Wednesday, December 02, 2015

மாயாவி மயில்ராவணன் பாகம் 2 - தெரிந்த கதை தெரியாத உண்மை

மாயாவி மயில்ராவணன் பாகம் 1

போன பதிவில் இராம லட்சுமணரை மயில்ராவணன் பாதாள இலங்கைக்கு கடத்திச் சென்றது..., அவர்களை மீட்க அனுமன் செல்ல ஆயத்தமாவது வரை பார்த்தோம். பார்க்காதவங்க இங்க போய் பார்த்துட்டு வந்திடுங்க. சரி, இனிக் கதையைத் தொடர்வோம்....,பாதாள இலங்கைக்கு செல்லும் வழியைப் பற்றி வீபீஷணன் ஹனுமனுக்கு கூறலானான். அது நடுக்கடலில் லட்சக்கணக்கான கடல்தாமரைகள் படர்ந்து இருக்க, அவற்றில் ஒன்று மட்டும்  பெரியதாக இருக்கும், சிறிய உருவம் எடுத்து அந்த தாமரை தண்டின் வழியாக சென்றால் பாதாள உலகில் முதலில் அக்னி கோட்டை இருக்கும். அந்தக் கோட்டையின் உச்சியிலேயே ”மச்சவல்யபனெ”னும் ஒரு ராட்சசன் காவல் செய்கிறான்.  அவன், மகா பலசாலி. அவனை வெல்ல யாராலும் முடியாது. அவனோடு இரண்டரை இலட்சம் படைவீரர்கள் காவல் காக்கின்றனர். அவர்கள் ஒவ்ருவரும் ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள், தந்திரசாலிகள் அந்தக் கோட்டைக்குள் போனால் ஒரு குளம் இருக்கும். அந்த குளத்தில் இருந்துதான் அங்குள்ளவர்கள் பூஜைக்கு தண்ணீர் கொண்டுச் செல்வார்கள். அதையும் தாண்டிச் சென்றால்..., அதன் உள்ளே இருக்கும் கட்டிடங்கள் எல்லாமே அரண்மனைகள் போலவே இருக்கும். அதில் எது உண்மையான அரண்மனை எனக் கண்டுபிடிப்பது கடினம்.  அதிலொன்றில் தான் மயில்ராவணனின் அரண்மனை இருக்கும். அதில், மயில்ராவணன் எங்கு இருக்கிறான் என கண்டுப்பிடிக்கவேண்டும். ஏனெனில், அவன் தன் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பான் என்று கூறினார் விபிஷணன்.உடனே அனுமன் காலம் தாழ்த்தாது நடுக்கடலுக்கு சென்றார். அங்கு இரண்டு லட்சத்திற்கு மேல் தாமரைகள் இருப்பதை பார்த்தார். அதில் மிகப்பெரிய ஒரு தாமரை இருப்பதை பார்த்தார். அங்கே வினோதமான ஒரு சப்தம் வருவதையும் கேட்டார். அய்யோ இது என்னவென்று அனுமன் யோசித்தான். இனியும் யோசித்துக் கொண்டிருந்தால் நேரம் கடந்துவிடும் என நினைத்து வாயுபகவானை தியானித்தார். எதிரே தோன்றிய வாயுபகவானிடம் அந்த தண்டினுள்ளே பயங்கரமான சப்தம் வருகிறதே அது என்ன எனக் கேட்டார். 

அதற்கு, வாயுபகவான், அது ஒன்றுமில்லை, இந்தத் தண்டு உறிஞ்சும் அமைப்பு மூலம் வேலை செய்யுமாறு மயில்ராவணன் அமைத்துள்ளான். நீ கவலைப்படாதே! அது காற்றின் அமைப்பு மூலம் தான் வேலை செய்கிறது. நான் உனக்கு உதவி செய்கிறேன்.  நீ இதனுள்ளே புகுந்து செல் என வாயுபகவான் கூறினார். உடனே அனுமன் சிறிய உருவமெடுத்து தாமரைத்தண்டின் வழியாக பாதாள இலங்கைக்கு சென்றார். 

அங்கே சென்றதும் அங்கே இருந்த கோட்டையின் அமைப்பை பார்த்து அசந்து நின்றார். அனுமன் அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. வெளிப்பக்கம் இவ்வளவு பாதுகாப்பாகவும், அழகாவும் இருக்கிறது என்றால் உள்பக்கம் எப்படி இருக்கும் என எண்ணி இதனுள் எப்படி செல்வது என வியந்தவாறே சிந்திக்கலானார். கோட்டையின்மீது வீரர்கள் வில், அம்பு மற்றும் வாள் போன்ற ஆயுதங்களுடன் ஆட்டம், பாட்டு என உற்சாகமாய் காவல் காத்து நின்றனர். இவர்களை எப்படி அழிப்பது? நாம் இப்பொழுது தாக்க துவங்கினால் மீதி இருக்கும் படைகள் எல்லாம் சிதறி இருகின்றனர். அவர்கள்லாம் ஒன்று சேர்ந்தால் அவர்களை அழிப்பது கடினம். அதேச்சமயம் அவர்கள்மூலம் தகவலும் பரவினால்  ஆபத்தாக முடியும். என்ன செய்யலாம் என சிந்திக்கலானார். உடனே ஒரு யோசனை செய்தார் அங்கே இருக்கும் மரங்களில் பெரிய மரம் ஒன்றில் ஏறி வினோதமான ஒலி ஒன்றை எழுப்பினார்.உடனே, படைவீரர்கள், இதென்ன நம் ஊரில் அதிசயமான குரங்கு ஒன்று வந்துள்ளது என அனுமனை சூழ்ந்து அவரைப் பிடிக்க அவர்மீது பாய்ந்தார்கள், உடனே அனுமன் விஸ்வரூபம் எடுத்து அவர்கள் அனைவரையும் தனது வாலினாலும், கைகளாலும் சுழற்றி தரையில்  அடித்து துவம்சம் செய்யத் துவங்க, அந்த நேரம் பார்த்து மயில்ராவணனின் நம்பிக்கைக்குரிய தளபதி  மச்சயவல்லபனும் வந்து சேர்ந்தான். அங்கு ஒரு வானரம் நம்முடைய வீரர்களை வெட்டி சாய்க்கிறதே என்று கோபம் கொண்டு, அவனும் அனுமனுடன் போர் செய்தான். இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டாலும், அனுமனால் மச்சயவல்லபனை வெற்றிக்கொள்ள முடியவில்லை. மச்சயவல்லபனாலும் அனுமரை எளிதில் வெல்ல முடியவில்லை. இருவருமே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு களைத்து விழுந்தார்களே ஒழிய ஒருத்தரை ஒருத்தர் வெல்ல முடியவில்லை.

அதைக்கண்ட அனுமனுக்கு ஓரே ஆச்சர்யம். நான் இவ்வளவு படைகளையும், பெரிய வீரர்களையும்  அலட்சியமாக வென்றேன். ஆனாl, இவனை ஜெயிக்க முடியலயே!  இத்தனை பராக்கிரமசாலியான யார் இவன்? களைப்புற்று  எழ முடியாமல் இருவரும் கீழே வீழ்ந்து கிடக்கையில் மச்சயவல்லபனிடம் அனுமன் கேட்டார், 'மகனே  நீர் யார்? இத்தனை பலசாலியான உன்னுடைய  தாய் தந்தையரைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாமா என கேட்டார். அதைக் கேட்ட மச்சயவல்லபன் ' ஹேய் வானரமே! நீ யார் என்னைக் கேள்வி கேட்க? என்னை எதிர்த்து சண்டையிட முடியாமல் திசை திருப்புகிறாயா?! எழுந்து வா... சண்டையிடுவோம்' என ஆக்ரோஷமாகக் கூறி எழுந்திருக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை. திரும்பவும் கீழே விழுகிறான். 


உடனே, அனுமன் ஏனோ தெரியவில்லை. உன்மேல் கோபம் வரவில்லை. நான் பெரிய பெரிய வீரர்களுடனெல்லாம் சண்டையிட்டு வெற்றி கண்டிருக்கிறேன். ஆனால், உன்னை வெல்ல என்னால் முடியவில்லை ஒப்புகொள்கிறேன். இவ்வளவு பராக்கிரமசாலியான நீ ஏன் மயில்ராவணனிடம் இருகிறாய் எனத் தெரிந்துக் கொள்ளலாமா?!என அனுமன் மச்சயவல்லபனிடம்  கேட்டார். மச்சயவல்லபன் சாஸ்திரமும் தெரிந்தவன். பண்பும்  கொண்டவன். விதியாலே இங்கே வந்து சேவகம் செய்கிறான். அவனும் பிறவியிலேயே ராட்சசனுமில்லை. அசுரனுமில்லை.  ஆகையினால் அவனுக்கும் கருணை இருந்தது. வானர புருசரே! உங்களை கொல்ல என் மனது இடம் கொடுக்கவில்லை.  அது ஏனென்று தெரியவில்லை. என்னுடைய தாய்தகப்பன் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள். 

என்னுடைய தந்தை மும்மூர்த்திகளுக்கு நிகரான பலமுடையவர். சுத்த வீரர். அதிபராக்கிரமசாலி. இராம நாமத்தையே மூச்சாகக் கொண்டவர். அவர் பெயர் அனுமன். என் தாய் ”திமிதி” என்ற கடற்கன்னி. இந்த சமுத்திரதிலதான் இருந்தாள். அதன்பிறகு அவளைப் பார்க்க முடியவில்லை. என் தாய்தான்  என்னுடைய பாட்டனார் வாயுபகவான் எனச் சொல்லி இருக்கிறாள். என்பெயர் மச்சயவல்லபன் என்பதாகும் என கூறினான்.


மச்சயவல்லபன் கூறியதைக் கேட்ட அனுமார் திடுக்கிட்டார்.  நானோ கட்டை பிரம்மச்சாரி. திமிதி என்பவளை  என் மனைவி என்கிறானே!! நான் இலங்கைக்கு சென்று இருந்தபோது அங்கு பல பெண்கள் தாறுமாறாக இருந்தபோதும் யாரையுமே ஏறெடுத்தும் கூட பார்க்காத நானா திருமணம் ஆனவன்? இதென்ன கோலம்....ஹே! ராமா! என தன்னுள்ளேயே குழம்பினார். திரும்பவும் மச்சவல்லபனிடம் கேட்டார். மகனே! அனுமன் கட்டை பிரமச்சாரி என கேள்விபட்டுள்ளேன். அதன்பிறகு எப்படி அந்த அனுமனுக்கு ஒரு மகன் இருப்பான் என மச்சயவல்லபனிடம் கேட்டார் அனுமன்.

இதை கேட்டதும்  கோபத்தில் எழுந்தான் மச்சயவல்லபன்.  ஏய் வானரமே!! என் பொறுமையை சோதிக்காதே.  நான் ஏன் பொய் சொல்லவெண்டும்??!!இராமபிரானின் மனைவி சீதையை இராவணன் தூக்கி வந்து இலங்கையில் சிறை வைத்தான். அப்பொழுது அனைவரும் சீதையை தேடி இலங்கைக்கு வந்தபோது, என் தந்தையும் வந்திருந்தார். அப்பொழுது சமுத்திரத்தில் இறங்கும்போது அவருடைய உடல் சூட்டின் காரணமாக பிரிந்த  வியர்வையை ((சில பூர்வீக இராமாயணக் கதைகளில் ”ஆண்மை திரவம்” என சொல்லப்பட்டுள்ளது. பின் நம் தமிழ் கலாச்சரத்திற்கு தகுந்தவாறு மாற்றி எழுதி இருக்கலாம்). சமுத்திரத்தில் மீனாக இருந்த என் தாயார் திமிதி வயிற்றினுள் செல்ல அதனால் நான் பிறந்தேன். நான் பிறந்ததும் என்னை கடற்கரையில் விட்டுட்டு அவளும் சென்றுவிட்டாள். அப்பொழுது அந்தப் பக்கமாகச் சென்ற என் பாட்டனார் வாயுபகவான், என்னைப் பார்த்து  கீழிறங்கி வந்து என்னை உச்சி மோர்ந்து கொஞ்சினார். உனக்கு என்ன வரம் வேண்டும்ம்?! கேள் என்றார். 

அதற்கு, நான், என்னுடைய தந்தையைப் பார்க்க வேண்டும். அவர் பலத்துக்கு சமமான பலமும் வேண்டும் என கேட்டேன். அவர் எனக்கு என் தந்தையின் பலத்துக்கு சமமான பலத்தை, தந்து நீ நிச்சயம் உன்  தந்தையை சந்திப்பாய் என வரம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இப்பொழுது புரிகிறதா?! என் தகப்பன் யார் என்று  எனக் கேட்டான் மச்சயவல்லபன். அனுமன் உடனே ஞானத்திருஷ்டியில் எல்லவற்றையும் தெரிந்து கொண்டு, மச்சயவல்லபனை கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் வடித்து, ”நான் தான் அனுமன். நானே உனது தந்தை” என அனுமான் கூறவும் ஆச்சர்யம் கொண்டு அடங்கி நின்றான் மச்யவல்லபன்பின்னர் இருவரும் தத்தம் பாசத்தை பரிமாறிக்கொண்டு, பின்னர் ஹனுமான் கூறவும் ஆச்சர்யம் கொண்டு அடங்கி நின்றான்  மச்யவல்லபன் தான் இங்கு வந்ததன் நோக்கத்தை ஹனுமான் கூறினார்.


இதைக் கேட்ட மச்சயவல்லபனும் வருத்தப்பட்டு, தந்தையே! நீங்கள் கூறுவது சரிதான். ஆனால், நான் தர்மத்தின்படி நடக்கின்றேன். நான் பிறந்தவுடன் என் தாய் என்னை கடற்கரையில் விட்டுவிட்டு சென்று விட்டாள். அந்த சமயத்தில், சமுத்ரத்தைத் தாண்டி வேட்டையாட வந்த மயில்ராவணன் என்னை பார்த்தார். பார்த்த உடனே என் ஜாதகம் முழுவதும் தெரிந்துக் கொண்டார். அத்தனை வித்தைளையும் கற்றவர். அவ்வளவு சக்திசாலி. அடேய் பொடிப்பயலே! நீயொரு பராக்கிரமசாலி, உன்னை யாரும் வெல்லமுடியாது எனக்கூறி, நான் சிறுவன் என்றும் பாராமல் என்முன்னே அமர்ந்து வரம் ஒன்று கேட்டான். நான் ஆளும் பாதாள இலங்கையை காக்க பலசாலி ஒருவனை தேடினேன். வாயுபகவான் ஆசி பெற்ற நீதான் அதற்கு தகுதியானவன் எனக்கூறி என்னை அவனுடன் கூட்டிச்சென்று சகல வசதிகளையும் செய்து கொடுத்து இருகின்றான். தர்மதின்படி  எனக்கு இதுநாள்வரை சோறு போட்டு வளர்த்தவனுக்கு எதிராக செயல்படுவது துரோகம் அல்லவா?! 

தந்தை, மகன் இருவர் பக்கமும் நியாயம் இருந்ததால், தர்ம நெறியை மீறாமல் அனுமனை உள்ளே அனுமதிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசனை செய்தார்கள் அனுமனும் மச்சயவல்லபனும். சிறிது நேரம் யோசித்துவிட்டு மச்சயவல்லபனே கூறினான், தந்தையே! உங்களுக்கு ஒரு இக்கட்டான நிலைமை என்றால் அதை போக்குவதில் எனக்கும் பங்கிருக்கிறது. ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரை மயில்ராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அது தர்மத்திற்கு எதிரானது. அதைவிட பெரிய துரோகம் மயில்ராவணனின் அந்தரங்க விஷயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் கூறுவது. அதேப்போல் தாமரை தண்டின் வழியே நீங்கள் வரும்போது இங்கே காவலுக்கு நின்ற இரண்டரை லட்சம் அசுரர்களை கொன்றதுப்போல என்னையும் உங்களால் கொல்லமுடியாது, காரணம் உமது தந்தை என் பட்டானார் எனக்கு அளித்தவரம். 

ஆகவே, ஒன்று செய்யலாம். என் உயிர்நிலை என் மார்பில்தான் உள்ளது. என்னை நடு மார்பில் ஓங்கி ஒரு குத்து  விட்டால் நான் மூர்ச்சையாகி விடுவேன். அதன்பின் நீங்கள் சாவகாசமாக உள்ளே சென்று நீங்கள் வந்த வேலையை முடித்து கொள்ளுங்கள் அதை தடுக்க நானும் இருக்க மாட்டேன்' என்று கூறினான்  மச்சயவல்லபன். இதை கேட்டதும் அனுமன் புத்திர பாசத்தில் கண்கள் கலங்கினார் .


தன் மகனை எப்படி அடிப்பது!? ஒருவேளை இறந்துவிட்டால் என்ன செய்வது?! புத்திர சோகத்தில் அனுமன் தயங்கி நின்றபோது, மச்சயவல்லபன் கூறினான் தந்தையே! தர்மமும், நியாயமும்  பேசும்  நேரமல்ல இது. நீங்கள் நேரம் கடத்த, கடத்த இராம லட்சுணருக்கு ஆபத்து. அதனால்தான் சொல்கிறேன். மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு என் நடு மார்பிலே குத்துங்கள். அப்படிக் குத்தினால் நான் இறந்து  போக மாட்டேன். ஐம்பது ஜாமமும் மயக்கத்தில் மட்டுமே இருப்பேன். அதன்பின் பாதாள இலங்கைக்குச் சென்று இராம லட்சுமணர்களை காப்பாற்றுங்கள்' என மச்சயவல்லபன் கூறினான்.   அனுமனும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு,  தனது ஐந்து விரல்களையும் மடக்கி வைத்துக் கொண்டு, ஓங்கி ஒரு குத்தை மச்சவல்லபனின் நடுமார்பில் விட அப்படியே மயங்கி சாய்ந்தான் மச்சயவல்லபன்.   

உடனே அனுமன் அந்த கோட்டையினுள் புகுந்தார். அது வெறும் செங்கற்களால் கட்டப்பட்டு இருந்தது. இது சாதாரண செங்கற் கோட்டைத்தானே இதை தகர்த்து எறிந்துவிடலாம் என நினைத்து அதன் அருகில் சென்ற அனுமன், அதை சுற்றிலும் நாலாயிரம் லட்ச வீரர்கள் காவலில் இருந்ததைக் கண்டதும், அனுமனுக்கு வேர்த்து. விறுவிறுத்து. இத்தனை பேரையும் சமாளித்து எப்படி உள்ளே செல்வது?! அதற்குள் நேரம் கடந்துவிடுமே என நினைத்து  சுற்றுமுற்றும் பார்க்கிறார். அனுமன்   அப்பொழுது  அரண்மனை உயரத்துக்கு வளர்ந்து இருந்த பிரம்மாண்டமான பெரிய மரம் ஒன்று இருந்தது. உடனே அனுமன் விஸ்வரூபம் எடுத்து   அந்த மரத்தை வேரோடு பிடுங்கி அசுரர்கள் சுதாரிக்கும் முன்பே அவர்களை தாக்கினார். அதில் பாதி சேனைகள்  மாண்டு போயினர். மிச்சமிருந்த அசுரர்கள் வாளையும், கதையையும், ஈட்டியையும் கொண்டு வந்து அனுமனை தாக்கத் துவங்க அத்தனை பேரையும் அந்த மரத்தாலேயே நாலு பக்கமும் சுழன்று தாக்கி அழித்தார். அவர்களை சமாளிப்பதற்குள் அறுபது லட்சம் யானை, அறுபது லட்சம் குதிரை, நூறாயிரம் லட்சம் சேனைகள் என பலதும் கடல் அலைப் போல வந்துக்கொண்டே இருக்க நாலு பக்கமும் சுழன்று, சுழன்று மரத்தாலே அடித்து அத்தனை பேரையும் கொத்துக் கொத்தாய் அழித்தார். 

அனுமனுக்கு! அத்தனை பலம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. சுற்றி, சுற்றி ஒரு சூறாவளிக் காற்றுப் போல அடிக்க அடிக்க அனைவரும் செத்து செத்து விழுந்தார்கள். அவர்கள் அனைவரையும் கொன்று குவித்த உடன் அந்தக் கோட்டையைத் தாண்டி அரண்மனைக்குள் நுழைந்தால், அங்கு  பித்தளையிலான கோட்டை தென்பட்டது.


அதை சுற்றியும் லட்ச லட்சமாக அசுர சேனை, அடுக்கடுக்காக தாங்கி   காவலில் இருக்க, அடுத்து சில நொடிகளில் சுழன்று, சுழன்று அத்தனை பேரையும் துணியைக் கிழிப்பது போல கந்தல் கந்தலாக்கி அழித்தப் பின் உள்ளே சென்றால்..., அங்கு செம்பிலான உலோகக் கோட்டை இருந்தது. இதையெல்லாம் கண்டு மனம் தளராத அனுமன்,  அந்தக் கோட்டையை நோக்கிப் பாய்ந்து சென்றார். அங்கே இருபது லட்சம் அசுரப் படையினர் காவல் காத்து நின்றனர். அனுமன் மெல்ல மெல்ல நகர்ந்து போய் தொப்பென அவர்கள் மத்தியில் குதித்து விஸ்வரூபம் எடுத்து  அனைவரையும் தன் கால்களினால் நசுக்கியும் மிதித்தும் கொன்றார். அனுமனால் அடிக்கடி விஸ்வரூபம் எடுக்க முடியாது.  நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே அவரால் விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்ற விதியும் அவருக்கிருந்தது. அதனாலேதான் நிஜமாவே வேணுமென்றால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்பதால் அதுவரை அவர்  விஸ்வரூபத்தை எடுக்கவில்லை. 

இப்போ களைத்துப்  போய் இருந்ததாலயும், அடுத்தடுத்து லட்ச அரக்கர்களைக் கொன்றதினாலே உடல் பலமும் குறைந்திருந்ததாலும் இப்போ அவருக்கு தேவையாயிருந்தது விஸ்வரூபம். அதை எடுத்ததினால் அசுரர்களை எளிதாக அழித்து விட்டு இன்னும் உள்ளே செல்லலானார்.


அடுத்து வந்த வெங்கலக் கோட்டையில் காவலில் இருந்த இருபத்தி எட்டு லட்சம் அசுரப் படையினரையும் அவ்விதமே துவம்சம் செய்தார் அனுமன். அதனையடுத்து சென்றால், அங்கே பொன் கோட்டை.இருந்தது. அடுக்கடுக்காய் கோட்டை வந்துக்கொண்டே இருக்க அனுமனும் களைத்து போனார். பொன் கோட்டைக்குக் காவலில் இருந்ததோ அறுபது லட்சம் அரக்கர்கள். அவர்களையும் அழித்தப் பின் வந்த பவழக் கோட்டையில் இருந்த முப்பது லட்சம் அசுரர்களையும் கொன்று குவித்தப் பின் சென்றால் தூரத்தில் தெரிந்தது தங்கக் கோட்டை. இந்த பவழக் கோட்டைக்கு தள்ளி பல கஜதூரத்தில் ஒரு நந்தவனத்தின் மத்தியில் இருந்தது தங்கக் கோட்டை. அதற்குள்ளேதான் மயில்ராவணனும் இருக்கிறான். காளி பீடமும் உள்ளது. 

கோட்டையை  சுற்றி வெளிப்புறத்தில்  நந்தவனம். மனதுக்கே ரம்யமாக இருந்த அதில் ஒரு மரத்தின் உச்சியில் சென்று சிறு உருவில் அமர்ந்து கொண்டார் அனுமர். அந்த கோட்டைக்குள் நுழைவது எளிதான விஷயம் இல்லை. அங்கிருந்த அரக்கர்கள் சாமர்த்தியசாலிகள். கோட்டை வாசலிலும் பல யந்திரங்களும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வனம் முழுவதுமே தந்திர மந்திர சக்திகளால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக அனுமனின் சக்தி கூட அங்கே குறைந்து போனது அனுமனால் உணரமுடிந்தது. அங்கு தம்மால் அசுரர்களை நேரடியாக மோதி யுத்தம் செய்ய முடியாது என்பதும், அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து அவர்களை பின்புறமாக தாக்கினால் மட்டுமே அவர்களைக் கொல்ல முடியும் என்பதையும்அனுமன் உணர்ந்தார்.

அதற்குக் காரணம் அரண்மனையின் வெளிப்புறத்தில் இருந்த பூமி முழுவதும் மந்திரங்களினால் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் காலை வைத்தாலே பாதி பலம் போய்விடும் என்பதை நாசுக்காக அனுமனின் மைந்தன் மச்சயவல்லபன்  அனுமனிடம் கூறி இருந்தது நியாபகத்திற்கு வந்தது அனுமனுக்கு.  ஆகவே, அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்லலாம் என யோசனை செய்யலானார்.


பவழக் கோட்டைக்கு உள்ளே இருந்து வெளியே வந்த ராட்சசர்கள் எல்லாமே சரியாக இருக்கிறதா எனப் பார்த்தப் பின் தாரை தம்பட்டங்களை அடித்து வெளியில் காவலில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை தந்துவிட்டு பின் மீண்டும் கோட்டைக்குள் சென்று விடுவார்கள். அவர்கள், சென்ற இடைவெளியில் காவலுக்கு யாருமில்லை என்பதை அனுமன் உறுதி செய்துக்கொண்டு நந்தவனத்தில் இருந்த மரத்தில் இருந்து கீழிறங்கி வந்து மெதுவாக நாலாபுறமும் பார்த்தார். 

அனுமன் நின்றிருந்த இருந்த இடங்கள் எல்லாமே மந்திர சக்தியால் கட்டப்பட்டு இருந்தது.  அவருடைய பலமும், அங்கே பாதியாக குறைந்து இருந்தது. ஆனால்  மயில்ராவணன் தன் சேனைகளுக்கெல்லாம் சக்தி உள்ள தாயத்தைக் கட்டி இருந்தான். அதனால் அவர்களுடைய பலம் குறையவில்லை. அந்த தாயத்தில்லாத யாரேனும் இருந்தால் அவர்களது பலத்தில் பாதியும் குறைந்திடும். அதனால்தான் இத்தனைக் கட்டுக் காவலை மீறி எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையில் அனுமன் இருந்தபோது அங்கே அனுமனுக்கு சாதகமாக அரண்மனைக்குள்ளே ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 

அரண்மனையிலே ஆழ்ந்த நித்திரையில் இருந்த மயில்ராவணன் 'நேரமாச்சே' என நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக எழுந்தான். இருபத்தி இரண்டு 'நாழிகையும் கடந்துவிட்டது.  இனியும் இரண்டு ஜாமமே பாக்கி இருக்கிறது அதற்குள்  இராம-லட்சுமணர்களை காளிக்கு பலி தரவேண்டிய காரியத்தையும் விரைவில் முடிக்கவேண்டும். அதற்குமுன் காளிக்கு 'அபிஷேகத்துக்கு தண்ணி கொண்டு வரவேண்டும்.  அதற்கு,  தன் தமக்கையை அனுப்பவேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. அவளை எப்படி அனுப்புவது  என்று யோசித்தவாறு ' காவலில் கை விலங்கோடு கட்டி வைத்திருந்த தனது தங்கை தூரதண்டியை அழைத்து வரச் சொன்னான் மயில்ராவணன். அவளிடம் ஒரு தங்கக் குடத்தை கொடுத்து,  ”சீக்கிரமா போய் உத்தியான வனத்திலிருந்து ஒரு குடம் தண்ணி கொண்டு வா” என ஆணையிட்டான்.


தூரதண்டியும் 'இத்தனை நாளும் நம் கையிலும், காலிலும், மார்பிலும் விலங்கு கட்டி பூட்டி இருந்தான். ஒருவேளை இன்று  என்னையும், என் பிள்ளையையும் பலி கொடுக்கபோகிறானா?! அதனால்தான் தண்ணீர் எடுத்துவர அனுப்புறானோ? என சிந்தித்துக் கொண்டு இருந்தவள் என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறோம். கைவிலங்கோடு, கால் விலங்கோடு நாள்பூரா அவதிப்படுவதைவிட,  செத்து மடிவது நல்லது என எண்ணிக்கொண்டு இருந்தவளை,  தங்கையே! நீ நினைப்பது போல் , உன்னையும், உன் மகனையும் காளிக்கு பலி கொடுக்க தண்ணி கொண்டு வரச் சொல்லவில்லை. முதலில் அந்த இராம லட்சுமணர்களை காளிக்கு பலி கொடுக்கவேண்டும்.  அதனால்தான் உன்னை தண்ணீர் கொண்டுவர சொல்கிறேன்.  இதை யாரிடமும் சொல்லாமல் சீக்கிரம் கிளம்பி குளத்துல இருந்து தங்க குடத்துல தண்ணீர் கொண்டுவா” என அவளுக்கு ஆணை இட்டான் மயில்ராவணன்.

'ஐயோ! அண்ணா! நீ இராம லட்சுமணர்களையா காளிக்கு பலி கொடுக்கப் போகிறாய்??!! இந்த பாவ காரியத்தைப் பண்ண நானா உனக்கு கிடைத்தேன்? நான் இந்த பாவ காரியத்தைப் பண்ணப் போகமாட்டேன் அண்ணா' எனக் கதறியவளை நோக்கி உருவிய தன் வாளை காட்டி ' போ...போய் சீக்கிரமா தண்ணீர்  கொண்டு வா..... இல்லை உன்னைக் கொல்லமாட்டேன்  ...உனக்கு பதிலா உன் பிள்ளைய வெட்டி கண்ட துண்டமாக்கி மிருகத்துக்கு போட்டுருவேன் என கோபங்கொண்டான் மயில்ராவணன். அதைக்கேட்ட தூரதண்டி, அண்ணா! அப்படியெல்லாம் செய்து விடாதே! கொன்றால் என்னையும் சேர்த்தே கொன்றுவிடு என கதறினாள். அப்படி எதுவும் நடக்காம இருக்கணும்னா போ,போய் நந்தவனத்திலிருந்து சீக்கிரம் தண்ணி கொண்டுவா என விரட்டினான்.

அவளும் பயந்து நந்தவனத்துக்கு வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழத் துவங்கினாள். அவள் ஏன் அப்படி அழுது கொண்டிருக்கிறாள் என்பது அனுமனுக்கு புரியவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும் மரத்தின் மீதிருந்த அனுமன் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கவலையெல்லாம் கோட்டைக்கு உள்ளே எப்படிப் போவது? உள்ளே போனால்தானே வெளியில் உள்ள அசுரர்களை அழிக்க முடியும். ஆனால் அழுதுகொண்டு இருக்கும் இந்த பெண் நல்லவளாகதான் இருக்கவேண்டும் என புரிந்துக் கொண்டார்.  இவள் மூலமாவது நமக்கு ராம லட்சுமணர்கள் சிறை வைக்கப்பட்டு உள்ள இடம் தெரியவாராதோ!! என எண்ணி கொண்டு அவளிடம் அசரீரியாக பேசத் தொடங்கினார்.  


பெண்ணே!! நீ யார்?! எதற்காக அழுகிறாய்?! உன்னை நான் காப்பாற்றுகிறேன்  எனக் கூறியபோது தூரதண்டி திடீரென கேட்டக் குரலினால் பயந்து போனாள். இது, மயில்ராவணன் என்னை சோதிக்க இப்படி நாடகம் ஆடுகிறானா என எண்ணிக்கொண்டு,  சரி நமக்கு ஏன் வம்பு என நினைத்து தண்ணிக் கொண்டு வரச் சென்றாள். அப்படி போகும் போது, இதற்கு பிரதிபலனாக தன் மகனையாவது உயிரோடு விட்டுவை என கேட்கலாம் என நினைத்து தங்க குடத்தோடு தண்ணீரில் இறங்கினாள். இதுதான் தக்க சமயம் என அனுமனும் அவள்முன்னே போய் சென்று, அபலை பெண்ணே! நீ ஏதோ பிரச்சனையில் இருப்பது போல இருக்கிறது. நான் உனக்கு உதவுகிறேன். ஆனால், நீயும் அதுப்போல  இராம லட்சுமணர்களை  அந்த மயில்ராவணன் எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்? அங்கே எப்படிப் போவது என உனக்கு வழி தெரிந்தால் எனக்கு சொல் பெண்ணே என கூறினார்.

திடீரென தன் முன் நின்ற அனுமனை கண்டு பயந்த தூரதண்டி, நீங்கள் யார் ?உங்களை மயில்ராவணன் அனுப்பி என்னை சோதிக்க சொன்னானா எனக் கேட்டாள். அதற்கு அனுமன் பெண்ணே!  நான் இராமனின் தூதன் அனுமன் அவர்களை மீட்கத்தான் இங்கே வந்தேன். என்னை நம்பு எனக் கூறினார். 


ஆனால், அவளோ அவரை இன்னமும் நம்பாதது மாதிரி சிறுது நேரம் அவரை உற்று உற்றுப் பார்த்தக்கொண்டு இருந்தாள். பெண்ணே!  ராட்சசர் வம்சத்தில் அவதரித்த நல்ல குணவதியே! எனக்கு  அனைத்து சாஸ்திரங்களும், அறுபத்தி நாலு கலைகளும், நீதி நூலின் தர்க்கமும், ஈ எறும்புகளின் பாஷைகளும் கூட புரியும் அம்மா.  அதெல்லாம் கூற எனக்கு இபொழுது நேரமில்லை. முதலில் இராம லட்சுமணர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை விரைவாகக் கூறு என்று சொன்னதும்,  தூரதண்டி அனுமனை இன்னும் நம்பாமல் பார்க்க, அனுமன் உடனே, தன சுயரூபத்தை தூரதண்டியிடம் காட்ட அவள் உடனே அனுமனின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன்னுடைய நிலைமையை கூறலானாள். 

என் கணவர் பெயர்  காலதத்தன், அவர் மயில்ராவணனுக்கு அனைத்து விதத்திலும் நம்பிக்கையானவராக இருந்தார். எங்களுக்கு  நீலமேகன் என்ற மகன் உண்டு .'என் மகன் பிறந்தபோது மயில்ராவணனுக்கு ரூபவதி என்ற பெண்ணும் பிறந்தாள். வயது வரும்போது இருவருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும் என்று பண்டிதர்களிடம் கருத்து கேட்டு நாள்குறிக்க செல்லும் போது,  அசரீரி ஒன்று ஒலித்தது, அடே மூடனே! மயில்ராவணா! ”இந்த நீலமேகனே இந்த பாதாள இலங்கைக்கு அதிபதியாக போகிறான். நீ கொல்லப்படுவாய்” என ஒலித்தது. அவ்வளவுதான் மயில்ராவணன் என் புருசன் காலதத்தனை கொன்று, என்னையும், என் பிள்ளையையும் அரண்மனையை விட்டே துரத்தி இருவரையும் சிறையில் அடைத்து விட்டான் என்று கூறினாள் தூரதண்டி. ஆஞ்சனேயா! ஆபத்சகாயா! ”ராம லட்சுமணரைக் காப்பாற்றிய பின் 

என்னையும், என் பிள்ளையையும் நீர்தான் காப்பாற்றணும்” என்று அனுமனிடம் சரணாகதி அடைந்தாள் . அதற்கு, அனுமன்  'பெண்ணே!  நீ கவலைப்படாதே! ”நான் அந்த மயில்ராவணனை வதம் செய்து உன் குடும்பத்தையும் விடுதலை செய்து, உன் மகனுக்கு முடிசூட்டுகிறேன். ஆனால், நீ எனக்கு அவன் இராம லட்சுமணர்களை பெட்டியில் அடைத்து வைத்திருக்கும் இடம் எது எனக் கூறு” என்றார்.

அதைக்கேட்ட தூரதண்டி, அனுமன் மேல் நம்பிக்கை வைத்து,  ”வாயு புத்திரனே! அனுமனே! அந்த மயில்ராவணனை சாதாரணமானவன் இல்லை. அவன் பரமேஸ்வரனிடமிருந்து மூவேழு தலைமுறைக்கும் வேண்டுமான பலம் பெற்று உள்ளான்.  பராக்கிரமசாலி. தந்திரக்காரன். மாயக்காரன். அவனுடைய கோட்டையின் நுழைவாசலிலே பல துலா யந்திரங்களை மாட்டி வைத்திருக்கான். அது யார் வருவாரோ, யார் போவாரோ அது அவனுக்கு விரோதியா, நண்பனா என்பதைக் காட்டிடும் யந்திரமாகும். அத்தனை மந்திர சக்தி உள்ளதது. உள்ளே போறவன் சத்ரு என்றால் அங்குள்ள இருபது லட்சம் வீரனும் ஒருசேர அங்கு வந்து சத்ருவை துவம்சம் செய்து விடுவார்கள். அதனால் நீர் மிக்க கவனமாக இருக்கவேண்டும்”எனக் கூறினாள். 

உடனே அனுமானும் 'பெண்ணே ,கோட்டையின் உள்ளே நுழைவதற்கு ஒரு வழியை சொல்” என்றார். வாயுபுத்ரா! எனக்கு எந்த யோசனையும் தெரியவில்லை. ஆனால்  குளத்தில் இரங்கி தண்ணீரும் அதன் மேல் மாவிலையும் நான் பூஜைக்கு கொண்டு செல்லவேண்டும். அதையும் வாசலில் வைத்திருக்கும்  துலா யந்திரம் துருவித் துருவி பார்க்கும். அதனால் நீரே ஒரு யோசனை சொல்லுங்கள் என கூறி தண்ணீர் எடுக்க சென்றாள்.

உடனே, அனுமனுக்கு ஒரு யோசனை தோன்றியது. “குடத்தில் இருக்கும் மாவிலை கொத்தில்  சிறு பூச்சி போல தன்னை உருமாற்ற அமர்ந்துக்கொண்டு, பெண்ணே! நீ  தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே போகும்போது, வாசலில் யாரேனும் தடுத்தால் தடுக்கி விழுந்தது போல விழுந்து அரண்மனை நுழை வாயிலின் உள்ளே தண்ணீர் குடத்துடன் மாவிலையையும் சேர்த்துக் கொட்டிவிடு. அதற்குப் பின் நான் பார்த்துக் கொள்கிறேன்”' என யோசனைக் கூறினார். தூரதண்டியும் பயத்துடனே தடுமாறிக் கொண்டு மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக அனுமன் அமர்ந்திருக்க, தண்ணீர் நிறைந்திருந்த அந்த அந்த தங்கக்குடத்தை தன் தலைமீது வைத்துக் கொண்டு அரண்மனைக்கு  சென்றாள். நுழைவாயிலில் இருந்த துலாயந்திரத்தின் அருகில் தூரதண்டி வந்ததுமே  அது யாரோ சத்ரு உள்ளே வரவுள்ளதைக் காட்டியது.


யாரோ ஒரு அந்நியன் உள்ளே வருவதை உணர்ந்து கொண்ட ராகட்சசர்கள் நுழைவாயிலுக்கு வருவதற்கு முன்னே, தூரதண்டியும் அனுமான் கூறியது போலவே குடத்துடன் இருந்த மாவிலைக் கொத்தோடு நுழை வாயிலின் உள்ளே தடுக்கி விழுவது போல விழுந்தாள். அவ்வளவுதான், மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக இருந்த அனுமனும்,  மாவிலையில் இருந்து வெளியில் குதித்து, தன் விஸ்வரூபத்தை எடுத்து அதி பலம் கொண்டு அத்தனை வீரர்களையும் அடித்து, துவைத்து துவம்சம் செய்து கொன்றார். நடந்ததையெல்லாம் ஆனந்தத்துடனே வானத்தில் இருந்த பார்த்த தேவர்கள் பரவசம் அடைந்தார்கள். இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த தூரதண்டி, அனுமன் மேல் நம்பிக்கை கொண்டாள். அனுமனிடம், மயில்ராவணனின் முக்கிய தளபதிகளான  கடகன் மற்றும் விருசிமுகன் என்ற இரண்டு அசுரர்கள் தான் காளி கோவிலில் காவலுக்கு இருக்கிறார்கள் .அவர்களை வதம் பண்ணினால் பாதி வெற்றி கிடைத்தது மாதிரி என யோசனை கூறி, இருவரது வீடுகளையும் அடையாளம் காட்டினாள் தூரதண்டி. உடனே அனுமன், தன்னுடைய வாலினாலே விருசிமுகனை, வீட்டிற்கு வெளியில் தூக்கி வந்து வதம் செய்ய ஆரம்பித்தார். அவனோ கதறினான். நான் ஒன்றும் செய்யவில்லை எல்லாம் அந்த மாயாவி மயில்ராவணன் தான் செய்ய சொன்னான் என அலறினான். ஆனால், அனுமன் அவனை வதம் செய்தார். இதை பார்த்த  கடகன் அங்கிருந்து   தப்பியோடினான்...  


அனுமன் தூரதண்டியை அழைத்துக் கொண்டு அவள் பிள்ளை விலங்கிட்டு வைக்கப்பட்டு இருந்த  இடத்தை அடைந்து, அவனையும் விடுதலை செய்தார். தாயும், மகனும் அனுமன் காலில் வீழ்ந்து  வணங்கினர். அவனுக்கு பாதாள இலங்கையின் மன்னனாக முடி சூட்டி வைப்பதாக உறுதி கூறி காளிகோவிலுக்கு விரைந்து சென்றார் அனுமன். இவ்வளவு விஷயம் அரண்மனைக்கு வெளியே நடந்து கொண்டிருந்த போது அது எதும் அறியாதவனாக தூங்கி கொண்டு இருந்தான் மயில்ராவணன்.  அனுமன் காளி கோவிலுக்குச் சென்று பார்த்தால் அந்தக் கதவும் மூடி இருந்தது. அங்கே யாரும் இல்லை. மயில்ராவணனோ தூக்கம் கலைந்து, அங்கிருந்து பலகாத தூரத்தில் இருக்கும் ஒரு குளத்திற்கு குளிக்க சென்றான். நேரம் வெகு குறைவாக இருப்பதாய் கண்ட அனுமன் ,காளிதேவியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கதவை ஓங்கி அடித்து உடைத்தார் .


அங்கே, அடுக்கடுக்காய் மண்டபங்கள். ஆயிரம் கால் மண்டபம், அபிஷேக மண்டபம், எண்ணை மண்டபம், வண்ண மண்டபம், கல் மண்டபம், கல்யாண மண்டபம், புஷ்ப மண்டபம், வைர, வைடூரிய, பவள, தவழ, மகர மண்டபங்கள் என அடுக்கடுக்காய் மண்டபங்கள் இருக்க அத்தனையையும் அரை நாழிகையில் தாவித் தாவிச் சென்று காளி சன்னதியை அடைந்தா அனுமன். அங்கிருந்த காளியும் அகோர உருவமாயிருந்தாள். பார்க்கவே பயங்கரமாய் பல் ஒவ்வொன்றும் நூறு விரல் நீளம், ஜடையோ பின்னி பின்னி ராஜநாகம் போலவே காணப்பட, அவள் வாயோ பலி வேணும், பலி வேணும் எனக் கூவுவது போல காட்சி தந்தது. அந்தக் காளியைக் கண்டாலே யாருமே பயந்து நடுங்குவர். அந்த காளிக்கு முன்னாலே ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இனி இராம லக்ஷ்மனரை அனுமன் எப்படி மீட்டார்ன்னு  அடுத்த வாரம் பார்க்கலாம் ...


4 comments:

 1. புத்தகம் வெளியீடு எண்ணம் இருக்கிறதா சகோதரி...?

  ReplyDelete
  Replies
  1. இருக்கு அண்ணா! கூடிய விரைவில் நடக்கும்.....

   Delete
 2. பதிவும் அதற்கான படங்களும் அருமை!
  த ம 5

  ReplyDelete
 3. ஆஹா! படங்கள் அழகு. இந்தக் கதையும் நன்றாகத்தான் இருக்கின்றது. எத்தனைப் புனைவுகள் ஒரு நிகழ்வுக்கு இல்லையா சகோ!

  ReplyDelete