Thursday, August 02, 2018

தாய்ப்பால் வாரம்
ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம்...


ஒரு குழந்தைக்கு தாய் எத்தனை அவசியமோ அந்தளவுக்கு தாய்ப்பால் முக்கியம். குழந்தைக்கு தாய்ப்பால் எந்தளவுக்கு நல்லதோ அந்தளவுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது தாய்க்கும் அந்தளவுக்கு நல்லது. ஏன்னா தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமலிருக்க வாய்ப்புகள் அதிகம். பாலூட்டுதல் பொருட்டு மாற்றியமைக்கப்பட்ட வியர்வை நாளங்கள் தான் நமது மார்பகங்கள். கர்ப்பம் தரித்த நாள் முதலே பாலூட்ட தயாராகிறது மார்பகங்கள். குழந்தை பிறந்தபின் பாலூட்டலைன்னா தூண்டப்பட்ட ஹார்மோன்கள் உடலிலேயே தங்கி மார்பக புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமில்லாம பிரசவக்காலத்தில் உண்டாகும் அதிகப்படியான ரத்தப்போக்கினை இது கட்டுப்படுத்தி, ரத்த சோகை உண்டாகாமல் தடுக்குது. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு படிப்படியா தாயின் உடல் எடை குறையும்.

சராசரியான  உடல்வாகு உள்ள  ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கும்.  குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்து, பால் உற்பத்தியைத் தூண்டுது.  ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரையாகவும் மாற்றபடுது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுது.  பால் சுரப்பிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலை செலுத்த `ஆக்சிடோசின்’ உதவுது. 

முதன்முதலில் சுரக்கும் பால் oremilk அதிகப்படியான நீர்சத்தினை கொண்டிருக்கும். இது குழந்தையின் தாகத்தை தணிக்கும். பிரசவிச்ச பல நிமிடங்கள் கழித்து சுரக்கும் Hind milkன்னு அழைக்கப்படும் Colostrum ன்ற சீம்பால் முதல் 4 நாட்களுக்கு மட்டும் சுரக்கும் பாலாகும். இதில் கொழுப்பு சத்து அதிகம். இது குழந்தையின் பசியை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படியாக குழந்தைக்கு தரும். Transitional milk என்பது 4-10 நாட்களில் சுரப்பது. Mature milk எனப்படுவது, பத்து நாட்களுக்கு பிறகு சுரப்பது. ஒவ்வொரு முறையும் 20 நிமிடங்கள் வரை பாலூட்டனும். குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் பாலூட்ட வேண்டியது அவசியம். அப்படி ஒரு மணி நேரத்திற்குள் பாலூட்டாமல் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். 47% சதவீத பெண்களே ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கின்றனர். மத்தவங்களாம் புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க. வேலைக்கு போகும் பெண்கள், தாய்ப்பாலெடுத்து புட்டிகளில் சேகரித்து பால் எடுத்த நேரத்தினை குறிச்சு வச்சுட்டு போகலாம். தாய்ப்பால் வெளில வச்சாலே 8 மணி நேரம் தாங்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சா 24 மணி நேரம் தாங்கும். சினிமாவிலோ சீரியலிலோ புட்டிப்பால் கொடுப்பது மாதிரியான காட்சிகள் வைப்பது சட்டப்படி குற்றம்ன்னு எத்தனை பேருக்கு தெரியும்?!


இன்னிக்கு கவர்ச்சி பொருளாய் மாறிவிட்ட மார்பகம் சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கும். சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார்மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்யும். கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்யும். சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ சுரந்து மார்பக வளர்ச்சியைத் தடுக்கும். பெண்ணுக்கு இரு மார்புகளும் ஒரே அளவில் இருக்காது.  இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதாய் இருக்கும்.  தாய்ப்பால் தூய்மையானது, கலப்படமில்லாததுன்னு சொன்னாலும் சிகரெட்டிலுள்ள நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லும் வாய்ப்புண்டு. அதனால் மது, புகை பழக்கத்தை தவிர்ப்பதோடு டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கனும். தாய்ப்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது. அதேநேரத்தில்  அடர்த்தி குறைந்தது.

பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் நம்பியதால்  அப்பெயரைச் சூட்டினர். 

35 வயதை கடந்த அனைத்து பெண்களும் வருசத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். வாரம் ஒருநாளோ அல்லது மாதம் ஒருநாளோ கண்ணாடி முன்நின்று மார்பகத்தை அழுத்தி பார்த்து கட்டிகள் எதாவது இருக்கான்னு பார்க்கனும். சில கட்டிகள் வலிக்காது. அதுக்காக அதை அலட்சியப்படுத்தவும் கூடாது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குறதுக்கு பேரு `மாஸ்டெக்டோமி’.   மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள் இருந்தா அதன் பெயர் சிஸ்ட்பைரோடினோமா இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள், காலக்டோரியா அளவுக்கு அதிகமான ய்பால் உற்பத்தி, கைனகோமேஸ்டியா ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது, ”மஸ்டிடிஸ்” பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. மாஸ்டால்ஜியா  மாதவிலக்குக்கு முன்  மார்பகத்தில் வலி அல்லது தொளதொள தன்மை காணப்படுவது. மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி. மார்பக புற்றுநோய்  பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய். இப்படி விதம்விதமா ரகம் ரகமா மார்பகத்தில் வியாதி வருது. 

ஒரு பெண் கர்ப்பமுற்ற உடன்  தனது மார்பகத்தையும்  பரிசோதனை செய்துக்கனும். மார்புக் காம்புகளில் வெடிப்புகள்  இருக்கா?!  மார்புக் காம்புகள் உள் அழுந்தி இருக்கான்னு அவசியம் செக்கப் செய்துக்கனும்.  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க  ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையும் வேணும். மார்பக அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும்  எந்தவித சம்பந்தமும் இல்லை. தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய தூண்டுதலே குழந்தை முட்டி முட்டிப் பால் குடிப்பதுதான்.   குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் விரும்புகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பால் சுரக்கும்.  கடைசிச் சொட்டு வரையும் குழந்தையே வாய் எடுக்கும்வரை பால்  கொடுக்கனும்.  இது மீண்டும் பால் ஊறுவதற்கு மிக முக்கிய தூண்டுதலாய் இருக்கும். ஒவ்வொரு முறையும் இரு மார்பகத்திலும் பாலூட்டனும்.   பால் ஊறுவதற்கும், பாலை வெளியேற்றுவதற்கும் பெண்கள் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றது. அதனால்  மனதை தைரியமாகவும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு பாலூட்டும்போது வெளிக்காரணிகளான கோபம், பழி, டென்சனில்லாம கொடுக்கனும்.  மனதளவில் குழந்தையை நினைக்கும் போதே பால் ஊறுமளவுக்கு  தாய் தன்னை மாத்திக்கனும்.

பாலூட்டும் பெண்கள் ள் ஒரு நாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்கணூம். சத்துள்ள, ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை உட்கொள்ளணூம். எந்த விதமான உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. பால் ஊறுவதற்கென்று விசேஷமான இயற்கை உணவு அல்லது செயற்கை உணவு என இதுவரை எதுமில்லை. பால் ஊறுதல் என்பது குழந்தைக்கும் தாயுக்குமான உறவினை பொறுத்துதானே தவிர உணவினால் அல்ல.  பாட்டில் பாலை தவிர்ப்பது நலம். அதிலும் ஆறு மாதத்திற்குள் பால் சுரக்கலைன்னு பாட்டில் பாலை கொடுக்க ஆரம்பித்தால் குழந்தை பாட்டில் பாலைதான் விரும்புமே தவிர தாய்ப்பாலை விரும்பாது.  ஏன்னா  தாயின் மார்பிலிருந்து தன் சக்தியை பிரயோகிச்சு உறிஞ்சனும்.   ஆனா, பாட்டிலில் அப்படி உறிஞ்சத் தேவையில்லை. அத்தோடு பாட்டில் பாலோடு காற்றும் குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும்.  பாட்டில் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காது சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படும்.  தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.   குழந்தை தேவையான அளவு எடை கூடுவதோடு, தினமும்  குறைஞ்சது 6 முதல் 8 தடவைக்கு  சிறுநீர் கழித்தலும் 4 தடவை மலம் கழித்தலுமிருந்தால் தாய்ப்பால் சரிவர அக்குழந்தைக்கு கிடைப்பதுன்னு அர்த்தம். அதேப்போல் ஒரு பக்கத்தில் பாலூட்டும்போது இன்னொரு மார்பிலிருந்து பால் சொட்டுவதும்  குழந்தைக்கு தேவையான அளவுக்கு பால்  சுரக்குதுன்னு அர்த்தம். அதேநேரத்தில் குழந்தை இரவில் அழுதால் பால் போதவில்லைன்னு அர்த்தம்.  குழந்தைக்கு இத்தனை முறைதான் பால் கொடுக்கனும்ன்னு அவசியமில்லை. குழந்தைக்கு தேவைப்படும்போதெல்லாம் பாலூட்டலாம். ஆறு மாதத்திற்கு பின் இட்லி, பழக்கூழ், கஞ்சி மாதிரியான உணவை கொடுக்கலாம். பந்தாவுக்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட பவுடர்களை கொடுக்காதீங்க. 

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தை சுத்தமா வச்சுக்கனும். பாலூட்டும் முன்னும் பின்னும் வெதுவெதுப்பான நீரில் கழுவி, உலர்ந்த துணியால் மார்பகத்தை துடைச்ச பின்னே பாலூட்டனும். குழந்தைக்கு உடல் முடியாதபோது பால் சரிவர குடிக்காம பால் கட்டிக்கிச்சுன்னா  சூடான ஒத்தடம் கொடுத்து, அடிக்கடி பாலை பீச்சிடனும். இல்லன்னா, அந்த பால் குழந்தையின் செரிமான பிரச்சனைக்கு கொண்டு செல்லும். சில குழந்தைங்க பாலை அடிக்கடி வாயிலெடுக்கும். இது இயல்புதான். குழந்தையின் எடையில், ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாதவரை கவலைப்படவேணாம். குழந்தைக்கு பாலூட்டியதும், ஈரத்துணியைக்கொண்டு உதட்டை துடைத்து, மார்பு, முதுகை தடவி விட்டு தோளில் சாய்ச்சுக்கனும். அதனால், வயிற்றிலிருக்கும் வாயு வெளியேறும்.  குழந்தைக்கு படுத்துக்கிட்டு பாலூட்டுதலும் தப்பு. 

  
பேஷன்ற பேர்ல சின்ன குழந்தையை வச்சிக்கிட்டிருக்கும் பெண்கள் வெளில வரும்போது சுடிதார் மாதிரியான மாடர்ன் உடைகளை அணியாம புடவை அணியலாம். புடவையைப்போல் குழந்தைக்கு பாலூட்ட வசதியான உடை ஏதுமில்ல. மற்ற உடைகளில் இந்த சௌகரியம் வராது. அதனால் வெளியிடங்களில் பால் கொடுக்க கூச்சப்பட்டுக்கிட்டு புட்டிப்பாலை கொடுக்க கூடாது. வெளியில் செல்லும்போது தாய்ப்பாலை பீச்சி புட்டியில் கொடுப்பதும் தப்பு. வெளியில் போகும்போது தாய்ப்பால் ஊட்ட வசதியா பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட பிரா, நைட்டி, சுடிதார்லாம் விக்குது. தாய்ப்பாலின் மகத்துவத்தை இந்த கால பெண்கள் அறியும்பொருட்டுதான் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமா உலக சுகாதார அமைப்பு அமைச்சிருக்கு, தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை.

நன்றியுடன்,
ராஜி

15 comments:

 1. அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை

  ReplyDelete
  Replies
  1. ஏதோ என்னால் முடிஞ்ச ஒரு பொறி..

   Delete
 2. நல்ல பகிர்வு. பலருக்கு தாய்ப்பாலின் மகத்துவம் புரிவதில்லை இப்போது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ண்ணே. பேஷன்ற பேரில் சீரழியுதுங்க.

   Delete
 3. Replies
  1. போரடிச்சுட்டேனோ!!

   Delete
  2. இதுதான் தேவையான பதிவு.

   Delete
 4. பயனுள்ள தகவல் களஞ்சியம்.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் படித்தவை கேட்டவை, அனுபவம்தான்ண்ணே.

   Delete
 5. மிக மிக சிறப்பான பகிர்வு ராஜி க்கா...

  ReplyDelete
 6. அனைத்தும் படித்தவை, கேட்டவை

  ReplyDelete
 7. மகத்துவமான பதிவு🙏

  ReplyDelete