Showing posts with label மௌனச்சாட்சிகள்.. Show all posts
Showing posts with label மௌனச்சாட்சிகள்.. Show all posts

Wednesday, November 08, 2017

சிட்டுக்குருவி லேகியம் தெரியும்.. கனடாவின் ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் பத்தி தெரியுமா?! - மௌனச்சாட்சிகள்

நாட்டுக்கு நாடு, அங்கு இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆளுக்காள் உணவு பழக்கம் மாறுபடுது. உணவு பழக்கத்துக்கு இன்னொரு காரணம் அங்கு விளையும்  காய்கறிகளும், தானியமும்கூட.   ஒருவருக்கு பிடித்தமான உணவு, மற்றொருவருக்கு வாந்தி எடுக்கும் உணவாக அமைகிறது .உதாரணமாக இங்கே  மாலையில் நாம் சாப்பிடும் எண்ணெயில் போட்டு எடுக்கும் பஜ்ஜி, போண்டா, வடை  மாதிரி தாய்லாந்து நாட்டில் வறுத்த வெட்டுக்கிளிகள், விட்டில் பூச்சிகள்  பட்டு புழுக்கள், நீர் வண்டுகள்,  மூங்கில் புழுக்கள், சிவப்பு எறும்புகள், போன்றவற்றை நொறுக்கு தீனிகளா சாப்புடுறாங்க.அவர்களிடம் நம்முடைய பஜ்ஜி, சொஜ்ஜியை கொண்டு போனா ஓட்டமாய் ஓடிடுவாங்க. நம்மை அந்த பொறித்த எட்டுக்கால் பூச்சியை சாப்பிட சொன்னால் நாலுகால் பாய்ச்சலில் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்திருவோம்.  உலகில் இருக்கும் மனிதர்களின் சில அருவருக்கத்தக்க உணவு வகைகளை இங்கு பார்க்க போகிறோம். மதியத்திற்கு 2 குண்டு புல்பும் .தொட்டுக்க சீரியல் பல்பும் சாப்பிடுவேன்ன்னு சொல்லுற சினிமா காமெடி மாதிரியான வித்தியாசமான உணவுகளை இன்றைய மௌன சாட்சிகளில் நாம் பார்க்கப்போகிறோம் ....

ஜப்பானிய உணவுவகையான ஃபுகு (Fugu).. இதை சிலர் வினோதமாக உங்களை கொல்லும் உணவுகளை உண்ண வாருங்கள்ன்னு அர்த்தம் சொல்றாங்க. அதில் ஒருவகைதான் இந்த விஷமுள்ள  ஃபுகுமீன். வேட்டையாடும் மற்ற மீன்களில் இருந்து பாதுகாக்கவே இந்த மீனுக்கு இறைவன் டெட்ரோடோகொக்ஸின் என்னும் விஷத்தை தோல், எலும்புக்கூடு, கருப்பைகள், குடல் மற்றும்   கல்லீரலில் அதிக அளவு வைத்துள்ளான். மிகக்கொடிய விஷம் கொண்டது இந்த  ஃபுகு மீன் தற்போதைய புள்ளிவிவரப்படி ஜப்பானில் மட்டும் 3800  ஃபுகு மீன் ரெஸ்ட்ராரெண்ட்கள் இருக்கிறதாம். ஆனா, ஐரோப்பிய நாடுகளில் இந்த மீன் தடை செய்யப்பட்டுள்ளது. .
இந்த மீனில் 30 பேரை ஒரே நேரத்தில் கொல்லக்கூடிய அளவு விஷம் இருக்கு. இந்த மீனை நாம் சாப்பிடனும்ன்னா, முதலில் அதை செய்யும் குக்கின் அனுபவம் எவ்வுளவுன்னு தெரிஞ்சுக்கனும். அப்பதான் ஒரு  சின்ன தப்பு நடந்தாலும் இந்தமீனை .சாப்பிடுறவங்களுக்கு ஊஊஊஊஊ.. சங்குதான். இந்த மீனும், எல்லா மீன்களைப்போல விதம் விதமா சமைக்கப்படுது.  சயனைடு விஷத்தைவிட கொடிய விஷத்தை தன்னுள் கொண்டிருந்தாலும் இதன் சுவையானட்து அபாரம்ன்னு இதை சாப்பிட்டவங்க சொல்றாங்க.  2000ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த மீனை சாப்பிட்டு23 பேர் இறந்திருக்காங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. இந்த உணவை தயார் செய்யும் குக் குறைந்தது 3 வருடம் இதை பத்தி படிக்கனுமாம். அதன்பிறகு வைக்கும் டெஸ்ட்ல 3 க்கு 2 ல் பாஸ் பண்ணனுமாம். இதேபோல் ஒரு பிரபல குக் சமைத்தும்,  இந்த உணவில் விஷத்தின் அளவு அதிகமா இருந்ததால  அவருடைய உரிமம் பறிக்கப்பட்டதாம்.  இந்த மீனை சாப்பிடனும்ன்னு ஆசைப்படுறவங்க இப்பவே விசா எடுக்க கிளம்புங்கப்பா. ஏன்னா, அக்டோபர்ல ஆரம்பிச்சு மார்ச் வரைதான் இந்த மீன் கிடைக்கும். வறுவல், சூப், பிரியாணி, கட்லட்ன்னு விதம் விதமா வெளுத்து கட்டலாம்..

சிலந்தி,  பூச்சிகளோட வகைகளை  நாம விலங்குகள்  சரணாலயத்தில் தான் பார்த்திருப்போம். பார்க்காதவங்க, வண்டலூருக்கு ஒரு விசிட் அடிங்க. இதுலாம் பார்க்க ஆசைப்படுறவங்க தனியா போங்கப்பா. யரையாவது துணைக்கு கூட்டி போனா, சைஸ்ல பெரிய ஒட்டகம், யானை மாதிரியான பெரிய உருவம்கூட மைண்ட்ல நிக்காது.   ஒருவகையான சிலந்தியை  பிரை பண்ணி நொறுக்கு தீனியாக சாப்பிடுறாங்க ஒரு ஊர்ல.... இந்த பிரை வேணும்ன்னா  கம்போடியாவுக்குதான் போகனும். பூண்டு எண்ணையில் பொரித்து எடுப்பாங்களாம். ஆசியாவுக்கு சுற்றுலா வரும் சில சுற்றுலாப்பயணிகள் கம்போடியா போன்ற நாடுகளுக்கு சென்று வெட்டுக்கிளி, பூச்சி இவற்றை சாப்பிடுவதை படம் எடுத்து என்னமோ பெரிய அனகொண்டாவை சாப்பிட்ட மாதிரி மூஞ்சி புக்ல போடுவாங்க. ஆனா, உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடமாட்டாங்களாம். அது ஒரு சுற்றுலா யுக்தி என்று சொல்லப்பட்டாலும்  அந்த சிலந்தி பிரை எப்படி  செய்றாங்கன்னு பார்க்கலாம் .

ஒரு நீளமான மர குச்சியில் பூச்சியை குத்தி, அதை நன்றாக கொதிக்கும் நீர் இல்லன்னா, பூண்டு எண்ணையில் வைத்து உயிருடன் பொரித்து,  குளிர்ந்த பீர், வைன் அல்லது அரிசியினால் செய்யப்பட்ட பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவாங்க. இது 1 டாலர் முதல் உருவத்திற்கேற்ப 6 டாலர் வரை விற்பனை செய்யப்படுது. அந்த வகை உணவுக்கு செலவு அதிகம் இருப்பதால் .பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே இது பரிமாறப்படுகிறது. இந்தவகை உணவுகள் கம்போடியா மக்களின் உணவுப்பழக்கத்தில் இல்லையாம். 1970 ம் ஆண்டு கம்ம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த கம்போடியா  கடுமையான பஞ்சத்தில் இருந்தது. அப்ப, அந்நாட்டு மக்கள் உணவுக்கு வழி இன்றி தவித்தனர். உயிர்வாழ்வதற்காக கையில் கிடைச்சதுலாம் சாப்பிடத் தொடங்கினர். அப்படி வந்தவைதான் இந்த சிலந்தி, பட்டுப்புழு, தேள் மற்றும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் பழக்கம்.  

இதுவரை விஷமுள்ள உணவு பழக்கங்களை பார்த்தோம் இனி அடுத்தவகை  உணவுதான் கொஞ்சம் கிளுகிளுப்பானது. சிட்டுக்குருவி லேகியம் ‘அந்த’ விசயத்துக்கு உகந்ததுன்னு நம்ம ஊர் பெருசுங்க கதைக்கட்டி விட்டதுபோல,  கனடாவில் உள்ள பெரிசுங்க சொல்லி இருக்கும்போல....அத அந்த ஊரு பயபுள்ளைங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கனு நினைக்கிறேன். இந்த உணவுக்கு பேரு  ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் (Prairie Oysters) இவை காளையின் விதைப்பையைக் கொண்டு சமைத்து பரிமாறப்படும் ஒரு வகையான டிஷ். இது கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருளும் கூட.
சில குளிரான பிரதேசங்களில் உணவுகள் கிடைப்பதே அரிது. அந்த இடங்களில் உள்ளவங்களாம், அங்க கிடைக்கும் எதையும் வீணாக்குவது இல்லை. அந்தவகையில் வந்ததுதான் இந்த ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ். கனடாவில் உள்ள பெரிய பண்ணைகளில் காளைகளின் விதை நீக்கம் மற்றும் இறைச்சிக்காக வெட்டப்பட்டு கழிவுகளில் தூக்கி எறியப்படும் விதைகளை எடுத்து பலவகையான டிஷ்களை செய்றாங்க.   இவைகள் வறுத்து இல்லன்னா அவித்து  நல்லமிளகு, உப்பு  சேர்த்து விதம் விதமா பரிமாறப்படுது.  சில இடங்களில் காக்டைல் சாஸுடன் கலந்தும் பரிமாறப்படுகின்றன. இந்த உணவு பெஸ்டிவல் போன மாசம்தான் முடிவடைஞ்சதாம் .   இந்த ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் உணவை  சாப்பிடணும்னா  அடுத்த வருடம் நடக்கும் புட்  பெஸ்டிவலுக்காக காத்து இருக்கணும் .


அடுத்து   நாம பார்க்கபோறது ,மிகவும் கொடுமையான ,அதேசமயம் அருவருக்கத்தக்க ஒரு உணவு பால்ட் (Balut) - பிலிப்பைன்ஸ் நாட்டில் வழக்கத்தில் உள்ள ஒரு உணவு .நாம பொதுவா முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவோம். ஆனா, இவங்க சாப்பிடுற பக்குவ முறையை பார்த்தோம்னா.குஞ்சு பொரிக்கும் நிலையில் இருக்கும் வாத்து முட்டைகளை மிளகாய், பூண்டு, வினிகர் ,போன்றவற்றை சேர்த்து பரிமாறப்படும் ஒரு உணவே இந்த பால்ட் . பொதுவாக இந்தவகை உணவிற்கு வாத்து முட்டைகள்தான்  பயன்படுத்தப்படுகின்றன. வாத்து முட்டையின் கருகாலம் 16 லிருந்து 25 நாட்கள் .. இந்த சமயத்தில் அந்தவாத்து குஞ்சிகள் முட்டையினுள் வளர்ந்தும் வளராமலும் இருக்கும் பருவத்தில் அதை அவித்து சூப் போன்றோ இல்லை  வேறு வகையான ரெசிபி போன்றோ செய்யப்படுகிறது .


இந்த பால்ட் உணவு தெருவோர கடைகளில் இருந்து பெரிய மால்வரை கிடைக்கும். 1885ம் ஆண்டு சீனாவின் ஆதிக்கம் இங்க இருந்தபோது அவர்கள் மூலம் இந்த உணவு பிலிப்பைன் நாட்டில் வழக்கத்தில் வந்தது என்று சொல்லப்படுது. முதலில் வாத்து முட்டைகளை சேகரித்து சூரிய ஒளியினிலோ இல்லை ,மண்ணுக்குள்ளேயோ புதைத்து வைக்கிறார்கள். 10 நாட்கள் கழித்து அதை வெளியில் எடுத்து அறை வெப்பநிலையில் இருக்குமாறு பதப்படுத்துகிறார்கள். பல்வேறு வெப்பநிலைகளில் கருவூட்டப்பட்ட அந்த முட்டைகளின் மேற்பரப்பில் இருக்கும் விரிசலை பார்த்து ,இவர்கள் அதை பக்குவமாக எடுக்கிறார்கள். இது சில இடங்களில் 14 லிருந்து 18 வரை உள்ள கருமுட்டையை  விரும்புகிறர்கள். கம்போடியாவில் 18 முதல் 20 நாட்கள் உள்ள கருமுட்டையை விரும்புகிறார்கள் .வியட்நாமில் 19 முதல் 21 நாட்கள் உள்ள கருமுட்டையை விரும்பி உண்கிறார்கள். இதில் 21 நாட்கள் ஆகும் போது சிறிய குருத்து எலும்புகள் வளர ஆரம்பித்து இருக்கும் .அதை மென்று சாப்பிடுவதையும் சிலர் விரும்புகிறனர். இந்தவகையான உணவை உண்பதற்கு சீசன் ஏதும் இல்லை.  நீங்க எப்போ பிலிப்பைன்ஸ் போனாலும் இதுகிடைக்கும் .

அடுத்ததா நாம பார்க்க போறது ஹாக்கிஸ் (Haggis) ஸ்காட்லாந்தின் ஒரு தேசிய உணவாக இந்த ஹக்கிஸ் என்னும் டிஷ்ஷை சொல்லலாம். ஏனெனில் இந்த டிஷ்ஷானது செம்மறி ஆட்டின் இறைப்பையில் வெங்காயம், ஓட்ஸ், மசாலாக்கள் மற்றும் ஸ்டாக் ஆகியவற்றை ஸ்டஃப் செய்து சாப்பிடுவாங்க. .ஸ்காட்லாந்து போனீங்கன்னா இதுக்கு விளம்பரம் வேறே.  திருநெல்வேலியில் ஹிந்திகாரகள் நிறையபேர் வசித்த இடத்தில ஒருவர் அல்வா செய்ய ஆரம்பித்தார். அவரை அண்ணா ஜி என்று அழைத்து இன்று அண்ணாச்சி கடை அல்வா என்று சொல்லப்படுவதாக ஒரு குறிப்பு எங்கேயோ படித்து இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையிலே நெல்லையப்பர் கோவிலின் எதிரே உள்ள இருட்டுக்கடை ,அல்வா செய்பவரை பார்த்தால் நார்த் இந்திய குடும்பத்தில் உள்ளவரை போல்தான் தோற்றமளிக்கிறார். நம்ம ஊர் அல்வாவின்  வரலாற்றை இன்னொரு   பதிவில் பார்க்கலாம் .
சரி ஆட்டுக்குடலை பார்க்க வந்து அண்ணாச்சி, அல்வான்னு பதிவு ட்ராக் மாறுது. இந்த உணவு 18 ம் நூற்றண்டின் பிற்பகுதியிலிருந்தே மிகவும் பிரபலமாக ஸ்காட்லாந்தில் இருந்ததுன்னாலும்  இங்கிலாந்தின் எழுத்தாளர் கர்சேஸ் மார்க்கம் (. 1568-1637) த இங்கிலிஷ் ஹவுஸ் வாய்ப் என்னும்  (1615) என்ற குறிப்புகளின் மூலம் பிரபலமானது. இந்த வகையான உணவு மார்கஸ் அபிக்சஸ், அரிஸ்டோபேன்ஸ் மற்றும் ஹோமர் போன்ற உணவுகளையே ஒத்துள்ளதுன்னாலும், இந்த ஹாக்கிஸ் (Haggis) ன்ற பெயர் எப்பொழுது வழக்கத்தில் வந்ததுன்னு தெரிலை. ஒருவேளை 15  ம் நூறாண்டில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது . 
பதிவு இப்பவே பெருசாகிட்டுது. எனக்கு எதையுமே சொல்ல தெரியாதுன்னு நீங்க தப்பா நினைப்பீங்க. அதனால இன்னும் பலவிதமான, வித்தியாசமான உணவு பழக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் ..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை,

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, April 30, 2014

செஞ்சி கிரிஷ்ணகிரி கோட்டை என்னும் ராணிகோட்டை -மௌன சாட்சிகள்

கடந்த சிலவாரங்களா செஞ்சி கோட்டையையும் அதை சுத்தி உள்ள பகுதிகளையும் பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் நாம இன்னைக்கு பார்க்கப்போறது ராணிக்கோட்டை என அழைக்கப்படுகிற கிருஷ்ணகிரி கோட்டை. இதுதான் அதன் முழுத்தோற்றம்.

சுமார் 500 அடி உயரம் உள்ள குன்றின் மீது உள்ள கிருஷ்ணகிரி கோட்டை 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆனந்தகோன் என்னும் அரசனின் வழிவந்த அவரது மகன் கிருஷ்ணகோன் என்பரால் கட்டப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணகோன் பிள்ளைகளான கொனேரிகோன் கோவிந்தகோன் அவர்களது ஆட்சிக்காலத்தில் படைவீரர்கள், குதிரைகள், காவல்வீரர்கள் செல்வதற்கு கோட்டைச் சுவரை ஒட்டி உள்ள படிக்கட்டுகள் கட்டப்பட்டன. சரி, இனி நாம கோட்டைக்குள் செல்லலாம்.


இங்கே நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மொபைல் கேமராவிற்கு அனுமதி இலவசம். டிஜிட்டல் கேமராவிற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறாங்க. இனி, மலை ஏறத் தொடங்கலாம். ராஜகிரி கோட்டையை விட அளவில் சிறியது என்பதால் விரைவாக சென்றுவிடலாம்....  
 
அதோ அங்க தெரிகிற மலை உச்சிக்குதான் செல்லவேண்டும். திடீரென மழைமேகம் வருவதால சீக்கிரம் போகலாம். வழியினில்  கல்லினாலான நுழைவு மண்டபங்களும் இருக்கு. இப்ப நாம நிக்கிற இடம் சுழலும் பீரங்கி மேடை. ராஜகிரி கோட்டையை போல பாதுகாப்பு பணிகளுக்காக இந்த சுழலும் மேடை உபயோகப்படுத்தி இருக்கிறாங்க.


மலையேறி வரும் போது  தூரத்தில் தெரிவதுதான் முதல் நுழைவு மண்டபம்.  அதனை ஒட்டி வலதுபுறத்தில் இருப்பது சுழலும் பீரங்கிமேடை. இது பாதுகாப்பு காரணங்களுக்காவே பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது .இதன் விட்டம் சுமார் 9 மீட்டர் நீளம் உள்ளதாக அமைக்கபட்டு இருக்கு. மேலும் கூடுதகவல் வேணுமின்னா இந்த பீரங்கி மேடையில் பீரங்கி சுற்றும் கால்வாய் 0.70 மீ அகலம் உடையதாகவும் , 13 மீ உள்சுற்று இருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், இதன் உயரம் 4 மீட்டர் வட்டவடிவமாக கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டு இருக்கு. இந்த மேடையின் மைய அச்சில் இருக்கும் துளையின் மீது பொருத்தப்பட்ட பீரங்கி சக்கரம் எண்திசைகளிலும் சுற்றி எதிரிகளை தாக்குமாறு வடிவமைக்கபட்டுள்ளது. ஆனா இப்ப பீரங்கி இல்ல வெறும் மேடை மாத்திரமே இருக்கு !!
    
அதைத் தாண்டி சென்றால் வருவது இந்த இரண்டாம் கட்ட நுழைவாயில். முழுவதும் கற்களால் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. அதையும் தாண்டி சென்றால் வருவது தானியகளஞ்சியம்.

ராஜகிரி கோட்டையில இருப்பதுபோல இங்கேயும் பெரிய தானிய களஞ்சியம் இருக்கு. அதில கீழ்பாகம் முழுவதும் நிரம்பின உடனே மேல்பாகத்தில இருந்து நிரப்புவதற்கு ஏற்ப படிக்கட்டுகள் அமைச்சு இருக்கிறாங்க.

இந்த தானிய களஞ்சியதுக்கு பக்கத்துல இருக்கிற பாறையின் மீது சின்னதா சதுரவடிவில் ஒரு மேடை இருக்கு.  அதுல இரண்டு அறைகள் இருக்கு. அதற்கு பேரு எண்ணெய் கிணறு. இது தானிய களஞ்சியத்திற்கு அருகிலேயே இருக்கு. இது 32 அடி நீளமும், 16 அடி அகலமும், 10 அடி ஆழமும் உள்ள கட்டிட அமைப்பு முற்றிலும் சதுரவடிவில் கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்கு. இது இரண்டு பாகங்களாக பிரித்து கட்டப்பட்டு இருக்கு. ஒரு பகுதியில் எண்ணெயும், மற்றொரு பகுதில் நெய்யும் சேமிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் மேற்பகுதி சின்ன  திறப்பு இருப்பதால் அதன்வழியே சூரியஒளி உள்ளே விழுவதாலும் அங்கே இருக்கும் எண்ணையும், நெய்யும் கெட்டுபோகாமல் இருந்ததாக கூறப்படுகிறது இப்பொழுது அதனுழள் மழைதண்ணி மாத்திரம் தேங்கி கிடக்கு!!


தானிய களஞ்சியம் எண்ணெய் கிணறு எல்லாம் தாண்டி வரும்போது கல்லினால் ஆன நுழைவாயில் இருக்கு. அதன் வழியே சென்றால் வருவது அரங்கநாதர்கோவில்.  அந்தக்காலங்களில் வாழ்ந்த மன்னர்கள் அரங்கநாதரையே பெரிதும் விரும்பி வழிப்பட்டு இருக்கிறார்கள். எல்லா கோட்டைகளிலும்  அரங்கநாதருக்கு சன்னதி இருக்கு. இந்த ஆலயம் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களுக்கென தனி வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இந்த ஆலயத்தினுள் நுழைவாயிலிலும், மற்ற இடங்களிலும் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு  இருக்கு. ஒரு முன்மண்டபம் தூண்களுடனும், சிற்ப வேலைபாடுகளுடனும் அழகாக இருக்கு. அதில் இந்தக் கோவிலை நிர்வாகம் செய்த மன்னர்களின் சிலைகளும், கடவுளர்களின் சிலைகளும், மகாலக்ஷ்மி யானை பரிவாரங்களுடன் இருக்கும் சிற்பங்களும், மூலவர் சன்னதி மேடையில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது .
சன்னிதியில் மூலவர் இல்லை. அங்கே வெற்றிடமாக இருக்கு. இந்த மண்டபத்திற்கு கிழக்கில் இருந்து நல்ல வெளிச்சம் கிடைப்பதற்கும் கிழக்கு பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்டு இருக்கு. உள்பக்கம் ஒரு படிக்கட்டு இருக்கு. அதன்வழியே சென்றால் கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்லலாம்.

அழகிய கோபுரம், சிறந்த உள்பிரகாரம், சுற்றுகட்டு மண்டபங்கள், உயரமான மூலவர் பீடம் என பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இந்த ஆலயத்தின் மேற் கூரைகள் வரிகற்களால் அழகுற அடுக்கப்பட்டு சிதைலமைடந்த நிலையிலும் அழகு குறையாமல் காட்சியளிக்கிறது   .

மேலும் சில மொட்டை கோபுரங்களும், பாழடைந்த மண்டபங்களும் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் இங்கே இருக்கிற கோவில்களை சிதைத்தது மட்டுமில்லாமல் 1905 ல் வீசிய சூறைக்காற்றில் நிறைய மண்டபங்கள் பாழ்பட்டுவிட்டதாம். அப்போதிருந்தே இதை பராமரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டனராம்.

அடுத்து நாம பார்க்கப்போறது ஒரு வற்றாத நீர் ஊற்று. கோவிலுக்கு கொஞ்சம் மேற்கே ஒரு சுழலும் பீரங்கி மேடையின் அருகே இருப்பது ஒரு நீர் ஊற்று. அவ்வளவு உயரமான இடத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்று. அங்கே சுற்றுலா வருபவர்களும், உள்ளூர் மக்களும் மேலே வந்து இந்த தண்ணீரில் சமைத்து உண்டு மாலை வேளையில் கீழே செல்கின்றனர்
அடுத்து நாம பார்க்கப்போறது தர்பார் மண்டபம். இது இந்து இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்ட மண்ட்பமாகும். கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் கோட்டையினுள் இருக்கும் பெண்கள் ஓய்வு எடுக்கவும் இந்த மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலே டூம் போன்ற அமைப்பில் இஸ்லாமிய முறைப்படி அமைந்த கட்டிடம் இது. இதன் சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பு கலவை கலந்த செங்கற்களை கொண்டு கட்டப்பட்டது. இதில் ஒரு ஊஞ்சல் மணடபமும் உள்ளது.
  
மிகப்பெரிய தூண்களுடன் மைய மண்டபத்தில் சூரிய ஒளி நேரடியாக விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு மண்டபத்தின் அழகை மேலும் வெளிச்சமாக காட்டுகிறது. மையப்பகுதியில் ஒரு மேடை அமைச்சு இருக்கிறாங்க.

தர்பார் மண்டபத்திற்கு அருகில் சிறிது தூரத்தில் தெரிவது கிருஷ்ணன் கோவில். இங்கே மன்னர்கள் வழிபாடு செய்வார்களாம். இந்தக் கோவில் இப்பொழுது முழுவதும் அழிந்து காணப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி சிறிய சிறிய சிலைகளும், பீடங்களும் அழகாக அமைச்சு இருக்கிறாங்க.


இந்தக் கோவிலின் மண்டபங்கள் பெரியதாக இருக்கிறது. உள்பிரகாரம் எல்லாம் கருங்கற்களால் கட்டப்பட்டு,மூலவர் கோபுரங்களுடன் இருக்கு. எல்லாம் இப்போ பாழடைஞ்சு இருக்கு. பலிபீடம், கோவில் முற்றங்கள் எல்லாம் வடிவமைக்கபட்டவிதம் அழகா இருக்கு.  அந்த கோவிலின் முற்றத்தில் இருந்து பார்க்கும் போது கோட்டையின் எல்லாப் பகுதிகளும் தெளிவாக தெரியும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் கோவிலின் சற்று தொலைவில் காவல் கோபுரமும், சுழலும் பீரங்கி மேடையும் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருக்கு.

இங்கே தெரியும் இந்த பெரிய படிக்கட்டு கிருஷ்ணகோன் காலத்தில்  படைவீரர்கள், குதிரைகள், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஏறிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. மற்றவர்கள் ஏறிச் செல்ல ஒரு பாதையும் ஏற்படுத்தப்பட்டது. அந்த சாதாரண மக்கள் பயன்படுத்திய வழிதான் இன்று பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கு.


ஒருவழியாக பல வரலாற்று நிகழ்வுகளையும், பல போர்களையும், பல சாம்ராஜ்யங்களின் ஆட்சி, கலை, கலாச்சாரம், காதல், வீரம் போன்றவற்றை தன்னுள் கொண்டு மௌன சாட்சியாய் கம்பீராமாய் நிற்கும் செஞ்சி கொட்டையிலிருந்து விடை பெற்று மீண்டும் அடுத்த ஒரு இடத்தில சந்திக்கலாம்!!!

நன்றி! வணக்கம்!!