வேப்பங்கொட்டையை இரண்டாய் ஒடைத்து, உள்ளிருக்கும் பருப்பினை எடுத்துட்டு, பிளந்த வேப்பங்கொட்டையை கைவிரல் முட்டியில் வைத்து, இன்னொரு பிள்ளை ஓங்கி அடிக்க, வலித்தாலும் எட்டி பார்க்கும் ரத்தத்தினை கண்டு சந்தோசப்பட்டிருக்கோம். ஏன்னா, எங்க புள்ளைங்கல்லாம் பயங்கரம்!!
எப்பவாவது பாட்டி வீட்டுக்கு லீவுக்கு வரும்போது வயக்காட்டுக்கு போறதுண்டு. வேர்க்கடலை பறிக்குற வேலை மட்டுமே தெரியும். மத்தபடி உருப்படியா எந்த வேலையும் தெரியாது. தெரிஞ்சுக்கும் வயசும் அப்ப இல்ல. ஆனா, வயக்காட்டில் புகுந்தால் அதகளம்தான். பாட்டி, களை பறிக்க, மடை திறக்க, வரப்பை சீர் செய்யன்னு எதாவது செய்யும் நேரத்தில் சோளக்கதிரில் இருக்கும் முடிகளை இப்படி ஜடை பின்னி அழகு பார்த்ததுண்டு. காட்டு பூக்களை பறிச்சு வச்சு அழகூட்டியதுமுண்டு.
ரசகுல்லா, மக்கன் பேடா, அல்வா... என எத்தனை விதமான இனிப்புகளை சாப்பிட்டாலும் இந்த ஆரஞ்ச் மிட்டாய் சுவைக்கு ஈடாகாது. எனக்கு தெரிஞ்சு ஒரு மிட்டாய் 5பைசா. குடியரசு தினம், சுதந்திர தினத்தன்னிக்கு லீவுன்னுகூட பார்க்காம ஸ்கூலுக்கு போனது இதுக்காகத்தான் இருக்கும். மஞ்சள், ஆரஞ்ச், பச்சை கலர்ல கிடைக்கும். ஸ்கூலில் கொடுத்ததும் சாப்பிட மாட்டேன். அதை வீட்டுக்கு கொண்டு வந்து அம்மாக்கிட்ட காட்டிட்டுதான் சாப்பிடுவேன். வீட்டுக்கு வருவதற்குள் கையெல்லாம் பிசுபிசுன்னு ஆகிடும். ஸ்கூல்லியே தின்னுட்டு வர்றதுக்கென்னன்னு அம்மா கடுமையா திட்டுவாங்க. ஆனாலும், மறுக்கா, மறுக்கா அதையேதான் செய்வேன். ஏன்னா, இந்த புள்ளைங்கலாம் பயங்கரம்.
எத்தனை எத்தனை கனவு, ஏக்கம், பயணம், துக்கம், ஆனந்தத்தை சுமந்த பெட்டி இந்த போஸ்ட் பாக்ஸ்.. கிராமத்தில் பொதுவாய் போஸ்ட் ஆபீசில் இருக்கும். டவுனாய் இருந்தால் அங்கங்கு இருக்கும். கீழ பூட்டு போட்டு இருப்பாங்க. மேல ஒரு ஓப்பன் இருக்கும். கைவிட்டு யாரும் எடுக்கக்கூடாதுன்னு இருக்கும் துவாரத்தை அசையும் ஒரு தகரத்துண்டால் மறைச்சிருப்பாங்க. அந்த தகரத்துண்டை தள்ளிட்டுதான் தபால்களை சேர்க்கனும். அப்படி அந்த துண்டை தள்ளலைன்னா தபால் சரியா உள்ள விழுகாதுன்னு வெகுளித்தனமா நம்பிக்கிட்டிருந்தேன்.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கிடைக்கும் பொருட்களை கொண்டு சந்தோசமாய் இருந்த நாட்கள்.... பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவாங்க. அது அறிவு வளர மட்டுமே! வேலைக்கு போறதுலாம் ஆண்பிள்ளைகளுக்கே முக்கிய குறிக்கோள் கிடையாது. வீட்டிலிருக்கும் பொருட்களைக்கொண்டே விளையாட பழகி இருந்தோம். கொட்டாங்கச்சி, தீப்பெட்டி, உடைந்த டம்ப்ளர்களைக்கொண்டு டெலிபோன் செய்து பேசி மகிழ்ந்தோம். இப்ப அம்மாக்கள் மாதிரிலாம் அப்பத்திய அம்மாக்கள் இல்ல. மாவரைத்தல், மிளகாய் இடித்தல், தண்ணி இறைத்தல்ன்னு எத்தனை கடுமையான வேலைகள் இருந்தாலும், பிள்ளைகளோடு கதைப்பேசி, விளையாடிய அம்மாக்களை பெற்ற கடைசி தலைமுறை நாம்தான்.
பல்பம்... அஞ்சாப்பு முடிக்கும்வரை பலகையில்தான் வீட்டுப்பாடம் எழுதி போவோம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு&புவியியல்ன்னு அத்தனை பாடத்தையும் சின்ன சிலேட்டில் நுனுக்கி, நுனிக்கு எழுதுவோம், காலையில் கொடுத்தனுப்பும் முழு பல்பம்குச்சி மாலையில் சின்னதா இருக்கும். அதுக்குள்ளவா எழுதி தீர்த்துட்டேன்னு அம்மா முறைப்பாங்க. வகுப்பில் தூக்கம் வராம இருக்க பல்பக்குச்சியை தின்னது நமக்குதானே தெரியும்!!
இப்பத்திய பிள்ளைகளுக்கு விதம்விதமா பொம்மைகள் கிடைக்குது. ஆனா, அப்ப கைக்குழந்தைன்னா கிலுகிலுப்பை, ஆறு மாசத்துக்குபின் சீப்பாங்குழல், ஒரு வருசத்துக்குபின் பந்து, நடைவண்டி, அதுக்கப்புறம் படத்தில் காட்டி இருக்கும் இந்த குதிரை. இதில்தான் உக்கார வச்சி ஆட்டிக்கிட்டே கதை சொல்வாங்க. எனக்கு வாங்கின குதிரை ரொம்ப நாள் இருந்துச்சு. என் சின்ன பொண்ணு பிறந்தபின் தான் இனி தாங்காதுன்னு உசுரை விட்டுடுச்சு. இந்த குதிரையோட பேர் மறந்து போச்சு! யாராவது சொல்லுங்களேன். ப்ளீச்.
போன தலைமுறை பிள்ளைகள் மட்டுமே அறிந்த மருத்துவமுறை இது. வயலுக்கு, வியாபாரத்துக்கு, வேலைக்கு போய் வந்த அப்பா, தாத்தா, மாமாக்கள் தங்கல் உடல்வலி தீர வீட்டிலிருக்கும் சின்னப்பசங்களை ஏறி முதுகுல மிதிக்க சொல்வாங்க. இது தப்புதான், ஆனா, அப்படி செய்தா வலிலாம் போய்டும்ன்னும் சொல்வாங்க. ஆனா, இப்பத்திய பிள்ளைகளுக்கு நாமதான் தைலம் தேய்ச்சு, கால் பிடிச்சு விடுறதா இருக்கு :-(
கொசுவத்தி மீண்டும் ஏற்றப்படும்....
நன்றியுடன்,
ராஜி
இனிய கொசுவத்தி... ஆரஞ்சு மிட்டாய் இப்பொழுதும் கிடைக்கறது. தலைநகர் தில்லியில் கூட!
ReplyDeleteஸ்லேட் குச்சி சாப்பிட்டது இல்லை. வேப்பங்கொட்டை - செய்தது உண்டு.
இனிய நினைவுகள்....
அழகான, சுகமான நினைவுகள். இந்த மாதிரி நினைவுகள் எல்லாருக்கும் இருக்கும்.
ReplyDeleteஇதில் சடை பின்னுவது தவிர மற்ற எல்லாவற்றையுமே அனுபவித்திருக்கிறேன்! Excellent Nostalgic Memories ! மரக்குதிரை!
ReplyDeleteசுவையான, சுவாரஸ்யமான நினைவுகள்.
ReplyDeleteஆரேஞ் மிட்டாய் சாப்பிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteஇனிய நினைவுகள்.
இது எல்லாமே நானும் அனுபவித்திருக்கிறேன். (சடை பின்னுவது தவிர). ஆரஞ்சு மிட்டாய் இன்னமும் கிடைக்கிறது. மிகச் சமீபம் வரை சாப்பிட்டிருக்கேன். இதுபோல வெளிநாட்டு மிட்டாய்களும் நான் ரெகுலரா சாப்பிடுவேன் (ஆரஞ்சு, லெமன்)
ReplyDeleteபசங்க முதுகுல ஏறி நிற்பது-எனக்கும் என் பசங்க செஞ்சிருக்காங்க ஹா ஹா
இன்னும் சில விட்டுப்போயிருக்கு. ஒரு கொட்டை (பேர் நினைவில்லை). தரைல தேய்த்துத் தேய்த்து அப்படியே தொடைல வைப்பாங்க. சூடு செமயா இருக்கும்.
ReplyDeleteஅப்புறம் இள புளியங்காய் + வெங்காயம் + உப்பு சேர்த்து கல்லை வைத்துத் தட்டி உண்பது