Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts

Friday, August 03, 2018

ஆனந்தம் பெருக ஆடிப்பெருக்கு விரதம் - அறிவோம் திருவிழா


இன்னிக்கு ஆடி மாசம் பதினெட்டாம் நாள். பதினெட்டு என்பது வெற்றியை குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வதங்கள். பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், குருஷேத்திர போர் நடந்தது 18 நாட்கள், மகாபாரத போரில் ஈடுபட்ட சைனியங்களின் எண்ணிக்கை 18,  சபரிமலையின் படிகட்டுகள் 18.   போகர், அகத்தியர், உள்ளிட்ட புகழ்பெற்ற சித்தர்கள் 18,  நம்மை நல்வழிப்படுத்தும் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை, உட்பட 18 நூல்களை பதினெண்கீழ்கணக்கு என சொல்றோம். மெய் எழுத்துகள் 18... இப்படி பதினெட்டுக்கென பல சிறப்புகள் இருக்கு. அந்த வரிசையில் ஆடி மாதம் 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைக்கும் ஆடிப்பெருக்குன்னு பேரு. இந்த நாளில் ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம்ன்னு அழைப்பாங்க.  

அம்பிகையின் மகிமையை விளக்கும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், இரண்டு காலங்களை யமனுடைய கோரைப்பற்கள் என வியாசர் கூறியிருக்கிறார். அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம்.  அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிடலாம். ஆனா, மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை வரவழைச்சுடும். அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.
தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்காதன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. இதோட அர்த்தம் நாம சொல்லுற மாதிரி அம்மாவை கடுஞ்சொல்லால் திட்டினாலும், தண்ணியை திட்டாதன்னு கிடையாது. தாயை அசிங்கப்படுத்தினாலும், அவளை கவனிக்காம விட்டாலோ அல்லது அவள் அழிவுக்கு காரணமா இருந்தால் தாய் மட்டும் இல்லன்னா அவளோடு சேர்ந்து அவள் குடும்பம் மட்டுமே  பாதிக்கும். ஆனா, தண்ணியை அசிங்கப்படுத்தி, கவனிக்காம விட்டு அதோட அழிவுக்கு காரணமானா நம் வம்சமே இல்லாம போகும். இந்த அர்த்தம் உண்மையா பொய்யான்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....  
பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகிடும். அதுமாதிரி, மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.

ஆடியும், விவசாயமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது. 'ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்' என, நம் முன்னோர் கணித்து 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு. 

புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன் படைத்த சிறந்த காவியம். கதையின் தலைவன் ஆட்டனத்தி, சேரமன்னன். வீரத்துடன், ஆடல் கலையிலும் வல்லவனாக விளங்கினான். இவனிடம் ஆடல் கற்க வந்த மாருதி, ஆதிமந்தி இருவரும் ஆத்தியிடம் காதல் கொண்டனர். அவன் நெஞ்சமோ மாருதியை விரும்பியது. அவளுக்காகவே கரூர் மன்னனுடன் போர் செய்தான். வென்றான். அதற்குப் படை கொடுத்து உதவிய சோழன் கரிகாலனின் வேண்டுகோளுக்காக அவரது மகளான ஆதிமந்தியை மணக்க நேர்ந்தது. மாருதி புத்தத் துறவியானாள். காவிரிப் புதுவெள்ளத்தில் நீராடும்போது ஆத்தியை வெள்ளம் அடித்துச் சென்று கடலில் தள்ளியது. அங்கிருந்த மாருதி அவனை மீட்டுக் காப்பாற்றினாள். தானே மூச்சை அடக்கி உயிர்நீத்தாள். கணவனைத் தேடிக் கரைவழியே வந்த ஆதிமந்தி அவனைக் கண்டாள். இருவரும் மாருதிக்குச் சிலைவடித்துக் காதல் தெய்வமாய் வழிபட்டனர். இது காப்பியக்கதை. பொதுவா நம்மூரில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இறந்துட்டா, அவங்க நினைவு நாளில் காதோலை கருகமணி எனப்படும் ஓலைச்சுருளும், கறுப்பு வளையலும் படைப்பது வழக்கம். மாருதியின் நினைவினால்தான் இந்நாளில் இதை வச்சு படைக்குறாங்க.
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின்மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார்.  அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன். 
ராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்லநேர்ந்ததுராமன் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தல்பலர் கொல்லப்பட்டதால் ராமனுக்கு பிரம்மஹத்திதோசம் பிடித்துக்கொண்டது.  இந்த தோசத்திலிருந்து தான் விடுபட என்ன செய்ய வேண்டுமென வசிஷ்ட முனிவரிடம் ராமன் கேட்டான்.  இந்த பாவத்திலிருந்தும், தோசத்திலிருந்தும் விடுபட காவிரியில் ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உன்னை பிடித்திருக்கும் தோசங்கள் நீங்குமென கூறினார் வசிஷ்டர். முனிவர் கூறியது போல ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி தன் பாவத்தை போக்கிக்கொண்டார்.  


இந்நாளில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், அவர்தம் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்திட்டு, தங்களால் முடிந்த புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், நகை, பாத்திரமென சீர் செய்வர். சாதாரண மனிதனே இவ்வாறு சீர் செய்யும்போது , காவிரியை தங்கையாய் ஏற்றுக்கொண்ட ரங்கநாதர் சும்மா இருப்பாரா?!

தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது. அதன் நினைவாகவே இன்றும் சகோதரிக்கு சகோதரர்கள் ஆடிச்சீர் செய்வது.(எத்தனை பதிவு போட்டும்,எத்தனை கெஞ்சியும்,எனக்கு ஒருபயலும் ஒருஸ்பூன்கூட வாங்கிக்கொடுக்கல) அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்குசீர் வரிசையை கொண்டு   வருவார்கள்அதை பெருமாள்முன் வைத்து, உங்கள் தங்கைக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கும் சீரை பாருங்கள் என காட்டுவார்கள்.  அதன்பின் தீப ஆராதனையும் செய்வார்கள். அதன்பின், புடவை, தாலிப்பொட்டு, பூ,பழம், வெற்றிலை, பாக்கு என அத்தனையையும் காவிரியில் மிதக்க விடுவர்.    .
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக  இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில்  வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
அம்மன் கர்ப்பவதி என்பதால் அவள் நாவுக்கு சுவையாய் புளிசாதம், எலுமிச்ச சாதம், மாங்காய் சாதம், ஊறுகாய், வடை, பாயாசம், கற்கண்டு சாதம், சர்க்கரைபொங்கல்ன்னு விதம் விதமா கொண்டு வந்து நைவேத்தியம் செய்து மத்தவங்களுக்கு கொடுத்து குடும்பத்தோடு காவிரிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

எங்க ஊரில் ஆறு இல்லன்னு சொல்றவங்களும் சரி, ஆறிருந்தாலும் அதில் தண்ணி இல்லன்னு சொல்லும் என்னைய மாதிரி ஆளுங்களும் சரி மனசை தளரவிடாம  ஒரு செம்பில் அரைத்த மஞ்சள் கலந்த நீரை, திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்கனும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போடனும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து,  காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. 

கல்கியின்  பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்நாளில்தான். ராஜராஜசோழன் பெருமை இருக்கும்வரை வந்தியத்தேவனின் புகழும் மறையாம இருக்கும். அதேப்போல, அந்நிய ஆட்சியை எதிர்த்தும், தமிழர் நிலத்தை தமிழரே ஆளும் பொருட்டும் போர் புரிந்து, பல போர்களில், வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த தீரன் சின்னமலை, அவர் தம்பி மார்கள் தம்பி, கிலோத்தர் மற்றும் வீரத் தளப‌தி கருப்பன் சேர்வை தூக்குக்கயிற்றை முத்தமிட்ட தினமும் இன்றுதான். அட்சய திருதியை விட இன்னாளில் நகை, பொருட்கள், தொழில் தொடங்க நல்ல நாள். ஏன்னா பெருக்குதல், சுத்தம் செய்தல் என பொருள்படும். 
இந்த ஆடிப்பெருக்கு நாளில் பிள்ளைகள் சப்பரமிடுதலும் ஒரு சடங்கு. ஒரு குட்டி வண்டியில் கலர் பேப்பர் எல்லாம் ஒட்டி சப்பரம் ரெடி பண்ணுவாங்க. யார் சப்பரம் கெத்தா இருக்குன்னு போட்டியும் நடக்கும். இந்த ஆடிப்பெருக்கில் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைத்து கொண்டு அடுத்த வருடத்தில் ஆடி காரில் வர்ர அளவுக்கு நம் வளர்ச்சி பெருகட்டும்.

நன்றியுடன்,
ராஜி

Thursday, October 12, 2017

மயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை

செப்.19 மாலை 5மணிக்கு என்னை கட்டுன மனுசன்கிட்ட இருந்து போன்.. மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டத்துக்கு போக ஆஃபீஸ்ல முடிவாயிருக்கு. நீயும் பிள்ளைங்களும் வர்றீங்களான்னு.. ஊர்ப்பயணம்ன்னா நமக்கு கசக்குமா?! கூடவே நாமதான் மூட்டை, மூட்டையா பாவத்தை சேர்த்திருக்கோமே! காவிரி புஷ்கரணில முங்கி எந்திரிச்சாவது போகட்டும்ன்னு உடனே ஓகே சொல்லிட்டேன்.. சோத்து மூட்டையை கட்டிக்காத.. கடையில் சூடா வாங்கிக்கலாம்.. நைட் பதினோரு மணிக்கு கார் வரும். அதுக்கு தகுந்த மாதிரி ரெடியாகுங்கன்னு சொல்லிட்டாங்க.
அவுக, நானு, பசங்கன்னு சரியா பத்து மணிக்குலாம் ரெடியாகி உக்காந்திருந்தோம். சரியா 11 மணிக்கு கார் வந்திச்சு. அவருக்கு தெரியாம வீட்டுல இருந்த பண்டம், தண்ணி ஒரு பத்து லிட்டர்க்கு மேலன்னு எடுத்து வச்சிக்கிட்டேன். அவுக ஆஃபீசில் இருந்து தனசேகர் சார் வந்தார். அங்கிருந்து நேரா அவுக கூட வேலை செய்யும் சரஸ்வதின்றவங்க வீட்டுக்கு போய் சரஸ், அவங்க ரெண்டு பசங்கன்னு ஏத்திக்கிட்டோம். அடுத்து மாலா வீட்டுக்கு.. மாலாவும் அவங்க மகளும் வந்தாங்க. நானு, சரஸ், மாலா, மாலாவோட பொண்ணுங்கலாம் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ். இதுக்கே வண்டி பிதுங்கிச்சு. அடுத்து இன்னொரு ஜெகதீசன் சார் வீட்டுக்கு போச்சு. அங்க அவர் மட்டுமே! கார்ல இடம் பத்தலை. அதுக்குள்ள கார் டிரைவர். இதுவே அதிகம் யாராவது போலீஸ் பார்த்தா எனக்குதான் டேஞ்சர்ன்னு சொன்னார்., சரி வேற வண்டி அரேஞ்ச் பண்ணிக்கலாம்ன்னு பல இடத்துலயும் ட்ரை பண்ணியும் வேற வண்டி கிடைக்கல. சரிங்க சார். நீங்கலாம் போங்கன்னு தீர்த்தம் மட்டும் கொண்டு வாங்கன்னு சொல்லி தனசேகர் சாரும் ஜெகதீசன் சாரும் இறங்கிட்டாங்க. விழுப்புரம், நெய்வேலி வழியா மயிலாடுதுறைக்கு கிளம்பினோம். நெய்வேலி சுரங்கத்துக்கெதிரே டீக்கடையில் டீ சாப்பிட்டோம். நமக்கு எப்பயும்போல டபுள் ஸ்ட்ராங்கோடு சர்க்கரை தூக்கலா காஃபி. எல்லோரும் தூங்க.. எப்பயும்போல தூக்கம் வராம நான் மட்டும் டிரவரோடு மொக்கை.. தூக்கம் வராம இருக்க மனுசன் இளையராஜா பாட்டு போடுவார்ன்னு பார்த்தா தேச.மங்கையர்கரசி பேச்சை போட்டு விட்டாரு :-(
அதிகாலை நாலு மணிக்கு மயிலாடுதுறைல கொண்டு போய் விட்டாரு. காலைக்கடன் முடிக்க, உடை மாற்ற மறைவிடம்ன்னு ரொம்ப சிரமம். அதுக்கு தகுந்த ஏற்பாட்டை அரசு செய்யல. பிரம்ம முகூர்த்தத்துல நீராடனுமாம். எங்களோட வந்தவங்க இந்த தண்ணிலயான்னு ஜகா வாங்க. அல்லாத்தையும் இழுத்துக்கிட்டு போய் எல்லா இடத்துலயும் தண்ணி மோண்டு அதுங்க தலையில் ஊத்தி இழுத்துட்டு வந்தேன். நாங்க பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி கரையேறும்போது ஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீர்த்தவாரில கலந்துக்க துலாக்கட்டத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீர்த்தவாரில கலந்துக்கிட்டு மீண்டும் தன் ஆலயத்துக்கு திரும்பும்போது அம்மனுக்கு அணிவிச்ச வளையலை அங்கிருக்கும் பெண்களுக்கு பிரசாதமா கொடுத்தாங்க. வீட்டிலிருந்து கிளம்பும்போதே, கடவுளே! நான் ஒரு வேண்டுதலோடுதான் வரேன். நான் வீட்டுக்கு வர்றதுக்குள் நிறைவேறுமான்னு எனக்கு குறிப்பால் உணர்த்தனும்ன்னு சொல்லி வேண்டிக்கிட்டுதான் வந்தேன். அதேப்போல, அம்மன் பிரசாதம் வாங்கும்போது, நான் நினைச்சது நடக்கும்ன்னு எனக்கு நீ உறுதியளிக்குறதா இருந்தா சிவப்பு கலர் வளையலை கொடுத்து ஆசிர்வதிக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன். முதல் கூடைல இருந்த வளையல்லாம் தீர்ந்துடுச்சு. மனசு சோர்ந்து போய்ட்டேன். எங்கிருந்தோ இன்னொரு கூடைல கொண்டு வந்த வளையலை அங்கிருக்கும் பெண்கள்கிட்ட கொடுத்துக்கிட்டே வந்தவங்க.. இதை கவனிக்காம நின்னிட்டு இருந்த என்னை வளையலை கொடுக்க கூப்பிட்டாங்க. சுத்தமா நம்பிக்கை அத்துடுமோன்னு மருகிட்டே போனா... என் கையில் சிவப்பு நிறை வளையல் வந்து விழுந்துச்சு! ஐ ம் ஹாப்பி முத்தாட்சி மேடம்! முத்தாட்சி ஈஸ் கிரேட்.
(அம்மன் கொடுத்த வளையலும்.. கஞ்சியும்...)
அனைத்து உயிர்களுக்கும் அம்மாவாச்சே! என் மனசுக்கு இதமா வளையலை கொடுத்தவ, வயித்துக்கும், குளிருக்கும் இதமா மூலிகை கஞ்சியை சுடச்சுட அங்கிருக்கும் பக்தர்கள் மூலமா எனக்கு கொடுத்தா. முத்தாட்சி ஈஸ் டபுள் கிரேட்... அப்புறம் அங்கிருந்து.. கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பிரம்மன் கோவில்ன்னு பார்த்துட்டு ஹாப்பியா வீடு வந்து சேர்ந்தேன்.. அதுலாம் தனிப்பதிவா வரும்...
மயிலாடுதுறைல இருந்து நேரா கூத்தனூர் சரஸ்வதி கோவில்... கல்வி எத்தனை முக்கியமானது?! கல்விச்செல்வத்துக்கு உரிய கலைவாணி கோவில் பராமரிப்பின்றி இருக்கு. இத்தனைக்கும் சரஸ்வதிக்கென கோவில் தமிழகத்துல ஒன்றிரண்டுதான். அதுக்கே இந்த லட்சணம்... அங்கயே காலை டிஃபன். மிக சின்ன ஹோட்டல். சுத்தமா இருந்துச்சு.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படுது. சுவை சுமார்தான். வெங்கல டபராவில் காஃபி கொடுக்குறாங்க. என் சின்ன மகளுக்கு இது புதுசு. என்னைய மாதிரி வெளில காஃபி குடிக்காதவ அன்னிக்கு கேட்டு வாங்கி சாப்பிட்டா...
அங்கிருந்து பத்து நிமிட பயணம்... திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில்...மனசுக்கு அமைதியை கொடுக்குது இத்தலம். லலிதா சகஸ்ரநாமம் உருவான தலமாம்... பழக்கப்பட்ட துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், வினாயகர்லாம்கூட புது வடிவில்.... அங்கிருக்கும் எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிற்பம் மேலிருக்கும் சிற்பம்... நேரடியா பார்த்தால் சிவன் பார்வதியை சமாதானப்படுத்தும் பாவம், இடப்பக்கம் சிவனுடன் ஊடல் கொண்டாடி பார்வதி கோபமாய் இருக்கும் பாவம்.. வலப்பக்கத்திலிருந்து பார்த்தால் சிவனின் பேச்சைக்கேட்டு சமாதானமாகி புன்முறுவல் செய்யும் பாவம்... பார்வதி ஏன் கோவமாய் இருக்கான்னு திருமியச்சூர் பதிவில் பார்க்கலாம்... கோவிலில் ஒரு பெரியவர் கேக்காமயே கோவிலோட சிறப்புகள், சிற்பத்தை பத்தி பொறுமையா சொல்லிக்கிட்டு வந்தார்,.டீ செலவுக்கு வச்சிக்கோங்கன்னு சொல்லியும் பைசா வாங்க மறுத்திட்டார்.

என் உலகம்லாம் ரொம்ப சின்னது.... தஞ்சை, மகாபலிபுரம், சென்னை,  கன்னியாகுமரி, எங்க குலதெய்வம் இருக்கும் ஊர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்... இது மட்டுமே எனக்கு நினைச்சாலே புத்துணர்ச்சி தரக்கூடியது. ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம்  தஞ்சை பெரிய கோவிலைவிட கலை நயமிக்கதுன்னு படிச்சாலும் மகனைவிட அப்பாவே என்னை கவர்ந்தவர். இத்தனைக்கும், அருள்மொழிவர்மருக்கு முன்னாடியே ராஜேந்திர சோழந்தான் எனக்கு அறிமுகம்.  என் ரொம்ப நாள் ஆசை முழுநிலவு நாளில் தஞ்சை பெரிய கோவிலில் தனிமையில் வானதிம் பூங்குழலி, சேந்தன் அமுதன், வந்தியதேவன், நந்தினி, ஊமைராணி, சுந்தர சோழன், பழுவேட்டாரையாரோடு ஒரு கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் போடனும்ன்னு.... 
அங்கிருந்து ஸ்ரீரங்கம்..  கலை அழகு கண்ணுக்கும், இறை நாமம் காதுக்கு மட்டுமே விருந்தளிக்கும். ஆனா வயித்துக்கு?! ஹைவேஸ்ல இருக்கும் அடையார் ஆனந்த பவன்தான்  விருந்தளித்தார்.   இப்பத்திய பசங்களுக்கு ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் மட்டும்தான் பிடிக்குது.. சாம்பார் சாதம், ரசம் சாதம்லாம் பிடிக்காதுப்போல! 
மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் காவேரிக்கரை... காலைல மயிலாடுதுறையில் குளிச்ச தண்ணி  உடலெல்லாம் பிசுபிசுப்பு... ஒரு மாதிரி அன் ஈசியாதான் இருந்துச்சு. காவிரியில் தண்ணி ஓடுனதை பார்த்ததும் குளிக்கலாம்ன்னா சளி பிடிச்சுக்கும்ன்னு சொல்லி யாரும் வரல. எங்க குடும்பமும், ட்ரைவர் மட்டுமே குளிச்சோம்.  யானைக்குட்டிங்க போல தண்ணிய விட்டு எழுந்துவர மனசே வரல.   ( நான் எங்க இருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்..)
எனக்கும் ஸ்ரீரங்கனுக்கும் எப்பயுமே ஏழாம் பொருத்தம் !! எப்ப போனாலும் என்னை பார்க்க ரங்கு அப்பாயின்மெண்ட் கொடுக்க மாட்டாப்ல. நாங்க போனது புரட்டாசி மாதம் பிறப்பன்று... ஆகா! புரட்டாசி தொடக்கத்தில நாம பகவானை கும்பிடப்போறோம்ன்னு ஆசையாய் போய் லைன்ல நின்னா அங்கிருந்த போலீஸ்கார், கோவில் தரிசனத்துக்கு 7 மணிக்குதான் திறப்பாங்க. நீங்க சாமி கும்பிட எப்படியும் 9 மணிக்கு மேல ஆகிடும்ன்னு சொல்லி எச்சரிச்சார். மறுநாள் பிள்ளைகள் கல்லூரி, பள்ளிக்கு போகனும்ன்னு நாங்க ரங்கனை பார்க்காமயே வந்திட்டோம். வைகுண்டத்துலதான் அவனை சந்திக்கனும்ன்னு இருந்தா விதி விடவா போகுது?!
எந்த ஆன்மீக சுற்றுலாவா இருந்தாலும் பெரும்பாலும் மும்மூர்த்தில சிவன், விஷ்ணுவை தரிசிப்பாங்க. இது பிளான் பண்ணாலும் பண்ணலைன்னாலும் அப்படிதான் அமையும். சரி, மும்மூர்த்திகளில் ரங்கனைதான் பார்க்க முடில பிரம்மனையாவது தரிசிப்போம்ன்னு சொல்லி அடுத்து வண்டிய திருப்பட்டூர் பிரம்மன் கோவிலுக்கு விடச்சொன்னோம். ரொம்ம்ம்ம்ப நாள் ஆசை இந்த கோவிலுக்கு போகனும்ன்னு...  ஏழு மணிக்கு கோவில் சாத்திடுவாங்கன்னு அடிச்சு பிடிச்சு போனோம்... 
நாங்க போன நாள் பிரதோச தினம்.. அப்பதான் பிரதோச அபிசேக ஆராதனை முடிஞ்சு சிவன் ஆய்ஞ்சு ஓய்ஞ்சு நந்தியம்பெருமானோடு உக்காந்தார். அவர்கிட்ட போய் ஒரு ஹலோ போட்டுட்டு.. பிரம்மனை தரிசிச்சிட்டு 9 மணிக்கு ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சோம். ஹைவேஸ் ஆரிய பவன்ல சில்லி பரோட்டா, நான், நூடுல்ஸ், சோலோ பூரின்னு பசியாத்தியாச்சு. இதுமாதிரி டூர் போகும்போது, கடைசி நாள் அன்னிக்கு வீட்டுக்கு திரும்பும்போது  பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றி சொல்லி  சின்னதா ஒரு கிஃப்ட் வாங்கி, கொடுப்பது வழக்கம். அந்த ஹோட்டல்ல மண்ணாலான குயில் பொம்மை இருந்துச்சு. அப்படியே ஊதுனா சாதாரண விசில் சவுண்டும், குயிலோட வால் பகுதியில் இருக்கும் துளையில் தண்ணி ஊத்தி ஊதுனா குயில் மாதிரியும் சத்தம் வரும். அந்த குயில் பொம்மையை ட்ரைவரோட குழந்தைகளுக்கு கிஃப்டா கொடுத்தனுப்பிச்சேன். கூடவே என் மகனுக்கும் ஒன்னு வாங்கியாச்சு. ஏன்னா அவன் எங்களோடு வரல. திடீர்ன்னு கிளம்புனதால குழந்தைய கூப்புட்டுக்க முடில.. 
கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவி, தஞ்சை, ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பத்தி தனித்தனி பதிவா வரும்.  காவேரி புஷ்கரணி போய் ஒரு மாசமாச்சு . இதானா ராஜி உன் டக்குன்னு கேக்காதீங்கப்பா. நவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள், ஆயுத பூஜை கொண்டாட்டம், காய்ச்சல்ன்னு.. அத்தனை பிசி... படங்கள் மொபைல்ல எடுத்தது, என் கேமரா கிழ விழுந்து உடைஞ்சிட்டுது.. அது ரிப்பேர் பண்ணுற வரை இப்படிதான்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.