சிவனே மலையாய் உருக்கொண்ட திருவண்ணாமலை பத்தியும், கிரிவலம் பத்தியும், மகாதீபம் பற்றியும் பல பதிவுகள் நம் தளத்தில் பார்த்திருக்கிறோம். ஆனா, கோவில் பத்திய விவரங்களை இதுவரை நாம பார்க்கலை. ரொம்ப நாளா இருந்த வந்த அந்த குறையும் இறைவன் அருளால இன்னிக்கு கொஞ்சம் நீங்கிச்சு.
விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள்
இக்கோவிலின் பணியை தொடங்கி வைத்தனர். இக்கோவிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகப் பழமையானது தொன்மையானதும்கூட.
இக்கோபுரம் கி.பி 1063ல் வீர ராஜேந்திர சோழனால்
கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
கி.பி. 14 நூற்றாண்டில் ஒய்சாளர்களின் தலைநகராக திருவண்ணாமலை இருந்துள்ளது.
அண்ணாமலையார் கோவிலிலுள்ள ”வல்லாள மகாராஜா” கோபுரம் மூண்றாவது வல்லாள மாகாராஜாவால் (1291- 1342) கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள
மன்னரின் திருப்பணி எனக்கூறுவர்.
ஒய்சாள
மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின்
கட்டடக்கலை உச்சத்தை எட்டியது. கிருஷ்ண தேவராயர் (1509 -1529)தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின்
கிழக்குக் கோபுரத்தைக் கி.பி.1516 ல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம்
தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி
முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களில்
ஒன்றாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும். இராயக்கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன.
இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுப்போல் உள்ள ஓவியமாகும். இந்த
ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக்கலைக்கு எடுத்துக்காட்டு.
சிவகங்கை
குளமும், ஆயிரங்கால் மண்டபமும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானதாகும். விஜயநகர கால
கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம்
விளங்குகிறது.
அண்ணாமலையார்
கோவிலின் மூலவர் அருணாச்சலேஸ்வரர். அம்பாள் உண்ணாமுலை அம்மன். கருவறை முழுதும்
சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சன்னிதிக்கு
வெளியில் உள்ள மண்டபத்தில் அஷ்டலட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டபம் உள்ளது.
விநாயகர் சன்னிதியும், கம்பத்து இளையனார்(முருகன்)
சன்னிதியும் இக்கோவிலுள்ள முக்கிய சன்னிதிகளாகும்.
பெரிய மலைக்கு
நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரம்மாண்டமாய்
இக்கோவில் பரந்து விரிந்து இருக்கு. கோவிலின் உள்ளே நுழைய திசைக்கொன்றாய் நாலு
கோபுர வாசல் உள்ளது.. கோவிலின் ராஜ கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும், 11 அடுக்குகளையும் கொண்டது.
சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்கள் கோவிலினுள் உள்ளது. இக்கோவில்
மிகப்பெரியது என்பதால் ஆறு பிரகாரங்களில் என்னன்ன சன்னிதிகள், சிறப்பம்சங்கள் உள்ளது என பார்ப்போம்...
முதல் பிரகாரம்:
இங்கு மூலவர் சன்னிதி உள்ளது. விண்ணுக்கும், மண்ணுக்குமாய் நின்றருளிய இறைவனை இங்குதான் தரிசிப்போம்..
இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்க இங்கிருந்து
வழி உண்டு.
இரண்டாம்
பிரகாரம்: இங்கு அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பைரவர், கஜலட்சுமி, நடராஜர், துர்க்கை, சண்டிகேஸ்வர் ஆகிய தெய்வங்களின்
சன்னிதிகள் இருக்கு. அண்ணாமலையாரின் பள்ளியறையும் இங்குதான் இருக்கு.
மூன்றாம்
பிரகாரம்: இங்கு கிளிகோபுரம், தீபதரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சன்னிதி, யாகசாலை,
பிடாரி அம்மன் சன்னிதி, கல்லால் ஆன திரிசூலம், சிதம்பரேஸ்வரர்,
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் சன்னிதிகளை தரிசிக்கலாம்.
நான்காம்
பிரகாரம்: கால பைரவர், பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்திவிலாசம், கருணை இல்லம், பிரம்ம லிங்கம், யானை திரைக்கொண்ட விநாயகர், நளேஸ்வர லிங்கம், பிச்சை இளையானார் சன்னிதிகளை இங்கு
தரிசிக்கலாம்..
ஐந்தாம்
பிரகாரம்: கம்பத்து இளையனார் சன்னிதி, ஆயிரங்கால்
மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சன்னிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மகாராஜா
கோபுரம் முதலியவற்றை இங்கு காணலாம்.
ஆறாம் பிரகாரம்:
கோவிலுக்குள் நுழையக்கூடிய நாலு கோபுரங்கள் இங்குள்ளது. பதினோரு நிலைகளுடன் கூடிய
ராஜகோபுரம் 217 அடி உயரத்திற்கு வானளவி நிற்கிறது. 11
கலசங்களை தாங்கி கம்பீரமாய் நின்று நமக்கு கோடி
பலன்களை அள்ளி தருகிறது. ராஜகோபுரத்தை கீழைக்கோபுரம் எனவும் அழைக்கப்படுது. தெற்கு
கோபுரத்தை திருமஞ்சன கோபுரமென்றும், மேற்கு
கோபுரத்தை பேய் கோபுரம் என்றும், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம்
என்றும் கூறுவர்.
கிளி கோபுரம்:
பாரிஜாத மலர்
சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு
இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில்
கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு
வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல்
தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல்
அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார்.
இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு
கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று
கம்பத்து இளையனார்:
எல்லா சிவன் கோவில்களிலும் உள்நுழைந்ததும் முதலில் தரிசிப்பது விநாயகராய்த்தான்
இருப்பார். ஆனால், திருவண்ணாமலை கோவிலில் முருகப்பெருமான்
அவ்விடத்தை பிடித்துள்ளார். 16 கால் மண்டபத்தில் அருணகிரிநாதரில்
பிரார்த்தனைக்கிரங்கி பிரபுடதேவராய மன்னருக்கு ஒரு தூணில் காட்சி தந்ததால்
இப்பெயரில் நமக்கும் அருள்பாலிக்கின்றார் முருகர்
பாதாள லிங்கமும் ரமணரும் : இங்குதான் பாதாளலிங்கேசுவரர் சந்நதி உள்ளது. ""பாதாளம்'' என்பதற்கேற்ப, படிகள் வழியே கீழே இறங்கி அவரை தரிசனம் செய்கிறோம். பள்ளிப்படிப்பைத் துறந்து, பலத் தலங்களைச் சுற்றி வந்த பின்னர், வெங்கடசுப்ரமணியன் என்ற அந்தச் சிறுவனுக்கு பாதாளலிங்கேசுவரரின் தரிசனம் ஞானஒளியைத்தந்தது. அதன் பின்னர், ரமணர் ஆகி, ரமண மகரிஷி என்ற பெருமையும் பெற்று, திருஅண்ணாமலை திருத்தலத்தில் பல காலம் தங்கி தவம் செய்து முக்தியும் பெற்றது வரலாறு. அடுத்து நாம் காண்பதுதான் வல்லாளமகாராஜா கோபுரம். இந்த கோபுரத்தின் மீதேறிதான் தனது ஊனுடலை நீக்கிக் கொள்ள அருணிரிநாதர் முயற்சித்தார். கீழே விழுகையில்,அவரைத் தாங்கி நின்று காப்பாற்றி அருள்பாலித்த முருகப்பெருமான்,கோபுரவாசலில் காட்சி தருவதும் மிகப் பொருத்தமே !
1400 ஆண்டு பழமையான திருவண்ணாமலைக்கோவிலுக்கு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு பிறகு இன்று (6/2/2017) கும்பாபிசேகம். அதனால, சும்மா எனக்கு தெரிந்த கோவில் விவரஙகளை பதிவிட்டுள்ளேன்...
விரைவில் மிக விரிவாக கோவில் அமைப்பும், அதற்குண்டான படங்களும் பதிவிடப்படும்.
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
வணக்கங்களுடன்..,
திருவண்ணாமலை கோயில் பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ
Deleteவிளக்கங்கள், படங்கள் என அனைத்தும் அருமை சகோதரி...
ReplyDeleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteதெரிந்த விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கியமான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
ReplyDeleteஆமாம்ப்பா
Deleteவிரிவான தகவல்கள்...
ReplyDeleteஅருமையான பகிர்வு ...