Showing posts with label எமன். Show all posts
Showing posts with label எமன். Show all posts

Tuesday, March 14, 2017

மாசிக்கயிறு பாசி படியும் பழமொழிக்கு விளக்கம்- காரடையான் நோன்பு


என்னதான் அழகு, படிப்பு, அறிவு, குணம், அந்தஸ்து  இருந்தாலும் வாழ்க்கைத்துணை சரியில்லன்னா வாழ்க்கையே பாழ். நல்ல கணவன் கிடைக்கவும், கிடைத்த கணவன் முறுக்கிக்கிட்டிருந்தா அவனை நல்வழிப்படுத்தவும் நோற்கும் நோன்பே “காரடையான் நோன்பு”.


மாசிக்கயிறு பாசி படியும் என்பது பழமொழி இதற்கு விளக்கம்.. இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.  கேட்ட வரம் கிடைக்கும். தம்பதியர் மனமொத்திருந்தால் அடுத்து?! குழந்தை வரம் கிடைக்கும்,  கர்ப்பிணி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றக்கூடாது என்பது ஐதீகம். கிட்டத்தட்ட பத்துமாதம் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தால் அழுக்கடையும். இதான் அப்பழமொழிக்கு விளக்கம்.


சாவித்திரி என்ற பெண் தன் கணவனான சத்தியாவனின் உயிரை காப்பாற்றிய தினமே காரடையான் நோன்பு என கொண்டாடப்படுது.  அந்த கதையை இனி பார்க்கலாம்...

அசுபதி என்னும் அரசனுக்கு,  அழகிலும்,  பண்பிலும் சிறந்து விளங்கிய பெண் இருந்தாள். அவளுக்கு  இந்துக்களின் மிகப் புனிதமான பிரர்த்தனையான  சாவித்திரின்னு பெயர் வைத்து அருமை பெருமையாய் வளர்த்து வந்தார்.  அவள் சிறு பிள்ளையாய் இருந்தபோது அரண்மனைக்கு வந்த நாரதர், சாவித்திரியை கண்டு, இவள் பின்னாளில் உலகம் போற்றும் பதிவிரதையாய் திகழ்வாள். ஆனால், இவள் கணவன் இருபத்தொயொரு வயது மட்டுமே வாழ்வான் என சொல்லிச் சென்றார். அதை நினைத்து அரசனும், அரசியும் கவலையுற்றனர்.

சாவித்திரிக்கு தக்க பருவம் வந்ததும், மகளுக்கு தக்க மணாளனை தேர்ந்தெடுக்க சுயவரம்  நடத்தினர்.   அரண்மனைக்கு வந்த எந்த நாட்டு ஆணையும் சாவித்திரிமனதை ஈர்க்கவில்லை. அதனால், தக்க துணையுடன் மணாளனை தேடி தூர தேசத்துக்கு பயணமானாள். அவ்வாறு செல்கையில் காட்டில் சென்று தங்கினாள்.
                                                 

அங்கு,  துயுமத்சேனன் என்னும் ஓர் அரசர் அங்கு தன் மனைவி, மகனோடு தங்கி இருந்தார்.  அவர்தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்த போது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.  அவருடைய மகன் பெயர் சத்தியவான்.  அங்கு வந்த சாவித்திரி  சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள்.  அரண்மனைகளில் கண்ட அரசகுமாரர்களை விட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேணனின் மகனான் சத்தியவான் அவளது இதயத்தைக் கவர்ந்தான்.

நாட்டுக்கு திரும்பிய சாவித்திரி தன் தந்தையிடம் சத்தியவான் பற்றி சொல்ல, அவன் நாடு நகரம் இழந்து காட்டில் சுள்ளி பொறுக்கி வயிற்றை கழுவுபவனுக்கா உன்னை மணமுடிப்பது என வாதிட்டார். சாவித்திரியும் தன் கொள்கையில் பிடிவாதமாய் நின்றாள். என்ன செய்வதென தெரியாமல் மகளின் மனதை மாற்ற நாரதரை தூதனுப்பினார் அரசன். சாவித்திரியிடம் சென்ற நாரதர், எத்தனையோ சமாதானப்படுத்தியும் சாவித்திரி மசியவில்லை. கடைசி அஸ்திரமாய்...  அம்மா! இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடும் ஒருவனையா  நீ மணக்கப்போகிறாய் என வினவ, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் மனதை தேற்றிக்கொண்டு, ஐயா! சத்தியவானை காணும்போதே அவரிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன். வேறு யாரையாவது மணக்கசொல்லி என் கற்பை மாசுப்படுத்தாதீர்கள் என சொல்லிவிட, சத்தியவான், சாவித்ரி திருமணம் கோலாகலமாய் நடந்தது.


கணவனின்  இறப்பு தேதி தெரிந்தும், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் கணவனோடு காட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.  நாரதர் சொன்ன சத்தியவானின் கடைசி  நாள்  நெருங்கியது. மூன்று நாட்கள் ஊன், உறக்கமின்றி கடுமையான விரதமிருந்தாள் சாவித்திரி. இறுதி நாளன்று, சத்தியவானை அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்று விறகு சேகரித்துக்கொண்டிருந்தாள். அப்போது, சத்தியவான், சாவித்திரி! எனக்கு தலைச்சுற்றி மயக்கம் வருவதுப்போல இருக்கு என சொல்ல, என் மடியில் படுங்கள் என படுக்க வைத்துகொண்டான். சற்று நேரத்தில் அவனது உயிர் பிரிந்தது. காட்டில் தன்னந்தனியாய் கணவனை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எமத்தூதர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.  அவர்கள் நெருங்காவண்ணம் அக்னி வளையத்தை உண்டாக்கினாள். எத்தனை முயன்றும் அவர்களால் சத்தியவானை நெருங்கமுடியாமல் போகவே எமனிடம் சென்று முறையிட்டனர்.

இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான்.  பூமியில் இறந்த முதல் மனிதன் அவன்.  அவன்தான் மரணக் கடவுளாவான்.  இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன்.  அவனே அங்கு வந்தான்.  அவன் தேவன்,  ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்திரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு.  மரணம் மனிதனின் விதி.  முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான்.  அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும்.  மரணமே மனிதனின் விதி என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான்.  பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

'என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?  எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன்.  'தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!  கணவனை இழந்த பெண்கள் அவன் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்.  ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவேண்டாமே என இறைஞ்சி நின்றாள்.

 அவளின் நிலைக்கண்டு மனமிரங்கிய எமன், 'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.என்றார்.தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள் எனக்கேட்டாள். சரியென வாக்களித்து, சத்தியவான் உயிரோடு அங்கிருந்து சென்றான் எமன். சிறிது தூரம் சென்றதும், காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சாவித்திரி வந்துக்கொண்டிருந்தாள். நீ கேட்ட வரம் தந்துவிட்டேனே! மீண்டும் ஏன் பின்தொடர்கிறாய் என எமன் வினவினான்.

தந்தையே, நான் என்ன செய்வேன்.  நான் திரும்பிப் போக வேண்டும் என்றுதான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது.  உயிர் சென்றால்  உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும்? 'சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'. 'தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'.

'அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.  வீடு திரும்பு.  ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'.  எமன் தொடர்ந்து செல்லலானான்.  சாவித்திரியும், அவர்களை பின்தொடர்ந்தாள்.   எமன் சற்று கோவத்துடன் இன்னும் என்ன வேண்டும்.. இறந்தவர் ஒருபோதும் பிழைக்கமுடியாது அதை நினைவில் கொண்டு கேள் எனக் கேட்க..., என் மாமனாரின் எதிரிகள் எங்கள் நாட்டின்மீது போர்த்தொடுத்து அபகரித்துகொண்டால் என்செய்வது?! அதனால், சத்தியவானின் வாரிசுகளுக்கே அரசாளும் உரிமையை அருளவேண்டும் என வேண்டி நின்றாள். அவள் கேட்ட வரத்தின் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதையும் கொடுத்து சத்தியவான் உயிரோடு எமலோகம் சென்றான். மீண்டும் சாவித்திரி வருவதை கண்ட, எமன் என்னம்மா! எனச் சலிப்புடன் கேட்டான்.

ஐயா! இதுவரை சத்தியவானுக்கு குழந்தை ஏதுமில்லை. அவனும் இறந்துவிட்டான். பூலோகத்திற்கு நான் சென்றாலும் உங்கள் வாக்கு பலிக்காது. இறந்தவர்கள் பிழைப்பதென்பது சாத்தியமில்ல. அதனால் என்னால் உங்கள் வாக்கு பொய்த்து போகும். என்னால் உங்கள் வாக்கு பொய்க்க வேண்டாம். என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் என்று வேண்டி நின்றாள்.


இதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.  பின்பு சத்தியவானோடு இல்லத்திற்கு வந்த சாவித்திரி மாமனார் பார்வையை திரும்ப அளித்து, நாட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பது வரலாறு.


 இனி விரதமுறை..

காரடையான் நோன்பன்று வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை சூட்ட வேண்டும். 

ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி துளசியை ஒன்று கட்டி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். 

‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் 
வைத்து நோன்பு நோற்றேன் 
ஒரு நாளும் என் கணவன் என்னைப் 
பிரியாமல் இருக்க வேண்டும்’ 


–என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். 

பிறகு தானும் கட்டிக்கொண்டு, அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல், முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன், பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.



வைக்கோலுக்கு மரியாதை 

காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும் போது, வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை, உடலை காத்திரு!’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை;

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.

ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,  உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது.

வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
நன்றியுடன்,
ராஜி.