Thursday, February 09, 2017

காவடி எடுப்பது ஏன்?! - தைப்பூசம் ஸ்பெஷல்

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம்.  தைமாத  பூச நட்சத்திரம் வரும்  நாளே ”தைப்பூச” விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாகவே  இருக்கும்.

தமிழ்கடவுளான முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் விழாக்களுக்கு முக்கியமானது தைப்பூசம் ஆகும். தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடக்குதல் என செய்கின்றனர். முருக பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், பாதயாத்திரை, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செய்கின்றனர். இந்த நாளில் முருகனின் அறுபடைவீடுகள் உள்ளிட்ட எல்லா முருகன் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுது.  

தேவர்களின் பகல் பொழுது உத்தராயணம் என அழைக்கப்படுது. உத்தராயண காலம் தைமாதத்தில் ஆரம்பிக்குது. எனவே தேவர்களின் காலைப்பொழுது தைமாதம் ஆகும். சிவ அம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்க்கோட்டில் நிக்க “தைப்பூசம்” அமைகின்றது. அப்பேற்பட்ட புண்ணிய நாள் இன்று(9.2.2017) கோலாகலமாய் கொண்டாடப்படுது..


தைப்பூச நாளன்றுதான் உலக சிருஷ்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிவசக்தி ஐக்கியம் இந்நாளில்தான் நிகழ்ந்ததாக சொல்லப்படுது. சிவனில்லையேல் சக்தியில்லை.... சக்தியில்லையேல் சிவனில்லைன்ற கூற்றுப்படி சிவனும், சக்தியும் இணைந்ததால் உலகம் உருவாகி, இயங்குது. இந்த புண்ணிய தினத்தில் முதலில் உருவானது “நீர்”, அதன்பின் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என உருவானதாக நம்பிக்கை. உலக இயக்கத்திற்கு ஆதாரமான பஞ்சபூதங்கள் சிருஷ்டிக்கப்பட வழிகோலிய இத்திருநாளை போற்றி வழிப்பாடு செய்கின்றோம்.
இயற்கையையும் வழிபடும் நம் பாரம்பரியத்தின் அடிப்படையிலும் தைப்பூசம் கொண்டாடப்படுது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் இயற்கையை மீறி எதும் செயல்படமுடியாது. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே இயற்கையே அடித்தளமா இருக்கு. தோற்றத்திற்கும், மறைவிற்கும், அதற்கிடைப்பட்ட காலங்களின் செயல்பாட்டிற்கும் இயற்கையே அடிப்படை விதியாகும்.

பூச நட்சத்திரட்தின் அதிபதி தேவர்களி குருவான பிரகஷ்பதி(குரு பகவான்) இவரே அறிவின் தேவதையுமாவார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவப்பெருமானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டம் ஆடி காட்டிய நாள் இந்த தைப்பூச நாளாகும். இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளதை நமக்கு உணர்த்தும் நாளாகவும் இந்நாள் அமைகிறது.
தகப்பனுக்கு மட்டுமல்லாமல், தமையனுக்கும் இந்நாள் விசேஷ நாளாகும். சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும், தன் அன்னையான பராசக்தி தன் அம்சமான வேலை வழங்கிய தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது. சிவனின் அருளால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையும் பெற்று சிவசக்தியின் பேரருள் மிக்கவராய் விளங்குவதால், தைப்பூசத்தன்று அபிஷேக ஆராதனையும், திருவிழாக்களும் கொண்டாடப்படுது. தாங்கள் நினைத்தது நிறைவேற தைப்பூசத்தன்று விரதமிருந்து, நினைத்த வரம் கைவரப்பெற்றப்பின் நேர்த்திக்கடனாக அலகுகுத்துதல், காவடி எடுத்தல், பாதயாத்திரை என செலுத்துகின்றனர்.
தைப்பூசம் திருவிழா முருகனின் படவீடுகளில் ஒன்றான பழனியில்தான் மற்ற தலங்களைவிட வெகுவிமர்சையாக கொண்டாடப்படுது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில, நாட்டிலிருந்தும் விரதமிருந்து பாதயாத்திரையில் கலந்து கொள்கின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

முருகப்பெருமானின் அருளைப்பெற தைப்பூசம் உகந்த நாள், முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது அனைத்து முருகன் கோவில்களிலும் முருகனடியார்கள் சிறப்பு வழிபாடுகள், நேர்த்திகடன்கள் என வெகு விமர்சையாக கொண்டாடுவர்கள். 


தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்தம் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை அனுபவப்பூர்வமாய் கண்ட உண்மையும்கூட. தங்கள் நோய் குணமானதும் பழனி முருகன் கோவிலில் தங்கள் நேர்த்திகடனை காவடி எடுத்து செலுத்துகின்றனர். மற்ற கோவில்களிலும்கூட காவடி எடுக்கும் பக்தர்களும் உண்டு.
காவடி எடுப்பதன் பொருள்: 
அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளை கொண்டுவரும்படி பணித்தார். 

அவ்வாறே இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்குமாறு ஒரு கம்பில் காவடியாய் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகலையும் திருவாவினன்குடியில்(பள்நீ) நிலைப்பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி, இடும்பன் வழித்தெரியாமல் திகைத்தபோது முருகன் குதிரைமீது செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை திருவாவினன்குடியில் சற்று ஓய்வெடுத்து செல்லுமாறு கூறினார். 

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து, பின் புறப்படும்போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான். இவ்வளவு நேரம் சுமந்து வந்த காவடியை இப்போது தூக்க முடியாத காரணத்தை ஆராய்ந்த போது , சிவகிரியின்மீது ஒரு சிறுவன் கோவனத்துடனும், கையில் தண்டத்துடனும் நிற்பதை கண்டு, மலயிலிருந்து இறங்குமாறு பணித்தான். ஆனால், சிறுவனோ, இம்மலை எனக்கே சொந்தம் என சொந்தம் கொண்டாடினான். கோபமுற்ற இடுமபன் சிறுவனை தாக்க முயல, வேரற்ற மரம்போல் இடும்பன் விழுந்தான்.

இதை உணர்ந்த அகத்தியரும், இடும்பனின் மனைவியுடன் சென்று முருகனை வேண்ட இடும்பனுக்கு அருளி அவனை உயிர்பித்து தன் காவல்தெய்வமாகவும் உயிர்பித்தார். அப்போது இடும்பன், தன்னைப்போல காவடியேந்தி பால், சந்தன, மலர், இளநீர் போன்ற அபிஷேகபொருட்களை கொண்டு வந்து உம்மை வணங்குபவர்களது பிணி நீங்க அருள்செய்ய வேண்டுமென வரம் கேட்டான். அவ்வாறே முருகனும் அருளினார். அன்றுமுதல் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும், துன்பமும் இரண்டு சுமைகளாக சரிசமமாக இருக்கிறது, மனிதனாய் பிறந்தவன் இவ்விரு துன்பங்களை தாங்கித்தான் ஆகவேண்டும். இவ்விரண்டையும் எளிதாய் சுமக்க கடவுள் பக்தி என்னும் மையக்கோல் உதவுது என்பது இதன்மூலம் புலனாகிறது.

இறை சக்தியும், இயற்கை சக்தியும் எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றிவிட்டால் தன்னிம்பிக்கை தானே வந்து நம்வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள செய்யும். உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள இத்தைப்பூச நன்னாளில் சிவசக்தி பேரருளை நாடி வழிப்படுவோம்.
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...
வணக்கங்களுடன்,
ராஜி.

8 comments:

  1. அரிய விடயங்கள் பல அறிந்தேன் நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ..கருத்துக்களுக்கும் நன்றி ..சகோ

      Delete
  2. காவடி எடுத்தலுக்கான விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே பதிவுகளின் நோக்கம் ..கருத்துக்களுக்கு நன்றி சகோ ..

      Delete
  3. காவடி எடுக்கும் வழக்கம் பற்றிய விளக்கம் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாத விவரம்மாண்ணே?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. காவடி...

    நல்ல விளக்கம்.

    ஆறாண்டு முருகனுக்கு நடைப்பயணம்... பழனி மலைக்கு....
    படங்கள் அழகு.

    ReplyDelete
  5. காவடி பார்த்துள்ளேன், நண்பர்கள் எடுத்து பார்த்துள்ளேன். பின்புலத்தை இன்றுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete