Wednesday, April 30, 2014

செஞ்சி கிரிஷ்ணகிரி கோட்டை என்னும் ராணிகோட்டை -மௌன சாட்சிகள்

கடந்த சிலவாரங்களா செஞ்சி கோட்டையையும் அதை சுத்தி உள்ள பகுதிகளையும் பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் நாம இன்னைக்கு பார்க்கப்போறது ராணிக்கோட்டை என அழைக்கப்படுகிற கிருஷ்ணகிரி கோட்டை. இதுதான் அதன் முழுத்தோற்றம்.

சுமார் 500 அடி உயரம் உள்ள குன்றின் மீது உள்ள கிருஷ்ணகிரி கோட்டை 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆனந்தகோன் என்னும் அரசனின் வழிவந்த அவரது மகன் கிருஷ்ணகோன் என்பரால் கட்டப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணகோன் பிள்ளைகளான கொனேரிகோன் கோவிந்தகோன் அவர்களது ஆட்சிக்காலத்தில் படைவீரர்கள், குதிரைகள், காவல்வீரர்கள் செல்வதற்கு கோட்டைச் சுவரை ஒட்டி உள்ள படிக்கட்டுகள் கட்டப்பட்டன. சரி, இனி நாம கோட்டைக்குள் செல்லலாம்.


இங்கே நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மொபைல் கேமராவிற்கு அனுமதி இலவசம். டிஜிட்டல் கேமராவிற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறாங்க. இனி, மலை ஏறத் தொடங்கலாம். ராஜகிரி கோட்டையை விட அளவில் சிறியது என்பதால் விரைவாக சென்றுவிடலாம்....  
 
அதோ அங்க தெரிகிற மலை உச்சிக்குதான் செல்லவேண்டும். திடீரென மழைமேகம் வருவதால சீக்கிரம் போகலாம். வழியினில்  கல்லினாலான நுழைவு மண்டபங்களும் இருக்கு. இப்ப நாம நிக்கிற இடம் சுழலும் பீரங்கி மேடை. ராஜகிரி கோட்டையை போல பாதுகாப்பு பணிகளுக்காக இந்த சுழலும் மேடை உபயோகப்படுத்தி இருக்கிறாங்க.


மலையேறி வரும் போது  தூரத்தில் தெரிவதுதான் முதல் நுழைவு மண்டபம்.  அதனை ஒட்டி வலதுபுறத்தில் இருப்பது சுழலும் பீரங்கிமேடை. இது பாதுகாப்பு காரணங்களுக்காவே பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது .இதன் விட்டம் சுமார் 9 மீட்டர் நீளம் உள்ளதாக அமைக்கபட்டு இருக்கு. மேலும் கூடுதகவல் வேணுமின்னா இந்த பீரங்கி மேடையில் பீரங்கி சுற்றும் கால்வாய் 0.70 மீ அகலம் உடையதாகவும் , 13 மீ உள்சுற்று இருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், இதன் உயரம் 4 மீட்டர் வட்டவடிவமாக கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டு இருக்கு. இந்த மேடையின் மைய அச்சில் இருக்கும் துளையின் மீது பொருத்தப்பட்ட பீரங்கி சக்கரம் எண்திசைகளிலும் சுற்றி எதிரிகளை தாக்குமாறு வடிவமைக்கபட்டுள்ளது. ஆனா இப்ப பீரங்கி இல்ல வெறும் மேடை மாத்திரமே இருக்கு !!
    
அதைத் தாண்டி சென்றால் வருவது இந்த இரண்டாம் கட்ட நுழைவாயில். முழுவதும் கற்களால் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. அதையும் தாண்டி சென்றால் வருவது தானியகளஞ்சியம்.

ராஜகிரி கோட்டையில இருப்பதுபோல இங்கேயும் பெரிய தானிய களஞ்சியம் இருக்கு. அதில கீழ்பாகம் முழுவதும் நிரம்பின உடனே மேல்பாகத்தில இருந்து நிரப்புவதற்கு ஏற்ப படிக்கட்டுகள் அமைச்சு இருக்கிறாங்க.

இந்த தானிய களஞ்சியதுக்கு பக்கத்துல இருக்கிற பாறையின் மீது சின்னதா சதுரவடிவில் ஒரு மேடை இருக்கு.  அதுல இரண்டு அறைகள் இருக்கு. அதற்கு பேரு எண்ணெய் கிணறு. இது தானிய களஞ்சியத்திற்கு அருகிலேயே இருக்கு. இது 32 அடி நீளமும், 16 அடி அகலமும், 10 அடி ஆழமும் உள்ள கட்டிட அமைப்பு முற்றிலும் சதுரவடிவில் கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்கு. இது இரண்டு பாகங்களாக பிரித்து கட்டப்பட்டு இருக்கு. ஒரு பகுதியில் எண்ணெயும், மற்றொரு பகுதில் நெய்யும் சேமிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் மேற்பகுதி சின்ன  திறப்பு இருப்பதால் அதன்வழியே சூரியஒளி உள்ளே விழுவதாலும் அங்கே இருக்கும் எண்ணையும், நெய்யும் கெட்டுபோகாமல் இருந்ததாக கூறப்படுகிறது இப்பொழுது அதனுழள் மழைதண்ணி மாத்திரம் தேங்கி கிடக்கு!!


தானிய களஞ்சியம் எண்ணெய் கிணறு எல்லாம் தாண்டி வரும்போது கல்லினால் ஆன நுழைவாயில் இருக்கு. அதன் வழியே சென்றால் வருவது அரங்கநாதர்கோவில்.  அந்தக்காலங்களில் வாழ்ந்த மன்னர்கள் அரங்கநாதரையே பெரிதும் விரும்பி வழிப்பட்டு இருக்கிறார்கள். எல்லா கோட்டைகளிலும்  அரங்கநாதருக்கு சன்னதி இருக்கு. இந்த ஆலயம் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களுக்கென தனி வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இந்த ஆலயத்தினுள் நுழைவாயிலிலும், மற்ற இடங்களிலும் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு  இருக்கு. ஒரு முன்மண்டபம் தூண்களுடனும், சிற்ப வேலைபாடுகளுடனும் அழகாக இருக்கு. அதில் இந்தக் கோவிலை நிர்வாகம் செய்த மன்னர்களின் சிலைகளும், கடவுளர்களின் சிலைகளும், மகாலக்ஷ்மி யானை பரிவாரங்களுடன் இருக்கும் சிற்பங்களும், மூலவர் சன்னதி மேடையில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது .
சன்னிதியில் மூலவர் இல்லை. அங்கே வெற்றிடமாக இருக்கு. இந்த மண்டபத்திற்கு கிழக்கில் இருந்து நல்ல வெளிச்சம் கிடைப்பதற்கும் கிழக்கு பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்டு இருக்கு. உள்பக்கம் ஒரு படிக்கட்டு இருக்கு. அதன்வழியே சென்றால் கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்லலாம்.

அழகிய கோபுரம், சிறந்த உள்பிரகாரம், சுற்றுகட்டு மண்டபங்கள், உயரமான மூலவர் பீடம் என பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இந்த ஆலயத்தின் மேற் கூரைகள் வரிகற்களால் அழகுற அடுக்கப்பட்டு சிதைலமைடந்த நிலையிலும் அழகு குறையாமல் காட்சியளிக்கிறது   .

மேலும் சில மொட்டை கோபுரங்களும், பாழடைந்த மண்டபங்களும் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் இங்கே இருக்கிற கோவில்களை சிதைத்தது மட்டுமில்லாமல் 1905 ல் வீசிய சூறைக்காற்றில் நிறைய மண்டபங்கள் பாழ்பட்டுவிட்டதாம். அப்போதிருந்தே இதை பராமரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டனராம்.

அடுத்து நாம பார்க்கப்போறது ஒரு வற்றாத நீர் ஊற்று. கோவிலுக்கு கொஞ்சம் மேற்கே ஒரு சுழலும் பீரங்கி மேடையின் அருகே இருப்பது ஒரு நீர் ஊற்று. அவ்வளவு உயரமான இடத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்று. அங்கே சுற்றுலா வருபவர்களும், உள்ளூர் மக்களும் மேலே வந்து இந்த தண்ணீரில் சமைத்து உண்டு மாலை வேளையில் கீழே செல்கின்றனர்
அடுத்து நாம பார்க்கப்போறது தர்பார் மண்டபம். இது இந்து இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்ட மண்ட்பமாகும். கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் கோட்டையினுள் இருக்கும் பெண்கள் ஓய்வு எடுக்கவும் இந்த மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலே டூம் போன்ற அமைப்பில் இஸ்லாமிய முறைப்படி அமைந்த கட்டிடம் இது. இதன் சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பு கலவை கலந்த செங்கற்களை கொண்டு கட்டப்பட்டது. இதில் ஒரு ஊஞ்சல் மணடபமும் உள்ளது.
  
மிகப்பெரிய தூண்களுடன் மைய மண்டபத்தில் சூரிய ஒளி நேரடியாக விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு மண்டபத்தின் அழகை மேலும் வெளிச்சமாக காட்டுகிறது. மையப்பகுதியில் ஒரு மேடை அமைச்சு இருக்கிறாங்க.

தர்பார் மண்டபத்திற்கு அருகில் சிறிது தூரத்தில் தெரிவது கிருஷ்ணன் கோவில். இங்கே மன்னர்கள் வழிபாடு செய்வார்களாம். இந்தக் கோவில் இப்பொழுது முழுவதும் அழிந்து காணப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி சிறிய சிறிய சிலைகளும், பீடங்களும் அழகாக அமைச்சு இருக்கிறாங்க.


இந்தக் கோவிலின் மண்டபங்கள் பெரியதாக இருக்கிறது. உள்பிரகாரம் எல்லாம் கருங்கற்களால் கட்டப்பட்டு,மூலவர் கோபுரங்களுடன் இருக்கு. எல்லாம் இப்போ பாழடைஞ்சு இருக்கு. பலிபீடம், கோவில் முற்றங்கள் எல்லாம் வடிவமைக்கபட்டவிதம் அழகா இருக்கு.  அந்த கோவிலின் முற்றத்தில் இருந்து பார்க்கும் போது கோட்டையின் எல்லாப் பகுதிகளும் தெளிவாக தெரியும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் கோவிலின் சற்று தொலைவில் காவல் கோபுரமும், சுழலும் பீரங்கி மேடையும் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருக்கு.

இங்கே தெரியும் இந்த பெரிய படிக்கட்டு கிருஷ்ணகோன் காலத்தில்  படைவீரர்கள், குதிரைகள், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஏறிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. மற்றவர்கள் ஏறிச் செல்ல ஒரு பாதையும் ஏற்படுத்தப்பட்டது. அந்த சாதாரண மக்கள் பயன்படுத்திய வழிதான் இன்று பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கு.


ஒருவழியாக பல வரலாற்று நிகழ்வுகளையும், பல போர்களையும், பல சாம்ராஜ்யங்களின் ஆட்சி, கலை, கலாச்சாரம், காதல், வீரம் போன்றவற்றை தன்னுள் கொண்டு மௌன சாட்சியாய் கம்பீராமாய் நிற்கும் செஞ்சி கொட்டையிலிருந்து விடை பெற்று மீண்டும் அடுத்த ஒரு இடத்தில சந்திக்கலாம்!!!

நன்றி! வணக்கம்!! 

12 comments:

 1. இன்னுமா செஞ்சி பற்றிய பதிவுகள் முடியவில்லை. ஓ... கடைசியில் முடித்தே விட்டீர்கள். ஒரு சமயம் கண்டிப்பாய் வலம்வர வேண்டும் குடும்பத்தோடு......

  ReplyDelete
 2. கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்களுடன் கருத்தில் பதிய வைக்கும் பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. படங்களுடன் கூடிய விளக்கங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 4. நன்றி இனிய பதிவஉகள்

  ReplyDelete
 5. செஞ்சி கோட்டை கேள்விப்பட்டு இருக்கிரேன்! செஞ்சி ராணிகோட்டையைப் பற்றி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். டிஜிட்டல் கேமராவினால் கலக்குகிறீர்கள்!
  த.ம.4

  ReplyDelete
 6. அருமையான படங்கள். சிறப்பான தகவல்கள் என நாங்களும் ராணிகோட்டை பார்த்தோம்...

  ReplyDelete
 7. ரெம்ப மெனக்கட்டு , நிறைய தகவல்களை சேகரித்து அழகான படங்களுடன் பதிவு .

  ஒரு தேர்ந்த வழிகாட்டியுடன் செஞ்சிக்கோட்டையை சுற்றிபார்த்த உணர்வு ...


  Hats off to ur dedication & preparation ...!

  ReplyDelete
 8. பிரமாண்டமான அரசாட்சிப்பற்றி பிரமாண்டமான பதிவு. நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. சுற்றுலா என்கிற பெயரில் ஓடி ஓடி வந்துவிடுகிறோமே தவிர...இத்தனை அருமை விளங்கவில்லை. மிக்க நன்றிகள் பகிற்விற்கு.

  ReplyDelete
 9. அருமையான படங்களுடன் தகவல்கள்... நன்றி சகோதரி...

  ReplyDelete
 10. நான் அடுத்த முறை செஞ்சிக்குப் போக நேர்ந்தால் உங்களின் பதிவின் நகலை கையுடன் கொண்டு சென்றுவிடுவேன்.

  அருமையான பதிவு.
  பிற்காலத்தில் செஞ்சி செல்லும் மணவர்களுக்கும் தேவையான ஒரு பதிவு.
  அருமை தோழி.
  தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete
 12. அருமையான படங்களுடன் தகவல்கள்... நன்றி

  ReplyDelete