40 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம், எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ. ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.
அப்பா, நான் இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.
ஏண்டா?
அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?
டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன்.
அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன்.
அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.
தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!
ஆனா, எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.
எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!
நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!
கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன் போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திருமப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.
பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா. விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா...,
எத்தனை ஜென்மம எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்.
மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,
வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....
இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!
இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,
அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!