Friday, December 29, 2017

மகாவிஷ்ணுவுக்கே வரமளித்த இரு அரக்கர்கள்

சிவன் அருளைப்பெற மகாசிவராத்திரி அன்று கண்விழித்து இறைவனை வழிபடுவர். அதேப்போல விஷ்ணுக்கு வைகுண்ட ஏகாதசி.  சிவராத்திரிக்கு எத்தனை நேரம் கண்விழிச்சிருக்கோமோ அத்தனைக்கு பலன் உண்டு. ஆனா, வைகுண்ட ஏகாதசிக்கு கண்விழித்திருப்பது ரொம்ப கஷ்டம். இரண்டு பகல்,ஒரு இரவு கண் விழிச்சிருக்கனும். கடைசி அஞ்சு நிமிசம் கண் அசந்தாலும் கண் விழிச்சதுக்க்கான பலன் கிடைக்காதுன்னு எப்பயோ எங்கயோ கேட்டிருக்கேன். அதனால, வைகுண்ட ஏகாதசிக்கு கண் விழிச்சிருப்பதை அவாய்ட் பண்ணிடுவேன். ஆனா, படைத்தவனுக்கு தெரியாதா?! யாருக்கு என்ன, எப்ப கொடுக்கனும்ன்னு.. அதான் கடந்த ரெண்டு வருசமா விரதம் இருக்க ஆரம்பிச்சாச்சு...

 ஒவ்வொரு மாசமும் அமாவாசை, பௌர்ணமில இருந்து 11வது நாள் ஏகாதசி.  மாதத்துக்கு ரெண்டு ஏகாதசி வரும்.    ஏகாதசி திதி பெருமாளுக்கு மிக விசேசமானது.  எல்லா ஏகாதசியிலும் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி கன்ஃபார்ம். எல்லா ஏகாதசியிலும் என்னால விரதமிருக்க முடியாதுன்னு என்னைய மாதிரி வெசனப்படுறவங்களுக்கு ஒரு சலுகையை  தி கிரேட் பெருமாள் தர்றார். அது என்னன்னா, மார்கழி மாச வளர்பிறையில் வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் டைரக்டா வைகுண்டத்துக்கு போக கேட் பாஸ் கிடைச்சுடும்.  மூன்று கோடி ஏகாதசி திதியில் விரதமிருந்த பலனை கொடுக்கக்கூடியது இந்த வைகுண்ட ஏகாதசி விரதம். அதனால இதுக்கு முக்கோடி ஏகாதசின்னு பேரு. 

ஏகாதசி விரதம் எப்படி வந்துச்சுன்னு பார்க்கலாம்..

முரன்’ன்ற  அரக்கன் எப்பவும்போல தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி வந்தான்.  ஆஸ் யூஸ்வல் முனிவர்களும், தேவர்களும் பெருமாள்கிட்ட போய் பிராது கொடுத்தாங்க. உடனே, பெருமாளும் முரனுடன் போரிட்டு அவனோட படைகளை அழிச்சுட்டார். எப்பேற்பட்ட கெட்டவனா இருந்தாலும் பகவான் எடுத்த எடுப்பிலேயே  அவனை அழிச்சுடமாட்டார். திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அதனால,  போரிட்ட களைப்பு தீர பத்ரிகாசிரம்’ன்ற இடத்துல போய் ரெஸ்ட் எடுக்குற மாதிரி படுத்துக்கிட்டிருந்தார். இந்த விசயம் முரனுக்கு தெரியவர, அந்த இடத்துக்கு போய், பெருமாளை நெருங்கி அவரைக்கொல்ல,  வாளை ஓங்கினான்.  தூக்கத்திலிருந்தபடியே, தன் உடலிலிருந்து ஒரு மோகினியை உண்டாக்கி முரனை கொல்ல அவளை அனுப்பினார். 
 பெண்ணான உன்னைக்கொல்ல ஒரு அம்பு போதுமென எள்ளி நகையாடி, அம்பை நாணில் பூட்டினான். அந்த நேரத்தில் ஹூம்ன்னு பெருமூச்சு விட்டாள் மோகினிமோகினியின் பெருமூச்சில் முரன் எரிந்து சாம்பலானான். முரன் எரிந்து சாம்பலானதும் ஏதுமறியாதவர் போல எழுந்து முரனை எரித்த மோகினியை பாராட்டி,  ஏகாதசின்னு பேர் வச்சார் பெருமாள். ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். 


சித்திரை மாத வளர்பிறை ஏகாதசியின் பெயர் பாபமோகினி.  தேய்பிறை ஏகாதசி  காமாதான்னும் , அழைக்கப்படுது. இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருந்தால் கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். இதேப்போல  வைகாசி வளர்பிரை ஏகாதசி வருதினி,  தேய்பிறை ஏகாதசி மோகினி ன்னு சொல்லப்படுது. இந்த நாளில் விரதமிருந்தால் இமயமலைக்கு  போய் பத்ரிநாத்தை வழிப்பட்ட பலன் கிடைக்கும்.  ஆனி மாசம் அபாரா, நிர்ஜலா ன்னு அழைக்கப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆடி மாசத்தில் யோகினி, சயன ஏகாதசி அழைக்கப்படும் இந்நாளில் விரதமிருந்தால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.  ஆவணி மாசத்துல ஏகாதசி காமிகை, புத்திரதான்னு அழைக்கப்ப்படும். இந்நாளில் விரதமிருந்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும். புரட்டாசி மாச ஏகாதசி,  அஜா, பரிவர்த்தினின்னு அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால்  செல்வ செழிப்பு உண்டாகும். 

ஐப்பசி மாச ஏகாஷரி இந்திரா, பராங்குசான்னு சொல்லப்படுது.  இந்நாளில் விரதமிருந்தா நோய் நொடிகள் அண்டாது.  கார்த்திகை மாத ஏகாதசி ரமா, பிரமோதினி அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால் கால்நடை பாக்கியம் கிட்டும். மார்கழி மாத ஏகாதசி வைகுண்ட ஏகாதசி,  உத்பத்தின்னு அழைக்கப்படுது. மனிதர்களின் ஓராண்டுக்காலம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி பார்த்தால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாகும். மகாவிஷ்ணு தூக்கம் களைந்து கண்விழிக்கும் நேரமாகும்.  அதனாலதான் மார்கழி ஏகாதசி நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுது. 

தை மாத ஏகாதசி சுபலா, புத்ரதான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பித்ரு  சாபம் நீங்கும். மாசி மாத ஏகாதசி  ஜெயா, ஷட்திலான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பாவம் நீங்கும் பிரம்மஹத்தி தோசம் நீங்கும். பங்குனி மாத ஏகாதசி  விஜயா, விமலகின்னு அழைக்கப்படுது.  ராமபிரான் இலைங்கைக்கு செல்லும்முன் விஜயா ஏகாதசி அனுஷ்டித்ததாய் சொல்லப்படுது.  இந்நாளில் விரதமிருந்தால் பதவி, புகழ் கிடைக்கும்.


ஏகாதசிக்கு முன் தினம் ஒருவேளை உணவு உண்டு ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைகளை முடித்து, முறைப்படி விரதம் இருக்கனும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம்.  முடியாதவர்கள் பால் பழம் உண்ணலாம். பகலிலும் உறங்காமல் பெருமாளை எண்ணி பஜனை, கருடப்புராணம் போன்றவை படித்தல் வேண்டும். அன்றி இரவு பரமபதம் விளையாடலாம். சினிமா, டிவி பார்த்தல் தவிர்க்கலாம். மறுநாள் அடியவர்களுக்கு உணவளித்து விரதம் முடிக்க வேண்டும்.

விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியதால் பிரம்மாவுக்கு கர்வம் உண்டானது. அவரின் கர்வத்தை அடக்க நினைத்த விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள்ன்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த  விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அதற்கு கைமாறாக அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகாவிஷ்ணுவிற்கு வேண்டுமானால், தாங்கள் வரம் தருவதாகக் கூறினர். மகாவிஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள்,  ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் சித்தி அடைய வேண்டும்''ன்னு வேண்டிக்கிட்டாங்க. பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.



மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் மகாவிஷ்ணு சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுதான் சொர்க்க வாசல் திறப்பு தோன்றிய வரலாறு. 

தன்னை எட்டி உதைத்த பக்தனின் காலை பரமன் பிடித்துவிட்ட கதைலாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, பக்தனுக்கு சிறு கஷ்டம்ன்னா ஓடோடி வருவான். அதன்படி, அம்பரீஷ்ன்ற மன்னன் ஒற்றைக்குடையின் கீழ் இப்பூவுலகை ஆண்டு வந்தான். மன்னாதி மன்னன் ஆனாலும் சிறந்த விஷ்ணு பக்தன்.   உபவாசம்ன்னா இறைவனுக்கு அருகில் இருத்தல்ன்னு பொருள். அதன்படி, ஏகாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து வந்தான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று நீராடி உணவு உட்கொள்ள வேண்டும், இதுதான் முறை. அதன்படி உணவு அருந்த செல்லும்போது, அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவரை உணவு உண்ண அழைத்தான். அவரும் இதோ குளித்துவிட்டு வருகிறேன் என சென்றார். நேரம் கடந்தது., ஆனாலும். துர்வாசர் வந்தபாடில்லை. துவாதசி திதிக்குள் விரதம் முடிக்க வேண்டுமென்பதால் துளசி தண்ணீர் மட்டுமாவது அருந்துங்கள்ன்னு சொன்ன வேத விற்பன்னர்களின் பேச்சை கேட்டு துளசி தண்ணீர் மட்டும் அருந்தினான் அம்பரீஷ்.

இதைக்கேள்விப்பட்ட துர்வாசர், அதிதியாக வந்த தன்னை மதிக்காமல் விரதம் முடிக்க உன்டது தவறு என கோவம் கொண்டார். இல்லை வெறும் துளசி தண்ணீர் மட்டும்தான் குடித்தேன் என அம்பரீஷன் பணிந்து நின்றான். துளசி தீர்த்தம் உண்டதும் உணவு உட்கொண்டதுக்கு சமம். என்னை அவமதித்துவிட்டாய் என கோவம்கொண்டு தன் தலைமுடியிலிருந்து ஒரு முடியை பிடுங்கி, அம்பரீஷ் மீது ஏவினார். அது பூதமாக மாறி அம்பரீஷை துரத்த, அவன் விஷ்ணுவை சரணாகதி அடைந்தான்.  விஷ்ணுபகவான், தன் கையிலிருந்த சக்ராயுதத்தை அப்பூதத்தின்மேல் ஏவினார். அப்பூதம் துர்வாசரை வந்தடைய, அவரையும் சேர்த்து சக்ராயுதம் துரத்தியது. இதனால பயந்துபோன துர்வாசர் மகாவிஷ்ணுவை பணிந்தார்.

தன்னை பணிவதைவிட, யாரை ஏளனமாய் கருதி பூதத்தை ஏவினாயோ! அவனிடம் சென்று பணிந்து நில்ன்னு துர்வாசருக்கு அறிவுரை கூறினார். ஏகாதசி விரதமிருப்பவர்களை யாராலும் அழிக்க முடியாது, அதனால் அவன் மன்னித்தால் சக்ராயுதம் பழைய நிலைக்கு திரும்பும் என விஷ்ணு சொல்ல, அதன்படி அம்பரீஷை பணிந்தார் துர்வாசர். அம்பரீஷ் அவரை மன்னிக்க சக்ராயுதம் அம்பரீஷை பணிந்து மீண்டும் விஷ்ணுபகவானிடம் சென்றது. பக்தனை காப்பாற்ற இறைவனே ஓடோடி வந்ததால் அவனின் பெருமையை உணர்ந்துக்கொண்ட துர்வாசர் அம்பரீஷுக்கு ஏராளமான வரங்களை அள்ளி வழங்கினார்.

இத்தகைய மகிமை வாய்ந்த ஏகாதசி பெருமையை உணர்ந்து இந்நாளில் இறைவனை போற்றி துதித்து மோட்சம் அடைவோம். ஏன்னா, வைகுண்ட ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசின்னும் பேரு. இந்நாளில் விரதமிருந்தாலும், இறந்தாலும் மோட்சம் கிடைக்கும். அதுக்காக, மோட்சம் கிடைக்கும்ன்னு ஏடாகூடமா ஏதும் செய்யக்கூடாது. வைகுண்ட ஏகாதசி நாளில் இறந்தாலும் அவரவருக்குண்டான கர்ம வினைப்படிதான் மோட்சம் கிடைக்கும். அதனால நல்லதே செய்வோம். மோட்சம் பெறுவோம்..


நன்றியுடன்,
ராஜி.

20 comments:

  1. நக்கல் அடிப்பதில் கடவுளையும் விட்டு வைப்பதில்லையோ...

    ReplyDelete
    Replies
    1. இந்த பிறவிக்கு மட்டுமே வரும் அப்பா அம்மாக்கிட்ட எத்தனை உரிமை எடுத்து கொண்டாடுறோம். ஏழேழு பிறவிக்கும் வரும் தாயுமானவனை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். திட்டலாம்,கொஞ்சலாம், கெஞ்சலாம், மிரட்டலாம்... அப்படி இருக்கும்போது நான் நக்கலடிக்கலாம் தப்பில்ல

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் நன்றிண்ணே

      Delete
  3. கடைசியில் வரும் பன்ச் வரிகள் அருமை ஏகாதசி பற்றி முற்றிலும் அறிந்து கொண்டேன் .

    ReplyDelete
    Replies
    1. நல்லதுப்பா. சுண்டு சுள்ளான்லாம் பஞ்ச் பேசுது. நான் பேசக்கூடாதா?!

      Delete
  4. வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பதிவு படித்து ரசித்து, தெரிந்துகொண்டு, கொஞ்சம் புண்ணியம் பெற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புண்ணியம் கிடைச்சதால எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைச்சிருக்கும் சகோ. அதுக்கு நன்றி

      Delete
  5. பழைய புராணங்கள் கதைகள் வாழ்த்து!

    ReplyDelete
  6. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
    ஏகாதசி விரதச் சிறப்பு அருமை

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி சகோ

      Delete
  7. இதுவரையில் நான் ஏகாதசி விரதம் இருந்ததில்லை. தங்கள் பதிவு என்ன இப்போது தூண்டுகிறது. முயற்சிக்கிறேன். மிகுந்த நேரமும் உழைப்பும் செலவிட்டு அழகிய படங்களுடன் பதிவிடும் தாங்களுக்கு இறைவன், எதிர்வரும் புத்தாண்டில் எல்லா வளங்களும் வழங்கிடுவானாக- என்று வாழ்த்துகிறேன்.

    - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. உபவாசம் இருந்திடலாம்ப்பா. ஆனா, இந்த இரண்டு பகல் ஒரு இரவு கண் விழிக்கனும். அதான் பெரிய சவாலான காரியம்.

      Delete
  8. வைகுண்ட ஏகாதசி பதிவு அருமை...தாமதமாக வருகைதான் நாங்கள்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்,,,

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் பிசிதான்ண்ணே

      Delete
  9. Sir, vaikunda ekadasi andru Oru sisu jananam eduthul athan nallathu kettathu sollungalen.

    ReplyDelete