Showing posts with label பர்வதமலை. Show all posts
Showing posts with label பர்வதமலை. Show all posts

Thursday, December 01, 2016

பர்வதமலை கடப்பாரை மலை புண்ணியம் தேடி ஒரு பயணம்

பொழுது விடிய தொடங்கியதும் ஆதவன் மெல்ல மெல்ல நமக்கு முன்னெழுந்து தனது ஒளிகதிர்களினால், மலைமேலிருக்கும் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரம்மராம்பிகையையும் வணங்கி நின்றான். பொழுது புலர்ந்து விட்டது. மலைமேல் இருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும். இனிதான் கடப்பாரைப்படிகள், தணடவாளப் படிகள்,ஆகாசப்படிகள் கொண்ட கடினமான மலைப்பாதைகளை நாம் கடக்கவேண்டும்.
இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. இதை நமது கடந்த வார பதிவில் தெளிவாக பார்த்தோம்.பார்க்காதவங்க, இந்த பதிவில் போய் பார்த்துவிட்டு வாங்க. அப்பொழுதுதான் இந்த மலைப்பயணத்தின் தொடர்ச்சி புரியும். மலை ஏற தொடங்கும் முன் சில பக்தர்கள், அடிவாரத்திலிருக்கும் சூலத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டு செல்கின்றனர்.நாமும் இங்கு நம்முடைய பயணம் இனிதாக அமைய இறைவனை பிரார்த்தித்து  செல்லலாம்
காலையில் பக்தர்கள் மலையேறுவதும்,இறங்குவதுமாக இருந்தனர்.நாமும் உற்சாகமாக ஏற ஆரம்பித்தோம். அண்ணாந்து பார்த்ததும், அங்கேயே பாதிப்பேர் உட்கார்ந்து விட்டனர். நம்மால் முடியுமாவென்று!! ஏனெனில், பாறை செங்குத்தாக 90 டிகிரி அமைப்பில் இருந்தது. சரி இங்கே இருந்தே இறைவனை தரிசித்துவிட்டு செல்லலாம் என,எங்களுடைய குழுவில் இருக்கும் சிலர் கூற, இந்த மலைப்பு, மலைமேல் இருக்கும் இறைவனுக்கு கேட்டுவிட்டதோ என்னமோ, உதவிக்கு ஆள் அனுப்பின மாதிரி சிலர், உற்சாகமூட்டி உங்களால் முடியும் என தைரியம் சொன்னனர்.அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டி, வேண்டாம்! கவனம் அப்படியே ஏறுவதாக இருந்தால் கடப்பாறை மலை கடினம்,தண்டவாளப்படி வழியாக போக வேண்டியிருக்குமென  பயம் காட்டினார். உண்மையில் அவர் கூறியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.மலையை சற்றே அண்ணாந்து பாருங்கள்.
இந்த மலையை பார்த்து மலைச்சு நிற்பதை விட்டுட்டு இதன் பெருமைகளை முதலில் பார்க்கலாம். வடஇந்தியாவிற்கு எப்படி ஒரு இமயமலையோ, அதுபோல,தென் இந்தியாவிற்கு ஒரு பர்வதமலை. அதனால தான் இதை எல்லோரும் தென்கயிலாயம் என அழைக்கின்றனர்.மகான் மௌனயோகி விடோபானந்தா குரு தவக்குகை அன்னதான மடம்.அவரை பற்றி நம் கடந்த பதிவில் பார்த்துவிட்டோம். இங்கு கடலாடியில் இருந்துவரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்தில் இருந்து வரும் பாதையும் ஒன்று சேர்கின்றன. அதன்பிறகு பாதைகள் செங்குத்து பாறைகளாக நெட்டாக செல்கின்றன. இந்த இடத்தை குமாரி நெட்டு என்று சொல்கின்றனர். அதன் காரணப்பெயர் தெரியவில்லை.அதை தாண்டி சென்றால்,மலையேறும் பாதை மிகவும் செங்குத்தானது..அதையும் தாண்டி மேலே சென்றால் இருப்பது கடப்பாரை நெட்டு.
இதை பார்ர்கும்போதே பயம் வந்துவிடும். நம்மால் முடியுமா?! என நினைக்க தோன்றும்.  90 டிகிரி சாய்வு பாறையில் இருபக்கமும் கடப்பாரை கம்பிக்களை துளையிட்டு, அதில் மாட்டி வைத்துள்ளனர்.அவற்றில் சில பக்தர்கள் அசைத்து, அசைத்து ஆட்டம் கண்டுள்ளன. சில இடத்தில கொஞ்சம் தூரமாகவே இருக்கின்றன, மிகவும் ஆபத்தான பயணம்.  இந்த கடப்பாரை படி செல்லும்போது மிகவும் கவனமாகவும் அதேசமயம் திரும்பி பார்க்காமலும் செல்லவேண்டும்.ஏன்னா கீழே பார்க்கும் போது நமக்கே ஒரு அச்சமும் கைகால்கள் உதறலும் வரும். அதனால்தான்,பெரும்பான்மையான பக்தர்கள் இரவில் மலையேறுகின்றனர்.இறைவன் அருளால் இதுவரை ஒரு அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை என்பது ஆனந்தம். அதே சமயம் ஒரு முதியவர் மட்டும் மலைகளில் இருந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. நாம் அந்த இறைவனை மனதில் தியானித்து சென்றால், நமக்கு பயமும் நீங்கி, மலை ஏறுவதற்கான சக்தியையும் அவனே கொடுப்பான்.
அதேப்போல், இந்த நெட்டுப்பாறையில், ஏறுவதற்கு வேறு ஒரு ஏணிப்படிப்பாதையும் உண்டு. அது பெரும்பாலும் இறங்குபவர்கள் பயன்படுத்துவது. கடப்பாரை தொடக்க வழி என்றால் ஏணிப்படி அடுத்து வருவது. இதில் செங்குத்தான பாறைகளின்மேல் பெரிய இரும்பு ஏணி படிகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.அதன் மூலமும் மலையின் மேல் செல்லலாம். இதில் திகிலூட்டும் விஷயம் என்னனா மேலே போக வழி இல்லாத இடங்களில் தண்டவாளப்படிகளையும் அமைத்து இருக்கின்றனர். இதிலும் கவனமாக செல்லவேண்டும்.
தண்டவாளப்படிகளில் செல்லும்போது நமக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்படுகிறது,இறைவன் மேல் பாரத்தை போட்டு பர்வத மலையானே! மலையேறுவதற்கு சக்தியை கொடுப்பா என வேண்டிக்கொண்டு படிகளை மெதுவாகவும் கவனமாகவும் கடந்தோம். அப்பொழுது கூட்டத்தில் வந்த ஒருவர் நீங்கள் பயப்படக்கூடாது என்று தான் இரவில் மலையேறலாம் என சொன்னேன் என்றார். அவர் சொன்னப்படி இரவில் செல்வதால் செங்குத்து பாறையும், சாய்வானப்படிகளும், அதாலபாதாளமும் நம் கண்களுக்கு தெரியாததால்,உடல் சோர்வு மட்டும் தான் வரும். ஆனா பகலில் கீழே பார்க்கும்போது நமக்கு திகிலாகத்தான் இருக்கிறது.    
இந்த தென்கயிலாயம்ன்னு சொல்லப்படுகிற, பர்வதமலை அவ்வளவு கஷ்ட்பட்டு ஏறி அந்த இறைவன் மல்லிகார்ஜுனரையும் , இறைவி பிரமராம்பிகையையும்,தரிசித்தால் நமது பாவங்கள் எல்லாம் தொலைந்துப்போகும் என்பதை விட, நமது முன்ஜென்ம மற்றும் இந்த பிறவி கர்மாக்கள் தொலைந்து போகும் என்பது நமபிக்கை. இந்த பர்வதமலை தத்துவமே, ஒரு இறைவனை காண்பது இல்லை. இரு பிறவிகடலை கடப்பது என்பது மிகவும் கடினமானது. அப்படி இளமை முறுக்கோடு அறியாமல் செய்யும் தவறுகள்,நாம் உணர்ந்து கொள்வது நம்முடைய வயதான காலத்தில்தான்.. அப்பொழுது மிகவும் கவனமாக வாழ்க்கையை நடத்தி செல்லவேண்டும் என்பதற்காகத்தான் முக்கால் பாகம் மேல் கவனமாக செல்லும் படியாக,அமைந்துள்ளது. அதில் தவறு செய்தால் வாழ்க்கையே அழிந்துவிடும் என்பதற்காகத்தான்.  முக்கால்பாகம் வழி உணர்த்துகிறது. அதில் ஒரு சிறு தவறு நடந்தால் என்னவாகும் என இந்த படத்தில் செல்லும் பகதர்கள் நிலையை பார்த்தல் தெரியும் .
ஆதிசங்கரர் காலத்திற்கு முன்பெல்லாம் இந்த மலை தனியாக தொடர்பு இல்லாமல் தான் இருந்தது. அதற்கப்புறம் மக்கள் வந்து வழிப்படவேண்டும் என்பதற்காக இறைவனாலேயே நம்மருகில் நகர்த்தப்பட்ட மலை என்று செவிவழியா சொல்லுவாங்க.இந்த மலைல என்ன விஷேசம்னா, பௌர்ணமிநாள், அமாவாசை நாள், பண்டிகை,மற்ற விஷேச தினங்கள் என்றில்லாமல் வருடத்தின் எல்லா நாளும் இங்கே விஷேசம் .அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக்காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். கேன்சர் போன்ற கொடிய ரோகங்களுக்கும் இம்மலையில் மூலிகைகள் இருக்கிறதென பழையக்காலத்து பாரம்பரிய வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஆன்மீகரீதியாக பார்த்தால் மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்.என்பதையும் உணர்த்தும் மலை இது .
ஏணிப்படியைத் தாண்டி சென்றால் வருவது ஒரு பாதி மண்டபம். இந்த கல் மண்டபத்தினை இதனைத் தீட்டுக்காரி மண்டபம் என்றும் சொல்லுவார்கள். கோவிலுக்குச் செல்ல பெண்களும் மலையேறி வருவதுண்டு. அப்போது அவர்களுக்கு மாதாந்திர தொந்தரவுகள் ஏற்பட்டால் இத்துடன் திரும்பிச் சென்று விடுவார்களாம். அதனால் இந்தப் பெயர் என சொல்லப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சொல்லப்படுகிறது.சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கு. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்ளும் உள்ளன.      
இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் சிங்கக்கிணறு என்னும் சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப்பாதை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகத்தைக் காணலாமாம். அதை மானிடர்களாகிய நாம் காண வழியில்லை.சித்தர்கள் சூட்சுமமாக அங்கே செல்வார்கள் என்றும் அவர்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாகவும்  சொல்லப்படுகிறது.இந்தச் சுனை நீரில் கை, கால், முகம் கழுவிக் கொண்டு, தாகத்திற்குத் தண்ணீர் குடித்தால் மலை ஏறிவந்த களைப்பு நீங்கி தெம்பு பிறக்கும் என்றும் இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது . ஆனா இப்ப இதுல தண்ணீர் இல்ல.ரொம்பகாலத்துக்கு முன்பு ஒரு இடி இடித்ததில், இங்குள்ள நீர் வற்றி பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று சொல்லப்படுகிறது. பாதாளச் சுனை என்றும் சிங்கக்கிணறு என்றும் சொல்லப்படும் இந்த இடத்தில் சற்று ஓய்வு எடுத்தபின் மெதுவாக நடந்தால் கணக்கச்சி விழுந்த பள்ளம்- அதாவது பாதாளப் பகுதி வரும். இந்தப் பகுதியை கணக்கச்சி ஓடை மலை என்றும் சொல்வர். இங்கே கவிழ்ந்து நிற்கும் பாறை ஒரு புறமும் பாதாளமாகக் காட்சி தரும் பயங்கரமான பள்ளம் மறுபுறமும் உள்ளன. இங்கு ஒருவர் மட்டுமே குனிந்து பாறையை ஒட்டிச் செல்ல முடியும்.
ஒவ்வொரு அடியும் இங்கே கவனமாக வைக்கவேண்டியது அவசியம். ஏன் இவ்வளவு கடினம் என்றால் ,இங்கே சித்தர்கள இருக்கிறார்கள். யோகிகள் இருக்கிறார்கள். முனிவர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட இறைவனே இங்குதான் இருக்கிறார் என்பதே உண்மை. காமம், பொய், சூது,வஞ்சனை, பொறாமை,கர்மா போன்றவை கொண்ட மனிதர்கள் இங்கே வருவது மிகவும் கஷ்டம். அவர்களுக்கு இங்கு கடும்சோதனையும் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதுப்போல இந்த மலையில் சுனைகள் நிறைய இருந்திருக்கின்றன.அவைகளெல்லாம் இப்பொழுது இல்லை ஒரு முனிவரின் சாபம் காரணமாகத்தான் அங்கே இயற்கை தண்ணிய தவிர வேறு தண்ணி இருக்காது. எனவும், அப்படியேக கொண்டு சென்றாலும் அது நடக்காது என்றும் ஒரு பெரியவர் சொல்லி கொண்டு வந்தார்.அவருக்கு அவருடைய தாத்தா சொன்னாராம். மேலும் பல உண்மைகளை அவர் சொன்னபோது நாங்களே ஆச்சர்யப்பட்டு போனோம்.அவர் சிறிய வயதில் வரும்போது பனை ஓலையால் வேயப்பட்ட கூரைதான் இருக்குமாம். ஆட்கள் அதிகம் வருவதில்லையாம். மருந்துகள் செய்பவர்களும், சிலதொழில் முறை மந்திரம் செய்பவர்களும் தான் சித்துக்கள் எடுக்க வருவார்களாம். ஆனால் இன்று பல லட்சம் பேர் வருவது மனதிற்கு சந்தோசமான விஷயம் என்று கூறினார்..
பர்வதமலைஇன்று நிறைய பக்தர்களை ஈர்த்து இருக்கிறது என்றால் கடலடியில் ஜீவசமாதியான மௌனகுரு சித்தரும் ஒரு காரணம்.அவர் கிடைக்கிற வருமானத்தில் மலை மேல் வருகிறவர்களுக்கு ,அன்னதானம் செய்தார்.அதேபோல் இந்த அன்னதான மடத்தில் இருக்கும் தவக்குகையையும் தரிசிக்க மறந்துவிடவேண்டாம் .மிகவும் சக்திவாய்ந்த இடம் இதை இங்கே இருந்து தியானம் செய்பவர்கள் அதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.மகாபெரியவர்தான் கிரிவலம் செல்லும் முறையையும் ஏற்படுத்தினாராம், அதுப்போல இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சுமார் 800 வகையான பாம்புகள் இந்த மலையில் இருக்கிறதாம் .ஆனால் இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் வந்தது இல்லையாம்.இப்படி பெரியவர் சொல்ல சொல்ல நாங்கள் இதுவரை கேட்டராத தகவலை ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டே மலையேறினோம். அவர் சொன்னதைக்கேட்டு மலையேறியதாலோ என்னமோ நாங்கள் கீழேயே பார்க்காமல் மலை ஏறி ஒரு சமவெளியினை அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டு நின்றோம்..
இந்த படத்தில் தெரியும் பாறையானது இருளில் பார்க்கும் போது, சிவன் மலையில் நின்ற கோலத்தில் சாய்ந்து நிறமாதிரி தெரியும்.ஆஸ்ரமத்தின் பகுதியில் ஜடாமுடியும், தலைப்பாகமும்,கழுத்தில் நாகமும், வயிற்று பகுதியும் தெரிவதுப்போல இருக்கிறது. இங்கே பகலில் எடுத்த போட்டோவும், திரும்ப மாலையில் இறங்கி வரும்போது எடுத்த போட்டோவும் உங்கள் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்.அதேப்போல் கடப்பாரைப்படி மலையேறும் இடத்தில ஒரு கடை வரும். அந்த இடத்தில இருந்து பார்த்தால் அம்மன் நிற்கிற கோலத்தில் இருப்பது போன்று தெரியும். இப்படி பல அதிசயங்கள் நிறைந்தது இந்த பர்வதமலை.
இந்த வழிதான் மிகவும் குறுகலான வழி,கணவாய் பகுதி போல குறுகலான வழியாக செல்லும் போது ,தங்கள் ஆடைகளின் மேல் ,கவனம் செலுத்துவது ,நல்லது ஏனெனில் செங்குத்து பாறையில் கீளிருந்து வரும் அதிவேகமான காற்று .ஆடைகளை  பறக்கவைக்க செய்யும் ,மலையேறுவதற்கு ஏற்றவாறு சுடிதார் போன்ற உடைகளில் வருவது நலம்.இந்த குறுகலான பாதையை கடந்தால் நாம் ,பர்வதமலையனின் கோவிலை காண்லாம் 
எல்லா பாதைகளையும் கடந்து பர்வதமலையின் கடைசி உச்சி பகுதிக்கு இப்பொழுது வந்துவிட்டோம் ,இங்கே நாங்கள் செல்லும் போது இருட்ட தொடக்கி விட்டது .நிறைய பக்தர்கள் எல்லாம் ,ஆங்காங்கே மலையேறிய களைப்பில் ,ஓய்வெடுத்து கொண்டு இருந்தனர் .சிலர் அங்கேயே உறங்கவும் , ஆரம்பித்தனர் .ஆனால் எல்ல இடமும் மிகவும் கவனமாக ,நிற்கவேண்டிய ,பார்க்கவேண்டிய பகுதிகள் ஒரு அடி பிசகினாலும் விபரீதங்கள் தான் ,ஆகவே ,பக்தர்கள் மிகவும் பொறுமையாக ,அவசரபடாமல் ,ஒருவரை ஒருவர் தள்ளு முள்ளு செய்யாமல் ,அமைதியாக செல்லவேண்டும் .நாங்களும் வந்துவிட்டோம் .இப்பொழுதான்,பசியெடுக்கஆரம்பித்தது .எங்கேயாவது உணவு கிடைக்குமா எனத்தேட ஆரம்பித்தோம் .
கோவிலுக்கு செல்வதற்கு முன் ,காணப்படுவது தவக்குகை அன்னதானமடம் ,பௌர்ணமி நாட்களில் ,பிரிஞ்ச் சாதம் , தக்காளி சாதம் ,லெமன் சாதம்,என வருகின்ற பக்தர்களுக்கு ,அன்னதானம் செய்கின்றனர் .மலையேறிவந்த களைப்பு  தீர ,எல்லோரும் வயிறார உண்பதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது .இந்த அன்னதான மடத்திற்கு ,மலைமேல் செல்லுகின்ற நாம் ஒவ்வருவரும் ,அனறைய சாப்பாட்டிற்கு ,௫ 50 என கொடுத்தாலே ,அவர்களால் வருகின்ற அனைவருக்கும் ,வயிறார உணவு கொடுக்கமுடியும் ,இல்லையெனில் அரிசியாகவோ , காய்கறி, மசால் சாமான்களாகவோ கூட கொடுக்கலாம் ,மலைமேல் கொண்டு கொடுக்கவேண்டும் என்று இல்லை ,அவர்களது ஆஸ்ரமம் கீழேயே இருக்கிறது அங்கேயும் கொடுக்கலாம். அவர்கள் அதை எடுத்து மலைமேல் கொண்டுவந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர். .
இங்கிருந்து சுற்றி பார்க்கும் போது 50  கி மீ சுற்றளவு வரை தெளிவாக பார்க்கமுடிகிறது .இங்கே ஒரு ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. .அதையும் தாண்டி தெரிவதுதான் கோவில் .அங்கே கதவுகளை இல்லை ,புதியதாக சிமெண்ட் பூசப்பட்ட தளங்கள் பக்தர்கள் இரவில் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கிறது . மூலிகை வாசத்துடன் சேர்ந்து காற்று அருமையாக வீசுகிறது .ரம்மியமான சூழ்நிலை .பார்க்கும் போதே காற்றுடன் ,இசைநாதங்களும் கேட்பது போல ஒரு உணர்வு .இயற்கையே நந்தனம் ஆடுவது போன்ற ஒரு உணர்வு நமக்கு வருகின்கிறது .
நாங்கள் சென்று தரிசனம் செய்து திரும்பும் போது இருட்டிவிட்டது .அங்கேயே தங்க விரும்பினோம் .பொதுவாக மலைமேலானாலும் சரி ,நடு மலைகளிலும் சரி .எந்த தண்ணீர் வசதியும் கிடையாது .அன்னதான மடத்திற்காக ,ஒரு பெரிய நீர்தொட்டி கட்டி இருக்கிறார்கள் .மலைமேல் பெய்யும் மழை தண்ணீரை சேமித்து வைத்து ,அதன் மூலம் சமையல் செய்கின்றனர் .ஆகவே பக்தர்கள் சென்றவுடன் ,ஐயனை தரிசித்து விட்டு ,உடனே கீழிறங்கி விடுவது நல்லது. கீழிருந்து மலைக்கு மேல் தண்ணீர் கொண்டு செல்ல .பைப் எல்லாம் போட்டு இருக்கிறார்கள் .ஆனால் போட்டு முடித்தவுடன் ,கீழ்மலையில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது .பாவம் மானிடர்கள் அவர்களுக்கு தெரியாது.மலையே இயற்கை தண்ணீரை மட்டும் தான் உபயோக படுத்த முடியும் அது ஒருமுனிவருடைய சாபத்தினால் அப்படி ஆகிவிட்டதாம்,அந்த சாபம் நீங்கும் வரை எந்த காரணத்தை கொண்டும் தண்ணீர் மேலே கொண்டு போகமுடியாது.
இவர்தான் மூலவர்,சுயம்புவாக தோன்றியவர் ,மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரியதாக விளங்குபவர்,இந்த பர்வதமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட ஒரு விஷயம் பர்வதமலையில்  தான் ,வடநாடுகளை போல் நாமே மூலவருக்கு அபிஷேகம் பண்ணலாம் என கூறுகின்றனர் .ஆனால் இங்கே அபிஷேகம் ,ஆராதனைங்கிற பெயரிலே அதன் புனிதத்தை கெடுத்து அசிங்க படுத்துபவர்கள்தான் அதிகம் அப்படி செய்யகூடாது .அதற்கும் ஒரு வழிமுறை உண்டு.இதை தெரிந்தவர்கள் சொல்லி புரியவைக்கலாம். வடக்கே.இமயமலை எவ்வுளவு புனிதம் வாய்ந்ததோ அந்த அளவு புனிதமானது இந்த பர்வதமலை ,அங்கே கிடைக்காத மூலிகைகள் இல்லை .குணப்படுத்தவே முடியாது என கூறப்படுகின்ற கேன்சர் போன்ற நோய்களுக்கும் இங்கே மூலிகைகள் இருப்பதோடு , சித்தம் பேதலித்து இருப்பவர்களை கூட பித்தத்தை தெளியவைத்து குணமாக்குபவர்தான் இந்த பர்வத மலைமேல் இருக்கும்   மல்லிகார்ஜுனர்.
இதுதான் அம்பாள் சன்னதி .பர்வதவர்த்தினியாக இருந்த அந்த தாயாரை இப்பொழுது காலப்போக்கில் பிரமராம்பிகை என அழைக்கின்றனர் உண்மையில் இந்த தாயாருடைய பெயர் பர்வதவர்தினி என்பதாகும் .குழந்தை பேறு இல்லாதவர்கள் ,இந்த தாயாரை தொடர்ந்து வழிபட்டால் குழந்தைபேறு அடைவது திண்ணம் ,இது சிலரின் அனுபவ பூர்வ உண்மை.நாம் இந்த அம்மனை பார்த்துக்கொண்டே பின்னோக்கி செல்ல, செல்ல இந்த அம்மன் பெரியதாக தோன்றுவார் .அது இங்கே காணக்கிடைக்காத ஒரு அற்புதம் . .மேலும் பெண்கள் சம்பத்தப்பட்ட எல்லா நோய்களும் இவரை வழிபடும்போது தீர்ந்துவிடும் என்பதும் உண்மை.இங்கே உண்மையான பக்தியோடு வரும் சிலர் கூறுவது ,இந்த மலையில் இசை நர்த்தன ஓலி எல்லாம் கேட்கும் என ,ஆனால் அது உண்மை இங்குவரும் பலருக்கு இந்த ஓலி கேட்பதில்லை .இந்த மலையில் ,ஐயனும் ,அம்மையும் மிக ஆனந்தமாக நடனமாடுவார்கள் , அந்த ஒலி சில சமயம் காற்றோடு கலந்து ஒலிக்குமாம் .,அதை உணர்ந்தவர்களும் உண்டு.
மேலும் இந்த திருக்கோவிலை எந்த ராஜாவும் கட்டவில்லை,ஐயனும் ,அம்பாளும் சுயமாக வந்து அருள் புரிந்த மலை ,நான் மன்னன் நான் பெரிய அரசியல்வாதி ,நான் பெரியவன் இப்படி ஆணவத்தோடு வருகிற யாருக்கும் இங்கே இடமில்லை அவர்களால் மலைமேலேயே ஏறமுடியாது .இறை சிந்தனையோடு பயபக்தியோடு வருபவர்களுக்கு மட்டுமே இங்கே இடமுண்டு .மீதி உள்ளவர்கள் அனைவருக்கும் சோதனைதான் அவர்களை அந்த 60 % பாகத்திற்கு மேலே ஏற்றுவதில்லை அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார் அதாவது கடப்பாரை மலைக்கு மேலேயே அவர் ஏற்றுவதில்லை.அனைவரும் இங்கே சமம் .அதுதான் இந்த கோவிலின் சிறப்பு.
பொழுதும் விடிய தொடங்கிவிட்டது ,நாமும் மலையில் இருந்து கீழே இறங்க தொடங்கிட்டோம் .நாம இன்னைக்கு இவ்வுளவு சிறப்பா இங்கே வந்து கும்பிடுறோம்னா ,இயேசு பிறப்பதற்கு 2500 வருஷங்களுக்கு முன்பு பிறந்த ஆதிசங்கரர் தான் காரணம். அவர்தான் முதன் முதலில் மக்கள் வந்து வழிபடும் முறையை ஏற்படுத்தி வைத்தார்.அதற்கு முன்பே பூதகணங்கள் மற்றும் தேவகணங்கள் மட்டுமே வழிபட்டு வந்தன .ஆதிசங்கரர் இந்த வழியாக மாட்டுவண்டியில் வந்து கொண்டு இருக்கும் போது ,தானாகவே வண்டி நின்றதாம் ,அப்பொழுது அம்பாளே வந்து அவரை நிறுத்தி மலைக்கு மேலே அழைத்து சென்றாராம் ,அப்பொழுது மக்களின் உதவியுடன் கற்களை வைத்து படிக்கட்டுகள் போல் அமைத்து மேலே சென்று வழிபட்டாராம் ,அன்று முதல் மக்களும் அங்கே சென்று வழிபட தொடங்கினாராம் ,இன்று கம்பிகள் கட்டப்பட்டும் ,பாதைகளை அபாயகரமாக இருக்கின்றனவே ,அந்தகாலகட்டங்களில் எப்படி இருந்து இருக்கும் .நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
மேலும் கிரிவலம் மற்றும் வழிபாடுகளை  சிறப்பாக ஆரம்பித்து வைத்த ,காஞ்சி மகாபெரியவர் மலைமீது ஏறும் போது பிடிக்கொருலிங்கம் இருப்பதை கண்டார் ,அவருடைய கண்களுக்கு அது தெரியும்,நம்மால் முடியுமா ,இனிமேல் ஒரு லிங்கத்தை கூட தான் மிதிக்க விரும்பவில்லை என கூறி கீழிறங்கி விட்டார்.இந்த மலையில் நிறைய சுனைகளை இருக்கின்றன .அவைகள் எல்லாம் சரியாக பராமரிப்பு இல்லாமல் எல்லோருக்கும் தெரியாமல் போய்விட்டது .மேலும் கூடுதல் தகவலாக ,பூலோகத்தின் பழைய வரைபடத்தில் இந்த பர்வதமலையானது பூமியின் இதயம் போல காட்சியளிக்கும் .என செவிவழி செய்திகளில் கூறுவர்..
இங்கே பயபக்தியுடன் அடிக்கொருலிங்கம் லிங்கம் அண்ணாமலை பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என வருகிற ஒவ்வொருவரும் ,இறைவனை  நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பல அடிகளை எடுத்து வைப்பார்.அப்படி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது ஒவ்வொரு கர்ம வினைகளாக விலக தொடங்கும் .இங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் சிவனே பாதுகாப்பு .அவரே ஒவ்வொருவரையும் பத்திரமாக அழைத்து செல்கிறார் என்பது செங்குத்தான ,ஆபத்தான இந்த மலைமீது ஏறுபவர்களுக்கு உணர்வு பூர்வமாக தெரியும்.ஒரு வழியாக எங்கள் தரிசனத்தை இனிதே முடித்து கொண்டு, பர்வதவர்தினியையும் , மல்லிகார்ஜுனரையும் தரிசித்த புண்ணியத்தோடு மலைமேல் இருந்து கீழே இறங்க தொடங்கினோம். மீண்டும் அடுத்தவாரம்  அன்னாபிஷேகம் அன்று மலைமேல் நடந்த அன்னாபிஷேகம் பற்றி விரிவாக பார்க்கலாம்..நன்றி.....




Friday, October 07, 2016

பர்வதமலை ஒரு பரவசபயணம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

பார்போற்றும் அதிசயங்களில் ஒன்று பர்வத மலை.இது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகா தேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைபிரதேசமாகும்.போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை,சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று, பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். பர்வதம்ன்னு சொன்னாலும் மலைன்னு தான் அர்த்தம்,பர்வதமலைன்னா மலைகளுக்கெல்லாம் மலைன்னு சொல்லுவாங்க.இந்தமலைக்கு நவிரமலைதென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்று பலபெயர்களும் உண்டு.அப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பர்வதமலையில் இன்று நமது குழுவினருடன் புண்ணியம் தேடி ஒரு பயணம் செலல்லாம் வாங்க.
நாங்கள் பர்வதமலை செல்லும் போது,அதிகாலை 4 மணி,குளித்துவிட்டு மலை ஏறினால் புத்துணர்ச்சியாகவும்,அதேசமயம் வெயில் இல்லாதநேரம் மலை ஏறினால்,களைப்பு தெரியாமலும் குளுமையாகவும் இருக்கும் என்பதால், அதிகாலை குளித்துவிட்டு ,மலை ஏற தொடங்கினோம்.அதற்கு  முன், இந்த மலைக்கு ஏன் பர்வதமலை என பெயர் வந்தது என பார்த்தோம்னா அன்னை பார்வதி தேவி இங்கு வந்து தவம் செய்ததால், இதற்கு பர்வத மலைஎன்று பெயர் வந்ததாகவும், இமயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது முதன் முதலாக சிவன் காலடி எடுத்து வைத்த இடம் இந்த பர்வதமலை என்றும் சொல்லபடுகிறது.திருவண்ணாமலையில் தீ ப்பிழம்பாக தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு ஐதீகம் உண்டு.அதனை  உண்மையாக்கும் விதத்தில் மலையின் மேலே அண்ணாமலையார் பாதமும் இருக்கிறது.ஆஞ்சநேயர் இமயதிலிருந்து சஞ்சீவி மலையை தூக்கிவந்தபோது விழுந்த ஒரு துளிதான் என்றும், மேலும் இது ஏழு சடை பிரிவுகளை கொண்டது என்றும் சொல்லபடுகிறது.
அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை,பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என சொல்லபடுவதுண்டு,ஆகாயத்தில் ஒரு ஆலயம் என்றும் இந்த பர்வதமலை அழைக்கப்படும்.இந்த இடத்துக்கு பேரு தென்மகாதேவ மங்கலம் ஆகும்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது, ஒரு நந்தியின் வடிவில் தெரிகின்றது..படியேற தொடங்கும் முன்,இறைவனை மனதில் தியானித்து படிகள் ஏறுவதற்கு உடல் சக்தியும்,,வழிகளில் எந்தவித தங்குதடைகள் இல்லாமலும் இருக்க தியானித்து,பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் இருக்கும் மலையடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன.அங்கே ஒரு பலிபீடமும் அதன்முன்னே இடப்பக்கம் விநாயகரும்,வலப்பக்கம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத காட்சி தருகிறார்.அவரையும் வணங்கிவிட்டு மலையேற தொடங்கினோம்.  
இந்த திருக்கோவில் சரியாக எப்போது கட்டப்பட்டது என்ற குறிப்பு எதுவும் இல்லை.கிட்டத்தட்ட 4,500 அடி உயரம் உள்ள கடப்பாறைமலை என்ற செங்குத்து பாறை மேல்,உள்ள ஒரு கடினமான நிலப்பரப்பின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது.ஆனால், வரலாற்று பதிவு கி.பி 300 -ம் ஆண்டு 'நன்னன் என்று ஒரு மன்னர் கூட அடிக்கடி இந்த மலை கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்று மலைபடுவடாகம் என்னும் நூலில் ஒரு குறிப்பு உள்ளது.சுமார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்கு இந்த கோவில் கட்டப்பட்டது என்றும்,கூறப்படுகிறது.ஆனால், சில செவிவழி கதைகளில்,சொல்லபடுவது என்னனா ,ஒரு முறை சிவனும் பார்வதியும், கைலாயத்தில் உரையாடிக்கொண்டு இருந்தபோது, அன்னை ,சிவனிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்,சுவாமி இந்த உலகத்திலேயே அறம்,பொருள்,இன்பம்,வீடு இந்த நான்கையும் ஒருசேர அடைய மனிதர்கள் எந்த சிவஸ்தலத்தை வழிபடவேண்டும். என்று கேட்டார். அதற்க்கு பதில் கூறும் வண்ணம் சிவபெருமானால் அடையாளம் காட்டப்பட்ட மலைதான் இந்த பர்வதமலை  என்றும் சொல்லப்படுவதுண்டு.
அண்ணாந்து மலையை பார்க்கும் போது,நமக்கே பிரமிப்பாக இருந்தது ,நம்மால் முடியுமா என்ற எண்ணம் வரும்போது, ஏற்கனவே இந்த மலைக்கு அடிக்கடி செல்பவர்கள் .நமக்கு  உற்சாக மூட்டினர்.உங்களால் முடியும் ,என்று நம்பிக்கை சொல்லி மனதில் ,தைரியத்தை வரவழைத்தனர்.ஆகவே ஏற்கனவே மலை ஏறிபழக்கப்பட்டவர்களுடன் செல்வது நல்லது. இந்தமலையில் ஏறுவது ஏன் இவ்வுளவு கஷ்டம் என்றால்,இதில் உள்ள தத்துவம் என்னனா 4 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் வீசும் மூலிகைக் காற்று, தீராத நோயும் தீர்க்கும்.மேலும் இதற்க்கு எடுத்துக்காட்டாக ,குண்டலினி சக்தி ,மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்,என்பதை தான் இந்த மலை சூசகமாக உணர்த்துகிறது.  .
நாம மலையில் ஏறும் போது மிகுந்த களைப்பு வரும்,தண்ணீர் தாகம் எடுக்கும்,அபொழுது சில அடிதூரங்களுக்கு இடைஇடையே சில கடைகளும் இருகின்றன,அங்கே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் எனவும்,லைம் கலந்த சோடவுக்கு 50 ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.ஆனால் காலம்காலமாக வரும் சில பக்தர்கள் மலையின் இடையே இருக்கும் சில சுனைகளில் இருந்து தண்ணீர் எடுத்து கொள்கின்றனர்.இங்கே மலைகளில் நூற்றுக்கணக்கான குகைகள் காணபடுகின்றன எனவும்.அதில் இபோழுதும் சித்தர்கள் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் இந்த பர்வதமலையில் ஜமதக்னிமுனிவர்,விஸ்வமித்திரமகரிஷி,போகர் ,அகஸ்தியர்,போன்ற பலசித்தர்கள் இங்கே தவமிருந்ததாகவும் சொல்லபடுகிறது.மேலும், பலருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. .
சுமார் 1300 படிகளை கடந்து வந்தபிறகு இந்த இடத்தில் தான் படிக்கட்டுகள் முடிவடைந்து, கரடு முரடான மலைப்பாதைகள் ஆரம்பிக்கின்றன.வழியில் சிறிய சிறிய தற்காலிக கடைகளில் இளனீர்,பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர்பாட்டில், குழிபணியாரம் எல்லாம் கிடைக்கும்.அங்கு சிலநேரம் ஓய்வெடுக்க வசதியாக கூடாரங்கள் அமைத்துள்ளனர்..அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் மலையேற சற்று கஷ்டமாக இருக்கும்.இந்த மலையில் மூலிகைகள் நிறைய இருப்பதால் அவைகளின் மேல் பட்டு வீசும் காற்றினை சுவாசிக்கும் போது நோய்கள் குணமாகும் என்றும் சொல்லபடுகிறது.மலைப்பாதையில் குரங்குகளை தவிர வேறு காட்டு விலங்குகள் அல்லது பூச்சிகளின்  தொல்லை எதுவும் இல்லை வயதானவர்கள் கூட மன உறுதி இருந்தால் சுபலமாக மலையேறி விடலாம்.
இந்த இடத்தில ஒரு சிறிய மண்டபம் இருக்கிறது,அதில் சிவலிங்கமும் நந்தியும் இருக்கிறது.அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது, ஒரு அதிர்வு நிலையை நம்மால் உணர முடிகிறது.மேலும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் பெயரை சொல்லி இங்கே,ஆன்ம விமோசனத்திற்கு பிரார்த்தனை செய்தால் அது நிறைவேறும் என்றும் சொல்லபடுகிறது..நாங்களும் சிறிதுநேரம் அங்கே பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து மலையேற தொடங்கினோம். மேலும் இந்த இடம் மலையின் பாதிஅளவு இருக்கும் என தெரிகிறது. சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் நடக்க தொடங்கினோம்.
தொடர்ந்து 48 முறை பௌர்ணமி,அமாவாசைகளில் எவர் ஒருவர் தொடர்ந்து இங்கு வந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு ஞானம் சித்திக்கும் என்பதும் ஐதீகம்.மேலும், இந்த பர்வதமலையின் ஒவ்வொரு பகுதியும்,அதாவது இந்த ஏழு சடை பிரிவுகளிலும்,பிரம்மா ,விஷ்ணு ,முப்பத்து முக்கோடிதேவர்களும்,  சித்தர்களும்,  மாகான்களும், முனிவர்களும்,ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது.மேலும் தேவேந்திரன் இந்த கலிகாலத்திலும் இடி மின்னல் வடிவில் வந்து ,மல்லிகர்ஜுனருக்கும் ,பிரம்மராம்பிகைக்கும் பூஜை செய்வதாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. மேலும், திருவண்ணமாலையை சுற்றி உள்ள 30 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கு எந்த குருவும் தேவைபடாது.அவர்களுக்கு நானே குருவாக இருந்து வழிநடத்தி செல்வேன் என ரமண மகரிஷி கூறியுள்ளார்.ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் இங்கு வந்து யோகம் செய்தால் ஞானம் பெறுவது உறுதி.
நாம் பார்க்கும் இந்த இடம் குழந்தை சித்தர் சமாதி என சொல்லபடுகிறது. ஆனால் அதுபற்றிய குறிப்போ தகவலோ சரியாக இல்லை. சிலர் அதில் ஒன்றுமில்லை இடைக்காலங்களில் வைக்கப்பட்டது எனவும் சொல்கின்றனர்.ஆனால், மதவேறுபாடுகளை களைந்து முஸ்லீம் நண்பர்கள் கூட இங்கே வரும் பக்தர்களுக்காக கடைவைத்து உள்ளனர்.சித்ரா பௌர்ணமி ,ஆடி 18, ஆடி பூரம் ,புரட்டாசி ,ஐப்பசி,கார்த்திகை தீபம்,மார்கழி,மகா சிவராத்திரி,பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் உண்டு.குழந்தை பேறு இல்லாதவர்கள் மலையை கிரிவலம் வர குழந்தைபாக்கியம் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.அதேபோல இரவினிலில் திசைமாறி போனாலோ  இல்லை, கடைகள் அருகில் இருப்பதையோ உணர்த்தும் வைகயில் பைரவ மூர்த்தியார் ஓசை எழுப்பி , நம்மை வழிகாட்டுவதை நாம் ஒவ்வொருவரும் அனுபவமாக உணரலாம்..
அதுபோல புதியதாக மலை என்ற தொடங்குபவர்கள் முதலில், மலைக்கு கீழே இருக்கும் தலைக்கோவிலில் இருக்கும் பிரம்மாண்டமான ,சூலத்தை வழிபட்டு,அங்கிருந்து நேரே வந்தோம்னா ,அங்கிருக்கும் பச்சைஅம்மனை தரிசித்து ,பின்னர் வெளியே இருக்கும் ,சப்த முனிவர்கள் அதாவது ஏழு முனீஸ்வரர்களுடைய உருவங்கள் பிரம்மாண்டமாக ,இருக்கின்றன ,அவர்களிடமும் மலையேற சக்தியும் அருளும் வேண்டும் என பிரார்த்தித்து ,அதற்க்கு எதிரிலேயே அமைந்து இருக்கும் புற்றுக்கோவிலையும் ,தரிசித்து ,நேர் பாதையில் வரும் போது, ஆஞ்சநேயரையும் தரிசித்து ,அங்கிருந்து வீரபத்திரர் ,வனதுர்க்கை ,ரேணுகா பரமேஸ்வரி ,இவரைகளையெல்லாம் தரிசித்து ,பர்வதமலை ஏற தொடங்கினா சிறப்புன்னு சொல்லப்படுது.
ஒருவழியாக முக்கால்பாகம் மலை எறிவந்துவிட்டோம்.நமது குழுவினர் எல்லாம் சோர்ந்து போய்ட்டாங்க,மலையின் எந்த உச்சிக்கு போனாலும், கடைகள் இருக்கின்றது.மலையேறுபவர்களுக்கு அது வசதியாக உள்ளது ,அதே சமயம் விலைகள் கொஞ்சம் அதிகம் தான்,ஏன்னா எல்ல பொருட்களையும் அவ்வுளவு உயரத்திற்கு தூக்கிகொண்டு வருவது மிகவும் சிரமான விஷயம்.பக்தர்களில் சிலர் பாடிக்கொண்டு வருகின்றனர்,சிலர் கால்வலியில்,ஐயோ ,அம்மா என சொல்லும்போது அப்பனே,அம்மையே என கூறிக்கொண்டு ,மலையேறுவாதாக தான் எனக்கு கேட்கிறது.மற்ற மலைகள் போல் அல்லாமல், பர்வத மலை செங்குத்தான (மலை) பாறை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த மலை சுற்றி எட்டு திசைகளில் இருந்து எட்டு வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறது.மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது 50 கி.மீ. வரை கூட கீழே இயற்கைஅழகு தெளிவாக தெரிகிறது.
மலையேறிவந்த ,பாதைகளும் தெளிவாக தெரிகின்றன.அமாவாசை இருட்டில் கூட பாதைகளை ,மட்டும் தெளிவாக ஒளிருமாம்,இந்த பர்வதமலையில்,சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வார்களாம்,அந்த சமயத்தில். அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி, சாம்பிராணி போன்ற பொருட்களின் வாசனை மூலம்தான் அவர்கள் கடப்பதை அறியமுடியுமாம்.சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர், போன்ற வடிவத்தில் கூட உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறுவதற்கு உதவி செய்வார்களாம்.
இந்த இடத்தில கொஞ்சம் இளைப்பாறலாம்,ஏன்னா இனி நாம ஏறபோறது கொஞ்சம் செங்குத்தான பாறை.அதை ஏறுவதற்கு ,வசதியாக கம்பிகளை நீளவாக்கில் வேலிபோல் வச்சு இருக்கிறாங்க அதை பிடிச்சு,அழகா ஏறலாம். இதுல முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது ,கடலாடிங்கிற இடத்தில இருந்தும் மலைக்கு மேலே ஏறலாம்,அப்படி ஏறும்போது,கடலாடி ஆஸ்ரமத்தைத்தையும் தரிசிக்கலாம்,தென்மாதிமங்கலத்தில் இருந்தும் மலைமேல் ஏறலாம்,இப்படி இரண்டு வழிகள இருக்கு,எங்களுடன் வந்த வழிகாட்டி நண்பர் ,ஒருவர் சொன்ன தகவல் இது, அவர் முதன் முதலில் மலையேறும் போது ,கடப்பாரை மலையின் அருகே இராத்திரி 8 மணி அளவில் தனியாக நின்று கொண்டு இருந்தாராம்,கீழே பார்த்தா பள்ளம் ,மேலே பார்த்தா மலை,ஆனா போகிற வழி தெரியல.ஏன்னா செய்வது வழி மாறி வந்திட்டமோன்னு,தயங்கி நிற்கும் போது,அங்கெ ,வயதான ஒருவர் வந்து என்ன,மலைக்கு போகணுமான்னு கேட்டுட்டு சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு ,கடப்பாரை மலை ஏற வழிகாட்டினாராம்.மலைக்கு மேலே செல்ல செல்ல ,இவருக்கு ஓய்வு தேவைப்பட்டுதாம்,சரிங்க நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துகிறேன்ன்னு சொன்னாராம்.அப்ப அந்த பெரியவர் சரிப்பா,நான் கிளம்புறேன்னு கிள்ளம்பிட்டாராம்.அதன்பிறகு ,அவரை அந்த மலை பகுதியிலேயே பார்க்கவே இல்லையாம்.என்று கூறி ஆனந்த பட்டார்.இப்படி நிறைய அதிசயங்கள் கொண்டது இந்த பர்வதமலை.
இந்த கம்பியை பிடித்துத்தான் இனி இருக்கும் செங்குத்துது பாறைகளில்,ஏற வேண்டும்,இருபதுவருடங்களுக்கு முன்பு ,இங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் ,அப்ப வர 50 பைசா 1 ரூபாய் காணிக்கைகளை கொண்டு மலைக்கு மேலே வரவங்களுக்கு கஞ்சிகாய்ச்சி கொடுப்பாராம்.ஒருசமயம் .நல்லமழை அவருக்கோ பாசியாம்,மழையில் சுருண்டு படுத்து இருந்தாராம் ,பசிமயக்கத்தில் எலி காலில் கடித்தது கூட தெரியாமல்,இரத்தம் வடிந்த நிலையில் படுத்து இருந்தபோது, கீழே கடைவைத்திருக்கும் பெண்மணி ,ஒருவர்,மேலே போன ஸ்வாமி 2 நாள் ஆகியும் கீழே வரவில்லையே என பார்க்கப்போகும் போது,அவர் இரத்தம் வடிந்த காலோடு இருப்பதை பார்த்து இரத்தத்தை துடைத்து துணியால் கட்டுப்போட்டு,பின் சாப்பாடு கொடுத்தாராம்.அன்றிலிருந்து, இனியாரும் இங்கே வந்து பசியோடு செல்லக்கூடாது என முடிவெடுத்து,மலையேறி வரவங்க வெறும் வயித்தோட போக கூடாதுன்னு,அன்னதான மடம் ஏற்பாடு பண்ணினாராம்.ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து ஒரு மனிதர் சாமிகும்பிட மலையேறினாராம், மலைமேல் ஏறினபோது, பசி தாங்காமல் சிவன் சன்னதியில் மனமுருகி நின்றாராம்,எனக்கு சொந்தமா அரிசிஆலை இருக்கு ஆனா ஒருபிடி சோறு இல்லையே ஆண்டவான்னு கண்ணீர்ரோட நின்னுகிட்டு இருக்கும் போது ,மேலே அன்னதான கூடம் இருக்கு அங்கெ போங்க சாப்பாடு போடுவாங்கன்னு சொல்லி இருக்கிறார் .கூட்டத்தில் ஒருவர்.மேலே இருப்பவன் யாரு என் அப்பன் சிவனாயிற்றே ,ஆண்டியும் ஒண்ணு,அரசனும்  ஒண்ணு ,இருப்பவனுக்கும் ,ஒரே மாதிரி ,இல்லாதவனுக்கு ஒரே மாதிரித்தான் நடத்துவான்.தான் என்கிற அகந்தை அழிப்பது தானே அவன் வேலை,அங்கு சென்று வயிறார சாப்பிட்டு,பின் இறைவனுக்கு நன்றி சொல்லி,முன்பு ஸ்வாமிகள் இருக்கும் போது ,அன்னதானத்திற்கு அரிசி மூடைகள் அனுப்பிக்கொண்டு இருந்தாராம்.
ஒருவழியாக எல்லாம் முடித்துக்கொண்டு ,நாம மலை உச்சிக்கு வந்துவிட்டோம்,இங்கேதான் அபாயகரமான ,கம்பிப்பாறை ,தண்டவாள பாறை படிகள் ,ஆகாச படிகள் என இருக்கின்றன .மிகவும் கனமாக சொல்லவேண்டியது அவசியம் சூரியனோ மேற்கில் மெல்ல சாய்கிறான் .இந்த இடத்தில முக்கியமா கவனிக்க வேண்டியது என்னனா ,ஏற்கனவே பலமுறை மலையேறினவங்களோட வழிகாட்டுதல் ,இல்லை உதவி கட்டாயம் வேணும் ,அது மிக மிக அவசியம் ,ஏன்னா , பாறைகள் எல்லாம் செங்குத்து பாறை கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சாது.ஆனா, கடவுள் அருளாலே இதுவரை ஒரே ஒருத்தத்தான் அப்படி வழுக்கி விழுந்தாராம் ,மற்றவங்க யாருக்கும் ஒரு பாதிப்பு இல்லையாம்.நாங்கள் போகும் போது ஒரு 10 வயது குழந்தை ஓடும்போது கால்தவறி விழுந்தது ,சிவன் அருளால் அது பாறை இடுக்கில் மாட்டி கொண்டதால் உயிருக்கு ஒன்றும் இல்லை,ஆகவே குழந்தைகளை மற்றும் சின்ன பிள்ளைகளை கூட்டி செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.
சின்ன கரடு முரடான ,கடைசி பகுதி ,மிகவும் கடினமானது.அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச்சுற்றி மேகங்கள் ஓடுவது அழகாக காட்சியாக இருக்கிறது.மேலிருந்து பார்க்கும் போது ஊரே முழுவதுமாக நாம் வானத்தில் இருந்து பார்ப்பது போல அழகாக தெரிகிறது.இந்த இடங்களில் எல்லாம் கட்டாயம் வழிகாட்டிகள் உதவி அவசியம் தேவை,புதியதாக மலை ஏறுபவர்கள் ,கடலாடி,அன்னதான மடத்திலுள்ள சுப்பிரமணி(9003161140) என்பவரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.அவர் மலையேறும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கிறார்.
அந்திசாய தொடங்கிவிட்டது ,இனியும் மலையேறுவது கஷ்டம்,ஆனால் ,வழிகாட்டி நண்பர் கொடுத்த தைரியத்தில் மீண்டும் மலை ஏற முடிவு செய்தோம் .இங்கே மலையின் மேல் ஒரு சிறப்பு உண்டு.கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனமும் ,உதயமும் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் இங்கே மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பொறுத்திருந்து அதைப்பார்த்து விட்டு செல்லலாம்.இரவு கடப்பாரை மலையில் ஏறினால்,கீழே பள்ளத்தை பார்க்கும் இருட்டில் தெரியாது.வெளிச்சத்தில் பார்க்கும் போது,பயமாக இருக்கும் என்பதால்,எல்லோரும் மலையேற அவசர படுத்தினார்கள்.ஆனால் நான் தான் பிரபல பதிவராயிற்றே,நான் ஒருத்தி பார்த்தேன்னா லட்சம் பேர் பார்த்ததுக்கு சமம்ன்னு சொல்லிட்டு அங்கேயே தங்க முடிவெடுத்தேன். உண்மையில் காலைலயில் அந்த இடங்களை பார்க்கும் போது எவ்வுளவு அழகாக இருந்தது தெரியுமா.இரவில் மலையேறி இருந்தால் ,இந்த காட்சிகளையெல்லாம் ,என்னுடைய ,சகோதர ,சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும் .கடப்பாரை மலையிலிருந்து, தொடங்கிய(தொங்கிய) திரில் பயணம், இதுவரை யாரும் ,இந்த மலையை பற்றி சொல்லாத விஷயங்களுடன் ,அடுத்தவாரம், நமது புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் சந்திக்கலாம் .நன்றி.