Friday, January 01, 2016

மீண்டும் ஒரு 365


இந்த புத்தாண்டுக்கு என்ன பண்ணலாம் என்ன பண்ணக்கூடாதுன்னு எல்லோரும் ஆயிரம் லிஸ்ட் போட்டு வச்சிருப்பீங்க. எப்படியும் அதுலாம் நாலு நாளைக்கு மெனக்கெட்டு அதுலாம் கடைப்பிடிச்சு, அப்புறம் காத்துல விட்டுடப்போறீங்க. அதனால, எதுக்கு வீணா சபதம் எடுக்கனும், அதை காப்பாத்த முடியாம தூக்கிப்போடனும்?! அதனால, என் வசதிக்காக இந்த வருசம் எந்த புத்தாண்டு சபதமும் எடுக்கலயே!!!

”ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”ன்னு கருப்பு வெள்ளை காலத்துல இருந்து சொல்லியே திருந்தாத நாம, “என்னைத் தவிர வேறென்ன கிழித்தாய்”ன்னு காலண்டர் கேட்குற மாதிரி வாட்ஸ் அப் மெசேஜ் கேட்டா திருந்திட போறோம்?!

ம்ஹூம் இப்படிலாம் சொல்லப்படாது எதாவது சபதம் எடுத்தே தீரனும்ன்னு சொல்லுறவங்களுக்காக...,

1. மாமாவை தூக்கிப் போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!

2.  பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்(ஸ்ஸ்ஸ் அபாடான்னு பெருமூச்சு விடுறது யாரு?!)

3. டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.

4. கணேஷ் அண்ணா, சீனு, அரசன், ஆவி, சரவணன்,  மாதிரி நல்ல பசங்களோடு சேரனும். அதை விட்டு மதுரை தமிழன், மாதிரியான ஆட்கள்கூட சேரக்கூடாது.

5.  மாமாவை, பசங்களை படுத்தாம ப்ளாக் பக்கம் ஒதுங்கிடனும்.

6. அடுத்த புத்தாண்டுக்குள் சபதம் எடுத்துக்குற மாதிரி எதாவது கெட்ட பழக்கத்தை உண்டாக்கிக்கனும்.

7. அப்புறம் 2017க்கு இப்படிலாம் சபதம் போடக்கூடாதுன்னு புத்தாண்டுல சபதம் ஏத்துக்குறேன்.
ராஜி பிளாக்குக்கு வந்தால் எப்படியும் எதாவது தகவல் சொல்லும்ன்னு நம்பி வரும் நம் மக்களுக்காக சில தகவல்கள்:

இப்போ நாம யூஸ் பண்ணுற காலண்டர் முறை ஏசு பிறப்பதற்கு முன்னாடி இருந்தே இருக்கு. கிரேக்க, ரோம காலண்டர் முறையே நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் முறைன்னு என் ஆராய்ச்சில கண்டுப்பிடிச்சிருக்கேன். ப்ளீஸ் நம்புங்கப்பா! நம்ப மாட்டீங்களே!! சரி, சரி, படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஜனவரி மாதம், “ஜானஸ்”ன்ற ரோமக் கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமத்திருவிழாவான “பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான ”மார்ஸ்” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம்,  ”ஏப்ரலிஸ்” என்ற லத்தீன் மொழில இருந்து வந்தது.  “திறப்பது” என்பது இதன் அர்த்தம். முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட் தொடக்கமா இருந்துச்சாம். 15 நூற்றாஆண்டுல வாழ்ந்த போப்பாண்டவர் ஒருத்தர்தான் ”ஜனவரி”யை  புத்தாண்டு தொடக்கமா மாத்தினதா சொல்றங்க. இதை ஐரோப்பியர்கள் மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினமா கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க.

மே மாதம்,  ”மேயஸ்”ன்ற பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான ”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.  அதுமட்டுமில்லாம, அப்போலாம்  மாதங்களின் நாட்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு, அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார். அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.  இதனால, காலண்டர் மொத்தமும் மாற வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு போய்க்கிட்டிருந்துச்சு.  ”அகஸ்டிஸ் சீசரி”ன் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,  பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு பின்னாடிதான் நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் உருவாகிச்சு. இந்த காலண்டருக்கு பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் ன்னு படிச்சவங்க சொல்றாங்க!
இனி, கவிதை பிரியர்களுக்காக...,

கடற்கரையில் கொண்டாட்ட கேளிக்கை
காண நூறு பேர் வாடிக்கை..
பன்னிரண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை..,
புத்தாண்டு ஆரம்பம்??!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி.,
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப் படுகிறது??!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது??!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மது விலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவையெல்லாம்  இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னும் ஒரு 365??!!

கையில் பீர் பொங்கினால் தான் பொங்குமாம்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினால்தான்??!!
 நிறையுமாம் அங்கயர்க் கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகுமாம்??!!
 அன்பின் தூவர்களுக்கு..,
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது??!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகளைக்
கண்டு தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்.

போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிகள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,

இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு
பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும் போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!

ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்பு தான் வரும் என்று...,
ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..

அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,
அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???

சனவரிக்கு சனவரி மட்டும் ஏன் இந்த பரிவர்த்தனம்??!!


16 comments:

  1. அந்த நாலாவது பாயிண்டுக்கு நன்றி...

    ReplyDelete
  2. நல்ல விளக்கமான பதிவு நன்று
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், புதிய தம்பதியினருக்கும் எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

  3. பின்

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

    ஏனிந்த தூக்கம்கெடுத்து..,
    துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு??
    ..அருமை ..

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. தகவல் களஞ்சியம் அருமை.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ///மாமாவை தூக்கிப் போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!//

    அப்ப உங்க அண்ணி பூரிக்கட்டையை தூக்கி போடுறமாதிரி ரிமோட்டை தூக்கி போடலாமா?

    ReplyDelete
  11. ///பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்//
    அப்படி எழுதினா படிக்காம இருக்கணும் என்று சபதம் எடுத்து இருக்கிறேன்

    ReplyDelete
  12. ///டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.//

    டிவியில் வரும் நிகழ்ச்சியை கேட்டு பதிவு எழுதலாமே

    ReplyDelete
  13. ///கணேஷ் அண்ணா, சீனு, அரசன், ஆவி, சரவணன், மாதிரி நல்ல பசங்களோடு சேரனும். ///
    நானும் இவங்க கூடதான் சேரணும் என்று பார்க்கிறேன் ஆனால் இவங்க என்னை சேர்க்காமல் அடிக்கடி மீட்டிங்க் போட்டு சந்திச்சுகிறாங்க

    //அதை விட்டு மதுரை தமிழன், மாதிரியான ஆட்கள்கூட சேரக்கூடாது.//

    ஆமாங்க இந்த மதுரைத்தமிழன் சுத்த மோசமுங்க அவன் கூட நான் பேசுறது கூட கிடையாதுங்க

    ReplyDelete
  14. சுவாரஸ்யத் தகவல்கள். இந்த ஜனவரி முதலாவது எங்கள் பக்கம் எல்லாம் வருவீர்களா?!! அதையும் புத்தாண்டின் சபதங்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாதோ!!!!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. சபதம் எண் இரண்டை நீங்க கட்டாயம் ஏற்றுக்கணும் :)

    ReplyDelete
  16. எனக்கு ஒன்று மட்டும் புரியல ராஜிக்கா.. அது ஏன் பிப்ரவரியில் இருந்து பிடுங்கினாங்க?

    ReplyDelete