Thursday, November 22, 2018

இருமுடி தாங்கி ஒருமனதாகி.... ஐயப்பனின் வரலாறு

இன்றைய ஆன்மீகம் கடவுளின்பால்  தேவையற்ற பயத்தையும், வீண் ஆடம்பரம், வெற்று விழாக்கள் என பாதை மாறி போய்க்கிட்டிருக்கு. கடவுள் வழிபாடு என்பது எந்த நிபந்தனையும், எந்த வேண்டுதலுமின்றி அவனே கதியென அவன் தாள் பற்றுதலேயன்றி வேறில்லை. எனக்கு இதை கொடுத்தா நான் உனக்கு இதை செய்றேன் என கடவுளுக்கும் மனிதனுக்கும் நிபந்தனை இருந்தா அது பக்தியில்லை. வியாபாரம். அந்த வியாபாரத்துக்கு கடவுள் ஒருபோதும் உடன்பட மாட்டார். கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். இதை பல புராண கதைகள் நமக்கு உணர்த்துது. சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாமென்பதைதான் இறைவன் பல அவதாரமெடுத்து திருவிளையாடல் புரிந்து நமக்கு உணர்த்துறார். ஆனா, அதை நாமதான் புரிஞ்சிக்கிடுவதில்லை. 
கார்த்திகை மாசம் வந்துட்டாலே சரணம் கோஷம் பட்டிதொட்டிலாம் ஒலிக்க ஆரம்பிக்கும். துளசி மணி முதர்கொண்டு டிராவல்ஸ் கம்பெனி வரை சபரிமலை சார்ந்த வியாபாரம் கொடிகட்டும். சபரிமலைக்கு போக ஊருக்கு ஒரு விதிமுறை, விரதமுறைகளில் மாற்றமிருக்குறது போதாதுன்னு சபரிமலைக்கு போயே தீருவேன்னு சில பெண்களும் களம் இறங்கி இருக்காங்க. உண்மையான பக்தி கொண்டு ஐயப்பனை தரிசிக்க ஆசைன்னு விரதமிருந்தா பரவாயில்லை. அதைவிட்டு வெத்து கௌரவத்துக்கும், விளம்பரத்துக்கும்ன்னு இருக்குறதை பார்க்கும்போதுதான் மனசு வலிக்குது:-( 

இந்த சில பெண்கள் மட்டுமில்ல. மலைக்கு செல்ல மாலை போட்டிருக்கும் பல ஆண்களுக்கே சபரிமலை பத்தியும், விரத நேர்த்திகள் பத்தியும் தெரியாதது ஆச்சர்யமே! சபரிமலை பத்தியும், ஐயனை பத்தியும் தெரிஞ்சவங்களுக்கு ஒரு நினைவு மீட்டலும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கவும் சில பதிவுகள் இந்த மாசம் போடலாம்ன்னு இருக்கேன்,. கார்த்திகை 1ந்தேதியே இந்த பதிவு வந்திருக்கனும். அப்பாவின் உடல்நிலை இப்ப பதிவு போட வச்சுட்டது. என் அப்பா வருசந்தவறாமல் மலைக்கு செல்பவர். எனக்கு நினைவு தெரிஞ்சு போகாம இருந்ததில்லை, இந்த வருசத்தை தவிர!! போகலியே தவிர மனசு முழுக்க சபரிமலை மீதுதான் இருக்கு. அவருக்காகவும் இந்த பதிவு.
ஐயப்பன் வரலாறு சுருக்கமா.... 

மகிஷனின் மரணத்துக்கு பழி வாங்க வேண்டி, ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறக்காதென்பதை உணர்ந்த மகிஷி ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த குழந்தையால் சாகும் வரம் வாங்கி உலகையே ஆட்டி படைத்து வந்தாள்.  இறைவன் நினைத்தால் சாத்தியப்படாதது ஏது?! 
பாற்கடலை கடையும்போது வந்த அமிர்தத்தை சரிவர பங்கிட்டுக்கொள்ள சண்டை வந்தபோது அவர்களை சமாதானப்படுத்த விஷ்ணுபகவான்  மோகினி அவதாரமெடுத்தார்.மோகினியின் அழகில் மயங்கிய சிவன் மோகினியை நெருங்க, ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது. 
வேட்டைக்கு வந்த கேரளத்து பந்தள வம்சத்து மன்னரான ராஜசேகரன் பார்வையில் படுமாறு குழந்தையை சிவனும், விஷ்ணுவும் விட்டு சென்றனர். குழந்தையின் அழுகுரலை கேட்ட மன்னன் குழந்தையை கண்டெடுத்தான். குழந்தையை கையிலெடுத்து அக்கம்பக்கம் விசாரித்தபோது, அருகிலிருந்த முனிவர், குழந்தையின் அருமையினை உணர்ந்து, மன்னனுக்கு  சொல்லி அரண்மனைக்கு குழந்தையை கொண்டு செல்ல அறிவுறுத்தினார். குழந்தையின் கழுத்தில் சிவவிஷ்ணு அணிவித்த மணியினை கண்டு மணிகண்டன் என பெயர் சூட்டினார் முனிவர். 
மன்னரும் குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று பட்டத்து ராணியிடம் தந்தார். குழந்தை இல்லாத ஏக்கத்திலிருந்த ராணி, மணிகண்டனை பெற்றெடுத்த பிள்ளையைவிட அன்பு பாராட்டி வளர்த்தாள். சகல கலைகளிலும் மணிகண்டன் தேறி வந்தான். குருதட்சனையாய் குருவின் கண் தெரியாத மகனுக்கு பார்வை தந்தான். இதற்கிடையில் ராணிக்கு குழந்தை பிறந்தது. உங்களுக்கு மகன் பிறந்தபின்னும், காட்டில் கிடைத்த பிள்ளையை தலைப்பிள்ளைப்போல வளர்ப்பது ஏன்?! அடுத்து மணிகண்டனே மன்னனாய் வர வாய்ப்புண்டு, அவனுக்கு உங்கள் சொந்த பிள்ளை சேவகம் செய்ய வேண்டுமா என மந்திரியும், தோழியரும் ராணி மனசை கலைக்க, ராணி மெல்ல மெல்ல மணிகண்டன்மேல் வன்மம் கொண்டாள்.
மகிஷி வதம் நெருங்கும் வேளையில் மந்திரியின் யோசனைப்படி, தலைவலி என நாடகமாட,  அதுக்கு மருந்தாய் புலிப்பால்தான் வேணும்ன்னு அரண்மனை வைத்தியர் ஒத்து ஊத, தந்தை தடுத்தும் கேளாமல், தாயின் துயர் தீர்க்க தனியாளாய் காட்டுக்கு சென்றான் மணிகண்டன்.   சிவவிஷ்ணு புதல்வனுக்கு நாடகம் எது?! நோய் எதுன்னு தெரியாதா?! தெரிஞ்சும் காட்டுக்கு செல்ல காரணம் மகிஷி வதம்.  மணிகண்டன் பசியாறவும், பூஜைக்குமென அரிசி, கற்கண்டு, பேரிச்சை, முக்கண்  தேங்காயில் நெய், அவல், தேன், விபூதி, சந்தனம், குங்குமம் என தனித்தனியாய் கட்டி மன்னர் கொடுத்தனுப்பினார். 
காடெங்கும் தாய்ப்புலியை தேடினான். அவன் எதிரில் மகிஷி வந்தாள்.  தடுத்து சண்டைக்கு இழுத்தாள். வில்லெடுத்தாள். வில்லாதி வீரனாச்சே மணிகண்டன், எதிர் நாண் தொடுத்து அவளை வீழ்த்தினான். அவள் உடலின்மீது நின்று ஆனந்த நடனம் புரிந்தான். ஐயனின் பாதம் பட்டதும் மகிஷியின் பாவமெல்லாம் நீங்கி ஞானம் பெற்று அழகிய பெண்ணாகினாள். தன்னை மணமுடிக்க வேண்டுமென ஐயனை மகிஷி வேண்ட,  பிறவியில் தான் நித்ய பிரம்மச்சாரி எனவும்,  இப்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணமில்லை எனவும் மறுதலித்தார். 

பெண்ணின் குணங்களில் பிடிவாதமும் ஒன்றாச்சே! மகிஷியும் அதுக்கு விதிவிலக்கில்லையே! அவள் பிடிவாதம் பிடிக்க, அதிலிருந்து தப்ப ஒரு உபாயம் செய்தார் ஐயன். அதாவது, இன்னும் சிலகாலத்தில் தான் சபரிமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்க இருப்பதாகவும், எந்த வருடம் கன்னிச்சாமி வராம இருக்காரோ அந்த வருசம் உன்னை மணக்கிறேன் என வாக்கு தந்தார். எந்த வருசம் கன்னிச்சாமி  வரலைன்னு எனக்கு எப்படி தெரியுமென மகிஷி கேட்டாள். சந்தேகமும் பெண்ணின் முக்கிய குணமாச்சுதே!!

எனக்கு பக்கத்திலேயே மஞ்சமாதான்ற பேரில் தனிச்சன்னிதியில் நீ இரு. என்னை நோக்கி வரும் பக்தர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்தபின்னே, என்னை தரிசனம் செய்வார்கள். கன்னிச்சாமியாய் வரும் பக்தன் தன் கையில் ஒரு அலங்கரிக்கப்பட்ட குச்சியினை கொண்டு வந்து உன் ஆலயத்தில் குத்தி வைப்பான். எந்த வருசம் அப்படி குச்சி வரலியோ அந்த வருசம்  கன்னிச்சாமி வரலைன்னு அர்த்தம். அந்த வருசம் உன்னை நான் மணமுடிப்பேன் என வாக்கு கொடுத்தான்.

அரக்கியே ஆனாலும் மகிஷி ஏமாந்துதான் போனாள். கடவுளே ஆனாலும் வீண் வாக்குறுதி கொடுத்து பெண்ணை ஏமாத்தினான் மணிகண்டன். ஒரு பக்கம் காலக்கெடு கொடுத்து இன்னொரு பக்கம், எப்பயுமே  பிரம்மச்சரியாய் இருக்க விரும்பிய ஐயன், ஒவ்வொரு குருசாமியும் தன்னோடு ஒரு கன்னிச்சாமியையாவது கூட்டி வரனும்ன்னு நியதியை வகுத்தான். ஆணாச்சே! இந்த உள்ளடி வேலைலாம் அத்துபடி.  மஞ்சமாதாவுக்கு மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயருமுண்டு. சபரிமலை பதினெட்டாம் படியிலிருந்து பார்த்தால் வட கிழக்குப்புறமாக மஞ்ச மாதாவிற்கு தனியா ஒரு கோயில் உண்டு. ஆனா, இக்கோயிலின் கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவது இல்லையாம். எந்த வருடம் கன்னிச்சாமி வராம இருக்காங்களோ, அந்த வருசம் திருமணம் நடக்கும்போது வெளிவருவேன்னு மகிஷி,  மஞ்சமாதான்ற பேரில் அந்த சன்னிதியில் காத்திருப்பதா சொல்வாங்க. தனக்குதான் திருமணம் ஆகலியே, அந்த கஷ்டம் யாரும் படக்கூடாதுன்னு, தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு மாங்கல்ய பலமும், திருமணம்  விரைவில் நிறைவேறவும் அருள்புரிகிறாள். சனிபகவானால் பாதிக்கப்பட்டவங்களும் இவளை வணங்கி குணம் பெறுவர். ரவிக்கை துண்டு வைத்தும், மஞ்சப்பொடி தூவியும், மஞ்சள் பூசிய தேங்காயை உருட்டியும் இவளை வழிபடுகின்றனர். ஐயப்பனின் ஆபரணப்பெட்டி இந்த சன்னிதியில்தான் பாதுகாப்பாய் இருப்பதாய் நம்பிக்கை.  கந்தர்வன் அருகிலிருந்தும் கரம் பிடிக்க முடியாமல் கலங்கி தவிக்கிறாள் இந்த லீலாவதி. மஞ்சமாதாவின் இன்னொரு பேருதான் லீலாவதி. இதுக்கு அவ மகிஷியாவே இருந்திருக்கலாமோ?! பொண்ணு கெட்டவளா இருந்தா அடுத்தவங்களுக்கு கஷ்டம். அதுவே அவ நல்லவளா மாறினா தனக்குதான் கஷ்டம்.
கதை எங்கெங்கோ போகுதுல்ல!! நாம ஐயப்பன் கதைக்கு வரலாம்...  மூவுலகுக்கும் தொல்லை தந்த மகிஷி அழிந்ததால் மகிழ்வுற்ற தேவர்கள் ஐயப்பனுக்கு நன்றி சொல்ல பூலோகம் வந்தனர். தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் புலியாய் மாற, ஐயப்பன் வன்புலி வாகனனாய் அரண்மனை நோக்கி சென்றான்.  இதற்கிடையில் மந்திரியுடன் சேர்ந்து ராணி நாடகமாடியது ராஜாவுக்கு தெரியவந்தது. மணிகண்டனின் வருகைக்காக காத்திருந்தான் ராஜா ராஜசேகரன்.  தாயின் நோய் தீர்க்க  புலிப்பாலுக்காக புலியையே கொண்டு வந்திருக்கிறேன் என தாய், தந்தையை பணிந்து நின்றான். 
பந்தளமன்னன் ராஜசேகரன், ஐயப்பனிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டினார். ஐயப்பன் மன்னனிடம், தாயை கோபிக்க வேண்டாமெனவும்,  தன் அவதாரம் நோக்கத்துக்காகவே அன்னை நாடகமாடினாள் எனவும், தனக்கு தெரியாமல் எதுவும் நடந்துவிடவில்லை என சமாதானம் கூறி, சகோதரனுக்கு இளவரசு பட்டம் சூட்டி, கானகத்துக்கு செல்ல இருப்பதாய் ஐயப்பன் தெரிவித்தான். மகனை பிரிய மனமில்லாத பந்தளமன்னன் தன் ராஜ்ய எல்லைக்குள் இருந்து என்றும் தனக்கு காட்சி கொடுக்க வேண்டுமென ஐயப்பனிடம் வேண்டினார். 
அதற்கு ஐயப்பன் தான் எய்தும் அம்பு விழும் இடத்தில் பதினெட்டு படிகள் அமைத்து கோயில் அமைக்க வேண்டும் என்றார். மேலும் தன்னை காணவரும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி தாங்கிதான் கோயிலுக்கு வர வேண்டும் எனக்கூறி மறைந்தார். பந்தளமன்னர் ஐயப்பனின் கட்டளைப்படி அவ்விடத்திலே கோயில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார். கும்பாபிஷேக தினத்தன்று ஜோதி ரூபமாக மணிகண்டன், சாஸ்தாவின் விக்ரகத்தினுள் ஐக்கியமானார். அப்போது ஐயப்பனின் அசரீரியாக, பந்தள மன்னன் மற்றும் மக்களின் வேண்டுதலின் பேரில் நான் வருடம் ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தன்று சூரியன் மறையும் நேரத்தில் காந்தமலை மீது ஜோதி ரூபமாக காட்சி கொடுத்து அருள் புரிவேன் எனவும் கூறினார். அதுப்போலவே அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் மகா சங்கராந்தியன்று காந்தமலையில் ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார் ஐயப்பன்.

ஐயப்பனின் வரலாறு நமக்கு பல உண்மைகளை விளக்குது. மரத்தடியில் ஜனனம். பின்பு,  ஆடம்பரமான அரண்மனை வாழ்வு..  அன்னையின் அன்பு, மந்திரிமார்களின் சூழ்ச்சி, சதி, மகிஷியுடனான போராட்டம்,  மீண்டும் காடு, மலையில் தவக்கோலம்... இப்படி போகுது ஐயப்பனின் வாழ்க்கை.  மன்னாதி மன்னனாகும் வாய்ப்பும்,  அழகு பெண் திருமணத்துக்கு வற்புறுத்தியும் எதுவும் அவருக்கு நிலைத்ததா?! இல்லை. . தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கேகூட இந்த வாழ்வு நிலைக்கலைன்னா சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைச்சுடுமா என்ன?! இந்த நிலையற்ற தன்மையை நமக்கு உணர்த்ததான்  எளிமையான ஏற்றத்தாழ்வற்ற உடை அணிந்து, எளிய உணவு உண்டு, குளிர்ந்த நீரில் நீராடி, வெற்று தரையில் உரங்கி,  ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கி வருகிறோம்.

18 படிகளின் தத்துவம். காமம், குரோதம், கோபம், போன்ற எட்டு உணர்ச்சிகள்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள்,  சத்வ, ராஜஸ, தாமஸ ஆகிய மூன்று குணங்கள்,  வித்யை, அவித்யை ஆகிய இரண்டு சக்திகள் தாம் 18 படிகளின் அம்சங்கள். இந்த பதினெட்டு படிகளும் ஒரே கல்லிலானவை. பிற்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஐம்பொன்னால் தகடு வேயப்பட்டது. ஒவ்வொரு படிகட்டிலும், பிரம்மா, விஷ்ணு, சிவன், வினாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, அனுமன்... என 18 கடவுள் வீற்றிருந்து நமக்கு பக்கபலமா இருந்து ஐயனை தரிசிக்க உதவி புரிகிறார்கள். 
முக்கண் உள்ள  தேங்காய் சிவனையும்,  பசுநெய்  மகாவிஷ்ணுவையும் உருவகப்படுத்தும். சிவன்விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனான்.  அதனால் நெய்யும் தேங்காயும் சேர்ந்து அவருக்கு நிவேதனப் பொருளாகிறது.

விரதமிருந்து சபரிமலைக்குச் செல்பவர்கள் இருமுடி கட்டி புறப்படுவாங்க. அவற்றுள் ஒரு முடியுள் சுவாமிக்குரிய அபிஷேக  நிவேதனப் பொருட்களான தேன், சந்தனம், விபூதி, குங்குமம் மாதிரியான பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் தன் தேவைக்குரிய  உணவுப் பொருட்கள் அரிசி, அவல், கற்கண்டு, பேரீட்சை மாதிரியான பொருட்கள் இருக்கும். நாம் சபரிமலையை நெருங்க நெருங்க நம் உணவுப்பொருட்கள் குறைந்துகொண்டேபோய் இறைவனின் சந்நதியருகே செல்லும்போது நம் உணவுப்பொருட்கள் அடங்கிய முடி குறைந்து, சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும். இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவதாகும்.   மானிடராய் பிறந்த நாம் இறைவனைத் தேட  ஆரம்பிக்கும்போது, இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும்,  நம் உலகத்தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்குது. பக்தி, லௌகீகம் ஆதிய இரண்டு அம்சங்களுடனேயேதான் நாம் இறைவனை தேடுகிறோம். அந்தத் தேடலில் மெய்ஞானம் கிட்டக்கிட்ட நம் லௌகீகப் பற்று குறைந்து மறைந்து போகும். கடைசியில் இறைபக்தி ஒன்றுதான் மிஞ்சும். அந்த பொழுதில்  இறைவனடியும்  நமக்கு தரிசிக்க கிட்டும்.
ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தை யோகநிலைன்னு சொல்வாங்க. அந்தக் கோலத்தின்  உட்புறம் சின்முத்திரையுடன் அமைந்திருக்கும். இடதுபுறத்தைக் கவனித்தால் ஒரு பெண் தனிமையாக கையை  வைத்திருப்பது போலிருக்கும். அது நாராயணனும் அம்பாளும் வேறில்லாத கருணையான தாய்மை அம்சம், சிவனின் சின்முத்திரையும், நாராயணனின் மோகினித் திருவுருவும் இணைந்ததே ஐயப்பன் தோற்றம் என கூறுவர். இன்னொரு விளக்கமும் சொல்லப்படுது.  அதாவது, அந்தர்யாமியாய் (மறைவாக) சபரிமலை என்னும் பிந்து ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் அம்பாளின் மடியில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் காட்சியே அது.  ஐயப்பன் மாத்திரம் காட்சியாக இருக்கிறார். அம்பாள் அரூபமாய் தன் குழந்தையை மடியில் வைத்திருக்கிறாள். அம்பாள் இல்லாத இறை பக்தி ஏது? ஐயப்பனில் இவ்வாறு அம்பாள் சம்பந்தப்பட்டிருக்கிறாள் எனவும் சொல்றாங்க.

48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள். அத்வைதம் என்பது பிரம்மம் என்பதாகும்.. விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு, பிரம்மம் வேறு என்பதாகும். த்வைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் ஒரு நிலையில் ஒன்றுபடுகின்றன என்பது.  ஒரு ஐயப்ப பக்தர், மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைத தத்துவமான அஹம் பிரம்மாஸ்மி எனும்படி தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் சொல்வாங்க. அடுத்து விரதம் முடிந்து சபரிமலைக்குச் செல்லும் நேரத்தில் ஜீவன் வேறு. பிரம்மம் வேறு; முயற்சித்தால் ஜீவன் பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டாத்வைத தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாகத் விளங்குகிறார். சந்நிதானத்தில் ஐயப்பனைக் கண்டு அவனருகில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும் ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவை ஒன்றுபடுகின்றன என்ற த்வைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறார்.

ஐயப்பனின் முழங்காலில் கட்டி இருக்கும் துண்டுக்கும் ஒரு கதை உண்டு. சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்தபின் அவரைக்காண, வளர்ப்பு தந்தையான ராஜசேகரன் அடிக்கடி வருவதுண்டாம். அப்படி வரும்போது, மரியாதை நிமித்தமாக ஐயப்பன் எழுந்து கொள்வாராம். கடவுள் தனக்கு மரியாதை செய்வதை விரும்பாத மன்னர், தன் இடுப்பிலிருந்த துண்டை ஐயப்பனின் கால்களில் கட்டி எழுந்துக்கொள்ளாத வண்ணம் செய்ததாக சொல்வாங்க.
வினாயகர், முருகனை போலவே ஐயப்பனுக்கு அறுபடைவீடுகள் உண்டு. அவை, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துபுழா, எரிமேலி, பந்தளம்,  சபரிமலை.  இதில் குளத்துபுழாவை விடுத்து திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தின் சுடலைமாட சாமின்னும் ஒரு கூற்று உண்டு.  இனி, ஐயப்பனின் அறுபடை வீடுகள் பத்திய பதிவுகள்  வரும்...

ஓம், சாமியே சரணம் ஐயப்பா!

நன்றியுடன்,
ராஜி.

4 comments:

 1. அறிந்த தகவல்களாயினும் ஆர்வமுடன் படிக்க வைத்தார் ஐயப்பன்.

  ReplyDelete
 2. அருமை... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...

  ReplyDelete
 3. இரு முறை சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்துள்ளேன். முதல் முறை சென்றபோது நான் பெற்ற அனுபவம் மறக்கமுடியாதது. ஏழு மைல் பயணம் நடந்து மேலே சன்னதியை நெருங்க, நெருங்க கிடைத்த இன்பம் மிகவும் இனிமையானது. பல உலகங்களைத் தாண்டி நேரில் ஐயப்பனைக் காண்பதைப் போன்றிருந்தது. அடுத்த முறை ஐயப்பன் மிகவும் அணுக்கமாக ஆனதுபோன்ற எண்ணம்.

  ReplyDelete
 4. தெரிந்த தகவல்கள் என்றாலும் மீண்டும் படிக்க ஆனந்தம்.

  ஒரு முறை சபரிமலை சென்று வந்ததுண்டு.

  ReplyDelete