Showing posts with label ஜலகண்டேஸ்வரர். Show all posts
Showing posts with label ஜலகண்டேஸ்வரர். Show all posts

Friday, April 06, 2018

நினைத்தாலே உற்சாகம் தரும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் - அறிவோம் ஆலயம்


கோவிலுக்கு போறதுலாம் மனசு அமைதி கிடைக்க. என் லிஸ்ட்ல ஒருசில கோவில் இருக்கு, அந்த கோவிலுக்குலாம் போனால், என்னையுமறியாமல், சாமியைக்கூட கும்பிடும்முன் மனசு அமைதியாகிடும். இன்னும் சில கோவில் இருக்கு. அந்த  கோவிலுக்கு போகனும்ன்னு நினைச்சாலே மனசு அமைதியாகிடும். அந்த மாதிரி கோவில்களில் முதன்மையானது வேலூர்  கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் ஆலயம். கணக்கு வழக்கில்லா எண்ணிக்கையில் இந்த கோவிலுக்கு போய் இருந்தாலும், ஒவ்வொரு முறை போகும்போதும், மனசு துள்ளாட்டம் போடுறதோடு, ஒரு புது விசயம் காணக்கிடைக்கும்.   

ரொம்ப நாளாவே இந்த கோவில் பத்தி பதிவு போடனும்ன்னு ஆசை. ஆனா, என்ன கெரகமோ தெரில. கோவிலுக்கு போகும்போதெல்லாம் கேமராவை கொண்டு போகமுடிவதில்லை. அதானால்,எப்பவோ மொபைல்ல எடுத்த போட்டோக்களை வச்சு பதிவாக்கியாச்சு.

விஜயநகர பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது  கட்டப்பட்டது இக்கோவில்.  கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இப்ப தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசம் இருக்கு. இக்கோவிலின் விமானம் ஆகமவிதிப்படி பத்ம விமானம் ஆகும். கோட்டைக்குள் நுழைந்ததும் வலதுப்புறம் திரும்பினால் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வரும். கோவிலுக்கு வரும் பயணிகள் தங்கள் உடைமைகளை வைக்க அறநிலைத்துறை சார்பா இலவசமா ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காங்க. கழிப்பறை வசதியும் இருக்கு. கைகால் சுத்தப்படுத்திக்கிட்டு கோவிலுக்குள் நுழையலாம். மத்த கோவில்கள் போல இங்க அர்ச்சனைக்குரிய பொருட்கள் விற்கும் கடைகள் அதிகம் இருக்காது. ஓரிரு கடைகள் மட்டுமே இருக்கும். தரைமட்டத்திலிருந்து சில அடிகள் கீழ இருக்கும் இக்கோவில். சுமார் எட்டு படிகள் கீழிறங்கியதும் கோவில் வரலாற்றை தொல்லியல் துறை சார்பா கல்வெட்டி பொரிச்சு வச்சிருக்காங்க. 
அத்திரி முதலான சப்தரிஷிகளும் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் பாகமதிமலையில் சிவலிங்க பூஜை செய்தனர். அவர்களில் அத்திரி முனிவர் மட்டும் வேலமரங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார் . சில காலம் கழித்து அவர் அவ்விடம் அகன்றதும் அந்த லிங்கம் கேட்பாரற்று நாளடைவில் புற்றுக்களால் சூழப்பட்டது. 

புற்றுக்குள்  பரமன் இருப்பதை உணர்ந்த  பசு ஒன்று, தினமும் இவ்விடம் வந்து பரமனுக்கு பாலை அபிஷேகித்தது. ஊரார் இதை கவனித்து மன்னர் பொம்மி நாயக்கரிடம் சொன்னார்கள். அவர் அதை நேரில் காண வேண்டுமென்று விரும்பி சென்று பார்த்தார். அங்கே,  மிகப்பெரிய நாகமொன்று புற்றிலிருந்து வெளிப்பட்டு பசுவின் காம்புகளிலிருந்து பாலைக் குடித்துவிட்டு, புற்றுக்குள் ஓடி மறைந்தது. திகைப்பால் தடுமாறினார் மன்னர்.  அன்று இரவு அவர் கனவில் ஈசன் தோன்றி, தானே அந்த நாகமென்று உரைத்தார். பொம்மி பிரமித்தார். இத்தகைய அதிசயம் நிகழ்த்திய ஈசனுக்கு ஓர் ஆலயம் அமைக்க விரும்பினார். இறைவனிடம் ஆலயம் அமைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். ஆலயம் அமைப்பது எளிதானதா? அதற்கு அதிகம் செலவாகுமே என்று ஈசன் தெரிவித்தார் . 'உன் அருள் இருந்தால் பிற எல்லாம் தாமே வந்து சேரும்' என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார் பொம்மி. அவருடைய ஆழ்ந்த பக்தியை மெச்சிய ஐயன், பள்ளிகொண்டராயன் மலையில் ஒரு புதையல் இருப்பதாகவும், அதை ஏழு நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளுமாறும் அருளாணையிட்டார்.

கனவில் நடந்தவை அனைத்தும் நனவிலும் நிகழத் தொடங்கியது. புதையல் இருந்த இடத்திலிருந்து புற்றுவரை மக்களை வரிசையாக நிற்கவைத்து ஒருவர் கை மாற்றி அடுத்தவர் என்று பொக்கிஷம் அத்தனையையும் இவ்விடம் கொண்டு சேர்த்தார். கோயில் கட்டுவதற்காக வேலமரக்காடு சீர் செய்யப்பட்டது. சிவபெருமான் பொம்மியின் முன்தோன்றி இன்னும் ஒன்பது ஆண்டுகள் கழித்து ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரில் லிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தார். அப்போது ஓர் அதிசய காட்சியை கண்டார் பொம்மி. ஒரு புதரில் இருந்து சில முயல்கள் வேகமாக ஓட, நாய் ஒன்று அந்த முயல்களை துரத்தியது. பயந்து ஓடிய முயல்களில் ஒன்று சட்டென்று நின்று திரும்பியது. பீறிட்ட ஆக்ரோஷத்துடன் நாயை துரத்தியது! நீண்டதூரம் ஒரு வட்டபாதையில் நாயை துரத்திய முயல் சிவலிங்கம் இருந்த புற்றினையும் சிறு வட்ட பாதையில் சுற்றிவிட்டு புற்றுக்குள் மறைந்தது. முயல் புற்றை சுற்றிய வட்டத்தையே எல்லையாகக் கொண்டு கோயிலை அமைப்பாயாக என்று ஓர் அசரீரி பொம்மிக்கு கட்டளையிட்டது.

இக்கோவிலின் அமைப்பே வித்தியாசமா இருக்கும். எல்லாக்கோவிலிலும் ராஜகோபுரத்திற்கு நேராய்தான் கருவறை இருக்கும். ஆனா, இக்கோவிலில் தெற்கு பார்த்த நிலையில் இருக்கும். ராஜக்கோபுரத்தை கடந்தபின் இன்னொரு நுழைவாயிலை கடந்து மற்ற தெய்வங்களை வணங்கியபின் கட்டக்கடைசியாதான் மூலவரை தரிசிக்க முடியும். பொதுவா கோவிலுக்கு போனா, அங்கிருக்கும் குளங்களில் (குளம் இல்லன்னா குழாய் தண்ணில) கைகால்களை சுத்தம் செய்துக்கிட்டு, கோடி புண்ணியம் தரும் ராஜகோபுரத்தை வணங்கி, உள்நுழைந்து கருவறை விமானத்தை வணங்கி, பிராகாரத்தை சுத்திட்டு அதுக்கப்புறமாதான் மூலவரை தரிசிக்கனும். இது எதுக்குன்னா, கோவிலுக்குள் நுழையும்போது, பலவித உணர்ச்சிகள் ஆட்பட்ட நிலையில் இருப்போம். அதுலாம், இப்படி பிராகாரத்தை வலம்வரும்போது உணர்ச்சிகள் மறைந்து மனசு ஒருநிலைப்படும். ஒருநிலைப்பட்ட மனதோடு இறைவனை வணங்க இந்த ஏற்பாடு. இதுக்கு, இன்னும் ஈசியா சொல்லனும்ன்னா, மகனே! நீ எங்க சுத்தினாலும், கட்டக்கடைசியில் நீ என்கிட்டதான் வந்தாகனும். அப்ப உன்னை வச்சி செய்வேன். அதனால, ரொம்ப ஆடாதன்னு கடவுள் எச்சரிக்குறமாதிரியும் நினைச்சுக்கலாம்.

இந்த ராஜகோபுரம்  ஏழு நிலைகளை கொண்டது. கோபுரத்தின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. உள்ளே நுழைந்தால் வலதுப்புறத்தில் குளமும்,  இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் இருக்கும். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்திலும் உட்பிராகாரத்திலும் ஆலய சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட முழு நீள மண்டபம் அமைந்திருக்கும். கோயிலுக்குள் இருக்கும் மண்டபம் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடமேற்கில் வசந்த மண்டபமும், அதையொட்டி சிம்ம கிணறும், வடகிழக்கில் வெளிப்பிராகார யாகசாலையும், தென் கிழக்கில் உற்சவ மண்டபம் மற்றும் வெளிப் பிராகார மடப்பள்ளியும் என பரந்து விரிந்திருக்கு இக்கோவில்.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் அதாவது 1274 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 14 ஆம் நூற்றாண்டில் கோலோச்சிய சம்புவராயர்களைத் தொடர்ந்து 16 ஆம் நூற்றாண்டு வரை நீள்கிறது இந்த கோவிலின் கட்டுமானப்பணி. கோவிலின் உள்பிரகாரமும்  மற்றும் கோட்டையின் உட்சுவரும்  சம்புவராயர்களால்  கட்டப்பட்டது. வெளிப்பிரகாரமும், கல்யாணமண்டபமும், வசந்தமண்டபமும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சதாசிவதேவ மகாராயர் என்னும் மன்னன்  ஆண்டு வந்த  காலத்தில் (கி.பி.1540-1572) குறுநில மன்னரான  பொம்மி நாயக்கரால் அமைக்கப்பட்டதாகும் .  கோவில் அமைப்பு, வரலாறுலாம் பார்த்தோம். கோவில் பெருசுங்குறதால பதிவு நீண்ண்ண்ண்ண்டுக்கிட்டு போச்சா?! இல்ல எனக்கு பிடிச்ச கோவில்ங்குறதால பதிவு நீண்டுச்சான்னு தெரில. பதிவின் நீளம் கருதி இத்தோடு பதிவை முடிச்சுக்கலாம். 

 நினைத்தாலே முக்தி தருபவர் அருணாச்சலேஸ்வரர்.. ஆனா, நினைச்சாலே எனக்கு உற்சாகத்தை தருபவர் இந்த ஜலகண்டேஸ்வரர்.  உற்சாகமா இருந்தால் மத்தவங்களை சந்தோசமா வச்சுப்போம். மத்தவங்களை சந்தோசமா வச்சிக்கிட்டால் முக்தி தானாய் கிடைக்கும். இறைவன் இல்லா கோவில், 37 ஆண்டுகளாய் அணையாமல் எரியும் விளக்கு, ஜுரகண்டேஸ்வரர் ஜலகண்டேஸ்வரராய் மாறிய கதைலாம் அடுத்த வாரம் பார்ப்போம்.

அடுத்த வாரம்....
  இறைவன் இல்லா கோவில், 37 ஆண்டுகளாய் அணையாமல் எரியும் விளக்கு, கோவிலில் வீற்றிருப்பவர் ஜுரகண்டேஸ்வரரா இல்ல ஜலகண்டேஸ்வரரான்னு அடுத்த வாரம் பார்ப்போம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!
நன்றியுடன்,
ராஜி.