Friday, April 27, 2018

அல்வா நகரத்து நாயகன் நெல்லையப்பர் ஆலய கும்பாபிஷேகம்

தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்”
எனப்பாடல்பெற்ற தலம்,  சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் தாமிரசமை எனப்போற்றப்படும் தலம், திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல்பெற்ற தலம்,   அருணாசலகவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடல்பெற்ற தலம். 1500 ஆண்டுகால பழமையான தலம், நால்வகை வேதங்களும் தவமிருந்து  சிவப்பெருமானுக்கு நிழல்தரும் மூங்கில் மரங்களாக பிறப்பெடுத்த தலம், ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட மணிமண்டபம், ஆசியாவின் மிகப்பெரிய கோவில்..ன்னு பல சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லயப்பர் ஆலயம். 
ராமக்கோன் என்பவர் தினமும் இப்போது நெல்லையப்பர் கோவிலிருக்கும் இடம் முன்பு மூங்கில் தோட்டமாய் இருந்தது. அந்த வழியாய் தினமும் மன்னருக்கு பால் கொண்டு வருவது வழக்கம். ஒருமுறை ராமர்கோன் காலில் அங்கிருந்த மூங்கில் செடி இடறி பால்குடம் கீழே விழுந்து பால் கசிய ஆரம்பித்தது. பால் முழுவதுமாய் சிந்துவதற்குள் அரண்மனைக்கு பாலை கொண்டு போய் சேர்பித்தார்.  தினமும் அவ்விடத்தில் பால் சிந்துவது வாடிக்கையானது. தினமும் வழக்கத்துக்கு மாறாக பால் குறைவது மன்னரின் காதுக்கு சென்றது. ராமர்கோனை கூப்பிட்டு மன்னர் விசாரித்தார். நடந்ததை ராமர்கோன் சொல்ல, மன்னர் அவருடன் புறப்பட்டு மூங்கில்வனத்துக்கு வந்தார். அங்கிருக்கும் மூங்கில்களை வெட்டச் சொன்னார். அப்படி வெட்டும்போது சுயம்புவாய் லிங்கமூர்த்தி வேனுவனநாதராக காட்சி தந்தார். இந்த மூர்த்தம் சிறிது சிறிதாய் பலமுறை வளர்ந்து மன்னருக்கு காட்சியளித்தார். அவருக்கு கோவில் எழுப்புவதாய் மன்னன் வேண்டிக்கொண்டு கட்டிய கோவிலே இன்றைய நெல்லையப்பர் கோவில். சன்னிதிக்கு பின்புறம் இன்றும் இத்தல விருட்சமாய் மூங்கில் நிற்பதை பார்க்கலாம். வேணுநாதர் காட்சியளிச்சார். அப்புறம் எப்படி நெல்லைநாதர்.....ன்னு நீங்க யோசிக்குறது புரியுது. அதுக்கொரு காரணம் இருக்கு. பார்க்கலாம். 

வேதபட்டர்ன்ற  சிவபக்தர், சிவன்மேல் அதிக பக்தி கொண்டவராக இருந்தார்.  தினமும் புதுநெல்லினை அரிசியாக்கி சிவனுக்கு நைவேத்தியம் செய்வது அவரின் வழக்கம்.  தன்மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். அப்படியும் தன் கைங்கரியத்தை விடாமல், தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து தனது கைங்கரியத்தை நிறைவேற்றி வந்தார்.  அப்படி ஒருநாள் சேகரித்த நெல்லை கோவிலுக்கு எதிரில் காயப்போட்டு குளிக்கச் சென்றபோது, திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில்,  நெல் நனைந்து விடப்போகிறதென எண்ணி, சிவனை வேண்டிக்கொண்டே, நெல்லை நோக்கி ஓடினார். மழை வெள்ளத்தில் நெல் அடித்துச்செல்லாமல் இருக்க வேலிபோல் தண்ணீர் தேங்கி நின்றதுடன், நெல் காயவைத்த இடத்தில் மட்டும் வெயில் அடிப்பதைக்கண்டு திகைத்து நின்றார். இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராமபாண்டியனும் இந்த அதிசயத்தை காண வந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்க ஆரம்பித்தனர். 

கோவிலுக்குள் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி நம்மை வரவேற்கும். அடுத்து, கொடிமரத்தை வலம்வந்து கோவிலின் உள்ளே இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேராய் சென்றால் நெல்வேலிநாதரை வழிப்படலாம். பின்னர், வேணுவனநாதருக்கு வடப்புறமாக கிடந்தக்கோலத்தில் பெரிய உருவத்துடன் ரங்கநாதரின் தரிசனம் கிடைக்கும்.  மூலவரைக் காண்பதற்குமுன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லா சிவன் கோயில்களையும்போல  தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே இருக்கும். நெல்லையப்பர்,  சப்த கன்னியர்கள், சப்த முனிவர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.  மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.
காந்திமதி அம்மன் ஆலயம்..

அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம். அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப்பட்டவை. கி.பி. 1647ம் ஆண்டின்பொழுதும், வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து,  பின் பொதிகை மலையை அடைந்து பூமியை சமன் படுத்தினார்.  திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக்கோலத்தில் காட்சி அளித்தனர். 
இராமபிரான், சீதையைத்தேடி இலங்கைக்குச் செல்லும்முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

சுவேதகேது என்ற அரசன் இப்பகுதியை ஆண்டுவந்தான். நெல்லையப்பரின் தீவிர பக்தன்.,  வாரிசு இல்லாத நிலையில், அவனுக்கு இறுதிக்காலம் நெருங்கியது. எமன் வரும் நேரத்தில், அவன் நெல்லையப்பர் ஆலயத்தில் அமர்ந்து பூஜை செய்துக்கொண்டிருந்தான்.  அப்போது எமன் வந்து பாசக்கயிற்றை வீச,  அது அரசனோடு சேர்த்து சிவலிங்கத்தின்மீது விழுந்தது. இதனால் கோவம் கொண்ட சிவன் எமனை காலால் எட்டி உதைத்தார். பின்னர், மன்னர் விரும்பும்போது முக்தி அளிப்பதாய் வாக்களித்தார்.  இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென்கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலிநாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்றசீர்நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல் என பல்வேறு திருவிளையாடல்களை ஆடியுள்ளார் இத்தலத்தில் உறையும் ஈசன்.
நம் தமிழ்திருநாட்டை பொறுத்தவரை கோவில்கள் வெறும் இறைவனின் பெருமையை எடுத்து சொல்லும் விதமா மட்டும் இருக்காது. சித்திர, சிற்பக்கலை, கலாச்சாரத்தினை எடுத்துச்சொல்லும் விதமாதான் இருக்கும் அந்தவகையில் இக்கோவில் தலைச்சிறந்த கலைப்பொக்கிஷங்களில் ஒன்று.   திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற்கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கண்கொள்ளாக் காட்சி. தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், ஷாப்பிங்க் செல்லும் அக்கால கணவன் -மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனின் தாய்ப்பாசம்.  குழந்தை கண்ணனைக் கொல்லவந்த அரக்கி கையில் குழந்தையுடன்,  வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றின் நுண்ணிய வேலைப்பாடுகள் என காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்கிருக்கும், சிற்பங்களின் ரத்த ஓட்டம் நம் கண்ணுக்கு தெரியும். சதை மடிப்புகள், கண்களின் ஜீவன்கள் என ஒவ்வொரு சிற்பமும் உயிரோட்டத்தோடு இருக்கும். 

ஊஞ்சல் மண்டபம்...
96 வாழ்வியல் தத்துவங்களை எடுத்து சொல்வதுபோல 96 தூண்களைக்கொண்டது இம்மண்டபம்.  அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். ஆடிமாதம் அம்பாளுக்கு இம்மண்டபத்தில் வளைகாப்பு நடைப்பெறும். இந்த மண்டபத்தை 1635ம் வருடம் சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டியதாக சொல்லப்படுது.  இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் இருக்கு. இந்தக் குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை.  இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம்ன்னு பேர் உண்டானது.  
ஆயிரங்கால் மண்டபம்...
இக்கோவிலில் சிற்பங்கள் மட்டும் உயிர்ப்புடன் இல்லை. ஒரேமாதிரியான தோற்றத்தில் மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம். 520 அடி நீளமும், 63 அடி அகலமும் கொண்டது இம்மண்டபம். இந்த மண்டபத்தில்தான் ஐப்பசி மாசத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறும்.  பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெறும்.  ஆமை ஒன்று தன் முதுகில் இம்மண்டபத்தை தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே இங்கு வந்து இறைவனை வழிப்படுவதாய் நம்பிக்கை. 
 சோமவார மண்டபம்.. 
சுவாமி சன்னிதியின்  வடக்கு பக்கம் சோமவார மண்டபம் இருக்கும்.  கார்த்திகை மாசத்தின் சோமவாரநாட்களில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைப்பெறும் பூஜைகளும் இம்மண்டபத்தில்தான் நடைப்பெறும். 78 தூண்களை கொண்டது இம்மண்டபம். 

சங்கிலி மண்டபம்...
சுவாமி கோவிலையும், அம்மன் சன்னிதியையும் இணைப்பது போல இருப்பதால் இந்த மண்டபத்துக்கு சங்கிலி மண்டபம் என பேர் உண்டானது. 1647ம் ஆண்டு கட்டப்பட்டது இம்மண்டபம்.  காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன்,  புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன், ஆகிய சிற்பங்கள் இம்மண்டபத்தில் உள்ளது. 

மணி மண்டபம்...
இந்த மண்டபத்தின் மையத்தில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் இம்மண்டபத்துக்கு இந்த பேர் உண்டானது. நின்றசீர்நெடுமாறனால் கட்டப்பட்டது இம்மண்டபம். சுற்றி சுற்றி பல தூண்கள் இருப்பதுபோல்  ஒரேக் கல்லினால் செதுக்கப்பட்ட  இசைத்தூண் இம்மண்டபத்தில் உள்ளது. எந்த ஒரு தூணை தொட்டாலும் எதாவது ஒரு ஸ்வரம் ஏற்படும். மரக்கட்டையில் மான்கொம்பினால் தட்டினால்  அற்புதமான ஒலி கிடைக்கும்.  மொத்தம் 48 சிறிய தூண்களை கொண்டது இம்மண்டபம். 

வசந்த மண்டபம்...
கோடைக்காலத்தில் வசந்தவிழா கொண்டாடப்படுவதற்காக கட்டப்பட்ட மண்டபம் இது.  இம்மண்டபத்தை சுற்றிலும் மரங்கள் அடர்ந்த சோலை உள்ளது.  1756ம் ஆண்டு திருவேங்கட கிருஷண முதலியாரால் இந்த வனம் உண்டாக்கப்பட்டது. 

பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டத்தில் இக்கோவில் விரிவாக்கப்பட்டு இன்று 14 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு இக்கோவில். நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் திருமணம் செய்விக்கும்பொருட்டு, திருமால் திருநெல்வேலிக்கு வந்து தங்கியதால் இக்கோவிலில் தனிச்சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.  கோவிலில் இரண்டு ராஜக்கோபுரத்துடன் கூடிய, இரண்டு கருவறை உண்டு. ஒன்று நெல்லையப்பர் சன்னிதி. இன்னொன்று, நெல்லை கோவிந்தனுடையது. கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் இருப்பது இக்கோவிலின் சிறப்பு.   திருநெல்வேலியை சுற்றி, நவத்திருப்பதி தலங்கள் அமைந்துள்ளது.  

இக்கோவில்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜை இல்லை. அதுக்கு பதிலா கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் எல்லா சுவாமிகளுக்கும் பூஜை நடைப்பெறும். கார்த்திகை மாதத்து 30 நாளிலும் சுவாமி தங்கப்பல்லக்கில் வீதிஉலா வருவார். இக்கோவிலில் கந்தர்சஷ்டி விழா 15 நாட்கள் கொண்டாடப்படுது. கந்தர்சஷ்டி அன்று ஆறுமுகநாயினாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படும்.  இங்குள்ள துர்க்கை சிங்கம் மற்றும்மான் வாகனத்தில் தெற்கு நோக்கி இருப்பதால் எதிரிகளை அன்பால் அடக்குபவளாகிறாள். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான புதன், பொதுவாய் கிழக்கு பக்கம் பார்த்து இருப்பார். ஆனால்,  இங்கு வடக்கு பக்கம் பார்த்திருக்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலின் முக்குறுணி வினாயகரும்  வலது கையில் மோதகமும், இடது கையில் தந்தமுமாக இங்க இருக்கார். 


நெல்லையப்பருக்கு வேண்ட வளர்ந்தநாதர்,  மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர்ன்னு வேறு பேர்களும் உண்டு. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் இருப்பதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கமென்பதை இது உணர்த்தும். அதனால், இவருக்கு சக்திலிங்கம்ன்னு ஒரு பேர் உண்டு.  இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.  இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்திகளையும் தரிசிக்கலாம்.

திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் நீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது  என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலக்காரணம் என சொல்கிறார்கள். பொதுவா எல்லா கோவில்களிலும்  அபிஷேக தீர்த்தம் வடப்பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் கோமுகி இருக்கு. இந்த புனிதநீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
என்ன திடீர்ன்னு திருநெல்வேலி பக்கம் காத்து வீசுதுன்னு அதும் ரெண்டாவது பதிவான்னு நினைக்குறவங்களுக்கு இரு பதில்கள்...
1. இன்னிக்கு நெல்லையப்பர் ஆலய குடமுழுக்கு விழா..
2. இந்த கோவிலுக்கு டூர் போய் வந்த நேரத்தில், நான் பிறந்திருக்கும் விசயம் கேள்விப்பட்டு என்னை பார்க்க வந்த என் அப்பாவின் நண்பர்  அம்பாளின் நினைவா எனக்கு காந்திமதின்னு  பேர் வச்சாராம்.  போனில் எப்ப பேசினாலும் இந்த விசயத்தை சொல்லுவார். அந்த விட்டக்குறை, தொட்டக்குறைக்குதான் இந்த பதிவு. ராஜிங்குறது பெட் நேம் மட்டுமில்ல. ஒரு பெட்டோட நேமும்.கூட இனி, வலைப்பூவிலும் அதேப்பெயரில் தொடரலாம்ன்னு ஐடியாவில் இருக்கேன். ஆலோசனை சொல்லுங்க சகோஸ். 
நன்றியுடன்,
ராஜி. 

சொக்கனுக்கு ஆசைப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

நம் ஊரில் விளையாட்டாய் கணவனிடம், உங்க வீட்டில் மதுரை ஆட்சிப்போல!!ன்னு விளையாட்டாய் கேட்பாங்க. அதுக்கு காரணம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை பொறுத்தவரை மீனாட்சி அம்மனுக்குதான் முதல் மரியாதை. அவளுக்கு பின்னர்தான் ஈசனுக்கு மரியாதை. பொதுவாய் நம்ம ஊர் கோவில்களில் ஆண்கடவுள்தான் பிரதானம். அவர்தம் மனைவியருக்கு ஒரு ஓரமா தனிச்சன்னிதி இருக்கும். ஆனா, இங்கு அம்பிகைக்குதான் பிரதான சன்னிதி. அம்பிகையை வணங்கிய பின்னர்தான் ஈசனை வணங்கனும்.  தூங்கா நகரமான மதுரைக்கரசியான மீனாட்சி கைலாயவாசியான ஈசனை கைப்பிடித்த நன்னாள் இன்று.. மதுரையே கோலாகலமாய் கொண்டாடும் நாள் எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?! 
தனஞ்செயன்ன்ற வணிகன், தன் வியாபாரத்துக்காக கடம்ப வனம் ஒன்றில் ஓய்வெடுக்கும்போது, அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதனருகில் பொய்கை ஒன்றும் இருப்பதை கண்டார். சிவபக்தனான அவர், ஈசனை வழிப்பட்டு வணங்கி, அந்தப்பகுதியை ஆண்டுவந்த குலசேகரப்பாண்டியனிடம் தெரிவித்தார். பாண்டியனும் வணிகனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து வணங்கினார்.  சிவலிங்கத்தை சுற்றி கோவிலை எழுப்பினார்.  கோவிலை சுத்தி மதில், அகழியுடன்கூடிய பெரிய ஊரை நிர்மாணிக்க ஆசைப்பட்டு ஈசனிடம் வேண்டி நின்றார்.  தனது சடைமுடி மேல் மிளிரும் சந்திரனிடம் உள்ள புனித நீரை தெளித்து இந்த ஊரை புனிதமாக்கினார். மேலும், தன் கழுத்திலிருந்த பாம்பினை எடுத்து பாண்டியனுக்கு இந்த நகரின் எல்லையைக் காட்ட அனுப்பினார். அது, சுற்றி வளைத்து, வாயால் வாலை கவ்வி  நகரை அடையாளப்படுத்தி காட்டியது. அதனால், மதுரைக்கு ஆலவாய்ன்னும் பேரு.. 
முப்பெரும் வேந்தர்களான சேரர்கள் நெருப்பையும், சோழர்கள் சூரியனையும் பாண்டியர்கள் சந்திரனையும் தங்கள் குலதெய்வமாக வழிப்பட்டு வந்தனர். அதனால், பாண்டியர்கள் தங்கள் தலைநகருக்கு மதி(சந்திரன்) உறையும் நகர்ன்னு பெயர் சூட்டி, அது காலப்போக்கில் மதிறைன்னு ஆகி.. பின் மதிரைன்னு மருவி.. கட்டக்கடைசியா மதுரைன்னு இப்ப வந்து நிக்குது.  குமரிக்கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப்பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப்பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறுமதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப்பட்டு, அதுவே மதுரை என்றாகியது. வயலும் வயல் சார்ந்த இடமான மருத நிலமாதலால் மருதைன்னும் மதுரைன்னும் அழைக்கப்படுவதாயும் சொல்லப்படுவதுண்டு. 

குலசேகர பாண்டியனுக்கு பிறகு, அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனின் பட்டத்தரசி காஞ்சனமாலை. இருவருக்கும் நீண்ட நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பாண்டியன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அதன்பலனாக யாகக்குண்டத்திலிருந்து  3வயது பெண்குழந்தையாக அன்னை உமா மகேஸ்வரி அவதரித்தாள். தடாதகைன்னு பேரிட்டு அருமை பெருமையாய் குழந்தையை வளர்த்துவந்தனர். தடாதகை பெண் என்ற உணர்வே இல்லாமல் ஆணைப்போல வளர்ந்து வந்தாள். சகல போர்க்கலையிலும் தேர்ச்சி பெற்றாள். தக்கபருவம் வந்ததும் தடாதகைக்கு  மீனாட்சி என பேர் சூட்டி, மதுரைக்கு அரசியாய் முடிசூட்டினான் பாண்டியன்.  தன் கண்களால் மீன், தன்  முட்டைகளை அடைக்காப்பது போல குடிமக்களை தன் மீன்போன்ற விழியால் காக்கவேண்டி அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அன்னை, கன்னியாக, மதுரைக்கு முடிசூட்டிக்கொண்டதும் அந்நாட்டுக்கு கன்னி நாடு என பேர் உண்டானது. 
அரசருக்குண்டான கடமைகளில் ஒன்றான திக் விஜயம் மேற்கொண்டாள் மீனாட்சி. எதிர்த்த மன்னரையெல்லாம் வென்று தன் வசமாக்கிக்கொண்டாள். அவளது வீரத்துக்கு தேவலோகமும் அடிப்பணிந்தது. அடுத்து, கைலாயத்தை தன்வசப்படுத்த கைலாயம் நோக்கி சென்றாள்.  அங்கிருந்த ஈசன், மீனாட்சியை நேருக்கு நேர் நோக்க, அன்னையின் ஆண்தன்மை மறைந்து, பெண்தன்மை வெளிப்பட்டு, நாணத்தோடு தலைக்குனிந்து நின்றாள்.  
ஐயனும் அன்னையின் அழகில் சொக்கி நின்றார். அன்றிலிருந்து ஐயனுக்கு சொக்கநாதர் என பேர் உண்டானது.  தன்னை மணந்துக்கொள்ள அன்னை கேட்க, ஐயனும் செய்துக்கொள்வதாய் வாக்களித்து, திருமண நாள் குறித்து மீனாட்சியை அனுப்பி வைத்தார். 

சதாசர்வக்காலமும், சுடுகாட்டு சாம்பலை பூசியபடி, மண்டையோட்டை அணிந்து பித்தன் என பேரெடுத்த ஐயன், அன்னைக்காக, நறுமணப்பொடியில் நீராடி, தைலம் பூசி, மையிட்டு தன்னை அழகாக்கி, பொன்னாபரணம் சூட்டி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், தேவேந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி, முனிவர்கள், நாரதர் புடைச்சூழ, அன்னையை மணக்க வேண்டி மதுரை வந்தார். 

 அம்மையப்பனின் திருமணத்தை காண ஈரேழு உலத்திலிருந்த அத்தனை ஜீவராசிகளும் மதுரைக்கு வந்திருந்தனர்.  திருமண விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. பூரண அலங்காரத்தோடு, ஐயனை வரவேற்ற அன்னை, சிவனோடு வந்திருந்த சொற்ப எண்ணிக்கையில் வந்திருந்த ஆட்களை எண்ணி மனசுக்குள் எள்ளி நகையாடிப்படி, இங்கு திருமண விருந்து தடபுடலாய் தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்கள் உறவினர் இத்தனை பேரும் சாப்பிட்டாலும் உணவு மீதமாகி, வீணாகிவிடுமே! அன்னம் பழிப்பது பாவமாச்சே என பாசாங்கு செய்தாள் அன்னை.

அன்னையின் பொடி வைத்த பேச்சை உணர்ந்த ஐயன், மீனாட்சி! கவலைப்படாதே! நீ என்னுடன் வந்திருக்கும் குண்டோதரனுக்கு மட்டும் திருப்தியாய் உணவளி அதுபோதுமென பதிலுரைக்க, அதன்படி குண்டோதரனுக்கு உணவு பரிமாறப்பட்டது. அங்கிருந்த உணவுகள் அனைத்தையும் தின்றும் அவன் பசி ஆறவில்லை. உணவு உண்டதால் தாகமெடுத்து மதுரையிலிருந்த குளம், குட்டை என எதும் விட்டு வைக்காமல் காலி செய்துவிட்டு, இன்னும் பசி, தாகமென கத்தினான். கடைசியில் ஈசனிடம் சரணடைய, ஈசன் அவனை அழைத்துக்கொண்டு மதுரையின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று,  மணலில் கை வை என்றார். அப்படியே குண்டோதரன் கை வைக்க, அவ்விடத்தில் நீர் பிரவாகமெடுத்து ஓடியது. அந்நீரை பருகியதும் அவனது பசி, தாகம் நீங்கியது. அன்றிலிருந்து அந்த நீர் பிரவாகத்துக்கு வைகை எனப் பேர் உண்டானது. 

ஐயன் மதுரைக்கு திரும்பியபோது அன்னையின் ஆணவம் முற்றிலுமாய் அழிந்துவிட்டிருந்தது. பார்க்க சகியாத ஈசன் அன்னைக்காக அன்று சர்வ அலங்காரத்துடன் அன்னைக்கு சற்றும் குறைவில்லாத பேரழகனாய் சுந்தரேஸ்வராய் மாறி மீனாட்சியினை மணந்து மீனாட்சி சுந்தரேஸ்வரராய் மாறி அனைவருக்கும் அருள் புரிந்தனர். திருமணப்பரிசாக, மதுரையை தொடர்ந்து ஆளும் பொறுப்பினை அன்னைக்கே விட்டுத்தந்ததோடு, மீனாட்சிக்கு  நாட்டை  ஆள்வதில் உறுதுணையாய்  மதுரையின் மாப்பிள்ளையாய் மதுரையிலேயே தங்கிவிட்டார். மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் முருகன் அம்சத்தோடு உக்கிரபாண்டியன் பிறந்தான்அவனுக்கு தக்கப்பருவம் வந்ததும், அவனுக்கு முடிசூட்டி, மதுரையை அவன்வசம் ஒப்புவித்து அம்மையும், அப்பனும் கைலாயம் திரும்பினர். 

அன்னைக்கு அளித்த வாக்கின்படி, இன்றும் மதுரையில் அன்னைக்கே முதலிடம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அன்னையை வழிப்பட்டபின்னரே ஐயனை வழிப்படவேண்டும்.  மதுரை மீனாட்சி அம்மனின் வடக்கு வாசல் கோபுரம் நீண்ட நெடுகாலம் மொட்டை கோபுரமாய்தான் இருந்தது, நாட்டுக்கோட்டை நகரத்து வணிகர்கள்  இப்போதிருக்கும் கோபுரத்தினை கட்டினர். மொட்டைக்கோபுரத்தின் அடியில் பாண்டி முனி என்னும் முனீஸ்வரன் ஆலயம் உள்ளது.  இங்கு சுருட்டுதான் முக்கிய படையல்.  அதேப்போல, கிழக்கு கோபுரத்தினடியில் மதுரைவீரனுக்கு தனிச்சன்னிதி உண்டு.  
தலவிருட்சமான கடம்ப மரம் வடக்கு கோபுரத்தின் அருகில் இருக்கு.  இக்கோவிலின் கீழ்திசையில் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி மண்டபம், முதலிமண்டபம்லாம் இருக்கு.  


அர்த்தமண்டபத்தை கடந்ததும், பச்சைநிற கருவறையில் மதுரைமீனாட்சி, இடக்கரத்தை கீழே தொங்கவிட்டப்படியும், வலக்கையில் கிளியை தாங்கியும், தன்னை வணங்குபவர்களுக்கு பதினாறு செல்வங்களையும் அள்ளி தந்து அருள்பாலிக்கிறாள்.  

அன்னையை தரிசித்தபின், கிளிக்கூட்டு மண்டபத்தின் வழியாக நடுக்கட்டுக் கோபுரவாசலை கடந்துசெல்லும்போது நம்மை வரவேற்பவர் முக்குறுணி பிள்ளையார்.  எட்டு அடி உயரத்தில் இருக்கும் இவர் ஒரே கல்லினால் செய்யப்பட்டவர்.
இவரை கடந்ததும், தூணில் ஆஞ்சிநேயர், இன்னொரு தூணில் பெண்ணுக்கு பிரசவம் நடப்பதுபோன்ற சிற்பமொன்று. இச்சிற்பத்துக்கு விளக்கெண்ணெய் பூசி, வஸ்திரம் சாத்தி, யோனி பூஜை செய்து வழிப்பட்டால் சுகப்பிரசவமாகுமென்பது நம்பிக்கை.  
அடுத்தது சுந்தரேஸ்வரர் ஆலயம். சுவாமியின் கருவறையை யானைகள் தாங்கி நிற்கும். கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதியின் முன் மண்டபத்தின் இடது ஓரத்தில், சிவன் கால் மாற்றி ஆடிய  வெள்ளியம்பலம் இருக்கு. சுந்தரேஸ்வரர் சன்னிதி வலப்புறத்தில் வந்திப்பாட்டி,சரஸ்வதி அம்மன், துர்க்கை அம்மன், எல்லாம் வல்ல சித்தர், பைரவர் சன்னிதிலாம் இருக்கு.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவம், சித்திரை மாதத்தில் நடைப்பெறும். இத்திருமண வைபவம் 12 நாட்கள் திருவிழாவாய் கொண்டாடப்படும். கொடியேற்றத்தின் எட்டாவது நாள் அம்மனின் பட்டாபிஷேகம் நடைப்பெறும், பட்டாபிஷேகத்தன்று அம்மன் பட்டாபிஷேக பந்தலுக்கு வந்தருள்வார். அவருக்கு பரிவட்டம் கட்டி, வினாயகர் சன்னிதியிலிருந்து கொண்டுவரப்படும் ராயர் கிரீடத்தையும், செங்கோலையும், அணிவிப்பர். பின் அம்மனுக்கு பிடித்த வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு திருவீதி உலா நடைப்பெறும்.  ஒன்பதாம் நாள் மீனாட்சியின் திக்விஜயமும், பத்தாம்நாள் திருக்கல்யாணமும், பதினொன்றாம் நாள் தேரோட்டமும், பனிரெண்டாம் நாள் சித்திரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் அம்பாளுக்கு தீர்த்தவாரியும் நடக்கும். 
இத்திருமண நிகழ்வை கண்டுகளித்தால் திருமணத்தடை நீங்குமென்பது ஐதீகம். பிள்ளைவரம் கிடைக்கும். திருமண வைபவம் முடிந்ததும், சுமங்கலி பெண்களுக்கும், திருமண வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கும் மாங்கல்யம் கோவில் நிர்வாகத்தால் தரப்படும். திருமண விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இந்த சித்திரை திருவிழாவின் முதல் நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தால்  பிறவிப்பயன் தீரும். இரண்டாம் நாளில் தரிசித்தால் உணவு பஞ்சம் பீடிக்காது. மூன்றாம் நாளில் தரிசித்தால் எம பயம் நீங்கும், எதிரிகள் விலகுவர், சகல ஐஸ்வரியங்களும் கிட்டும், நான்காம் நாளில் தரிசித்தால் வியாபாரிகள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் நாள். இந்நாளில் தரிசித்தால் வியாபாரம் செழிக்கும். ஐந்தாம் நாளில் தங்ககுதிரை வாகனம். நாக்கை துருத்தியபடி, கண்ணை உருட்டியபடி வரும் குதிரையை பார்த்தால் செய்வினை தீயசக்திகளின் ஆதிக்கம் தீரும். ஆறாம் நாளில் ஞானசம்பந்தரின் வெப்பு நோய் தீர்த்தல் பற்றி ஓதப்படும்.  ஏழாம் நாளில் பிச்சாண்டவர் புறப்பாடு. இவரை தரிசிப்பதால் ஆணவம், மாயை, அகங்காரம், தற்பெருமை நீங்கும். எட்டாம் நாளில் ஊடல் உற்சவம், தம்பதியர் ஒற்றுமை பலப்படும். ஒன்பதாம் நாள் திக்விஜயம். இந்நாளில் தரிசித்தால் ஊர்ப்பயணம் வசப்படும். மாயை அகன்று தான் யாரென்று புலப்படும். பத்தாம் நாளில் திருமணத்தன்று தரிசித்தால் திருமணத்தடை அகலும், அன்பான கணவனை பெண்களும், பொறுப்பான மனைவியை ஆண்களும் அடைவர். திருமண ஆனவர்களுக்கு கணவன் மனைவி உறவு பலப்படும், குழந்தை வரம் கிட்டும்.


இத்தோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பத்திய பதிவு முடிஞ்சுது. ஆனா, தூங்கா நகரமான மதுரையில் கோலாகலத்துக்கு குறைவில்லை. அடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்க கிளம்பிடுவார். அதை ஞாயிறு அன்னிக்கு பார்ப்போம். 
நன்றியுடன்,
ராஜி

Thursday, April 26, 2018

பாலியல் கொடுமைகளிலிருந்து சிறுமிகளை காக்கும் போஸ்கோ சட்டம்


சமீப காலங்களில் சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள்  அதிகம் நடக்குது. சிறுமிகளுக்கு சமமா சிறுவர்கள்மீதும் இந்தமாதிரியான பாலியல் அத்துமீறல்கள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, அதுலாம் வெளிச்சத்துக்கு அதிகம் வருவதில்லை. உயிர்சேதம் நிகழும்போது மட்டுமே செய்திகளில் அடிபடும். பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் எதிர்கால நலன் கருதி பெரும்பாலும் மறைச்சுடுவாங்க. இல்லன்னா கட்டப்பஞ்சாயத்து மூலம் இந்த விசயம் வெளில வராம பார்த்துப்பாங்க. பாலியல் வன்கொடுமையோடு, சித்திரவதைகள், உயிரிழப்புன்னு  குற்றத்தின் அடர்த்திக்கேற்ப அந்தக்கொடுமை, அப்போதைக்கு விவாத பொருளாக்கி, சிலநாளில் அங்கிருந்து நகர்ந்துடுவோம். மீண்டும் அடுத்த குற்றம் நிகழ்ந்தால், கடுமையான தண்டனை இருந்தால் இம்மாதிரியான குற்றம், நடக்காது, பெண்ணை இப்படி வளர்க்கனும், ஆணுக்கு இப்படி புத்தி சொல்லனும்ன்னு மீண்டும் விவாதிப்போம். சமூகவலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நடந்த கொடுமைக்கு எதிரா வைத்த பல்வேறு கருத்துகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும், சமீபத்துல அதிகரித்து வரும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு காணவும் மத்திய அரசு புதுசா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு. அதுக்கு பேரு போஸ்கோ.

 மாநிலங்களவையில் 2012ம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும்முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.


பொதுவான அம்சம்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையிடும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் சொல்லுது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டுமென்பது மிக முக்கியம். சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கு.
சிலவகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணத்துக்கு, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்கள்ன்னு அவர்களே இந்தமாதிரி குற்றத்தில் ஈடுபடும்போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் சொல்லுது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படனும். தனிக்காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்படனும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்ததுன்னு பார்க்கனும். சிலசமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாத்தனும்.

குழந்தை நலன்
இக்குற்றத்திற்கென சிறப்பு நீதிமன்றங்கள்  நிறுவப்படனும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை புகார் கொடுப்பது,  முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்குமூலப் பதிவு, வழக்கு நடப்பது.. என அனைத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தயின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோதான் பதிவு செய்யப்படனும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரிதான்  சாட்சியத்தை பதிவு செய்யனும். அப்படி விசாரிக்கையில் போலீஸ் அதிகாரி யூனிஃபார்ம்ல இருக்கக்கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியுடன் செய்யனும். மருத்துவப் பரிசோதனை, பெற்றோர், உற்றோரின் முன்னிலையில் செய்யனும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேரும்போது, மருத்துவர்கள் காவல்துறை அல்லது நீதித்துறையின் உத்தரவைக் கேட்கக்கூடாது. வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்கனும். விசாரணையோ, வழக்கோ, வாக்குமூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக்கூடாது. குறுக்கு விசாரணைன்ற பேரில் குழந்தையை சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக்கூடாது.


சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகள்
குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள்தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறி தப்பிக்க்க பார்க்கலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகிறது.

மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன்கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளிதான், தான் குற்றம் செய்யவில்லைன்னு நிரூபிக்கனும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக்கூடாது என்பதும்  இதன் முக்கிய நோக்கம்.

இழப்பீடு அல்லது நிவாரணம்
சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்கலாம். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய்விட்டாலும்கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத்தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுத்துக்கனும்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எச்.ஐ.வி. நோய்க்கிருமி தாக்கியிருந்தாலோ, கர்ப்பமாகிவிட்டாலோ அல்லது  ஊனமடைந்துவிட்டாலோ  அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப்படனும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்கனும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட்களுக்குள் இது அளிக்கப்படவேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தையும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்?!  அதனால், இவைக் குறித்து, வழக்கின் ஆரம்பத்திலேயே  அவர்களுக்கு  கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத்தின்கீழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேப்போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்படனும்.தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.

கர்நாடக அரசின் புதிய சட்ட விதி
பள்ளிக் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்தது. இதற்கான சட்ட வரைவு தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரின் சுகாதாரம், அடிப்படை வசதிகள், தனிப்பாதுகாப்பு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில், பள்ளி, கல்லூரி மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப் பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இருப்பினும் பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் குறையவில்லை. 
இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன்முறையாக பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக சட்ட விதிமுறைகளை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்களுக்கும் சட்டத்தின்மூலம் கடிவாளம் போட அரசு முடிவு செய்தது. அதற்காக புதிய சட்ட விதிமுறைகளை கைத்தேர்ந்த சட்ட நிபுணர்கள் மூலம் தயாரித்து அதை மூன்று தொகுப்புகளாக பிரித்துள்ளது. முதல் தொகுப்பில் பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது தொகுப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தொகுப்பில் பள்ளிகளில் கட்டாயம் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் உள்பட பிற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள் நீதி சட்டம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கல்வி உரிமை சட்டம், போஸ்கோ சட்டம், ஐ.நா., சபையின் வழிகாட்டுதல் உள்பட பல அம்சங்கம் இதில் இடம் பெற்றுள்ளது.  
பனிரெண்டு வயதுக்கு கீழான சிறுமிகள்மீதான பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனைன்னு நாடாளுமன்றத்தில் புதுச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் அதேநேரத்தில் வரப்போகும் புதுச்சட்டம் பெண்பிள்ளைகளுக்கு மட்டும்தானா?! இல்ல ஆண்பிள்ளைகளுக்குமானதா?!  பாலியல் சீண்டலை வெளியில் சொல்லக்கூடாதுன்னு  கொலைக்குற்றம் அதிகரிக்கும்.. அதென்ன 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்ன்னு.. மொத்தமா பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை.. அதும் பொதுவெளியில் நிறைவேற்றப்படும்ன்னு தீர்ப்பை மாத்துங்க நாட்டாமைன்னு சமூகவலைத்தளங்களில் கருத்துகள் உலா வருது.  

எது எப்படியோ பொக்கிஷமா குழந்தைகளை நினைக்கலைன்னாலும் பரவாயில்ல போகப்பொருளாய் நினைக்கும் அவலம் இனி நேரமா இருந்தால் சரி.

நன்றியுடன்,
ராஜி