படிப்பு, வேலை, வேலையில நல்ல பேர், சரியான வயசுல திருமணம், பிள்ளைப்பேறு, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தோருக்கும், சொந்தங்களுக்கும், நன்பர்களுக்கும், இறைபக்தியும், எல்லா கடைமையும் முடிச்ச பின் பணியிலிருந்து ஓய்வு. இப்படி வரிசைப்படி உரிய காலத்துல தன்னோட கடமைகளை செய்து முடிக்கும் பாக்கியம் எல்லாருக்கும் அமைஞ்சுடாது.
ஆனால், என் அப்பாவுக்கு எல்லாமும் அமைஞ்சது. பி.யூ.சி முடிச்சு, டீச்சர், போலீஸ், என பல துறைகளில் ட்ரெயினிங் போக வாய்ப்பு கிடைத்தும் தாத்தாவால் பல்வேறு காரணங்களுக்காக வேணாம்ன்னு சொல்லி, ”தொழுநோய் ஆய்வாளர் ” பயிற்சிக்கு போய் 23 வயசுல ராமநாதபுரம் மாவட்டத்துல உள்ள ஒரு கிராமத்துல வேலைக்கு சேர்ந்தார்.
அப்பாவுக்கு ”ஃபீல்டு வொர்க்”. ஊர் ஊரா போய், தொழுநோய் இருக்கான்னு செக் பண்ணனும். அந்த ஊர்களில் பஸ் வசதி அவ்வளவா கிடையாது. சைக்கிள் வாங்ககூட வசதியில்லாம நடந்தே போவாராம். இன்னிக்கும் எதாவது ரெண்டு கிராமத்து பேர் சொல்லி எவ்வளவு தூரம்ன்னு கேட்டால் இத்தனை தரம் வலது கால் வைத்தால் வரும்ன்னு சொல்வார். பல பணி உயர்வு கிடைத்த பிறகும் அந்த ஆரம்ப கால பணிகளை நினைவு கூர்ந்து சொல்லுவதில் அவருக்கு அலாதி பிரியம்.
(யாரும் பசியோடு இருக்க கூடாதுன்னு அப்பாவோட நினைப்பு. அதனால் பணி நிறைவு நிகழ்ச்சிக்கு வந்தவங்களுக்கு முதலில் மதிய உணவு...,)
(அப்பாவும், அம்மாவும் வந்திருந்தவங்களை விசாரித்து பரிமாறுகின்றனர்...,)
அப்பா 300 ரூபாய் சம்பளத்துல வேலைக்கு சேர்ந்தார். என்ன காரணத்துக்காவோ தெரியலை, தன் பிள்ளைக்கிட்டயே, உன்னை படிக்க வைக்க ஆன செலவை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 1000 ரூபாய் தந்துடனும்ன்னு கண்டிஷன் போட்டாராம் தாத்தா. நான்கு மாத சம்பளமான 1200ல் தாத்தாகிட்ட 1000 ரூபாய் கொடுத்துட்டால் வீட்டு செலவுக்கு பணமில்லாமல் திண்டாடுவாங்களாம். அதனால், வேலையிலிருந்து வந்து நெசவு தொழில் செஞ்சு சிக்கனமா குடும்ப செலவுகளை செய்ய கத்துக்கிட்டாராம் அப்பா. அந்த சிக்கனம் இன்றளவும் தொடருது.
”பொன் வைக்கும் இடத்தில் பூ வை” ன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு. ஆனால், அப்பா ”பூ வைக்கும் இடத்தில் பொன்” வைத்து அழகு பார்க்கும் தாராள குணம் கொண்டவர். தன் சம்பாத்தியத்தில் தன் குடும்பத்தார் மட்டுமில்லாமல், உற்றார், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுவார். கோவில் நன்கொடைன்னு வந்தால் கொஞ்சமா கொடுப்பவர், பள்ளி, உதவும் கரங்கள் போன்ற விஷயங்களுக்கு நன்கொடைகள் நிறைய கொடுப்பார்.
வேலை செய்யும் இடத்தில் தன்னோட வேலைகளை சரியா செய்வதோடு, சக பணியாளர்களுக்கும் உதவிகள் செய்வார். நன்பர்கள் வீட்டுல விசேஷங்களுக்கு முதல் ஆளா நின்னு எல்லா வேலையும் முடிச்சு குடுப்பார். சில சமயம் டாக்டர்களே அப்பாவிடம் ஆலோசனைகள் கேட்பர்.
(பேர பிள்ளைங்க தாத்தாவோட நிகழ்ச்சிக்கு பொக்கேவும், கேக்கும் கிஃப்ட் பண்ணாங்க...,)
(பசங்க குடுத்த கேக்கை அப்பா கட் பண்றார்...,)
என்னோட டீன் ஏஜ்ல அப்பாவோட வெளி இடங்களுக்கு செல்லும்போது, அவரோட பேஷண்டுகளும், அவரால் குணமடந்தவங்களும் வணக்கம் சொல்வாங்க. சிலருக்கு நோயோட தீவிரம் அதிகமாகி கைவிரல்கள், கால்விரல்கள்லாம் மடங்கி புண்ணாகி இருக்கும். அதனால அப்பாவுடன் நிற்க அசிங்கப்பட்டுக்கிட்டு, அப்பாவை விட்டு தூரமாய் போய் நிப்பேன். அன்று அப்பாவோட தொழில் எனக்கு அருவறுப்பா பட்டது.
ஆனால், 92 ம் வருடம் தன் கடின உழைப்பால் சுமார் 5000 தொழுநோயாளிகளை கண்டறிந்து, சிகிச்சையளித்து, குணமாக்கி சிறந்த சேவைக்கான விருதை பெற்றபோது என் தவறான எண்ணத்திற்காக வெட்கி அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதன்பின் அப்பாவின் பணிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இதுவரை அப்பா 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளார் என்பதை இத்திருநாளில் பெருமையுடன் சொல்லி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
(அப்பாவை வாழ்த்தி அவரோட மருத்துவ அலுவலர் பேசுறார்....,)
(அப்பாவோட நண்பர் வாழ்த்தி பேசுறார்...,)
அப்பா, எதற்கும் பொய் சொல்லி நான் அறிந்ததில்லை. பிள்ளைகளை சமாதானப்படுத்த பொய் சொல்லலாமேப்பா. அதனால் ஒரு கெடுதலும் வராதுன்னு நான் சொன்னாலும், அது தப்பும்மா, கெடுதல் இல்லாவிட்டாலும் பிள்ளைகள் ஏமாந்துடுவாங்க என பொய் சொல்றதை கண்டிப்பார்.
மனசுக்கு தோணுவதை வார்த்தை ஜாலமின்றி அப்படியே சொல்வதால் அவரை முரட்டு மனிதர்ன்னு பலர் நினைச்சுக்குவாங்க. ஆனால், பலாப்பழம் போன்றவர் என் அப்பா. பார்க்க பயமா இருந்தாலும், பழகினால் குழந்தை சுபாவம் கொண்டவர், ஈகோ துளியும் பார்க்காதவர்.
தனக்கு தன் சம்பாத்தியம் மட்டுமே போதுமானது என்று எண்ணி பல லட்சம் மதிப்புள்ள பூர்வீக வீட்டை தன் உடன்பிறந்தோருக்கு தூக்கி கொடுத்த நல்ல மனதுக்காரர் என் அப்பா. பேர பிள்ளைகள் மேல் உயிரையே வைத்திருக்கும் பாசக்காரர். பாசத்துடன் கண்டிப்போடும் இருப்பார். என்னை பொறுத்த மட்டில் சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தில் வரும் கதாநாயகனின் அப்பா பாத்திரத்தை போன்றவர். ரொம்ப பாசம் அதே நேரத்தில் தன் பெண்ணுக்கு தன்னால் கொடுக்கப்படுகிற எல்லாமே சிறப்பா கொடுக்கனும்ன்னு நினைப்பு. அவர் சொல்றது எனக்கு பிடிக்காம போச்சுன்னா, டிவிடில அந்த படத்தை போட்டு பார்க்க சொல்வேன். அதனால் கோவமாகி அப்பா கத்தி பேச இருந்து சில மணித்துளிகளில் மீண்டும் பேசிக்கொள்ளும் அதிசயத்தை அம்மா பார்த்து கிண்டல் செய்வாங்க..
(அப்பாவோட ஏற்புரை....,)
(நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள்...)
(அப்பவோட ஆபீசுல இருந்து வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுட்டு போனார்கள்..,)
இருபத்தி மூன்று வயதில் ஓட துவங்கிய ஓட்டம்
காசு பணம் தேடி ஓடி,
கல்யாணத்திற்கு ஓடி..,
மனைவி சொல்லுக்காக ஓடி...,
பிள்ளைக்காக ஓடி...,
பெற்றோருக்காக ஓடி...,
உடன்பிறந்தோர்,உற்றார்,
உறவினர்களுக்காகவும் ஓடி...,
மூப்பும் வந்தது!?
உடன் பணி மூப்பும் வந்தது...,
நோய்க்காக மருத்துவமனை ஓடி,
புண்ணியத்தை சேர்க்க புண்ணிய தளங்களுக்கு ஓடி...,
பேர பிள்ளைகளுக்காய் ஓடி.., என
தங்கள் கடமை சுமைக்காக
இனியும் ஓடும் ஓட்டத்திற்கு பஞ்சமில்லை...,
இருந்தாலும்...,
சர்க்கரை, ரத்த அழுத்த நோய்...,
போன்றவற்றிலிருந்து தப்பிக்க
மருத்துவர் ஆலோசனைப்படி
ஓட வேண்டியுள்ளது...,
அந்த ஓட்டத்தினை நீங்கள் தொடருங்கள்...,
உங்கள் கடமையை தங்கள்
வழிக்காட்டுதலோடு..., செய்து முடிக்க
அப்பா! நானிருக்கிறேன் உங்களுக்கு...,
டிஸ்கி: எல்லாருக்கும் அவங்கவங்க அப்பாதான் முதல் ஹீரோ. எனக்கும் அதுப்போலதான். இருந்தாலும் என் அப்பா ரொம்ப ஸ்பெஷல் எனக்கு. அந்த ஹீரோ, ஜனவரி 31 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்காக இந்த பதிவு. பதிவு கொஞ்சம் நீளமாகியிருந்தால் மன்னிச்சுக்கோங்க.
அப்பா சொந்தங்களைவிட நண்பர்களை நம்புவர். எனக்காக சொத்துக்களை சேர்த்ததைவிட அதிகமாக , துயரங்களில் தோள் கொடுக்கும் நல்ல மனிதர்களை அதிகமாக சேர்த்துள்ளார். அதேப்போல் அவர்களுக்கு தோள் கொடுக்க முதல் ஆளாய் போய் நிற்பார். அப்பாவினால் குணமடைந்தவர்களின் வாழ்த்தும், அவர் அன்பால் சேகரித்த நல் உள்ளங்களின் ஆதரவும், பெற்றோரின் ஆசியும் இருக்கும் வரை எனக்கேது கவலை இவ்வுலகில்...,
என் பெற்றோர்கள் நோய் நொடியின்றி வாழ்ந்து, தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து, என்னை நல்வழி நடத்தி, சிறிதும் வலியின்றி தூக்கத்திலேயே இறவனடி சேரனும்ன்னு நான் ஆண்டவனை வேண்டிக்குறேன். நீங்களும் வேண்டிக்கோங்க ப்ளீஸ்....,
