போன வாரம் திருக்குறுங்குடிஅழகிய நம்பிராயர் கோவிலில் தரிசனம் முடிச்சாச்சு! இனி, மலைக்கோவிலில் இருக்கும் திருமலை
நம்பியை தரிசிக்கச் செல்லலாம்.... அதுக்குமுன்
கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி இருக்கு. அதுல அதிகபட்சமா 8 பேர் வரை பயணம்
செல்லலாம். ஏன்னா, மலைமேல் ஏறி செல்ல எடை குறைவாக இருந்தால் நலம். தனி ஒரு ஆளாக
போனாலும் சரி இல்ல 8 பேர் கொண்ட
கும்பலாக இருந்தாலும் சரி 800 ருபாய்
வசூலிக்கிறாங்க. சிலபேர் மலையடிவாரம் வரை சென்று காட்டுபாதை வழியே நடந்தே மலைநம்பிகோவிலுக்கு செல்றாங்க. கீழ்கோவிலில் இருந்து மலையடிவாரம் வரை செல்ல 80 ரூபாய் வசூலிக்கிறாங்க கீழ்கோவிலிருந்து மலையடிவாரம் சுமார் 6
கிமீ தொலைவு இருக்கும்.
இதுதான்
கோவிலுக்குச் செல்லும் மலையடிவார செக் போஸ்ட். வனத்துறை கட்டுப்பாட்டுல இந்த இடம் இருக்கு. இங்கே கோவிலுக்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் இல்ல. ஆனா பக்தர்கள் அல்லாதவர்கள்
அருவியில் குளிப்பதற்க்கு கட்டணம் வசூலிக்கிறாங்க. அதுப்போல டிஜிட்டல் கேமேராவிற்கு 25
ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சரி, இனி நாம
மலைக்கு செல்லலாம். செக் போஸ்ட் கேட்லயே வனவிலங்குகள் பத்தின எச்சரிக்கை அறிவிப்பு
வச்சு இருகிறாங்க. இங்கே புலிகள் இருக்கிறதாம் ஆனா அவை மலையின் உச்சியில் தான்
இருக்கும். கீழே வருவது இல்லை(புலியைவிட கொடிய மிருகமான மனிதர்களைக் கண்டு அதற்கு அச்சமோ!!??).
மத்தபடி வெயில் சாயும் மாலை வேளையில் எல்லா மிருகங்களும் நாம் போகும் பாதையில் நடமாட ஆரம்பிக்கும். அதனால 4 மணிக்குள்ளே திரும்பி வந்திடனும்ன்னு எச்சரிக்கை
பண்ணினார் வனத்துறை அதிகாரி. அதைவிட முக்கியமான விஷயம் என்னனா நாங்க சென்ற அன்று நாங்க போன அன்னிக்கு அதிகாலையில பெரிய சிறுத்தை ஒண்ணு இந்த கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் நடமாடியதாக
சொன்னதால உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது. அதனால, ஜீப்ல போனா பாதுகாப்பு. ஆனா
வனத்தை முழுமையாக ரசிக்க முடியாது நடந்து சென்றா கவனமாக செல்லுங்கள் என அந்த அதிகாரி சொன்னார். அதனால இறைவனின் மேலே பாரத்தை போட்டு நடந்தே மலை உச்சிக்கு சுமார் 4 கிமீ தூரத்தை கடந்து இயற்கையையும் ரசித்து, காட்டு மிருகங்கள் வந்தால் நான் ராஜி, நான் பிளாக்கரா இருக்கேன். உன்னைலாம் என் பதிவுல போடுறேன்னு சொல்லி தாஜா பண்ணிக்கலாம்ன்ற குருட்டு தைரியத்தில் நடந்தே செல்ல
முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.
பொதுவாக சித்தர்கள்
எல்லாம் சிவன்கோவில் மலைகளின் மேலேதான் இருப்பாங்க. ஆனா இங்கே ஆச்சர்யமாக பெருமாள்
கோவில் மலைமேலே சித்தர்கள் இருப்பது!! இங்கே சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கே பலர்
இங்கே வருவதுண்டாம். சிலருக்கு தரிசனமும் கிடைத்து
இருக்கிறதாம். இந்த நம்பி மலையில் இங்கே மலைமேலே இருக்கும் பெருமாள் அழகிய நம்பி
என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அதனால இந்த மலையும் நம்பிமலை என
அழைக்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் வனத்துறையின் செக் பாயிண்ட் இருக்கு. அதன்
வாசலின் இருபக்கமும் சித்தர்களான சிவாகியரும், யூகி முனிவரும் இட வலபக்கமாக
இருக்கிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு மலை பயணத்தை தொடங்கினோம்......
கரடு முரடான கற்கள்
நிறைந்த மலைப்பாதை. தண்ணீரெல்லாம் தெளிந்த நீரோடைப் போல அழகாக ஓடுகிறது. மரங்கள்
எல்லாம் பசுமையாக காட்சியளிக்கிறது. புதியவகை பறவைகள், வால்நீண்ட குருவிகள் எல்லாம்
பறக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. கேமரா ஆன் செய்வதற்குள் அது எங்கேயோ போய்
விட்டது!!!
மலைப்பாதையில் நடந்து
செல்வது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது. வழிநெடுக்க பறவைகளின் வித்தியாசமான
ஒலிகள், நீரோடையின் சப்தம், குரங்குகளின் குறுக்கு நெடுக்கு ஓட்டம் இதெல்லாம்
பார்த்துவிட்டு செல்வது இயற்கையோடு நம்மை ஒன்றிப்போக செய்தது.
இவ்வளவு கற்களும், தெளிவில்லாத வழிப்பாதையும் இருந்தாலும் ஆண்டுதோறும் இங்க வரும் பக்தர்களின்
எண்ணிக்கை அதிகமாம். ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருக்குமாம். அதேபோல் சனிக்கிழமைகளில் மலையடிவாரத்தில் இருந்தே நடந்து
செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாம்.
மொத்தம் 4 கிமீ தொலைவில் இப்பொழுது 2 கிமீ கடந்து வந்தாச்சு. இந்த வழியில் ஒரு பெரிய உடும்பு எங்களை கடந்து வேகமாக சென்று புதரில் மறைந்துக் கொண்டது. குரங்குகள் எல்லாம்
எங்க கைகளில் இருக்கும் பையில் ஏதாவது இருக்குமான்னு சுத்தி சுத்தி வந்தன. ஆனா, ஆச்சர்யப்படும் விதமா மரத்துக்கு மரம் தாவுற ஒரு உயிரினம் நம்ம கேமராவுக்குள்
சிக்கிவிட்டது.
குரங்குகளுடன்
ஒய்யாரமாய் கிளைகளுக்கு கிளை தாவி ஓடிக்கொண்டு இருந்தது. முதலில் அது ஒரு மரநாயோ என
நினைத்தோம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு காட்டு அணில்ன்னு. நானும் இப்பதான் முதல்முறையா வித்தியாசமான இந்த காட்டு அணிலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நல்லவேளை! அது
நாங்க படம் எடுக்ககும்வரை பக்கத்தில் குரங்காருடன் பொறுமையாக இருந்து எங்களுக்கு போஸ் தந்தது.
அதை ஜூம் பண்ணி
பார்க்கும் போது அடர்த்தியான கருமைநிற ரோமங்களுடன் அழகாக இருந்தது. நாங்க கோவிலுக்குப் போறோம்கிறதைவிட ஏதோ சுற்றுலா செல்வதைப்போல உணர்ந்தோம். இந்தக் கோடை வெயிலுக்கு
ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வதைவிட இதுமாதிரி இடங்களுக்கு செல்வது
பொழுதுபோக்கு சுற்றுலாவாக இல்லாமல் ஆன்மீக சுற்றுலாகவும் அமையும். இயற்கை எழில்
சூழ்ந்த நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ததுப் போலவும் இருக்கும்.
அதோ தெரிகிறப் பாறையில்
மாலைவேளையில் வெயில் சாயும் நேரம் சிறுத்தை புலிகள் ஓயவேடுக்குமாம். யானைகளும் இங்க இருக்கு. ஆனா பெரும்பாலும் இந்தப் பக்கம் வருவதில்லையாம். கரடிகள் அவ்வபோது வருமாம். புலிகள் கூட ராத்திரிவேளைகளில் நடமாடிய தடங்கள் இருக்குமாம். ஆனால் இதுவரை பக்தர்கள்
யாரும் பார்த்தது இல்லையாம். ஆனா காலையில் பூஜை செய்ய செல்லும் பூஜாரிகள்
வித்தியாசமான காலடித்தடங்களை பார்த்ததாக சொல்கிறார்கள்.
இதனிடையே இனி ஒரு வித்தியாசமான குரங்கு கூட்டம் நிறைய
வழி மறித்தன. இங்கே கீழே மனிதர்களினால் ஒரே ஒரு செக் போஸ்ட் நிர்வாகிக்கபடுது. ஆனா உள்ளே இங்கே குரங்கார் தின்பண்டங்கள் இருக்கிறதா!? எனப் பார்க்க
நிறைய செக் போஸ்ட் வச்சு இருக்கிறார். கையில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு ஓடி
விடுகிறார் இந்த சிங்கவால் குரங்கார். நானும் ஒரு கரடியாவது வரும் என கேமராவை ஆன்
செய்தே வைத்திருந்தேன்!!! ஆனா, ஒண்ணுமே வரலை. அதுக்குள்ளே தூரத்தில் கோவில் செல்லும் பாதை
தெரிந்தது.
இந்த இடத்தில இருந்து
கோவிலின் எல்கை ஆரம்பிக்கிறது. இந்த எல்லைக்கு மேல் மாமிச உணவு சமைக்கவோ, கொண்டுச்செல்லவோ
கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் திருமலை நம்பி மிகவும்
சக்தி வாய்ந்தவர். கோவில் எல்லைக்குள் தவறு செய்தவர்கள் நிறையப்பேர் மலைக்கு கீழே
செல்வதற்குள் ஏதாவது ஒருவகையில் தண்டிக்கபடுவது உறுதி என சொல்லப்படுகிறது. ஆனால், வனத்துறையினரின் எச்சரிக்கை என்னனா நம்பி கோவிலின் சுற்றுவட்ட பாதையில் உள்ளூர்
பகதர்கள் மாமிச உணவு சமைத்து உண்பார்களாம். அந்த ரத்தவாடைக்கு சிறுத்தை புலிகள்
நடமாட்டம் இருக்கும் அது பக்தர்களுக்கு அச்சுறுதலாக அமையும். அதனால மாமிச உணவை
தவிர்க்க அறிவிப்பு வைத்து இருக்கிறாங்க.
இங்கே வேறொரு
அறிவிப்பு பலகையும் இருக்கு. இங்கே திருக்கோவிலுக்கு செல்லுமுன் ஒரு பெரிய நீரோடை
இருக்கு. அதில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் வைத்துள்ளனர். இந்த நம்பியாறு
மூலிகைகள் கலந்த புனிதமான நீரோடை. இதில்தான் பெருமாள் தினமும் அருபமாகவும்
நீராடுகிறார். ஆகவே, இங்கே சோப்பு,சிகைக்காய்
போட்டு குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியே
கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆகையால் இந்த புனித நீரோடையை அசுத்தபடுத்தாதீர்கள்
மீறி அசுத்தப்படுத்துபவர்கள் இங்கே இருக்கும் காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரால்
தண்டிகப்படுவர். இது நிறைய பக்தர்களின் அனுபத்தின் மூலமாக தெரிந்துக் கொண்டோம் ஆகையால் பக்தர்கள் கவனமாக சுத்தமாக இருக்கவேண்டும் என கோவில் நிர்வாகம் மூலம் அறிவிப்பு
வைத்துள்ளனர். இடது ஓரத்தில் படிக்கட்டுகளின் மேலே தெரிவது தான் சங்கிலி பூதத்தான்
சன்னதி .
தூரத்தில்
மரங்களுக்கு நடுவே தெரிவதுதான் நம்பி கோவில். இங்கே நிறையக் குரங்குகள் இருக்கின்றன. கோவிலுக்கு செல்லும் முன் அங்கே இருக்கிற நம்பி தீர்த்தத்தில் கைக்கால் அலம்பி
செல்வது நல்லது. நாங்களும் அங்கே சென்று கைக்கால் அலம்பிவிட்டு, கொஞ்சம்
மூலிகை கலந் புனிதநீரை சிறிது பாட்டிலில் எடுத்துகொண்டு கோவிலுக்கு செல்ல
படியேறத்தொடங்கினோம்.
நுழைவாயிலின் வழியே
வந்தவுடன் தெரியும் உள்பிரகார மண்டபம். இந்த திருக்கோவில் எந்த மன்னர்களால்
திருப்பணி செய்யப்பட்டது என இங்கிருக்கும் பட்டர்களுக்கு தெளிவான விளக்கம்
தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். மற்ற திருக்கோவில்களைப் போல் புள்ளிவிவரங்களுடன்
சொல்ல முடியவில்லை. இருந்தாலும் சில சம்பவங்களை உதாரணமாக மேற்கோள் காட்டினார்கள்.
இது
திருகோவிலின் பக்கவாட்டு சுவர் இதில் அந்த சமயத்தில் இந்த திருகோவிலுக்கு வருகைத் தந்த
ஒரு ஆங்கிலேய அதிகாரி தன பெயரை cherry
oct 1808 ன்னு கல்லினால சுவரில் கிறுக்கி
வச்சு இருக்கிறார். அதனால இந்த சுவர் 1808 முன்பே கட்டப்பட்டு இருக்கலாம் எனத் தோணுகிறது . அடுத்து இங்கே கவனிக்கவேண்டிய
முக்கியமான விஷயம் இங்கிருக்கும் குரங்குகள்.
இங்கே இருக்கும் குரங்கு
கூட்டங்களை மற்ற குரங்குகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. இவை அனைத்தும் கோவில்
வளாகத்திலயே இருக்கு. அதனால உணவு பற்றாக்குறையினால கடுமையா ஆக்ரோஷத்துடன் சண்டை
போட்டுக்கொண்டே இருக்கு. அதனால, நாமும் கவனமாப் போகணும். முடிந்த அளவு அவைகளுக்கு
ஏதேனும் உணவு கொண்டு போகலாம். அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு போவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படி எடுத்துப் போக நேரிட்டால் பிளாஸ்டிக் கவர்களை வனங்களில் வீசுவதையாவது தவிர்க்கலாம்.
இதுதான் திருக்கோவிலின் பக்கவாட்டு தோற்றம். ஆரம்பக் காலத்தில் இங்கே இந்த மண்டபம் மட்டும்தான் இருந்ததாம். அதன்பிறகு
சுற்று கட்டு பிரகாரங்கள் கட்டப்பட்டதாம். கீழே இருக்கும் கோவில் வைகுண்டத்திற்கு
கூப்பிடு தொலைவு எனவும், மேலே இருக்கும் திருமலை கோவில் யமலோகத்திற்கு கூப்பிடும் தொலைவு
பக்கத்தில் இருப்பதால் இங்கே ராத்திரி யாரும் தங்குவதில்லை. அதேசமயம் ராத்திரி வேளை
புலி,கரடி,சிறுத்தை முதலிய மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக
காணப்படுமாம்.
இதுதான் திருக்கோவிலின்
முகப்பு. இந்த பெருமாள் மிகவும்
சக்திவாய்ந்தவர் எந்த வேண்டுதல் செய்தாலும் அது பலிக்கும். இது அனுபவப்பூர்வமாக நிறைய பக்தர்களுக்கு நடந்து
இருக்கிறது. இங்கு பூதேவி ஸ்ரீதேவி
சமேதே திருமலை அழகிய நம்பி நின்றப்படி காட்சி தருகிறார். அவருடைய அழகுத் திருமேனி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக
இருக்கிறது. கோவிலினுள்ளும் ஒரு உள்சுற்று பிரகாரம் இருக்கிறது. இங்கே இருக்கும்
பூசாரிகள் மிகவும் அன்புடன், நமது வேண்டுக்கோளை நம்பியிடம் வைத்து அருள்பெறுங்கள்
மிகவும் சக்திவாய்ந்த நம்பி கேட்டவர்க்கு கேட்டவரம் அருளும் நம்பி எனக்கூறி நமக்கு
அவர் பெருமைகளை விளக்கினார்.
இது திருக்கோவிலின்
வெளிப்பிரகார சுற்று. இந்தத் திருக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் இருந்தும் மற்றும்
கேரளாவிலிருந்தும் புரட்டாசி மாசம் விரதம் இருந்து, புரட்டாசி கடைசி சனிக்கிழமை
நடக்கும் விழாவில் பாதயாத்திரையாக கலந்துகொள்வார்களாம்.
கோவிலின் முன்பக்க
கட்டமைப்பில் இருந்து பார்க்கும்போது மலையின் மொத்த அழகும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. மேலும்,இந்த நம்பி கோவிலின் மேல் இருந்து பார்க்கும் போது கீழே ஒரு புளியமரம் தெரிகிறது. இந்த மரத்தின் அடியில் இன்றும் பல்வேறு சித்தர்கள் தவம் செய்கின்றனராம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் அந்த புளியமரத்தின்
அடிப்பாகத்தில் இருந்து சித்தர்கள் வெளியே வந்து தங்களுக்குள் பரிபாஷையில் பேசிப்கொள்வார்கள் என நம்பிமலைக் கோவிலில் இது இன்றைக்கும் நடக்கிறது என இங்கே இருக்கும் ஒரு
பெரியவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
இந்த மலைக்கோவிலிலிருந்து இடப்பக்கம் மிகவும் அடர்ந்த காட்டுப்பாதை இருக்கிறதாம். அங்கு ‘தாய் பாதம்’ என்று
இடத்திற்கு சென்றால் சித்தர்களின் தரிசனம்
கிடைக்குமாம். அவர்கள் வசிக்கும் குகைகளும்
ஆங்காங்கே நிறையக் இருக்கிறதாம். ஆனால், மிகவும் ஆபத்தான பயணம் என்பதால் வனத்துறையினர் கூட
அங்கே செல்வதில்லையாம். ஆனால், இந்தபகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை நன்கு
அறிந்தவர்கள் மட்டும் ஒரு குழுவாக நான்கு நாள் பயணமாக பொதிகை மலைக்கு சென்று
வருவார்களாம். ஆனால் இப்பொழுது வனத்துறையினரின் கட்டுபாடட்டினால் யாரும்
செல்வதில்லையாம். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலில் யாகம் வளர்த்து
பூஜை நடக்குமாம்.
ஒரு வழியாக மலை நம்பியை தரிசனம் செய்துவிட்டு
வெளியேவரும்போது திரும்பவும் குரங்குகள் ஆவேசமாக சண்டையிட்டு கொண்டு இருந்தன. கோவிலிருந்து கொஞ்சத் தொலைவில் ஒரு அருவி இருப்பதாகவும் அதில் குளிக்கலாம் எனவும்
சொன்னாங்க. ஆனா, ஒரு பிரிவினர் வேண்டாம் சாயங்காலம் ஆனதால காட்டு மிருகங்கள்
வரத்தொடங்கும் அங்கே செல்வது ஆபத்து. அதேசமயம் கீழே செல்ல 4 கிமீ நடந்து செல்லனும் அதனால சீக்கிரம் மலையிலிருந்து
இறங்கிவிடலாம்ன்னு சொன்னதால நாங்க இறங்கி வந்திட்டோம் அதுக்கு பதிலா வேறு ஒரு
இடத்தில தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் தெளிந்த தண்ணீர் குளுமையா பாறைகளுகிடையில்
ஓடி கொண்டு இருந்தது. மீன்களும் துள்ளிவிளையாடி
கொண்டு இருந்தன. அதில் ஆனந்தமா நீராடிவிட்டு வந்தோம்.
ஆரோக்கியமான
மலைக்காற்று. நன்றாக முங்கி
குளிக்கும்படியான மூலிகைச் சாறு கலந்த நம்பிமலை நம்பியாறு. சுற்றிலும் மலைகளும்
பசுமையான சூழல்களும், குரங்குகளின் சேஷ்டைகள். இந்த அருமையான நிகழ்வுகள் நமக்கு
நிச்சயம் மனசுக்கு சந்தோஷத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் இந்த திருமலை அழகிய நம்பி கோவிலுக்கு ஒருமுறை சென்று
இந்த பெருமாளை தரிசித்து வரலாம். மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம்தேடி பயணத்தில்
வேறு ஒரு கோவிலில் இருந்து சந்திக்கலாம்
படங்களும் பகிர்வும் அருமை ! வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteஅருமையான பகிர்வு.படங்களும்,நீங்கள் சென்று வந்த அனுபவமும் எங்களையும் ஆன்மீகப் பயணத்தில் ஒன்றச் செய்தது.நன்றி!
ReplyDeleteஆஹா ரொம்ப நல்லா இருக்கு படங்கள் எல்லாம் அப்படி ஒரு தெளிவு நேரில் பார்த்த மாதிரி ..உங்களால் ஒரு அபூர்வமான மலைகொவிலை தெரிந்து கொண்டோம் நன்றி
ReplyDeleteஇந்த கோடைக்கு ஒரு அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநன்றாக எழுதியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சித்தர்கள் பற்றி... (!)
ReplyDeleteபடங்கள் + தகவல்கள் அனைத்தும் அருமை சகோதரி...
படங்களும், பதிவும் அருமை. புரட்டாசி மாதங்களில் ஊரில் இருந்தால் பாதயாத்திரை சென்றதுண்டு. ஆற்றில் நீர் வரும்போது ஒருமுறை சென்று வாருங்கள். பளிங்கு நீர் பாய்ந்து வரும் போது பாறைகளில் மோதி உண்டாக்கும் கலகலவென்ற ஓசையும், பசும்போர்வை போர்த்திய காடும் கண்ணுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு மகிழ்வையும் தரும்.
ReplyDeleteஆஹா அற்புதம்!
ReplyDeleteஇயற்கை கொஞ்சும் காட்டுப்பாதையில் அதீத குதூகலத்தோடும் சற்றே திகிலோடும் உங்களோடு பயணப்படவைத்துவிட்டீர்கள் ராஜி. அழகழகான புகைப்படங்கள். காட்டு அணிலும் குரங்குகளும் ரசிக்கவைக்கின்றன. இறையோடு இயற்கையை இணைத்த நம்பிமலை பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும்.
ReplyDeleteannivarum 1 murai poi varavum om namo narayana namaha
ReplyDeleteதமிழகத்தில் இருக்கும் அறியாத மலைக் கோவில்களைப் பற்றி படிக்கும் போதெல்லாம் எவ்வளவு ரகசியங்களை தமிழகம் தன்னுள் பொதித்து வைத்துள்ளது என்ற ஆச்சரியம் மேலுகிறது. எங்கே இந்த இடம் இருக்கிறது என்பதை அறிய உங்கள் முந்தைய பதிவைப் படித்தேன். திருநெல்வேலி ஏர்வாடி என்றிருப்பது கொஞ்சம் ஏமாற்றம். அப்பா எவ்வளவு தூரம். நம்பி அழைத்தால் போய்வர வேண்டியது தான்.
ReplyDeleteகையை பிடித்து அழைத்துச் சென்றது போல் இருக்கிறது பதிவு. மிக நுண்ணிய விவரங்களையும் பதிவு செய்தது ஆச்சரியம். வாழ்த்துக்கள்.
வழக்கம் போல் கோவிலைப் பற்றிய அறிமுகம் படங்களுடன் அருமை.
ReplyDelete"//நான் ராஜி, நான் பிளாக்கரா இருக்கேன். உன்னைலாம் என் பதிவுல போடுறேன்னு //" -
இதைத்தான் "வேலியில போற ஓனானை வேட்டியில முடிஞ்சுக்கிறதுன்னு சொல்றதோ"!!!!!!!!!!!!!!!!!!
அற்புதமான பதிவு. செல்லும் பாதையை பார்க்கும்போதே செல்லத் தோன்றுகிறது.....
ReplyDeleteஇவ்விடங்களை எல்லாம் நேராக சென்று பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் உங்களின் தயவால் கண்டு களித்தேன். நன்றி.
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை தோழி.
அருமை படங்கள் தெளிவாகஇருக்கிறது நன்றி
ReplyDeleteமலைக்கோவிலின் அழகையும் அங்கு வீற்றிருக்கும் பெருமாளின் பெருமைகளையும் நேராக பார்ப்பதுபோன்ற அனுபவத்தை தந்துவிட்டீர்கள். நிச்சயம் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள். அருமையாக பயனுள்ள தகவல் தோழியாரே.
ReplyDeleteDear Admin,
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.
நன்றிகள் பல...
நம் குரல்
Where this Kurungudi? Which district it is situated? Where to get down if we come by bus/train? If we come by car, how to reach there, from the nearest known place/city.
ReplyDeleteஅருமையான பதிவு. நன்றி.
ReplyDeleteஐயா மிக்க நன்றி மலைக்கு மேல் உள்ள தாய் பாதத்தை தரிசித்து உள்ளீர்களா
ReplyDeleteநான் இந்த திருமலைநம்பியின் அருளை பெற்றிருக்கிறேன்.நினைத்ததை நடத்தி வைக்கும் தெய்வம்.இங்கே வரும் பக்தர்கள் நிச்சயம் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.அணைவரும் வருக நம்பியின் அருளை பெறுக.
ReplyDeleteகோவிந்தா கோவிந்தா
அடிக்கடி பசி எடுக்கும் எனவே சாப்பாடு எடுத்து செல்வது மிக மிக முக்கியம் கையில் ஒரு குச்சி/கம்பு எடுத்து செல்வது பாதுகாப்பு
ReplyDeleteஏர்வாடி சுப்பிரமணியன்