எல்லோரும் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வாங்க. ஆனா, எங்க ஊர்ல கல்யாண, காதுகுத்து, சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்யும் முன் குல தெய்வத்துக்கு சாமி கும்பிடும்போதும், பொங்கல் பண்டிகை கழிந்ததும் சாமி கும்பிட, ஆடி மாசம் மாரியம்மனுக்கு கூழ் ஊத்தன்னு எப்படியும் மாசம் ஒரு தரமாவது கொழுக்கட்டை செய்ய வேண்டி வரும்.
அதனால, எனக்கு கொழுக்கட்டை நல்லாவே செய்ய வரும். ரொம்ப ஈசியா அதே நேரம் ருசியா எப்படி கொழுக்கட்டை செய்யலாம்ன்னு இனி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 ஆழாக்கு (ரேஷன் அரிசின்னா கொழுக்கட்டை நல்லா வரும்)
வெல்லம் - கால் கிலோ
வேர்க்கடலை - 100 கிராம்
உப்பு - கால் டீஸ்பூன்
பச்சரிசியை குறைஞ்சது 2 மணிநேரம் ஊற வச்சு கழுவி, காட்டன் துணில மூட்டைக் கட்டி ஈரம் காய்ஞ்சதும் மிக்சில இல்ல மெஷின்ல அரைச்சுக்கோங்க. வெல்லத்தை பொடிப் பண்ணி வச்சுக்கோங்க. வேர்க்கடலையை வறுத்து, ஆறினதும் தோல் நீகி சுத்தம் செஞ்சுக்கோங்க. வெல்லத்தை பொடிச்சு வச்சுக்கோங்க.
வேர்க்கடலையை மிக்சில ரெண்டு சுத்து ஓடவிட்டு, கூடவே பாதி வெல்லத்தை சேர்த்து பொடிச்சுக்கோங்க. ரொம்ப நைசா இல்லாம கரகரப்பா அரைச்சுக்கோங்க.
அரைச்ச பச்சரிசி மாவை ஜலிச்சு இட்லி பானைல வச்சு வேக விடுங்க. கைல மாவு ஒட்டாம வரும்வரை குறைஞ்சது கால் மணி நேரம் வேக வைங்க. ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊத்தி மிச்ச வெல்லம், உப்பைச் சேர்த்து சூடு பண்ணுங்க. கொதிக்க வைக்கனும்ன்னு அவசியம் இல்ல. வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணால் போதும்.
மாவு வெந்ததும், ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கட்டி இல்லாம ஆற வைங்க. வெல்லத்தை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமா மாவில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைஞ்சுக்கோங்க.
சின்ன வயசுல விளையாட களி மண்ணுல சொப்பு செய்வோம். அதுப்போல பிசஞ்ச மாவு எடுத்து சொப்பு செஞ்சு பொடிச்ச வேர்க்கடலை, வெல்லப் பொடியை வச்சு மூடி உருட்டிக்கோங்க.
எல்லாத்தையும் உருட்டி வச்சு இட்லிப் பானைல தேவையான அளவு தண்ணி வச்சு உருட்டி வச்சிருக்கும் உருண்டைகளை கால் மணி நேரம்
வேக வைங்க.
டிப்ஸ்: கொழுக்கட்டை பூரணத்துக்கு வேர்க்கடலைப் போலவே எள்ளை வறுத்து வெல்லம் சேர்த்து பொடிப் பண்ணியும் வைக்கலாம். தேங்காய் துருவி சர்க்கரை ஏலக்காய் சேர்த்தும் பூரணம் வைக்கலாம்.
கொழுக்கட்டை உருட்டி வச்சது ஃபேன் காத்துல காய விடாம பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டைகள் வெடிக்கும். மாவு பிசையும் போது வெல்லம் தண்ணி பத்தலைன்னா சாதாரண தண்ணி சேர்த்தும் செய்யலாம். சிலர் மேல் மாவுக்கு வெல்லம் சேர்க்காம வெறும் உப்பு மட்டும் போட்டு பிசைஞ்சும் கொழுக்கட்டை செய்வாங்க.
மேல படத்துல உருண்டைகளில் வேர்க்கடலை பூரணம் வச்சு நான் உருட்டினேன். சோமாஸ் போல இருப்பதில் எள் பூரணம் வச்சு சின்னவ இனியா கொழுக்கட்டை பிடிச்சா. கொழுக்கட்டைப் பிடிக்குறதுல அப்புவோட ஹெல்ப் என்னன்னா.....,
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்னை திட்டிக்கிட்டே கொழுக்கட்டைப் பிடிக்குறதை படம் பிடிச்சது.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.