Monday, November 05, 2018

தீபாவளி தெரியும், எம தீபாவளியை தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள அகல்விளக்கு.. மாடில கொண்டு போய் ஏத்திட்டு வா.

யோவ் மாமா1 உனக்கென்ன அறிவு மழுங்கி போச்சுதா?! நாளைக்குதான் தீபாவளி. இன்னிக்கே விளக்கேத்த சொல்றே!! அதும் மாடில கொண்டு போய் ஏத்த சொல்றே?! அங்க ஏத்தினா வீட்டுக்கு வெளிச்சம் வருமா?!

எல்லாம் தெரிஞ்சுதான் சொல்றேன். நாளைக்குதான் தீபாவளி.  ஆனா, இன்னிக்கு எம தீபாவளி.  அஞ்ஞான  இருள் அகற்றி, நம்முள் ஞான தீபம் ஏற்றும் பண்டிகையே தீபாவளி. இந்த பண்டிகை  நமக்கு மட்டுமல்ல, எமதர்மனுக்கும் பிடித்த பண்டிகைன்னு நம்ம புராணங்கள் சொல்லுது. நம்ம ஊரில்தான் தீபாவளியை ஒருநாள் பண்டிகையா கொண்டாடுறோம். ஆனா, வட இந்தியாவில், தீபாவளியை ஐந்து நாள் பண்டிகையா கொண்டாடப்படுது.  

திரயோதசி திருநாள்தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்னிக்கு நம்ம  வீட்டுக்கு லட்சுமி வருவதாக ஐதீகம். அவளை, வரவேற்கும் விதமா வீடுகள்ல தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். இந்தத் திருநாளை ஒரிசாவில், 'தன திரயோ தசி'யாக அனுஷ்டிக்குறாங்க. திரயோதசி தினத்தன்னிக்கு தங்களது வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏத்தி வைப்பாங்க.   மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில்   இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லி நமக்கும் தெரியும். அப்படி வர்றவங்க, தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புரதா சொல்றங்க. அப்படி திரும்பி போறவங்களுக்கு வழிதெரியனும்ன்னுதான் தீபம் ஏத்தறது. இந்த தீபத்தை உயரமான இடத்தில்தான் ஏத்தனும். வீட்டில் வழக்கமா ஏத்தும் விளக்கோடு சேர்த்து ஒரு அகல்தீபத்தை ஏத்தினாலே போதும். அதுவே, எம தீபம்.   இப்படி தீபம் ஏத்துறதால விபத்துகள், திடீர் மரணங்கள் சம்பவிக்காது. நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. 
இரண்டாவது நாள் தீபாவளித் திருநாள். இந்த நாளில், வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து, அதிகாலை நீராடி, புத்தாடைகள் அணிந்து தங்கள் குல வழக்கப்படி பூஜைகள் செய்வர். சிலருக்கு இது விரத நாட்களும்கூட...  மூன்றாம் நாளில் ஸ்ரீவிநாயகர், சரஸ்வதிதேவி மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன், வணிகர்கள் புதுக்கணக்கும் எழுதுவர். சில இடங்களில், கேதார கௌரி விரதமும் லட்சுமி குபேர பூஜையும் செய்வர். நான்காம் நாளில் இந்திரன் பெய்வித்த பேய்மழையிலிருந்து கோகுலவாசிகளை, பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக கொண்டாடப்படுது. சிலர் இந்த தினத்தை, புதுவருடப் பிறப்பாகவும் கொண்டாடுவர். ஐந்தாம் நாளில் 'எம துவிதா'வாக வட மாநிலத்தவர் கொண்டாடுறாங்க.  'பால்பிஜி' ன்னும், 'பையாதுஜ்'ன்னும் போற்றப்படுது இந்தத் திருநாள். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும்  சிறப்பாகக் கொண்டாடப்படுது.

ஒரு முறை... ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை திதி அன்னிக்கு தன் சகோதரி 'எமி'யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூட்டி, திலகமிட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும், ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் பாசத்தைப் பகிர்ந்துக்கிட்டாங்க.  அப்ப எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால்  திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாதுன்னு வரம் தந்தாராம்! அதனால்தான்,  எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவது வழக்கம்.  சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என புராணங்கள் சொல்லுது. அதனால், தீபாவளியை மட்டுமில்லாம அதோடு சேர்த்து  எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய நாட்களிலும் தீபம் ஏத்தலாம். ஒரு அகல்விளக்கை ஏத்துறதால் என்ன குறைஞ்சிட போகுது?!

ம்க்கும் ஆல்ரெடி இருக்க பண்டிகைலாம் போதாதுன்னு புதுசு புதுசா இழுத்து விடாத மாமா. ஹோலி, ரக்‌ஷா பந்தன் போல இதுவும் நம்மாளுங்க கொண்டாடப்போறாங்க. அதேமாதிரிதான், ஊருக்குள் சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகர், சக்தி,சரஸ்வதி, லட்சுமி, அய்யனார்ன்னு முக்குக்கு நாலு சாமி இருக்க, வடக்கிலிருந்து சாய்பாபான்னு இன்னொரு சாமியை கொண்டாந்து அதுக்கொரு பண்டிகையை கொண்டாடிக்கிட்டிருக்காங்க நம்மாளுங்க...  நம்மாளுங்களுக்கு அறிவு கொஞ்சம் கம்மி மாமா(உன்னை மாதிரியே)... அதனால் புதுசு புதுசா  பண்டிகை, சாமின்னு கொண்டு வந்து அவங்களை அது பக்கமா திருப்பி விட்றாத. இதை பத்தி இப்ப பேச நேரமில்ல. அதனால்,  இந்த படங்களை பார்த்துக்கிட்டு ஐஞ்சுவை அவியலை முடிச்சுக்கலாம்..

நன்றியுடன்,
ராஜி

6 comments:

 1. ஐஞ்சுவை அவியல் = தீபாவளி...

  தீபத்திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. அவிங்க பண்டிகையை அவிங்க கொண்டாடட்டும், நம்ம பண்டிகையை நாம கொண்டாடுவோம்!!!

  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. தீபாவளி வாழ்த்துகள் 🎊

  ReplyDelete
 4. அருமை உள்ள பண்டிகையை கொண்டாடவே வழியில்லை இதுல சாய்பாபா வேற...

  ReplyDelete
 5. ஹுக்கும்........அஞ்சு நாளாமில்ல.வேற வேலையில்ல,கவர்ணமெண்டு லீவா தருது,ஒரு நாள் லீவ் தர்றதுக்கே முட்டிக்கிறாங்க...///அது ச்சும்மா.....அருமையான அவியல் அண்ட் தீபாவளிப் பண்டிகை சுருக்க வரலாறு.//எமி ங்கிறது தமிழ் பேரா?இப்பவே பிரிட்டிஷ் ஆளுங்க மேல பிராது குடுக்கணும்......../// நன்றி தங்கச்சி,பதிவுக்கு...இனிய தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

  ReplyDelete