Showing posts with label கந்த சஷ்டி. Show all posts
Showing posts with label கந்த சஷ்டி. Show all posts

Thursday, November 08, 2018

குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம்


திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம்?!  எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை செல்வம்தான். முன்ஜென்ம வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, "கந்தசஷ்டி விரதம்". குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுராகவசம், கந்தர் அலங்காரம் படிக்கலாம்.தெரியாதவர்கள் முருகன் பெயர் சொல்லி கும்பிடலாம். 

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். சஷ்டி தேவி என்பவள் பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான்.
திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை அழகிய உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.
பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவிதேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள்பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்விரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும்அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறிஅந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவிஎப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள்அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள்யோகசித்தி மிக்கவள்
ஸ்கந்த சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும். பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம். திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.

இதன் பின்னர் மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.

நன்றியுடன்,
ராஜி.

Saturday, October 21, 2017

முப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி


உடலை வருத்தி செய்யும் தவத்தால் ஒரு பயனும் இல்லை. மனதார கடவுளை நினைத்து வழிபட்டு, இயன்றளவுக்கு தானங்கள் செய்தாலே இறைவனை அடையலாம். ஆனாலும், உடல் நலத்துக்காகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுது. தீமிதி, ஒருபொழுது இரு, அலகு குத்துன்னு எந்த தெய்வமும் சொல்லல. ஒருபொழுது இருப்பதுலாம் உடலை சுத்தம் செய்ய... மத்த நேர்த்திகடன்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டதே அன்றி இறைவன் வகுத்ததல்ல.  இறைவன் சொல்வதெல்லாம் தூய மனதுடன், அடுத்த உயிர்களை மதித்தலும், காதலும்தான்... மத்தபடி நாம் செய்யும் அனைத்து விழாக்களும், விரதங்களும், நேர்த்திகடன்களும் நமது திருப்திக்கே!

முருகப் பெருமானின் அருளை பெற   முத்தான மூன்று விரதங்கள்ன்னு விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கு.  திங்கள் அல்லது வெள்ளி என வாரம் ஒருநாள்,  சஷ்டி திதி என மாதம் ஒருநாள், அதில்லாம வருடத்திற்கொருமுறை கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் என மொத்தம் மூன்று விரதங்களை அந்நூலில் சொல்லி இருக்கு.  இந்த மூன்று விரதங்களை பத்தி சுருக்கமா பார்ப்போம்...

 எல்லா  உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேல்.  இக நலனை வள்ளிதேவியைக் கொண்டும். பரநலனை தெய்வயானைய்யை கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபட்டால் இம்மூன்று பேற்றையும் அடையலாம்.  அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் அழகன் முருகன் குடியிருப்பதாய் எண்ணி  விழாவெடுத்து வழிபடுகின்றோம்.
சுக்கிர வார விரதம்...
வெள்ளிக்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருக்கலாம். இந்த விரதத்தை ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கனும்.  அன்றைய தினம் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். இதும் முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவை உட்கொள்ளலாம்.. இதுமாதிரி மூன்று வருடம் தொடர்ந்து விரதமிருந்தால்  பிறவி பெருங்கடலை கடக்கலாம். 
கார்த்திகை விரதம்.....

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம் இருத்தல் நலம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அல்லது ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளலாம்.   மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து ஜோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் ஆரம்பித்து ஒவ்வொரு கிருத்திகைக்கும்  விரதம் இருக்கலாம். இவ்வாறு 12 வருடம் கடைப்பிடித்தால் மறுமை இல்லாத முக்திபேறு கிடைக்கும்.

சஷ்டி விரதம்..
தமிழ்கடவுளும், குறிஞ்சி நிலத்து தலைவனுமான முருகனுக்குரிய  மூன்று விரதங்களில் மிக முக்கியமானது ஸ்கந்தஷஷ்டி விரதம். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமே  ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்லது இவ்விரதம். முக்கியமாக, குழந்தைசெல்வத்தை வழங்குவது.  முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் இருப்பர். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசமிருப்போரும் உண்டு.  

 முன்பெல்லாம் பிரதமையிலன்று அதிகாலை நீராடித் தூய ஆடையணிந்து க முருகன் ஆலயம் சென்று அங்கேயே ஆறு நாட்களும் அன்ன ஆகாரங்கள் எதுவுமின்றி இறைவழிபாடு, முருகநாம்பஜனை, நாமஐபம், புராணபடனம், புராணம் கேட்டல் என்றித்தகைய புனித காரியங்களுடன் அங்கேயே தங்கியிருப்பர். அவசர யுகத்தில் அவரவர் வசதிக்கேற்ப,விரத முறைகளும் தளர்த்தப்பட்டிருக்கு. காலையில் நீராடி, உபவாசமிருந்தோ அல்லது பால் பழம் அருந்தியோ அல்லது ஒரு வேளை உண்டோ விரதமிருந்து மாலையில் முருகனை தரிசித்து அன்றைய விரதத்தை முடிப்பர். 

ஏழாம் நாள் சஷ்டியன்று அதிகாலையில் நீராடி, உபவாசமிருந்து, வீட்டில் படையலிட்டு மாவிளக்கேற்றி, அன்னதானமிட்டு, சூரசம்ஹாரம் நிகழ்வினை கண்டபின் தங்களுடைய விரத்தை முடிப்பர்.  அன்றைய தினம் கண்விழித்து முருகன் நினைவாகவே இருத்தல் வேண்டும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போல முருகனுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவாகும். அன்றைய இரவு கந்த புராணம், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசமென பாராயாணம் செய்தல் நலம்
இதுப்போல ஆறு அல்லது 12 வருடம் விரதமிருந்தால் முப்பேறும் கிட்டும்... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருந்தாலும் நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடும், மருதமலை(கோவை), வெள்ளி மலை (குமரி), வள்ளி மலை (ஆற்காடு), சென்னிமலை(ஈரோடு), எட்டுக்குடி(நாகப்பட்டினம்) பத்துமலை (மலேசியா), கதிர்காமம்(இலங்கை) மாதிரியான சில கோவில்களே! நாளையிலிருந்து தினம் ஒன்றாக ஒவ்வொரு முருகன் கோவில் பத்தி பார்க்கலாம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன், 
ராஜி.