என் பசங்களுக்கு சிக்கன் தான் பிடிக்கும். மட்டன் பிடிக்காது. ஆனா, ஆட்டு ரத்தப் பொரியல் மட்டும் பிடிக்கும். அதனால, பெரியவ வீட்டுக்கு வரும்போது காலை உணவுல இது கண்டிப்பா இருக்கனும். எங்க ஊர்ல 30ரூபாய்க்கு கால் கிலோ அளவுல ரத்தம் கொடுப்பாங்க.
தேவையானப் பொருட்கள்:
ஆட்டு ரத்தம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி- 1
கடுகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா- சிறிது
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் தேவையான அளவு
அரைக்க:
சோம்பு- கொஞ்சம்
பட்டை - 1துண்டு
கிராம்பு - 4
அன்னாசி பூ- 1
பூண்டு 10 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 4
காய்ந்த மிளகாய் -2
வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா நறுக்கிங்கோங்க. அரைக்க வேண்டியவற்றை விழுதா அரைச்சு வச்சுக்கோங்க.
ஆட்டு ரத்தக் கட்டியை தண்ணி ஊத்தி கழுவி இட்லிப்பானையில் துணிப்போட்டு வேக வச்சு துண்டுப் போட்டுக்கோங்க.
கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடுங்க.
அடுத்து நசுக்கி வச்சிருக்கும் பூண்டைச் சேர்த்து வதக்கிங்கோங்க. பூண்டு சேர்க்கலைன்னாலும் பரவாயில்ல.(நாம்தான் ஏற்கனவே பூண்டை அரைச்சு வச்சிருக்கோமே. என் பொண்ணுக்கு பிடிக்குமேன்னு பூண்டு சேர்ப்பேன்.)
அடுத்து வெங்காயத்தை பொன்னிறமா வதக்கிங்கோங்க.
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்குங்க.
தக்காளி சேருங்க.
தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.
அரைச்சு வச்சிருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கி கொஞ்சமே கொஞ்சம் தண்ணி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடுங்க.
பச்சை வாசனை போனதும் வெட்டி வச்சிருக்கும் ஆட்டு ரத்தத் துண்டுகளைச் சேர்த்து சுருள வதக்குங்க.
சுவையான ஆட்டு ரத்தப் பொரியல் ரெடி! தேங்காய்ப் பூ சேர்த்தும் கொடுக்கலாம். சின்னப் பொண்ணுக்கு பிடிக்காதுன்னு நான் சேர்க்கல.
அடுத்த வாரம் ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்....,