Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, March 29, 2019

வித்தியாசமான தெய்வ அலங்காரங்கள்

சமீபத்துல முகநூலில் பங்குனி உத்தரத்தன்று  முருகன் புல்லட் வாகனத்துல ஹெல்மெட்டோடு பவனி வந்தார்ன்னு வைரல் ஆச்சு.  எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னாலும், ஆனா, விதம்விதமா அலங்காரத்தை கண்டு ரசிப்பேன். அதன்படி இணையத்துல கண்டு ரசித்த தெய்வ அலங்காரங்கள் சில..

தலைக்கவசம் அவசியம்ன்னு உணர்த்தும் முருகன்...

பால்கோவாவினால் அலங்கரித்த சிவன்...

உக்கிரமான நந்தி பகவான்... 



 சங்கு அமைப்பில் மலர் அலங்கார வாகனத்தில் அம்மன்..
சேலைக்கு மயங்காத பொண்ணுண்டா?! அம்மனும் விதிவிலக்கல்ல...

கொலுசினால் அலங்கரித்த அம்மன்...
 வளையல் அலங்கார வாகனத்தில் அம்மன்
வளையல் அலங்காரத்தில் அம்மன்... 



வெண்ணெய் அலங்காரத்தில் நந்தி...
சாக்லேட் அலங்காரத்தில் அம்மன்...

பொதுவா எல்லாருக்கும் பொறந்த நாள் வருசத்துல  ஒருமுறைதான் வரும்.   ஆனா எனக்கு மட்டும் ரெண்டு முறை வரும்.  இங்க்லீஷ் தேதிப்படி  வாக்கப்பட்ட  வீட்டிலும், இணையம், நட்புகளும் கொண்டாடுவாங்க. ஆனா, அப்பா, அம்மா மட்டும் தமிழ் தேதிப்படிதான் கொண்டாடுவாங்க.  கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு பொறந்ததால முதல் வருஷ பொறந்த நாளை ரொம்பவே விமர்சையா  கொண்டாடினதா சொல்வாங்க.  அப்பவே மைக் செட் , சீரியல் பல்பு கட்டி, ஊருக்கே சாப்பாடு போட்டதா சொல்வாங்க. 
வருசா வருசமும் அப்படி கொண்டாட முடியலைன்னாலும்  புது துணியும், சாக்லேட் மட்டும் ஒவ்வொரு வருசமும் வந்திடும். கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து வந்தால் பிறந்தநாள் கொண்டாட்டம் பினிஷ். அது திருமணத்தின் வரை மட்டுமே.  பிள்ளைங்க பிறந்தபின், பிறந்த நாள் கொண்டாட்டம் வெறும் பிரியாணியோடும், 100ரூபாயோடும்  முடிஞ்சுடும். ஆனா, இந்த வருஷம் என்ன நினைச்சங்களோ தெரியலை. புடவை ஒன்னு எடுத்து கொடுத்தாங்க . புடவை + 100 ரூபாயும் அம்மா வீட்டு சீதனமாய் ....... இந்த வருஷம் பொண்ணுங்களும் ஆளுக்கொரு சேலை எடுத்து கொடுத்து அசத்திட்டாங்க.

 பெரிய பொண்ணு கொடுத்தது

 இது சின்னவங்க கிஃப்ட் ....

பர்த் டே கொண்டாட்டத்துல பதிவு எழுத முடில. அதான்  சாமி படங்களை சுட்டு பதிவு  தேத்தியாச்சு..
பிளாக்கிலும், முகநூலிலும், போனிலும்  வாழ்த்து சொன்ன, சொல்ல மறந்தவங்களுக்கும்,  இதுக்குலாம் பொறந்த நாள் வாழ்த்து சொல்லனுமான்னு சொல்லாம விட்டவங்களுக்கும் நன்றியோ நன்றி.

நன்றியுடன்,
ராஜி 



Friday, March 30, 2018

சுகமான திருமண வாழ்வருளும் - பங்குனி உத்திரம்

இந்துக்கள் பண்டிகைக்கும், பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எதாவது ஒரு விசேசதினம் இருக்கும். அதன்படி, தமிழ்வருடங்களில் 12வதும், கடைசிமாதமுமான பங்குனியும்,  12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும், நாளை பங்குனி உத்திரம் எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.   
திருமணம் என்பது இறைவனால் நிச்சயக்கப்பட்டது.  எங்கேயோ பிறந்து, வெவ்வேறு சூழலில் வளர்ந்த ஆணையும், பெண்ணையும் வாழ்க்கையில் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும். அது ஃப்ரெண்டுங்க தூது போய், ஏற்பாடு செய்யும் காதல் திருமணமானாலும் சரி, மேட்ரிமோனியல்ல பார்த்து பெரியவங்க செஞ்சு வைக்கும் பெத்தவங்களால் நடத்தி வைக்கப்படும் கல்யாணமானாலும் சரி, இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். இன்றைய சூழலில் ஒரு கல்யாணம் நடக்க எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கு?! படிப்பு, ஜாதகம், வரதட்சணை, உருவப்பொருத்தம், ஸ்டேட்டஸ், பணிச்சூழல்...ன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். இத்தனை போராட்டங்களையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும் எத்தனை பேர் மகிழ்ச்சியா இருக்காங்க?! 


தடையின்றி திருமணம் நடக்கவும், நடந்த திருமணம் வெற்றியடையவும் இறைவன் அருள் வேண்டி இருக்கும் விரதமே பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்து இறைவனை தியானித்து ஆலயங்களுக்கு சென்று,அங்கு நடக்கும் தெய்வத்திருமணங்களை தரிசித்து, இல்லாதவருக்கு இயன்றளவுக்கு உதவிகள் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நல்லபடியா அமையும். சரி, அதென்ன?! எத்தனையோ நாள் இருக்க, இந்த பங்குனி உத்திரம் நாள் மட்டும் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வா இருக்குன்னு யோசிச்சு பார்த்தால் இன்றைய தினம் ஏகப்பட்ட தெய்வ திருமணங்களும், தெய்வமே குழந்தையாகவும் அவதரிச்ச நாள், அதனாலதான் இந்நாள் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வா இருக்கு... எந்தெந்த தெய்வங்களுக்கு இன்னிக்கு திருமணம்ன்னு பார்க்கலாமா?!
நீண்டநெடு போராட்டத்திற்கு பின் தவம் கலைந்த சிவப்பெருமான்,  தட்சனின் மகள் மீனாட்சியாய் அவதரித்த பார்வதிதேவியை சுந்தரேஸ்வரராய் அவதரித்து மணந்தது இந்நாளில்தான்.  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண சிறப்பை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். இன்றைய தினம், சிவனுக்கும், பார்வதிக்கும் அபிசேக ஆராதனைகள் செய்வித்து, மேளதாளம் முழங்க, திருமாங்கல்யம் அணிவித்து, பால் பழம் தந்து, ஊஞ்சலாடி, பள்ளியறைக்கு தம்பதியினரை அனுப்பும் வைபவம் இன்றளவும் வெகு விசேசமாய் கொண்டாடப்படுது.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணுபகவான், மகாலட்சுமியை மணந்ததும் இந்நாளில்தான். அதேப்போல், நாரதர் கலகத்தால், சிவப்பெருமானின் இடப்பாகத்தை பெற்ற பார்வதிதேவியின்பால் பொறாமைக்கொண்டு விரதமிருந்து விஷ்ணுபகவானின் மார்பில் லட்சுமிதேவியும், பிரம்மதேவனின் நாவில் சரஸ்வதியும் இடம்பிடித்தது இந்நாளில்தான். அதுமட்டுமில்லாம இந்நாளில்தான் பிரம்மா-சரஸ்வதிதேவி திருமணமும் நடந்தது.
மனிதன் எப்படிலாம் வாழனும்ன்னு உணர்த்த, தானே வாழ்ந்து காட்ட, விஷ்ணுபகவான் ராமராய் அவதரித்தார். ராம அவதாரத்தில், ராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகிய நால்வருக்கும் மிதிலையில் திருமணம் செய்தது இந்நாளில்தான்.  சிவப்பெருமானின் தவத்தினை கலைக்கும்பொருட்டு, அவர்பால் மன்மத பானம் விட்ட மன்மதனை, தனது நெற்றிக்கண்ணால் சிவன் எரிக்க, பின், அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்பித்த தினம் இன்று. 

அமிர்தக்கலசத்தை அரக்கர்க்குலத்தவரிடமிருந்து மீட்க விஷ்ணுபகவான் மோகினியாய் அவதரிக்க, அவள் அழகில் சிவன் மயங்க, அவர்கள் இருவருக்குமாய் ஐயப்பன் அவதரித்தார். அப்படி ஐயப்பன் அவதரித்த தினமும் இன்றுதான். தேவர்குல தலைவனும், தேவலோகத்தின் அதிபதியுமான தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடப்பெற்றதும் இந்நாளில்தான். 
சிறந்த சிவபக்தரும், சித்தருமான அகத்தியமுனிவர் முக்தியடைய தடை உண்டானது. அத்தடை என்னவென இறைவனை குள்ளமுனி கேட்க, வாரிசு இல்லாததே அத்தடை என இறைவன் எடுத்துச்சொல்ல, வாரிசு வேண்டி, பக்தியிலும், குணத்திலும் சிறந்த லோபாமுத்திரையை அகத்தியர் மணந்தது இந்நாளில்தான். வில்லுக்கு விஜயன் எனப் புகழப்படும் பஞ்சப்பாண்டவர்களில் ஒருவனான, அர்ஜுனன் பிறந்த நாள் இந்நாள். 
ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருக்கும் திருமணம் நடந்தேறியது இந்நாளில்தான். இப்படி ஏகப்பட்ட தெய்வநிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானது முருகப்பெருமான், தெய்வானை திருமணம். சந்திரபகவான் ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திர பெண்களை மணந்தது இந்நாளில்தான். 

அரக்கன் சூரபத்மனை அழிக்க வேண்டி   முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. முருகனது அவதார நோக்கம் நிறைவேறியதற்கு பரிசாகவும்,  அரக்கர்குலத்திடமிருந்து, தேவர்குலத்தை காப்பாற்றியதற்கு கைமாறாக,  தேவேந்திரனின் வளர்ப்பு மகளான, தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்வித்தனர். இதன்பொருட்டு, இந்நாளில் பால்குடமெடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை அறுபடை வீடுகளிலும் முருகபக்தர்கள் செலுத்துவர். அனைத்து சிவன் கோவில்களிலும் இன்றைய தினம் வள்ளி, முருகன், தெய்வானை திருமணம் நடைப்பெறும். வள்ளிக்கிழங்கு கொடி வயலில் மான் வள்ளியை ஈன்றதும் இந்நாளில்தான். 
பங்குனி உத்திரம் பழனி என்றழைக்கப்படும் திருவாவினன்குடியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுது. இன்றைய தினம் விரதமிருந்து காவடி தூக்கி வருவதோடு, அருகிலிருக்கும், கொடுமுடிக்கு சென்று காவிரிநீரை சுமந்து வந்து முருகனுக்கு அபிசேகம் செய்விக்கப்படுது. பழனி தலப்புராணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்,  இன்று ஒருநாள் அபிஷேகத்தின்போது மட்டும் முருகன் ஜடாமுடியுடன் உள்ள தோற்றத்தில் இருப்பார். பழனிக்கு அடுத்து,முருகன் தெய்வானை திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் மிகச்சிறப்பாக திருக்கல்யாண வைபவம் நடைப்பெறும். இத்திருமணத்தைக்காண, தங்களது திருமணம் முடிந்த கையோடு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தம்பதி சமேதரராய் வந்தருள்வார்.  இது இன்றளவும் நடக்கும் வைபவம் ஆகும்.
பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி, பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்தி மாலையில் சிவன், விஷ்ணு, முருகன் ஆலயங்களில் நடக்கும் திருமணத்தில் கலந்துக்கொண்டு தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதுமாதிரி 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் மறுப்பிறப்பு கிடையாது. பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்காமல் முக்திப்பேற்றை அடையலாம். 

சூரியன் சித்திரையில் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அதன் அடிப்படையில், பங்குனியிலேயே சூரியன் உக்கிரம் பெற ஆரம்பிப்பார். சூரியனுக்குரிய நட்சத்திரம் உத்திரம். அதனால், சூரியன் உக்கிரமடைவதற்குமுன் அவருக்கு உகந்த நட்சத்திரத்தில் வழிப்பட்டால் அவரின் உக்கிரம் தணிவதோடு, நமது பாவங்களும் பஸ்பமாகிவிடும் என்பதும் ஒரு நம்பிக்கை.  பங்குனி உத்திர நாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனராசியிலும் இருப்பர். இவ்விருவரும் ஒருவருக்கொருவர் ஏழாம்பார்வையில் பார்த்துக்கொள்வர். அதனால், இருவரையும் வழிப்பட்டால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். 
இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர நன்னாளில் திருமணமாகாத ஆண்களும், பெண்களும், திருமண வாழ்வு தடுமாற்றித்தில் இருப்போரும், கல்வி வளம் கிடைக்கவும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று, அங்கு நடக்கும் தெய்வ திருமணங்களை கண்டு அருள்பெருக!

நன்றியுடன்..
ராஜி. 



Monday, December 12, 2016

திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?! - கார்த்திகை தீப ஸ்பெஷல்




தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுது. இன்று இந்த விழா மிகச்சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுது.  

திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சிப்புரத்தில் வாழ்தல் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, இந்த வரிசையில் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அத்தகைய வல்லமை கொண்டது இம்மலை.  நினைத்தவுடனே முக்தி அளிக்கமளவுக்கு கருணை கொண்டவர்தான் இங்கு குடிக்கொண்டிருக்கும் “அண்ணாமலையார்”. அவர் ஜோதிமயமாய் எழுந்தருளிய நாளான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில்  “தீபத்திருநாளாய்” கொண்டாடப்படுது.






ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற மமதைக்கொண்டு தங்கள் ஐயம் தீர்க்க சிவப்பெருமானிடம் வந்து நின்றனர். ”மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதிப்பிழம்பாய் உருவெடுத்து , சிவனின் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ , அவர்களே உயர்ந்தவர்” என அசரீரி ஒலித்தது.

சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் கொண்டு பூமியை துளைத்துச் சென்றார். முடியைக்காண பிரம்மா பறவை உருக்கொண்டு விண்ணில் பறந்தார். யுகம் யுகமாய் பயணித்தும் அடியைக் காண முடியாமல் தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டு சிவனிடம் சரணாகதி அடைந்தார். 

இதற்கிடையில், சிவனின் சடாமுடியிலிருந்து விழுந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த தாழம்பூவிடம் இன்னும் எவ்வளவு தூரம் எனக்கேட்க, இன்னும் பல யுகம் பயணிக்க வேண்டும் எனச் சொன்னது தாழம்பூ. அப்படியெனில் எனக்கொரு உதவி செய். ன் சிவனின் முடியை நான் கண்டதை நீ கண்டதாக சொல் என பூமிக்கு அழைத்து வந்து இருவரும் சிவனிடம் பொய்யுரைத்தனர். அதனால், கோவம்கொண்ட சிவன், இனி தன் பூஜைக்கு தாழம்பூ ஆகாது எனவும், பிரம்மாவுக்கு தனியான சந்நிதி இனி கிடையாது என சாபமிட்டார்.



தங்கள் தவறை உணர்ந்த மூவரும் சிவனிடம், எல்லோரும் வணங்கி வழிப்பட ஏற்ற உருவத்தை தாங்கள் எடுக்க வேண்டுமென வேண்டி நின்றனர். கோவம் தணிந்த சிவபெருமானும், மலையாக உருவெடுத்தார். அம்மலையே “திருவண்ணாமலை” ஆகும். அதனால்தான், மலையே லிங்கமாய் உருவகப்படுத்தி மக்கள் கிரிவலம் வருகிறார்கள் என புராணங்கள் சொல்கிறது.  அண்ணா என்றால் ”நெருங்கவே முடியாத” எனப்பொருள். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடி, முடியை நெருங்கவே முடியாத மலையானதால் ”அண்ணாமலை” என அழைக்கப்படுது.


சிவப்பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாய் மூட பூலோகம் முழுக்க இருள் பரவியது. அதனால கோவம் கொண்ட சிவன், தன்னை நீங்கி பூலோகம் சென்று தன்னை வழிப்பட்டு வரவேண்டுமென சாபமிட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்படுகிறாள். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து, கௌதம புத்தரின் வழிக்காட்டுதல்படி சிவபூஜை செய்து, “மடக்கு” என்றழைக்கப்படும் மண் பாத்திரத்தில் விளக்கேற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிப்படுகிறார். அம்மையாரின் பக்திக்கும், தவத்துக்கும் மனமிரங்கி ஈசானலிங்கத்தை நெருங்கும்போது இறைவன் ரிஷப வாகனத்தில் வந்து அம்மையை இடப்பாகமாக ஏற்றுக்கொள்கிறார். 

உலக மக்களையெல்லாம் காப்பவளாயிற்றே அன்னை! தன் மக்களுக்காக  “தாங்கள் எனக்கு மட்டும் காட்சியளித்தால் போதாது. அனைவருக்கும்  காட்சியளிக்க வேண்டுமென வரம் கேட்கின்றாள். ஆண்டுக்கு ஒருநாள் தான் இங்கு ஜோதி சொரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தர்சிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் . அந்த நாளில் தன்னை தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என அருள்கின்றார். இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் நாளே கார்த்திக மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மகாஜோதியாகும். 

திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைப்பெறும் இத்தீபத்திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அன்று அதிகாலை சுயம்புலிங்கமான அருணாச்சலேஸ்வரருக்கு “பரணி தீபம்” ஏற்றப்படுகிறது. மாலையில்  ஒருசில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார். மலைமீது தீபமேற்றிய பிறகே கோவிலில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் வீடு, கோவில்களில் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அக்னியின் அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்துக்குண்டான பலனை அளிக்கவல்லது திருவிளக்கேற்றி வழிப்படுவது.  தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்றி வழிப்படலாம்.


அசுரனை அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 


புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ்லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனால, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து பஞ்சு திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வளர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கேத்துற பழக்கம் வந்துச்சாம்!!.


இனி விளக்கேத்துற முறைகள் பற்றி பார்ப்போம்..., 

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேத்தனும். பின்கதவு இல்லாதவர்கள் ஜன்னலையவது சார்த்திய பிறகே விளக்கேற்றனும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 

விளக்கேற்றும் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம். 

அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.



திருவிளக்கின் சிறப்பு:
தினமும் நாம வீட்டில் ஏத்தி கும்பிடும் காமாட்சி அம்மன் விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாம தடுக்குது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


எண்ணெயின் பலன்:
எல்லா எண்ணெயிலும் விளக்கேற்ற முடியாது.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் கடனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.


 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 


திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றது.


இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் உகந்ததுன்னு பார்க்கலாம்..., 


விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய
ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமேனி
திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைய் முழ
வதிரும் அண்ணாமலை தொழுவார் 
வினை வழுவாவண்ணமறுமே.


தென்னாடுடைய சிவனே போற்றி!..
எந்நாட்டவர்க்கும் இறவா போற்றி!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்...,
ராஜி.

Tuesday, November 22, 2016

சிவன் குடியிருக்கும் வில்வ மரம் - ஆன்மிகம்

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும். இந்த வில்வ இலைகள் கிடைப்பதற்காக அனேகமாக சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும்.
சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும்.காசி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும்
வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வில்வ காயை பறித்து பார்த்தால், உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது. இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்இமலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.வில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு, உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம், மூச்சுத் திணறல், பித்தம் போன்றவையை குணமாக்கும். அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும். இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.
வில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும். ப்ரோட்டின், கொழுப்பு, கால்சியம் இபாஸ்பரஸ் இரும்பு, உலோகச்சத்து, மாசத்து, கலோரி போன்றவை ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே. ஆரோக்கியத்திற்கு அரணாகவும், ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக..
மீண்டும் வேறு ஒரு ஆன்மீக பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன் ...நன்றி .வணக்கம்