்டுக்கும், ஆண்களை வெளி உலகத்துக்கும்ன்னு எழுதப்படாத விதி.. அப்புறம் பேரன்/பேத்தின்னு ஏன் பேர் வந்துச்சுன்னு கேட்டியே!    தன்னோட அம்மா/அப்பா பெயரை மகன்/மகள் வழியில் பிறக்கும் ஆண்குழந்தைக்கு சூட்டுவது முன்பு வழக்கமா இருந்துச்சு.. பாட்டன் பெயரை மாமனார்/அப்பா பெயரை வச்சதால் பேர் சொல்லி கூப்பிட்டா மரியாதை போயிடும்ன்னு பெயரன்னு அழைச்சு அதுவே பேரன்னு ஆச்சு. அதுமாதிரியே பெயர்த்தி என அழைக்கப்பட்டு பேத்தின்னு ஆகிட்டுது.. 

ஆமா, மூணு மாசம்தானே ஆச்சு. ஏன் பேரனை அதுக்குள் அனுப்பிட்டே!  அஞ்சு மாசம்வரை வச்சிருக்கலாமில்ல!!

அவங்க வீட்டில் ஏதோ சாமி கும்பிடனுமாம். அதுமில்லாம விருந்தும் மருந்தும் மூணு  நாள்ன்னு சொல்வாங்களே! இவன் மூணு மாசம் இருந்துட்டானே அதான் அனுப்பிட்டேன்.. 
அடி லூசே விருந்தும் மருந்தும் மூணு நாள்ன்னு சொல்றது இதுதான்..


பட்டிமன்றத்துல, சீரியலில், சினிமாவில், காமெடியில் வேணும்ன்னா பொண்ணுங்க நகை, புடவைக்கு ஆசைப்படுற மாதிரி காட்டலாம். ஆனா, பொண்ணுங்க ஆசைப்படுறதே அன்புக்கும், அக்கறைக்கும்தான்.. பிள்ளைங்க, கணவர், குடும்பத்தாரின் பாசத்துக்காகத்தான் இழுத்து போட்டுக்கிட்டு செய்றாங்க. ஹோட்டல், ரெடிமேட் அயிட்டம்ன்னு சமையலை ஈசியாக்க மார்க்கெட்டில் எத்தனையோ வந்தாலும் இன்னமும் மகனுக்காக பிடிக்கும், வீட்டுக்காரக்கு ஒத்துக்காதன்னு ஒவ்வொன்னையும் பார்த்து, பார்த்து செய்றாங்க...

பொண்ணுங்களுக்கு தேவை அவளுக்கு நல்லதுன்னாலும்கூட  விட்டுட்டு போறதில்ல., எதுக்காகவும் விட்டுக்கொடுக்காம கூட இருந்து அன்பு செலுத்தனும்ன்னுதான் புரிஞ்சுதா மாமாஆஆஆஆஆஆஆஆ!!!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. இங்கேயும் அதே கதைதான்.. உங்களுக்காவது நான் வெஜ் ஆப்ஷன் இருக்கிறது. இங்கே வெஜ்மட்டும்தான் என்பதால் உங்களைவிட அதிக பிரச்சனைகள் அதுமட்டுமல்ல அதுமட்டுமல்ல ஒரு வேளை மட்டும்தான் சாதம் மற்ற வேளைகளில் வேறு ஏதும் இருக்க கூடாது ஹும் பெண்களை போல வீட்டில் சமைக்கும் ஆண்களுக்கும் இதே கஷ்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல இருந்த பதிலை துளசி அண்ணாவும், முகநூலில் நீங்களும் சொல்லிட்டீங்க..
      அன்பு கொடுத்தால் அமைதி தருவோம்ன்னு நாங்களும்..
      அமைதி தந்தால் அன்பு தருவோம்ன்னு நீங்களும்...
      வாழ்நாள் முழுக்க தம் கட்டி போராடிக்கிட்டிருக்கோம்

      Delete
  2. பெண்கள் எதிர்பார்க்கிறது அன்பு ஆண்கள் எதிர்பார்க்கிறது அமைதி அவ்வளவுதான்

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மதுரை, அந்த அன்பு கிடைச்சிருச்சுனா அமைதி வந்துரும் தானா!!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. அமைதி வந்தா அன்பு வரும்ன்னு சொல்வாங்க கீதாக்கா.
      இது முதலில் கோழி வந்ததா?! இல்ல முட்டை வந்ததா?! கதைதான்

      Delete
  3. "சமைக்கனும்,... நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது... இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது, புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கனும்... உப்பு, உரைப்பு கூடிடக்கூடாது... பெரியவங்களுக்கும் குழந்தைகளுக்கும் சோறு குழைவா இருக்கனும், மத்தவங்களுக்கு சோறு ஒன்னோடு ஒன்னு ஒட்டக்கூடாது.. சமைக்கும் காய்கறிகள்/தானியங்கள் யாரோட உடலுக்கும் ஒத்துக்காததாகவோ இல்ல பிடிக்காததாவோ இருந்தால் வேற சமைக்கனும். இருக்குறதை வச்சு சமைக்கனும், வேஸ்ட் பண்ணாம சமைக்கனும்... பண்டிகை, பிறந்த நாள் , கல்யாண நாள்ன்னா ஸ்பெஷலா சமைக்கனும்..."

    nalllaa sollureenga, super

    Neenga oru Youtube channel thodanguneenga na romba nalla irukkum

    ReplyDelete
    Replies
    1. யூட்யூப் சேனல் ஆரம்பிக்கலாம்தான். ஆனா பொறுமை வேணுமே!

      Delete
  4. ராஜி நல்லா சொல்லிருக்கீங்க.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லாதான் சொல்றேன். ஆனா அதை காமெடியா பார்த்துட்டு கடந்துடுறாங்களே கீதாக்கா

      Delete
  5. // அது வந்து... அது வந்து... //

    தாய்மையின் சிறப்பே இது தான்...

    இதுவே சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பெண்கள் உடம்பை புண்ணாக்கி வச்சிருக்கீங்க...

      Delete