Tuesday, January 02, 2018

திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்

 
சிறப்பான நாளில் சாமி கும்பிடுவதால் நன்மை அதிகம் உண்டாகும். அதும் சிறப்பு +சிறப்பு = சிறப்ப்ப்ப்பான நாளில் சாமி கும்பிட்டா அளவில்லா நன்மை கிடைக்கும். அதென்ன சிறப்ப்ப்பான நாள்ன்னு யோசிக்குறீங்களா?! மார்கழியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த ஆருத்ரா தரிசனம் நாளான இன்று. அதுக்கு காரணம், கிருஷ்ணர் மார்கழி மாதமா இருப்பதா அவரே சொல்லி இருக்கார். அதேமாதிரி திருவாதிரை நட்சத்திரமா சிவன் இருக்கார்.  அதன்படி, மார்கழி மாசத்து திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததா கொண்டாடப்படுது. பொதுவா, ஒவ்வொரு கடவுளும் அவதரித்த நாளில் அந்தந்த கடவுளுக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனா, பிறப்பில்லாத ஆதி கடவுளான சிவனின் ஜென்ம நட்சத்திரம்ன்னு தனியா இல்லாத குறையை போக்கவே திருவாதிரை நட்சத்திரமா நான் இருப்பேன்னு சிவன் சொன்னதா புராணங்கள் சொல்லுது. 

ஆதி அந்தமுமில்லாத, பிறப்பில்லாத கடவுளுக்கு எப்படி திருவாதிரை உகந்த நட்சத்திரமா மாறிச்சுன்னு பார்க்கலாம்... திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரான்னு பேர். அதுவே ஆருத்ரான்னு மாறிட்டுது. அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரச பதவியில் இருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகி, அப்பவும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல் தான் உண்பதில்லை என்ற கொள்கையில் மாறாமல் இருந்தார். கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது,   ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாத போதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசிமாவில் , சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர். இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர். இதனால், சிவனே அடியவர் வேடம் கேட்டு சேந்தனார் வாயிலில் நின்று பிட்சை கேட்டார்.  அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர். களி மிக ருசியாயுள்ளது எனச்சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.  மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல்நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.  அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும். அன்றிலிருந்து , ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிட்டுது.

களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்ல. களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையா வச்சுதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுது.  இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார். கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர். பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான். அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிப்பட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும். பிரிஞ்சிருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். 

 முன்னொரு காலத்தில் திரேதாயுகான்ற பெண் இருந்தாள். சிறந்த பார்வதிதேவியின் பக்தை. திருமண வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. திருமணமான நாலாவது நாளில்தான் சாந்திமுகூர்த்தம் நடத்துவது அன்றைய நாளின் வழக்கம். ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன்  இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா  பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

தாருகாவனத்தில் வசித்த வேதத்தை கற்றதால் மமதை கொண்ட முனிவர்கள் சிலர் , கர்மாவே கடவுள், அதற்கு மிஞ்சியது ஏதுமில்லை. ஒருவனின் கர்ம வினைப்படியே அவனின் வாழ்க்கை அமையும். கடவுளால்கூட ஏதும் செய்யமுடியாது என சொல்லி திரிந்தனர். இவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிட்சாடனாராகவும், விஷ்ணு மோகினி வேடம் கொண்டு முனிவர்கள் முன் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி முனிவர்களும்,  பிட்சாடனர் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகளும் சென்றனர்.  இதனால் முனிவர்களது தவம் பாதிக்கப்பட்டதால்,  மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினர்.



 கர்வமும், தவ வாழ்வும் கலைந்த நிலையில் வேள்வியில் பிழை ஏற்பட்டு வேள்வி தீயிலிருந்து புலி ஒன்று உருவாகிட்டுது. அதை அந்த பிசாடனர்மேல் ஏவினர். தன்னை நோக்கி வந்த புலியை அடக்கி, அதன் தோலை, தன் இடைக்கச்சையாக கட்டிக்கொண்டார் பிட்சாடனர் வேடம் கொண்ட சிவன். அடுத்தடுத்து மான், நெருப்பை வேள்வியிலிருந்து உண்டாக்கி அதை பிட்சாடனர்மேல் ஏவ, அதையும் வீரியமில்லாததாக்கி, தன் கைகளில் ஏந்திகொண்டார் பெருமான்.  அடுத்து யானை வர அதையும் கொன்று அதன் தோலை மேலாடையாக போட்டுக்கொண்டார்.  அடுத்து தங்களது முழு ஞானத்தையும் வேள்வியில் இட்டு, அதன்மூலம், முயலகன் என்ற அரக்கனை உண்டாக்கி, சிவன்மேல் ஏவினர். முயலகனை அடக்கி, தன் காலடியில் அழுத்தி வைத்துக்கொண்டனர். இத்தனைக்கு பிறகு புத்தி வந்த முனிவர்கள், சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்ந்து சிவனை பணிந்து, தங்களை மன்னிக்க வேண்டி நின்றனர். அவர்களை மன்னித்து அருளி, மோகினி வேடத்திலிருந்த விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மேளம் கொட்ட, சிவன் ஆனந்த நடனம் புரிந்தார்.  சிவனின் நடனம் கண்டு தாருகாவனமே மகிழ்ந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.  விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார். தவத்தை மெச்சிய சிவன்,  பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.


கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர். அதனாலதான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.  அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும்  சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.  சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108 . இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48. ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம். இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.  சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க. அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிப்படனும். அப்பதான் முக்தி கிடைக்கும். 


ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் செய்யனும். இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.



இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும். சுவாமிக்கு திருவாதிரை  களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கனும். ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று  செய்யலாம். இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம். 
ஓம் நமச்சிவாய.... 

நன்றியுடன்,
ராஜி

21 comments:

  1. ஆருத்ரா தரிசனம் பற்றிய விரிவான பதிவு மிகவும் அருமை. படங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றன.

    ReplyDelete
  2. உங்களிடம் நிறைய கதைகள் உண்டோ ஒரே சம்பவத்துக்கு இத்தனை கதைகள் சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சன விழா கண்டிருக்கிறோம் சிதம்பரத்தில் தில்லை ஆடவல்லானின் நடனம்காண அங்கே பெருமாளும் இருக்கிறார் போலும்

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டு பின்னாடி சிவன் கோவில் இருக்குப்பா. அங்க திங்கட்கிழமை தோறும் வார வழிபாடு இருக்கு. இந்த வாரத்தின் ஆன்மீக நிகழ்ச்சிகள் பத்தியும், அதுக்குண்டான காரண காரியங்களை விளக்கமா சொல்வாங்க. அதுமட்டுமில்லாம பத்திரிக்கை, டிவில பார்த்த, கேட்டதைதான் சொல்றேன்ப்பா.

      Delete
    2. சிதம்பர கோவிலில் பல அதிசயம் இருக்கு. அதில் இரண்டு மட்டும் சொல்றேன்ப்பா.. ஒன்னு, ஹரியும் சிவனும் ஒன்னுன்னு சொல்றமாதிரி மாமனுக்கும் மச்சானுக்கும் ஒரே விமானத்தின்கீழ் கருவறை இருக்கும். ரெண்டாவது, பெருமாளையும், பெருமானையும் ஒரே இடத்தில் நின்னு தரிசிக்க முடியும்.

      Delete
    3. கோவிலில் ஒட்டுக்கேட்ட கதைகள் எல்லாம் பதிவாகுதோ...

      Delete
    4. நான் கோவிலுக்கு போனதா சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. போட்டோ ஆதாரம்லாம் காட்டினாலும். நீங்களாவது நான் சொல்லுறதை நம்புறீங்களே! நன்றிண்ணா

      Delete
  3. களியும் கூட்டும் சாப்பிட்டாச்சு. இப்போ பதிவும் படிச்சாச்சு! ஹையா... எனக்கும் புண்ணியம்...

    ReplyDelete
    Replies
    1. இங்க பதிவு மட்டும்தான். களி இல்ல. எங்க வீட்டில் ஆருத்ரா கொண்டாட்டம் இல்லை

      Delete
  4. இங்கும் கதை படித்து தரிசனம், கோயிலிலும் தரிசனம்...

    கீதா: அக்கருத்துடன் வீட்டுல திருவாதிரைக் களியும், தாளகமும் செஞ்சு சாமிக்குக் காட்டி...சாப்பிட்டோம்...

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் திருவாதிரை களி செஞ்சு படைக்கும் வழக்கமில்லை. குறிப்பிட்ட இனத்தவர் மட்டுதான் செய்வாங்க. எங்க வீட்டில் நாந்தான் விரதமிருந்தேன்.

      Delete
  5. அருமையான பதிவு.ஆருத்ரா தரிசனம்......விளக்கங்ளும் புகைப் படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  7. ஆருத்ரா தரிசனம் - இங்கேயே கிடைத்தது எனக்கு! நன்றி.

    களி தான் கிடைக்கல!

    ReplyDelete
    Replies
    1. இங்கயும்தான்ண்ணே. எங்க வீட்டில் செய்யும் பழக்கமில்ல. அக்கம் பக்கமும் யாரும் கொடுக்கல, தரிசனம் மட்டும் ஆச்சு

      Delete
  8. போட்டுட்டேன்!

    ReplyDelete
  9. ஆருத்ரா தரிசனம்......அருமை...


    களி செய்வாங்கன்னு தெரியும்...மேற்படி ஏதும் தெரியாது...இன்று மிக விளக்கமாக அறிந்துக் கொண்டேன்..நன்றி ராஜிக்கா...

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்காவது தெரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி அனு

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நான் பதிந்த கருத்து ஏன் நீக்கப்பட்டுள்ளது? காரணம் தெரிந்துகொள்ளலாமா?

    ReplyDelete