Sunday, August 05, 2018

கந்தன் காலடியை வணங்கினால்... ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்


ஊரு உலகத்துல எத்தனையோ ஆயிரம் மொழி கிடக்கு. அதுல எந்த மொழிக்காவது கடவுள் இருக்கா?! ஆனா, நம் தாய்மொழியாம் தமிழுக்குன்னு தனி கடவுள் இருக்கார். தமிழைப்போலவே அழகும் இளமையும் கொண்டவர் முருகக்கடவுள்.இம்முருகனுக்கு கிருத்திகை நாளில் விரதமிருப்பது வழக்கம். மாதத்தில் ஒரு கிருத்திகை வரும். வெகு சில மாதத்தில் இருமுறையும் வரும். ஆனாலும், தை, ஆடி, கார்த்திகை கிருத்திகை மிக விசேசமாக கொண்டாடப்படுது. அதுக்கு என்ன காரணம்ன்னு பார்க்கும்முன் முருகனின் தோற்ற மகிமையை பார்ப்போம்...

தமிழ்க்குடி உருவான நாளிலிருந்து இயற்கை அழகு எல்லாத்துலயும் முருகனை கண்டனர்.  அதனால, தங்கள் இனக்கடவுளாக முருகனை வரித்துக்கொண்டனர். "முருகு"ன்ற சொல்லிற்கு அழகு, இளமைன்னு அர்த்தம். அதனால, முருகன்ன்னா அழகன்ன்னு அர்த்தமாகுது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் .

முருகன்ன்ற  பேருக்கு அழகு, இனிமை, இளமை, தெய்வத்தன்மை, மணம், மகிழ்ச்சி ஆகிய ஆறு தன்மைகளை தன்னகத்துள் கொண்டவன்னும் பொருள்படும். முருகன்ன்னா உயர்வானவன். அதனாலதான் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு கோவில் எழுப்பி கொண்டாடினர். முருகன் குறிஞ்சி  நிலத்து கடவுள்ன்றதால குறிஞ்சிக்கிழான்னும் பேருண்டு. இதுமட்டுமில்லாம, கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்,  பக்தர்களின் இதயக்குகையில் வசிப்பதால் குகன், அசுரர்களை வெல்ல படை நடத்தி சென்றதால் சேனாதிபதி, வேலினை கொண்டிருப்பதால் வேலன், கங்கையால் தாங்கி வரப்பட்டதால் காங்கேயன், அப்பனுக்கு உபதேசித்ததால் சுவாமிநாதன், சரவணப்பொய்கையில் சேர்ந்ததால் சரவணன், ஆறு பிள்ளையாய் இருந்தவனை ஒன்று சேர்த்து ஒரு பிள்ளையாதலால் கந்தன், ஆறு முகங்களை கொண்டதால் ஆறுமுகன், விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன்.... இப்படி அவனின் பெயர்க்காரணத்தை சொல்லிக்கிட்டே போகலாம்.... 


கார்த்திகை விரதம் உண்டான வரலாற்றை பார்ப்போம்....



சிவனிடம் வரங்கள் வாங்கி, அதனால் உண்டான மமதையால் தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை கங்கை தாங்கி, வாயுபகவானின் துணையோடு சரவணப்பொய்கையில் கொண்டு போய் சேர்த்தாள். 


ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். ஒருநாள் அம்மையும், அப்பனும் தங்கள் பிள்ளையை காண வந்தனர். ஓடோடி வந்த பிள்ளைகள் அறுவரையும் அன்னை சேர்த்தணைக்க ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய குழந்தையாய் முருகன் மாறினான்.


கார்த்திகைப்பெண்களின் சேவையினை பாராட்டி அவர்களை நட்சத்திர பட்டியலில் சேர்ப்பித்தோடு, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிப்படுவோருக்கு முருகனின் அருளும், முக்தியும் பரிபூரணமாய் கிட்டுமென அன்னை அருளியதோடு அன்றிலிருந்து முருகன் கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவான் எனவும் சொன்னாள். இதுதான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. 'ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே' என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு  கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.


கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கியமாகும்.  நட்சத்திரத்தில் 'கிருத்திகை' முருகனின் நட்சத்திரம்.  மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை கிருத்திகை.  மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.


முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரிய கண் இமைக்கும் நேரத்தில் காற்றை கிழித்து வருமாறு உருவம் கொண்டது. அழகிய மயில் அழகனுக்கு வாகனாமானது எத்தனை பொருத்தம்?! அழகோடு வேகமாய் பறக்கும் ஆற்றலும் கொண்டது. பக்தர்களின் துயரினை துடைக்க வரும் முருகனுக்கு மயில் வாகனமானது.  மயில் மனித மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. சிறு சத்தத்துக்கே அச்சமுறும் தாவர பட்சிணியான மயில் , மாமிசபட்சிணியான கொடிய விசம் கொண்ட பாம்பின்மீது மயில்  முருகன் எல்லா சக்திகளையும் அடக்கி ஆட்சி செய்வதோடு, முருகனால் முடியாதது எதுமில்லை என்பதையும்  காட்டுகிறது.


கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.    காலமாற்றத்தில் உப்பில்லாமல் உணவு படைப்பது நின்று போயிற்று..


எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும்.  பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் திருத்தணி முருகன் கோவில்தான் ஆடிக்கிருத்திகைக்கு மிக விசேசமானது. இந்நாளில், திருத்தணி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவர்.  இங்கிருக்கும் சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் இரவு வேளையில் தெப்போற்சவம் நடக்கும்.  

கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கேற்ப பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். 


ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.

தட்டு தடுமாறி நிற்போருக்கு ஊன்றுகோலாய் இருப்பேனென ஒரு கையில் தண்டமேந்தி சொல்லாமல் சொல்கிறார்.  வாழ்க்கையில் உயரனும்ன்னு மலை உச்சியில் அமர்ந்து நமக்கு உணர்த்துகின்றான் முருகன்.  

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்...

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா..
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா...
ணிகாசலனே தவமாமணியே அரகரோகரா...
வானவர் போற்றும் தீனதயாலா அரகரோகரா....
திர்காமத்துரை கதிர்வேல் முருகா அரகரோகரா..
கந்தா கடம்பா கார்த்திகேயா அரகரோகரா
நன்றியுடன், 
ராஜி.

Saturday, August 04, 2018

கண்ணாமூச்சி ரே ரே ரே... கண்டுபிடி ரே ரே ரே - கிராமத்து வாழ்க்கை 4

இன்னிக்கு கடைகளில்  ஸ்கூல், ஆஃபீசுக்கு போறவங்களுக்குன்னு விதம் விதமா டப்பர்வேர் செட் கிடைக்குது. முன்னலாம் ஆஃபீஸ் போறவங்களுக்கு இந்த டிஃபன் கேரியர்லதான் சாப்பாடு கட்டி கொடுப்பாங்க. அதை திறந்து, அடுக்கி, மீண்டும் மூடி வைப்பது எனக்கு பிடிச்ச விளையாட்டு. டப்பாக்கள் கழலாம இருக்கவும், சாப்பாட்டை கிளறி போட்டுக்கவும் கேரியர் உச்சியில் ஒரு சின்ன ஸ்பூன் இருக்கும்.  

டூரிங்க் கொட்டா... அந்த காலத்து ஏசி தியேட்டர்.  கீத்து கொட்டகைதான் தியேட்டரே.   மழைத்தண்ணி உள்ள வராம இருக்க,   கீழ இறக்கி கூரை வேய்ஞ்சிருப்பாங்க. மத்தபடி சுவர்லாம் இருக்காது. காம்பவுண்ட்கூட தென்னங்கீத்துதான்.  அப்புறம் தென்னங்கீத்துக்கு பதிலா சிமெண்ட் ஷீட் வந்துச்சு. தரை டிக்கட்டைவிட பெஞ்ச் டிக்கட் விலை அதிகம். அதைவிட சேர் டிக்கட் விலை அதிகம்.  ஒரு படத்துக்கு நாலு அஞ்சி முறை இண்டர்வெல் வரும். அதுக்கு காரணம் ரீல் மாத்துறதா சொல்வாங்க. தரை டிக்கட்டில் ஆண், பெண்ணுக்குன்னு இடம் தனித்தனியா பிரிக்க  இடையில் சின்ன சுவர் எழுப்பி இருப்பாங்க. குடும்பமமா வந்தாலும் தனித்தனியாதான் உக்காரனும்.  சோடா, பச்சை கலர், வேர்க்கடலை உருண்டை, முறுக்கு இதுலாம் கிடைக்கும். முன்னாடி இருக்கவுங்க தலை நமக்கு மறைக்குதுன்னா மணலை குமிச்சு மேடாக்கி அதுல உக்காந்து படம் பார்ப்பாங்க. தியேட்டர் காலியா இருந்தா,. மணலை குமிச்சு தலை வச்சுக்கிட்டு படுத்துக்கிட்டு படம் பார்ப்பாங்க. மாலைக்காட்சியும், இரவுக்காட்சியும் மட்டும்தான் படம் காட்டுவாங்க. பகல்ல வெளிச்சத்துல படம் தெரியாது. சினிமாவுக்கு போகாத நாட்களில் டூரிங்க் கொட்டாவுக்கு வெளிய உக்காந்து கதை கேட்ட அனுபவம்லாம் பலருக்கு உண்டு.
அப்பா வழி பாட்டி வீட்டில் வயல் உண்டு. லீவுக்கு போகும்போது அம்மாவோடும், பாட்டியோடும் வயலுக்கு போகும் வழக்கம் உண்டு. வேர்க்கடலை பயிரிட்டா வேர்க்கடலை பறிப்பது, காய வைப்பது, மூட்டை கட்டுவது, விதைக்கு கடலை உரிப்பதுன்னு கூடமாட நானும் பெரியப்பா, அத்தை பசங்கலாம் விளையாட்டய் செய்வோம். ஆனா, நெல் பயிர்ன்னா என்ன செய்வதுன்னு தெரியாது. ஆனா, பாட்டி ஒரு பெரிய வெங்கல பானையில் நெல்லை கொட்டி, கோணிப்பையை நனைச்சு போட்டு மூடி நெல் அவிப்பாங்க. அந்த மணம் வீடு முழுக்க பரவும். நெல் வேக வச்சுக்கிட்டே, சாப்பாட்டை பெரிய பேசனில் கொட்டி, பிசைஞ்சு உருண்டை உருட்டி கொடுப்பாங்க. அதை இரண்டு கைகளிலும் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே பாட்டி சொல்லும் கதையை கேட்போம். நெல் வெந்ததும் கொஞ்சம் கொஞ்சமா பாட்டி பாத்திரத்தில் கொடுக்க, அதை பெரியப்பா வீட்டு வாசலிலும், எங்க வீட்டு மொட்டை மாடிலும் கொட்டுவோம். பாட்டி கை சாப்பாட்டுக்காகவும், நெல் மணத்துக்காகவும் அடுத்த அறுப்பு வரை காத்திருப்பேன்.
படத்திலிருக்க மாதிரி மூணு இல்ல அஞ்சு இல்ல ஏழு கட்டம் போட்டுக்கனும். ஒரு சிறு ஓட்டு துண்டை எடுத்து, கட்டத்துக்கு வெளில இருந்து முதல் பெட்டியில் வீசனும். ஒரு காலை தூக்கி நொண்டிக்கிட்டே கட்டத்துக்குள் குதிச்சு அந்த ஓட்டை மிதிச்சு கைல எடுத்துக்கிட்டு நம்ம கட்டத்தையும் நம்மோடு விளையாடுறவங்க கட்டத்தையும் தாண்டி வரனும். இப்படியே நம்ம பக்கமிருக்கும் 2,3,4,5ன்னு எல்லா கட்டத்தையும் தாண்டி, எதிராளியின் கட்டத்தில் 5,4,3,2,1ன்னு தாண்டி வரனும். இதுல, நொண்டிக்கிட்டே ஓட்டை மிதிச்சு  கைல எடுத்துக்கனும், கோட்டை மிதிக்கக்கூடாது, தூக்கி இருக்கும் காலை விடக்கூடாது, இதான் கண்டிசன். அப்புறம் கண்ணை மூடிக்கிட்டு நம்மோட கட்டத்துல ஒரு காலையும், எதிராளியின் கட்டத்துல ஒரு காலையும் வச்சிக்கிட்டு ரைட்டா?!ன்னு கேட்க கோட்டை மிதிக்கலைன்னா ரைட்டுன்னு சொல்வாங்க. அப்ப அடுத்த கட்டத்துக்கு போகனும். கோட்டை மிதிச்சுட்டா கொயட்டுன்னு சொல்வாங்க. அப்ப நாம அவுட். எதிராளி ஆடுவாங்க. 
நாம விளையாடிய விளையாட்டுகளில் நம்ம பிள்ளைங்க விளையாடும் விளையாட்டு இது ஒன்னுதான். வரைமுறை இல்லாம எத்தனை பேர் வேணும்ன்னாலும் விளையாடலாம். யார் கண்ணை பொத்திக்குறதுன்னு சண்டை வந்தால் சாட், பூட், த்ரின்னு போட்டு பார்த்து ஆளுங்களை தேர்ந்தெடுத்துப்பாங்க. அப்படி தேர்ந்தெடுத்த ஆள் கண்ணை இன்னொருவர் மூடிக்கிட்டு, மத்தவங்கலாம் போய் ஒளிஞ்சுக்குவாங்க. கண்ணை மூடி இருப்பவர், கண்ணாமூச்சி ரே… ரே… கண்டுப்பிடி ரே… ரே… நல்ல முட்டையைத் தின்னுப்புட்டு, ஊள  முட்டையக் கொண்டு வா...ன்னு கண்ணை திறக்க, மறைஞ்சிருப்பவங்களை தேடி கண்டுப்பிடுச்சு வரனும்., தேடிக்கிட்டு போனவர் கண்ணுக்கு தெரியாம, கண்ணை மூடின பொதுவான ஆள்கிட்ட போயிட்டா அவங்க அவுட் இல்ல. தேடியவர் கையில் சிக்கிட்டா நாம அவுட். நாம கண்ணை பொத்திக்கிட்டு ஒளிஞ்சிருக்கவுங்களை கண்டுப்பிடிக்கனும்.
பிடிச்ச பாட்டை மெமரி கார்ட்ல பதிஞ்சுக்கிட்டு போன், பிளேயர்ன்னு பொழுதன்னிக்கும் பாட்டு கேட்டாலும், ரேடியோ பெட்டியில் எப்பவாவது ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிக்காக காத்திருந்து கேட்ட காலம் போல வராது. காலையில் வாழ்த்து, மாலையில் ஒரு பட பாடல், சினிமா கதை வசனம்,  நாடகம், வேளாண்மை செய்திகள், செய்திகள், நேர்க்காணல்ன்னு பாரபட்சமில்லாமல் எல்லாத்தையும்  கேட்ட காலமது.  அதிலும் சிலோன் ரேடியோ நிகழ்ச்சின்னா கூடுதல் ஆர்வம். ரேடியோ என் கைக்கு எட்டாத இடத்தில் அப்பா வைப்பார். ஏன்னா நான் ரேடியோவை ரிப்பேர் ஆக்கிடுவேனாம். அப்பா போனதுக்கப்புறம் திருட்டுத்தனமா  நோண்டுறது வழக்கம். அதிலும் ரேடியோவில் இருக்கும் ஆண்டெனாவை நீட்டி, மடக்கி பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமைன்னா இன்னும் கொண்டாட்டம்.அன்னிக்கு முழுப்படத்தின் கதைவசனம் ஒலிப்பரப்பாகும். அக்கம்பக்கம் குடும்பம்ன்னு மொத்தமா உக்காந்து கேப்போம். அப்பா கிரிக்கெட் வர்ணனை கேப்பார்.  எதும் புரியாதுன்னாலும் கூட உக்காந்து கேப்பேன்.  இப்ப மீண்டும் ரேடியோக்கள் உபயோகம் எஃப்.எம் வருகையால் அதிகமாகுது.  அந்த காலத்து ரேடியோவை கரண்ட் இல்லன்னா கேக்க முடியாது. பிற்காலத்தில் செல் போட்டு கேட்கும் ரேடியோ வந்திச்சு. அதேப்போல வெளியூருக்கு போகும்போது கொண்டு போக முடியாது. ஆனா இப்ப எஃப்.எம் நிகழ்ச்சிகளை போன், ஆப்ப்ன்னு எங்கேயும் எப்போதும் கேட்கலாம்.
என் வாழ்நாளில் குறைஞ்சது பத்து இடம் மாறி இருப்போம். ஆனா, சொல்லி வச்ச மாதிரி ஆறு, குளம், அருவி, ஓடைன்னு எங்க வீட்டு பக்கம் இருந்ததில்லை. ஒரு பெரிய கும்பலா சின்ன வயசில் துணி துவைக்க அம்மாவோடு பம்ப் செட் போவேன். என்னோடு வளர்ந்த பிள்ளைகள்லாம் வயித்துல கயிறு கட்டிக்கிட்டு கிணத்துல நீச்சல் பழகுவாங்க. ஆனா, ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கிதான் குடிக்குமாம்ங்குற மாதிரி நான் மட்டும் பம்ப் செட் வாய்க்காலில் கிடப்பேன். இத்தனைக்கும், என் அப்பா, அம்மா ரெண்டு பேத்துக்குமே நீச்சல் தெரியும்.   அண்ணா ஒருத்தங்க அம்மாக்கிட்ட எடுத்து சொல்லி நீச்சல் கத்துக்க கிணத்துக்கு போனால், அங்க  தற்கொலை பண்ணிக்கிட்ட ஒரு அக்கா உடலை தேடிக்கிட்டு இருந்தாங்க. முதல்நாள் இரவு நடந்ததாலயும், பாறைல மோதியும் அக்கா முகம் சிதைஞ்சு போய் இருந்துச்சு. அன்னிக்கு பிடிச்ச பயம் அத்தோடு நீச்சல் ஆசைக்கு முழுக்கு போட்டாச்சு. இன்னிக்கும் எங்காவது தண்ணில முங்கும்போது அந்த முகம் கண்ணில் வந்து போகும்.
 
இது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு?! தகரத்தால் ஆன சின்ன படகு. அகலமான ஒரு பாத்திரத்தில்  தண்ணி நிரப்பி சின்ன தகரத்துண்டில் இருக்கும் திரியை கொளுத்தி அந்த படகில் வச்சு, அந்த படகை பாத்திரத்து நீர்மேல வச்சா, விசிலடிச்சுக்கிட்டே சுத்தி சுத்தி ஓடும். வீட்டில் திட்டு வாங்காம விளையாடிய ஒரே விளையாட்டு இதுதான்னு நினைக்குறேன்,. ஏன்னா வீட்டை விட்டு வெளில போக வேண்டாமே! ஆனா அந்த பாத்திரத்திலிருக்கும் தண்ணி வீண். ஏன்னா படகிலிருந்து புகையும், எண்ணெயும் கசிஞ்சிருக்கும்.

எலக்ட்ரானிக் கடை பக்கமா போகும்போது சின்ன சின்னதா காந்த துண்டுகள் கிடைக்கும். இல்லன்னா, ரேடியோ, ஸ்பீக்கர் ரிப்பேர் ஆகிட்டா அதிலிருந்து வட்டமா ஒரு காந்ததுண்டு கிடைக்கும். குரங்கை வச்சிக்கிட்டு ஆடுறா ராமான்னு வித்தை காட்டுற மாதிரி காந்தத்தை வச்சிக்கிட்டு வித்தை காட்டுறது வழக்கம்.  ஜாமிண்ட்ரி பாக்சுக்குள் காந்தத்தை போட்டுக்கிட்டு பண்ணுன அலப்பறை இருக்கே! காந்தத்தின் ஒரே துருவங்கள் ஈர்க்கப்படுவதில்லைன்ற தத்துவம்லாம் டீச்சர் சொல்லி கொடுக்குறதுக்கு முன்னாடியே செயல்முறைல கத்துக்கிட்டவங்க நாங்க. அந்த காந்த துண்டை மணல்ல வச்சி தேய்ச்சா, மணல்ல இருக்கும் இரும்புதாதும், இரும்பு துருலாம் ஒட்டிக்கிட்டு வரும். எல்லாத்தையும் கழிச்சுட்டு கருப்பா இருக்கும் இரும்புத்தாதை மட்டும் எடுத்து ஒரு காகிதத்தில் அதை கொட்டி, காகிதத்தின் கீழ இருந்து அந்த இரும்பு தாதை அங்கிட்டும் இங்கிட்டும் ஓட வைப்போம். பேயோட தலை தனியா ஓடுது பாருன்னும் சொல்லி சின்ன பசங்களை பயமுறுத்தி இருக்கோம்..

அடுத்த பகுதியில் பொன்வண்டு, ஜியாமெண்ட்ரி பாக்ஸ், குழாய் ரேடியோலாம் பார்க்கலாம்.

நன்றியுடன் 
ராஜி

Friday, August 03, 2018

ஆனந்தம் பெருக ஆடிப்பெருக்கு விரதம் - அறிவோம் திருவிழா


இன்னிக்கு ஆடி மாசம் பதினெட்டாம் நாள். பதினெட்டு என்பது வெற்றியை குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வதங்கள். பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், குருஷேத்திர போர் நடந்தது 18 நாட்கள், மகாபாரத போரில் ஈடுபட்ட சைனியங்களின் எண்ணிக்கை 18,  சபரிமலையின் படிகட்டுகள் 18.   போகர், அகத்தியர், உள்ளிட்ட புகழ்பெற்ற சித்தர்கள் 18,  நம்மை நல்வழிப்படுத்தும் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை, உட்பட 18 நூல்களை பதினெண்கீழ்கணக்கு என சொல்றோம். மெய் எழுத்துகள் 18... இப்படி பதினெட்டுக்கென பல சிறப்புகள் இருக்கு. அந்த வரிசையில் ஆடி மாதம் 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைக்கும் ஆடிப்பெருக்குன்னு பேரு. இந்த நாளில் ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம்ன்னு அழைப்பாங்க.  

அம்பிகையின் மகிமையை விளக்கும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், இரண்டு காலங்களை யமனுடைய கோரைப்பற்கள் என வியாசர் கூறியிருக்கிறார். அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம்.  அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிடலாம். ஆனா, மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை வரவழைச்சுடும். அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.
தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்காதன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. இதோட அர்த்தம் நாம சொல்லுற மாதிரி அம்மாவை கடுஞ்சொல்லால் திட்டினாலும், தண்ணியை திட்டாதன்னு கிடையாது. தாயை அசிங்கப்படுத்தினாலும், அவளை கவனிக்காம விட்டாலோ அல்லது அவள் அழிவுக்கு காரணமா இருந்தால் தாய் மட்டும் இல்லன்னா அவளோடு சேர்ந்து அவள் குடும்பம் மட்டுமே  பாதிக்கும். ஆனா, தண்ணியை அசிங்கப்படுத்தி, கவனிக்காம விட்டு அதோட அழிவுக்கு காரணமானா நம் வம்சமே இல்லாம போகும். இந்த அர்த்தம் உண்மையா பொய்யான்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....  
பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகிடும். அதுமாதிரி, மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.

ஆடியும், விவசாயமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது. 'ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்' என, நம் முன்னோர் கணித்து 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு. 

புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன் படைத்த சிறந்த காவியம். கதையின் தலைவன் ஆட்டனத்தி, சேரமன்னன். வீரத்துடன், ஆடல் கலையிலும் வல்லவனாக விளங்கினான். இவனிடம் ஆடல் கற்க வந்த மாருதி, ஆதிமந்தி இருவரும் ஆத்தியிடம் காதல் கொண்டனர். அவன் நெஞ்சமோ மாருதியை விரும்பியது. அவளுக்காகவே கரூர் மன்னனுடன் போர் செய்தான். வென்றான். அதற்குப் படை கொடுத்து உதவிய சோழன் கரிகாலனின் வேண்டுகோளுக்காக அவரது மகளான ஆதிமந்தியை மணக்க நேர்ந்தது. மாருதி புத்தத் துறவியானாள். காவிரிப் புதுவெள்ளத்தில் நீராடும்போது ஆத்தியை வெள்ளம் அடித்துச் சென்று கடலில் தள்ளியது. அங்கிருந்த மாருதி அவனை மீட்டுக் காப்பாற்றினாள். தானே மூச்சை அடக்கி உயிர்நீத்தாள். கணவனைத் தேடிக் கரைவழியே வந்த ஆதிமந்தி அவனைக் கண்டாள். இருவரும் மாருதிக்குச் சிலைவடித்துக் காதல் தெய்வமாய் வழிபட்டனர். இது காப்பியக்கதை. பொதுவா நம்மூரில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இறந்துட்டா, அவங்க நினைவு நாளில் காதோலை கருகமணி எனப்படும் ஓலைச்சுருளும், கறுப்பு வளையலும் படைப்பது வழக்கம். மாருதியின் நினைவினால்தான் இந்நாளில் இதை வச்சு படைக்குறாங்க.
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின்மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார்.  அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன். 
ராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்லநேர்ந்ததுராமன் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தல்பலர் கொல்லப்பட்டதால் ராமனுக்கு பிரம்மஹத்திதோசம் பிடித்துக்கொண்டது.  இந்த தோசத்திலிருந்து தான் விடுபட என்ன செய்ய வேண்டுமென வசிஷ்ட முனிவரிடம் ராமன் கேட்டான்.  இந்த பாவத்திலிருந்தும், தோசத்திலிருந்தும் விடுபட காவிரியில் ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உன்னை பிடித்திருக்கும் தோசங்கள் நீங்குமென கூறினார் வசிஷ்டர். முனிவர் கூறியது போல ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி தன் பாவத்தை போக்கிக்கொண்டார்.  


இந்நாளில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், அவர்தம் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்திட்டு, தங்களால் முடிந்த புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், நகை, பாத்திரமென சீர் செய்வர். சாதாரண மனிதனே இவ்வாறு சீர் செய்யும்போது , காவிரியை தங்கையாய் ஏற்றுக்கொண்ட ரங்கநாதர் சும்மா இருப்பாரா?!

தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது. அதன் நினைவாகவே இன்றும் சகோதரிக்கு சகோதரர்கள் ஆடிச்சீர் செய்வது.(எத்தனை பதிவு போட்டும்,எத்தனை கெஞ்சியும்,எனக்கு ஒருபயலும் ஒருஸ்பூன்கூட வாங்கிக்கொடுக்கல) அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்குசீர் வரிசையை கொண்டு   வருவார்கள்அதை பெருமாள்முன் வைத்து, உங்கள் தங்கைக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கும் சீரை பாருங்கள் என காட்டுவார்கள்.  அதன்பின் தீப ஆராதனையும் செய்வார்கள். அதன்பின், புடவை, தாலிப்பொட்டு, பூ,பழம், வெற்றிலை, பாக்கு என அத்தனையையும் காவிரியில் மிதக்க விடுவர்.    .
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக  இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில்  வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
அம்மன் கர்ப்பவதி என்பதால் அவள் நாவுக்கு சுவையாய் புளிசாதம், எலுமிச்ச சாதம், மாங்காய் சாதம், ஊறுகாய், வடை, பாயாசம், கற்கண்டு சாதம், சர்க்கரைபொங்கல்ன்னு விதம் விதமா கொண்டு வந்து நைவேத்தியம் செய்து மத்தவங்களுக்கு கொடுத்து குடும்பத்தோடு காவிரிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

எங்க ஊரில் ஆறு இல்லன்னு சொல்றவங்களும் சரி, ஆறிருந்தாலும் அதில் தண்ணி இல்லன்னு சொல்லும் என்னைய மாதிரி ஆளுங்களும் சரி மனசை தளரவிடாம  ஒரு செம்பில் அரைத்த மஞ்சள் கலந்த நீரை, திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்கனும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போடனும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து,  காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. 

கல்கியின்  பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்நாளில்தான். ராஜராஜசோழன் பெருமை இருக்கும்வரை வந்தியத்தேவனின் புகழும் மறையாம இருக்கும். அதேப்போல, அந்நிய ஆட்சியை எதிர்த்தும், தமிழர் நிலத்தை தமிழரே ஆளும் பொருட்டும் போர் புரிந்து, பல போர்களில், வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த தீரன் சின்னமலை, அவர் தம்பி மார்கள் தம்பி, கிலோத்தர் மற்றும் வீரத் தளப‌தி கருப்பன் சேர்வை தூக்குக்கயிற்றை முத்தமிட்ட தினமும் இன்றுதான். அட்சய திருதியை விட இன்னாளில் நகை, பொருட்கள், தொழில் தொடங்க நல்ல நாள். ஏன்னா பெருக்குதல், சுத்தம் செய்தல் என பொருள்படும். 
இந்த ஆடிப்பெருக்கு நாளில் பிள்ளைகள் சப்பரமிடுதலும் ஒரு சடங்கு. ஒரு குட்டி வண்டியில் கலர் பேப்பர் எல்லாம் ஒட்டி சப்பரம் ரெடி பண்ணுவாங்க. யார் சப்பரம் கெத்தா இருக்குன்னு போட்டியும் நடக்கும். இந்த ஆடிப்பெருக்கில் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைத்து கொண்டு அடுத்த வருடத்தில் ஆடி காரில் வர்ர அளவுக்கு நம் வளர்ச்சி பெருகட்டும்.

நன்றியுடன்,
ராஜி

Thursday, August 02, 2018

தாய்ப்பால் வாரம்




ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம்...


ஒரு குழந்தைக்கு தாய் எத்தனை அவசியமோ அந்தளவுக்கு தாய்ப்பால் முக்கியம். குழந்தைக்கு தாய்ப்பால் எந்தளவுக்கு நல்லதோ அந்தளவுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது தாய்க்கும் அந்தளவுக்கு நல்லது. ஏன்னா தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமலிருக்க வாய்ப்புகள் அதிகம். பாலூட்டுதல் பொருட்டு மாற்றியமைக்கப்பட்ட வியர்வை நாளங்கள் தான் நமது மார்பகங்கள். கர்ப்பம் தரித்த நாள் முதலே பாலூட்ட தயாராகிறது மார்பகங்கள். குழந்தை பிறந்தபின் பாலூட்டலைன்னா தூண்டப்பட்ட ஹார்மோன்கள் உடலிலேயே தங்கி மார்பக புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமில்லாம பிரசவக்காலத்தில் உண்டாகும் அதிகப்படியான ரத்தப்போக்கினை இது கட்டுப்படுத்தி, ரத்த சோகை உண்டாகாமல் தடுக்குது. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு படிப்படியா தாயின் உடல் எடை குறையும்.

சராசரியான  உடல்வாகு உள்ள  ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கும்.  குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்து, பால் உற்பத்தியைத் தூண்டுது.  ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரையாகவும் மாற்றபடுது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுது.  பால் சுரப்பிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலை செலுத்த `ஆக்சிடோசின்’ உதவுது. 

முதன்முதலில் சுரக்கும் பால் oremilk அதிகப்படியான நீர்சத்தினை கொண்டிருக்கும். இது குழந்தையின் தாகத்தை தணிக்கும். பிரசவிச்ச பல நிமிடங்கள் கழித்து சுரக்கும் Hind milkன்னு அழைக்கப்படும் Colostrum ன்ற சீம்பால் முதல் 4 நாட்களுக்கு மட்டும் சுரக்கும் பாலாகும். இதில் கொழுப்பு சத்து அதிகம். இது குழந்தையின் பசியை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படியாக குழந்தைக்கு தரும். Transitional milk என்பது 4-10 நாட்களில் சுரப்பது. Mature milk எனப்படுவது, பத்து நாட்களுக்கு பிறகு சுரப்பது. ஒவ்வொரு முறையும் 20 நிமிடங்கள் வரை பாலூட்டனும். குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் பாலூட்ட வேண்டியது அவசியம். அப்படி ஒரு மணி நேரத்திற்குள் பாலூட்டாமல் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். 47% சதவீத பெண்களே ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கின்றனர். மத்தவங்களாம் புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க. வேலைக்கு போகும் பெண்கள், தாய்ப்பாலெடுத்து புட்டிகளில் சேகரித்து பால் எடுத்த நேரத்தினை குறிச்சு வச்சுட்டு போகலாம். தாய்ப்பால் வெளில வச்சாலே 8 மணி நேரம் தாங்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சா 24 மணி நேரம் தாங்கும். சினிமாவிலோ சீரியலிலோ புட்டிப்பால் கொடுப்பது மாதிரியான காட்சிகள் வைப்பது சட்டப்படி குற்றம்ன்னு எத்தனை பேருக்கு தெரியும்?!


இன்னிக்கு கவர்ச்சி பொருளாய் மாறிவிட்ட மார்பகம் சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கும். சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார்மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்யும். கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்யும். சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ சுரந்து மார்பக வளர்ச்சியைத் தடுக்கும். பெண்ணுக்கு இரு மார்புகளும் ஒரே அளவில் இருக்காது.  இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதாய் இருக்கும்.  தாய்ப்பால் தூய்மையானது, கலப்படமில்லாததுன்னு சொன்னாலும் சிகரெட்டிலுள்ள நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லும் வாய்ப்புண்டு. அதனால் மது, புகை பழக்கத்தை தவிர்ப்பதோடு டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கனும். தாய்ப்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது. அதேநேரத்தில்  அடர்த்தி குறைந்தது.

பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் நம்பியதால்  அப்பெயரைச் சூட்டினர். 

35 வயதை கடந்த அனைத்து பெண்களும் வருசத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். வாரம் ஒருநாளோ அல்லது மாதம் ஒருநாளோ கண்ணாடி முன்நின்று மார்பகத்தை அழுத்தி பார்த்து கட்டிகள் எதாவது இருக்கான்னு பார்க்கனும். சில கட்டிகள் வலிக்காது. அதுக்காக அதை அலட்சியப்படுத்தவும் கூடாது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குறதுக்கு பேரு `மாஸ்டெக்டோமி’.   மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள் இருந்தா அதன் பெயர் சிஸ்ட்பைரோடினோமா இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள், காலக்டோரியா அளவுக்கு அதிகமான ய்பால் உற்பத்தி, கைனகோமேஸ்டியா ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது, ”மஸ்டிடிஸ்” பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. மாஸ்டால்ஜியா  மாதவிலக்குக்கு முன்  மார்பகத்தில் வலி அல்லது தொளதொள தன்மை காணப்படுவது. மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி. மார்பக புற்றுநோய்  பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய். இப்படி விதம்விதமா ரகம் ரகமா மார்பகத்தில் வியாதி வருது. 

ஒரு பெண் கர்ப்பமுற்ற உடன்  தனது மார்பகத்தையும்  பரிசோதனை செய்துக்கனும். மார்புக் காம்புகளில் வெடிப்புகள்  இருக்கா?!  மார்புக் காம்புகள் உள் அழுந்தி இருக்கான்னு அவசியம் செக்கப் செய்துக்கனும்.  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க  ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையும் வேணும். மார்பக அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும்  எந்தவித சம்பந்தமும் இல்லை. தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய தூண்டுதலே குழந்தை முட்டி முட்டிப் பால் குடிப்பதுதான்.   குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் விரும்புகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பால் சுரக்கும்.  கடைசிச் சொட்டு வரையும் குழந்தையே வாய் எடுக்கும்வரை பால்  கொடுக்கனும்.  இது மீண்டும் பால் ஊறுவதற்கு மிக முக்கிய தூண்டுதலாய் இருக்கும். ஒவ்வொரு முறையும் இரு மார்பகத்திலும் பாலூட்டனும்.   பால் ஊறுவதற்கும், பாலை வெளியேற்றுவதற்கும் பெண்கள் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றது. அதனால்  மனதை தைரியமாகவும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு பாலூட்டும்போது வெளிக்காரணிகளான கோபம், பழி, டென்சனில்லாம கொடுக்கனும்.  மனதளவில் குழந்தையை நினைக்கும் போதே பால் ஊறுமளவுக்கு  தாய் தன்னை மாத்திக்கனும்.

பாலூட்டும் பெண்கள் ள் ஒரு நாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்கணூம். சத்துள்ள, ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை உட்கொள்ளணூம். எந்த விதமான உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. பால் ஊறுவதற்கென்று விசேஷமான இயற்கை உணவு அல்லது செயற்கை உணவு என இதுவரை எதுமில்லை. பால் ஊறுதல் என்பது குழந்தைக்கும் தாயுக்குமான உறவினை பொறுத்துதானே தவிர உணவினால் அல்ல.  பாட்டில் பாலை தவிர்ப்பது நலம். அதிலும் ஆறு மாதத்திற்குள் பால் சுரக்கலைன்னு பாட்டில் பாலை கொடுக்க ஆரம்பித்தால் குழந்தை பாட்டில் பாலைதான் விரும்புமே தவிர தாய்ப்பாலை விரும்பாது.  ஏன்னா  தாயின் மார்பிலிருந்து தன் சக்தியை பிரயோகிச்சு உறிஞ்சனும்.   ஆனா, பாட்டிலில் அப்படி உறிஞ்சத் தேவையில்லை. அத்தோடு பாட்டில் பாலோடு காற்றும் குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும்.  பாட்டில் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காது சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படும்.  தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.   குழந்தை தேவையான அளவு எடை கூடுவதோடு, தினமும்  குறைஞ்சது 6 முதல் 8 தடவைக்கு  சிறுநீர் கழித்தலும் 4 தடவை மலம் கழித்தலுமிருந்தால் தாய்ப்பால் சரிவர அக்குழந்தைக்கு கிடைப்பதுன்னு அர்த்தம். அதேப்போல் ஒரு பக்கத்தில் பாலூட்டும்போது இன்னொரு மார்பிலிருந்து பால் சொட்டுவதும்  குழந்தைக்கு தேவையான அளவுக்கு பால்  சுரக்குதுன்னு அர்த்தம். அதேநேரத்தில் குழந்தை இரவில் அழுதால் பால் போதவில்லைன்னு அர்த்தம்.  குழந்தைக்கு இத்தனை முறைதான் பால் கொடுக்கனும்ன்னு அவசியமில்லை. குழந்தைக்கு தேவைப்படும்போதெல்லாம் பாலூட்டலாம். ஆறு மாதத்திற்கு பின் இட்லி, பழக்கூழ், கஞ்சி மாதிரியான உணவை கொடுக்கலாம். பந்தாவுக்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட பவுடர்களை கொடுக்காதீங்க. 

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தை சுத்தமா வச்சுக்கனும். பாலூட்டும் முன்னும் பின்னும் வெதுவெதுப்பான நீரில் கழுவி, உலர்ந்த துணியால் மார்பகத்தை துடைச்ச பின்னே பாலூட்டனும். குழந்தைக்கு உடல் முடியாதபோது பால் சரிவர குடிக்காம பால் கட்டிக்கிச்சுன்னா  சூடான ஒத்தடம் கொடுத்து, அடிக்கடி பாலை பீச்சிடனும். இல்லன்னா, அந்த பால் குழந்தையின் செரிமான பிரச்சனைக்கு கொண்டு செல்லும். சில குழந்தைங்க பாலை அடிக்கடி வாயிலெடுக்கும். இது இயல்புதான். குழந்தையின் எடையில், ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாதவரை கவலைப்படவேணாம். குழந்தைக்கு பாலூட்டியதும், ஈரத்துணியைக்கொண்டு உதட்டை துடைத்து, மார்பு, முதுகை தடவி விட்டு தோளில் சாய்ச்சுக்கனும். அதனால், வயிற்றிலிருக்கும் வாயு வெளியேறும்.  குழந்தைக்கு படுத்துக்கிட்டு பாலூட்டுதலும் தப்பு. 

  
பேஷன்ற பேர்ல சின்ன குழந்தையை வச்சிக்கிட்டிருக்கும் பெண்கள் வெளில வரும்போது சுடிதார் மாதிரியான மாடர்ன் உடைகளை அணியாம புடவை அணியலாம். புடவையைப்போல் குழந்தைக்கு பாலூட்ட வசதியான உடை ஏதுமில்ல. மற்ற உடைகளில் இந்த சௌகரியம் வராது. அதனால் வெளியிடங்களில் பால் கொடுக்க கூச்சப்பட்டுக்கிட்டு புட்டிப்பாலை கொடுக்க கூடாது. வெளியில் செல்லும்போது தாய்ப்பாலை பீச்சி புட்டியில் கொடுப்பதும் தப்பு. வெளியில் போகும்போது தாய்ப்பால் ஊட்ட வசதியா பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட பிரா, நைட்டி, சுடிதார்லாம் விக்குது. தாய்ப்பாலின் மகத்துவத்தை இந்த கால பெண்கள் அறியும்பொருட்டுதான் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமா உலக சுகாதார அமைப்பு அமைச்சிருக்கு, தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை.

நன்றியுடன்,
ராஜி

Wednesday, August 01, 2018

கோகலேவை மதிப்போம்.. காகிதத்தை காப்போம்

ஆகஸ்ட் 1 இந்த நாளில்  நாம் நினைவில் கொள்ள வேண்டிய விசயம் 3 இருக்கு. அது என்னன்னா 1. இன்னில இருந்து ஒரு வாரத்துக்கு தாய்ப்பால் வாரம் தொடங்குது. 2. சுதந்திர போராட்ட தியாகி  லோகமான்யபால கங்காதர திலகர் அவரின் நினைவு நாள். 3 . இன்று உலக காகித தினம்..  இன்னிக்கு பதிவில் இந்த 3 டாப்பிக்கையும் சுருக்கமா பார்க்கலாமா?! இல்ல ஒரே நாளில்ல் 3 பதிவா போட்டுடலாமா?!ன்னு யோசிச்சதில் நீங்கலாம் பாவம்ன்னு தோணுச்சு. அதனால, தாய்ப்பால் பத்தி சனிக்கிழமையும் மத்த ரெண்டு டாபிக்கை பத்தியும் இன்னிக்கு பதிவில் பார்க்கலாம்... கொஞ்சம் சுருக்கமா கொடுக்க முயற்சி பண்றேன்.


'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) நினைவு தினம் இன்று. அவரை பத்தி சுருக்கமா பார்ப்போம். பால கங்காதர திலகர். 1856-ம் ஆண்டு ஜூலை 23ல் பிறந்தார். சிப்பாய் புரட்சின்ற  முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர். அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.  மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிர்த்து வந்தார் . பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். அதேநேரத்தில் விடுதலைக்காக போராடி சிறைச்சென்றவர்களுக்காக வாதாடி அவர்களை சிறை மீட்டார். சுதண்ட்

மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்டார். அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர்.  கோபால் கணேஷ் அகர்கர், விஷ்ணுசாஸ்திரி உள்ளிட்டோருடன் இணைந்து 1881-ல் 'கேசரி' என்ற மராத்தி இதழையும், 'மராட்டா' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கினார். இதன் தலையங்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைத்தன. மேலும்,  தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார். 1890ல் இந்திய காங்கிரசில் சேர்ந்தார். 
நாடு முழுதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கத்தினை பரப்பவும், மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது. இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார். 1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறலை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் இல்லாத அந்த காலத்துலயே பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஆதார் கார்டு, பஸ் பாஸ், ஃப்ளைட் டிக்கட், சினிமா டிக்கெட், பணம், சாமி படம் முதற்கொண்டு காரிய பத்திரிக்கை வரை எல்லாமே காகிதத்தால் ஆனது. காகிதத்தின் பயன்பாடு வருடத்துக்கு வருடம் 2% அதிகரிக்குது. தேவை இல்லாமலே வீணாக்கப்படுவதில் தண்ணீருக்கு அடுத்தபடியான இடம் காகிதத்துக்குண்டு. ஒவ்வொரு அலுவலக பணியாளர்களும் தினமும் 50ஷீட்  பயன்படுத்துறாங்க. இப்படி காகிதத்தின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணம் கம்ப்யூட்டர் மயமானதும், நகலெடுக்கும் மெஷினின் பயன்பாடும் அதிகரிச்சதுதான்.  நாம பயன்படுத்தும் காகிதத்தைவிட பயன்படுத்தாமலேயே வீணாக்கும் காகிதம்தான் அதிகம். அப்படி ஒவ்வொரு நாளும் நாம வீணாக்கும் காகிதத்தின் அளவு 1,46,000 கிலோ.   ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க  2 ஆயிரம் கிலோ மரங்கள் தேவை. அப்படின்னா  ஆயிரம் கிலோ காகிதப் பயன்பாட்டை குறைச்சா,  நல்லா வளர்ந்த 17  மரங்களோடு, 30,000 லிட்டர்  தண்ணீரும், 3 பெட்ரூம் கொண்ட விட்டுக்கு ஆண்டு முழுக்க ஆகும் கரண்ட் செலவும் மிச்சமாவதோடு 95% காற்றும் மாசுபாடுவது குறையும்.   

அதனால், காகிதப் பயன்பாட்டைக் கூடிய மட்டும் குறைக்கனும். முடிந்தவரை காகிதத்தை வீணாக்காமலிருப்பதும், பயன்படுத்திய காகிதத்தை மறுசுழற்சி செய்யவும் பழக்கப்படுத்திக்கனும். ஒரு நாளைக்கு ஒரு ஷீட் காகிதத்தை நாம  சேமிச்சா, ஓர் ஆண்டுக்கு 40,000 மரங்களைக் காப்பாத்த முடியும். ஒவ்வொரு தேவைக்கும் புதிய காகிதத்தை எடுக்காம, எழுதி மிச்சமிருக்கும் பக்கத்தில் எழுத பழகனும்.  இது டிஜிட்டல் உலகம் எல்லாத்துக்குமே பிரிண்ட் அவுட் எடுப்பதற்கு பதிலா போன்ல ஆதார் கார்டு மாதிரியான விவரங்களை காட்டலாம். பிள்ளைகளின் நோட்டு புத்தகத்தில் மிச்சமிருக்கும் பக்கத்தை கிழிச்சு வச்சு  வீட்டு கணக்கு மாதிரியான விசயங்களுக்கு பயன்படுத்தலாம். இப்படி எத்தனையோ விதத்தில் மிச்சப்படுத்தலாம். 

பதிவு நீண்டுக்கிட்டே போகுது. அதனால, காகிதம் உருவாகும் முறையை, அதன் வரலாற்றினை மற்றொரு பதிவில் விரிவா பார்க்கலாம். ஒரு காகிதத்திலும் ஒரு மரத்தை வீணாக்குறோம்ங்குறதை மனசுல வச்சுக்குவோம்ன்னு காகித தினமான இன்னிக்கு முடிவெடுத்து, மரங்களை காப்பாத்துவதோடு சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

நன்றியுடன்,
ராஜி