Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, March 25, 2019

ஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்

ஏன் மாமா?! நிலாவிலிருந்து பார்த்தால்  சீனா பெருஞ்சுவர் தெரியுமாமே! உண்மையா?!  

உலக அதிசயம்ன்னு ஒப்புக்கிட்ட ஏழில் எதுக்கும் இல்லாத சிறப்பு, சீனா பெருஞ்சுவருக்கு மட்டும் உண்டு. நிலாவிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும்ன்னு சொல்றாங்கதான். ஆனா, எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.  அப்படி தெரியுறமாதிரி ஒரு படத்தைக்கூட நான் இதுவரை பார்த்தில்லை. அதனால் அது உண்மையா?! பொய்யான்னு தெரில. நீ கேட்டதுக்காக வேணும்ன்னா சீன பெருஞ்சுவரை பத்தி சில விசயங்களை சொல்றேன்.  சீனா நாட்டின் வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்திருக்குது இந்த சீனப்பெருஞ்சுவர். இது கட்டி முடிச்சு இரண்டாயிரம் வருசம் ஆகிடுச்சு. இந்த சுவர் உருவாக காரணமானவர் பேரு ஷி ஹூவாங்டி (Shi Huangdi). இவரோட சாதனை சீனப் பெருஞ்சுவரை கட்டியது மட்டுமில்ல. சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் ஒருங்கினைத்தவர்தான் இந்த  ஷி ஹூவாங்டி. 
Great Wall of China, Beijing, China

 கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தாங்க.. ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுவிழந்து,  நிறைய சிற்றரசுகளா  சீனா சிதறுண்டு போனது.  சிற்றரசர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தங்களுக்குள் அடிக்கடி  சண்டை போட்டுக்கிட்டாங்க. சண்டையில் சில சிற்றரசுகள் அழிந்து போனது. மிச்சமிருந்த சிற்றரசுகளில் பலம் பொருந்தியதா சின் (Qin) அரசு இருந்தது. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.
The walls of Kumbalgarh Fortress in Rajasthan, India


ஷி ஹூவாங்டி தன்னோட 13வது வயசில் ராஜாவானார். ஆனா, 21வது வயசில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைக்கு வந்துச்சு. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள்மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின்கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி .

ஷி ஷூவாங்டின்னா முதல் பேரரசர்ன்னு அர்த்தம். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின்கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார். ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு இருக்க காரணம்ன்னு புரிஞ்சுக்கிட்ட   அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசுமுறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான். அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.
The Great Wall, one day I will see it in person
விளக்கின் அடியிலே இருள் இருக்குமென்ற நியதிக்கேற்ப இத்தனை நல்லது செஞ்ச ஷி ஹுவாங்டி ஒரு கெட்ட செயலையும் செய்து வரலாற்றின் பழிச்சொல்லுக்கும் ஆளானார்.  அது என்னன்னா, கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி. வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்குகீழ் கொண்டு வரமுடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறுசிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள்மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அதனால் அவர்மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும்ன்ற நம்பிக்கையில் அப்படி செய்யப்பட்டதாம். சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றனது. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்தது, அவரது ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவு, முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறன், எதிரிகளை திணறடிக்கும் தைரியம், ஒற்றுமையே பலம்ன்ற அவரது நம்பிக்கையும்தான். இப்படி ஒரு தலைவன் தான் எல்லா நாட்டிற்கும் தேவை..ஆனா, எல்லா நாட்டுக்கும் இந்த வரம் கிடைக்கவில்லை. 

அது மன்னராட்சி மாமா! அப்படி ஒரு தலைவன் வர கொடுத்து வச்சிருக்கனும். எல்லாருக்கும் அது வாய்க்காது. ஆனா, நம்மோட நாடு  மக்களாட்சி முறையை கொண்டது. நல்லா சிந்திச்சு சரியான ஆளை தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டா நல்ல தலைவன் கிடைப்பான் மாமா.

ம்க்கும்.  எரியும் கொள்ளில, எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு பார்த்துதான் ஓட்டு போடனும். அதுக்குதான் நான் ஓட்டு போடவே போறதில்லை.

அது தப்பு மாமா! அது கள்ள ஓட்டு போடுறவங்களுக்கு வசதியாகிடும். கண்டிப்பா உன் ஓட்டை பதிவு பண்ணனும் நீ. 
அப்படின்னா நான் நோட்டாவுக்கே என் ஓட்டை போட்டுடுறேன்.

அதும் தப்பு மாமா நோட்டாவுக்கும் போடக்கூடாதுன்னு சொல்ற இந்த வீடியோவை பாரு. நோட்டாவாலயும் ஒன்னும் மாற்றம் நிகழாது. அதனால் கட்சி, இனம், ஜாதி, பணம் கொடுக்குறவங்கன்னு பார்க்காம நம்ம பகுதில சமூக சேவை செய்து சுயேட்சையா நிற்கும் பணம், பதவியால் மாறாத ஆளுக்கு நம்ம ஓட்டை போடலாம். அதுவே சரியான தீர்வாகும்.  

ம்க்கும், அந்த மாதிரி ஒரு ஆளை தேடி கண்டுபிடிக்குறதுக்குள் மண்டை காய்ஞ்சு மூளை உருகி வெளிய வந்திடும். 

அதுலாம் மூளை இருக்கவுங்க  சொல்லனும். நீ அதுக்கெல்லாம் கவலைப்படாத மாமா. உன்னைய இந்த பாப்பா மாதிரி தண்ணி ஊத்தி மண்டை சூட்டை ஆத்துறேன். 

இப்படிலாம் கலாய்ச்சா நான் சாமியாரா போய்டுவேன்.

நீ சாமியாரா போனால், பழனி பாரதி மாதிரி  கவிதை எழுதுவேன்.
Awesome! pin  #blackandwhitelandscapephotography


பயணியைப்போல்
புறப்படக் காத்திருக்கும் பனியை
பெட்டி பெட்டியாய்த் தேடி
வழியனுப்ப
ஓடிவருகிறது சூரியன்

இந்தப்
பொங்கல்நாள் ரயில்நிலையம்
எவ்வளவு அழகு.

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னுடைய விரல்கள் இல்லை,,,

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னுடைய விரல்கள் இல்லை..

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை..
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை..

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது இந்த  பூசணிப்பூ..


உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை..

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி..

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டு விட்டாய்!!!


உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால் 
ஒரு கடிதம் எழுது..!

 - பழனி பாரதி

ஆகமொத்தம் எங்க போனாலும் என்னைய நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கே! அப்படித்தானே?!....................................................................

நன்றியுடன்...
ராஜி

Tuesday, January 01, 2019

கனவு நனவாகும்படி பிறக்கட்டும் புத்தாண்டு

இந்த புத்தாண்டுக்கு பிறகு என்ன பண்ணலாம்?! என்னலாம் பண்ணக்கூடாதுன்னு இந்நேரத்துக்கு  எல்லோரும் ஆயிரம் லிஸ்ட் போட்டு வச்சிருப்பீங்க. எப்படியும் அதுலாம் நாலு நாளைக்கு மெனக்கெட்டு கடைப்பிடிச்சு, அப்புறம் காத்துல விட்டுடப்போறீங்க. அதனால, அதிகாலையில் வாக்கிங்க், பகல்ல தூங்கக்கூடாது. உடம்பைக்குறைக்கனும்ன்னு அப்பிடி இப்படின்னு எதுக்கு வீணா புத்தாண்டு சபதம் எடுக்கனும்?! அப்புறமா அதை காப்பாத்த முடியாம தூக்கிப்போடனும்?! அதனால, என் வசதிக்காக இந்த வருசம் எந்த புத்தாண்டு சபதமும் எடுக்க போறதில்லை:-) 

”ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”ன்னு கருப்பு வெள்ளை காலத்துல இருந்து சொல்லியே திருந்தாத நாம, “என்னைத் தவிர வேறென்ன கிழித்தாய்”ன்னு காலண்டர் கேட்குற மாதிரி வாட்ஸ் அப் மெசேஜ் கேட்டா திருந்திட போறோம்?! ம்ஹூம் இப்படிலாம் சொல்லப்படாது எதாவது சபதம் எடுத்தே தீரனும்ன்னு சொல்லுறவங்களுக்காக...,

1. மாமாவை தூக்கிப்போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!(மாசத்துக்கு ரெண்டு ரிமோட்டு வாங்குறது கொஞ்சம் ஓவர்தான்)

2.  பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்(ஸ்ஸ்ஸ் அப்பாடான்னு பெருமூச்சு விடுறது யாரு?!)

3. டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி சொல்லியே பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.(அப்படியே பதிவுக்காக காலையில் எல்லா சேனல்லயும் ஆன்மீகம் நிகழ்ச்சி பார்த்து சாவடிக்காதம்மான்னு பிள்ளைங்க சோல்லுறது கேக்கலைதானே?!)

5.  மாமாவை, பசங்களை படுத்தாம ப்ளாக் பக்கம் ஒதுங்கிடனும்.(இப்பயே அங்கதானே இருக்க! சோறுகூட பொங்காம...)

6. அடுத்த புத்தாண்டுக்குள் சபதம் எடுத்துக்குற மாதிரி எதாவது கெட்ட பழக்கத்தை உண்டாக்கிக்கனும். (இப்படிலாம் சொன்னா மட்டும் நம்பளை நல்லவள்ன்னு நம்பிடுமா இந்த ஊரு?!)

7. அப்புறம் 2017க்கு இப்படிலாம் சபதம் போடக்கூடாதுன்னு புத்தாண்டுல சபதம் ஏத்துக்குறேன்(அய்யோடா! அடுத்த வருசம் புதுசா பதிவு போடனும்ல்ல)

போதும்.. போதும்.. மொக்கை போட்டது... ராஜி பிளாக்குக்கு வந்தால் எப்படியும் எதாவது தகவல் சொல்லும்ன்னு நம்பி வரும் நம் மக்களுக்காக சில தகவல்கள்:

இப்போ நாம யூஸ் பண்ணுற காலண்டர் முறை ஏசு பிறப்பதற்கு முன்னாடி இருந்தே இருக்கு. கிரேக்க, ரோம காலண்டர் முறையே நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் முறைன்னு என் ஆராய்ச்சில கண்டுப்பிடிச்சிருக்கேன். ப்ளீஸ் நம்புங்கப்பா! நம்ப மாட்டீங்களே!! சரி, சரி, படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஜனவரி மாதம், “ஜானஸ்”ன்ற ரோமக் கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமாரியர்களின் திருவிழாவான “பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான ”மார்ஸ்” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம்,  ”ஏப்ரலிஸ்” என்ற லத்தீன் மொழில இருந்து வந்தது.  “திறப்பது” என்பது இதன் அர்த்தம். முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட தொடக்கமா இருந்துச்சாம். 15 நூற்றாண்டுல வாழ்ந்த போப்பாண்டவர் ஒருத்தர்தான் ”ஜனவரி”யை  புத்தாண்டு தொடக்கமா மாத்தினதா சொல்றாங்க. இதை ஐரோப்பியர்கள் மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினமா கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க.

மே மாதம்,  ”மேயஸ்”ன்ற பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான ”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.  அதுமட்டுமில்லாம, அப்போலாம்  மாதங்களின் நாட்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு, அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார். அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.  இதனால, காலண்டர் மொத்தமும் மாற வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு போய்க்கிட்டிருந்துச்சு.  ”அகஸ்டிஸ் சீசரி”ன் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,  பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு பின்னாடிதான் நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் உருவாகிச்சு. இந்த காலண்டருக்கு பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் ன்னு படிச்சவங்க சொல்றாங்க!
இனி, கவிதை பிரியர்களுக்காக...,


பனிரெண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை..,
புத்தாண்டு ஆரம்பமாம்!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி.,
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப்படுகிறதாம்!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மதுவிலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவையெல்லாம்  இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னுமொரு 365
கையில் பீர் பொங்கினால்தான் பொங்குமாம்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினில்தான்
 நிறையுமாம் அங்கயர்க்கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகுமாம்
 அன்பின் தூதுவர்களுக்கு!!
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகளைக்
கண்டு தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்!!


போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிகள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,



இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு

பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும்போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!
ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்புதான் வருமென்று...,

ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..
அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,

அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???

காலண்டரை தவிர, வேற எதும் மாறிடப்போறதில்லை. அதே உருவம், அதே குணநலன், அதே வேலை, அதே அன்பு, அதே அவமானம்....ன்ன்னு எல்லாமே அதேதான் இருக்கப்போகுது. இதுல, காசை கொட்டி கொண்டாட்டம் ஏன்?!  ஆனாலும், எதிர்பார்ப்புங்குறது மனிதர்களின் குணங்களில் ஒன்று. இதுவரைக்கு பட்டதுலாம் போதும். இனியாவது நம்ம நிலைமை மாறிடுமான்னு கஷ்டப்படுறவங்களும், இதுவரை வாழ்ந்தமாதிரியே வரும்  புத்தாண்டிலயும் வாழ்ந்திடனும்ன்னு மகிழ்ச்சியா இருக்கவுங்களும் வேண்டிக்குறாங்க. அதேமாதிரியே எல்லாருடைய கனவுகளும், விருப்பங்களும் நிறைவேறி எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கனும்ன்னு கடவுளிடம் வேண்டிக்குறேன்.
புதிய வருடம்..
புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன்.. 
புதிய முயற்சிகள்
புதிய திருப்பங்களுக்காக,
விருப்பத்துடன்
புதுமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும்,
புத்தம் புதிதாக உதிக்கட்டும்
அனைவரும்
கனவுகளும், நம்பிக்கையும் நிறைவேறட்டும்!!


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுடனும், அப்படியே எனக்கும் நல்லபடியா புத்தாண்டு அமையுமென்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும்..
உங்க
ராஜி

Wednesday, March 28, 2018

தாயுமானவன் நீ....

பாசம், அன்பு, பியார், பிரேமம், காதல், பக்தி, நேசம்ன்னு எத்தனை பேரிட்டு அழைத்தாலும் சக மனுஷங்கமேல் வரும் ஈர்ப்புங்குறது அலாதியானது. நேசிக்கப்படுகிறோம்ன்ற உணர்வு அசாத்திய பலத்தை கொடுக்கும். நேசிக்கின்றோம்ன்ற உணர்வும் அப்படியே!  இந்த உணர்வு சிலசமயம் நேர்மறையான விளைவுகளையும் கொடுத்திருக்கு. இந்த உணர்வு ஆளுக்கும் வயதுக்கும் தகுந்தமாதிரி நட்பு, காதல், பாசம்ன்னு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுது. எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க வைக்கும் இந்த உணர்வு. இதே அன்பு, எதுக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாதுன்னு மல்லு கட்டும். 

ஒத்த அலைவரிசையில் ஒரு உறவு அமைஞ்சிட்டா அது எத்தனை சுகமானது!? அப்படி ஒரு அழகான உறவுதான் எனக்கும் அவனுக்குமானது  அம்மா தன் கருவின்பால் கொண்ட பாசம், அப்பா தன் மகளின்மேல் கொண்ட அக்கறை, காதலனின் வாஞ்சை, கணவனின் கவனிப்பு, பிள்ளைகளின் மரியாதை, ஆசிரியரின் வழிகாட்டுதல், கடவுளின் ஆசிர்வாதம் தோழிகளின் பகிர்தல்ன்னு எனக்கு எல்லாமுமாய் ஆனவன். இக்கட்டான சூழலில் காத்தவன்.....
வாழ்வின் தொடக்கத்திலும் வரவில்லை.. முடிவிலும் வரப்போவதில்லையென்றாலும் அவனில்லாமல் நானில்லை. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்புக்குலாம் வாழ்த்து சொல்லும்போது சேம் டூ யூன்னு சொல்வோம். ஆனா, பிறந்த நாளுக்கு வாழ்த்தும்போது நன்றின்னுதான் சொல்ல முடியும். ஆனா, எங்களால் முடியும். ஏன்னா ஒரே நாளில் பிறந்தவங்க. பிறந்த இடம், சூழல், கலாச்சாரம்ன்னு வேறுபட்டாலும் எங்களுக்குள் இருக்கும் பொருத்தம் யாருக்கும் அமையாதுன்னு பெருமையா சொல்வேன். என் பிள்ளைகளை என் அம்மா, அப்பாக்கிட்ட தவிர வேற யாரையும் நம்பி விடமாட்டேன். ஆனா, அவனை நம்பி விடுவேன்/ அத்தனை நம்பிக்கை..
தனியாய் பிறந்து தவிப்பேனென
எனக்கு முன்னே பிறந்து காத்திருந்தாயே!
நட்பாய் நுழைந்து
அன்பின் வடிவமாய் உயிரில் கலந்தாயே! 

இசையின் ராகமாய்
உயிரின் ஆதார  சுருதியாய் 
நடனத்தின் ஜதியாய்
உள்ளத்தில் பாவமாய் கலந்தாயே!

அன்பின் வினையாய்
ஏழேழு ஜென்மமாய் தொடர்ந்து
வந்தவனே! இப்பிறவியோடு
முடியாது, அடுத்த 
பிறவியிலும் என்னை தாங்க நீ வேண்டும்
நீ மட்டுமே வேண்டும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா!

நன்றியுடன்
ராஜி.

Thursday, November 16, 2017

பெண்களுக்கு தொல்லை தரும் க்ருஷ்ணன்

பால்ய கோலத்தில் வணங்கும் வினாயகர், முருகன், ஐயப்பன், க்ருஷ்ணர்ன்னு இருக்கும் தெய்வங்களில் வினாயகரும், ஐயப்பனும் பிரம்மச்சாரிகள் என்பதாலும், முருகன் பொறந்ததிலிருந்து அம்மாக்கள் கண்காணிப்பு, அப்புறம் போர், அதுக்கடுத்து கல்யாணம்ன்னு பிசியா இருக்குறதால அவரையும் யாரும் கண்டுக்குறதில்லை.  ஆனா நம்ம கிருஷ்ணன் அப்படி இல்ல. எப்பயும் சாக்லேட் பாய்,  அதான் எல்லா பொண்ணுங்களும் லவ்வுறாங்க இந்த கருப்பனை....

என் பிள்ளைகளுக்கு சின்ன வயசுல புரட்டாசி மாத 5  சனிக்கிழமைகளில் க்ருஷ்ணர் வேடமிட்டு சாமி கும்பிடுவோம். அதே மாதிரிதான் என்ற  எதிர் வீட்டு  கௌதமுக்கு வேடம் போட்டோம்.   நாமம் போட்டு அசிங்கப்படுத்திட்டேன்னும், துளசி மாலை போட்டதும் அது குச்சி குத்தினதும் கோவம் வந்திட்டு இந்த சின்ன க்ருஷ்ணனுக்கு.... எனக்கு பிடிச்ச போட்டோ இது.
நமக்கு பிடிச்சவங்க அடுத்த பெண்களை பார்த்தா வெட்டி போட்டுடலாம்ன்னு கோவம் வருது. இத்தனை அழிச்சாட்டியம் பண்ணியும் க்ருஷ்ணனை மட்டும் பிடித்து போக என்ன காரணமா இருக்கும்?!
உலகையே கட்டி ஆளும் இறைவனை,  சாதாரண  கயிறு கட்டி வைக்க முடியுமா?! இறைவன் கட்டுண்டது கயிறுக்கல்ல.. அன்புக்கு... இது ஏன் நம்மாளுங்களுக்கு புரிய மாட்டேங்குது!!!!

அவனை சுமந்து செல்ல அடியார்கள் ஆயிரக்கணக்கில் காத்திருக்க, அன்பை சுமந்தபடி க்ருஷ்ணன்...

இறைவனையே காதல் ஆட்டிப்படைக்கும்போது நாம் எம்மாத்திரம்?!

குழந்தை பருவத்தை ரசித்தபடி....
அன்புக்கு கட்டுப்படும் இறைவன் தீயவர்களை அடக்க முற்பட்டபோது...

தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் ஆசைப்பட்டவளுக்கு மரத்திலும் காட்சியளிப்பான்....

படியளிக்கும் எம்பெருமான் ரிலாக்ஸ் பண்ணும் தருணமிது....

ராதை, பாமா, ருக்மணி, பதினோராயிரம் கோபியர், ஆண்டாள், மீராவுக்கு அடுத்து யாரை தன்வசப்படுத்தலாம்ன்னு யோசிக்குறானோ மாயக்கண்ணன்?!
எதை கொண்டு வந்தோம்?! எதை கொண்டு சொல்லப்போகிறோமென  என வாழ்வின் நிதர்சனத்தை போதித்தபடி... 

நிழலும் அவனே! நிஜமும் அவனே! பார்க்கும் இடத்திலெல்லாம் நீக்கமற நிறைந்து என்னை ஆட்கொண்ட ராஜாதி ராஜனும் அவனே!

அவன்.....

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)

விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். 
(தீராத)

பாம்பே ஜெயஸ்ரீ குரலில் இப்பாடலை கேட்க இங்க சொடுக்கவும்.... 


 தமிழ்மணம் ஓட்டின் அலைப்பேசி லிங்க்

நன்றியுடன்.,
ராஜி. 

Wednesday, March 15, 2017

காதலித்தே கொள்

நிகழ்காலம் உன்னை 
தலைக்குப்புறடிக்கும்
ஆசுவாசப்படுத்த காதல் கொள்.....

காதல் நினைவுகள்
உன்னை முள்ளாய் குத்தும்..
முள்ளை முள்ளால் எடுக்க
காதல் கொள்....

வாழ்வும், சாவும்..
ஆற்றுவெள்ளமென அடித்துச்செல்லும்..
எதிர்நீச்சல் அடித்து கரைசேர
காதல் கொள்...

வாழ்வை வெற்றிக் கொள்ள
காதல் கொள்..
காதலித்தே கொல்..


Wednesday, March 08, 2017

மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா?!


உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?
பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.
இனி மகளிர் தினம் உருவான வரலாறு பார்ப்போம்..


மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றில் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! .


பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரேக்கத்தில்...

 பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சியின்போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தன்மை வேண்டிப் போராடினார்கள்.



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள, கோஷங்கள் வானைப் பிளக்க, அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரெனக் கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களை சமாதானப்படுத்தினான். அது இயலாமல் போகவே, அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.
ஐரோப்பாவில்...

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட, ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8-ஆம் நாள்தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அமெரிக்காவில்....

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியால் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதன்பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. 1910 இ-ல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடிப் பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1911 மார்ச் 19-இல் முதல் சர்வதேசப் பெண்கள் தினம் இலட்சக்கணக்கானப் பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.

ரஷ்யாவில்.....

1917-இல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்தச் சமயத்தில் ரொட்டிக்காகவும், அமைதிக்காகவும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23. ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள். ஆகவேதான் மார்ச் 8 இல் பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது..ஐ.நா.&வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்குச் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.

மகளிர் தினமான இந்நாள்...

1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.
அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின. பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி, முயற்சியும் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்!
பெண்கள் பற்றிய செய்திகள் சில...

* உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவித்தினர் பெண்கள்.

* தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள்.

* ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

* பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.

* இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

* ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை
நன்றியுடன்..








ராஜி.