Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts

Friday, December 14, 2018

மனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்

ஜலகண்டேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை கிரிவலம், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில் இதுமாதிரியான கோவிலுக்கு போனால் இனம்புரியாத அமைதி மகிழ்ச்சி உண்டாகும். தஞ்சை பெரியகோவில், ஸ்ரீபுரம் நாராயணக்கோடி, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மாதிரியான கோவில் பிரமிப்பை தரும். இப்படி ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு தரும். ஆனா,  ஒரு கோவில் மனவலியை கொடுத்துச்சு. எனக்கு மனவலியை கொடுத்த அந்த கோவிலை, ஏன் மனவலியை கொடுத்துச்சுன்னு காரண காரியத்தோடு இன்றைய பதிவில் பார்க்கபோறோம்.
சமீபத்துல வேலூர் பக்கமிருக்கும் மகாதேவன் மலைக்கு போக நேர்ந்தது. ஊர்பயணம்ன்னா ஜாலிதானே?! சிறுகுழந்தையின் குதூகலத்தோடு கிளம்பியாச்சுது. வேலூர் டூ பெங்களூர் பைபாசில் பள்ளிக்கொண்டா டோல்கேட்டிலிருந்து வலப்பக்கம் திரும்பினால் பள்ளிக்கொண்டா வரும். அங்க இருக்கும் சயனக்கோலத்திலிருக்கும் அரங்கனுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு மகாதேவ மலைக்கு பயணமானோம். மலைகள், வயல்வெளிகள், சிற்றோடைகள்ன்னு வழியெங்கும் இயற்கை எழில் மனசை கொள்ளைக்கொண்டது. தூரத்திலேயே மலை உச்சியிலிருக்கும் கோவில் தென்பட்டது. மலையை நெருங்க நெருங்க ஒரு குழந்தையின் உற்சாகம்  தொற்றிக்கொண்டது.
மலை அடிவாரம்வரை பேருந்துகள் செல்லுது. அங்கிருந்து மலைக்கு நடந்தும் போகலாம், அல்லது வாகனங்கள் மூலமாவும் போகலாம். மலைக்கு மேல போக ஷேர் ஆட்டோக்களும் உண்டு.  படிகள் தொடங்குமிடத்திலிருந்து வலப்பக்கம் திரும்பினால் மிகப்பெரிய திருக்குளம் கட்டுமானத்தில் இருக்கு. அதனால் உள்ள போகமுடில. மலைக்கு போகும்போது மேலிருந்து கீழ  பார்த்ததுதான். மலையடிவாரத்திலிருந்து மலைக்கு ஏற ஆரம்பிக்கும்போதே மனசு வலிக்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இரண்டு அல்லது மூன்று மலைகள் இக்கோவிலுக்காக தன்னை இழந்துக்கொண்டிருக்கிறது.  மண் அள்ளும் எந்திரம், கல் உடைக்கும் எந்திரம், பாறைகளை பிளக்க வெடிகள்ன்னு அந்த இடமே மனசை பிசைய ஆரம்பிச்சது.
மகாதேவன்மலைங்குறது சதுரகிரி, கொல்லிமலை, வெள்ளியங்கிரி, பர்வதமலை மாதிரியான ஒரு சிவத்தலம். பௌர்ணமிகளில் சிவபக்தர்கள் இங்க தங்கி இருந்து சுயம்புவாய் உருவான சிவனுக்கு அபிசேகம், ஆராதனை செய்வாங்கன்னும், சித்தர்கள் அரூபமாய் இந்த இடத்துக்கு வந்து போவாங்கன்னும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். அதனால்தான் இந்த கோவிலுக்கு போகலாம்ன்னும் ஆசைப்பட்டேன்.  திருக்குளமா இல்ல சினிமா செட்டிங்கான்னு சந்தேகப்படுமளவுக்கு வேலைப்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு.
கோவிலுக்கு அருகே வரையில் செல்ல வசதி இருக்கு. இக்கோவில் கிட்டத்தட்ட 1000வருசம் பழமையானது. இறைமூர்த்தங்கள் சுயம்புவாய் உண்டாகி இருப்பதை பல கோவில்களில் பார்த்திருக்கோம். ஆனா, இக்கோவிலில் சிவன் மட்டுமில்லாம நந்தீஸ்வரரும் சுயம்புவாய் உருவானவர்.  மலைகள், காடுகள், வயல்வெளிகள்ன்னு இந்த இடமே அமைதியாய் இருந்ததால் சிவபக்தர்களுக்கு பிடித்துப்போனதால் பௌர்ணமிகளில் இங்கு வந்து சிவனை பூஜிப்பது வழக்கமாம்.
நாம போற வாகனங்களை நிறுத்தவே ஓரிரு ஏக்கரா கணக்கில் இந்த இடம் பறந்து விரிந்திருக்கு.  ஆதிகாலம் தொட்டு இருந்து வந்த கோவில் வாசல் தெற்குபக்கமென இருந்ததை மாற்றி, வடக்கு பக்கமா மாத்தி வைத்து கட்டுமாணப்பணிகள் நடந்துக்கிட்டிருக்கு. சுமார் பத்து இருபது படிகளை கடந்தால் நுழைவு வாசல் வரும். ஆனா, இப்போதைக்கு இந்த வாசல் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே. நமக்குலாம் இல்ல. அதனால், பழைய வழியிலேயே செல்ல ஆரம்பித்தோம்.

கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில் பிள்ளையார் நம்மை வரவேற்று, வழித்துணையாய் வருவேன்னு உக்காந்திருக்கார். நாம எப்படி சொகுசா இயற்கைஅயை வாழ்ந்துக்கிட்டிருக்கிறோமென்பதை ஓங்கி நச்சென்று குட்டி அறிவுறுத்தும்படி இருந்தது இந்த பயணம். 
மலைக்க வைக்கும் படிகள், நுரையீரல் தெரிச்சு வாய் வழியா வந்திடுமோன்னு இருந்தது. எங்கு திரும்பினாலும் வினாயகரே வீற்றிருக்கிறார்.  

அவருக்கு போட்டியா ஆஞ்சினேயரும் சரிவிகத்தில்  சின்னதும் பெருசுமா இங்க இருக்கார். 

என்னம்மா முடியலியான்னு பிள்ளைகள் கிண்டல் பேச, இப்படிதான் திருத்தணி படிகட்டில் துள்ளி குதிச்சு ஏறும்போது என் மம்மியை நான் கிண்டல் பண்ணதுலாம் கண்முன் வந்து போனது. 
மனசுக்கு இதமளிக்க சின்ன சின்னதான நீருற்றும், நீர்வீழ்ச்சியும்... 
இதற்குமேல் முடியாதென கால்கள் கெஞ்ச ஆரம்பிச்சபோது கருவறை வந்திடுச்சும்மான்னு சொல்லிட்டு போனார் ஒரு பக்தர்.  மாலை 5 மணிக்கு போனதால் படிக்கட்டுகள்லாம் இருட்டுல மூழ்கி கிடந்தது.
நுழைவு வாயிலுக்கும், கருவறைக்கும் நேராய் பலிபீடம் இருக்கும். ஆனா, இந்த கோவிலில் சம்பந்தமே இல்லாம தனியாய் ஒதுங்கி இருக்கு.  மேல படத்தில் பார்க்குறது பிரதோஷ மண்டபம். இங்கதான் பிரதோஷ வேளையில் நந்திபகவானுக்கு அபிஷேகம் நடக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு சுயம்புவாய் உருவான சிவபெருமானையும்,  நந்தியையும் இப்பகுதி மக்கள் பார்வைக்கு கிடைச்சிருக்கு. ஆள் அரவமற்ற இடத்திலிருந்தாலும் சிவனுக்கும் நந்திக்கும் யாரோ அபிஷேக ஆராதனை செய்திருப்பதை கண்ட இப்பகுதி மக்கள் கூடி விவாதிக்க, அங்கிருந்த சாமியாடி ஒருத்தர்மேல் வந்த சிவன், இது சித்தர்கள் வணங்கும் லிங்கம், இங்கேயே இருக்க சிவன் முடிவெடுத்திருப்பதால் தனக்கு ஒரு கோவில் எழுப்பி, மகாதேவன் என அழைக்கனும்ன்னு சொல்லி இருக்கார். அதன்படியே சின்னதா ஒரு கோவிலை எழுப்பி வணங்கி வந்தனர். 
சித்தர்களை சந்திக்க விரும்பிய சிவபக்தர்கள் பௌர்ணமிதோறும் இங்க வந்து தங்கிச்செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர். பர்வதமலை போலவே ஓரடிக்கும் குறைவான உயரத்திலேயே சுயம்பு லிங்கம் இருக்கும். கொஞ்ச நாள் முன்வரை பக்தர்கள் தன் கையாலேயே அபிஷேக ஆராதனை செய்து வந்தனர். இப்ப அப்படியில்லை.
எல்லாம் நல்லபடியாவே போய்க்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச 1970 காலக்கட்டத்தில் தேவானந்தம் என்பவர் இங்கிருந்த  குகைக்குள் தங்கி ,  ரிஷிகேஷிலிருந்து தான் கொண்டுவந்த லிங்கம் ஒன்றை  காளஹஸ்தி வழியாக மகாதேவமலைக்கு கொண்டு வந்து, அக்குகைக்குள் வைத்து பூஜை செய்து வழிபட துவங்கினார். கொஞ்ச நாளில் அங்கேயே ஜீவசமாதிய்மானார். அவருக்கு பின் அந்த குகைக்குள் சிவனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தவர்தான் ஸ்ரீசலஸ்ரீ மகானந்த சாமியார். தன்னை ஒரு சித்தர்ன்னு சொல்லிக்கிட்டார். நாள்கணக்கில் குளியல், பல்துலக்குதல்ன்னு எதுமில்லாமல் இருப்பாராம். ஆனா, நிமிசத்துக்கு ஒருமுறை விபூதியை அள்ளி தன் உடலில் பூசிக்குவாராம்.   அந்த குகைக்குள் தலைக்கீழாய் தொங்கி தியானம் செய்வார்ன்னும் சொல்றாங்க. அவர் தூங்கும்போது ஐந்து தலை நாகமொன்று வந்து படமெடுத்து நிக்குமாம்!! ஆனா, நான் பார்க்கல. அதுசரி, நான் என்ன விஐபியா என்னை அந்த இடத்துக்கு கூட்டிப்போக!! 
அன்னம், தண்ணின்னு ஏதுமில்லாம நாள்கணக்கில் இருப்பார்ன்னு சொல்லப்பட்ட இந்த சித்தர், இப்ப ஏசி, செல்போன், லாப்டாப்ன்னு ஏகமா வாழ்ந்துக்கிட்டிருக்கார்.  கொஞ்சம் அப்பிடி இப்படி இருந்தால் பைத்தியம்ன்னு சொல்வாங்க. இல்லன்னா, சித்தர், சாமியார்ன்னு தலையில் வச்சு கொண்டாடுவாங்க. அதுதான் இங்க நடந்தது, மெல்ல மெல்ல அவர் புகழ் உள்ளூரிலிருந்து வெளியூருக்கும் பரவ ஆரம்பிச்சது. மத்திய, மாநில அமைச்சர்கள், சசிகலா புகழ் தினகரன்ன்னு விஐபிகள் இங்க குவிய ஆரம்பிச்சாங்க.
முறையான அனுமதி இன்றி கோவில் எழும்ப ஆரம்பிச்சது. அன்னம், தண்ணி இல்லாம தான் இருந்தாலும் பக்தர்கள் பசியாற  அன்னதானம் செய்ய ஆரம்பிச்சார் சாமியார். இலவசமாய் கொடுத்தா நம்மாளுங்க சும்மா விடுவாங்களா?! சாமியார் பத்தி ஏகத்துக்கும் அடிச்சு விட ஆரம்பிச்சாங்க. இதுவரை 75 ஊமைகளை பேச வச்சிருக்கிறார்.  முடவர்களை நடக்க வச்சிருக்கிறார். இவரை தரிசிச்சா தீராத பிரச்சனைலாம் தீருமென.. ஊர் முழுக்க  ஆகா ஓகோன்னு அடிச்சு விட்டாங்க.
எதை தின்னா பித்தம் தெளியும்ன்னு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மக்கள் சாமியாரை பார்க்க ஆரம்பிச்சாங்க. அவராய் எதும் கேட்கலைன்னாலும்,  அரிசி, பருப்பு, தேங்காய்ன்னு குடோவுனில் குவிய ஆரம்பிச்சது.  பழைய கோவில் இந்து அறநிலையத்துறையில் இருக்குன்னு அறிவிப்பு பலகை இருப்பது ஒப்புக்குதான். 
இங்கிருக்கும் ஒரு மலையை அப்படியே தரைமட்டமாக்கி அருகிலிருக்கும் கிராமத்து மக்களுக்கு 2000 வீடுகள் கட்டி கொடுக்க போறதா சொல்லி இருக்காராம். ஒவ்வொரு வீடும் 9லட்சம் பெறுமானமுள்ளதுன்னும் சொல்லி இருக்கார். ஒருத்தன்கிட்ட இருந்து  எதாவது அடிக்கனும்ன்னா முதல்ல அவன் ஆசையை தூண்டனும்ன்னு சதுரங்க படத்தில் ஒரு வசனம் வரும். அதுக்கு இதுதான் சரியான உதாரணம்போல!  இதுக்குலாம் பைசா எதுன்னு சாமியார்கிடட நிருபர்கள் கேட்டதுக்கு பிச்சை எடுத்து  கட்டுவேன்னு சொல்லி இருக்கார். இத்தனைக்கும் இந்த கோவிலுக்குன்னு எந்த அறக்கட்டளையும்  கிடையாது. மேல படத்தில் இருப்பதுஅருகிலிருந்த மலையில் இருந்த மரங்கள்லாம் வெட்டிப்போட்ட மரத்துண்டுகள்.  இது சாம்பிள்தான். இதுமாதிரி ஐந்திலிருந்து பத்து இடத்துல குமிச்சு வச்சிருக்காங்க.அந்த பத்தும் என் பார்வைக்கு சிக்கியது மட்டுமே! 

மகானந்த சாமியார் தங்கி இருக்கும் குகைக்கு பக்கத்தில்  ஆறடி நீளத்தில் ஒரு பள்ளம் வெட்டி, சிமெண்ட் பூசி நெருப்பு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. என்னன்னு கேட்டதுக்கு இங்கதான் ஸ்ரீசலஸ்ரீ சாமி  இந்த நெருப்பு படுக்கையில் படுத்து உலக நன்மைக்காக தவம் செய்வாராம். கெட்டது செய்யும் மனிதர்கள் அதிகரிச்சதால, உலகம் அழியும் காலம் நெருங்கிட்டுதாம், விரைவில் நீர் மூலமா பேரழிவு பூமியை நெருங்கிட்டு  இருக்கு. அதனால் அதிலிருந்து மக்களை காப்பாற்றவே தான் சித்தரானதா இவர் சொல்லிக்குறராம்.
இந்த சாமியாரின் பூர்வீகம், பேர் என்னன்னு இங்க யாருக்குமே தெரில. தருமபுரில இருந்து 1980 வாக்கில் இங்க வந்ததா சிலர் சொல்றாங்க. 
டி.ராஜேந்திரர்க்கு போட்டியாய் சினிமா செட்டிங்க் மாதிரி எங்க பார்த்தாலும் பிரம்மாண்டம்.
புல்லாங்குழல் ஊதும் க்ருஷ்ணன்
யோக நிலையில் இருக்கும் சிவன்..
விஸ்வரூப வடிவத்தில் விஷ்ணு...
கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆறுமுகன்..

நவதிசை வினாயகர்
லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, நிஷ்டையிலிருக்கும் சிவபாலன், காலபைரவர், சண்டிகேஸ்வரர், சித்ரகுப்தன், எமதர்மன், நவக்கிரங்கள், இந்திரன், இந்திராணி, என சகல தெய்வங்களும் பிரம்மாண்ட சிலாரூபாத்தில் தயாராகிட்டிருக்காங்க. முக்கியமான விஐபி ஒருவர் அடிக்கடி வந்து போறதால கட்டுமாண பணிகள் தொய்வின்றி, யாருடைய தலையீடுமில்லாமல் நடந்துக்கிட்டிருக்கு.  கூடிய விரைவில்  மிகப்பெரிய வியாபார தலமா இக்கோவிலும், மலைகளும் தரைமட்டமாகிடும். 
மக்களை காக்க மலைமேல உக்காந்த இறைவனால், தன் இருப்பிடமான அந்த மலையையே காப்பாத்திக்க முடியலியே!!ன்ற ஆதங்கத்தோடு அங்கிருந்து கிளம்பினோம்... இந்த கோவில் வேலூர் மாவட்டத்தில் காங்குப்பம்ன்ற ஊராட்சியில் இருக்கு. வேலூரிலிருந்து நேரடி பேருந்து இருக்கு.  குடியாத்தத்திலிருந்தும் இங்க வரலாம்.  இல்லன்னா கே.வி.குப்பம் குடியாத்தம் வழியில் சாலையிலேயே இறங்கி ஷேர் ஆட்டோக்களிலும் போகலாம். போனால் பிரம்மாண்டமான கோவிலை தரிசிக்கலாம். ஆனா, தன்னை இழந்த மலைகளை பார்த்து மனசு வலிக்கவும் செய்யும். இப்போதைக்கு மாலை ஆறுமணிக்கே கோவிலை அடைச்சுடுறாங்க.  

ஆயிரங்காலத்து  பழமையான கோவில். அக்கோவிலின் தல வரலாறே மறைச்சு சாமியார் புகழ் பாடிக்கிட்டிருக்கு இக்கோவில்.  

நன்றியுடன்,
ராஜி







Wednesday, October 10, 2018

வைணு பாப்பு வானாய்வகம் Vainu Bappu Observatory - மௌனசாட்சிகள்

நீலப்போர்வையாய் விரிந்திருக்கும் வானம். அதில் நாயகனாய் ஒரே ஒரு சூரியன், சூரியனுக்கு நாயகியாய் ஒரு நிலா, துணை நடிகர்களாய் ஒரு நூறு நட்சத்திரங்கள், நம் நல்லது கெட்டதுக்கு பழிபோட ஒன்பது கிரகங்கள், பஞ்சுப்பொதியாய் மேகம், அவை மோதிக்கொள்ளும்போது உண்டாகும் இடி, மின்னல்.. மழைநேரத்துல வரும் அழகான வானவில்.. இது மட்டும்தான் நமக்கு தெரிஞ்ச வானம் என்கிற விண்வெளி.  ஆனா, இதுமட்டுமில்லை விண்வெளி.  
பூமியிலிருந்து 100கிமீ தூரத்திலிருந்து விண்வெளி ஆரம்பிக்குது. விண்வெளி  கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியே விண்வெளின்னு சொல்லப்படுது.  நம்ம கண்ணுக்கு தெரியாத பல நூறு கோள்களும் விண்வெளியில் அடக்கம். பலவிதமான சமூக தேவைகளுக்கான விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பது  பூமி என்கிற இந்த கிரகத்தில் வசிக்கும் நம்மிடம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கு. விண்வெளி பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், விண்வெளி ஆராய்ச்சியினை ஊக்கப்படுத்தவுமென 70உலக  நாடுகள் சேர்ந்து அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ’உலக விண்வெளி’ வாரமாக கொண்டாடுகின்றனர்.

 1957ம் ஆண்டு அக்டோபர் மாசம் 4-ம் தேதி மனிதனால் உண்டாக்கப்பட்ட முதல் செயற்கை விண்கலமான ’ஸ்புட்னிக்-1’  விண்ணில் ஏவப்பட்டது. 1967ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மாநிலங்களின் செயல்பாடுகளைக் காணுதல் மற்றும் சந்திரன் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட புற விண்வெளிகளை அமைத்திக்கான நடவடிக்கைக்காக பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பமானது. இது இரண்டையும் நினைவில் கொண்டே இந்த நாளினை விண்வெளி வாரமா கொண்டாட 1999ல்  முடிவெடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் ’உலக விண்வெளி வார’ கொண்டாட்டத்திற்காக உலக விண்வெளி வார கழகம் ’விண்வெளியில் புதிய உலகத்தை ஆராய்தல்’ என்பதையும் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.




உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மௌனசாட்சிகளில் இன்னிக்கு பார்க்கப்போறது ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமான வைனு பாப்பு வானாய்வகத்தை பத்தி பார்க்க போறோம். இது வேலூர் மாவட்டத்தில் காவலூர் என்ற இடத்தில் இருக்கு. 
ஒரு வானியல் ஆராய்ச்சி மையத்தினை எங்க வேணும்ன்னாலும் அமைச்சிட முடியாது. அதுக்குன்னு சரியான சூழல் வேணும். வான்வெளியை கூர்ந்து நோக்க  சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்கனும்.  பத்து பொருத்தமும் பக்காவா  வேலூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அமைஞ்சுது. 

காவலூர் வானியல் ஆய்வு மையம் நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு. இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்திலிருக்கு. தீர்க்கரேகையாக 78 ° 49.6 கிழக்கும் 'அட்சரேகையாக 12 ° 34.6 வடக்குமா இவ்விடம் அமைஞ்சிருக்கு. இந்த ஆய்வகம் நகர விளக்குகள் மற்றும் தொழில்துறை பகுதிகளின் சத்தத்திலிருந்தும், நகர விளக்குகள், வாகனங்களின் வெளிச்சத்திலிருந்தும்  தேவையான அளவில் தொலைவிலிருந்து விலகி இருக்குது.   பூமத்தியரேகைக்கு நெருக்கமாகவும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு அரைவட்டங்களையும் சமமாக கவனிக்க இயலும் என்ற காரணத்தாலேயே இவ்விடம் தேர்வு செய்யப்பட்டது. கூடுதலாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இவ்விடத்தின் தீர்க்கரேகை செல்வதால் இங்கிருந்து தெற்கு வான்பொருட்களை கவனிக்கும் வானியல் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா மேகநாத் சாஹா, சுப்ரமணியன் சந்திரசேகர் மாதிரியான  அற்புதமான விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகளை உலகுக்கு அளித்துள்ளது. ஆனாலும், விண்வெளியைக் கண்காணிக்கும் வானாய்வில் இந்தியா இன்னமும் போதிய திறனின்றி உள்ளது”. அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுநர் ஹார்லோ ஷாப்லே (1885- 1972) என 1947இல் சொன்னார், விண்வெளியை நவீனத் தொலைநோக்கிகளால் ஆராயும் வசதிகளும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்தியாவில் இல்லை என்பதையே அவர்  அப்படி சுட்டிக்காட்டினார்.

அவரது மனக்குறை வெகு விரைவில் நீங்கியது மட்டுமில்லாம, உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்படியாக  ஆசியாவிலேயே மிகப் பெரிய வானாய்வுத் தொலைநோக்கியை தமிழகத்தில் நிறுவப்பட்டு 1986ம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. இங்கிருக்கும் 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கிதான் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும் 
2.34மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி இருக்கும் பிளாட்பார்ம்..

உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்படி ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் ஆய்வகத்தை உருவாக்க காரணமான விஞ்ஞானியின் பெயர் வைணு பாப்பு. இவர் கேரளத்தின் தலச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட, தீயா சமூகத்தைச் சேர்ந்த சுனன்னா பாப்பு, ஆந்திர மாநிலத்தின் நிஜாமையா வானாய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். சுனன்னா பாப்புவின் மகனாக, ஆகஸ்ட் 10,  1927, ஆக. 10 சென்னையில்  வைணு பாப்பு பிறந்தார். வைணு பாப்புவின் முழு பெயர்  மனாலி கல்லட் வைணு பாப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற பாப்பு, கல்வி உதவித்தொகை பெற்று இங்கிலாந்து,  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். அப்போது தனது சக ஆராய்ச்சியாளர்களான பார்ட் போக், கார்டன் நியூகிர்க் ஆகியோருடன் இணைந்து, ஒரு புதிய வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு  ‘பாப்பு- போக்- நியூகிர்க்’ வால்நட்சத்திரம் என பெயரிடப்பட்டது (Bappu-Bok-Newkirk comet- 1949). அதற்காக, பசிபிக் வானியல் சங்கத்தின் டோனோ வால்நட்சத்திரப் பதக்கம் பெற்றார்.
1952ல பிஎச்.டி. பட்டம் பெற்றவுடன், கார்னெகி மதிப்பூதியம் பெற்று, அமெரிக்காவின் பாலோமர் வானாய்வகத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோது, அமெரிக்க விஞ்ஞானி ஓலின் சாடோக் வில்சனுடன் இணைந்து, விண்மீன்களிடையிலான தொலைவைக் கண்டறியும் தேற்றத்தை உருவாக்கினர். விண்மீன்களுக்கு இடையிலான விண்ணிடைத் தொலைவுகளை அளவிட அவற்றின் ஒளிக்கதிர் மாறுபாடு உதவும் என்பதை அவர்கள் நிரூபித்ததால், அது ‘வில்சன்- பாப்பு விளைவு’ (Wilson- Bappu effect) என்றே அழைக்கப்படுது.
1953-இல் வைணு பாப்பு நாடு திரும்பினார். உத்தரப்பிரதேச அரசின் நைனிடால் வானாய்வகத்தை மேம்படுத்தும் பணி பாப்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வானாய்வகத்தின்  இயக்குநராக விளங்கிய பாப்பு அதை அபிவிருத்தி செய்தார் (1954- 1960) 1960-இல் தமிழகத்தில் கொடைக்கானலிலிருந்த வானாய்வகத்தின் இயக்குநராக பாப்பு நியமிக்கப்பட்டார். அங்கு சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண தொலைநோக்கி மட்டுமே இருந்தது. அதையும் நவீனப்படுத்தினார் பாப்பு.
அப்ப, இரவிலும் துல்லியாமாக வான்வெளியை ஆராய புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தை அவர் பல்லாண்டுகளாகத் தேடினார். அது உயரமான இடமாக இருப்பதுடன், மேகமூட்டமில்லாத இடமாகவும், சூழல் பாதிக்கப்படாத- ஒளி மாசு அற்ற பகுதியாகவும் இருந்தால் மட்டுமே, வானிலுள்ள பொருள்களை மிகத் துல்லியமாக உற்றுநோக்கிக் கண்காணிக்க முடியும். தனது நீண்ட நெடிய  தேடுதலின் விளைவாக, ஜவ்வாது மலையிலுள்ள காவலூர் என்ற இடத்தைக் கண்டறிந்தார் பாப்பு. 
I2.3 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி.

தான் கண்டெடுத்த காவலூரில்  அரசின் உதவியுடன் ஒரு வானாய்வகத்தை பாப்பு நிறுவினார் (1968). ஆரம்பத்தில் 38 செ.மீ. விட்டமுடைய தொலைநோக்கியுடன் காவலூர் வானாய்வகம் தனது பணியைத் துவக்கியது. வியாழன் கிரகத்தில் ஏற்படும் மாறுபாடுகளை ஆராய, 1971-இல் 61 செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி இங்கு நிறுவப்பட்டது. இவை இரண்டுமே பாப்புவின் மேற்பார்வையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.
மூன்றாவதாக, நிறங்களைப் பிரிக்கும் மேகநிற மானியுடன் கூடிய, நுட்பமான மின்னணுவியல் தொலைநோக்கி 100 செ.மீ. விட்டத்தில் 1972-இல் நிறுவப்பட்டது. இந்தத் தொலைநோக்கிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்தது. வியாழன் கிரகத்தின் நிலவான கானிமீடுக்கு வளிமண்டலம் இருப்பதை 1971-இல் காவலூர் வானாய்வகம் கண்டுபிடித்தது. யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வளையம் இருப்பதையும் 1977-இல் பாப்பு தலைமையிலான விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.
இவ்வளவு செய்தும்  வைணு பாப்புக்கு  திருப்தி ஏற்படலை. வானை அளக்கும் மிகத் துல்லியமான மிகப்பெரிய அதிநவீன தொலைநோக்கியுடன் கூடிய வானாய்வகம் அமைப்பது அவரது கனவாக இருந்தது. 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே (1786) வானியல் ஆய்வுகள் இந்தியாவில் தொடங்கி இருந்தாலும், வானாய்வு நிறுவனங்களும் அதற்குத் தகுதி படைத்த வல்லுநர்களும் வளர்ச்சி பெறவில்லை. இந்நிலையை மாற்ற விரும்பிய வைணு பாப்பு, அரசிடம் நிதியுதவி பெற்று, சுய அதிகாரம் கொண்ட இந்திய வானியற்பியல் கழகத்தை (Indian Institute of Astrophysics- IIA) ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக 1971-இல் பெங்களூரில் நிறுவினார். வானியலில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் இங்கு துவக்கப்பட்டது. தவிர, இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், கொடைக்கானல், காவலூர், ஹன்லே (லடாக்), கௌரிபிதனூர் (பெங்களூரு) ஆகிய இடங்களிலுள்ள வானாய்வகங்கள் செயல்படுது. நாட்டின் பிரதான ஆராய்ச்சி மையங்களுள் இதுவும் ஒன்று.
பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்டு இந்திய வானியற்பியல் கழகம் இயங்கியபோதும், காவலூரையே தனது பணிக்களமாகக் கொண்டு, தீவிர ஆய்வுகளில் பாப்பு ஈடுபட்டார். தனது பெருங்கனவான மாபெரும் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அவர் தீவிரமாக உழைத்தார். அவரது முயற்சியின் பலனாக, 2.34 மீட்டர் விட்டமுடைய அதி நவீன தொலைநோக்கி காவலூரில் 1985-இல் நிறுவப்பட்டது. 1986-இல் அது செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், தனது கனவு நிறைவேறும்முன், 1982, ஆக. 19ல் வைணு பாப்பு மறைந்தார். அவரது சிறப்பை உணர்ந்த அரசு, காவலூர் வானாய்வகத்துக்கும், புதிய தொலைநோக்கிக்கும் வைணு பாப்புவின் பெரையே சூட்டி கௌரவித்தது (Vainu Bappu Observatory). 

சுமார் 40கி.மீ. தொலைவிலும் இருக்கும் 25 பைசா நாணயத்தையும் மிகத் துல்லியமாகக் காணக்கூடிய அளவுக்கு திறன் படைத்தது இந்த தொலைநோக்கி. இதன்மூலம், உலக அளவில் பிரமாண்டமான வானியல் தொலைநோக்கிகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. பல புதிய வானியல் நிகழ்வுகள் இதன்மூலம் கண்டறியப்பட்டது.
பெல்ஜியம் அறிவியல் கழகம், அமெரிக்க வானியல் சங்கம் ஆகியவற்றின்  கௌரவ உறுப்பினராக பாப்பு இருந்தார். சர்வதேச வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும் (1967- 1973), தலைவராகவும் (1979- 1982) வைணு பாப்பு செயல்பட்டுள்ளார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1970), பத்மபூஷண் விருது (1981) ஆகியவற்றை இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது. இந்தியாவின் வானியல் ஆய்வில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய வைணு பாப்புவால், வானையும் அளக்கும் திறமை நமக்கு வாய்த்தது.

2.3மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி..


1மீ தொலைநோக்கியின்  உதவியுடன் 1972  வியாழன் கோளின் நிலாவான கானிமீடிற்கு வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 1977 - யுரேனசு கோளைச் சுற்றி வளையம் இருப்பது பட்டாச்சார்யா, குப்புசாமியால் கண்டுபிடிக்கப்பட்டு   வைணு பாப்புவினால் தந்தியனுப்பப்பட்டு அனைத்துலக வானியல் சங்கம் - ஐ ஏ யூ-வினால் பதிவு செய்யப்பட்டது .

45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பிப்ரவரி 17ல் ஒரு சிறுகோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்தியா கண்டுபிடித்த இருபதாம் நூற்றாண்டின் முதல் (சிறிய) கோள் அதுவே.  அதற்கு, கணித மேதை ராமானுஜன் நினைவாக 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது . 
 சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் இருப்பதை 1984ல்தான்காவலூரிலிருந்து முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குது என பார்வையாளர்களுக்கு காட்டப்படும். வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு நேரத்தில் வானத்தினை பார்க்க அனுமதிக்கப்படும். 
சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 200கிமீ தூரத்தில் இருக்கு. வாணியம்பாடி வரை ரயில்ல போகலாம். அல்லது பேருந்து மூலமாகவும் போகலாம். வேலூர், ஓசூரிலிருந்துலாம் நேரடி பேருந்து இருக்கு. இல்லன்னா, தின்பண்டம், அண்டா குண்டா, அடுக்குச்சட்டி, உடைகள், மோதிரம், செயின், பழங்கள்ன்னு சீரோடு வந்து நம்ம வீட்டில் விருந்து சாப்பிட்டு மறுசீராய் உடை, பழம், தேங்காய்லாம் வாங்கிட்டு காவலூர் போகலாம்.  

 தான் உள்ளவரை இந்தியர்களின் அறிவுத்திறமையையும், வைணு பாப்புவின் அயராத உழைப்பினையும் மௌனமாய் உலக அரங்கில் பறைச்சாற்றும் வைணு பாப்பு வானாய்வகத்தை பார்க்க எப்போ வர்றீங்க சகோஸ்?!

நன்றியுடன்,
ராஜி.