ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்துலலாம் குருவி இனம் இருக்கு. சராசரியா 13 ஆண்டுகாலம் வாழும் இது. மரத்தில், வீடுகளில் மறைவான இடத்தில் கூடுகட்டி நம் கண்பார்வையிலே வாழ்ந்தாலும் இதை செல்லபிராணியா வளர்க்கமுடியாது. ஏன்னா அதுக்குலாம் இது செட்டாகாது. கிண்ண மாதிரியான வடிவத்தில் கூடு கட்டி வாழ்ந்தாலும் குளிர்காலத்தில் கூட்டமா இருந்து குளிரை சமாளிக்கும். புழு, பூச்சி, நெல், கம்பு மாதிரியான தானியங்களை உண்டு வாழும். ஒரு நேரத்தில் 3லிருந்து 5 முட்டை வரை இட்டு குஞ்சு பொரிக்கும். பச்சை கலந்த வெள்ளை நிறத்துல இருக்கும். முட்டையை அடைக்காத்து குஞ்சுகள் பெருசாகி பறக்கும்வரை அவைகளை பாதுகாப்பது தாய், தந்தை குருவியை சாரும். பறக்க ஆரம்பிச்சுட்டா அது ஃப்ரீ பேர்ட்தான். அம்மா அப்பா பேச்சை கேட்கனும்ன்னு இல்ல.
மெல்லிய கோடுகளைக் கொண்டது புல்வெளிக் குருவிகள், மாலைச் சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கறுப்புச் சிட்டுகள், வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையை கொண்ட குருவின்னு விதம் விதமா இருக்கு. இனப்பெருக்க காலம் வந்ததும், தனக்கு பிடிச்ச மாதிரியான பெண்குருவியை தேர்ந்தெடுக்கும்.
வளர்ப்பு பறவையை தவிர வேறெந்த பறவையும் வீட்டுக்குள் வரத்தயங்கும். ஆனா, சிட்டுக்குருவி அப்படியில்லை. சர்வசாதாரணமாய் வீட்டுக்குள் வலம் வரும். புழு, பூச்சியை சாப்பிட்டாலும் அதோட முழுமையான உணவு கம்பு, சோளம், நெல் மாதிரியான தானியங்கள்தான். அப்படின்னா வயல்வெளிகளில்தானே இருக்கனும்ன்னு நினைக்கலாம். வருடத்தின் அத்தனை நாளும் தானியம் விளையாதே! ஆனா, வீடுகள் அப்படியில்லை. சதாசர்வகாலமும் தானியங்கள் புழங்கும்.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்னலாம் தானியங்கள் அறுவடையாகி வீட்டுக்கு வருவதும், அதை காய வைக்க, தோல் நீக்க, புடைக்க, குத்த, அரைக்கன்னு பல வேலைகள் தினத்துக்கும் நடக்கும். அப்ப சிந்துனது, சிதறுனதை சாப்பிடவே குருவிகள் வீட்டுக்கு வரும். ஆனா, இப்ப அப்படி இல்ல. சூப்பர் மார்க்கெட்ல இருந்து டைரக்டா பாக்கெட்ல இருந்து வாங்கி வந்து பயன்படுத்துறோம். உணவில்லாதபோது குருவி எப்படி வீட்டுக்கு வருமாம்?! சரி, வயல்வெளிகளில் உண்டு கழிக்கலாம்ன்னு பார்த்தா, நாமதான் அதையெல்லாம் ரியல் எஸ்டேட்டாக்கி பாழ்படுத்திட்டோமே!
அப்படியே அங்கொன்னும், இங்கொன்னுமா நடக்கும் விவசாயம்கூட, கம்பு, கேழ்வரகு, சோளம்ன்னு விளைவிக்காம கரும்பு, சவுக்கு, கத்திரி, வெண்டை, தக்காளின்னு ஆகிட்டுது. அப்படியே, கம்பு, சோளம்ன்னு பயிரிட்டாலும் கை அறுவடை இல்லாம, மெஷின் அறுவடைன்னு கதிர் அடிக்க, தூத்தன்னு எல்லா வேலையும் முடிஞ்சு ஒரு மணிகூட சிந்தாம சிதறாம அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்துடுறாங்க. இதுல விவசாயிக்கு லாபம்ன்னு சந்தோசப்பட்டாலும், அவனை அண்டி வாழும் சின்னஞ்சிறிய உயிர்களான எலி, குருவி மாதிரியான உயிர்கள் பட்டினி.. பின்னர் அதோடு இனமும் அழிஞ்சுக்கிட்டு வருது. தான் மட்டுமே வாழனும்ன்ற சுயநலமே இதுக்கு காரணம்.
மனுசன் சல்லிப்பயன்னு புரிஞ்சதாலோ என்னமோ அவனை நம்பி இருக்கும் ஜீவன்களாலேயே அவன் உயிரை எடுக்கும் வேலையை இயற்கை செய்யுது. முன்னலாம் சாமி படங்கள் உட்பட அனைத்து படங்களும், கண்ணாடிலாம் ஒரு 50டிகிரி சாய்மானத்துல சாய்ச்சு வச்சு சுவத்துல ஆணியோடு ஒரு கம்பி வச்சி இணைச்சிருப்பாங்க. ஆனா, இப்பலாம் லேமினேஷன் பண்ணப்பட்ட படங்கள். அதேப்போல, பெண்டுலம் வச்ச கடிகாரம் இருக்கும். அதுமேலயும் கூடு கட்டும். அதில்லாம, ஓட்டு வீட்டு கூரையில் கட்டும், தாழ்வாரம்ன்னு கொஞ்சம் மறைவான இடத்துல கட்டும். இப்பலாம் அதுலாம் இல்லாததால் அதுக்கு கூடு கட்ட வாய்ப்பே இல்ல.
சிட்டுக்குருவி இனம் அழிய செல்போன் டவர் காரணம்ன்னு சொல்லப்பட்டாலும் இன்னமும் விஞ்ஞானரீதியா அது நிரூபிக்கப்படலை. சிட்டுக்குருவி இனம் அழிய பல காரணங்கள் உண்டு. வருசத்துக்கு மூன்று முறைதான் இது முட்டை இடும். ஒருமுறை 3 லிருந்து 5 வரை முட்டையிடும். அத்தனை முட்டையும் குஞ்சு பொரிக்க தகுதியானதில்லை. சில கூமுட்டைகளும் உண்டு. அப்படியே தகுதியான முட்டைகள் கூட்டிலிருந்தாலும் காகம் அந்த முட்டைகளை கீழ தள்ளிடும். மிச்சம்மீதி குஞ்சு பொரிச்சாலும் பாம்பு, காகம் மாதிரியான பிராணிகளுக்கு உணவாகிடுது. எப்படியோ தப்பித்தவறி உசுரு பொழைச்சாலும், தாய்க்குருவி கொடுக்கும் உணவு நஞ்சாகிடும். அது எப்படின்னா, நாமதான் பூச்சி மருந்துகளை வயலுக்கு தெளிக்குறோமே! அதான் காரணம்.
சரி, தானியம் வேணாம்ன்னுட்டு புழு பூச்சி சாப்பிட்டு உசுர் வாழலாம்ன்னு பார்த்தா, வாகனங்கள், தொழிற்சாலைன்னு வெளியிடும் மெத்தைல் நைட்ரேட் என்னும் நச்சு புகை புழு, பூச்சிகளை கொன்னுடுது. அப்புறம் எப்படி அது உயிர்வாழுமாம்?! அப்படியே வாழ்ந்து வந்தாலும் அடுத்த ஒரு ஆபத்து அதை நோக்கி இருக்கு. அது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் சிட்டுக்குருவி லேகியம் வடிவில்...
குறிப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை இடித்து, குடல், இறகுலாம் சுத்தம் செய்யப்பட்ட குருவியின் வயிற்றில் இந்த மூலிகை பொடியினை வைத்து தைத்து, மண்சட்டியில் பசுநெய்யில் இந்த குருவியை வறுத்தெடுத்து, நூலினை நீக்கி, உரலில் விட்டு இடிச்சு வரும் மருந்தோடு சரிக்கு சமமா பனங்கற்கண்டு சேர்த்து, அரைலிட்டர் பால் கொதிச்சதும், இதை போட்டு சரியான பதம் வந்ததும், குருவியை பொறிச்ச மிச்ச நெய்யும், தேனும் சேர்த்து கிளறினா சிட்டுக்குருவி லேகியம் தயார். மனுச குலம் தழைக்க குருவி குலத்தை அழிச்சிக்கிட்டிருக்கோம். காக்கையும், குருவியும் எங்கள் சாதின்னு பாரதி பாடினான். நாமதான் நம்ம சாதிக்காரன் பொழச்சு வந்தாலே வயிறு எரியும் ஆட்களாச்சே! அப்புறம் குருவி, காக்கையையா வாழவிட்ருவோம்?!
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.
சிட்டுக்குருவியின் வாழ்க்கை சந்தோசமும், அன்பும் நிறைந்தது. நம்மையே நம்பி வாழும் ஜீவனை வாழ வைத்து ரசிப்போம்... எங்க வீட்டில் குருவி கூடு கட்டுவது அதிகம். ஜன்னல், ஹால்ல இருக்கும் அலங்கார விளக்குன்னு கட்டும். இப்ப புதுசா ஜன்னலுக்கும், கொசுவலைக்கும் இடையே கூடு கட்டி இருக்கு. கலைக்க மனமில்லாததால் விட்டுட்டேன். எதேச்சையாய் துளசி கிள்ள அந்த பக்கம் போனால், எங்கிருந்தோ பறந்து வந்த குருவி லபோதிபோன்னு கத்தி என்னை விரட்டுது. என்னன்னு கூட்டில் எட்டி பார்த்தா சின்ன சின்னதா ரெண்டு குருவி குஞ்சு இருக்கு. அந்த தவிப்பை பார்த்துதான் இந்த பதிவு...
ராஜி










