Monday, March 05, 2018

கொத்தமல்லி சாதம் - கிச்சன் கார்னர்

சமைக்குறது ஒரு இம்சைன்னா பள்ளி, கல்லூரி செல்லும் பசங்களுக்கு சமைக்குறது படு இம்சை. சாம்பார், காரக்குழம்பு, பொரியல்ன்னு விதம் விதமா ஆரோக்கியமா  சமைச்சு கொடுத்தாலும் மூணு நாலு டப்பாக்கள் திறந்து பிசைஞ்சு சாப்பிட சோம்பேறித்தனம். டைமும் இருக்காது. அதேநேரம் தேங்காய் சாதம், புளி சாதம், புலாவ், மாதிரி வெரைட்டி சாதம்ன்னா ஸ்பூன்ல அள்ளிக்கொட்டிக்கிட்டு போய் வேலைய பார்க்கும். அதுகளுக்கு ருசியா சமைச்சு கொடுக்க நினைக்கும் அதேநேரத்தில் அதுங்க ஆரோக்கியத்தையும் மனசுல வச்சு சமைக்க வேண்டி இருக்கு.  

இப்ப கொத்தமல்லி சீசன். பத்து ரூபாய்க்கு பெரிய கட்டு கொடுப்பாங்க. கொ.மல்லி சட்னி, துவையல்ன்னு செய்யும் அதேநேரம் கொத்தமல்லி சாதம் செஞ்சு கொடுத்தா பசங்க சந்தோசப்படும். அதுங்க ஆரோக்கியம் கெடாதுன்னு நமக்கும் ஒரு சந்தோசம். இது செய்ய ரொம்ப ஈசியும்கூட...

தேவையான பொருட்கள்...
உப்பு போட்டு உதிர் உதிரா வடிச்ச சாதம்..
வாடாத கொத்தமல்லி 
பச்சை மிளகாய்
உரித்த பூண்டு பற்கள்.
இஞ்சி
பெல்லாரி வெங்காயம்,
காய்ந்த மிளகாய்
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
வேர்கடலை
எண்ணெய்
உப்பு..

கொத்தமல்லிய வேர் நீக்கி மண் போக சிலமுறை அலசி தண்ணிய வடிச்சுக்கோங்க.  அத்தோடு ப.மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு கொரகொரப்பா அரைச்சுக்கோங்க.  வெங்காயத்தை சுத்தம் செஞ்சு நீளவாக்கில் அரிஞ்சுக்கனும். 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிஞ்சதும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை போட்டு சிவக்க விடனும்.  காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டுக்கோங்க.
எல்லாம் சிவந்ததும் அரிஞ்சு வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.
வெங்காயம் நல்லா வதங்கினதும் அரைச்சு வச்சிருக்கும் கொத்தமல்லி விழுதை சேர்த்துக்கோங்க. 
தேவையான உப்பை சேர்த்து கிளறி விடுங்க....

கொத்தமல்லி விழுது பச்சை வாசனை போனதும் ஆற வச்சிருக்கும் சாதத்தை சேர்த்து கிளறிக்கனும். தேவைப்பட்டா எலுமிச்சை சாறு சேர்த்துக்கலாம்.

சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சாதம் தயார். அப்பளம், வடகம் சைட் டிஷ்சா இருந்தா இன்னும் ஜோர். வெங்காய பச்சடியும் ஓகே.

சிறு செடி வகையை சேர்ந்த இந்த கொத்தமல்லி சமையலுக்கு மணமூட்ட பயன்பட்டாலும் சிறந்த மூலிகையாவும் செயல்படுது. இது அதிகபட்சம் 50செமீ வளரும். இந்தியா முழுக்க பரவலா பயிரிடப்பட்டாலும், கொத்தமல்லியை கண்டுபிடிச்சது இஸ்ரேலில்தான். இது கிட்டத்தட்ட 8000 வருசமா பயன்படுத்தப்படுது. தண்டு, இலை, வேர், விதைன்னு  பயன்படுத்துவாங்க. விதைக்கு மல்லி விதை, தனியான்னு பேரு.  கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு  மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கு. கொத்தமல்லி, மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும்.  சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதை அதிகம் உண்பதால் மந்தத்தன்மை உண்டாக்கும்.  கொத்தமல்லியை, சட்னி, துவையல், தொக்கு, ஜூஸ்ன்னு உள்ளுக்குள் சாப்பிடுற மாதிரி கொத்தமல்லி சாற்றை அழகுக்காக மேல்பூச்சாகவும் பூசுறாங்க.

அடுத்த கிச்சன் கார்னர்ல ஈசியான ஒரு ரெசிப்பி எப்படி செய்யலாம்ன்னு பார்க்கலாம்.....

நன்றியுடன்,
ராஜி.

Saturday, March 03, 2018

கின்னசில் இடம்பெற்ற பெண்கள் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் திருவிழா


கார்த்திகை மாசம் ஆண் பக்தர்களால் கேரளா களைக்கட்டும். மாசி மாசம் பெண்பக்தர்களால் களைக்கட்டும்.  கார்த்திகை மாசம் என்ன விசேசம்ன்னு உங்களுக்குலாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனா, மாசி மாசம் என்ன விசேசம்?! அது பெண் பக்தர்கள்ன்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்காது.  விசேசம் என்னன்னு தெரிஞ்சவங்க நான் சொல்லுறதுலாம் சரியான்னு பாருங்க. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.


பெண்களின் சபரிமலைன்னு பேரெடுத்த ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே பொங்கல் வைக்கப்படுது.  இந்த கோவில் சுத்தி கிட்டத்தட்ட 15கிமீ தூரத்துக்கு அதாவது திருவனந்தபுரம் நகர் முழுக்க தெரு, சந்துபொந்துன்னு எல்லா இடத்துலயும் பொங்கல் வைப்பாங்க. இந்த பொங்கல் வைக்கும் திருவிழா கின்னஸ் ரெக்கார்ட்ல இடம் பெற்றிருக்கு.


 1997-ல் பிப்ரவரி 23-ம் தேதி நடந்த பொங்கல் வைபவத்தில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டதாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பொங்கல் விழா முதலில் இடம் பிடித்தது. பின் அது 2009 மார்ச் 10ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 30 லட்சம் பெண் பக்தைகள் கலந்து கொண்டதாக முன் சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மீண்டும் இடம் பிடித்தது.   அங்க  ஏன் பெண்கள் மட்டும் பொங்கல் வைக்குறாங்க?! ஏன் ஆம்பிளைகளுக்கு இடமில்ல...  பொங்கல்ல என்ன சிறப்பு?! தமிழகத்துலகூடதான் வித விதமான பொங்கல் வைக்கும் வைபவம் நடக்குது ன்னு யோசிக்குறவங்களுக்கு பதில் இதோ......
கேரளம் உருவெடுக்க காரணம் பரசுராமர். அவர், 108 சிவாலயங்களையும், 108 அம்மன் கோவில்களையும் உருவாக்கினார். கேரளாவில் அம்மன் கோவில்கள் நிறையவே இருந்தாலும் தனிப்பட்ட பெயரால் அழைக்கப்படுவதில்லை. கோவில் அமைந்திருக்கும் இடப்பெயருடன்  பகவதி சேர்த்தே அழைப்பர்.

பராசக்தியின் பக்தர் ஒருவர், ’’கிள்ளி” என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணிய அந்த பக்தர் சிறுமியை கண்டு உருகி நின்றார்.  கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ”என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு போய்விட முடியுமா? என்று கேட்டாள். அவ்வாறே மறுகரையில்  கொண்டு போய் சேர்த்தார். ஆனால், சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார். 



அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள்.  மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு. 
இக்கோவிலை பற்றிய மற்றொரு கதை....


கற்புக்கரசியும், சிலப்பதிகாரத்தின் நாயகியுமான கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்றும் கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல, என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி.  பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினார்ன்னும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறதுன்னும் சொல்றாங்க. 

தனது வெஞ்சினப் பார்வையினால் மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக பெண்கள், தேவிக்கு பொங்கல் படைத்து நைவேத்யம் செய்வதாக ஓர் ஐதிகம். மகிஷாசுரவதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை பெண் பக்தைகள் பொங்கல் நைவேத்யம் சமர்ப்பித்து வரவேற்றனர் என மற்றொரு கதையும் உண்டு. பொங்கலுக்கு புதுமண்பானை, பச்சரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வசக்தி சொரூபிணியான ஆற்றுக்கால் அம்மாவை நினனத்து விரதசுத்தியுடன் தவமிருந்து அஷ்டசித்தி பெற்றிடவே பெண்கள் பொங்கல் படைக்கின்றனர்.



விரதமிருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு ஆண்கள் செல்வது போல, கேரள மற்றும் கேரள தமிழக எல்லை வாழ் பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி இக்கோவிலுக்கு செல்கின்றனர். அதனால் இக்கோவில் பெண்களின் சபரிமலைன்னு பெயர் பெற்றது. கேரளத்து மக்கள் பகவதி அம்மனை தங்கள் தாயாக பாவித்து தங்கள் இல்லத்து விசேசத்துக்கு அம்மனுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள். ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீ சக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவருக்குப்பின், வித்யாதிராஜ சட்டம்பி  சுவாமிகள் இத்தலத்தில் வெகுகாலம் தங்கி பூஜை செய்துள்ளார்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டுள்ளது. கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 

கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.  மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன. 

அம்மனே பொங்கலிடும் ஐதீகம்;

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள்.  அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர்.  கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் தினமும் பக்தர்கள் பொங்கல் படைத்து வழிபடுவதுண்டு. பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் சமர்ப்பித்து உரிய கட்டணம் செலுத்தினால் கோவிலில் பொங்கல் தயாரித்து அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழங்குவார்கள். 
விழா காலகட்டத்தில் எல்லா தினமும் இரவு தீபாராதனை முடிந்து, நடை சாத்துவதற்கு முன்னால் பலவித வர்ணக் காகிதங்களாலும் குருத்தோலைகளாலும் தீப அலங்காரத்தாலும் அலங்கரிக்கப்பட்டு தேவி சிலையை அதன் நடுவில் அமர வைத்து சுமந்தபடி வழிபாடுகளாக அனேக விளக்குக் கட்டுகள் கோவிலை சுற்றிலும் நடனமாடியபடி வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். ஒவ்வொரு வருடமும் வழிபாடு விளக்குக்கட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


மொத்தம் பத்து நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவின் ஒன்பதாவது நாள் பொங்கல் விடும் வைபவம் நடக்கும். அன்று காலையில் சிறுமிகள் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்தை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்துத் திரும்புவார்கள். இதை 'தாலப்பொலி' என்கிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து தலையில் மலர்க்கிரீடம் சூடி கையில் தாம்பாளம் ஏந்தி அதில் அம்மனுக்கு பூஜைக்குரிய பொருட்கள் வைத்து சிறு தீபம் எற்றிக்கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர் உறவினர்களும் வருவார்கள். இப்படி செய்வதால், அந்த சிறுமிகளுக்கு நோய் நொடிகள் வராது, அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும், எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கை. 

சிறுமிகளின் தாலப்பொலி போல, சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கது. அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் மகிஷாசுரமர்த்தினியின் காயமடைந்த போர் வீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை பூஜாரியிடம் பிரசாதம் பெற்று கோவிலில் தனி இடத்தில் ஏழு தினங்கள் தங்கி விரதம் கடைபிடிக்கின்றனர். நீராடி அம்மன் சன்னிதானத்தில் ஈர உடையுடுத்தியபடி ஏழுதினங்களில் 1008 நமஸ்காரத்தை முடித்திருக்க வேண்டும்.  இந்த குத்தியோட்டம் எனும் விரதத்தை சிறுவர்கள் கடைபிடிப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. பொங்கல் தினத்தன்று சிறுவர்கள் முருகன் கோவிலில் அலகு குத்துவது போல் விலா எலும்புகளின் கீழ் உலோகக் கம்பி கொக்கியால் குத்தியிருப்பார்கள். பொங்கல் வைத்து முடித்ததும் இவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மன் முன் அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில், அவர்களது உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவு பெறும். 

இத்தனை சிறப்பு வாய்ந்த, கின்னசில் இடம்பெறும் பொங்கல் விழாவில் சாதி மத பேதமில்லாம எல்லாரும் கலந்துக்கலாம். வாய்ப்பு கிடைக்கும்போது நாமும் கலந்துப்போம்.
படங்கள்லாம் கூகுள்ல சுட்டது..
நன்றியுடன்,
ராஜி.

Friday, March 02, 2018

கண் திருஷ்டி நீங்க வழிப்பட வேண்டிய கோவில் - திருவலஞ்சுழி



கல்லடி பட்டாலும் கண்ணடிப்படக்கூடாதுன்னு சொல்வாங்க. எப்பேற்பட்ட ராஜ்ஜியமும் கண்ணடிப்பட்டா சரிஞ்சு போகும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறுன்னும் சொல்வாங்க. நம்மை பார்த்து பொறாமைப்படும் ஒருவர் அதிக வயித்தெரிச்சலுடன் பார்க்கும்போது கண் திருஷ்டி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி பொல்லாத கண் திருஷ்டி போக வழிப்பட வேண்டிய கோவில், தஞ்சை மாவட்டம் சுவாமிமலைக்கு அருகில் இருக்கும் திருவலஞ்சுழி, ஸ்ரீபரஹந்தநாயகி சமேத ஸ்ரீகபர்தீஸ்வரர்  கோவில் உடனுறை வெள்ளை வினாயகர் கோவில் ஆகும்.  அக்காலத்தில் மன்னர், அமைச்சர்ன்னு படா படா ஆளுங்கலாம் வழிப்பட்டதால் இக்கோவிலுக்கு கோட்டை கோவில்ன்னு இன்னொரு பேரும் உண்டு. 

திருவலஞ்சுழின்னு சொன்னதும் நம்ம நினைவுக்கு வருவது வெள்ளை வினாயகர் ஆகும்.  ஆனா, இக்கோவில் பெரியநாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும். கூட்டம் அதிகமில்லாத பரப்பரப்பு இல்லாத சுத்தமான   பிரம்மாண்டமான கோவில் இது.  கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர், கோட்டை விநாயகர்ன்னு சொல்லப்படும் ஸ்வேத வினாயகர் சன்னிதி

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும்முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால், ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. பல்வேறு அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து...,  பொங்கி வந்த கடல்நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின்னரே அமுதம் பெற்றதாக புராணங்கள் சொல்லுது. தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். 
இங்குள்ள வினாயக உற்சவ மூர்த்தமானது ஸ்ரீவாணி, கமலாம்பிகா சமேதராய் அருள்பாளிக்கிறார்.  இந்திரனும் விஷ்ணுவும் வணங்கும்வண்ணம் எழுந்தருளியிருக்கிறார். புராண காலத்துக்கு அப்பாற்பட்டவர். மகாபாரதம் எழுதும்பொருட்டு எழுத்தாணி வேண்டியும், கஜமுகாசூரனை அழித்திடும்பொருட்டும் ஆயுதம் வேண்டியும் தன் ஒரு பக்கத்து தந்தந்தை உடைத்திடும்முன் உருவானவர் என்பதால், இவருக்கு இரண்டு தந்தங்களும் உண்டு. 

ஆலயத்தின் முகப்பில் திருஞானசம்பந்தரால் போற்றி வணங்கப்பட்ட கம்பீரமான ஓங்கி உயர்ந்த ஐந்து நிலை கோபுரம். அதனையடுத்து, உட்புறத்தின் வடக்கே ஜடாபுஷ்க்கரணின்ற புண்ணிய தீர்த்தமும், தீர்த்தக்கரையில் திருக்குள வினாயகர் கோவிலும் இருக்கு. 


அபராத மண்டபத்தை அடுத்து காயத்திரி மண்டபம் இருக்கு. வேத மந்திரங்களிலேயே சிறந்ததான காயத்ரி மந்திரத்தின் 24 அட்சர எழுத்துக்கள்  இங்கு தூண்களாய் எழுந்துள்ளதால் இம்மண்டபத்துக்கு இப்பேர் உண்டாச்சு. இந்த காயத்ரி மண்டபத்தின் முன்பு செய்யப்படும் ஜபங்கள் அதீத பலன் தரும்ன்னு சாஸ்திரங்கள் சொல்லுது. மண்டபத்தில் உள்ள ஆறு கருங்கல் குத்து விளக்குகளையும் ஏற்றி வழிப்பட்டால் அனைத்து செல்வங்களும் நம் வாழ்வில் கிட்டும் எனவும் சொல்லப்படுகின்றது.

ஆகமவிதிப்படி ஒவ்வொரு கோவில் அமைப்புக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு. அதன்படி இங்கிருக்கும் வினாயகர் கோவில் இந்திர ரத வடிவத்தில் அமைந்துள்ளது.  இக்கோவிலின் தென்புறத்தில் ரத சக்கரம், அச்சு, கடையாணி மற்றும் குதிரைகள் பூட்டிய வண்ணம் நேர்த்தியாக காட்சியளிக்கிறது. 

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்  ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தான். பிரதான மூர்த்தியாக விளங்கும் ஸ்வேத விநாயகருக்கு ஆடை, ஆபரண, புஷ்ப, திலகங்கள் இல்லாததை பார்த்து, இதுப் போன்று சிலா ரூபங்கள் இருப்பது முரண்பாடாயிற்றே என எண்ணி விளக்கம் கேட்டான். அதற்கு அங்கிருந்தோர், இந்த விநாயகர், தேவலோகத்தில் இருந்து இத்தல விநாயகர், கடல் நுரை கொண்டு தேவாதி தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டு, இந்திரனால் இங்கு கொண்டுவரப்பட்டு, ஈசனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். கடல் நுரையாலானதால் இவருக்கு பச்சை கற்பூரம் மட்டுமே சார்த்தப்படும். . வேறு எந்த அலங்காரமோ, அபிஷேகமோ இல்லை எனக் கூறினார்.  



அதனை  சற்றும் மதியாத மன்னன், அபிஷேக அலங்காரங்களை செய்திடுமாறு கட்டளையிட்டான். அனைவரும் திகைத்தனர். அச்சமயம், அங்கிருந்த மன்னனின் கண்கள் இரண்டும் பார்வை இழந்தன. பின்னர் வருத்தமுற்று விநாயகரை வேண்டிக்கொள்ள பார்வையை திரும்பப் பெற்றான். தான் செய்த தவறினை வரும் காலத்தில் யாரும் செய்துவிடக்கூடாது என, அதன் நினைவாக, ஞாபகச் சின்னமாக கருங்கற்களிலான மண்டபம் ஒன்றை கட்டினான். இதுவே  இப்ப அபராத மண்டபமா இருக்குன்னு ஒரு செவி வழிச் செய்தியும் உண்டு. 

ஸ்வேத விநாயகர் சந்நிதியின் முன் உள்ள சிற்பக்கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி.  இந்தச் சன்னல் போன்ற அமைப்பு மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதாக உள்ளது.  இது 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளையும் கொண்டது. மூன்று பாகங்களாக குறுக்கு வாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது.  இது 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டது, நெடுக்கவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், 4 தூண்கள் நான்கு யுகங்களையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஸ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 10யாளிகள், எட்டு திசைகளுடன் ஆகாயம், பாதளம் என 10 திக்கு நாயகர்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனவும் சொல்லப்படுது. அதனால், இந்த பலகணி வழியாக இறைவனை வணங்குவது  மும்மூர்த்தி உட்பட சகல மூர்த்திகளையும் ஒரே நேரத்தில் வழிப்பட்ட பலனையும் தரும்.

கூகுள்ல சுட்டது
ஸ்வேத வினாயகரை  தரிசனம் செய்துட்டு,  தனிக்கோவிலில் இருந்து அருள் புரியும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜராஜசோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' அன்னை இவங்கதான்னும், ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகை சொல்லுது.  


ஆனா, நிசும்பசூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருப்பவள் அஷ்டபுஜ துர்கை எனவும், இவளைதான் ராஜராஜசோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் சொல்றார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் இவளை யாராய் இருந்தாலும் வணங்கலாம் வாங்க!
ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமில்லை. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கும் இக்கோவில் ஒரு பொக்கிஷம். மார்க்கேண்டயனுக்கு போட்டி போடும் விதமாக லிங்கத்திருமேனியை அணைத்தபடி இருக்கும் உமாமகேஸ்வரி சிலாரூபம் சில அங்குல அடி உயரமே! மூர்த்தம் சிறிதானாலும் அழகு அளவில்லாதது. அதேமாதிரி, இக்கோவிலில் இருக்கும் பாவை விளக்கொன்றின் அழகும் பாராட்ட வார்த்தை இல்லை.   கையிலிருக்கும் விளக்கின் ஒளி, பாவையின் முகத்தில் பட்டு அவள் முகம் பளப்பளப்பது வரை நேர்த்தியாய் செதுக்கி இருப்பாங்க. 



 சுவாமிமலையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது இத்திருத்தலம். காடு, மலை, ஊர்ன்னு எங்கும் நில்லாது தான் சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கச் செய்த காவிரித்தாய் திருவலஞ்சுழி வந்ததும், இறைவனை வலமாய் சுற்றி, மேற்கொண்டு செல்லாமல் ஆதிசேஷன் வெளிப்பட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துக் கொண்டாள். இதையறிந்த அந்நாட்டு மன்னனான கனக மன்னன் திகைத்து,  இத்தலத்து இறவனை வேண்டி நிற்க.., நீயோ, உன் மனைவியோ இப்பள்ளத்தில் புந்தாலோ அல்லது முற்றும் துறந்த முனிவரொருவர் அப்பாதாளத்துள் புகுந்தால்  மீண்டும் காவிரி அன்னை வெளிவருவாள் என அசிரீரி மூலமாய் இறைவன் தெரிவித்தார்.

நாட்டு  மக்களுக்காக, கனக மன்னனும் அவன் மனைவி செண்பகாங்கியும் இப்பள்ளத்தில் புகுந்து உயிர் தியாகம் செய்ய முயன்றதைக் கண்டு  ஏரண்ட முனிவர் தம்மையே தியாகம் செய்து பாதாளத்தினுள் பாய்ந்து காவிரியை வெளி வரச் செய்தார். ஏரண்ட முனிவர் வேண்டுகோளின்படி இரண்டு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த கனகசோழன் 70 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து தன் மகன் சுந்தர சோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்தபின் சிவபதம் அடைந்தார்.



  

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் இத்தலம் விளங்குது.   கோவில் கோபுர சிற்பத்துலயே  இடதுப்புறம் விஷ்ணுவும், வலப்புறம் சங்கரனும் சேர்ந்து சங்கரநாராயணனாகிய நமக்கு அருளும் காட்சியே இதற்குச் சான்று.  தமிழக அரசின் மதிய உணவு திட்டத்துக்கான காய்கறிகள் மற்றும் வாழை இலைகளை இக்கோவில் வளாகத்தில் உள்ளயே பயிரிடப்படுவது மற்றொரு சிறப்பு.   இத்தலத்து ஸ்வேத பெருமாளை வழிப்பட்டப் பின்னரே சுவாமிமலை முருகனை தரிசிக்கனுமாம். ஸ்வேத வினாயகர் என்ற பேருக்கு வெள்ளை வாரணப் பிள்ளையார்ன்னு அர்த்தமாம்.  இது ஒரு பரிகார தலம். திருமணத்தடை நீக்கும் தலமாவும் இருக்கு. 

வேழமுகத்தோனை வணங்குவோம்! 

நன்றியுடன்,
ராஜி.  

Thursday, March 01, 2018

ஒரே நாளில் ஏழு கடலில் நீராட வேண்டுமா?! - மாசி மகம்


மகத்தில் பிறந்தால் ஜெகத்தினை ஆளலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தாலே அச்சிறப்புன்னா அந்நன்னாளில் இறை பக்தியோடு தானங்களை செய்தால்  அதன் நன்மைகளை அளவிட முடியுமா?!  எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும்  மகம் நட்சத்திரத்திற்கென்று தனிச் சிறப்புண்டு... மூலோகத்திலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் காசியினில் பாயும்  கங்கையில்  நீராடினால் போகும்.. அவ்வாறு மக்கள் கழுவிய பாவங்களால் பீடிக்கப்பட்ட கங்கை மற்றும் யமுனை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி  உட்பட பனிரெண்டு நதிகள் கும்பகோணத்திற்கு வந்து புனிதமாகும் நாளே இம்மாசி மகம்.  

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.  கோவில்களில் வெகுவான  திருவிழாக்கள் நடப்பது பௌர்ணமி .. பௌர்ணமி எந்த திதியில் வருதோ அத்திதியை கொண்டே தமிழ்மாத பெயர்கள் அமையும்.  மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருவதால் ’மாக மாதம்’ என்றும் அழைக்கப்படுது.  உமாதேவி பிறந்தது மாசி மாதத்தில்.

 பராசக்தியே தன் மகளாய் அவதரிக்கவேண்டும் என சிவப்பெருமானை நோக்கி தவமிருந்தார். அந்த தவத்தின் பயனாய்  மாசிமாத மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாய் தாட்சாயணி அவதரித்தாள்.மக நட்சத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் செல்வம்  ஞானம், முக்தியை தருபவர்.


வருண பகவானுக்கு அருளல்...
வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.வருணபகவான் சிறைப்பட்டிருந்ததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. நீரின்றி உயிர்களனைத்தும் தவித்தன. வருண பகவானை வேண்டி மக்கள் இறைவனை வேண்ட,  சிறையிலிருந்தே தன்னை விடுவிக்கும்படி வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான் சிவப்பெருமானிடம், அன்றைய  தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
பித்ரு கடன் செய்ய...
மக நட்சத்திரத்தை ”பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பர். உலகத்தை உருவாக்கும்முன் இந்த பித்ருதேவனை படைத்தப்பின்தான் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்தான்.  இந்த பித்ருதேவாதான் எல்லா உயிர்களுக்கும் ஆத்ம சாந்தியை அருள்கிறது. நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால்தான் நம் குலம் தழைக்கும். இந்நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதோடு, பித்ரு கடனையும் செய்யலாம். 

வல்லாள மகாராஜா....
திருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார். வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாகவும் அருளினார்.

சிவப்பெருமானின் திருவிளையாடல்...
பராசக்தி ஒருமுறை  திருவேட்டக்குடி என்ற இடத்தில் மீனவக்குலத்தில் மீனவர் தலைவன் மகளாய் பிறக்க,  திருமணப்பருவம் வந்ததும், அவளை மணக்கவேண்டி, மீனவன் வேடத்தில் சிவப்பெருமான் தோன்றி, கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு தொல்லை தந்த  தன்னால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை அடக்கி பார்வதிதேவியை மணந்தார். அப்போது மீனவர் தலைவன் தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்கவேண்டுமென வேண்ட, ஒவ்வொரு மாசிமகத்தன்று நீராட வருவேன் என வாக்கு கொடுத்தார்.  மாசிமகத்தில் திருவேட்டக்குடியில் அம்பிகை மீனவபெண் வடிவத்திலும், ஐயன் வேடமூர்த்தி அலங்காரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வர்.

சமுத்திரராஜனுக்கு கொடுத்த வரம்...
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டபோது மகாலட்சுமி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்து சமுத்திர ராஜனுக்கு மருமகனானார்.  மகா விஷ்ணுவை மருமகனாய் அடைந்த மகிழ்ச்சியைவிட மகளும், மருமகனும் வைகுந்தம் சென்றுவிட்டால் பார்க்க இயலாதே என வருத்தம் கொண்டார் சமுத்திரராஜன்.  தந்தையின் வருத்தத்தினை கணவரிடம் மகாலட்சுமி சொல்ல..... வருடத்திற்கொரு முறை தானே கடற்கரைக்கு வந்து காட்சி தருவதாக சமுத்திரராஜனுக்கு வாக்களித்தார். அவ்வாறு வாக்களித்த தினம் மாசிமகம்.
  
கும்பக்கோணம் மாசிமகம்;
மாசிமகம் பற்றிய பதிவில் கும்பக்கோணத்தை தவிர்க்க முடியுமா?! ஒருசமயம் யுகமொன்று  வெள்ளத்தால் அழிய இருந்தது.  மீண்டும் உயிர்களை படைக்கும்’‘பீஜம்” தாங்கிய அமுத கும்பத்தை வெள்ளத்தில் மிதக்கவிட்டார் பிரம்மா.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடம் கும்பக்கோணம்.  வேடுவன் ரூபத்தில் வந்த சிவப்பெருமானால் அம்பினால் துளைக்கப்பட்டு  கும்பம் உடைந்து உயிர்கள் உருவான  நாள் மாசி மகம். இங்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கும்பேஸ்வரர் கோவிலே முதன்மையானது. இதன் தீர்த்தமே மகாமக தீர்த்தக்குளம்.

ஒருமுறை அனைத்து புண்ணிய நதிகளும் சிவப்பெருமானிடம் சென்று, மக்கள்  தங்கள் பாவங்கள் தீர எங்களில் மூழ்குவதால் அவர்களின் பாவச்சுமை தங்களை அழுத்தி பாரம் தாங்க இயலவில்லை என முறையிட மாசிமகத்தன்று, கும்பக்கோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடினால் உங்கள் மீதுள்ள பாவங்கள் போகுமென அருளினார். 
குந்திதேவி பாவம் போக்கிய மாசி மகம்:
கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக குந்திதேவி கண்ணனை வேண்டி நின்றாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடவேண்டும் என சொன்னான். ஒரே நாளில் ஏழு கடலிலா என மலைத்து நின்ற குந்திதேவிக்கு திருநல்லூர் கோவிலின் பின் உள்ள கிணற்றில் உனக்காக ஏழு கடலையும் வரவைக்கிறேன், மாசி மகத்தன்று நீராடு உன் பாவம் போகும்  என அருளினான். அத்தீர்த்தம தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தம் ஆகும்.



முருகனுக்கும் உகந்த மாசிமகம்;
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான். எனவே, சுவாமிமலை, திருத்தணி , திருச்செந்தூர் முருகன் கோவில்களில் மாசிமகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுது.


இனி விரதமிருக்கும் முறை;
அதிகாலையில்  எழுந்து அருகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடவேண்டும். அவ்வாறு நீராடும்போது ஒரே ஒரு ஆடையை உடுத்தாமல், மற்றொரு ஆடைய அணிந்து நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல இயலாதவர்கள்  குளிக்கும் நீரில் கங்கை உள்ளிட்ட  புண்ணிய தீர்த்தளை ஆவகப்படுத்தி நீராடுதல் நலம். பின்பு உலர்ந்த ஆடைகளை உடுத்தி அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறை சிந்தனையுடன் வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும்.  மதியம் ஒருவேளை மட்டும் உணவுண்டு, இரவு பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். தேவாரம், திருவாசத்தையும் படித்தல் வேண்டும்.    வீட்டிலேயே குளிப்பவர்கள் கீழ்க்காணும் பாடலை பாராயாணம் செய்து குளித்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும்.
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை
            இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே 
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
   குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும் 
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,
                பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க் 
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்
                   கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.  குங்குமத்தால் அம்பிகையை அர்ச்சித்தால் இன்பமும், வெற்றியும் கிட்டும். சரஸ்வதி தேவியை நறுமண மலர்களால் அர்ச்சித்தி வழிப்பட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.

ஒருமுறை பார்வதியின்பால் ஊடல் கொண்டாடி, பூலோகத்தில் வந்து தவம் செய்ய உக்காந்துட்டார். அதனால, உலக இயக்கம் நின்றது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவனுக்கு காமத்தை தூண்டும்விதமா எதாவது செய்ய மன்மதனை வேண்டினர்.  மன்மதனும், சிவன்மேல் மலரம்பு விட்டான். அதன்பொருட்டு கோபங்கொண்டு மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தான். பின்னர் மன்மதனின் மனைவியான ரதிதேவியின் வேண்டுகோளை ஏற்று அவளுக்கு மட்டும் தெரியும்படி உயிர்பித்து கொடுத்தார்.  அந்த நிகழ்வு நடந்த தினம் இன்று.
இப்படி சைவமும், வைணவமும்.. வடநாடும், தென்னாடும் கொண்டாடும் சிறப்புவாந்த மாசிமகம் இன்று... இறைவனை வழிப்படுவதோடு தன்னால் இயன்ற தர்மங்களை செய்து இறைவன் அருள் பெறுவோம்.

நன்றியுடன்,
ராஜி.