Wednesday, March 01, 2017

ப்ளஸ் டூ தேர்வெழுதுவதில் இத்தனை விசயம் இருக்கா?!

தேர்வுக்கு செல்லும்  மாணவர்கள் கவனத்திற்கு:
1.தேர்வு நடைப்பெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுங்கள்.. இது தேவையற்ற பதட்டத்தை தடுக்கும். 

2.  தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிண்ட்ரி பாக்ஸ் , ஹால் டிக்கட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
3. வீட்டில் தேர்வுக்கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த தேதியில் எந்த தேர்வு என்பது குறித்து சந்தேகம் ஏற்படாது. 

4. தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்றுவிட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனும் தேவையில்லாமல் அரட்டை அடிப்பதும் பாடம் சம்பந்தமானதையும்கூட விவாதம் செய்யாதீங்க.  இதை படிச்சியா?!  அந்த கேள்வி கண்டிப்பா வரும்ன்னு வீண் குழப்பங்களை அது உருவாக்கும்.
5. தேர்வு மையத்திற்கு சென்றபின் நேரமிருந்தால் முக்கிய குறிப்புகளை பார்க்கலாம். புதிதாய் எதையும் படிக்காதீங்க. 

6. தேர்வு அறைக்குள் செல்லும்முன் உங்களிடம் எழுதப்பட்ட தாள்களோ அல்லது ஜெராக்ஸ் பிரதிகளோ இருக்கிறதா என பார்த்து அதை  வெளியிலேயே போட்டு விடுங்கள். கவனக்குறைவாய்  தேர்வெழுதும்போது  எதாவது தாள் இருந்து அறை கண்கானிப்பவரிடமோ பறக்கும் படையிடமோ மாட்டிக்கொண்டால் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது.

7. அறைக்குள் நுழைந்ததும் தங்களுக்குரிய இடத்தை கண்டுப்பிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்தால் நலம். இதனால் மன அழுத்தம் குறையும்.

8.  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதட்டப்படாமல் படித்துப் பார்த்து கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதை பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விக்களுக்கான பதில்களும் எளிதில் ஞாபகத்தில் வரும். 
9. தேர்வு எழுதும்போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

10.  தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேர்வின் போது தேவையில்லாமல் திரும்பி பார்த்தல், சைகை மொழியில் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் ரிலாக்சாக அமருங்கள். தேர்வு நேரத்தில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்காமல், தேர்வு எழுதுவதிலேயே முழுக்கவனம் செலுத்துங்கள். 

11. தேர்வு நேரமான மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்துவிட்டு, மிச்ச நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா, விடைத்தாளில் தேர்வு எண் சரியாக இருக்கிறதா? விடைத்தாளில் கேள்விக்கான  எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைக்காமல் கண்கணிப்பாளர் வசம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.
இனி மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..

உங்கள் குழந்தைக்கு தேர்வு பயம் வந்தால்.., நீங்கள்  கவலை கொள்ளாமல் உங்கள் குழந்தைக்கு தைரியமூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.
தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதி வந்தவுடன், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் எழுதினே, இந்த கேள்வியை ஏன் விட்டு வந்தே, நூறு மார்க்குக்கு மட்டும்தானா எழுதினேன்னு கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்யாதீர்கள். அது அவர்களை பதட்டப்படுத்தி அடுத்து வரும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது பதட்ட பட வைக்கும்.

தேர்வெழுதி வந்தவுடன் சிறிது நேரம் தூங்கவோ, இல்லை மெல்லிய இசையையோ ரசிக்க விட்டு பிறகு படிக்க விடுங்கள். அது புத்துணர்ச்சியுடன் அவர்களை படிக்க வைக்கும்.
ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அது, அவர்களை தவறான முடிவுகளை எடுக்க வைக்காதிருக்கும்.

தேர்வெழுதும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் என் வாழ்த்துகள். எல்லாரும் தேர்வில் வெற்றி பெறனும்ன்னு இறைவனை வேண்டிக்குறேன். அப்படியே என் மகன் ராம்ஜியும் இந்த வருசம் பரிட்சை எழுதப்போறான். அவனுக்காக நீங்க வேண்டிக்கோங்க.
தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.  

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.....
நன்றியுடன்,
ராஜி.


6 comments:

  1. ஊக்கம் தரும் பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. அருமையான பகிர்வு..
    தம்பி ராம்ஜிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete