Thursday, April 26, 2018

பாலியல் கொடுமைகளிலிருந்து சிறுமிகளை காக்கும் போஸ்கோ சட்டம்


சமீப காலங்களில் சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள்  அதிகம் நடக்குது. சிறுமிகளுக்கு சமமா சிறுவர்கள்மீதும் இந்தமாதிரியான பாலியல் அத்துமீறல்கள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, அதுலாம் வெளிச்சத்துக்கு அதிகம் வருவதில்லை. உயிர்சேதம் நிகழும்போது மட்டுமே செய்திகளில் அடிபடும். பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் எதிர்கால நலன் கருதி பெரும்பாலும் மறைச்சுடுவாங்க. இல்லன்னா கட்டப்பஞ்சாயத்து மூலம் இந்த விசயம் வெளில வராம பார்த்துப்பாங்க. பாலியல் வன்கொடுமையோடு, சித்திரவதைகள், உயிரிழப்புன்னு  குற்றத்தின் அடர்த்திக்கேற்ப அந்தக்கொடுமை, அப்போதைக்கு விவாத பொருளாக்கி, சிலநாளில் அங்கிருந்து நகர்ந்துடுவோம். மீண்டும் அடுத்த குற்றம் நிகழ்ந்தால், கடுமையான தண்டனை இருந்தால் இம்மாதிரியான குற்றம், நடக்காது, பெண்ணை இப்படி வளர்க்கனும், ஆணுக்கு இப்படி புத்தி சொல்லனும்ன்னு மீண்டும் விவாதிப்போம். சமூகவலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நடந்த கொடுமைக்கு எதிரா வைத்த பல்வேறு கருத்துகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும், சமீபத்துல அதிகரித்து வரும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு காணவும் மத்திய அரசு புதுசா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு. அதுக்கு பேரு போஸ்கோ.

 மாநிலங்களவையில் 2012ம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும்முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.


பொதுவான அம்சம்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையிடும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் சொல்லுது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டுமென்பது மிக முக்கியம். சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கு.
சிலவகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணத்துக்கு, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்கள்ன்னு அவர்களே இந்தமாதிரி குற்றத்தில் ஈடுபடும்போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் சொல்லுது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படனும். தனிக்காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்படனும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்ததுன்னு பார்க்கனும். சிலசமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாத்தனும்.

குழந்தை நலன்
இக்குற்றத்திற்கென சிறப்பு நீதிமன்றங்கள்  நிறுவப்படனும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை புகார் கொடுப்பது,  முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்குமூலப் பதிவு, வழக்கு நடப்பது.. என அனைத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தயின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோதான் பதிவு செய்யப்படனும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரிதான்  சாட்சியத்தை பதிவு செய்யனும். அப்படி விசாரிக்கையில் போலீஸ் அதிகாரி யூனிஃபார்ம்ல இருக்கக்கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியுடன் செய்யனும். மருத்துவப் பரிசோதனை, பெற்றோர், உற்றோரின் முன்னிலையில் செய்யனும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேரும்போது, மருத்துவர்கள் காவல்துறை அல்லது நீதித்துறையின் உத்தரவைக் கேட்கக்கூடாது. வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்கனும். விசாரணையோ, வழக்கோ, வாக்குமூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக்கூடாது. குறுக்கு விசாரணைன்ற பேரில் குழந்தையை சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக்கூடாது.


சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகள்
குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள்தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறி தப்பிக்க்க பார்க்கலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகிறது.

மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன்கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளிதான், தான் குற்றம் செய்யவில்லைன்னு நிரூபிக்கனும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக்கூடாது என்பதும்  இதன் முக்கிய நோக்கம்.

இழப்பீடு அல்லது நிவாரணம்
சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்கலாம். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய்விட்டாலும்கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத்தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுத்துக்கனும்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எச்.ஐ.வி. நோய்க்கிருமி தாக்கியிருந்தாலோ, கர்ப்பமாகிவிட்டாலோ அல்லது  ஊனமடைந்துவிட்டாலோ  அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப்படனும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்கனும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட்களுக்குள் இது அளிக்கப்படவேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தையும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்?!  அதனால், இவைக் குறித்து, வழக்கின் ஆரம்பத்திலேயே  அவர்களுக்கு  கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத்தின்கீழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேப்போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்படனும்.தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.

கர்நாடக அரசின் புதிய சட்ட விதி
பள்ளிக் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்தது. இதற்கான சட்ட வரைவு தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரின் சுகாதாரம், அடிப்படை வசதிகள், தனிப்பாதுகாப்பு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில், பள்ளி, கல்லூரி மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப் பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இருப்பினும் பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் குறையவில்லை. 
இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன்முறையாக பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக சட்ட விதிமுறைகளை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்களுக்கும் சட்டத்தின்மூலம் கடிவாளம் போட அரசு முடிவு செய்தது. அதற்காக புதிய சட்ட விதிமுறைகளை கைத்தேர்ந்த சட்ட நிபுணர்கள் மூலம் தயாரித்து அதை மூன்று தொகுப்புகளாக பிரித்துள்ளது. முதல் தொகுப்பில் பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது தொகுப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தொகுப்பில் பள்ளிகளில் கட்டாயம் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் உள்பட பிற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள் நீதி சட்டம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கல்வி உரிமை சட்டம், போஸ்கோ சட்டம், ஐ.நா., சபையின் வழிகாட்டுதல் உள்பட பல அம்சங்கம் இதில் இடம் பெற்றுள்ளது.  
பனிரெண்டு வயதுக்கு கீழான சிறுமிகள்மீதான பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனைன்னு நாடாளுமன்றத்தில் புதுச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் அதேநேரத்தில் வரப்போகும் புதுச்சட்டம் பெண்பிள்ளைகளுக்கு மட்டும்தானா?! இல்ல ஆண்பிள்ளைகளுக்குமானதா?!  பாலியல் சீண்டலை வெளியில் சொல்லக்கூடாதுன்னு  கொலைக்குற்றம் அதிகரிக்கும்.. அதென்ன 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்ன்னு.. மொத்தமா பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை.. அதும் பொதுவெளியில் நிறைவேற்றப்படும்ன்னு தீர்ப்பை மாத்துங்க நாட்டாமைன்னு சமூகவலைத்தளங்களில் கருத்துகள் உலா வருது.  

எது எப்படியோ பொக்கிஷமா குழந்தைகளை நினைக்கலைன்னாலும் பரவாயில்ல போகப்பொருளாய் நினைக்கும் அவலம் இனி நேரமா இருந்தால் சரி.

நன்றியுடன்,
ராஜி



8 comments:

  1. விழிப்பூட்டும் பதிவு........அச்சு ஊடகங்களில் விலாவாரியாக இந்தச் சட்டம் குறித்து விளக்கப்பட்டாலும்,இது போன்ற சமூக வலைத் தளங்கள் மூலம் விழிப்பை ஏற்படுத்த முயற்சித்தது பாராட்டுக்குரியது....... நன்றி தங்கச்சி பதிவுக்கு....

    ReplyDelete
    Replies
    1. ஃபேஸ்புக்கில் சுட்ட பதிவுண்ணே.

      Delete
  2. நல்ல சட்டம் தான். எத்தனை தூரம் செயல்படுத்துவார்கள், இதில் என்னென்ன அரசியல் விளையாட்டுகள் நடக்கும் என்பதைப் பார்கத் தானே போகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சட்டம் இயற்றும்போதே கூடவே சேர்த்து தப்பிக்கும் வழிகளையும் உண்டாக்கிதான் வைப்பாங்க நம்மாளுங்க.

      பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் எத்தனை பேருக்கு கிடைக்குதுன்னு நமக்கு தெரியாதே

      Delete
  3. சட்டம் இயற்றுவது இருக்கட்டும், அதை நடைமுறைப்படுத்த வேண்டுமே... ஏற்கெனவே இருந்த சட்டங்களையே ஒழுங்காய் நடைமுறைப் படுத்தியிருந்தாலே பயம் வந்திருக்காதா? சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தித் தப்பிக்கப் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்.

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்படி போனாலும் நம்மாளுங்க கேட் போடுவாங்களே!

      Delete
  4. சட்டம் அருமைதான். ஆனால் அதன் செயல்பாடுதான்......

    ReplyDelete