Friday, November 23, 2018

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே - திருக்கார்த்திகை தீபம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி, ஆனா திருவண்ணாமலையை நினைச்சாலே முக்தி. அதுக்காக,  திருவண்ணாமலை ஊரை நினைச்சதுமே முக்தி கிடைச்சுடாது. தூய்மையான இறை அன்போடு, அவனை நினைச்சால் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலையின் சிறப்புகளை ஒரு பதிவில் சொல்லிட முடியாது. திருவண்ணாமலை கோவில் பத்தியும், உள் கிரிவலம், வெளி கிரிவலம், ஆசிரமங்கள், சித்தர் ஆசிரமம், சாமியார்களின் பெயரால் நடக்கும் ஏமாத்து வேலைகள்ன்னு பலவிதமா பதிவு போட்டாச்சுது.  
“செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே”
அப்பர் பெருமானின் இந்த வாக்கியமே திருவண்ணாமலையின் புண்ணியத்தினை எடுத்து சொல்லும். 
ரமண மகரிஷியை காண வந்த சாமியார் ஒருவர், கயிலாய மலைக்கு போகலாம் என ரமணரை அழைத்தார். எதுக்கு அங்க போகனும்ன்னு மகரிஷி கேட்க, ‘திருக்கயிலாய மலை சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான்., பூத கணங்கள், ரிஷிகள் சூழவும் அருள் புரியும் இடமென பதில் சொன்னார் அந்த சாமியார். அதற்கு மகரிஷி, நண்பரே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலையில் இருக்கும் மலையே சிவன்தான். சிவபெருமான் இங்க இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' என பதில் அளித்தார்.  இதை எதுக்கு சொல்றேன்னா, இங்க மலையே சிவனாய் காட்சியளித்து அருள்பாலிக்குது. இது பெரிய சைஸ் சுயம்பு லிங்கம்ன்னு சொன்னால் மிகையாகாது. 
தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுது. இன்று இந்த விழா மிகச்சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுது.    நினைத்தவுடனே முக்தி அளிக்கமளவுக்கு கருணை கொண்டவர்தான் இங்கு குடிக்கொண்டிருக்கும் “அண்ணாமலையார்”. அவர் ஜோதிமயமாய் எழுந்தருளிய நாளான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தையே  “தீபத்திருநாளாய்” கொண்டாடப்படுது.

ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன்ன்ற மமதைக்கொண்டு  சண்டையிட்டனர். தங்கள் ஐயம் தீர்க்க சிவப்பெருமானிடம் வந்து நின்றனர். ”மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதிப்பிழம்பாய் உருவெடுத்து , சிவனின் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ , அவர்களே உயர்ந்தவர்” என அசரீரி ஒலித்தது.சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் கொண்டு பூமியை துளைத்துச் சென்றார். முடியைக்காண பிரம்மா பறவை உருக்கொண்டு விண்ணில் பறந்தார். யுகம் யுகமாய் பயணித்தும் அடியைக் காண முடியாமல் தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டு சிவனிடம் சரணாகதி அடைந்தார்.

இதற்கிடையில், சிவனின் சடாமுடியிலிருந்து விழுந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த தாழம்பூவிடம் இன்னும் எவ்வளவு தூரம் எனக்கேட்க, இன்னும் பல யுகம் பயணிக்க வேண்டும் எனச் சொன்னது தாழம்பூ. அப்படியெனில் எனக்கொரு உதவி செய். ன் சிவனின் முடியை நான் கண்டதை நீ கண்டதாக சொல் என பூமிக்கு அழைத்து வந்து இருவரும் சிவனிடம் பொய்யுரைத்தனர். அதனால், கோவம்கொண்ட சிவன், இனி தன் பூஜைக்கு தாழம்பூ ஆகாது எனவும், பிரம்மாவுக்கு தனியான சந்நிதி இனி கிடையாது என சாபமிட்டார்.
தங்கள் தவறை உணர்ந்த மூவரும் சிவனிடம், ‘பரம்பொருளே! யாரும் நெருங்க முடியாத அண்ணலாகிய தாங்கள், எங்கள் பொருட்டு இங்கு அக்னிமலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலைதான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால்தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என வேண்டி நின்றனர்.
உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாசலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். இதையடுத்து தேவ சிற்பியான தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங் களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.  அதனால்தான், மலையே லிங்கமாய் உருவகப்படுத்தி மக்கள் கிரிவலம் வருகிறார்கள் என புராணங்கள் சொல்கிறது.  அண்ணுதல்ன்னா நெருங்குதல்ன்னு பொருள். அண்ணா என்றால் ”நெருங்கவே முடியாத” எனப்பொருள். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடி, முடியை நெருங்கவே முடியாத மலையானதால் ”அண்ணாமலை” என அழைக்கப்படுது.

திருவண்ணாமலை ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு, மலையை வலம் செய்வது சிறப்பானதாகும். திருவண்ணாமலையை கிரிவலம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், திருவண்ணாமலை ஆலயத்தின் தலமரமான மகிழமரத்தையும், அதனுடன் திருவண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன் எழுந்தருளி இருக்கும் கருவறையையும் இணைத்து ஏழு முறை ஆலய வலம் வந்தால், கிரிவலம் வந்த பலனை அடையலாம். 

சிவப்பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாய் மூட பூலோகம் முழுக்க இருள் பரவியது. அதனால கோவம் கொண்ட சிவன், தன்னை நீங்கி பூலோகம் சென்று தன்னை வழிப்பட்டு வரவேண்டுமென சாபமிட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்படுகிறாள். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து, கௌதம புத்தரின் வழிக்காட்டுதல்படி சிவபூஜை செய்து, “மடக்கு” என்றழைக்கப்படும் மண் பாத்திரத்தில் விளக்கேற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிப்படுகிறார். அம்மையாரின் பக்திக்கும், தவத்துக்கும் மனமிரங்கி ஈசானலிங்கத்தை நெருங்கும்போது இறைவன் ரிஷப வாகனத்தில் வந்து அம்மையை இடப்பாகமாக ஏற்றுக்கொள்கிறார்.

உலக மக்களையெல்லாம் காப்பவளாயிற்றே அன்னை! தன் மக்களுக்காக  “தாங்கள் எனக்கு மட்டும் காட்சியளித்தால் போதாது. அனைவருக்கும்  காட்சியளிக்க வேண்டுமென வரம் கேட்கின்றாள். ஆண்டுக்கு ஒருநாள் தான் இங்கு ஜோதி சொரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தர்சிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் . அந்த நாளில் தன்னை தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என அருள்கின்றார். இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் நாளே கார்த்திக மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மகாஜோதியாகும்.

திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைப்பெறும் இத்தீபத்திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அன்று அதிகாலை சுயம்புலிங்கமான அருணாச்சலேஸ்வரருக்கு “பரணி தீபம்” ஏற்றப்படுகிறது. மாலையில்  ஒருசில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார். மலைமீது தீபமேற்றிய பிறகே கோவிலில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் வீடு, கோவில்களில் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அக்னியின் அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்துக்குண்டான பலனை அளிக்கவல்லது திருவிளக்கேற்றி வழிப்படுவது.  தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்றி வழிப்படலாம்.
அசுரனை அழிக்க  அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 
புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ்லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனால, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து பஞ்சு திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வளர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கேத்துற பழக்கம் வந்துச்சாம்!!.

சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர். தீபத்திலிருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், அதன் ஒளியில் அறிவுச்சுடர் பரப்பும் அன்னை சரஸ்வதியும், சுடரில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் வீரத்தை தந்து ஆரோக்கியம் தரும் அன்னை பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகவேதான் ஒரு வீடு எல்லா நலன்களும் பெற தினமும் விளக்கேற்றி வைப்பது சிறந்தது என பெரியவங்க சொல்றாங்க.
16 வகை தீபங்கள்
 தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் இருக்கு.

தீபத்திற்கான எண்ணெய்கள்...
எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, பசு நெய்,  சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்.  ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதேப்போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. இல்லத்தில் இறைவனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப் ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் கடனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.
இனி தீபம் ஏற்றும் முறை...
வீட்டின் முன்கதவை திறந்து பின்புறக்கதவை  சாத்தியபிறகே விளக்கேத்தனும். பின்கதவு இல்லாதவர்கள் ஜன்னலையவது சார்த்திய பிறகே விளக்கேற்றனும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 

விளக்கேற்றுவதன் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம்.  அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றது.
இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் பார்க்கலாம்..., 
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய

ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமேனி

திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைய் முழ

வதிரும் அண்ணாமலை தொழுவார் 

வினை வழுவாவண்ணமறுமே.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்,
ராஜி.

7 comments:

 1. அனைத்து விளக்கங்களும் உள்ளது... அருமை சகோதரி...

  ReplyDelete
 2. மனதுக்குதான் ஒளிதேவை அதையே தீபமேற்றிஅறியாமையை விரட்டதிருவிழாவூ என்று எண்ணத் தோன்றுகிறது

  ReplyDelete
 3. சிறப்பான விளக்கங்கள்.

  அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 5. பயனுள்ள சிறப்பான பதிவு... நன்றி...

  ReplyDelete
 6. அழகிய படங்களுடன்...

  பல பல தகவல்கள் ராஜி க்கா..அருமை..

  ReplyDelete
 7. படங்கள் தகவல்கள் சிறப்பு.

  ReplyDelete